மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 13

அத்தியாயம் – 13

இரண்டு நாள் ஆகிவிட்டது திருவிழா தொடங்கி…

வெற்றி முதல் நாளும் இன்றும் எத்தனை தேடியும் அவனவள் கண்களில் சிக்கவில்லை. வந்தால்தானே சிக்க!

முதல் நாளில்,

‘எப்போதும்போல ஒளிந்து விளையாட்டு காட்டுகிறளோ?’

‘பிரச்சனையை சொல்லியும் நாம் இன்னும் எதுவும் செய்யாததால் கோவித்துக் கொண்டு தவிர்க்கிறாளோ?’ என்றெல்லாம் நினைத்தான்.

இன்றும் வராமல் போக,

‘உடம்புக்கு எதும் பிரச்சனையோ?’ என்று நினைத்து பதட்டம் கொண்டான்.

ஆனால் நன்றாக யோசிக்கும்போது ஒருவேளை எதும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டாளா என சந்தேகம் வந்தது.

இல்லாவிட்டால் ஏன் திருவிழா பக்கம் கூட எட்டி பார்க்கவில்லை?

யாரிடம் கேட்கலாமென யோசித்தவனுக்கு மண்டையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

ஏற்கனவே வீட்டில் சொல்லவில்லை என்பது அவனை அரிக்க, இதில் அவள் வேறு கண்ணில் படவில்லை என்றால் அவனும் என்னதான் செய்வான்.

வருடத்தில் அவர்களின் தொடர் ஐந்து நாட்கள் பார்த்துக் கொள்ளும் பொக்கிஷமான நாட்கள் அல்லவா திருவிழா.

எனவே அது அவர்களிருவருக்குமே ரொம்ப ஸ்பெஷல்தான்.

பார்வைகள் கூட சுற்றம் உணர்ந்து அதிகமாக இருக்காது. ஆனாலும் பார்வை வட்டத்தில் இருப்பதே போதும் என இனிமையாக பொழுதை நகர்த்துவர்.

திருவிழாவின் போது அங்கு கொஞ்ச நேரம் சேர்த்து இருப்பதால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளப் போவதில்லை. எனவே அவர்களுக்கு அது பிளஸ் பாயிண்ட்.

போனவருடம் கூட எப்படி மகிழ்ச்சியாக சென்றது.

அவள் பச்சை நிற சேலையில் மயில் போல தான் அவனுக்குத் தெரிந்தாள்.

எப்போதும் போல அவனால் அத்தனை எளிதாக அவனவள் பக்கம் செல்லும் கண்களை விலக்கவே இயலவில்லை.

ஏனோ அன்று முதல் முறை அவர்களின் சந்திப்பு நினைவு வந்து அவனை ஒரு வழி பண்ணியது.

அடிக்கடி பார்க்காமல் இருக்கிறார்கள்; பேசாமல் இருக்கிறார்கள்;

ஆனால் அவளின் அருகாமையை, ஸ்பரிசத்தை ஒரு முறை உணர்ந்திருக்கிறானே;

அவளும்!

இத்தனை வருடக் காதலில் போது கிடைக்காத அவளின் ஸ்பரிசம், முதல் முறை காதலில் விழும் முன் கிடைத்த நினைவு.

ஆனால் அன்று அதை ரசிக்கும் மனநிலையில் அவனில்லை.

இன்றும் யோசிக்கும்போது ஒரு மனம் அடித்துக் கொள்ளும்தான். ஆனால் அவளருகில் தான் இருப்பேன் பாதுகாப்புக்கு என தேற்றிகொள்வான்.

நினைவுகள் எங்கெங்கோ செல்ல வெற்றிக்கு உண்மையில் பெருத்த ஏமாற்றம்; அதைவிட எதும் பிரச்சனையோ என்ற பதற்றம்.

பொதுவாக வயதான பெண்கள், நடுத்தர வயதினர், அவனுக்கு அக்கா போன்றவர்களிடம் அன்பாக நன்றாக பேசுவான்.

அவன் அதிகம் பேசும் இளம்பெண் என்றால் அது புவனா மட்டுமே.

பவி, மல்லி போன்றவர்கள் அவன் தங்கை போல என்றாலும், ஒரு நட்பான புன்னகையோடும், விசாரிப்போடும் நிறுத்திக் கொள்வான். அதிகம் பேசமாட்டான்.

ஏதேனும் உதவி என்னும்போது பேச வரும். மற்றபடி ஒரு புன்னகை மட்டுமே.

ஏன் இன்னும் அவனவள்… தேன்மொழியிடமே விழி பாஷையை தாண்டி பேசியதில்லை.

அப்படியிருக்க, அவளை பற்றி மல்லியிடம் கேட்க சங்கடமாக இருந்தது அவனுக்கு.

