மனம் கொய்த மாயவனே – 17

அத்தியாயம் – 17

“என்ன வெற்றி காய்ச்சல் வந்ததும் கவுந்துட்டியா?” என்று கேட்டவளின் குரலில் நக்கல் இழைந்தோடியது.

“என்னடி நக்கலா? நீ இருக்குற வேகத்துக்குக் காதல் மட்டுமா வரும்? காலராவே வரும்…” என்று அவளையும் விட நக்கலா உதட்டை சுழித்துச் சொன்னான் வெற்றி.

“ஹா.. ஹா…” அவன் தன் மனதை வெளிக்காட்டி விட்டதில் சந்தோஷமாகச் சிரித்தாள் அல்லிராணி.

அவளின் சிரிப்பை புன்முறுவலுடன் பார்த்தான் வெற்றி.

“அட! சிரிக்கிற வெற்றி…” என்று அவள் ஆச்சரியமாகக் கூவ…

“ஏன் இதில் என்ன அதிசயம்?” என்று இன்னும் பெரிதாகச் சிரித்தபடி கேட்டான்.

“பின்ன அதிசயம் இல்லையா? வெற்றி அவனின் வெள்ளி போல் உள்ள பற்களைக் காட்டுவதே அதிசயம் தானே…” என்று கிண்டலாகச் சொன்னவளின் தலையில் செல்லமாகத் தட்டினான்.

வெற்றியின் சிரித்த முகத்தை ஆசையாகப் பார்த்தவள் அவனின் தோளில் சலுகையுடன் சாய்ந்து கொண்டாள்.

“நிஜமாவே உனக்கு என்னைப் பிடிச்சுருக்கா வெற்றி?” என்று இன்னும் நம்ப முடியாமல் கேட்டாள் அல்லி.

அவளுக்கு வார்த்தையால் உடனே பதில் சொல்லாதவன் அவளின் முகத்தை நிமிர்த்தித் தன் முகம் பார்க்க வைத்தவன், அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்தான்.

“எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு ஆள் முழுங்கி ராணி…” என்றான் காதலுடன்.

“என்னது ஆள் முழுங்கியா? அப்போ தூக்கத்தில் கூட அப்படிச் சொன்ன… என்னதிது?” அவன் காதல் சொன்னதை இனிமையாகக் கிரகித்துக் கொண்டவள், அவன் சொன்ன பெயரில் வெகுண்டெழுந்து கேட்டாள்.

“ஆமாடி ஆள் முழுங்கி…” என்றான் சிரிப்புடன்.

“என்னயா பேர் இது?” என்று முகத்தைச் சுளித்தாள்.

“உனக்கேத்த பேர் தான்…”

“அய்யே…!” என்று அவள் அலுத்துக் கொள்ள,

“ஆளை முழுங்குவது போலப் பார்த்துப் பார்த்தே எனக்குள்ள நீ மூழ்கி போய்ட்ட ஆள் முழுங்கி ராணி…” என்றான் வெற்றி.

வெற்றி இப்படி எல்லாம் பேசுவான் என்று நினைத்திராத அல்லி அவனை விழிகள் விரிய பார்த்தாள்.

“நிஜமா தான் சொல்றியா? ஆனா காலையில் வரை என்னை அந்த விரட்டு விரட்டின? அன்னைக்கு என் மனசை சொன்னப்ப சைட் அடிக்கிறவங்களை எல்லாம் இப்படித்தான் உரிமையா நினைப்பியானு கேட்ட…” என்று அவள் சொல்லும் போது அவன் அப்படிச் சொன்னதை நினைத்து வலி உண்டாகக் கலக்கத்துடன் கேட்டாள்.

“தப்பு தான்… நான் அப்படிக் கேட்டுருக்கக் கூடாது…” என்று உடனே ஒத்துக்கொண்டான் வெற்றி.

“நீயே சொல்லு, என்கிட்ட அப்படி என்ன இருக்கு? சாதாரணத் துணி வியாபாரம். சுமாரான வருமானம், கெட்ட பழக்கம்னு இருக்கிற என்னை விரும்புறேன்னு நீ வந்து சொல்லும் போது அதை நான் எப்படி எடுத்துக்க?

நீ என்கிட்ட விளையாடுறீயோனு கூடத் தோணிச்சு. அதான் கொஞ்சம் கடுமையா பேசிட்டேன். ஆனா நான் அப்படிப் பேசியும் நான் தான் உன் மனசில் இருக்கிறதா சொல்லி என்னை மொத்தமா கவுத்திட்ட.

