மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 12

அத்தியாயம் – 12

திருவிழா ஆரம்பிக்க ஒரு நாளே இருந்தது.

ஊருக்கு கொஞ்சம் வெளியே இருந்த சாலையோரம் முதல் கம்புகள் நட்டு அதில் டியூப் லைட் போடப்பட்டது. இது கோவில் வரை இருந்தது. கோவிலிலும் அதை சுற்றி இருந்த மரத்திலும், வண்ண விளக்குகள் போடப்பட்டது. பேனர்கள் வைக்கப்பட்டது;

பிக்ஸல் எல்.இ.டி யில் மாரியம்மன் திருவுருவமாக ஜொலித்தார்.

காலையில் எழும்போதே ஒலிபெருக்கியில் கேட்கும் பாடல்கள் இரவுதான் நிற்கிறது.

உற்றார் உறவினர் தெரிந்தவர் என வீட்டிற்கு வருகை தர ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

திருவிழா முதல் நாள் கடவுள் திருவுருவம் எப்போதும் வைத்திருக்கும் இடத்திலிருந்து விமர்சயாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள ஒரு ஊஞ்சலில் வைக்கப்படும்.

இரண்டாம் நாள் இரவு ஊர்மக்கள் அருகே உள்ள பட்டாளம்மன் கோவில் சென்று அரிசியில் சாமிக்கென செய்த மாவுருண்டை, பழம், தேங்காயுடன் படைத்து வழிபடுவர்.

மூன்றாம் நாள் தான் திருவிழா முக்கிய நாள். மாரியம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள இடத்தில் ஊர்மக்களால் காலை முதல் மாலை வரை பொங்கல் வைக்கப்பட்டப்பின்,

பழம், தேங்காயுடன் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட தட்டுகளில் மேளம் முழங்க பெண்கள் அனைவரும் வீட்டிலிருந்து பூஜைத்தட்டை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று வழிபட்டு சாமிக்கு படைப்பர்.

அலகு குத்துவது, தீ மிதிப்பது, காவடி எடுப்பது போன்ற வேண்டுதல் அன்றுதான் நடைபெறும்.

அடிக்கும் மேள சத்தத்தில் தனை மறந்து சிலர் சாமியாடுவர்.

திருவிழாவின் அனைத்து நாட்களிலும் பட்டாசு வெடித்தாலும் அன்று வானவேடிக்கை அதிகமாக கண்ணை கவரும்.

ஒருமுறையாவது வெளியே நின்று அதை ரசிக்க மனம் விரும்பவே செய்கிறது.

நான்காம் நாள் ஊரில் உள்ள பசுபதீஸ்வரன் கோவிலில் பூஜை செய்து பொங்கல், தேங்காய், பழம் என படைக்கப்படும்.

ஐந்தாம் நாள் கடவுள் திருவுருவம் குதிரை சிலையின் மீது வைக்கப்பட்டு டிராக்டரில் ஊரை சுற்றி எடுத்து வரப்பட, ஆங்காங்கு உள்ள மக்கள் தாங்கள் சாமிக்கென நேந்து விட்ட ஆட்டையும், கோழியையும் பலி கொடுப்பர்.

அன்றுதான் தங்கள் முறையானவர்கள், மாமன் மச்சான் மீது மஞ்சள் நீர் ஊற்றுவது.

கடவுளுக்கு பூஜை பொருட்களை படைத்து, பின் அசைவம் சமைத்து உண்பர்.

சாமியை ஊரை சுற்றி எடுத்து சென்று, கோவிலுக்குள் வைத்து பின் மீண்டும் முன்பே இருந்த இடத்தில் மேளதாளம், முன்னே மாரியம்மன் ஆட்டம் ஆடியவாரு பத்திரமாக வைத்து விடுவர்.

இது போல ஐந்து நாட்கள் சிறப்பாக அந்த ஊரில் திருவிழா நடைபெறும்.