அதையும் தாண்டி மல்லியிடம் பேச நினைக்க, அவளையுமே காணவில்லை.

யாரிடமும் கேட்கவும் முடியாமல், அவளை காணவும் முடியாமல் வந்த எரிச்சலில் இயல்புக்கு மாறாய் கொஞ்சம் கடுகடுவெனதான் இருந்தான்.

====

புவனாவும், பவியும் நின்று அவர்களின் முக்கியமான வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெயில் சக்கை போடு போட, குல்ஃபீக்கார அண்ணாவின் ஐஸ் பெட்டியில் உள்ள அதன் எண்ணிக்கை பலரின் வாங்கலில் குறைந்து கொண்டே வந்தது.

இனிப்பான, குளுகுளுவென இருக்கும் அந்த குல்ஃபீ அத்தனை டேஸ்ட்டாக இருந்தது.

எப்போதும் போல மொக்கை ஜோக் செய்து, சிரித்துக் கொண்டு கருமமே கண்ணாய் இருந்தனர்.

அப்போதுதான் காவ்யாவை அங்கு அழைத்து வந்தான் கதிர்.

‘நாம சொல்லிதான தேன் அவர்கிட்ட பேச போனா… நம்மாள தான் மாட்டிக்கிட்டா.’ என வருந்தினான்.

‘அவருக்கே அவ இங்க வராததால பிரச்சனை புரிஞ்சிருக்குமோ? இல்லனா இதை எப்படி அவர்ட்ட சொல்ல?’

‘பிரச்சனைக்கு மேல பிரச்சனையா வருதே! இதுக்கு எண்டே இல்லையா?’ சலிப்பாக இருந்தது அவனுக்கு.

‘விஷயத்தை அவர்கிட்ட வேறமாதிரி சொல்லிருக்கலாம். நம்மதான் எல்லாத்துக்கும் கஷ்டம் கொண்டு வரோம் போல.’ அவனுக்கு மறுபடியும் இப்படித்தான் தோன்றியது.

அவன் தோழி அவனிடம், “அங்க இருக்க கடைக்கு போய்ட்டு வரேன்.” என்று சொன்னதற்கு என்ன என புரியாமலே தலையாட்டி வைத்தான்.

கடுப்பாக கண்ணை சுழற்றியவனின் கண்களில் பட்டாள் அவனின் வருங்காலம்.

குல்ஃபீயை அவள் ரசித்து உண்ணும் அழகை கண் இமைக்காமல் பார்த்தவனுக்கு, கடுப்பு போன இடம் தெரியவில்லை.

அவள் சப்புக் கொட்டி சாப்பிடுவதை கண்டவன் கண்களில் ரசனை கூடியது.

‘சட்டுனு போய் அவள் கையில வச்சிருக்கற ஐஸ்ஸ வாங்கி சாப்ட்டா எப்படி ரியாக்ட் பண்ணுவா?’ சட்டென ரொமான்டிக்காக எண்ணம் வர,

‘இன்னொன்னு வாங்கி தாங்கனு கேப்பா… இல்ல… கேட்காம புடிங்கி சாப்டீங்கல அதால ரெண்டா வேணும்னு சொல்லுவா.’ என மனம் சொல்லவும் பக்கென சிரித்துவிட்டான்.

‘ஆமா… அப்படி சொல்லதான் நெறய வாய்ப்பு இருக்கு.’ சிரித்தவாறே அவளை மீண்டும் நோக்க, தன்னை யாரோ பார்ப்பது போல தோன்றியதால் அவளும் நிமிர்ந்தாள்.

இருவரின் பார்வைகள் அழகாக கவி பேச, அனைத்தையும் மறந்தவள் அவனை மட்டும் நோக்கிக் கொண்டிருந்தாள். அவனும் பார்வையை இம்மியும் நகர்த்தவில்லை.

என்னதான் அவளை ரசித்து பார்த்தாலும், ‘இங்க எத்தனை பிரச்சனை போய்ட்டு இருக்கு. எதும் தெரியாம அவள பாரேன் ஜாலியா குல்ஃபீ சாப்டு இருக்கா.’ மனம் அவளை சடாமல் இல்லை.

அப்போது அவனை தோள் தொட்டு அழைக்கவும், சுற்றம் உணர்ந்து திரும்பியவன் பார்க்க, காவ்யா நின்று கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அவள் கொஞ்ச நேரம் முன்பு சென்றுவிட்டு வருகிறேன் என்பதுபோல ஏதோ கூறியதே நினைவு வர,

அதை கூட சரியாக கவனிக்காததை எண்ணி தன்னையே கடிந்து கொண்டான்.

