மனம் கொய்த மாயவனே – 31

அத்தியாயம் – 31

“வர வர என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குற வெற்றி…” என்று சொல்லிக் கொண்டே அப்போது அறைக்குள் வந்தாள் அந்தப் பெண்.

கணினி திரையிலிருந்து பார்வையைத் திருப்பிய வெற்றி “ஊறுகாயை எல்லாம் தேவைப்படுறப்ப மட்டும் தான் தொட்டுக்குவேன்…” என்று அலட்சிய பாவனையில் சொல்லியவன் அவளின் கையைச் சுண்டி இழுத்துத் தன் மடியில் அமர வைத்துக் கொண்டான்.

“இப்போ ஊறுகாய் தொட்டுக்கணும்னு நினைக்கிறப்ப சரியா வந்து நிக்கிற…” என்ற வெற்றி அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

“ஊசிப் போட்டுக்கலையா?” அவனுக்கு வாகாக வளைந்து கொடுத்துக் கொண்டே கேட்டாள்.

“இப்போ இந்தப் போதை போதும்…” என்றவன் அவளுள் மூழ்க ஆரம்பித்தான்.

“முருகன் சரக்கை வாங்கிட்டு வந்துட்டானா கிரி?” சட்டையை மாட்டிக் கொண்டே அறையிலிருந்து வெளியே வந்த படியே கேட்டான் வெற்றி.

“வந்துட்டேன் வெற்றி…” என்று அப்போது தான் வந்த முருகன் சரக்கை அவனிடம் நீட்டினான்.

அந்தக் பையை வாங்கிப் பார்த்தவன், “இது சேம்பிள் தான். மெயின் சரக்கு இனி தான் வரப் போகுது முருகா. கிரி, துரை, காளி அப்புறம் நீயும் தான் போகப் போறீங்க. ரெடியா இரு…” என்றான்.

“சரி வெற்றி…” என்ற முருகனின் பார்வை அந்த அறையிலிருந்து வெளியே சென்ற பெண்ணின் மீது படிந்து மீண்டு, மீண்டும் வெற்றியைத் தழுவியது.

அதைக் கண்டாலும் சலனமே இல்லாமல் அங்கிருந்த மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தான் வெற்றி.

இங்கே அல்லி தவித்துப் போயிருந்தாள்.

வெற்றி பற்றி அவள் அறிந்த உண்மைகள் அவளின் மனதை அல்லாட வைத்துக் கொண்டிருந்தது.

தான் தவறான தொழில் செய்யும் ஒருவனைக் காதலித்துக் கொண்டிருக்கிறோமே அது சரியா? என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.

‘இப்போ நான் என்ன செய்யணும்? வெற்றி என்ன செய்தாலும் பரவாயில்லைனு அவனை நான் அப்படியே ஏத்துக்கணுமா? இல்லை சண்டை பிடிக்கணுமா? இல்லை இப்படிச் செய்யாதேன்னு திருத்த நினைக்கணுமா?’ என்று யோசித்துக் குழம்பிப் போனாள்.

‘அவனை என்னால் திருத்த முடியுமா?’

‘இல்லை, கண்டிப்பா முடியாது. நான் திருத்த நினைச்சாலும் அவன் திருந்துவான்னு நம்பிக்கை இல்லை’

‘தான் காதலிப்பவர் எப்படி இருந்தாலும் அவரை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் காதலுக்கு அழகு’ என்று கேள்விப் பட்டிருக்கிறாளே… அப்போ வெற்றி எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். நான் அவனை அப்படியே ஏற்றுக் கொள்வேன்னு இருக்கணுமா?

‘ஆனா அதெப்படி முடியும்? என்னைக் காதலிக்கும் போதே இன்னொரு பெண்ணை நாடுகிறான் என்றால் அதை எப்படிச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்?’

