மனம் கொய்த மாயவனே – 23

அத்தியாயம் – 23

“நீ யார் வெற்றி?”

“இதென்ன கேள்வி ஆள் முழுங்கி? நான் யாருன்னு உனக்குத் தெரியாதா? நான் உன் வெற்றி…” என்றவன் குனிந்து அவனின் பெட்டியில் இருந்து மாற்றுடையை எடுத்தான்.

பின் அவளின் பக்கம் திரும்பாமல் லுங்கி, பனியனை மாற்ற ஆரம்பித்தான்.

அவனின் ஒவ்வொரு அசைவையும் எப்போதும் ரசித்துப் பார்க்கும் அல்லி, இப்பொழுது சலனமே இல்லாமல் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான் என்ன கேட்குறேன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் ஒன்னுமே தெரியாதவன் போல நடிக்கிற இல்லையா வெற்றி? நீ நடந்துகிறது எல்லாம் பார்த்தால் நீ சாதாரணத் துணி விக்கிறவன் தானான்னு சந்தேகமா இருக்கு…” என்றாள்.

“நடிக்கிறேனா? எனக்கு நடிக்க வேண்டிய அவசியம் என்ன அல்லி? அப்படி நான் என்ன வித்தியாசமா நடந்துகிட்டேன்?” உடையை மாற்றி முடித்தவன் அவளின் புறம் திரும்பிக் கேட்டான்.

“நான் சுத்தி வளைச்சுக் கேட்க விரும்பலை. நேராவே கேட்குறேன். இன்னைக்கு ஒரு காரில் ஏறி யார்கிட்டயோ பேசிட்டு இருந்த தானே? உன் கையில் ஒரு பெரிய போன் இருந்துச்சு. அந்தப் போன் உனக்கு ஏது? உன்கிட்ட ஒரு பழைய போன் தானே இருந்துச்சு. இதை எல்லாம் விட என்னைப் பார்த்ததும் காரை வேகமாக எடுக்கச் சொல்லி அந்த இடத்தை விட்டுப் போன? உண்மைதானே?” என்று கேட்டாள்.

“பொய்ன்னு யார் சொன்னா? உண்மையே தான்” என்றான்.

அவன் மறுப்பான் என்று நினைத்திருந்த அல்லி, அவன் சொன்ன பதிலில் அடுத்து என்ன கேட்பது என்று அறியாமல் நின்று போனாள்.

ஆரம்பத்திலிருந்து ஒரு புரியாத புதிராகத்தான் அல்லிராணியின் கண்களுக்குத் தெரிந்து கொண்டிருந்தான் வெற்றி.

துணி வியாபாரம் பார்க்க வந்தவன், அவ்வப்போது ஏதோ வித்தியாசமாகச் செய்கிறான் என்பது அவளின் எண்ணம்.

ஒரு வீட்டிற்குள் ரகசியமாகப் போய்விட்டுப் பின் பக்கமாக வெளியேறியதும், திடீரென அடிப்பட்டு வந்து நின்றதும், இதுவரை எப்படி அடிப்பட்டது என்று சொல்லாமல் மறைப்பதும் என ஏதோ ஒரு உறுத்தல் அவனைப் பற்றி அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது.

இப்பொழுதும் அவன் தன்னைப் பார்த்ததும் காரை எடுக்கச் சொல்லிக் கிளம்பியது அதிக உறுத்தலைக் கொடுக்க, உள்ளுக்குள்ளேயே வைத்திருக்காமல் வெளிப்படையாகக் கேட்டுவிட்டிருந்தாள்.

“என்ன அல்லி, இப்படி வாயடைச்சு போய் நிக்கிற? உன்னோட அடுத்தச் சந்தேகத்தைக் கேட்கலையா?” என்று கேட்டு அவளின் அமைதியை அவனே கலைத்தான்.

“நான் தான் கேட்டேனே… நீ ஏன் அப்படிப் பண்ணின? என்கிட்ட இருந்து ஓடி ஒளியிற அளவுக்கு அப்படி என்ன தப்பான காரியம் பண்ற?” என்று கேட்டாள்.

அவளுக்கு உடனே பதில் சொல்லாதவன், மெதுவாக அவளின் அருகில் நெருங்கி வந்தான்.