திருவிழா ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்து கோவிலை சுற்றி உள்ள இடங்களில் பொம்மைக் கடை, பெண்களுக்கு தேவையான ஹெர் க்ளிப், வளையல் மற்றும் பல உள்ள பொருட்கள் உள்ள கடைகள், பலூன் விற்பது, ஐஸ் விற்பனை, ராட்டினம் என கலை கட்டும்.

இதுதான் அந்த கிராமத்தில் திருவிழா நடைபெறும் முறை.

வாங்க ப்பா நாமளும் திருவிழாக்கு போய்ட்டு வருவோம்.

====

திருவிழா ஆரம்பிக்கும் முந்தைய நாளில் கதிரை சுந்தரம் வீட்டிற்கு

திருவிழாவிற்கென எடுத்த உடையை கொடுக்க சென்று வர சொல்ல, வேண்டா வெறுப்பாக சென்றான்.

முன்பெல்லாம் சந்தோஷமாக செல்வான். இப்போதுதான் இந்த சலிப்பு.

திருவிழா போது முன்னிருந்தே இரு வீட்டிலும் ஒருவருக்கொருவர் துணி எடுத்துக் கொடுப்பது வழக்கமான விஷயம்தான்.

காரில்தான் கிளம்பினான். பாட்டி, அத்தை, மாமன், தர்மா, தேன்மொழி என அனைவருக்கும் எப்போதும்போல தரமான அவர்களுக்கேற்ற உடையையே எடுத்திருந்தார் மீனாட்சி. மேலும் மூன்று செட் துணி வழக்கம் போல எடுத்து பீரோவில் பத்திரமாக வைக்கப்பட்டது.

முன்பே காவ்யா வருகை தெரிந்ததால் அவளுக்கும் சேர்த்து எடுத்தார்.

அவளிடம் கொடுக்கும் போது அவள் வாங்க தயங்க, “நீயும் என் பொண்ணுதாமா. அம்மா கொடுத்தா வாங்கிக்க மாட்டியா?” என அவள் தலையை அன்பாக வருடியதும், புன்னகையோடு வாங்கிக் கொண்டாள்.

கதிர் கிளம்பும்போது, “அவங்க வாங்கிக்க மாட்டேன்னு சொன்னா என்னம்மா பண்றது?” என கேட்க,

“அதுலாம் சொல்ல மாட்டாங்க ய்யா. நீ போய்ட்டு வா.” என்றார் உறுதியாக.

சுந்தரம்… அவருக்கு உண்மையிலேயே கொஞ்சம் தங்கை மீது பாசம்தான்.

அதனாலே அவருக்கு இந்த வாழ்க்கை கிடைக்க  பல பாவத்தை செய்தார்.

ஆனாலும் தங்கையின் பிடிவாதம், திருமணத்திற்கு பின்னான பேச்சு போன்றவற்றால் முன்போல அவரிடம் அதிகம் பேசுவதில்லை.

மாணிக்கத்தின் மீது அன்றைய நாளுக்குப் பின் மதிப்பு வரவும் இல்லை. அதானாலே அவரை கையில் வைத்து ஆட்டி படைக்கிறார்.

அவர் இப்படி மனைவியை மச்சான் அறியவெல்லம் அதட்டமாட்டார். 

கதிரையும் அவருக்கு புடிக்கும். தங்கை மகன்… தன் மருமகன் அல்லவா.

ஆனாலும் எல்லாத்தையும் விட அவருக்கு அவரின் எண்ணம் நடக்க வேண்டும், அனைவரும் அவரின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.

அப்பாவை போல பிடிவாதம், அன்னையை போல திமிர் அவர் ரத்தத்திலேயே ஊறியிருந்தது போலும்.

எனவே அவரை மீறி ஒரு விஷயம் செல்வதை அறவே விரும்பமாட்டார். அதை தன் கீழ் கொண்டு வந்து, தன் நினைப்பு போல நடக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்வார்.

