மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 1

அத்தியாயம் – 1

சூரியன் தன் வருகையை உணர்த்தும் வகையில் எல்லா புறமும் ஒளியை பரப்ப, பறவைகளின் சப்தமும், இளந்தென்றலும் வீசியபடி அந்த காலைப் பொழுது அழகாக புலர்ந்து கொண்டிருந்தது.

நாம் பயணிக்கப் போவது வயல்வெளியும், மரங்களும் என சுற்றியும் பச்சை பசேலென இருக்கும் ஒரு அழகிய கிராமம்.

அந்த ஊரின் மத்தியில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் தான் நின்றிருந்தாள் நம் நாயகி.

“புவனா.” என்ற அழைப்பில், வாயில் பொங்கலை ரசித்தவாரு உண்டு கொண்டிருந்தவள், அந்த குரலுக்கு சொந்தமானவனை நோக்கித் திரும்பினாள்.

அவன்… வெற்றிவேல்… இக்கதையின் ஒரு நாயகன்.

ஆறடி உயரத்தில் சற்று பல்க்கான உடல்வாகோடு… மாறாத புன்னகையை காட்டும் முகத்திற்கு சொந்தக்காரன்.

அன்று வெள்ளை வேட்டி, இளநீள நிற சட்டை அணிந்திருந்தான்.

நெற்றியில் எப்போதும் வீற்றிருக்கும் சிகப்புத் திருநீர்; அடர்ந்த தாடி; அளவான மீசை; ஆனாலும் முகத்தில் இருக்கும் மென்மையும்… புன்சிரிப்பும்… அப்பப்பா அழகன்தான்.

குணம் பற்றி சொல்ல வேண்டுமானால்…அன்பானவன்;பொறுமையானவன்;அமைதியானவன்; அதேசமயம் கண்டிப்பானவன். எளிதில் கோபம் வராது; வந்தால் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது போலத்தான் இருக்கும். கதை போக்கில் மேலும் அவனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தன் செல்ல மாமன் மகளை சாமி கும்பிடும் இடத்தில் தேட, அவள் அங்கு இல்லாததால் கோவிலை சுற்றி வந்தவன் கண்டது பிரசாதத்தை சாப்பிட்டு கொண்டிருப்பவளைத்தான்.

கண்டிப்பான பார்வையோடு அவளருகே சென்று, “எத்தனை தடவ சொல்றது சாமி கும்பிட்டவாட்டி பிரசாதம் வாங்கனும். சாவகாசமா பிரசாதம் சாப்பிட்டுட்டு சாமி கும்புடக்கூடாது.” எனவும் திருத்திருவென விழித்தாள்.

அதில் கோபத்தை விடுத்து லேசாக சிரித்தவன், “இனிமேயாவது அப்படி பண்ணு.” என, ஆமோதிப்பாக மண்டையை ஆட்டினாள்.

அவள் கையில் பொங்கல் இருப்பதால் மெதுவாக நெற்றியில் திருநீறு பூசிவிட்டான். அப்போது வெற்றிக்கு முக்கியமான போன் வரவும் நகர, அவளும் மீண்டும் தன் முக்கியமான வேலையைத் தொடர்ந்தாள்.

அதாங்க… பொங்கல் சாப்பிடுறது… ‘அப்போ எனக்கு பசிக்குமில்ல.’

———

“நான் போய்ட்டு வருவேன்.”

“வேணாம்னு சொல்றேன்ல…”

“ஏன் பாட்டி?”

“அதுலாம் தெரியாது. ஆனா நீ எங்கையும் போகவேணாம்.”

“ரெண்டு நாள்தான.” என்று கெஞ்சியவள்,

“ஈஸ்வரி சொல்றேன்ல? அப்பறோம் என்ன கூடவே பேசுற?”என அதட்ட அமைதியாகிப் போனாள்.

அவள் முழுப்பெயர் ‘புவனேஸ்வரி’. மற்றவர்களுக்கு அவள் ‘புவனா’. மாமன் சமயம் ‘புவனாம்மா’, ‘டா’ என்றெல்லாம் அழைப்பான்.

பாட்டிக்கு மட்டும் அவள் பெரும்பாலும் ‘ஈசு’. ரொம்ப கொஞ்சும்போது ‘ஈசுக்குட்டி’. எதையும் அவளுக்கு பிடிக்காததை செய்தாலோ, கண்டிக்கும் போதோ ‘ஈஸ்வரி’ ஆகிவிடுவாள்.

இத்தனை அழைப்புகள் இருந்தாலும் அவளுக்கென பிடித்த பிரத்யேக அழைப்பு ஒன்று உண்டு. அத அப்பறம் பாப்போம்.

அவள் கெஞ்சலை கண்டுகொள்ளாமல், ‘நீ எங்கையும் போகவேண்டாம்.’ என்ற பிடியிலேயே நின்றார்.

‘இந்த பாட்டிகிட்ட சொல்லிருக்கவே கூடாது. ஏதோ நாளைக்கு டூருக்கு போறோம்னு ஒரு ஆர்வத்துல தேவையானது சிலத எடுத்து ஒரு பையில போட்டுட்டு இருக்குமோது பாத்துருச்சேனு விஷயத்தை சொன்னா… நம்ம டூர் பிளானையே கெடுத்துரும் போல.’ என மனதுக்குள் புலம்பித் தள்ளியவள், அப்போது வெற்றி வீட்டிற்குள் வரவும் அவனிடம் ஓடினாள்.

அவன் ஒருவார்த்தைக் கூறினால் பாட்டி மறுபேச்சு பேசப் போவதில்லை என்பதை நன்கு அறிவாள். ஏற்கனவே அவனிடம் அனுமதி வாங்கிவிட்டாள்.