“ஓடி ஒளியிறனா? நானா? இதென்ன அபாண்டம் அல்லி. நான் இதோ உன் முன்னாடி தானே நிக்கிறேன். அதுவும் எந்த ஒளிவு மறைவும் இல்லாம உன் முன்னாடி தானே நான் ட்ரெஸ் கூட மாத்தினேன்…” என்று சொல்லிக் கண்சிமிட்டி, அவளின் இடையைப் பற்றித் தனக்கு நெருக்கமாக இழுத்தான்.

அவளின் தாவணி ஏற்கனவே லேசாக நலுங்கி இருக்க, அவன் இழுத்ததில் இன்னும் நலுங்கி அவனின் கை நேராக அவளின் சருமத்தை உணர்ந்தது.

இடுப்பில் உராய்ந்த அவனின் கை அவளுக்குள் நெகிழ்வை உண்டாக்க, முயன்று தன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டவள், “இந்த மாதிரி செய்து என்னைத் திசை திருப்ப முயற்சி பண்ணாதேனு உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன் வெற்றி….” என்றாள்.

“பேச்சை திசை திருப்ப எல்லாம் உன் பக்கத்தில் வரலை. இப்படி இருந்தே பேசுவோம்னு தான்…” என்றவன் ஒற்றை விரலை மெதுவாக அசைத்து அவளின் இடையை வீணை போல் மீட்ட முயன்றான்.

“கையை வச்சுக்கிட்டு சும்மா இரு வெற்றி…” என்று அல்லி அவனை அதட்ட முயன்றாலும் அவளின் குரல் என்னமோ கொஞ்சலாகத் தான் வந்தது.

“நீ கரடு முரடான வேலை செய்தாலும் இங்கே எல்லாம் நல்லா ஷாப்ட்டா இருக்கு ஆள் முழுங்கி…” என்று கிறக்கமான குரலில் சொன்னவன் அவளின் தலையைப் பிடித்துத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.

“நீ இப்படியெல்லாம் செய்றது பேச்சை மாத்துறது போலத்தான் இருக்கு…” என்று அவளின் இழுப்பிற்குச் சென்றபடியே முனங்கினாள்.

“நீ என்ன பேசணும்னு நினைக்கிறயோ அதையே பேசுவோம். ஆனா விலகி நின்னு இல்ல. இப்படி இருந்துகிட்டே தான். இப்போ எனக்கு உன் ஸ்பரிஷம் வேணும் போல இருக்கு. தருவ தானே?” என்று அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

அவனின் குரலில் இருந்த எதிர்பார்ப்பு அவளை மறுப்பு தெரிவிக்க விடாமல் செய்யச் சம்மதமாகத் தலையை அசைத்தாள்.

அவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன், “இன்னைக்கு நீ என்னைப் பார்த்தது, நான் அங்கிருந்து கிளம்பியது எல்லாமே உண்மை தான் ஆள் முழுங்கி. அதுக்குக் காரணமும் இருக்கு. நம்ம இன்னும் நல்லா வாழ்றதுக்கு என்னோட இந்தத் துணி விக்கிற வேலை மட்டும் பத்தாது அல்லி.

அதை விடப் பெருசா, இன்னும் அதிக வருமானம் கிடைக்கக் கூடியதா ஏதாவது செய்யணும். அதுக்குத்தான் இன்னைக்கு ஒருத்தரை பார்க்கப் போனேன். அந்த வேலை சொந்த தொழில் போலத்தான். ஆனா அவங்க கூடப் பார்ட்னரா இருந்து செய்யணும். அதுக்கு நானும் கொஞ்சம் பகட்டாதான் இருக்கணும். அதனால் இன்னைக்குத் தான் அந்த விலை கூடிய போனை வாங்கினேன்.

இந்தத் தொழிலுக்குப் போன் மூலமே நிறைய வேலை செய்ய வேண்டியதா இருக்கும். உன்னைப் பார்த்துக் கிளம்பியதுக்குக் காரணம் அவனுங்க முன்னாடி நீ வர வேண்டாம்னு தான். தொழில் வேற, சொந்த வாழ்க்கை வேற.