‘கல்யாணத்துக்குப் பிறகும் அவன் இன்னொரு பெண்ணிடம் செல்ல மாட்டான் என்று என்ன நிச்சயம்? கல்யாணத்துக்குப் பிறகு தான் மனைவியாக இருக்கும் போதே அவன் இன்னொருத்தியைத் தேடிப் போனால் அதை விட எனக்கு வேறு கேவலம் இருக்க முடியாதே’

அதுவும் அவன் செய்யும் தொழில் ஒன்றும் சாதாரணமானது இல்லையே?

குடித்தே அழிந்து போனவர் அவளின் தந்தை. தந்தையை இழந்து, கடன் தொல்லை தாங்க முடியாமல் தானும் அன்னையும், இரவோடு இரவாக ஊரை விட்டு வந்தது நிழலாகக் கண் முன் வந்து போனது.

தந்தையின் குடிப் பழக்கத்திற்கே தாங்கள் அனுபவித்த துன்பம் ஏராளம். இங்கே வெற்றி போதை மருந்து, அதுவும் விற்பனை செய்யும் அளவிற்குச் செல்பவன். அப்படியிருக்க, தங்களுக்கு என்று ஒரு குழந்தை வந்த பிறகு அன்னையும், தானும் நின்றது போல், நானும் என் குழந்தையும் அநாதரவாக நிற்க வேண்டிய நிலை வருமோ? என்று அவளின் எண்ணம் ஓடியது.

‘முதலில் உங்க கல்யாணம் நடக்குதான்னு பாருடி. அதுக்குள்ள பிள்ளை வரை போயிட்டா…’ என்று அந்த நேரத்திலும் மனசாட்சி அவளின் குமட்டில் குத்தியது.

‘ம்ப்ச்…’ என்று அதை அலட்சியப்படுத்தி விட்டு, மேலும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அவன் போதை மருந்து விற்பதை எப்படிச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? போதை மருந்து உபயோகிப்பதே தீங்கானது. ஆனால் இங்கே வெற்றி விற்பனையும் அல்லவா செய்கிறான்.

இதனால் எத்தனை பேர் வாழ்வு அழியும்? அடுத்தவரை அழிப்பது பெரும் பாவம் அல்லவா? பாவத்தின் சம்பளம் தலைமுறைக்கும் தொடருமே! என்று நினைக்கும் போதே வேதனை அவளின் மனதை கவ்வியது.

‘அதையும் விட அவன் போதை மருந்து விற்பது தெரிந்து போலீஸ் தேடி வந்து பிடித்துவிட்டால்…’ என்ற எண்ணம் தோன்றியதுமே அவளின் சிந்தனை ஓட்டம் அதோடு தடைப்பட்டு நின்றது.

‘போலீஸ் பிடித்தால்…’ என்று நினைத்ததுமே அவளின் உடல் நடுங்கியது.

அவளின் நடுக்கம் நிற்க வெகு நேரம் பிடித்தது.

அதிலிருந்து மீண்டு அவள் தெளிந்த போது ஒரு உறுதியான முடிவுக்கு வந்திருந்தாள்.

அந்த முடிவின் படி முதல் வேலையாக வெற்றியிடம் பேச முடிவெடுத்தாள் அல்லிராணி.


மாலை மயங்கி இரவு தொடங்கிய நேரத்தில் வீட்டில் அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தான் செழியன்.

அலுவலக வேலைகள் அழுத்தினாலும், மனதளவில் சோர்ந்து போயிருந்த அன்னையைத் தனியாக விடாமல் முடிந்த வரை அவருடன் நேரம் செலவழிக்க முயன்றான்.

மகன் நிறையச் சமாதானம் செய்தும் பவானிக்குள் ஒரு குற்றவுணர்வு இருந்து கொண்டே இருந்தது.

கிருதியின் பெற்றவர்கள் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ என்ற உறுத்தல் அவரை விட்டுப் போவேனா என்று இருந்தது.

அவரின் மனநிலையை உணர்ந்தே இருந்தான் செழியன். அன்னையை அந்த உணர்விலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் வலுவாக இருந்தது.

