மனம் கொய்த மாயவனே – 7

அத்தியாயம் – 7

மறுநாள் காலையில் பரட் பரட்டென்று கோபத்துடன் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்தாள் அல்லிராணி.

கை வேலை செய்து கொண்டிருந்தாலும் வாய் அதன் பாட்டிற்கு முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

வார்த்தைகளில் சூடு பறந்தது.

‘இவன் பெரிய இவன். ஆளு பார்க்க கொஞ்சம் லட்சணமா இருக்கோம்னு திமிரு. அதான் தெனாவெட்டா திரியுறான். ஏன் இவனுக்கு நான் போதாதாமா? அயல்நாட்டு ராணியைத் தான் கட்டிக்குவானா? இந்த அல்லிராணியைக் கட்டிக்கிட்டா ஆகாதா?

வேற பொம்பள கூட நைட் தனியா இருந்தான்னு தெரிஞ்சும் இவன் பின்னாடி சுத்துறேன்ல அதான் அவனுக்கு ஏத்தம் ஆகிப் போச்சு. இனி வேற எந்தப் பொம்பளை கூடயாவது அவனைப் பார்த்தா வெட்டிப் பொலிப் போட்டுருவேன்…” என்று அவள் கடுப்பாகப் புலம்ப,

‘ஆமா அவனே உன்னைக் கண்ணாலயே பொசுக்குறான். இந்த லட்சணத்தில் நீ அவனை வெட்டிப் பொலிப் போட்டுருவியா?’ என்று மனசாட்சி அவளை இடிந்துரைத்தது.

“டேய் முருகா! தண்ணி ரொம்பக் கொதிக்குதுடா. பச்சை தண்ணியை ஊத்தி சூட்டைக் குறை…” அவளின் புலம்பல் வெற்றியின் காது வரை சென்றடைய நக்கலுடன் நண்பனிடம் சொன்னான் வெற்றி.

அன்று அல்லிராணிக்கு மாதாந்திர பிரச்சனையின் முதல் நாள் என்பதால் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தாள். சித்தாள் வேலையில் அதிகம் வலுவான வேலை பார்க்க வேண்டியது இருக்கும்.

இந்த உடல்நிலையுடன் சென்று சோர்ந்து அமர்ந்து விட்டால் மேஸ்திரி வார்த்தையாலேயே சவுக்கடி கொடுப்பான் என்பதால் அன்று வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து கொள்வாள். அதனால் சரோஜா மட்டும் அன்று வேலைக்குச் சென்றிருந்தார்.

வீட்டில் இருந்ததால் மெதுவாக எழுந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் வெற்றி வேலைக்குச் செல்ல வெளியே வர, முருகனும், காளியும் வெளியில் அவனுக்காகக் காத்திருந்தனர்.

நேற்று அவன் கோவிலில் வைத்து நண்பர்களுடன் பேசிக் கொண்டதைக் கேட்ட கோபம் இன்னும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்க, அவனை முறைத்துக் கொண்டே புலம்பித் தள்ளினாள்.

“அந்தச் சுடு தண்ணியை உன் மூஞ்சிலேயே ஊத்துறேன்…” என்று கத்தினாள் அல்லிராணி.

“என்னடா முருகா, நேத்துக் கட்டின ரேடியோ செட்டை இன்னுமா கழட்டலை?” என்று கேட்டுக் கொண்டே காதைக் குடைந்து கொண்டான் வெற்றி.

“முருகண்ணே, ஒழுங்கா உன் கூட்டாளியைக் கூட்டிட்டுப் போயிடு. இருக்குற கடுப்புக்கு நிஜமாவே சுடுதண்ணியை மூஞ்சில ஊத்திற போறேன். அவன் மேல மட்டும் ஊத்தமாட்டேன். உங்க மேலயும் தான். மூஞ்சி உருப்படியா இருக்கணும்னா ஓடிப் போயிருங்க…” என்றாள் மிரட்டலாக.

“டேய் வெற்றி, ஏன்டா அந்தப் புள்ளைகிட்ட வம்பு இழுக்குற? ஏற்கனவே என் மூஞ்சி கருஞ்சட்டி மாதிரி தான் இருக்கு. இதில் சுடுதண்ணி ஊத்தி அந்தத் தழும்பு வேற வந்துச்சுனா என் மூஞ்சை பார்க்க என்னாலேயே சகிக்க முடியாதுடா. வா, கிளம்புவோம்…” என்று வெற்றியை இழுத்துக் கொண்டு போனான் முருகன்.