அவனுங்க எனக்கே புது ஆளுங்க. அப்படி இருக்கும் போது அவனுங்க கிட்ட உன்னை அறிமுகப்படுத்துறது எல்லாம் சரி வராதுன்னு தான் உன்னைக் கண்டுக்காம போனேன்…” என்று நீண்ட விளக்கமே தந்தவன் அவளின் முகத்தை நிமிர்த்தி, “இப்போ உன் சந்தேகம் தீர்ந்துச்சா?” என்று கேட்டான்.

“ம்ம்…” என்றவள், “புதுசா என்ன வேலை செய்யப் போற வெற்றி?” என்று கேட்டாள்.

“அது ஒரு ஏற்றுமதி, இறக்குமதி வேலை. அதைப் பத்தி இன்னொரு நாள் உனக்கு விளக்கமா சொல்றேன். இப்போ…” என்றவன் அவளின் முகத்தை நோக்கி மையலுடன் குனிந்தான்.

அவனின் மீது அவளுக்கு இருந்த கோபம் எல்லாம் எப்போதோ ஓடி ஒளிந்திருக்க, அவனுக்கு ஏதுவாகத் தன் முகத்தைக் காட்டினாள் அல்லிராணி.

“ஏன் வெற்றி, இது தப்பில்லையா?” சற்று நேரத்தில் அவனின் தோளில் வாகாகச் சாய்ந்து நின்றபடி கேட்டாள்.

“எதைத் தப்புன்னு நினைக்கிற?” என்று அவளை அணைத்துக் கொண்டே கேட்டான்.

“இப்படிக் கட்டிக்கிறது, ஒட்டிக்கிறது, ‘இச்’சுக்கிறது தான்…” என்று சொல்லிக் கொண்டே இன்னும் அவனை ஒட்டிக்கொண்டு தான் நின்றாள்.

“ஹாஹா… அடிப்பாவி! முதல் முதலில் உன் மனசை சொன்னப்பயே இதோ இங்கே இச்சு தந்தவள் நீ…” என்று தன் உதட்டை சுட்டிக் காட்டிச் சொன்னவன், “இப்போ மட்டும் என்ன புதுசு புதுசா தப்புன்னு எல்லாம் யோசிக்கிற?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம்… அதென்னவோ தெரியலை வெற்றி. உன் பக்கத்தில் வந்தாலே எனக்கு அப்படி எல்லாம் தோணுது. ஆனாலும் கல்யாணம் கட்டிக்காம இப்படி எல்லாம் இருக்குறது ஒரு உறுத்தலாகவும் தெரியுது. அதுவும் உன் பக்கத்துல இருக்கும் போது ஞாபகமே இல்லாத உறுத்தல் உன்னை விட்டுத் தள்ளிப் போனதும் வருது…” என்றாள்.

அதைச் சொல்லும் போது அவளின் முகத்தில் மெல்லிய வருத்தம் இழந்தோடியது.

அதனைக் கண்டு கொண்டவன் அவளின் முகத்தைக் கைகளில் தாங்கினான்.

“உன் ஊனிலும் உயிரிலும் நான் இருக்கும் போது அந்த உணர்வுகள் வருவது இயல்பு ஆள் முழுங்கி. அதனால் எந்த உறுத்தலும் உனக்கு வேண்டாம். உனக்கு என்னைக் கட்டிக்கணும்னு தோணினால் கட்டிக்கோ.

ஒட்டிக்கணும்னு தோணினா ஒட்டிக்கோ. இச்சுக்கணும்னு தோணினால் தாராளமா இச்சுக்கலாம்…” என்று அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே மென்மையாகச் சொன்னவன் அவளின் உதட்டில் அப்படியே தன் உதட்டைப் பொருத்தினான்.

பேசிக் கொண்டிருந்த காரணக் காரியங்களை மறந்து இருவரும் காரியத்தில் கண்ணாகினர்.

முட்டி மோதிக் கொண்ட உதடுகளைப் பிரிக்க வைப்பது போல் வெளியே இருந்து “அல்லி…” என்ற அழைப்புக் கேட்டது.

“அய்யோ! அம்மா!” என்று தன் உதட்டைப் பிரித்துக் கொண்டு மெல்லிய குரலில் அலறினாள்.