கடுமையா பேசி உன் மனசை நோகடிச்ச பிறகும் நேத்து எனக்கு அடிப்பட்டதும் ஓடி வந்து உதவி பண்ணி என்கிட்ட கொஞ்ச நஞ்சமா ஒட்டி இருந்த வீராப்பையும் விரட்டி அடிச்சுட்ட. இப்போ இந்த ஆள் முழுங்கி ராணி, இந்த ஆளோட மன சிம்மாசனத்தில் அமர்ந்த ராணி…” என்றவன் தன் அருகில் அமர்ந்திருந்தவள் தோளைச் சுற்றி கையைப் போட்டு மென்மையாக அணைத்துக் கொண்டான்.

அவனின் தோளில் சாய்ந்து கொண்டவள் “நான் மட்டும் என்ன கலெக்டர் வேலையா பார்க்கிறேன்? நீனாலும் வியாபாரம் பண்ற. ஆனா நான் சாதாரணச் சித்தாள். எனக்கு நீ என்ன வேலை பார்க்கிற என்பதெல்லாம் பொருட்டில்லை. நீ என்ன வேலை பார்த்தாலும் எனக்கு உன்னைப் பிடிக்கும்…” என்றவள் அறியவில்லை. இப்போது இப்படிச் சொன்னவள் பின்னால் அதற்காக வருந்துவாள் என்று.

“உன் கெட்ட பழக்கம்… இதுக்கு ஏற்கனவே நான் பதில் சொல்லிட்டேன். இனி நீ என்னை மட்டும் தான் பார்க்கணும். அதில் மட்டும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்…” என்றாள் கண்டிப்பாக.

“ம்ம்… அப்படியா? மேடம் கண்டிஷன் போட்டா அதன் படி நடந்துற வேண்டியது தான்…” என்றான் கிண்டல் போல்.

“இந்த விஷயத்தில் கண்டிப்பா நடந்தே ஆகணும்…” என்று மீண்டும் உறுதியாகச் சொன்னாள்.

“போதும்டி உன் கண்டிஷன். வேற விஷயத்துக்கு வா…” என்று அவளின் பேச்சை திசை மாற்றினான் வெற்றி.

“ஹ்ம்ம்… வேற என்ன?” என்று வாயில் விரல் வைத்து யோசித்தவளுக்கு அவனின் கால் காயம் கண்ணில் பட, “நேத்து எப்படி அடிப்பட்டுச்சு வெற்றி? எங்கே ஆக்ஸிடெண்ட் ஆச்சு?” என்று கேட்டு அவன் தோளில் இருந்து தலையை நிமிர்த்தி அவனின் முகத்தைப் பார்த்து தலை காயத்தை ஒற்றை விரலால் வருடிக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் அவனின் முகம் அப்படியே மாறிப் போனது.

அவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மை தொலைந்து இறுக்கத்தைத் தத்தெடுத்துக் கொண்டவனின் முகத்தை வியப்பாகப் பார்த்தாள் அல்லிராணி.

தலை காயத்தை வருடிக் கொண்டிருந்த அவளின் கையை எடுத்துவிட்டவன் “அதான் ஆக்ஸிடெண்ட்னு சொன்னேன்ல? அது எப்படி, எங்கே நடந்தா உனக்கென்ன? போ… போய் வேற வேலை ஏதாவது இருந்தா பார்…” என்றான் எரிச்சலுடன்.

“நான் அப்படி என்ன கேட்டுட்டேன்னு இப்படிக் கோபப்படுற?” என்று அவனைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டாள் அல்லி.

“ஹ்ம்ம்… எனக்குப் பிடிக்காததைக் கேட்டுட்டன்னு அர்த்தம்…” என்றான் அழுத்தமாக.

இவனா சற்று நேரத்திற்கு முன் காதலுடன் பேசிக் கொண்டிருந்தான்? என்று சந்தேகம் கொள்ளும் வகையில் மாறி போன அவனின் முகப் பாவனையும், குரலில் இருந்த பேதமும் அல்லிராணியைப் புருவம் உயர வைத்தது.

‘ஏதோ சரியில்லையே?’ என்று அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள்.

அவளின் பார்வையைப் பார்த்தவன் சட்டென்று தன் முகப்பாவத்தை மாற்றிப் புன்முறுவல் பூத்தான்.

அவனின் சிரிப்பு இப்போது இன்னும் அதிகச் சந்தேகத்தை அவளின் மனதில் விதைத்தது.

