மனம் கொய்த மாயவனே – 24

அத்தியாயம் – 24

“என்ன சந்துரு லட்டு மாதிரி கிடைச்ச நல்ல சந்தர்ப்பத்தை இப்பவும் விட்டுட்டயே?” என்று சந்துருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அவனின் நண்பன் ரவி.

“விடலை ரவி. இப்போ தான் இறுக்கிப் பிடிச்சு வச்சிருக்கேன். கிருதி எல்லாம் தானா நம்ம கைக்கு வரும் கனி ரவி. அவளை எல்லாம் வம்படியா கனிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவள் வழியிலேயே போய் அவளை நம்ம வழிக்குக் கொண்டு வர முடியும்…” என்றான் சந்துரு.

“அப்படித்தானே சந்துரு டூர்லயும் அவள் உன் ரூம்முக்கு வந்தாள். போதை ஊசி போட்டு விட்ட கையோட வேலையை முடிச்சுருக்க வேண்டியது தானே? ஆனா அதை விட்டு அவள் ஊசி போட்டுக்கிட்டதை யாருக்கும் தெரியாம மறைச்சுக் காப்பாத்தி விட்டு, இப்ப ஊர் வந்தும் சேர்ந்தாச்சு. நல்ல சந்தர்ப்பத்தை விட்டுட்டு ஏன் அப்படிப் பண்ணின சந்துரு?” என்று கேட்டான்.

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கு நைட் கிருதி என் ரூம்ல போதையில் இருக்கும் போதே வேலையை முடிச்சுருக்க முடியும். ஆனா அப்படி முடிச்சுருந்தா மறுநாளிலிருந்து அவள் சுதாரிச்சுருப்பா. ஆனா இப்போ அவளுக்கு என் மேலே ரொம்ப நம்பிக்கை வந்திருக்கும்.

அந்த நம்பிக்கை தான் நம்ம ஆயுதம். போகப் போகப் போதைக்கு அடிமையாகி நான் சொல்வதை எல்லாம் கேட்கும் நிலைக்கு வருவாள். அப்போ நீ நான் இன்னும் நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாருமே சேர்த்து வச்சு எஞ்சாய் பண்ணலாம்…” என்று சொல்லி வக்கிரமாக உதட்டை சுழித்தான்.

“உன் ப்ளான் எல்லாம் சரிதான் சந்துரு. ஆனா இனி திரும்ப எப்படி இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்? ட்ரிங்க்ஸே ஒரு முறை ட்ரை பண்ணிட்டு விட்டவள் அவள். அப்படி ட்ரக்ஸை விட்டுட்டாள்னா என்ன பண்ண முடியும்? நிலைமை இப்படி இருக்கும் போது எந்த நம்பிக்கையில் அவளா உன் கை வந்து சேருவாள்னு நம்புற?” என்று கேட்டான்.

“வருவாள் ரவி. கண்டிப்பா என்னைத் தேடி வருவாள். போதை மருந்தை எல்லாம் சாதாரணமா விட்டுவிட முடியாது. திரும்பத் திரும்ப வேணும்னு தோன்ற வைக்கும். அதனால் கண்டிப்பா வருவாள். அவளா நம்ம வழிக்கு வரட்டும். அப்போ நான் சொன்ன மாதிரி நாம எல்லாரும் சேர்ந்தே அவள் கூட எஞ்சாய் பண்ணலாம்…” என்று சொல்லிவிட்டு விஷமமாகச் சிரித்தான்.

“அந்த நாளுக்காகக் காத்திருக்கேன்…” என்று அவனின் சிரிப்பில் தானும் கலந்து கொண்டான் ரவி.

சந்துரு சொன்னது தான் கிருதி விஷயத்தில் நடந்தது. முதல் முறை போதை மருந்து எடுத்தது அவளுக்குச் சொர்க்கத்தில் மிதக்கும் உணர்வை தந்திருந்தது.

