மனம் கொய்த மாயவனே – 18

அத்தியாயம் – 18

“இறங்கு ரத்னா…” என்று செழியன் சொல்ல, அவனின் வண்டியின் பின் அமர்ந்து வந்த ரத்னா கீழே இறங்கினாள்.

“நீ உள்ளே போ. நான் வண்டியைப் பார்க் பண்ணிட்டு வர்றேன்…”

“இல்லை செழிப்பானவனே. நாம இரண்டு பேரும் சேர்ந்தே உள்ளே போவோம்…” என்று அங்கேயே ஓரமாக நின்று கொண்டாள் ரத்னா.

“எப்ப பார்த்தாலும் பிடிவாதம்…” வண்டியை நிறுத்தி விட்டு வந்தவன் செல்லமாக அவளின் தலையில் தட்டினான்.

“உன்கிட்ட பிடிவாதம் பிடிக்காம நான் வேற யார்கிட்ட பிடிவாதம் பிடிக்க முடியும் செழிப்பானவனே?” என்று கொஞ்சலாகக் கேட்டவள் அவனின் முழங்கையுடன் தன் கையைக் கோர்த்துக் கொண்டு நடந்தாள் ரத்னா.

முன்பு எப்போதும் அவள் அப்படிப் பிடித்துக் கொண்டு வந்தால் அவளின் கையை விலக்கி விடும் செழியன் இப்போது அவளுடன் இயல்பாகக் கைக்கோர்த்து நடந்தான்.

முதலில் ரத்னாவின் டேபிள் வர, “போய் வேலையை ஆரம்பி ரத்னா. லன்ட்ச் டைம்ல திரும்ப மீட் பண்ணலாம்…” என்றான் செழியன்.

“நீ அநியாயம் பண்ற செழிப்பானவனே. உன்கிட்ட என் காதலை சொன்னதில் இருந்து உன் டேபிள் பக்கமே என்னை வர விட மாட்டீங்கிற. ஏன் நான் உன் டேபிளுக்கு வந்தால் என்னவாம்?” என்று கெஞ்சியும், கொஞ்சியும் கேட்டாள்.

“நீ என் டேபிளுக்கு வந்தா எனக்கு வேலையே ஓட மாட்டேங்குது ரத்னா. காதல் எல்லாம் ஆபிஸுக்கு வெளியில் தான். ஆபிஸ்ல அடக்கியே வாசிப்போம். இப்போ வேலையைப் பார்ப்போம்…” என்றவன் தன் மேஜையை நோக்கி நடந்தான்.

“ஹேய் ஆனந்தமானவனே… என்ன அங்கேயே நின்னுட்ட? நீயும் இப்பத்தான் ஆபிஸ் வந்தியா?” என்று செழியனும், ரத்னாவும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களின் அருகில் வராமல் தள்ளி நின்றிருந்த ஆனந்தை அழைத்தாள் ரத்னா.

“இப்போ தான் வந்தேன் ரத்னா. நீ கூட இப்பத்தான் வந்த போல இருக்கு. அதுவும் செழியன் கூட வண்டியில்?” என்று கேட்டான் ஆனந்த்.

“ஆமா ஆனந்தமானவனே. இன்னைக்கு மட்டுமில்ல. இனி எப்பவும் அவன் தான் என்னை வண்டியில் கூட்டிட்டு வருவான். லவ்வரை வண்டியில் கூட்டிட்டு வர்றது தானே ஒரு காதலன்னுக்கு முதல் வேலை. அவன் வேலையை அவன் சரியா செய்யலைனாலும் நான் செய்ய வச்சுருவேன்ல. நான் யாரு?” என்று பெருமையாகத் தான் அணிந்திருந்த சுடிதாரில் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

“ஆமா நீ யாரு?” என்று ஆனந்த் நக்கலாகச் சொல்ல,

“ஓய், ஆனந்தமானவனே… என்ன நக்கலா?” என்று எகிறிக் கொண்டு கேட்டாள்.