“அல்லி… என்னடி பண்ற? இங்க வா…” என்று வீட்டிற்கு வெளியே இருந்தே அதட்டலாக அழைத்தார் சரோஜா.

கதவின் மறைவில் இருவரும் நின்றிருந்ததால் உள்ளே நடந்த காதலர்களின் விளையாட்டு வெளியில் நிற்பவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

அதனால் நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டவள், “இதோ வந்துட்டேன் மா…” என்றபடி சிட்டாக வெளியே ஓடினாள்.

அவள் ஓடும் வேகத்தைக் கண்டு வெற்றி சிரித்த படி நிற்க, “தம்பி…” என்று இப்போது சரோஜா அவனை அழைக்கும் குரல் கேட்டது.

வாசலுக்கு வந்து “என்னங்க மா?” என்று கேட்டான்.

“என்ன வெற்றி அம்மான்னு சொல்லிட்டு இருக்க. அத்தைன்னு கூப்பிடு…” என்று உரிமையுடன் அதட்டினாள் அன்னையின் அருகே நின்றிருந்த அல்லி.

அவளுக்கு வெற்றி பதில் சொல்லும் முன், “அத்தை, ஆட்டுக்குட்டி எல்லாம் அப்புறம் பார்க்கலாம். இப்போ நீ இடத்தைக் காலிப் பண்ணு…” என்ற சரோஜா,

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் தம்பி…” என்றார்.

“வெற்றிகிட்ட என்னம்மா பேச போற?” என்று கேட்டாள் அல்லி.

“நான் என்னமோ பேசிட்டுப் போறேன். நீ வீட்டுக்குப் போடி…” என்று மகளை விரட்டினார்.

“அதெல்லாம் போக முடியாது. அப்படி எனக்குத் தெரியாம என்ன பேச போறமா?” என்று அங்கிருந்து நகர மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

“இப்போ உன்னை வீட்டுக்குப் போன்னு சொன்னேன்…” என்று மகளிடம் இப்போது கடுமையாகச் சொன்னார் சரோஜா.

அவரின் கடுமையில் அல்லியின் முகம் சுருங்க, வெற்றி யோசனையுடன் பார்த்தான்.

“அல்லி, நீ வீட்டுக்குப் போ. நான் பேசிக்கிறேன்…” என்று அவளிடம் வெற்றி சொல்ல, “என்ன விஷயம்னு அப்புறம் நீ என்கிட்ட சொல்லிடணும் வெற்றி…” என்ற கட்டளையுடன் அங்கிருந்து சென்றாள் அல்லிராணி.

அவளின் கட்டளையைக் கேட்டு அவன் சிரிக்க, “தம்பி…” என்று அழைத்து அவனின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார்.

“சொல்லுங்க, என்கிட்ட என்ன பேசணும்? அதுக்கு முன்னாடி என்னவா இருந்தாலும் வீட்டுக்குள் வந்து பேசுங்க…” என்று அழைத்தான் வெற்றி.

அவரும் உள்ளே வர, அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்று அடிப்பட்ட காலை வசதியாகச் சுவற்றில் ஊன்றி அவரின் பேச்சை கேட்பதற்குத் தயாரானான்.

“நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பலை தம்பி. என் பொண்ணு உங்க பின்னாடியே கிறுக்குப் பிடிச்சது போலச் சுத்திக்கிட்டு இருக்கா. அவ வயது அப்படி. இந்த வயசில் கண்ணில் பார்க்கிறது எல்லாம் நல்லாத்தான் தெரியும். நினைச்சது வேணும்னு நினைக்கத் தோணும். ஆனா நாங்க பார்க்கிற கூலி வேலைக்கு அவ ஆசை எல்லாம் நிறைவேறாத ஆசைன்னு அவளுக்குப் புரியவேயில்லை…” என்று சொல்ல,

“நிறைவேறாத ஆசைன்னு எப்படிச் சொல்றீங்கமா?” என்று அவரின் பேச்சின் இடையில் புகுந்து கேட்டான்.