‘அந்தப் பயம் இருக்கட்டும்…’ என்பது போல் அவர்களை உறுத்துப் பார்த்து விட்டுப் பாத்திரங்களை அள்ளிக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள் அல்லிராணி.

மதியம் வரை படுத்து நன்றாக உறங்கி விட்டு, மதிய உணவை உண்ண எழுந்து அமர்ந்தாள் அல்லி.

அப்போது வெளியில் ஏதோ சப்தம் கேட்க, குடிசையின் கதவை மெதுவாகத் திறந்து பார்த்தாள். அங்கே எதிர் வீட்டில் வெற்றி தான் சுற்றும் முற்றும் நோட்டமிட்டுக் கொண்டே தன் குடிசையின் கதவைத் திறந்து கொண்டிருந்தான்.

அவனை அந்நேரம் அங்கே பார்த்ததும், ‘என்ன இந்த நேரம் வீட்டுக்கு வந்திருக்கான்?’ என்று முதலில் நினைத்த அல்லி, அவன் சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டே உள்ளே செல்வதை யோசனையுடன் பார்த்தாள்.

‘இவனென்ன அவன் வீட்டுக்குள்ளயே களவாணிப் பையன் போல மறைஞ்சு மறைஞ்சு போறான்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவள், இப்போது அவள் அவனை நோட்டமிட ஆரம்பித்தாள்.

உள்ளே சென்ற சில நொடிகளில் மீண்டும் வெளியில் வந்த வெற்றி குடிசையின் கதவைப் பூட்டி விட்டு அவனின் குடிசைக்கும், பக்கத்துக் குடிசைக்கும் நடுவில் இருந்த சந்திற்குள் போனான்.

அல்லிராணியும் தன் குடிசையின் கதவை மூடி விட்டு மெல்ல அவனின் பின் சென்றாள்.

சந்தின் நுழைவாயில் அருகில் தயங்கிச் சில நொடிகள் நின்றாள். பின் தயக்கத்தை உதறி மெல்ல சந்திற்குள் பார்வையைச் செலுத்த வெற்றி அங்கே சென்ற அறிகுறியே இல்லாமல் இருக்க, வேகமாகச் சந்திற்குள் நுழைந்து நடந்தாள்.

அந்தச் சந்திற்குள் நுழைந்து அடுத்தப் பக்கம் சென்றால் இன்னொரு தெரு வரும். அங்கே ஓட்டு வீடுகளும், கான்கிரீட் வீடுகளும் உண்டு.

அந்தத் தெருவிற்குள் நின்று வெற்றி எந்தப் பக்கம் போனான் என்று தேடினாள். சில நொடி தேடலுக்குப் பிறகு சிறிது தூரத்தில் இருந்த ஓட்டு வீட்டிற்குள் அவன் நுழைவது தெரிந்தது.

அல்லியும் வேகமாக அந்த வீட்டை நோக்கி நடந்தாள்.

அருகே சென்று பார்த்தாள். வீட்டின் கதவு மட்டுமில்லாமல், ஜன்னல்களும் இறுக மூடப்பட்டிருந்தன.

‘இது யாரு வீடு? அந்த ஆளு எதுக்கு இங்கே வந்திருக்காரு?’ என்று யோசித்துக் கொண்டே அங்கே ஓரமாக நின்றாள்.

‘கதவைத் தட்டுவோமா? அப்படித் தட்டினால் எதுக்கு நீ இங்கே வந்தன்னு கேட்டால் என்ன பதில் சொல்ல? நீ என்ன செய்றனு பார்க்க வந்தேன்னு சொல்ல முடியுமா?’ என்ன செய்வது என்று புரியாமல் அவள் குழம்பிய படி நின்று கொண்டிருந்த போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டது.

கதவைத் திறந்து கொண்டு வெற்றி அல்லாமல் வேறு யாரோ இருவர் வெளியே வர, வேகமாக அங்கிருந்த இன்னொரு வீட்டின் புறம் மறைந்து நின்று கொண்டாள்.

வெளியே வந்த ஆடவர்கள் இருவரும் அப்படியே அந்தக் கதவை வெளியே பூட்டித் தாழிட்டனர்.

‘அச்சோ! என்ன வெற்றியை உள்ளே போட்டுப் பூட்டுறாங்க?’ என்று பதறிப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கதவைப் பூட்டியவர்கள் நிதானமாக நடந்து அங்கிருந்து சென்று விட, வேகமாக அந்த வீட்டை நோக்கி ஓடினாள் அல்லிராணி.