அவனிடம் சென்று பாட்டி வேண்டாம் என சொல்லுவதைக் கூற, அவரிடம் வந்தவன், “விடுங்க பாட்டி… போய்ட்டு வரட்டும். இப்போதான் இப்படிலாம் போய்ட்டு வரமுடியும். அவள் கூட படிக்கற பொண்ணுங்களும் டீச்சர்ங்களும் தான் போறாங்களே. அப்புறம் என்ன… ஏற்கனவே எங்கிட்ட சொன்னா நான்தான் மறந்துட்டேன்.” என…

அவ்வளவுதான், “சரி ப்பு…” என உடனே ஒத்துக்கொண்டவர், “இங்க பாருடி பத்தரமா இருக்கனும். எல்லாரும் எப்போவும் கூட்டாவே இருங்க. சூதானமா போய்ட்டு வரணும்.” என இத்தனை நேரம் மறுத்ததை மறந்து அவளுக்கு அறிவுரைகளைக் கூற ஆரம்பித்துவிட்டார். புவனாவும் பவ்வியமாக எல்லாத்துக்கும் சரி என்று சொன்னாள்.

அவள் பாவனையை சிரித்தவாரு பார்த்தவன் அங்கிருந்து நகர்ந்தான்.

——–

அடுத்த நாள்…

“புவனா பத்திரமா போய்ட்டு வந்துடுவல?” என கேட்டவனை கொஞ்சம் கடுப்பாக பார்த்தாள்.

“மாமா இந்த கேள்விய எத்தனவாட்டி கேப்பீங்க?”

“அதில்லடா உன் பாதுகாப்பு முக்கியம்ல.”

‘இதுக்குத்தான் நான் சின்ன வயசுல கராத்தே கத்துக்கறேன்னு சொன்னேன். அப்படி விட்ருந்தா… ஒரு லேடி ஜாக்கி சான் ஆகிருப்பேன். இப்டிலாம் பயப்பட வேண்டி வருமா? யாரு கேட்டா நம்ம பேச்சை?’ என பெருமூச்சு விட்டவள்,

“அதுலாம் ஒரு பிரச்சனையும் இல்ல மாமா. நான் என் பிரண்ட்ஸ்… லேடீஸ் ஸ்டாப்ஸ்னு பாதுகாப்பாதான் போறோம்.” எனவும், லேசாக சமாதானமடைந்தான்.

“இருந்தாலும் என இழுத்து…நம்ம ஊர் பையன்… உன் கிளாஸ் படிக்குறான்ல… பேரு கண்ணன். அவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்றேன்.” என அவர்கள் டூர் செல்லும் பஸ்ஸிற்கு காத்திருந்த இடத்திற்கு சற்று தள்ளி தன் சகாக்களிடம் பேசிகொண்டிருப்பவனிடம் அழைத்துக் கூற,

அவனும், “சரிண்ணா பாத்துக்கறேன். எல்லாரும் இருக்கோம்.” என்றான்.

மனதுக்குள்ளோ, ‘ம்ம்… ரெண்டு பேருக்கும் எத்தனை பாசம் புவனா மேல. என்ன… ஒருத்தர் இப்படி மென்மையான சொல்றாரு.அவரு மிரட்டாத குறையா காலையில சொன்னாரு.’ என தலையசைத்து விட்டு மீண்டும் அவன் அரட்டையை தொடர்ந்தான்.

அவனை பற்றி வெற்றி நன்கு அறிவான். சற்று ஏழைக் குடும்பத்து பையன். முக்கியமாக ஒழுக்கமானவன். படிப்பாளியும். எனவேதான் அவனிடமும் பார்த்துக் கொள்ளும்படி ஒரு வார்த்தை கூறியது. இப்போது கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தான்.

அவன் நகர்ந்துதும், “சின்ன புள்ளய வெளிய அனுப்பற கணக்கா பண்றீங்க மாமா.” என அவள் புலம்ப,

“நீ சின்ன பொண்ணுதானடா.” வாஞ்சையாக வார்த்தைகள் வந்தது.

“நான் ஒன்னும் சின்ன புள்ள இல்லை. எனக்கு பத்தொம்பது வயசாகுதாக்கும். என்ன எனக்கு பாத்துக்க தெரியும்.” என மிடுக்காக கூறியவளைக் கண்டு கேலியாக சிரித்தவன்,

“மொதல்ல கோயிலுக்கு போனா சாமி கும்பிட்டுட்டு பிரசாதம் வாங்கு அப்போ ஒத்துக்கறேன் நீ பெரிய பொண்ணுனு.” என வார,

“அது பசி வேற டிபார்ட்மென்ட்.” என விவேக் பாணியில் சிரித்தவாரு சொல்லவும், வாய்விட்டு சிரித்துவிட்டான்.

சிறிது நேரத்தில் பஸ்ஸும் வர, அவள் தோழி பவியும் அப்போதுதான் வந்தாள். “பஸ் கிளம்பி போறதுக்குள்ள ஒரு வழியா வந்துட்ட போல?” என புவனா முறைத்துக் கொண்டே சொல்ல,

அசடு வழிந்தவள் வெற்றியிடம் ஒரு நட்பான புன்னகையை சிந்திவிட்டு, “உனக்கும் எனக்கும் எடம் புடிச்சு வைக்குறேன்.” என உள்ளே ஓடிவிட்டாள்.

மீண்டும் அவளிடம் ஆயிரம் பத்திரம் சொன்னவன் கொஞ்சம் பணத்தையும், ஸ்னாக்ஸையும் தந்து விட்டு அவள் பேருந்தில் ஏறி அது கிளம்பவும்… கையாட்டியபடி நோக்கியவன் பின் வயலை நோக்கி பைக்கை செலுத்தினான்.

தொடரும்….