மனம் கொய்த மாயவனே – 34

அத்தியாயம் – 34

‘உன்னைப் பற்றிப் போலீஸில் சொல்லிவிடுவேன்’ என்று வெற்றியிடம் வீராப்பாகச் சொல்லி விட்டு வந்துவிட்டாலும், அதைச் செயல்படுத்த முடியாமல் தவித்துத்தான் போனாள் அல்லிராணி.

அவனின் காதல் பொய்யாக இருக்கலாம். ஆனால் அவன் மீது தான் வைத்திருக்கும் காதல் உண்மையானது அல்லவா!

அவனுக்கு ஒரு வலி என்றால் அது தனக்கும் தானே வலிக்கும்.

‘அவனைப் போலீஸில் மாட்டிவிட்டுத் தான் மட்டும் நிம்மதியாக இருக்க முடியுமா?’ என்ற கேள்வி அவளின் மனதைக் குடைய உள்ளுக்குள் சில்லுசில்லாகச் சிதறிக் கொண்டிருந்தாள்.

காதல் கொண்ட மனம் ஒரு பக்கம் கதறிய அதே நேரத்தில், பலரின் வாழ்வை பாழாக்கிக் கொண்டிருக்கும் அவனின் தொழில் அவளின் மனதை இறுக வைத்தது.

அவனின் தொழிலால், பழக்கவழக்கத்தால் எப்போதும் தாங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைய முடியாது என்று அவளுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது.

அவனின் காதலும் பொய்த்து விட்டது.

எதிர்காலம் இல்லா தன் காதலை நினைப்பதை விட, பாழாகிக் கொண்டிருக்கும் பலரின் எதிர்காலத்தை நினைப்பது மேல் என்ற எண்ணம் அவளின் மனதில் வலுவாக வந்து அமர்ந்து கொண்டது.

அந்த வலு அவளை உந்தித் தள்ள, காலையில் முதல் வேலையாகக் காவல்நிலையம் செல்ல வேண்டும் என்ற முடிவுடன் அன்றைய இரவை உறக்கமின்றிக் கடக்க முயன்றாள் அல்லிராணி.

கண்களை மூடினால் அவளின் மனசாட்சியே அவள் மனதைக் குத்திக் கிழித்துக் கேள்வி கேட்க தயாராக இருந்தது.

‘அவன் உன்னைக் காதலிக்கவில்லை என்றதால் தானே அவனைப் போலீஸில் காட்டிக் கொடுக்கத் துணிந்து விட்டாய்? இதுவே அவன் உன் பின்னால் இன்னும் காதல் சொல்லிச் சுற்றியிருந்தால் இப்படிக் காட்டிக் கொடுக்கத் துணிந்திருப்பாயா?’ என்ற கேள்வி அவளின் மனதைச் சரியாகக் குறிவைத்துத் தாக்கியது.

‘இல்லை, அப்போதும் அவனைத் தொழிலை விட்டு வரவைக்க முயன்றிருப்பேன். என் காதலால் அவனின் மனதை மாற்றி நல்ல மனிதனாக மாற வைத்திருப்பேன்.

இப்போதும் அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது என் நோக்கமில்லை. அப்படியாவது அவன் மனம் மாற ஒரு வாய்ப்புக் கிடைக்குமோ என்ற நப்பாசை தான் காரணம்’ என்று சொல்லி தன் மனதைத் தேற்றிக் கொள்ள முயன்றாள்.

என்னதான் தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாலும், அவளின் மனது நிலையில்லாமல் தவிக்கத்தான் செய்தது.

ஆனாலும் வெற்றியின் தொழிலை ஏற்றுக்கொள்ள முடியாமல் போலீஸிடம் சொல்லிவிடும் முடிவிலிருந்து அவள் பின்வாங்கவே இல்லை.

காலையில் எழுந்து குளித்து வேலைகளை முடித்தவள், அன்னையிடம் ஏதேதோ சொல்லிச் சமாளித்து விட்டுக் காவல்நிலையம் செல்ல கிளம்பினாள் அல்லிராணி.

வெற்றியைப் பற்றித் தான் அறிந்த உண்மையையோ, அவள் காவல்நிலையம் செல்ல போவதையோ அன்னையிடம் சொல்ல அப்போது அவளுக்கு விருப்பமில்லை.

