மனம் கொய்த மாயவனே – 20

அத்தியாயம் – 20

அந்த ஞாயிறு அன்று வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்த செழியனின் கையில் ஒரு பரிசுப் பொருள் இருந்தது.

“என்ன மாமா, யாருக்கு கிப்ட்?” என்று கேட்டபடி மாடியிலிருந்து இறங்கி வந்த கிருதிலயா நேராக அவனின் அருகில் வந்து அவன் தோளைப் பிடித்துக் கொண்டு குதித்தாள்.

“கையை எடு கிறுக்கி. இப்படி என்னைப் பிடித்துத் தொங்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல…” என்று சொல்லிக் கொண்டே அவளின் கையை எடுத்து விட்டான்.

“ஏன், நான் உன்னைத் தொட்டால் என்ன?” என்று முதல் கேள்வியைச் சப்தமாகக் கேட்டவள்,

‘நான் உன்னைத் தொடாமல் வேற யார் தொடுவாங்களாம்?’ என்ற கேள்வியைத் தன் வாயிற்குள்ளேயே முனங்கிக் கொண்டாள்.

அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளை ஒரு பார்வை பார்த்தவன், “அம்மா எங்கே?” என்று கேட்டான்.

அவனின் பார்வையே அவளை ‘தள்ளி நில்!’ என்று சொல்லியது.

அது புரிந்தும் வேண்டுமென்றே அவனை உரசுவது போல் நின்றவள், “உன் மம்மி அதோ வர்றாங்க பார்…” என்று அவர் அறையிலிருந்து வந்த பவானியைக் காட்டினாள்.

“என்ன செழியா?” என்று பவானி கேட்க,

“இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் வெளியே கிளம்புறேன்மா. நைட் பங்ஷன்லயே சாப்பிட்டு வந்துருவேன். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்…” என்றான்.

“சரி செழியா…” என்று பவானி சொல்ல,

“என்ன பங்க்ஷன் மாமா?” என்று விசாரித்தாள் கிருதிலயா.

“என் கூட வேலை பார்க்கிறவருக்கு இன்னைக்கு வெட்டிங் ரிசப்ஷன். அதுக்குத் தான் போறேன்…” என்று கிருதிக்குப் பதில் சொன்னவன், ஏதோ யோசித்தது போல் பவானியின் புறம் திரும்பி, “நீங்களும் வர்றீங்களாமா?” என்று அன்னையிடம் கேட்டான்.

“நானா? நான் எதுக்குச் செழியா? நீ போயிட்டு வா…” என்றார் பவானி.

“என்னை எல்லாம் கூப்பிட மாட்டியா மாமா?” என்று கேட்டாள் கிருதி.

“முதலில் அம்மா வர்றேன்னு சொல்றாங்களான்னு பார். அவங்க வந்தால் உன்னையும் நான் கூட்டிட்டுப் போறதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை…” என்றான்.

“நாமளும் போவோமே அத்தை. ரொம்ப நாளா எந்த விசேஷத்துக்கும் நாம போகவே இல்லை…” என்று கேட்டாள்.

“சொந்தக்காரங்க வீடா இருந்தாலும் பரவாயில்லை. செழியன் கூட வேலை செய்ற பையன் வரவேற்பாம். நமக்கு அங்கே யாரையுமே தெரியாது. அங்கே போய் என்ன செய்யப் போறோம்?” என்று கேட்டார் பவானி.

“நான் இருக்கேன்ல அம்மா, அப்புறம் என்ன? ஆனந்த், ரத்னாவும் வருவாங்க. கிளம்புங்க போயிட்டு வருவோம். கிருதியும் ஆசைப்படுறாள்…” என்றான் செழியன்.

“ஆமா, போகலாம் அத்தை…” என்று கிருதி ஆர்வமாகச் சொல்ல, “சரி, வா கிளம்பலாம்…” என்றார் பவானி.