“அடப்பாவிகளா! வெற்றி உள்ளே வந்தானேடா. அவனை எதுக்குடா உள்ளே போட்டுப் பூட்டிட்டுப் போனீங்க?” என்று அங்கே இல்லாதவர்களைத் திட்டிக் கொண்டே அந்த வீட்டின் கதவைத் தட்டி விட்டுக் கதவில் காதை வைத்துக் கேட்டாள்.

உள்ளே இருந்து எந்தச் சப்தமும் கேட்காமல் போக, “வெற்றி…” என்று அழைத்துப் பார்த்தாள்.

அவளின் குரலுக்கு எந்தப் பிரதிபலிப்பும் உள்ளே இருந்து கேட்கவில்லை என்றதும் மெல்ல வீட்டைச் சுற்றி வந்தாள்.

ஜன்னல்கள் அனைத்தும் இறுக மூடியிருந்தன. சிறு இடைவெளியாவது இருக்குமா என்று தேடிப் பார்த்தாள். ஆனால் சிறிய இடைவெளி கூட இல்லாமல் போக, வீட்டைச் சுற்றி நடந்து வந்து வீட்டின் பின் பக்கம் வந்தாள்.

அங்கே வீட்டின் பின் புறமும் ஒரு கதவு இருந்ததை வியந்து பார்த்து விட்டு, வேகமாக அந்தக் கதவைத் திறக்க முடிகிறதா என்று பார்த்தாள். ம்கூம், சாவி துவாரம் கூட அங்கே இல்லை. உள்ளே பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்று புரிந்தது.

ஒருவேளை இந்தப் பாதை வழியாக வெளியே போயிருப்பானோ என்று யோசித்தாள்.

போயிருந்தால் நல்லது தான். ஒருவேளை போகலைனா உள்ளே தானே இருந்தாகணும்? அய்யோ! இப்போ அவன் உள்ளே இருக்கிறானா? இல்லையென்றால் வெளியே சென்று விட்டானா என்று எப்படித் தெரிந்து கொள்வது என்று புரியாமல் குழம்பிப் போனாள்.

ஏனோ மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவனுக்கு ஏதோ ஒரு ஆபத்து என்று உள்ளுணர்வு சொல்லி அவளை உலுக்கி எடுத்தது.

அவன் என்ன ஆனான் எங்கே போனான் என்று தெரியாமல் தனக்கு நிம்மதியே இல்லை என்பதை உணர்ந்தவள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சில நொடிகள் தடுமாறி நின்றாள்.

பின் ஓட்டமும் நடையுமாகப் பேருந்து நிலையம் சென்றவள் டவுன் பஸ்ஸை பிடித்துப் பஜாருக்குச் சென்றாள்.

வெற்றி வீட்டின் உள்ளே அடைக்கப்பட்டிருந்தால் அங்கே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லி உதவி கேட்டாலே செய்திருப்பார்கள். ஆனால் அந்த யோசனை அவளுக்குச் சற்றும் தோன்றவில்லை.

அந்த நேரம் வெற்றியின் நண்பர்கள் தான் அவளின் நினைவடுக்கில் வந்தனர். உடனே அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளின் மனதை வியாபித்திருக்க உடனே பேருந்து ஏறிவிட்டாள்.

வேலை பார்க்கும் போது பத்திரமாக இருக்க அவளின் தாவணி முந்தானையில் எப்போதும் சில்லறை காசுகளை முடிந்து வைத்திருப்பாள். நல்லவேளையாக அந்தக் காசு அன்றும் அவள் முந்தானையில் இருந்ததால் பேருந்து நடந்துனரிடம் பேச்சு வாங்குவதில் இருந்து தப்பித்தாள்.

பஜாருக்குச் சென்றவள் வழக்கமாக வெற்றி விற்பனை செய்யும் இடத்திற்கு ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.

அங்கே அருகில் செல்ல செல்ல கண்ட காட்சியில் அவளின் கண்கள் சட்டென்று கலங்கிப் போயின.

அங்கே முருகனிடம் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான் வெற்றி.

அவனை அங்கே பார்த்ததும் அவ்வளவு நேரம் அவளுக்குள் துடித்துக் கொண்டிருந்த துடிப்புச் சட்டென்று அடங்க, கலங்கிப் போன கண்களில் இருந்து கங்கை நீர் போல் கண்ணீர் நிற்காமல் வடிய ஆரம்பித்தது.