“சுப்பு சமைச்சு வச்சுட்டு போய்ட்டாங்கமா. நான் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன் சாப்பிடுறீங்களா?” என்று படுக்கையில் சோர்ந்து அமர்ந்திருந்தவரிடம் கேட்டான்.

“இப்போ வேண்டாம் செழியா. இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும். எனக்கு ஒன்னுமில்லை. நீ போய் உனக்கு வேலை இருந்தா பார்…” என்றார்.

“வேலை எல்லா நேரமும் இருக்குறது தான் மா. கொஞ்ச நேரம் உங்க கூட இருந்துட்டுப் போறேன்…” என்றான்.

அவனின் வேலை பளு அவருக்கு நன்றாகவே தெரியும். அப்படி வேலை இருந்தாலும் தனக்காகத் தன்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்த மகனை வாஞ்சையுடன் பார்த்தார் பவானி.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வீட்டின் அழைப்பு மணி அழைக்க, ” நீங்க ரெஸ்ட் எடுங்கமா. இந்நேரம் யார் வந்திருக்காங்கன்னு தெரியலை. நான் போய்ப் பார்க்கிறேன்…” என்று அவரின் அறையை விட்டு வெளியே வந்து கதவைத் திறக்க, வாசலில் வீட்டுக் காவலாளி நின்றிருந்தான்.

செழியன் அவனைக் கேள்வியாகப் பார்க்க, “சார், இவங்க உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க…” என்று சற்றுத் தள்ளி நின்றிருந்தவர்களைக் காட்டினான்.

யார்? என்று பார்க்க, ஐம்பது வயது தக்க ஒருவர் நின்றிருந்தார். அவரின் முதுகிற்குப் பின் தன்னை முக்கால்வாசி மறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ஒரு பெண்.

அந்தப் பெரியவர் யாரென்று செழியனுக்குத் தெரியவில்லை. அந்தப் பெண் தன் முகத்தைக் காட்டாததால் அவளும் யாரென்று தெரியாமல் போக, “யார் நீங்க?” என்று அவரிடம் கேட்டான்.

“தம்பி, நான் மிருதுளாவோட அப்பா…” என்று அவர் சொன்னதும் சட்டென்று அவர் யாரென்று புரிந்து விட, “நான் பேசிக்கிறேன். நீங்க போங்க…” என்று காவலாளியை அனுப்பி வைத்தவன், “உள்ளே வாங்க…” என்று இருவரையும் வீட்டிற்குள் அழைத்தான்.

பெரியவர் தயங்கிக் கொண்டே வர, அவனுக்கு இன்னும் தன் முகத்தை மறைத்த படியே உள்ளே வந்தாள் மிருதுளா.

“உட்காருங்க. என்ன விஷயம்னு சொல்லுங்க…” என்றான்.

“உங்களுக்கு நன்றி சொல்லலாமுனு… அப்படியே என் பொண்ணு உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு…” என்று தயக்கத்துடன் நின்றபடியே சொன்னார்.

“முதலில் உட்காருங்க. நீயும் உட்கார் மிருதுளா…” என்று சொல்லவும் இருவரும் அமர்ந்தனர்.

“என் பொண்ணைப் பெரிய இக்கட்டில் இருந்து காப்பாத்தி இருக்கீங்க தம்பி. அந்தப் பையன் எடுத்த வீடியோவை நீங்க அவன்கிட்ட இருந்து வாங்கி அழிச்சுட்டதா ரத்னா பொண்ணு வந்து சொன்னாங்க. உங்க பொண்ணை இனி உங்க கூடவே கூட்டிட்டு வந்து வச்சுக்கலாம்.

இனி அந்தப் பையனுக்குப் பயப்பட வேண்டாம்னு சொல்லவும் எங்க பொண்ணைச் சொந்தக்காரங்க வீட்டிலிருந்து கூட்டிட்டு வந்துட்டோம். நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றிங்க தம்பி…” மகள் மேல் வருத்தம் மிகுதியாக இருக்க, அதனால் எழுந்த குறுகலுடன் கலங்கிப் போய்ப் பேசினார் அந்தத் தந்தை.