சற்று ‌நேரத்தில் மூவரும் வரவேற்பு நிகழ்ச்சிக்குக் கிளம்பிச் சென்றனர்.

அவர்கள் சென்ற சற்று நேரத்தில் ஆனந்த் வர, அவன் வந்து சில நிமிடங்களுக்குப் பிறகு ரத்னா அங்கே வந்து சேர்ந்தாள்.

அவர்களிடம் நலம் விசாரிப்பும், சாதாரணமான பேச்சுக்களுமாக நேரம் செல்ல, கிருதி ரத்னாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“என்ன கிருதி படிப்பு எல்லாம் எப்படிப் போகுது?” என்று ரத்னா கேட்க,

“அது, அது பாட்டுக்குப் போகுதுக்கா…” என்றாள் கிருதி.

“நாம பேசியே ரொம்ப நாள் ஆகுது. முன்னாடி எல்லாம் அடிக்கடி பேசுவ. இப்போ எல்லாம் சரியா போன் பண்றது இல்லையே கிருதி, ஏன்?” என்று விசாரித்தாள்.

“காலேஜ் போறது, வந்து படிக்கிறதுன்னு நேரம் சரியா இருக்கு ரத்னாக்கா. அதான்…” என்று சமாளித்தாள் கிருதிலயா.

கிருதிலயா வேண்டுமென்றே தான் ரத்னாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டிருந்தாள்.

இப்போதெல்லாம் சந்துருவிடம் பேசுவதும், தான் செய்ய ஆசைப்பட்டதைச் செய்து கொண்டே வருவதும் தான் அதற்குக் காரணமாக இருந்தது.

ரத்னாவிடம் சகஜமாகப் பேசுவாள் என்பதால் டான்ஸ் ஆடிய வீடியோ பற்றிச் சொல்லி, அதில் வந்த கருத்துக்களைப் பார்த்து ரத்னாவிடம் வருத்தப்பட்டுப் புலம்பியது போல், இப்போது தான் சிகரெட், மதுவை முயற்சி செய்து பார்த்ததை ஒருவேளை தானே அவளிடம் உளறி அது செழியன் காதிற்கு வந்தால் என்னாவது என்ற பயமே ரத்னாவிடம் இருந்து அவளைச் சிறிது ஒதுங்க வைத்தது.

அதையும் விட முக்கியமாகச் செழியன் மேல் அவள் கொண்டுள்ள மையல் ரத்னாவிற்குத் தெரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கப் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள்.

இப்போதும் சிறிது நேரம் மட்டும் பேசிக்கொண்டிருந்து விட்டு, பெண் வீட்டின் சார்பில் வந்திருந்த தன் தோழியிடம் பேசிக் கொண்டிருந்த பவானியின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

பவானியுடன் நின்று கொண்டிருந்தாலும் அவளின் கண்கள் செழியன் இருந்த பக்கமே சென்று வந்த வண்ணம் இருந்தன.

செழியனும், ரத்னாவும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அதற்கு அடுத்த வரிசையில் ஆனந்த் அமர்ந்திருந்தான்.

அவன் வந்ததில் இருந்து அதிகம் பேசாமல் இருந்தது உறுத்தியது. அவனின் அருகில் ஒரு இருக்கை காலியாக இருக்க அங்கே சென்று அமர்ந்தாள்.

“என்ன மிஸ்டர் ஆனந்த் ரொம்பச் சைலண்ட்டா இங்கே வந்து உட்கார்ந்துட்டீங்க. உங்க ஃப்ரண்ட்ஸ் முன்னாடி இருக்காங்க. அவங்க கூட உட்காரலையா?” என்று கேட்டாள்.