சாலையில் நின்று அழுது கொண்டிருக்கிறோம் என்ற எந்த உணர்வும் அவளுக்கு இல்லை. அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நன்றாக இருக்கிறான் என்பது மட்டுமே அவளின் மனதில் பதிந்தது.

காதல்! சில பைத்தியக்காரத்தனங்களையும் செய்ய வைக்கும். அதைத் தான் அல்லிராணி அப்போது செய்து கொண்டிருந்தாள்.

வெற்றியிடம் பேசிக் கொண்டிருந்த முருகனின் பார்வையில் சாலையோரத்தில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த அல்லிராணி பட, தன் பேச்சை சட்டென்று நிறுத்தியவன், “டேய் வெற்றி, அங்கே பாரு…” என்று வேகமாக அவனிடம் சொல்ல, வெற்றியும் அசுவாரஸ்யமாகத் திரும்பிப் பார்த்தான்.

பார்த்தவன் பார்வை நொடியில் மாறிப் போனது.

தூங்கி எழுந்து தான் வெற்றியின் பின் நடந்து போனாள் என்பதால் அவளின் தலை நன்றாகக் கலைந்து இருந்தது.

வீட்டில் தானே இருக்கிறோம் என்று தாவணியை மடித்துப் பின் குத்தாமல் சும்மா மாராப்பை மேலே போட்டிருந்தாள். அது பார்க்க ஒரு அலங்கோல நிலையாகத் தெரிந்தது.

அந்தக் கோலத்தில் கண்ணீர்க் கண்களை மறைக்க நிழலாகத் தெரிந்தவன் முகத்தைப் பருக முயற்சி செய்து கொண்டிருந்தவளைப் பார்ப்பவர்கள் நிஜமாகவே மனம் பிறழ்ந்தவள் என்று தான் நினைப்பார்கள்.

அவளின் அந்தக் கோலத்தைக் கண்ட வெற்றி, “என்னடா இவ இப்படி வந்து நிற்கிறா?” என்று முருகனிடம் அதிர்வுடன் கேட்டான்.

“என்னவோ பிரச்சனை போல இருக்கு வெற்றி…” என்று முருகன் வேகமாக அவளிடம் செல்லப் போக அதற்குள் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வெற்றியின் அருகில் வந்த அல்லி, “உனக்கு ஒன்னும் ஆகலை தானே வெற்றி?” என்று கேட்டாள்.

“எனக்கு என்ன?” என்று புரியாமல் புருவத்தைச் சுருக்கிக் கேட்டான்.

“நீ ஏன்மா இப்படி வந்து நிற்கிற?” என்று முருகன் அவளிடம் கேள்வி எழுப்பினான்.

“இந்த ஆளு… ஆளுக்கு என்னமோ ஆச்சுதுனு பயந்து போய் உங்களைக் கூப்பிட தான் வந்தேன் முருகண்ணே. ஆனா இந்த ஆளே இங்க வந்திருப்பார்னு நான் கொஞ்சமும் எதிர்பாக்கலை. இப்போ தான் நிம்மதியா இருக்கு…” என்று சொல்லிக் கொண்டே கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“ஏய்… என்ன லூசு போலப் பேசிட்டு நிற்கிற? அதுவும் இந்தக் கோலத்தில்?” என்று கோபத்துடன் கேட்டான் வெற்றி.

அவளின் நிலையை மேலிருந்து கீழாக அவன் கையை அசைத்துக் காட்டிய பிறகு தான் தன்னையே பார்த்தாள் அவள்.

தான் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனவள், வேகமாக அங்கே இருந்த மரத்தின் மறைவில் சென்று மாராப்பை மடித்துப் போட்டுப் பின் குத்திவிட்டுக் கலைந்த தலையைக் கையால் நீவி விட்டுக் கொண்டாள்.

‘இந்தக் கோலத்திலா பஸ்ஸில் வந்தேன்? என்னை இப்படிப் பார்த்தவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? அப்படியா தன் உணர்வைத் தொலைத்து அவனின் நினைவில் ஆழ்ந்திருந்தேன்?’

தான் இருந்த நிலையை நினைத்துக் கன்றிப் போன முகத்துடன் மறைவை விட்டு வெளியே வந்தாள் அல்லிராணி.

“எதுக்கு அப்படி வந்தாள்னு கேளுடா?” என்று முருகனிடம் சொல்லிவிட்டு வெற்றி அவளின் முகத்தைப் பார்க்காமல் திரும்பி நின்று கொண்டான்.

முருகன் அவளிடம் விசாரிக்க, அல்லி நடந்ததைப் பகிர்ந்து கொண்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு முருகனின் முகம் மாறியது என்றால், வெற்றியின் முகம் இறுகிப் போனது.