மகள் தவறான வழிக்குச் சென்றும் அவளுக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்ததும் பாதுகாத்து, இப்போது அவளுக்காக நன்றி சொல்ல வந்திருக்கும் அந்தத் தந்தையை வாஞ்சையுடன் பார்த்தான் செழியன்.

“என் கடமையைத் தான் செய்தேங்க. என் காதுக்கு விஷயம் வந்த பிறகும் என்னால் பேசாம இருக்க முடியாது…”

“ஆனாலும் நாங்க கேட்காமயே ரொம்பப் பெரிய உதவி பண்ணிருக்கீங்க தம்பி. அதுக்கு நான் உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன்…” என்றார்.

‘இப்படிப்பட்ட ஒரு தந்தைக்கு ஒரு மகளாகச் செய்யவேண்டியது என்ன? ஆனால் இந்தப் பெண் செய்து வைத்திருப்பது என்ன?’ என்று மிருதுளாவின் மீது அவனுக்குக் கோபமும் வந்தது.

‘தன் வீட்டுப் பெண்ணையே தன்னால் திருத்த முடியாத போது, அடுத்த வீட்டுப் பெண்ணைத் தான் எப்படிக் குறை சொல்ல முடியும்?’ என்ற கழிவிரக்கமும் தோன்றியது.

கிருதியைப் பற்றி நினைத்ததும் அவனின் பார்வை தன்னால் சுவற்றில் மாட்டியிருந்த அவளின் புகைப்படத்தின் மீது பதிந்தது.

அப்போது மிருதுளாவின் கண்களும் தோழியின் படத்தின் மீது பதிய, அவளின் கண்களிலிருந்து அருவியாகக் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

“என்னை மன்னிச்சுடுங்க சார். என் மூலமா தான் கிருதிக்குச் சந்துரு பழக்கமானான். அவள் சாவுக்கு நானே பிள்ளையார் சுழி போட்டுட்டேன்…” என்றாள் கதறலாக.

அதில் அவனுக்கும் அவள் மீது வருத்தம் உண்டு தான். ஆனால் சில விஷயங்கள் நம்மை மீறிச் செல்லும் போது யாரையும் குறை சொல்லி என்ன ஆகப்போகிறது? என்று நினைத்துக் கொண்டான்.

“விடுமா, இப்படியெல்லாம் நடக்கணும்னு இருக்கும் போது நீ என்ன பண்ண முடியும்? அதெல்லாம் விடு. நீ அடுத்து என்ன செய்றதா இருக்க? எப்பயிருந்து காலேஜ் போகப் போற?” என்று கேட்டான்.

“இல்லை சார். காலேஜ் எல்லாம் போகலை…” என்றாள் தயக்கமாக.

“பின்ன, வேற என்ன செய்யப் போற?” என்று கூர்மையுடன் கேட்டான்.

“அது… ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம்னு…” என்றவளின் பேச்சு அவனின் முறைப்பில் பாதியிலேயே நின்று போனது.

“திரும்பத் தப்பு பண்ற மிருதுளா…” என்றான் கண்டிப்புடன்.

“நாங்களும் பேசிப் பார்த்தோம் தம்பி. காலேஜ் போகச் சங்கடமா இருக்குன்னு போக மாட்டேன்னு சொல்லிருச்சு. காலேஜ் போய்த் தான் செய்யக் கூடாத தப்பை எல்லாம் செய்துட்டேன். இனி உங்க பொண்ணா உங்களுக்கு உதவியா வேலைக்குப் போறேன்னு சொல்லுது…” என்றார் அவளின் தந்தை.

“என்ன வேலைக்குப் போவ?” என்று கேட்டான்.