“சின்னவங்க நீங்க ஆசைப்பட்டா மட்டும் போதுமா தம்பி? உங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கும். உங்க அப்பா, அம்மாவெல்லாம் என்ன சொல்லுவாங்க? எதுவுமே தெரியாம நான் வேற என்ன நினைக்க முடியும் தம்பி?” என்று சரோஜா கேட்க,

“அவங்களைப் பத்தி கவலைப்பட ஒன்னுமில்லைங்கமா. நான் பேசி சம்மதம் வாங்கிடுவேன்…” என்றான் வெற்றி.

“ஆனா, என்கிட்ட அவளுக்குச் செய்றதுக்குன்னு ஒன்னுமில்லையே தம்பி. கல்யாண செலவு கூட என்னால செய்ய முடியாத நிலையில் தான் நான் இருக்கேன் தம்பி…” என்றார்.

“உங்க கவலை எனக்குப் புரியுதுமா. இல்லை அல்லி சொன்னது போல இப்போ நான் அத்தைன்னு சொல்றது தான் சரியா இருக்கும். அப்ப தான் உங்களுக்கு என் மேல நம்பிக்கையும் வரும். கல்யாண செலவு, நகை, நட்டுன்னு நீங்க எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம். இப்போ நான் வியாபாரம் பார்த்தாலும், இன்னும் நிறையச் சம்பாதிக்க எல்லா வேலையும் செய்துட்டு இருக்கேன்.

அதனால அல்லிக்குத் தேவையான நகையும் போட்டு, அவளைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டியது என் பொறுப்பு. ஆனா இதுக்கெல்லாம் எனக்குக் கொஞ்சம் டைம் வேணும். அதுவரைக்கும் மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க அத்தை. எங்க கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கும்…” என்றான்.

சரோஜாவிற்கு அவனின் பேச்சு திருப்தியைத் தந்தது.

தங்களின் குடும்ப நிலைக்கு எப்படி மகளைக் கட்டிக் கொடுக்கப் போகிறோமோ என்று அனுதினமும் கவலைப்பட்டவர் அவர்.

அதுவும் மகள் வெற்றியின் மீது பித்தாகச் சுற்ற, எங்கே ஏதாவது தடங்கல் வந்து, அவள் ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டால் என்ன செய்ய முடியும்? என்ற பயத்தில் தான் அன்னையாகக் கவலையுடன் அவனிடம் பேச வந்திருந்தார்.

ஏழையோ, பணக்காரனோ மனம் சேர்ந்தால் மட்டும் அவர்கள் திருமண வாழ்க்கையில் இணையப் போதுமானதாக இருப்பதில்லை.

சொந்தப்பந்தத்தின் சம்மதமும் தேவைப்படுகிறது. பணமும் அதில் முக்கியப்பங்கு வகிக்கின்றது.

“என் மகள் ஆசைப்பட்ட வாழ்க்கையே அவளுக்குக் கிடைக்கப் போகிறது என்பதில் எனக்குச் சந்தோஷம் தம்பி. ஆனா உங்க வீட்டில்…” என்று மீண்டும் தயக்கத்துடன் கேட்டார்.

“எங்க வீட்டு ஆளுங்ககிட்ட கூடிய சீக்கிரம் நானே உங்களைப் பேச வைக்கிறேன் அத்தை…” என்றான் வெற்றி.

“சந்தோஷம் தம்பி. அப்ப நான் கிளம்புறேன். உங்க உடம்பை பார்த்துக்கோங்க தம்பி…” என்று அவன் தலை காயத்தைக் காட்டிச் சொன்னவர், வாசலை நோக்கி நடந்தார்.

கதவின் அருகில் சென்றதும் தயங்கி நின்றவர், “தம்பி…” என்று தயக்கத்துடன் அழைத்தார்.

“சொல்லுங்க அத்தை…” என்று கேட்டான்.

“அல்லி சரியான அடங்காபிடாரி. சும்மாவே உங்க பின்னாடியே சுத்துறா. இப்போ நான் உங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சுட்டேன்னு தெரிஞ்சா உங்களையே தான் விடாம சுத்தி சுத்தி வருவா. நான் சொன்னா கேட்கமாட்டா. அதனால்…” என்றவர் அவனிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினார்.

“சும்மா சொல்லுங்கத்தை…” என்றான்.