அன்னைக்குத் தெரியவரும் போது வரட்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

காவல்நிலையத்தை நோக்கி செல்ல செல்ல அவளின் இதயம் ரணமாக இறுகுவது போலிருக்க, அந்த இறுக்கம் அவளின் கால்களைக் கவ்வ, மிக மிக மெதுவாக ஒவ்வொரு எட்டையும் எடுத்து வைத்தாள்.

பேருந்து ஏறி காவல்நிலைய நிறுத்தத்தில் இறங்கி கால்கள் பின்ன, மனம் வேதனையில் துடிக்க, லேசான பயப்பந்து தொண்டைக் குழியில் உருள காவல்நிலைய வாசலை மிதித்தாள் அல்லிராணி.


“வெற்றி ஒரு முறை யோசிக்கலாமே…” என்ற முருகன் அடுத்த நிமிடம் வெற்றியின் கண்களில் தெரிந்த அனலில் வாயை இறுக மூடிக் கொண்டான்.

போதை பவுடர், ஊசி என்று பெரிய அளவில் இறக்குமதி செய்திருந்தான் வெற்றி.

லட்சக்கணக்கில் வெகுமானம் உள்ள பொருட்கள் என்பதால் தன் நம்பிக்கைக்கு உரிய ஆட்களை மட்டும் தேர்ந்தெடுத்துச் சரக்கை வாங்கி அவனின் இடத்தில் வைக்கச் சொல்லி அனுப்ப, அவர்களில் கிரி, முருகன் தவிர மற்றவர்கள் பிடிப்பட்டிருக்க, இப்போது தானே களத்தில் இறங்க முடிவெடுத்துக் கிளம்பி விட்டான்.

ஹார்பரில் அதிகநாட்கள் சரக்கை விட்டு வைப்பதும் ஆபத்து என்பதால் இப்போது அவன் சென்றே ஆகவேண்டிய கட்டாயமும் இருந்தது.

அவனைத் தடுத்து நிறுத்த முருகன் முயல, அவனின் முயற்சிக்குத் தோல்வியைத் தந்தான் வெற்றி.

“முருகன் சொல்றதும் சரின்னு தான் படுது வெற்றி. நீயே வரணும்னு இல்லையே…” என்று தயங்கிய படியே சொல்லிப் பார்த்தான் கிரி.

“நீங்க போய் என்ன கிழிச்சீங்க?” என்று கிரியையும், முருகனையும் அலட்சியமாகப் பார்த்துக் கேட்டான்.

“திடீர்னு எங்களைச் சுத்தி வளைச்சுட்டாங்க வெற்றி. இதுக்கும் நாங்க வழக்கம் போல எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிப் பார்த்துட்டுத் தான் ஹார்பர் போனோம்…” என்றான்.

“நீங்க செக் பண்ணிட்டுப் போயும் நம்ம ஆளுங்களைச் சுத்தி வளைச்சுப் பிடிச்சிருக்காங்கன்னா இது ஏதோ திட்டமிட்ட வேலையாத்தான் தெரியுது.

நீங்க அந்த நேரத்தில் சரக்கை எடுக்கப் போறீங்கன்னு தெரிஞ்சி நோட்டம் போட்டு, சரியா பிடிச்சுருக்காங்க. எப்படி?” என்று அவர்களுடன் பேசுவது போல் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.

“அதுதான் தெரியலை வெற்றி…” என்று கிரியும், முருகனும் சொல்ல,

“எனக்கு என்னவோ?” என்றவன் அத்தோடு பேச்சை நிறுத்திவிட்டு,

“சரி, அதை அப்புறம் பார்க்கலாம். இப்போ நாம ஹார்பர்ல இருந்து சரியான நேரத்தில் சரக்கை வெளியே கொண்டு வந்தே ஆகணும். லேட் பண்ண முடியாது. அதுக்கு இப்போ போய்த்தான் ஆகணும்…” என்றான்.

“நானும், முருகனும் இன்னும் நம்மளோட சில ஆட்களைக் கூட்டிட்டுப் போறோம் வெற்றி. இன்னைக்குக் கவனமா போய்ச் சரக்கை கொண்டு வந்திடுறோம்…”

“இல்லை வேண்டாம்…” என்று உறுதியாக மறுத்தான்.