“பிரண்ட்ஸ் பக்கத்தில் என்றால் போய் உட்காரலாம். ஆனா லவ்வர்ஸ் பக்கத்தில் போய் எப்படி உட்கார முடியும்?” என்று முன்னால் அமர்ந்திருந்த செழியன், ரத்னாவைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

“வாட்! லவ்வர்ஸா? யாரைச் சொல்றீங்க?” என்று அதிர்வுடன் கேட்டாள் கிருதிலயா.

“உன் மாமனும், ரத்னாவும் தான்…” என்றான்.

“எ…என்ன?” என்று இன்னும் அதிர்ச்சியாகக் கேட்டாள்.

அவளால் காதில் விழுந்ததை நம்பவே முடியவில்லை.

அதிர்வில் அவளுக்கு அனைத்தும் ஆட்டம் கண்டது போல் இருந்தது.

“நீங்க… நீங்க நிஜமாத்தான் சொல்றீங்களா ஆனந்த்?” என்று இன்னும் நம்பமுடியாமல் கேட்டாள்.

“அவங்க இரண்டு பேரும் லவ் சொல்லிக்கிட்டதை என் காதால் கேட்டுக் கண்ணால் பார்த்தேன். ஆமா, நீ எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி ஆகுற?” அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்த ஆனந்த் அவளின் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்து கிருதியின் புறம் திரும்பினான்.

விழிகள் விரிய இப்போது செழியனையும், ரத்னாவையும் வெறித்த வண்ணம் இருந்த கிருதிலயாவை யோசனையுடன் பார்த்தான் ஆனந்த்.

“கிருதி…”

“ஹேய் கிருதி…”

“கிருதிதிதி… என்னாச்சு?” என்று மீண்டும் மீண்டும் ஆனந்த் அழைத்தும் அவள் அப்படியே உறைந்த வண்ணம் அமர்ந்திருக்க, அவளின் கையை மெதுவாகப் பிடித்து அழுத்திக் கேட்டான்.

“ஹா…” என்று கனவில் இருந்து விழித்தது போல் முழித்தவள், “நி…நிஜமாவா?” என்று கேட்டாள்.

“நிஜம் தான் கிருதி. அவங்க லவ் பண்றாங்க. அது மட்டும் இல்லை. வெளியூர் போய்ட்டு வர்ற வேலை முடிஞ்சதும் வீட்டில் பேசிக் கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்க போறாங்க…” என்று ஆனந்த் மேலும் விவரம் சொல்ல, கிருதி விக்கித்துப் போனாள்.

ஆனந்த் சொன்னதுடன் அன்று செழியன் ரத்னாவுடன் போனில் பேசியதும் ஞாபகத்தில் வர, அதிலேயே ஆனந்த் சொன்னது உண்மை என்று உறுதியாக உடைந்து போனாள் கிருதிலயா.

“ஹேய் கிருதி… என்ன, உன் முகம் ஏன் இப்படி இருக்கு. அவங்க லவ் செய்தால் நீ ஏன் ஷாக் ஆகுற?” என்று அவளின் வேர்த்து வடிந்த முகத்தைப் பார்த்துக் கேட்டான் ஆனந்த்.

அவனின் கேள்வியில் சட்டென்று ஒன்று ஞாபகம் வர, “நீங்க ரத்னாக்காவை விரும்பினீங்க தானே? அப்போ உங்க காதல்?” என்று பரபரப்பாகக் கேட்டாள்.

அவன் ரத்னாவை காதலித்தால், அப்போ செழியன் அவளுக்குத் தானே என்ற எண்ணம் அவளுக்கு.

“அதைப் பத்தி உனக்கு நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் கிருதி. ரத்னாவுக்கும், எனக்கும் செட்டே ஆகாது. அங்கே பார் செழியனும், ரத்னாவும் தான் மேட் பார் ஈச் அதர் போல இருக்காங்க. அவங்க சேர்வது தான் நியாயம்…” என்றான் ஆனந்த்.