மீனாட்சி கொஞ்ச நேரம் கழித்து வருவதாக சொல்ல, இவள் ஆசையாக நானும் வரேன் என சொல்லவும் அழைத்து வந்தான்.

“எங்க காவ்யா போய்ட்டு வரீங்க?” என்ற அவன் கேள்விக்கு,

“சொல்லிட்டுதான போனேன். அப்போ சொன்னத காதுல வாங்கல.” என புருவம் உயர்த்த, அசடு வழிந்தான்.

“அது…” என தடுமாறவும்,

“காதுல வாங்கலனா, ஏதோ ஒரு முக்கியமான வேலையா இருந்துருக்கீங்க… இல்லையா?” கேலி பேச, சிரித்து சமாளித்தான்.

ஆனால் இப்போதும் இதை தூரத்தில் இருந்து பார்த்த புவனாவிற்கு வயிறு பற்றி எரிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அங்கு பாதுகாப்புக்கென நிறுத்தப் பட்டிருக்கும் தீயணைப்பு வண்டியால் கூட அந்த தீயை அணைக்க முடியுமா என்பது சந்தேகமே!

அதை கவனித்த பவி அவளை கூல் செய்ய காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில்,

“ஓவரா சூடாகாத புவனா அப்பறோம் கையில இருக்க ஐஸ் சாப்பிட முடியாம உருகிடும்.” சொல்லி சிரிக்க,

“ம்ம்… இப்போ இது தான் ரொம்ப முக்கியம்.” கோபத்தில் கையிலிருந்ததை கீழே எறிந்து விட்டாள்.

“ஏன்டி இப்படி. கோபத்தை கொற. அது அண்ணாவுக்கு தெரிஞ்ச பொண்ணா இருக்கும்.” என சமாதானம் சொன்னாலும்,

குல்ஃபீயை சாப்பிட்டு கொண்டேயிருக்க, அவளை முறைத்தவள், அவசரப்பட்டு தான் மட்டும் கோபத்தில் பிடித்ததை எறிந்து விட்டோமெ என இப்போது தோன்ற பவி எத்தனை போராடியும் அவள் குல்ஃபீயையும் பிடிங்கி கீழே போட்டுவிட்டாள். அப்போதுதான் மனதில் ஒரு நிம்மதி அவளுக்கு…

உதடு பிதுக்கிய பவியோ, ‘நானும் என் குல்ஃபீயும் என்ன பண்ணோம் உன்ன?’ என்பது போல அவளை பாவமாக பார்க்க, அதைக் கண்டு கொள்ளாமல் தோழியை இழுத்துக் கொண்டு அவனை முறைத்துவிட்டு வேறுபக்கம் சென்றுவிட்டாள்.

அவள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கீழே போட்டது, முறைத்தது, தோழியின் குல்ஃபீ மீதும் தன் கோபத்தை காட்டியது என எல்லாவற்றையும் பார்த்த கதிர்,

‘சின்ன புள்ளன்றது சரியா இருக்கு. எப்போதான் இவ நம்மள புரிஞ்சிப்பாளோ.’ என பெருமூச்சு விட்டவன், காவ்யாவை சங்கடமாக பார்த்தான்.

ஏனெனில் அவளுமே நடந்ததை பார்த்தாள்.

ஆனால் இயல்பாக, “உங்க ஆள் ரொம்ப பொஸசீவ் போல.” என்றாள்.

வெகுநேரம் நண்பனை தேடிய பிரபா அப்போதே கருப்பு சட்டையைக் கண்டுவிட்டு பெருமூச்சோடு எதையும் கவனிக்காது,

“ஏன்டா நல்லவனே… போன் என்னத்துக்கு வச்சுருக்க? போட்டா எடுக்கவே இல்ல. உன்ன தேடி சுத்திட்டே…” என ஆர்ப்பாட்டமாக வந்த பிரபா, அவன் எதிரே ஒரு பெண் நின்றிருப்பதைக் கண்டு அமைதியானான்.

யாரிது என யோசிக்க, அவளுமே அவனை ஒரு நொடி உற்று பார்த்துவிட்டு இயல்பானாள்.

சட்டையில் இருந்து போனை எடுத்துப் பார்த்தவன், “சாரிடா போன் சைலன்ட்ல இருந்திருக்கு போல.” என்றுவிட்டு,

அவள் பக்கம் திரும்பி, “காவ்யா இது என் பிரண்ட்… பிரபா.”

“பிரபா இது காவ்யா.” என பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தான்.

அப்போதுதான் அவன் கதிரின் நண்பன் என அவளும், கதிர் சொன்ன பெண்ணா என அவனும் அறிந்து கொண்டனர்.

சில நிமிட பேச்சிற்குப் பின் மீனாட்சி மாணிக்கத்துடன் வர, கோவில் நோக்கி சென்றனர்.

தொடரும்…