“என்னைப் பிடிக்கக் காத்திருக்கிறவன் யாருன்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும். அதுக்கு நான் தான் போகணும்…” என்றவன் மீசையை நீவி விட்டுக் கொண்டான்.

“நிறைய ரிஸ்க் இருக்கு வெற்றி…” என்றான் முருகன்.

“ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ஒன்னும் புதுசு இல்லை முருகா. இந்தத் தொழிலில் இறங்கிய ஆரம்பக் காலகட்டத்தில் எல்லா வேலையும் இறங்கி வேலை பார்த்திருக்கேன்.

இப்போ தான் ஆளுங்களை மட்டும் அனுப்பி என் அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்வதில்லை. இப்ப சில வருஷத்துக்குப் பிறகு நானே களமிறங்க வேண்டிய நேரம் வந்துருச்சு. இறங்கிட வேண்டியது தான்…” என்றான்.

“கிளம்ப ரெடியா இருங்க. நம்ம ஆளுங்களையும் ரெடி பண்ணுங்க…” என்றான்.

“சரி வெற்றி…” என்றனர்.

இங்கே செழியனும் தனக்குக் கிடைத்த தகவலை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கத் தயாரானான்.

அதற்கு முன் ரத்னாவை அழைத்தவன், “ரத்னா, நீ எனக்கு ஒரு வேலை செய்யணும்…” என்றான்.

“சொல்லு செழியா…” என்றதும் அவளிடம் விஷயத்தை விளக்கியவன்,

“உன் வால்தனத்தை இதில் காட்டாதே!” என்று எச்சரித்தான்.

“ரொம்ப அட்வைஸ் பண்ணாதேடா. நான் பார்த்துக்கிறேன். நீ போய் உன் வேலையைப் பாரு…” என்றாள்.

“உன்னை நம்பித்தான் பொறுப்பை ஒப்படைக்கிறேன். ஏதாவது வால்தனம் பண்ணி காரியத்தைக் கெடுத்த…!” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு தன் வேலையைத் தொடரச் சென்றான்.

“இவன் ஒருத்தன், ரொம்ப அலட்டுவான்…” என்றபடியே அவன் கொடுத்த வேலையைச் செய்யக் கிளம்பினாள் ரத்னா.


பல பரிசோதனைகளில் இருந்தும் தப்பித்து, நேர்மையான அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி கப்பலில் கடத்தி வரப்பட்ட போதை பொருட்களை, இங்கே உள்ள நேர்மையான அதிகாரிகளின் கண்களுக்குத் தப்ப வைத்து சில புல்லுருவிகளின் உதவியால் தான் வாங்கிய போதை பொருட்களைத் தன் வசம் வாங்கி அதைப் பல பிரிவுகளாகப் பிரித்து விற்பனை செய்பவன் தான் வெற்றி.

வழக்கமாக அதிகாரிகளின் கண்களுக்குத் தப்ப வைத்து, ஹார்பரில் உள்ள தனக்குத் தெரிந்த ஆட்கள் மூலம் தன் ஆட்களை அனுப்பிப் போதை பொருட்களைத் தன் கைக்கு மாற்றிக் கொள்வான்.

ஆனால் இந்த முறை சரக்கை சென்று வாங்கும் முன்பே அவனின் ஆட்கள் பிடிபட, இப்போது தானே சென்று சரக்கை வாங்கி, அதைத் தன் இருப்பிடத்திற்கு மாற்றிக் கொள்ளக் கிளம்பினான்.

கிரி, முருகன் மட்டுமில்லாது அவனின் சில ஆட்களும் அவனுடன் கிளம்பினர்.

ஹார்பருக்குச் சென்று அவனுக்குத் தெரிந்தவர்களிடம் பேசி, சரக்கை வாங்கிக் கொண்டவன், ஆட்கள் மூலம் வண்டியில் ஏற்றும் வரை எந்த ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை.

ஆனால் சரக்கை ஏற்றி முடித்து வெற்றியும் வண்டியில் ஏற தயாராக இருந்த போது சட்டென்று அவனையும், அவனின் ஆட்களையும் சிலர் சுற்றி வளைத்தனர்.