“நக்கலு தான்னு சொன்னால் என்ன செய்றதா உத்தேசம்?” என்று திருப்பிக் கேட்டான்.

“நான் என்ன செய்யப் போறேன்? ஒன்னுமில்லையே! சரி… சரி… எனக்கு நேரமாச்சு. நான் இடத்தைக் காலிப் பண்றேன். நான் இன்னும் வெட்டி அரட்டை அடிச்சுட்டு இருந்தால் செழியன் என்னைத் திட்டுவான்…” என்று அங்கிருந்து சிட்டாகப் பறந்தாள்.

வழக்கமாக ரத்னாவை யோசனையுடன் பார்க்கும் ஆனந்தின் முகத்தில் இப்போது எந்த மாற்றமும் இல்லை. அலட்சியமாகத் தோளைக் குலுக்கி விட்டவன் தன் வேலையைப் பார்க்க சென்றான்.


“ட்ரிங்க்ஸ் என்னைக்கு ஏற்பாடு பண்ணட்டும் கிருதி?” என்று கேட்டான் சந்துரு.

“அடுத்த வாரம் காலேஜ் டூர் போறப்ப அதைப் பார்ப்போமே சந்துரு?”

“காலேஜ் டூர் போறப்ப உனக்கு வேற புது ஐட்டம் அறிமுகப்படுத்துறேன் கிருதி. அதுக்கு முன்னாடியே ட்ரிங்க்ஸ் முடிச்சுடுவோம்…” என்றான் கண்கள் பளபளக்க.

“புது ஐட்டமா? அப்படி என்ன ஐட்டம் சந்துரு. உயர் ரக ட்ரிங்க்ஸா?”

“நோ… நோ… இந்த ஐட்டமே வேற. அது என்னென்னனு அப்புறம் சொல்றேன். இப்ப முதலில் ட்ரிங்க்ஸ் குடிக்க டேட் பிக்ஸ் பண்ணுவோம்…” என்றான்.

“வர்ற வெள்ளிக்கிழமை நான் வீட்டில் லேட்டாகும்னு சொல்லிட்டு வந்துடுறேன். அன்னைக்கே ஏற்பாடு பண்ணுங்க சந்துரு. ஆனா என்னால ரொம்ப நேரம் இருக்க முடியாது. அதுக்குத் தகுந்த மாதிரி ஏற்பாடு பண்ணுங்க…” என்றாள்.

“ஓகே கிருதி. பக்காவா ஏற்பாடு பண்ணிட்டு உனக்கு இன்பார்ம் பண்றேன்…” என்று சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றான் சந்துரு.

பின் விளைவுகளைப் பற்றிச் சிறிதும் யோசிக்காமல் சட்சட்டென்று முடிவெடுத்தாள் கிருதிலயா.

அவளுக்கு அப்போது நினைவில் இருந்தது எல்லாம் சந்துரு மூலமாகத் தான் ஒரு முறை செய்ய ஆசைப்பட்ட விஷயங்களைச் செய்து பார்த்து விடும் ஆர்வம் மட்டுமே.

அதைத் தாண்டி அதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி நினைத்துப் பார்க்க கூட மறந்து போனாள்.

அவளின் பருவ வயதும், ஆர்வக்கோளாறினால் உண்டான துடுக்குத்தனமும் வேறு எதையும் யோசிக்க விடவும் இல்லை.

‘சிகரெட்டை ஒரு முறை முயற்சி செய்து பார்த்துவிட்டு அதை விட்டுவிட்டது போல மற்றதையும் முயற்சி செய்து பார்க்க போகின்றேன் அவ்வளவே’ என்கிற அசட்டு எண்ணம் மட்டுமே அவளுக்கு இருந்தது.

சந்துருவுடன் பேசிவிட்டுக் கிருதிலயா வீட்டிற்குச் சென்ற போது அப்போது செழியனும் வீட்டில் தான் இருந்தான்.