அவர் சென்று பேசி அவன் மறுத்தால் மரியாதையாக இருக்காதல்லவா, அதனாலே அன்று கனகத்தை அனுப்பியது. கொஞ்சநாள் விட்டு பிடிப்போம் என நினைத்தார்.

விஷயமென்னவென்றால் அவர் மனதில் இப்போது தேனிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது; கதிர் நினைத்தது போலவே.

ஏற்கனவே மீனாட்சி, மாணிக்கம், கதிருக்கும் உடையை எடுத்து வைத்தவர், மனைவியிடம்,

“அவன் வரும்போது எப்போவும் போல துணி வாங்கிக்கோ.” என கூறிவிட்டு மில்லுக்கு சென்று விட்டார்.

ஊரில் பெரிய ரைஸ் மில் அவர்களுடையதுதான். நல்ல வருமானம். அவர் அப்பா ஆரம்பித்தது. அவருக்கு பின் சுந்தரம் கவனித்து வர, தர்மா இப்போது தான் சில வருடங்களாக அங்கு வருகிறான்.

====

வாசலுக்கு வந்தவனைக் கண்டு, “வா கதிரு.” கொஞ்சம் இயல்பாகதான் அழைத்தார்.

உள்ளே சென்றவர் தண்ணி எடுத்து வந்து கொடுக்க, குடித்தவன், அவன் கொண்டு வந்ததை கொடுத்தான்.

பின், “நான் போய் பாட்டிய பாத்துட்டு வரேன்.” என்றுவிட்டு உள்ளே சென்றான்.

சுந்தரத்தின் தாய் அழகம்மாள். அவர் அப்பா ராஜரத்தினம் இறப்பிற்கு பின்னும் மருமகளிடமும், பேத்தியிடமும் அதிகாரத்தை காட்டிக்கொண்டுதான் இருந்தார். ஆனாலும் வயது ஏறுகிறது அல்லவா.

கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் போக, துணி துவைக்கும் இடம் எதற்கோ சென்றவர் வழுக்கி விழுந்துவிட்டார். அதன் பிறகு படுத்த படுக்கையாகதான் இருக்கிறார்.

திருமணம் செய்ததிலிருந்து அனுபவித்த மாமியார் கொடுமையை எல்லாம் மறந்து விட்டு, முடியாத காலத்தில் முகம் சுளிக்காமல் அவருக்கு அனைத்தையும் பார்ப்பது கனகம் தான்.

இதில் கதிருக்கு அத்தையை நினைத்து ஒரு வியப்பு. அவர் செயல் அத்தனை சுலபம் அல்லவே.

உள்ளே சென்று அவரிடம் சில நிமிடங்கள் பேசியவன் அதன் பின் மீண்டும் ஹாலுக்கு வர, தர்மா அறையிலிருந்து வெளியே வந்தான்.

இரண்டு நாட்களாக காலையிலேயே சீக்கிரம் மில்லுக்கு செல்பவன், இரவு பத்துக்கு மேல் தான் வீடு வந்தான்.

கவலையை மறக்க வேலையில் மூழ்கினான். தங்கை விஷயம் இன்னும் அவனுக்குத் தெரியாது.

இன்று அசதியில் கொஞ்ச நேரம் உறங்கிவிட, சாப்பிட்டுவிட்டு மில்லுக்கு புறப்பட்டவன் வெளியே வந்தான்.

கதிர், தர்மா பார்வை கூர்மையாக ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டது.

தர்மா, “அப்படி கட்டாயம் பண்ணி கல்யாணம் பண்ணிக்கற மாதிரி பையன தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாக்க வேணாம். அவளுக்கு ஏத்தவன் கிடைப்பான் ப்பா.” என தந்தையிடம் நேற்றுதான் சொன்னான்.

அவர் மில்லில் இருந்த போது கதிரிடம் நடந்த பேச்சு வார்த்தையைக் கூறும்போது,

அவரும் ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவை இன்னுமே கொஞ்சம் உறுதியாக்கினார்.