“உங்க கல்யாணம் முடியுற வரை என் பொண்ணாவே பார்த்துக்கோங்க தம்பி…” என்று சொன்னவர் அடுத்த நிமிடம் அங்கிருந்து விரைந்து சென்றார்.

அவர் சொல்லிச் சென்ற விஷயத்தின் சாராம்சத்தைக் கிரகித்தவன் அடுத்த நொடி உதட்டில் புன்னகையைத் தவழ விட்டுத் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.

“பொண்ணு மட்டுமா அடங்காபிடாரி. நானும் அடங்காத காளை தான்னு எப்படிச் சொல்லுவேன்…” என்று புன்னகையுடன் முணுமுணுத்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் அங்கே துள்ளிக் கொண்டு ஓடி வந்த அல்லி, “வெற்றி, எங்க அம்மா என்ன சொல்லுச்சு?” என்று மூச்சு வாங்க கேட்டாள்.

“ஏன், உங்கம்மா உன்கிட்ட சொல்லலையா?” என்று சிரித்துக் கொண்டே அவளிடம் கேட்டான்.

“நான் சொன்னாலும் நம்பாம அந்தத் தம்பிகிட்ட கேட்கத்தான் ஓடுவ. அதனால் அங்கே போயே தெரிஞ்சுக்கோன்னு சொல்லியிருச்சு…” என்றாள்.

“என் மாமியார் உன்னை நல்லா புரிஞ்சு வச்சுருக்காங்கடி பொண்டாட்டி…” என்றவன் அவளின் கையைப் பிடித்துக் கொண்டான்.

“என்ன மாமியாரா?” என்று வியந்து கேட்டவள், “ஏய், அப்போ அம்மா நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிருச்சா?” என்று துள்ளிக் குதித்தவள், வேகமாக அவனை அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

சில நொடிகள் அவளின் அணைப்பை ஏற்றவன், பின் மென்மையாக அவளை விலக்கி நிறுத்தி, “இப்ப சந்தோஷமா?” என்று கேட்டான்.

“ம்ம்… ரொம்ப…” என்றவள் தன் மகிழ்ச்சியை அப்பட்டமாக முகத்தில் காட்டினாள்.

அதன் பிறகு வந்த மணி துளிகளும் சரி, நாட்களும் சரி அல்லிக்கு அலைகடல் எனப் பொங்கும் மகிழ்ச்சியுடனே சென்றது.

அந்த மகிழ்ச்சியும் அலையில் அடித்துச் செல்லும் நாளும் வந்தது.

தன் வீட்டில் இருந்து வெற்றிக்கு சமைத்துக் கொடுப்பதும், அவன் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவன் பின்னேயே சுற்றுவதுமாக இருந்தாள் அல்லிராணி.

அன்றும் இரவு உணவு முடிந்ததும் அவனிடம் விடைப்பெற்றுக் கொண்டு அவனுக்கு உணவு எடுத்து வந்த பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டுப் படுக்கையில் விழுந்த அல்லிராணிக்கு கனவிலும் வெற்றியின் ஞாபகமே!

நள்ளிரவில் சட்டென்று விழிப்பு வர, எழுந்த அல்லி இயற்கை அழைப்பிற்கு எழுந்து வெளியே வந்து மறைவிற்குப் போய் விட்டு வந்தவள் திரும்பி தன் வீட்டிற்குள் நுழையும் போது பாதி உறக்க நிலையிலும் உதட்டின் ஓரம் பூத்த புன்னகையுடன் வெற்றியின் வீட்டின் புறம் பார்வையைக் கொண்டு சென்றாள்.

அடுத்த நொடி அவளின் அந்தப் புன்னகை உறைந்து போக, அவளின் தூக்கமும் முற்றிலுமாகக் கலைந்து போக விழிகள் விரிய வெற்றியின் வீட்டை வெறித்தாள்.

அங்கே ஒரு பெண் வெற்றி திறந்து விட்ட கதவை இன்னும் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து கொண்டிருக்க, முற்றிலும் உடைந்து போய்ச் சமைந்து நின்று போனாள் அல்லிராணி.

“மீண்டும் ஆரம்பித்து விட்டானா?” என்ற கேள்வி மட்டுமே அவளின் மனம் முழுவதும் வியாபிக்க ஆரம்பித்தது.