“வீட்டுக்குள்ள போனவரை உள்ளே போட்டுப் பூட்டிட்டாங்கனு பார்த்ததும் எனக்கு உங்களைத்தான் உதவிக்குக் கூப்பிடணும்னு தோணுச்சு அண்ணே. வேற எந்த யோசனையும் வரலை…” என்ற அல்லியை ஆழ்ந்த பார்வை பார்த்தான் முருகன்.

பின் திரும்பி வெற்றியைப் பார்த்தான். நண்பனின் முகத்தில் இறுக்கத்தைக் கண்டவன் “அவன் பின் பக்கமா வந்திருக்கலாம் மா…” என்று அவளுக்குப் பதில் சொன்னவன், வெற்றியின் தோளைத் தட்டினான்.

“அவளை ஒழுங்கா வீடு போய்ச் சேர சொல்லு முருகா…” என்று சொன்ன வெற்றி நிற்காமல் அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டான்.

சென்று கொண்டிருந்தவன் முதுகையே வெறித்துப் பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள் அல்லிராணி.

வீட்டிற்கு வந்து பசி என்ற உணர்வே மரத்துப் போனவள் போலப் படுத்த அல்லிராணிக்கு மனது மிகவும் சஞ்சலத்தில் இருந்தது.

தான் இப்படிப் பைத்தியக்காரி போல் சென்றது ஒரு பக்கம் மனதை உறுத்த, அதை விட வெற்றியின் மர்மமான நடவடிக்கைகள் அவளைப் போட்டு உலுக்கியது.

எங்கயோ போறான், வர்றான். திடீர்னு காணாம போறான். ஏதோ வீட்டுக்குள்ள போறான். அங்கிருந்தும் யார் கண்ணிலும் சிக்காமல் பறந்து விடுகிறான். தன் வீட்டிற்கே சுற்றிலும் ஆராய்ந்து கொண்டே வருகிறான்.

ஏன் அவன் அப்படி வர வேண்டும்? ஒரு வீட்டிற்குச் சென்றால் வாசல் வழியே வர வேண்டியது தானே? ஏன் கள்ளன் போல் பின் பக்கமாக மறைந்து சென்று விட வேண்டும்? என்று ஏதேதோ நினைத்து மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டாள் அல்லிராணி.

அதற்கு ஒரு விடையும் கிடைக்காமல் போக, தன் நினைவிற்கு வந்தாள்.

‘உன்னை எல்லாம் லூசுனு அவன் சொன்னதில் தப்பே இல்லைடி. இப்படியா பைத்தியகாரி மாதிரி போயிருப்பேன். அப்படியா அவனின் மேல் உனக்குப் பித்தாகி விட்டது?

சாதாரணமாகப் பார்க்க ஆரம்பித்து இப்போது அவனின் மீது காதல் பித்தே பிடிக்க ஆரம்பித்து விட்டதா?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

அவனை மனதில் சுமப்பது சுகமான சுமையாக இதயம் நனைந்தது.

“இனி விடவே முடியாதுன்னு நினைக்கிற அளவுக்கு உன்னை எனக்குப் பிடிச்சுருக்கு வெற்றி…” என்று அவனிடம் சொல்வது போல் வாய்விட்டுச் சொல்லிக்கொண்டாள்.

மனம் அவனை விரும்பியதை நினைத்து மகிழ்ந்த அதே நேரத்தில் அன்று இரவு பார்த்த பெண் வேறு கண்ணில் விழுந்த தூசியாக அவளை உறுத்தினாள்.

“உனக்கு ஏன்டா புத்தி அப்படிப் போச்சு?” என்று வலியுடன் நினைத்துக் கொண்டாள்.

அன்று இரவும் அவளுக்கு இன்னும் வலி தரும் காட்சி கண்ணில் விழப் போவது அறியாமல், ‘எப்படி அவனிடம் அப்படி இருக்கக் கூடாது’ என்று சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அன்றும் அதே நள்ளிரவு நேரத்தில் வெற்றியின் வீட்டில் இருந்து வெளியே வந்த அந்தப் பெண் அவனின் காதில் ஏதோ ரகசியமாகச் சொல்லிச் சிரித்துப் பேசிவிட்டு அங்கிருந்து செல்ல,

அதை வலித்த மனதுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அல்லிராணி.

கூடவே தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தவள் அதை உடனே செயல்படுத்தவும் முடிவு செய்தாள்.