“செட் ஆகும் ஆகாது எல்லாம் அப்புறம். எனக்கு இப்போ தெரிய வேண்டியது ஒன்னே ஒன்னு தான் நீங்க ரத்னாவை லவ் பண்றீங்களா, இல்லையா?” என்று கேட்டாள்.

ஆனந்த் சற்றும் யோசிக்காமல் ‘இல்லை’ என்று தலையசைக்க, ஏமாற்றத்துடன் அவனைப் பார்த்தாள்.

“அதெல்லாம் இருக்கட்டும். நீ ஏன் இப்படிப் பிகேவ் பண்ற? எதுக்கு இவ்வளவு டென்சன் ஆகுற?” என்று கிருதியை ஆராய்ந்த வண்ணம் கேட்டான்.

அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

நேராகப் பவானியிடம் சென்றவள், “அத்தை, நாம வீட்டுக்குப் போகலாம்…” என்றாள்.

“வீட்டுக்கா? என்னாச்சு கிருதி? இன்னும் நாம கிஃப்ட் கூடக் கொடுக்கலையே…” என்றார்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போ நாம வீட்டுக்குப் போயே ஆகும்…” என்று அடம் பிடித்தாள்.

“இதென்ன பிடிவாதம் கிருதி? நீயும் ஆசைப்பட்டுத் தானே இங்கே வந்தோம். இப்போ இப்படிப் பிடிவாதம் பிடிச்சா என்ன அர்த்தம்? செழியன் எங்கே? இரு, அவனைக் கூப்பிடுறேன்…”

“உங்க பிள்ளையை ஒன்னும் கூப்பிட வேண்டாம். அவர் பிஸியா இருக்கார். நாம போவோம், வாங்க…” என்று அவரின் கையைப் பிடித்து அழைத்தாள்.

“விளையாடாதே கிருதி! அவன் ஃப்ரண்டு கல்யாண ரிசப்ஷன்னு கூட்டிட்டு வந்திருக்கான். இந்த நேரத்தில் பாதியிலேயே போனா அவனுக்குத்தான் அசிங்கம். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. கிஃப்ட் கொடுத்துட்டுக் கிளம்பலாம்…” என்று அவளை அதட்டியவர், மகன் எங்கே என்று பார்வையால் துழாவினார்.

செழியன் பார்வைக்குக் கிடைத்ததும் கிருதியின் கையைப் பிடித்தபடி அவனின் பக்கம் நடந்தார்.

“அத்தை, என்னால அங்கே எல்லாம் வரமுடியாது. நீங்க வேணா உங்க மகன் கூட வாங்க. நான் வீட்டுக்குப் போறேன்…” என்று அவரின் கையை விடுவித்துக் கொண்டு வேகமாக மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.

அவள் அப்படிச் செய்வாள் என்று எதிர்பார்க்காத பவானி சில நொடிகள் அதிர்ந்து நின்றுவிட, அதற்குள் அன்னையின் அருகில் வந்திருந்தான் செழியன்.

“கிருதி அவ்வளவு வேகமாக எங்கம்மா போறாள்?”

“வீட்டுக்குப் போறாளாம்…”

“என்ன வீட்டுக்கா? ஏன் என்னாச்சு?” குழப்பத்துடன் கேட்டான்.

“என்னாச்சுன்னு தான் தெரியலை. இவ எந்த நேரத்தில் எப்படி நடந்துக்குவாள்னு ஒன்னும் புரியலை…” என்றார் புலம்பலாக.

“இருங்கமா, நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன்…” என்று வேகமாக வெளியே சென்று பார்க்க, கிருதிலயா அங்கே இல்லை. அதற்குள் ஆட்டோ பிடித்துச் சென்றுவிட்டிருந்தாள்.

மீண்டும் உள்ளே வந்தவன், “நாமளும் கிஃப்ட்டை மட்டும் கொடுத்துட்டுக் கிளம்பிடுவோம்மா. போன் போட்டால் போனையும் எடுக்க மாட்டேங்கிறாள்…” என்று எரிச்சலுடன் சொன்னவன், அன்னையுடன் மேடையேறி மணமக்களை வாழ்த்தி பரிசை கொடுத்துவிட்டு இறங்கினான்.