செழியனை காதலித்ததில் தோல்வி அடைந்து விட்டதாகச் சந்துரு அவள் மனதில் பதிய வைத்த வேகத்தில் போதை மருந்தும் எடுத்துக் கொள்ள, செழியன் அவளுக்குச் சொன்ன அறிவுரை, அவன் காட்டிய அக்கறை, அவன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் காற்றோடு கலந்தது போல் ஆகிப் போனது.

அவன் யோசிக்கச் சொல்லியிருக்க, அவன் சொன்னதை யோசிக்க வேண்டும் என்பதைக் கூட மறந்து போனாள்.

மீண்டும் அந்தப் போதையினால் உண்டான சந்தோஷமும், எதைப் பற்றியும் நினைக்காமல் மன மகிழ்ச்சி மட்டுமே இருக்கும் நிலையும் வேண்டும் என்று தோன்ற ஆரம்பிக்க, மீண்டும் சந்துருவிடம் வந்து நின்றாள்.

“அன்னைக்கு நீங்க கொடுத்த ட்ரக்ஸ் நல்லா இருந்தது சந்துரு. என் மாமா என்னை ஏமாத்தியது பத்தி எல்லாம் மறந்து எனக்குச் சந்தோஷமா இருந்தது. இப்பவும் எனக்கு அந்தச் சந்தோஷம் வேணும் சந்துரு…” என்று தன் முன்னால் வந்து நின்றவளைக் கண்டு உள்ளுக்குள் ஏற்பட்ட வெற்றி பூரிப்புடன் பார்த்தான் சந்துரு.

“உனக்குப் பிடிக்கும்னு தெரியும் கிருதி. அதான் இன்னொன்னு வாங்கி வச்சுருக்கேன். ஆனா நான் சொல்றேன்னு என்னைத் தப்பா எடுத்துக்காதே கிருதி. இது கொஞ்சம் காஸ்ட்லி. எல்லா நேரமும் என்னால் ஃப்ரீயா தர முடியாது…” என்றான்.

“புரியுது சந்துரு. என்கிட்ட பாக்கெட் மணி இருக்கு. அதைத் தர்றேன்…” என்று தன்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்துப் போதை மருந்தை வாங்கிக் கொண்டாள்.

அதை அவளுக்கு எப்படிப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவன், “இதை வெளியில் எங்கே வச்சும் போட்டுக்காதே கிருதி. வீட்டில் இருக்கும் போது யாருக்கும் தெரியாம போட்டுக்கோ. கேரளாவில் நீ ட்ரக்ஸ் எடுத்ததை ரொம்பக் கஷ்டப்பட்டு மறைச்சு, உன்னைக் காப்பாத்தி விட்டுருக்கேன். இப்ப நான் உன் கூடவே இருந்து நீ ட்ரக்ஸ் எடுப்பதைத் தெரியாமல் மறைக்க முடியாது. நீ தான் கவனமா இருக்கணும்…” என்றான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சந்துரு. நீங்க கவலைப்படாதீங்க…” என்று அவனிடம் விடைபெற்று வீட்டிற்குக் கிளம்பினாள்.

வீட்டிற்குள் நுழைந்தவளை “வா கிருதி… சாப்பிடலாம்…” என்று பவானி அழைக்க, அவரைக் கண்டு கொள்ளாமல் நடந்தாள்.

“கிருதி நில்லு…” என்று மீண்டும் பவானி அழைக்க,

“எனக்குத் தேவைன்னு இருக்கும் போது எனக்காகப் பேசாத நீங்க, இப்ப மட்டும் என்கிட்ட ஏன் பேசுறீங்க?” என்று கோபத்துடன் அவரிடம் கேட்டாள்.

“பேசாதது என் தப்புத்தான் கிருதி. ஆனா செழியன் தான் சொன்னான் அவன் உன்கிட்ட பேசிக்கிறதா. அதான் நான் பேசலை…” என்று அவளைச் சமாதானம் பண்ண முயன்றார்.

“அதானே, உங்களுக்கு உங்க பிள்ளை தானே முக்கியம். என்னைப் பத்தியோ என் மனசை பத்தியோ நீங்க ஏன் கவலைப்படப் போறீங்க?” என்று அவள் இன்னும் கோபமாகச் சொல்ல அதில் பவானியின் முகம் வேதனையைக் காட்டியது.