“என்ன பார்வை ஒரு தினுசா இருக்கு?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

“உன்கிட்ட என்னமோ சரியில்லை… என்ன அது?” என்று துளைக்கும் பார்வையுடன் கேட்டாள் அல்லி.

“என்கிட்டயா?” என்று அவளைப் போலவே வாயில் விரலை வைத்து தட்டிக் கொண்டே கேட்டான்.

அவனின் செய்கையில் அவள் முறைத்துப் பார்க்க…

“ஆமா… ஆமா என்கிட்ட என்னமோ சரியில்லை. என்ன அது?” என்று அவனையே யோசனையுடன் கேட்டுக் கொண்டவன் “ஹான்… ஞாபகம் வந்திருச்சு…” என்றான் உற்சாகமாக.

“நீ அன்னைக்கு உன் மனசை சொல்லிட்டு இதோ இங்கே நச்னு ஒரு இச் கொடுத்த…” என்று தன் உதட்டை தடவி கொண்டே அவளைக் கிறக்கமாகப் பார்த்துச் சொன்னவன், “ஆனா நான் இப்போ என் மனசை மட்டும் தான் உன்கிட்ட சொன்னேனே தவிர ‘இச்’ தரவே இல்லை. கண்டிப்பா இது சரியே இல்லை தானே?” என்று சிரிப்புடன் கேட்டவன், தன் கையை நீட்டி அருகில் அமர்ந்திருந்தவள் பிடரியில் கையை வைத்து தனக்கு நெருக்கமாக அவளை இழுத்தான்.

“யோவ்… நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீ என்ன செய்துட்டு இருக்க?” என்று அவனின் இழுப்பில் இருந்து திமிர முயன்றாள்.

“நான் சரியாத்தான் செய்றேன் ஆள் முழுங்கி…” என்று போதையான குரலில் சொன்னவன் அவளை மேலும் பேச விடாமல் தன் அதரங்களை அழுத்தமாக அவளின் உதடுகளில் பதித்தான்.

அவள் அன்று இதழோடு இதழ் மட்டும் ஒற்றி எடுத்திருக்க, இன்று அவனோ வன்மையாக அவளின் இதழில் குடிக்கொண்டிருந்தான்.

இதழ் முத்தம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவளுக்குப் பாடம் எடுப்பவன் போல் நிறுத்தி நிதானமாக அவளின் இதழ்களைச் சுவைத்துக் கொண்டிருந்தான்.

அவன் முத்தம் தந்த மயக்கத்தில் கிறங்கிச் சொக்கிப் போன கண்களுடன் இருந்தவளைப் பார்த்து மந்தகாச புன்னகை புரிந்தவன் அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

“முத்தம்னா இப்படிக் கொடுக்கணும். அதை விட்டு உதட்டோடு உதட்டை வச்சு ஒத்தி எடுக்கக் கூடாது. அடுத்த முறை நீ கொடுக்கும் போது இதுபோலச் சரியா கொடுக்கணும். என்ன சரியா?” என்று கிண்டலுடன் கேட்டான் வெற்றி.

அவனின் கேள்வியில் அவளின் தலை தன்னால் ‘சரி’ என்று ஆடியது.

அதைக் கண்டு இன்னும் சிரித்தவன் “இந்த விஷயத்தில் வேற டவுட் இருந்தா கேளு. கிளியர் பண்றேன்…” என்று அவளின் காதோடு உதட்டை உரச விட்டு ரகசியமாகச் சொன்னான்.

“ம்ம்ம்…” என்று ரகசியத்திற்கு முனங்கினாள்.

“ம்ம்னா… என்ன அர்த்தம்? கிளியர் பண்ணனுமா?” என்று இன்னும் ரகசியமாகக் கேட்டான்.

“ஆமா…” என்று அவனின் மார்பில் இருந்து தலையை நிமிர்த்தாமலேயே சொன்னாள்.

“ஹா… ஹா…” பண்ணிட்டா போச்சு…” என்றவன் மீண்டும் அவளின் தலையைத் தன் மார்பில் இருந்து நிமிர்த்தி அவளின் இதழ்களைக் கவரப்போனான்.

ஆனால் இருவரின் இதழ்களுக்கு இடையே சட்டென்று கையை வைத்து மறைத்த அல்லி அவனின் கண்களைக் கூர்மையாகப் பார்த்தாள்.