அப்போது ரத்னா அருகில் வர, “நான் அப்புறம் உன்கிட்ட பேசுறேன் ரத்னா. நீ ஆனந்த் கூடக் கிளம்பிப் போய்டு. நான் இப்போ அவசரமா கிளம்பணும்…” என்று அவள் பேச இடம் கொடுக்காமல் படபடவென்று சொல்லிவிட்டு அன்னையை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

செழியனும், பவானியும் வீட்டிற்குச் சென்ற போது வீடே இருட்டாக இருந்தது.

கிருதி வீடு வந்துவிட்டதற்கு அடையாளமாக அவளின் செருப்பு வாசலில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறந்து கிடந்தது.

விளக்கை போட்டுவிட்டு அவள் எங்கே என்று தேட, மாடியில் அவள் அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

“கிருதி… ஏய் கிருதி… கீழே இறங்கி வா…” என்று கோபமாக அழைத்தான்.

அவள் வருவாள் என்று காத்திருக்க, அவள் வருவது போலவே தெரியவில்லை.

அதில் செழியனுக்கு இன்னும் கோபம் வர, “இவளை…” என்று பல்லைக் கடித்தபடி படபடவென்று படிகளில் ஏறினான்.

சாற்றியிருந்த அவளின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் அப்படியே அதிர்ந்து நின்றான்.

அந்த அறையே அலங்கோலமாக இருந்தது. அறையில் இருந்த அலங்காரப் பொருட்கள், புத்தகங்கள், அவள், பவானி, செழியன் மூவரும் இருக்கும் புகைப்படம்… என அனைத்தையும் தூக்கிப் போட்டு உடைத்திருந்து விட்டுக் கட்டிலில் குப்புறப்படுத்துக் கிடந்தாள் கிருதிலயா.

அறை இருந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்தவன் “கிருதி, என்ன இதெல்லாம்? எதுக்கு இப்படிச் செய்து வச்சுருக்க?” என்று கேட்டான்.

அவனின் குரல் கேட்டதும் படுக்கையில் இருந்து துள்ளி எழுந்த கிருதி, “உனக்கு என்னை எல்லாம் பார்த்தால் பொண்ணா தெரியலையா மாமா?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.

“என்ன கேள்வி இது? இப்ப நீ பொண்ணு இல்லைன்னு யார் சொன்னா? முதலில் உனக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு. எதுக்குப் பங்ஷன்ல இருந்து ஓடிவந்த? அறையை எதுக்கு இப்படிப் போட்டு வச்சுருக்க?” என்று கேட்டான்.

“முதலில் நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு. அதுலயே உன் இந்தக் கேள்விக்கு எல்லாம் பதில் கிடைக்கும்…” என்றாள்.

“நீ பொண்ணுன்னு எனக்குத் தெரியாதா? இது ஒரு கேள்வின்னு கேட்டுட்டு இருக்க…”

“உனக்குத் தான் தெரியலையே… என்னைப் பார்த்தால் பொண்ணா தெரியாததுனால் தானே என்னை விட்டுட்டு அந்த ரத்னா பின்னாடி சுத்திட்டு இருக்க. அப்படி என்கிட்ட இல்லாதது அவள் கிட்ட என்ன இருக்கு?

இங்கே ஒருத்தி உன் பக்கத்துலேயே உன்னையே நினைச்சுட்டு உன்னை மட்டுமே சுத்தி வந்துட்டு இருக்குற என்னை விட்டுட்டு நீ எப்படி அந்த ரத்னா பின்னாடி சுத்தலாம்?” என்று ஆங்காரமாகக் கேட்டுத் தலையணையைத் தூக்கி அவனின் முகத்தின் மீதே எறிந்தாள்.