“உன்னைப் பத்தி நாங்க கவலைப்படாம வேற யார் கவலைப்படப் போறா கிருதி? உன் மன வருத்தம் எனக்குப் புரியுது. நீ செழியன் மீது ஆசைப்பட்டது தப்பும் இல்லை தான். ஆனா அவன் உன்னை அப்படி நினைக்கலைன்னு சொல்லும் போது என்னால் என்ன செய்ய முடியும், சொல்லு?” என்று கேட்டார்.

“நீங்க எடுத்துச் சொன்னா உங்க பிள்ளை கேட்டுருப்பார். ஆனா சொல்லத்தான் உங்களுக்கு மனசு இல்லையே…” என்றாள்.

“என்னன்னு எடுத்துச் சொல்லணும்னு நீயே சொல்லு கிருதி…” என்று திருப்பிக் கேட்டார்.

“நான் என்ன கேட்டேன்னு தெரிஞ்சும் நீங்க இப்படிக் கேட்டால் என்ன அர்த்தம்?” அத்தை என்ற அழைப்பின்றி யாரிடமோ பேசுவது போல் பேசுகின்றவளைக் கவலையுடன் பார்த்தார் பவானி.

“ஒரு உண்மையைச் சொல்லட்டுமா கிருதி. நீயும், என் மகனும் ஜோடி சேர்ந்தால் நல்லா இருக்கும்னு நானும் நினைச்சுருக்கேன். நீ படிப்பை முடிச்ச பிறகு செழியன் கிட்ட என் ஆசையைச் சொல்லலாம்னு இருந்தேன். ஆனா அதுக்கு முன்னாடியே என்னென்னவோ நடந்து போயிருச்சு.

செழியன் உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லியிருந்தால் நான் எடுத்துச் சொல்லியிருப்பேன். ஆனா தங்கை ஸ்தானத்தில் மட்டுமே உன்னைப் பிடித்திருக்குன்னு சொல்லும் போது அதுக்கு மேல அவன்கிட்ட எடுத்துச் சொல்லிப் பேச என்ன இருக்கு சொல்லு?” என்று கேட்டார்.

அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு அப்படியே நின்றாள் கிருதிலயா.

இனி பவானியோ, செழியனோ இதில் சொல்வதற்கோ, பேசுவதற்கோ எதுவுமில்லை. செய்ய வேண்டியது எல்லாம் அவள் மட்டுமே. செழியன் சொன்னது போல் அவன் மீது தனக்குக் காதல் இருக்கிறதா இல்லையா என்று யோசித்தாலே போதும். அனைத்தும் சரியாகிவிடும்.

ஆனால் யோசிக்க மாட்டேன் என்று வீண் பிடிவாதம் பிடித்தாள் அவள்.

அம்மாவும், மகனும் தன்னை விலக்கி நிறுத்த ஏதேதோ பேசி சமாளிக்கிறார்கள் என்று நினைத்தாளே தவிர, அவர்கள் எடுத்துச் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தாள்.

பிடிவாதம்! முரட்டுப் பிடிவாதம்! தான் ஆசைப்பட்டதைக் கொடுக்காமல் அவர்கள் எப்படித் தனக்கு மறுப்புத் தெரிவிக்கலாம்? என்ற எண்ணம் மட்டுமே ஓங்கியிருந்த கண்மூடித்தனமான பிடிவாதம்!

உனக்குப் பிடித்தால் என்ன? பிடித்தமில்லை என்றால் எனக்கென்ன? என் பிடித்தத்திற்கு நீங்கள் தான் சரியான எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று முரண்டு பிடிக்கும் பிடிவாதம்!

மனிதனுக்குப் பிடிவாதம் இருக்கலாம். ஆனால் பிடிவாதம் மட்டுமே இருக்கக் கூடாது என்று புரிந்து கொள்ள மறுக்கும் பிடிவாதம்!