“என்ன, நீ தானே கேட்ட?” தங்கள் இருவரின் உதடுகளையும் பெருஞ்சுவர் போல் மறைத்து நின்ற அவளின் கையைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“ஆமா… கேட்டேன். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி கூடக் கேட்டேன். அதுக்கு முதலில் பதில் சொல்லு…” என்று வெற்றியைத் தீர்க்கமாகப் பார்த்துக் கேட்டவளின் குரல் பதிலை தெரிந்து கொள்ளாமல் விட மாட்டேன் என்பது போல் இருந்தது.

“ஏய்… என்னடி…” உடனே முகம் மாற அவளை வேகமாகத் தன்னிடம் இருந்து பிரித்துத் தள்ளி அமர வைத்தான்.

“அப்போ நீ சொல்ல மாட்ட?”

“மாட்டேன்டி…” என்றான் கடுப்பாக.

“இதை நீ அப்பயே சொல்லியிருக்க வேண்டியது தானே? அதை விட்டு ஏன் என்னென்னவோ பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டாள்.

“என்னடி சொல்ல வர்ற?” அவளின் பேச்சுச் செல்லும் திசை புரியாமல் கேட்டான்.

“நான் உன் பார்வைக்கும், காதலுக்கும், உன் ஸ்பரிசத்துக்கும் மயங்குகிறவள் தான் வெற்றி. இப்போ நீ கொடுத்த முத்தத்தில் கூட மயங்கித் தான் போனேன். இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. வெட்கமும் இல்லை.

ஏன்னா நீ என் காதலை ஏத்துக்குவியா? இல்லை நான் மட்டுமே உன்னை மனசில் சுமந்துக்கிட்டுத் தனியா சுத்தணுமா? என் காதல் நிறைவேறவே செய்யாதா? இப்படி எல்லாம் எனக்குள் கேள்வி கேட்டுப் போராடி இருக்கேன்.

ஆனா இப்போ நீ உன் மனசை சொன்னதில் நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? எனக்கு இருக்கும் சந்தோஷத்தில் கண்டிப்பா இன்னும் நீ செய்ற எல்லாத்துக்கும் மயங்கித் தான் போவேன்.

ஆனா அதுக்காக எல்லா நேரத்திலும் இப்படித் திசை திருப்ப என்னைத் தீண்டி என் பேச்சை மாத்த நினைக்காதே. பதில் சொல்ல உனக்குப் பிடிக்கலையா? அதை வெளிப்படையா சொல்லு.

அதை விட்டு இப்படி என் பேச்சை மாத்தணும்னு என்கிட்ட இப்படி நடந்துக்காதே. அது நம்ம இரண்டு பேர் காதலையுமே அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கு…” என்றாள் இறுக்கமாக.

“நானாடி அசிங்கப்படுத்துறேன்?” என்று அவளின் கடைசி வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு கோபமாகக் கேட்டான் வெற்றி.

“என் பேச்சை மாத்த நீ அப்படிச் செய்தா எனக்கு அப்படித்தான் தெரியுது…” என்று சிறிதும் தயங்காமல் சொன்னாள் அல்லிராணி.

அதில் வெற்றியின் முகம் கோபத்தில் சிவந்து போக, “ஏய்… எழுந்து இங்கிருந்து போடி…” என்று கத்தினான்.

“ஆமாடா… எதுக்கு எடுத்தாலும் என்னை விரட்டுவதிலேயே குறியா இரு. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நீயே என்னைத் தேடி வரும் போது நான் உனக்குக் கிடைக்காம போகப் போறேன். அப்போ ரொம்பச் சந்தோஷப் பட்டுக்கோ…” என்று எழுந்து நின்று ஆவேசமாகக் கத்தியவள் கோபத்துடன் அங்கிருந்து சென்றாள்.

“போடி… போ… கண்டிப்பா அப்படி ஒரு நாள் வராது…:” என்று பதிலுக்கு ஆத்திரமாகக் கத்திய வெற்றி எதிர்காலத்தில் நடக்கப் போவதை அறிந்திருந்தால் அவளை அப்படிப் பேச வைத்திருக்க மாட்டானோ?

இன்று வீராப்பாகப் பதிலுக்குக் கத்தியவன் பின்னால் அதற்காகத் தன்னையே நொந்து கொண்டு கலங்கிப் போய் நிற்பான் என்று அறியாதவன் கோபத்துடன் படுக்கையில் விழுந்தான்.

காதலை சொல்லிய சிறிது நேரத்திலேயே ஆளுக்கு ஒரு பக்கம் விறைத்துக் கொண்டு நின்றனர்.

காதல்!

தித்திக்கும்!
திகட்டும்!
கசக்கும்!
கதற வைக்கும்!
வலிதரும்!
வசந்தத்தையும் தரும்!