அதை எதிர்பார்த்தது போல் வண்டியில் ஏற காலை வைத்திருந்தவன், நிதானமாகக் காலை தரையில் ஊன்றி நின்றான்.

பின் பதட்டமே இல்லாமல் தன்னைச் சுற்றிலும் பார்த்தான்.

தப்பிக்க முடியாத அளவிற்குச் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறோம் என்று அவனுக்குப் புரிந்தது.

ஆனாலும் சிறிதும் அசரவில்லை அவன்.

அவனின் கண்கள் கூர்மையாகச் சுற்றிலும் அளவிட்டன.

“வெற்றி, வண்டியில் ஏறு. இங்கிருந்து தப்பிச்சுப் போயிடலாம்…” என்று ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்த கிரி கத்தினான்.

“நீ இங்க இருந்து தப்பிக்க முடியாது வெற்றி. உன்னைக் கையும் களவுமாகப் பிடிக்கத்தான் இத்தனை நாள் வெயிட் பண்ணினேன்…” என்று துப்பாக்கியை அவனுக்கு நேராகக் குறி வைத்தபடி நின்றிருந்தான் செழியன்.

செழியன் சொன்னதைக் கேட்டு அலட்சியமாகச் சிரித்த வெற்றி, சட்டென்று தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்தவன், அடுத்த நொடி தன் அருகில் நின்றிருந்த முருகனின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான்.

“வெற்றி என்ன இது? என்ன பண்ற?” என்று முருகன் பதற,

“டேய், போதும்டா உன் நடிப்பு…” என்றான் முருகனைப் பார்த்து.

“நடிப்பா? என்ன வெற்றி?” என்று அதிர்வாக முருகன் கேட்க,

“உங்க சாயம் வெளுத்துப் போச்சுச் சிபிஐ முருகானந்தம் அவர்களே!” என்று வெற்றி நக்கலாகச் சொல்ல,

எதிரே நின்றிருந்த செழியனின் முதுகு விரைத்து நிமிர்ந்தது.

ஆனாலும் கூரிய கண்களால் அளவெடுத்துக் கொண்டே, வெற்றியைத் தன் குறியில் இருந்து தப்பவிடாமல் நிறுத்தி வைத்திருந்தான் செழியன்.

அதே நேரத்தில் முருகன் என்ற முருகானந்தம் தன் நடிப்பை கை விட்டு, “செழியா, எனக்காக யோசிக்காதே. உன் கடமையைச் செய்…” என்றான் உறுதியாக.

“வெற்றி, என்னதான் ட்ரிக் பண்ணினாலும் இங்கே இருந்து நீ தப்பிக்க முடியாது. ஒவ்வொரு காயா நகர்த்திச் செக் போட்டு உன்னைத் தூக்கியிருக்கோம். உன் பிடி இப்போ என் கையில்…” என்றான் செழியன்.

“அட! உன் நண்பன் ஆனந்த் உயிர் என் கையில் ஊசலாடிட்டு இருக்கும் போதே என்ன தெனாவட்டா பேசுற? ம்ம்… தைரியம் தான்…” என்ற வெற்றி உதட்டை சுளித்துச் சிரித்துக் கொண்டான்.

உன் அலட்சிய பேச்சில் நான் அசந்து விடமாட்டேன் என்பது போல் கம்பீரமாக நின்றிருந்தான் செழியன்.

“தைரியம் இருக்கத்தானே செய்யும். என் பெயரில் பாதிப் பெயர் கொண்டவன் அல்லவா நீ. அப்போ தைரியம் இருக்கத்தான் செய்யும்…”

“செழியன்… வெற்றிவேற்செழியன்!”

“சிபிஐ ஆபிஷர் வெற்றிவேற்செழியன்…”

“ம்ம்… நல்ல பெயர் தான்…” என்ற சிலாகித்த வெற்றியின் முகம், சட்டென்று கடுமைக்கு மாறியது.

“இந்த வெற்றிமாறனுக்கு நீ வச்ச செக்மேட்டை இப்போ நான் உனக்கு வச்சுருக்கேன் வெற்றிவேற்செழியா…” என்று ஆத்திரமாகச் சொன்னவன் ஆனந்தின் நெற்றிப்பொட்டில் வைத்திருந்த தன் துப்பாக்கியின் விசையை அழுத்தினான்.