மற்றவர்கள் தன் விருப்பத்திற்குச் செவி சாய்க்க வேண்டும் என்று நினைத்தவளுக்குத் தன் நலம்விரும்பிகள் பேச்சை தானும் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைக்க முடியாத அளவிற்கான பிடிவாதம்!

“நீங்களும் உங்க மகனும் என்னென்னமோ சொல்லி என்னைச் சமாளிக்கப் பார்க்குறீங்க. இப்பத்தான் என் அப்பா, அம்மா ஏன் என்னை விட்டுப் போனாங்கன்னு ரொம்ப வருத்தமா இருக்கு.

அவங்க மட்டும் இப்போ உயிரோடு இருந்திருந்தால் என் ஆசையை நிறைவேத்தி வச்சுருப்பாங்க. உங்க மகனும் மாமா பொண்ணைத் தங்கச்சியா நினைக்கிறேன்னு சொல்ல வேண்டிய அவசியம் வந்திருக்காது…” என்று கோபத்துடன் கத்தியவள், தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

அன்று இரவு யாரும் அறியாமல் போதை ஊசியைப் போட்டுக் கொண்டாள்.

பகலில் வழக்கம் போலக் கல்லூரிக்குச் சென்றவள் இரவுகளில் அடிக்கடி போதை ஊசி போட்டுக் கொள்ளப் பழகிக் கொண்டாள்.

கல்லூரியிலும் தோழிகளுடன் முன்பு போல நெருங்கிப் பழகி அரட்டை அடிக்காமல் அவர்களை விட்டுத் தள்ளியே இருந்தாள். அவர்கள் வந்து வழிய பேசினாலும் அவர்களை நிராகரிக்க ஆரம்பித்தாள்.

தனக்குக் காதல் தோல்வி. தனக்கு மட்டுமே அதிக வலி என்று அவளே ஒரு கற்பனை உலகில் இருந்து கொண்டு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள்.

வீட்டில் பவானியிடம் முகம் கொடுத்துப் பேசுவதையே தவிர்த்தாள்.

அதிக வேலையில் மாட்டிக் கொண்ட செழியன் அவ்வப்போது வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது பவானி தான் பேசினார்.

கிருதியின் அலைபேசிக்குத் தொடர்பு கொண்டால் அவனின் பெயரை பார்த்ததுமே தொடர்பை துண்டித்தாள்.

தான் பேசிய பிறகு அவள் தெளிந்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்த செழியனுக்குத் தன் மௌனத்தையே பதிலாகத் தந்தாள் கிருதிலயா.

“என்னாச்சுமா, ஏன் கிருதி போனே எடுக்க மாட்டேங்குறா?” என்று அன்னைக்கு அழைத்துச் செழியன் கேட்க,

அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் “நீ எப்ப பா திரும்பி வருவ?” என்று கேட்டார் பவானி.

“அம்மா?” என்று ஆச்சரியமாக அழைத்தான் செழியன்.

அவன் வேலைக்கு என்று வெளியூர் சென்றால் அவனாக வரும்வரை அதைப்பற்றிக் கேட்காதவர் முதல் முறையாகக் கேட்கவும் அவனுக்கு வியப்பாக இருந்தது.

“என்னாச்சுமா? அங்கே என்ன நடக்குது?” என்று கேட்டான்.

“அதுதான் தெரியலை செழியா…” என்று கலக்கத்துடன் சொன்னார் பவானி.

“என்னம்மா, என்ன சொல்றீங்க? தெரியலையா?”

“ஆமா செழியா, இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கே புரியலை பா. கிருதி ஏனோ தானோன்னு காலேஜுக்குப் போறா, வர்றா. என்கிட்ட பேசுவதே இல்லை. காலேஜ் விட்டு வந்ததும் அவள் ரூம்முக்குள்ள போய் அடைஞ்சுகிறாள்.

சாப்பாடு செய்து வச்சா தட்டில் போட்டு அவள் ரூமுக்குள்ள உட்கார்ந்து சாப்பிடுறாள். வீட்டில் நானும் ஒருத்தி இருக்கேன் என்ற நினைப்பே இல்லாதது போல நடந்துகிறாள்.