என்னவென்று சொல்ல முடியாமல் அவள் திருதிருக்க, “படிச்சுட்டு சில டிகிரிகளைக் கையில் வச்சுருந்தாலே இப்போ எல்லாம் வேலை கிடைப்பது எவ்வளவு திண்டாட்டமா இருக்குன்னு தெரியும்ல? நீ படிப்பை கூட முடிக்காம என்ன வேலைக்குப் போக முடியும்? உங்க அப்பா, அம்மா கூடக் கூலி வேலைக்கா போவ?” என்று கேட்டான்.

“அந்த வேலை கூடப் பரவாயில்லை சார். நான் பார்ப்பேன். அம்மா, அப்பாவுக்குப் பாரமா இருக்குறதுக்கு அந்த வேலை எவ்வளவோ தேவலை…” என்றாள்.

“முட்டாள்தனமா முடிவு எடுக்காதமா. நீயும் கூலி வேலை பார்க்கணும்னு நினைச்சுருந்தா பெத்தவங்க உன்னைக் காலேஜ் அனுப்பியிருக்கவே மாட்டாங்க. எப்பயோ கூலி வேலைக்குக் கூட்டிட்டுப் போய்ருப்பாங்க.

அப்படிச் செய்யாம நீயாவது படிச்சு, அதுக்குத் தகுந்த மாதிரி வேலைக்குப் போகணும்னு தானே படிக்க அனுப்பினாங்க. நீ உங்க அப்பா அம்மாவுக்குப் பாரமா இருக்கக் கூடாது, நல்லது பண்ணனும்னு நினைச்சீனா படிச்சு நல்ல வேலைக்குப் போ…” என்றான்.

“ஆனா…” என்று அவள் இன்னும் தயங்க,

“உன் தயக்கம் எனக்குப் புரியுது மிருதுளா. ஆனா தப்பு செய்தவங்க தன்னைத் திருத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதைப் பயன்படுத்திக்கணுமே தவிர, ஓடி ஒளிய கூடாது. கிருதிக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைப் பயன்படுத்திக்காம விபரீத முடிவு எடுத்துத் தப்பு பண்ணிட்டாள். ஆனா உனக்கு இப்போ வாய்ப்புக் கிடைச்சிருக்கு. பயன்படுத்திக்கோ…” என்றான்.

“ஆனா சார், அந்தச் சந்துரு அங்கே…” என்று அவள் இழுக்க,

“சந்துரு இன்னும் எங்க கஸ்டடியில் தான் இருக்கான். உன் வீடியோ மட்டுமில்லை. இன்னும் சில பொண்ணுங்க வீடியோவும் அவன்கிட்ட இருந்து ட்ரேஸ் பண்ணிருக்கோம். அதனால் இன்னும் அவனை விசாரிக்க வேண்டியது இருக்கு.

அவன் கேஸ் தனி. அதை நாங்க பார்த்துக்கிறோம். இனி அவனை வெளியே விடுவதாக இல்லை. அவனுக்குச் சரியான தண்டனை வாங்கிக் கொடுக்காம நான் ஓயமாட்டேன். இனி அவனைப் பத்தி நீ கவலைப்பட வேண்டாம்…” என்று செழியன் சொன்னதும் மிருதுளாவின் மனம் பதறியது.

‘எப்படிப்பட்டவன் கிட்ட போய்த் தானே வழிய சென்று மாட்டியிருக்கிறோம்’ என்று தோன்ற, தன்னையே கீழாக நினைத்துக் கொண்டாள்.

அவன் அவ்வளவு சொல்லியும் மிருதுளாவின் முகத்தில் கலக்கம் இருப்பதைக் கண்டவன் “காலேஜ்ல யாருக்கும் உன் விஷயம் தெரியாது. அதனால் திரும்பப் போய்ப் படிக்க ஆரம்பி. இனியாவது உன் பெத்தவங்க உன் மேல வச்சுருக்கிற நம்பிக்கையைக் காப்பாத்துவேனு நினைக்கிறேன்?” என்றான்.

அவன் பேச்சில் தெளிந்தவள், “கண்டிப்பா சார்…” என்றாள்.

“குட்!” என்றான்.

“ரொம்ப நன்றி சார்…” என்று இருவருமே நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.