இவர்களிருவருக்கும் முதலிலிருந்தே அத்தனை ஒத்துப்போகாது.

கோபத்தில் வேண்டுமானால் கொஞ்சம் ஒத்துப்போகும். மற்றபடி பல வேறுபாடுகள் இருந்தது.

இப்போது அவன் மாறியிருந்தாலும் அவனின் சில பேச்சு, இருவரின் சண்டை அவர்களை சில பல வருடங்களாகவே இயல்பாக பேச விட்டதில்லை. இப்படித்தான் பார்த்தால் முறைத்துக் கொள்வார்கள்.

சாப்பிட வந்தவன், ‘இவன் இருக்கான் சாப்பிடலாமா? கிளம்பலாமா?’ என யோசிக்க, கதிரும் கிளம்பவே நினைத்தான்.

கனகம் இருவரையும் விடவில்லை. இட்லி, சாம்பார், சட்னி என செய்திருக்க, அதை உண்ண வைத்தே விட்டார்.

முதலில் தர்மா கிளம்பிவிட, கதிர் அத்தை கொடுத்ததை வாங்கி கிளம்பும் சமயம் ஒரு ரூமிலிருந்து வெளியே வந்தாள் தேன்மொழி.

‘அண்ணா கிளப்பிட்டான். சாப்புடுவோம்.’ என அவள் வர, அங்கு கதிரை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

அவனுமே அப்படி அவளை பார்ப்போம் என நினைக்கவில்லை.

இரண்டு நாள் முன்பு வாங்கியிருந்தாலும், அறைந்ததன் விளைவை கன்னம் காட்டி கொடுத்தது.

கதிருக்கு உள்ளுக்குள் எச்சரிக்கை ஒலித்தது.

அதுவும் அவளை கனகம் பார்த்த கண்டிப்பான பார்வையில், அவனிடம் வரவேற்ப்பாக ஒரு புன்னகையை சிந்தியவள், ஒரு வார்த்தையும் பேசாமல் உள்ளே வேகமாக சென்றுவிட கனகத்தை உற்று பார்த்தான்.

பின் அவனே, “எதுவா இருந்தாலும் வயசு புள்ள மேல ஏன் த்தை கை நீட்றீங்க?” என கேட்க,

“உனக்கு என்னப்பா அக்கறை? அதான் அவள கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டல?

அப்பறோம் அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” என பட்டென கோபமாக கேட்டார்.

அன்று மகளை அடித்தது ஒரு புறம் வருத்தம் என்றால், அதை வீட்டில் மறைக்க என்ன செய்ய என யோசிக்க உடம்புக்கு சரியில்லை என அதிகம் வெளி வர விடாமல் பார்த்துக்கொண்டார்.

அவர்கள் கிளம்பிய பின்னே வெளியே வருவாள். அவர்களிருவருக்கும் மில்லில் கொஞ்சம் அதிகம் வேலையிருக்க, அவர்களும் பெரிதாக கவனிக்கவில்லை.

கதிருக்கு மகள் விடயம் தெரியுமோ என்று அவருக்கு சந்தேகம்.

அன்று அவன் ‘அவளுக்கு வேற நல்லவர் கிடைப்பாரு.’ என சொன்னது யோசிக்கும் போது உறுத்தியது. அதானாலே இந்த கோபம்.

அதற்கு கதிர், “நான் அப்படி சொல்லிட்டா எனக்கு அவ யாருமே இல்லனு ஆகமாட்டா. அவள் மேல எனக்கு பாசம் இருக்கு த்தை. எத எப்ப பேசறீங்க?” என பற்களை கடித்து வார்த்தைகளை துப்பியவன்,

“மறுபடி அவள் மேல கை நீட்றதுலாம் வேணாம் பாத்துக்கோங்க.” என கொஞ்சம் மிரட்டல் குரலில் கூறிவிட்டு, யோசனையோடு சென்றுவிட்டான்.

தொடரும்….