முகத்தில் வந்து விழுந்த தலையணையைக் கூட உணராது உறைந்து போய் நின்றிருந்தான் செழியன்.

“சொல்லு மாமா, ஏன் உன் கண்ணுக்கு நான் பொண்ணா தெரியலை?” என்று கேட்டுக் கொண்டே அவனின் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

“ஏய் கிறுக்கி… உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? யார்கிட்ட என்ன பேசுறோம்னு புரிஞ்சு தான் பேசுறீயா?” என்று தன் சட்டையில் இருந்த அவளின் கையை எடுத்துவிட்டு அவளைத் தன்னை விட்டுத் தள்ளி நிறுத்திக் கோபமாகக் கேட்டான் செழியன்.

“எனக்கு ஒன்னும் கிறுக்கு இல்லை. நீ தான் அந்த ரத்னா கிறுக்குப் பிடிச்சுப் போய்ச் சுத்துற. நீ எப்படி என்னைக் காதலிக்காம அவளைக் காதலிக்கலாம்?” என்று ஆங்காரமாகக் கேட்டாள்.

“திரும்பத் திரும்ப லூசு போல உளறாதே கிருதி. நீ சின்னப் பொண்ணு…” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே,

“நீ இன்னொரு முறை என்னைச் சின்னப் பொண்ணுன்னு சொல்லாதே!” என்று கத்தியவள்,

“எனக்கும் இருபது வயசு ஆச்சு. பக்கா பொண்ணு போலச் செழிப்பா வளர்ந்து தான் நிக்கிறேன். நல்லா கண்ணைத் திறந்து என்னைப் பாரு…” என்று சொல்லிக் கொண்டே தன் உடலை இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாகத் திருப்பிக் காட்டினாள்.

“ச்சீ…” என்று முகத்தைச் சுளித்தான் செழியன்.

“அசிங்கமா பேசாதே கிருதி! நீ நான் வளர்த்த பொண்ணு. உன்னை என்னோட மாமன் மகளா பார்க்காம, நீ இந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்து எனக்குக் கிடைச்ச குட்டித் தங்கையாகத்தான் பார்த்தேன்.

என் குட்டி தங்கை கூட விளையாடுவது போலத் தான் உன்கிட்ட உரிமையா விளையாண்டேன். உன்னை உரிமையா கண்டிச்சேன்னா அதுவும் எனக்கு ஒரு தங்கை இருந்தால் எப்படிக் கண்டிப்பேனோ அப்படித்தான் கிருதிமா…” கோபமாக ஆரம்பித்தவன் மென்மையாகச் சொல்லி முடித்து அவளை வாஞ்சையுடன் பார்த்தான்.

“நோ… அப்படிச் சொல்லாதே! நான் உன் தங்கச்சி இல்லை. மாமா மகளை நீ எப்படித் தங்கச்சியா நினைக்கலாம்? நான் உன்னை மாமான்னு தானே கூப்பிட்டேன். அண்ணான்னா கூப்பிட்டேன்?

அப்புறம் எப்படி நீ என்னைத் தங்கையா நினைச்ச? ஒருவேளை நான் அத்தான்னு கூப்பிட்டு இருந்தா நீ என்னைத் தங்கச்சியா நினைச்சுருக்க மாட்ட தானே? எல்லாம் என்னோட முட்டாள் தனம்.

அத்தான்னு கூப்பிட ரொம்பப் பழங்காலம் போல இருக்குன்னு உன்னை மாமான்னு தான் கூப்பிடுவேன்னு உன்கிட்ட சின்ன வயசில் அடம்பிடிச்சு கூப்பிட்டேன்ல… அது என்னோட தப்புதான். ஆனா இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை.