“சரி இம்சை. போகலாம், இத்தோட இந்தப் பேச்சை விடு…” என்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கிருதி, “யாரு மாமா அந்த இம்சை?” என்று கேட்டாள்.

‘இரு பேசி முடிச்சுக்கிறேன்’ என்று இவளுக்கு ஜாடைக் காட்டியவன், “ம்ம் சரி. அடுத்த வாரம் நான் வெளியூர் போக வேண்டியது இருக்கும். போயிட்டு வந்து மீதியைப் பார்த்துக்கலாம். அதுவரை கொஞ்சம் அடக்கியே வாசி. நான் ஊருக்குப் போயிட்டு வந்த பிறகு வீட்டில் பேசலாம். கவலைப்படாதே! எல்லாம் நல்லபடியா நடக்கும். ஓகே, அப்புறம் பேசலாம். பை…” என்று பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

“யார்கிட்ட மாமா பேசின?” என்று கிருதி மீண்டும் கேட்க,

“ரத்னாகிட்ட தான்…” என்றான்.

“நீ ஊருக்குப் போறீயா மாமா? அதென்ன வீட்டில் பேசலாம்? வீட்டில் என்ன பேச போறீங்க?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

“ஆமா, அடுத்த வாரம் வேலை விஷயமா வெளியூர் போறேன். வீட்டில் பேசப் போவது வேற விஷயம். அது உனக்குத் தேவையில்லை கிறுக்கி…” என்று அவளின் தலையில் தட்டியவன், “ஆமா, நீ என்ன இன்னைக்கு இவ்வளவு லேட்டா காலேஜில் இருந்து வந்திருக்க, ஏன்?” என்று கேட்டான்.

“இதுவும் தேவையில்லாத கேள்விதான் மாமா. நான் மட்டும் ஏன் உன்கிட்ட சொல்லணும்?” என்று கேட்டாள்.

“ஓகோ, பதிலுக்குப் பதிலா? நான் பெரியவன் உன்கிட்ட என்ன விஷயம் சொல்லணும், என்ன விஷயம் சொல்லக் கூடாதுன்னு எனக்குத் தெரியும். ஏட்டிக்குப் போட்டி பேசாம ஏன் லேட்டுன்னு சொல்லு…” என்று அதட்டினான்.

“பிரண்ட்ஸ் கூடக் காலேஜ் கிரவுண்ட்ல நின்னு பேசிட்டு வர்றேன். போதுமா? ச்சை, எப்போ பார் விசாரணை” என்று சலித்துக் கொண்டாள்.

“ஓவரா பேசாதே! உன் மேல இருக்குற அக்கறையில் தானே கேட்குறேன்” என்றான் மென்மையாக.

‘க்கும், உன் அக்கறையில் நான் சக்கரையா கரைஞ்சுட்டேன் போ. உன்னை எல்லாம் கட்டிக்கிட்டு நான் என்ன பாடுபடப் போறேனோ?’ என்று அவனுக்குக் கேட்காமல் அவளுக்குள்ளேயே முனங்கிக் கொண்டாள்.

“என்ன கிறுக்கி வாய்க்குள்ளயே முனங்குற?” என்று கேட்டான்.

“ம்ம்… உன்னைத் திட்டினேன்” எனச் சொன்னவள் பல்லை ‘ஈ’ என்று இளித்துக் காட்டினாள்.

“வர வர நீ சரியே இல்ல கிறுக்கி. ஒரு மார்க்கமா தான் இருக்குற. இடக்குமடக்கா எதுவும் செய்றீயா என்ன?” என்று ஆராய்ச்சியாக அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

‘உன் மேல தான் கிறுக்குப் பிடிச்சுப் போய்க் கிடக்கிறேன். ஆனா அதை இப்போதைக்கு உனக்குத் தெரிய விட மாட்டேனே. தெரிஞ்சா நீ சும்மா இருப்பியா என்ன? படிக்கிற வயசில் மனசை அலைபாய விடாதேன்னு அட்வைஸ் மழை பொலிவ.