சில நாள் நைட் எல்லாம் அவள் ரூமுக்குள் ஏதோ தனியா புலம்புற போலவே சத்தம் கேட்குது. கதவைத் தட்டினா திறக்க மாட்டேங்கிறாள். எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை செழியா…” என்றார்.

அன்னை சொன்னதைக் கேட்டுத் தலையை அழுந்த பிடித்துக் கொண்டான் செழியன்.

“அவள் டூர் போயிருந்தப்ப அவள்கிட்ட நான் எல்லாம் எடுத்துச் சொல்லிப் பேசினேன்மா. அதில் அவள் மனசு மாறியிருக்கும்னு நினைச்சேன். இப்ப ஏன் இப்படிப் பண்றாள்னு புரியலையே…” என்றான்.

“நீ வந்து நேரா பேசினா உன் பேச்சை அவள் கேட்பாள்னு நினைக்கிறேன். நீ எப்பப்பா வர்ற?” என்று கேட்டார்.

“என்னால் இப்போ இங்கிருந்து நகரக் கூட முடியாதுமா. நான் வேணும்னா ரத்னாவை வந்து கிருதிகிட்ட பேச சொல்றேன்…” என்றான்.

“ரத்னா உன்கிட்ட சொல்லலையா செழியா?” என்று கேட்டார்.

“என்னம்மா? என்ன சொல்லலையா? பிஸில நாலு நாளா நான் அவள்கிட்ட பேசலைமா…” என்றான்.

“இரண்டு நாள் முன்னாடி ரத்னா வீட்டுக்கு வந்திருந்தாள்…”

“ஓ, அவள் கிருதிகிட்ட பேசியிருப்பாளே…”

“இல்லை செழியா, ரத்னாவை பார்த்ததும் கிருதி முகத்தில் அடித்தது போல ரூம் கதவை மூடிட்டு உள்ளே போய்ட்டாள். ரத்னா அவள்கிட்ட வெளியே இருந்து பேச ட்ரை செய்தாள். ஆனா உள்ளே கிருதி மியூசிக் சிஸ்டத்தை வீடே அலர்ற போலப் போட்டு விட்டுட்டாள். வேற வழி இல்லாம ரத்னா கிளம்பிப் போய்ட்டாள்…” என்றார்.

“ம்ப்ச்… ஏன் தான் இந்தக் கிருதி இப்படிப் பண்றாமா? அவளுக்கு நாம என்ன குறை வச்சோம்? நம்ம பொண்ணா பார்த்துப் பார்த்துத் தானே அவளுக்கு எல்லாம் செய்றோம். அவளோட ஆர்வக்கோளாறால் அவள் எதுவும் பிரச்சினையில் மாட்டிக்கக் கூடாதுன்னு தானே நான் கொஞ்சம் கண்டிப்பும் காட்டினேன்.

இப்போ தேவையே இல்லாம படிக்கிற வயசில் காதல் கீதல்னு உளறிக்கிட்டு அவளை மட்டும் இல்லாம நம்மளையும் இப்படிக் கஷ்டப்படுத்துறாளே…” என்றான் வேதனையுடன்.

என்றுமில்லாமல் மகன் வேதனையுடன் பேச பவானியின் கண்கள் கலங்கின. லேசான தேம்பலும் அவரிடம் இருந்து வர,

“அம்மா, அழறீங்களா? வேண்டாம்மா. அழாதீங்க… நான் சீக்கிரம் வர்றேன். நான் வந்து கிருதிகிட்ட பேசுறேன். அவள் நம்ம கிருதிமா. நாம சொன்னால் கேட்டுப்பாள். நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன்…” என்று அன்னையைத் தேற்றினான்.

செழியன் சொன்னது போலவே விரைவில் வீடு வந்து சேர்ந்தான்.