இப்பயும் நீ எனக்கு அத்தான் தானே. இனி நான் உன்னை அத்தான்னே கூப்பிடுறேன். அந்த ரத்னாவை விட்டுடு. என்னை லவ் பண்ணு…” என்று வெறி வந்தவள் போலக் கத்தினாள் கிருதிலயா.

சாதாரணச் சின்னச் சின்ன ஆசையில் இருந்து மது அருந்தும் ஆசை வரை செய்ய வேண்டும் என்று நினைத்தால் செய்து முடித்துவிடும் கிருதிலயாவிற்குத் தன் காதல் நிறைவேறாது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

முகம் சிவக்க, கண்களில் ஏமாற்றம் சூழ, ஆனால் அதையும் விட ஆத்திரமும், கோபமும் பெருக, கனல் போலத் தகித்த படி நின்றிருந்தாள் கிருதிலயா.

“அப்படியே அடிச்சிருவேன் கிருதி. நீ அத்தான்னு கூப்பிட்டாலும், மாமான்னு கூப்பிட்டாலும் நீ நான் வளர்த்த குட்டிப்பொண்ணு தான். எனக்குத் தங்கச்சி போலத் தான்.

முறை எப்படி இருந்தாலும் மனசில் உன்னை நான் தங்கச்சியா நினைச்சது மாறாது. ஏதாவது லூசு போல உளறாம பேசாம படுத்து தூங்கு. தூங்கி எழுந்தாலே நான் சொன்னது உனக்குப் புரியும்…” என்று பொறுமையாக அவளுக்குப் புரியவைக்க முயன்றான் செழியன்.

சொன்னதையே சொல்கிறானே என்ற கோபத்தில் அவனை முறைத்தவள் அவனைத் தாண்டி வெளியே ஓடினாள்.

அங்கே அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டு விக்கித்து நின்றிருந்தார் பவானி.

அவரின் தோளில் சென்று சாய்ந்தவள், “உங்க மகன் எப்படிப் பேசுறார்னு பாருங்க அத்தை. நீங்க எனக்கு அத்தைனா, அவர் எனக்கு மாமா… இல்லை… இல்லை அத்தான் தானே? அப்படி இருக்கும் போது நான் எப்படித் தங்கச்சியாவேன்? உங்க மகனுக்குச் சொல்லிப் புரிய வைங்க அத்தை…” என்று சொல்லிக் கண்கலங்கினாள்.

அன்னையைப் பரிதாபமாகப் பார்த்த செழியன், “அவளுக்குப் புரிய வைங்கமா. இந்த வயசில் இனக்கவர்ச்சி தான் வரும். கண்ணு முன்னாடி வாட்டசாட்டமா ஒரு வயசு பையனை பார்க்கும் போது வரும் தடுமாற்றம் தான் இது. அதுக்குப் பேரு காதல் இல்லைனு சொல்லிப் புரிய வைங்கமா…” என்றான்.

அதில் அவரின் தோளில் இருந்து வெகுண்டு எழுந்த கிருதி, வேகமாக அவளின் அலமாரியின் அருகில் சென்று, பரபரவென்று எதையோ தேடி எடுத்தவள், செழியனின் முன் அதைத் தூக்கிப் போட்டாள்.

“பாரு… இதை நல்லா பாரு மாமா… இல்லை அத்தான். இது எல்லாம் நீ என் மனசில் இருக்கன்னு தெரிஞ்ச நாளில் இருந்து சேர்த்து வைக்கிறேன். உன் மேல காதல் இல்லாமயா இப்படி எல்லாம் செய்வேன்? உன் மேல எனக்கு இருக்குறது இனக்கவர்ச்சி ஒன்னும் இல்லை. காதல்! இதைப் பார்த்தாவது உங்க பிள்ளையை நம்பச் சொல்லுங்க அத்தை…” என்றாள்.