காலேஜ் முடிக்கிற வரை நான் உன் மேல வச்சுருக்கிற காதலை காட்டிக் கொடுக்கவே மாட்டேன் மாமே…’ என்று மீண்டும் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள் வெளியே நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு, “நான் என்ன செய்யப் போறேன் மாமா? எப்போ பார்த்தாலும் என்னைச் சந்தேகமா பார்க்கிறதே உன் வேலையா போச்சு” என்றாள்.

“நீ தான் என்னை அப்படிப் பார்க்க வைக்கிற. நீ சேட்டை பண்ணாம இருந்தா நான் ஏன் அப்படிப் பார்க்க போறேன்? சரி, அதை விடு. நான் கொஞ்ச நாள் சரியா இங்கே இருக்க மாட்டேன். வெளியூர் போனா வேலை எப்ப முடியுமோ அப்பத்தான் வருவேன்.

நடுவில் முடிஞ்சா வந்து போவேன். அதனால் உன் வால்தனத்தை எல்லாம் சுருட்டி வச்சுக்கிட்டு இருக்கு. அம்மாவுக்கு ரொம்பத் தொந்தரவு கொடுக்காதே. நீ தான் அவங்களையும் பொறுப்பா பார்த்துக்கணும்” என்றான்.

“அதெல்லாம் என் அத்தையை நான் சரியா பார்த்துப்பேன். நீ ஒன்னும் எனக்குச் சொல்ல வேண்டாம்” என்றாள்.

“எதுக்கெடுத்தாலும் கோபமா பதில் சொல்லாதே கிருதி. ஆமா, நீ காலேஜ் டூர் வேற போகணும்ல, எப்போ போற?” என்று கேட்டான்.

“வர்ற வெள்ளி போய் அடுத்த வெள்ளி மாமா”

“ஓ, நான் புதன்கிழமை ஊருக்குப் போய்டுவேன். அப்போ அம்மா நீ வரும் வரை தனியா இருக்கணுமே” என்றான் யோசனையாக.

“அத்தைக்குப் பழக்கம் தானே மாமா. அதெல்லாம் இருந்துப்பாங்க. நானும் இரண்டு நாளில் வந்துடுவேனே. நீ கவலைப்படாம போய்ட்டு வா” என்றாள்.

“இப்போ தான் கிறுக்கி பொறுப்பா பேசுற” என்று அவளின் தலையில் கை வைத்து ஆட்டினான்.

“அதெல்லாம் நான் பொறுப்புத்தான். உனக்குத் தான் சேட்டைக்காரியா தெரியுறேன். ம்கூம்…” என்றாள் சலிப்பாக.

“கிருதி, செழியா… இரண்டு பேரும் பேசி முடிச்சாச்சுனா கை, கால் கழுவிட்டு வாங்க. ஸ்நாக்ஸ், காபி ரெடியா இருக்கு, சாப்பிடலாம்” என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார் பவானி.


வெள்ளிக்கிழமை.

மாலை ஏழு மணியளவில் அந்தப் பப்பிற்குள் நுழைந்தாள் கிருதிலயா.

அவளை எதிர் கொண்டு வரவேற்றான் சந்துரு.

“வா கிருதி… சொன்ன மாதிரி சரியான டைம்முக்கு வந்துட்டியே…”

“ஆமா சந்துரு, சரியா ஒரு மணிநேரத்துக்குள்ள கிளம்பிடுவேன். அதுக்கு மேலே இருந்தா வீட்டில் இருக்கிறவங்களுக்குப் பதில் சொல்ல முடியாது…” என்றாள்.

“வந்ததும் கிளம்புறதைப் பத்தி பேசணுமா கிருதி? அதான் ஒரு மணிநேரம் இருக்கே. இந்த ஒரு மணிநேரத்தில் வேற எதைப் பற்றியும் நினைக்காம வா…” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

“இதைப் பத்தி நீங்க யார்கிட்டயும் சொல்லலை தானே சந்துரு? மிருதுக்குக் கூடத் தெரியாது தானே?” என்று கேட்டாள்.