அவன் அன்று வீட்டிற்கு வந்த போது இரவு பதினோரு மணி ஆகியிருந்தது. அன்னையை நேரம் கெட்ட நேரத்தில் எழுப்பக் கூடாது என்று எப்போதும் அவனிடம் ஒரு சாவி வைத்திருப்பான் என்பதால் அதை வைத்து வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

முதலில் அன்னையின் அறைக்குச் சென்று எட்டிப் பார்க்க, அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

அவரைப் பார்த்து விட்டு மாடியேறினான் செழியன்.

அன்னையிடம் தான் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வருவேன் அதனால் தனக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தான்.

அவன் இன்று வருவது கிருதிக்குத் தெரியவில்லை என்பதால் அன்றும் சந்துருவிடமிருந்து வாங்கி வந்திருந்த போதை ஊசியைச் சற்று நேரத்திற்கு முன்பு தான் போட்டுக் கொண்டு அறைக்குள் உருண்டு கொண்டிருந்தாள்.

அவளின் அறை கதவு மூடியிருப்பதைப் பார்த்துக் கொண்டே தன் அறையை நோக்கி நடந்த செழியனின் காதில் பேச்சுச் சப்தம் கேட்க, அறை வாசலிலேயே அப்படியே நின்றான்.

‘கிருதியா பேசுகிறாள்? இந்நேரம் யாரிடம் பேசுகிறாள்?’ என்று நினைத்துக் கொண்டே அவளின் அறையின் கதவருகே சென்றான்.

“இவரு பெரிய மன்மதன். என்னை வேண்டாம்னு சொல்வாராம். நீ என்னடா என்னை வேணாம்னு சொல்றது? நான் சொல்றேன் நீ எனக்கு வேணாம். வேண்டவே வேண்டாம். எனக்குன்னு ஒரு மன்மதன் வருவான்.

அவன் அப்படியே என்னைக் கொஞ்சி கொஞ்சி தாங்குவான். என்னையே சுத்தி சுத்தி வருவான். வரலைனா வர வைப்பேன். நான் யார் தெரியுமா? கிருதிலயா! நான் நினைச்சதை நடத்தியே தீருவேன்…” என்று வாய்க்கு வந்த படி அவள் சொன்னதைக் கேட்டுச் செழியன் சிலையாக நின்று போனான்.

‘என்ன பேச்சு இது? அப்படி யார்கிட்ட பேசுறாள்?’ என்று தோன்ற கதவைத் தட்டினான்.

“கிருதி… கிருதி… கதவைத் திற…” என்று இவன் கதவைத் தட்டவும் உள்ளே பேச்சுச் சப்தம் குறைந்தது. அலட்சியமாகச் சிரித்துக் கொள்ளும் சப்தம் கேட்டது.

“இப்ப நீ கதவைத் திறக்கலைனா நானே திறந்து உள்ளே வருவேன். கதவைத் திற!” என்றான்.

இப்போது உள்ளே சப்தம் சுத்தமாக நின்று போனது.

கிருதி என்று மீண்டும் அழைத்தவனுக்கு ‘நைட்டெல்லாம் அவள் தனியா புலம்புற சத்தம் கேட்கிறது’ என்று அன்னை சொன்னது அவனின் ஞாபகத்தில் வர, அவளின் அறை கதவைத் தட்டுவதை விட்டு விட்டு தன் அறைக்கு விரைந்து சென்றான்.

சென்றவன் திரும்பி வந்தபோது மற்ற அறைகளுக்குரிய மாற்றுச் சாவி கொத்து அவனின் கையில் இருந்தது.

கதவைத் திறந்து உள்ளே சென்ற போது இரவு உடையில் கைகள் ஒரு பக்கம், கால்கள் ஒரு பக்கமாக வளைந்து நெளிந்திருக்க, கண்கள் போதையில் சொருகியிருக்க, வாயில் இருந்து அர்த்தமில்லாமல் ஏதேதோ புலம்பிய வண்ணம் அலங்கோலமாகக் கிடந்த கிருதியைப் பார்த்து நம்ப முடியாத அதிர்ச்சியில் உறைந்து நின்றான் செழியன்.