தான் வளர்த்த பிள்ளையும், தான் பெற்ற பிள்ளையும் இதைப் போலக் காதல் பற்றியெல்லாம் பேசி சண்டை இட்டுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்காத பவானி வாயடைத்துப் போய் இருக்க, செழியன் கிருதி தூக்கிப் போட்ட பொருட்களை எல்லாம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் ஒரு சட்டை, பேனா, அவன் அறையில் கண்ணாடி பிரேம் உடைந்ததால் தனியாகப் போட்டு வைத்திருந்த அவனின் புகைப்படம், அலுவலக வேலையாக ஏதோ யோசித்தபடி எழுதி போட்ட பேப்பர், ஒரு பத்து ரூபாய் தாள், அவனின் சீப்பு, உபயோகப்படுத்த முடியாமல் போன கைக்கடிகாரம் என்று மட்டுமில்லாமல் அவனின் இன்னும் சில சின்னச் சின்னப் பொருட்களைக் கிருதி சேகரித்து வைத்திருந்ததை நம்ப முடியாமல் பார்த்தான்.

அதில் சில பொருட்கள் அவன் தேடி கிடைக்காமல் அவளிடம் ‘பார்த்தாயா?’ என்று கேட்ட போது ‘உன் பொருளை நான் ஏன் பார்க்கப் போறேன்?’ என்று அவள் அலட்சியமாகச் சொல்லிவிட்டுச் சென்றது ஞாபகத்தில் வந்தது.

அவளுக்குப் பொறுமையாகப் புரிய வைத்து விடலாம் என்று நினைத்தவனுக்குப் பொறுமை போய் விடும் போல் இருந்தது.

“அடுத்தவங்க பொருளை இப்படி எடுத்து வச்சுக்கிட்டால் அதுக்குப் பேரு காதல் இல்லை கிருதி. திருட்டு!” என்றான் கடுமையாக.

“மாமா…” என்று கோபமாகக் கத்தினாள் கிருதிலயா.

“கத்தாதே கிருதி! காதலை இப்படிக் கத்துவதாலயோ, அவங்க பொருளை எடுத்து வச்சுக்கிறதாலயோ நிரூபிக்க முடியாது. இப்படிப் பொருளை எடுத்து வச்சுக்கிறது எல்லாம் பக்கா சின்னப்பிள்ளைதனம்.

உண்மையான காதல் இதோ இங்கே மனதில் இருந்து வரும், வரணும்! மனசு அடுத்தவங்களுக்கு உணர வைக்கணும். அதுதான் உண்மையான காதல்!” என்று தன் நெஞ்சில் கைவைத்துச் சொன்னவன், “இது சினிமா, ட்ராமா தனமா இருக்கு…” என்று தன் பொருட்களைச் சுட்டிக் காட்டிச் சொன்னான்.

“அப்போ என்னை நீ நம்பவே மாட்டியா மாமா… இல்லை… அத்தான். இந்தப் பொருள் எல்லாம் உன் ஞாபகத்துக்குத் தான் எடுத்தேன். ஆனா என் மனசில் நீ தான் இருக்க…” என்று விடாமல் வாதிட்டாள் கிருதிலயா.

“ச்சே…” என்று சலித்த செழியன், “அம்மா இவளுக்குச் சொல்லி எல்லாம் புரிய வைக்க முடியாது. இவளை இப்படியே விடுங்க. நைட் நல்லா தூங்கி எழுந்தால் தான் இப்போ நான் சொன்னதை எல்லாம் கொஞ்சமாவது யோசித்துப் பார்ப்பாள். வாங்க, நாம போகலாம்…” என்று அன்னையையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான் செழியன்.

செல்லும் அவர்களையே வெறித்துப் பார்த்து, “புரிய வேண்டியது எனக்கு இல்ல மாமா… ஹா.. அத்தான். உனக்குத்தான்! கூடிய சீக்கிரமே புரிய வைக்கிறேன்…” என்று சொல்லிச் சபதமிட்டுக் கொண்டாள் கிருதிலயா.