“நான் யார்க்கிட்டேயும் சொல்லலை. கவலைப்படாம வா…” என்றான்.

இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

தைரியமாக வந்துவிட்டாலும் அவ்வப்போது மின்னும் அலங்கார விளக்குகளும், பாதி இருள் சூழ்ந்த பகுதியும், ஒலித்துக் கொண்டிருந்த ஆங்கிலப் பாடல்களும், போதையில் மிதந்த விழிகளுமாக இருந்த சில பெண்களையும் பார்த்து மிரண்டு விழித்தாள்.

“பர்ஸ்ட் டைம் பப்க்கு வர்றீயா கிருதி?” என்று கேட்டான்.

“ம்ம், ஆமா…” என்று அவள் சுற்றிலும் பார்த்துக் கொண்டே சொல்ல,

“இவ்வளவு போல்டா இருக்க. ஆனா இதுவரைக்கும் இப்படி இடத்துக்கு எல்லாம் வந்தது இல்லைன்னு சொல்றியே?” என்று கேட்டான்.

“இப்போ தான் வர சந்தர்ப்பம் கிடைச்சது…” அவனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுச் சொன்னாள்.

“யெஸ், சந்தர்ப்பம் கிடைச்சா இந்த மாதிரி இடத்துக்கு வர்ற சான்ஸை விடவே கூடாது. திரும்பியும் வர விருப்பம் இருந்தால் சொல்லு. நான் கூட்டிட்டு வர்றேன்…” என்றான்.

“ஆசை வந்தால் சொல்றேன் சந்துரு. இப்போ எனக்கு நேரம் ஆகிட்டு இருக்கு…” என்றாள்.

“அடடா! அதே பல்லவியைப் பாடாதே கிருதி. எவ்வளவு அழகான பாட்டு பாடுது பார். அதைக் கேளு. இந்தப் பாட்டைக் கேட்டுக்கிட்டே அப்படியே டிரிங்க்ஸ் குடிச்சா எவ்வளவு சுகமா இருக்கும் தெரியுமா?”

“நீங்க அடிக்கடி ட்ரிங்க்ஸ் பண்ணுவீங்களா சந்துரு?”

“ச்சே ச்சே… இல்லை எப்பவாவது குடிக்கணும் போல இருந்தால் மட்டும் தான்…” என்றான்.

பேசிக் கொண்டே மதுபானத்தை வாங்கிக் கிருதிக்குக் கொடுத்தான். தானும் ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டவன், “குடி கிருதி… சியர்ஸ்…” என்று அவளின் டம்ளருடன் தன் டம்பளரை மெதுவாக மோதினான்.

அவளும் ‘சியர்ஸ்…’ என்றவள் தயக்கத்துடனே டம்ளரை உதட்டில் வைத்து மெதுவாக மதுவை உறிஞ்ச ஆரம்பித்தவள் அதன் சுவை பிடிக்காமல் முகத்தைச் சுளித்தாள்.

“அவ்வளவு தான் கிருதி…” என்று அவளை உற்சாகப்படுத்தி அந்த டம்ளரை முழுவதும் குடிக்க வைத்தான்.

அதை முடித்ததும் இன்னும் ஒரு டம்ளர் ஊற்றிக் கொடுத்தான்.

“இல்லை சந்துரு. ட்ரை பண்ணனும்னு நினைச்சேன் பண்ணிட்டேன். இனி வேண்டாம் கிளம்புறேன்…” என்றாள்.

“என்ன கிருதி, அவ்வளவுதானா?” என்று தன்னுடைய ஏமாற்றம் வெளியே தெரியாத வண்ணம் கேட்டான்.

“ஆமா சந்துரு. போதும்…” என்றவள் புதிதாக ஏறிய போதையின் காரணமாகத் தலையை அழுத்திப் பிடித்தாள்.

“சரி கிருதி. போய்ட்டு வா…” என்று வெளியே சென்று அவளை அனுப்பிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தான்.

“என்ன மச்சி, பட்சி அதுக்குள்ள பறந்து போய்ருச்சு?” என்று கேட்டுக் கொண்டே அதுவரை வேறு ஒரு இடத்தில் அமர்ந்திருந்த சந்துருவின் நண்பன் அவனின் எதிரே அமர்ந்த படியே கேட்டான்.

“சிக்குன பட்சியை அவ்வளவு சீக்கிரம் பறக்க விட்டுருவோமா என்ன? எங்க போய்ட போறாள்? டூர் போறப்ப பார்த்துப்போம் நம்ம சரக்கோட…” என்று கண் சிமிட்டிச் சொல்லிச் சிரித்தான் சந்துரு.

“சுப்பர் மச்சி. அப்படியே என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ…” என்று அவனின் நண்பனும் சிரிக்க ஆரம்பித்தான்.

இங்கே இவர்கள் போடும் திட்டம் பற்றி ஒன்றும் அறியாமல் தன்னுடைய இன்னொரு ஆசை நிறைவேறிய மிதப்பில் ஆட்டோவில் வீடு சென்று சேர்ந்தாள் கிருதிலயா.

நெருங்கிய தோழியின் பிறந்தநாள் என்றும், அவள் வீட்டிற்குச் சென்று கேக் வெட்டியதும் கிளம்பி வந்துவிடுவதாகச் சொல்லி, செழியனிடமும், புவனாவிடம் அன்று காலையிலேயே சம்மதம் வாங்கியிருந்தாள்.

அதே போல் அன்று செழியன் வீட்டுக்கு வரும் நேரத்தையும் எப்படியோ கேட்டு அறிந்து கொண்டவள், அவன் வீட்டிற்கு வருமுன் தன் அறைக்குச் சென்று விட வேண்டும் என்று விரைந்து வந்திருந்தாள்.

அவள் வீட்டிற்குள் நுழைந்ததும் பிறந்தநாள் விழாவைப் பற்றிப் புவனா விசாரிக்க, மது வாடை அவரை அண்டிவிடக் கூடாது என்று தன் அறைக்குச் செல்ல படியை நோக்கி நடந்து கொண்டே, “நல்லா நடந்தது அத்தை. என் பிரண்ட் வற்புறுத்தியதால் அங்கேயே சாப்பிட்டேன். எனக்குக் கொஞ்சம் தலைவலியா இருக்கு, நான் போய்ப் படுக்கிறேன். குட்நைட் அத்தை…” என்று படபடவென்று சொல்லிவிட்டு விரைந்து தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

‘என்ன இது இந்த ஓட்டம் ஓடுகிறாள்?’ என்று பவானி நினைத்தாலும் அவள் தலையைப் பிடித்துக் கொண்டே சென்றதில் ‘ரொம்ப வலி போல’ என்று நினைத்துக்கொண்டு விட்டுவிட்டார்.

அறைக்குள் சென்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

அவள் வந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்த செழியன் இரவு உணவை முடித்துவிட்டு அன்னையிடம் விசாரித்து விட்டுக் கிருதியைப் பற்றியும் விசாரிக்க, அவள் சொன்னது போல் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விட்டதாகவும் இப்போது தலைவலி வந்து படுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

“சரிமா, நான் பார்த்துக்கிறேன். நீங்க போய்த் தூங்குங்க…” என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு, மேலே அறைக்கு வந்த செழியன் கிருதி சாற்றி வைத்திருந்த கதவை மெதுவாகத் திறந்து பார்த்தான்.

படுக்கையில் படுத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளைப் பார்த்து விட்டு, மீண்டும் கதவை மூடிவிட்டுச் சென்றான்.

அவன் சென்ற மறுநிமிடம் அதுவரை தூங்குவதாகக் காட்டிக் கொண்டிருந்தவள் பட்டென்று விழிகளைத் திறந்து பார்த்து ‘தான் மாட்டாமல் தப்பிவிட்டதாக நினைத்து’ நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள் கிருதிலயா.