மனம் கொய்த மாயவனே – 13

அத்தியாயம் – 13

“உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கடி?” என்று மகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார் சரோஜா.

“நான் எத்தனையோ விஷயம் நினைக்கிறேன். நீ எந்த விஷயத்தைப் பத்தி கேட்கிறமா?”

“ஏன்? நான் எந்த விஷயத்தைப் பத்தி கேட்குறேன்னு உனக்குத் தெரியாது?”

“அம்மா, சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வா…”

“நான் ஏன்டி சுத்தி வளைக்கிறேன்? நேராவே தான் கேட்குறேன். அந்த எதுத்த வீட்டுப் பையனைப் பத்தி தான் கேட்குறேன்? அவனைப் பத்தி சொல்லு…” என்று அதட்டலாகக் கேட்டார் சரோஜா.

“அதான் சொன்னனேமா உன் மருமவன்னு…” என்று அலட்டாமல் சொன்னாள் அல்லிராணி.

“அவனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு நீ அவனைக் கட்டிக்கிற முடிவு எடுத்திருக்க?”

“என்ன தெரியணும்மா? சொந்த ஊரு ராஜபாளையம். இங்கே துணி வியாபாரம் பார்க்கிறான். சம்பாதிக்கிற காசில் பாதியை ஊருக்கு அனுப்பி வைக்கிறான். பார்க்க நல்லா இருக்கான். முக்கியமா எனக்குப் பிடிச்சிருக்கான்…” என்று காரணங்களை அடுக்கினாள் அல்லிராணி.

“நீ சொன்னது எல்லாம் இந்தத் தெருவுக்கே தெரிஞ்ச விஷயம் தான். அதைத் தவிர அவனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? அவங்க பெத்தவங்க யாரு? அவங்க அங்கே என்ன செய்றாங்க? இவனோட பழக்கம் வழக்கம் எல்லாம் எப்படி? இப்படி ஏதாவது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

அவரின் கேள்வியில் முழித்தாள் அல்லிராணி.

“உன் முழியே சொல்லுது ஒன்னும் தெரியாதுனு. வாழ்க்கை என்ன விளையாட்டுனு நினைச்சியா? அவன் பார்க்கிறதுக்கு நல்லா இருந்தா போதுமா? வெளி பார்வைக்கு அழகா இருந்துட்டு உள்ளுக்குள்ள அழுக்கான ஆளா இருந்தா என்ன பண்ணுவ? உன் அப்பனும் தான் பார்க்க காங்கேயம் காளை போல இருப்பாரு. மனுஷன் குடிச்சே அழிஞ்சு இப்ப நம்மளை கூலிக்கு மாரடிக்க விட்டுட்டார்.

இந்தப் பையனும் எங்கேயோ போறான், வர்றான். திடீர்னு அடிப்பட்டு வந்து நிக்கிறான். அவனைப் பத்தி எதுவுமே தெரியாம எப்படி அவனை என் மருமவன்னு சொல்ற?

நாம இதுவரைக்கும் பொழைச்ச பொழப்பு தான் கஷ்டகாலமா இருந்தது. உன்னையாவது ஒரு நல்லவன் கையில் பிடிச்சுக் கொடுத்துடணும்னு பார்த்தேன். ம்ம்… இனி அது நடக்காது போல இருக்கு…” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் சரோஜா.

“வெற்றி நல்லவன் தான்மா…” என்று முணுமுணுப்பாக அன்னையிடம் சொல்லும் போதே ‘நல்லவன் தான் நைட் பொண்ணுங்களை வீட்டுக்கு வர வைப்பானா?’ என்ற கேள்வியும் முளைத்து அவளின் முணுமுணுப்பை அப்படியே அடங்கிப் போக வைத்தது.

“நல்லவனா இருந்தா சரி. அப்படி இல்லைனா என்ன பண்ணுவ?” என்று கேட்டார்.

“அவன் எப்படி இருந்தாலும் அவன் தான்மா என் புருஷன். உனக்கு மருமவன்…” என்று பட்டென்று உடனே சொல்லியிருந்தாள் அல்லிராணி.

“எதை வச்சுடி இந்த முடிவுக்கு வந்த?”

“என் மனசு தான்மா. எனக்கு அவன் தான் வேணும்னு என் மனசு சொல்லுது…” என்றாள்.

“வேண்டாம்டி அல்லி…” என்று அவர் மேலும் ஏதோ சொல்ல வர,

“எனக்கு அவன் தான் வேணும்மா…” என்றாள் உறுதியாக.

“என்னடி நீ…” என்று மீண்டும் ஏதோ பேச வந்தவரை, “போதும்மா!” என்று சொல்லிப் பேச்சை நிறுத்த வைத்தாள்.

“வெற்றி அங்கே உடம்பு முடியாம இருக்கான்மா. நான் போய் எப்படி இருக்கான்னு பார்க்கணும். காலங்காத்தாலே பேசி என் மனசை மாத்தணும்னு நினைக்காதேமா. என் மனசு மாறாது…” என்று சொல்லி விட்டு நிற்காமல் எதிர் வீட்டை நோக்கி ஓடினாள்.

இரவு அவள் எப்படிக் கதவைச் சாற்றி வைத்து விட்டுப் போனாளோ அப்படியே இருந்தது.

வெறுமனே மட்டும் சாற்றியிருந்த கதவைத் திறந்து உள்ளே சென்று வெற்றி என்ன செய்கிறான் என்று பார்த்தாள்.

வெற்றி இன்னும் படுக்கையில் தான் இருந்தான்.

‘இந்த ஆளு எழுந்து இந்நேரம் தினமும் குளிக்க வந்திரும். இன்னைக்கு இன்னும் தூங்குது…’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டே அவனின் அருகில் வந்தாள்.

அவனின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தவள் “வெற்றி…” என்று அழைத்துப் பார்த்தாள்.

அவனிடம் சிறிது கூட அசைவு இல்லை.

“யோவ் வெற்றி…” என்று மீண்டும் அழைக்க, அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.

‘பாவம் அடிப்பட்டதில் அசந்து தூங்குறான் போல’ என்று அவனுக்காக இரக்கப்பட்டவள் அவனின் தலை காயத்தில் மெதுவாகத் தன் கையை வைத்தாள்.

கையை வைத்ததும் தான் அவனின் நிலை அவளுக்கு உறைத்தது. வெற்றியின் உடல் அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது.

“அச்சோ! என்ன இப்படிக் கொதிக்குது?” என்று பதறியவள் வேகமாக அவனின் கழுத்து, கையில் எல்லாம் தொட்டுப் பார்த்தாள். சூடு அதிகமாக இருந்தது.

“வெற்றி… வெற்றி…” என்று அவனின் தோளில் கைவைத்து அசைத்து எழுப்பினாள்.

“ம்ம்…” என்ற முனங்கல் மட்டுமே அவனிடமிருந்து வந்தது.

“உடம்பு நெருப்பா கொதிக்குது வெற்றி. எழுந்திரு ஆஸ்பத்திரிக்குப் போவோம்…”

“ம்ம்…” என்று மீண்டும் முனங்கினானே தவிரச் சிறிதும் அசைந்தான் இல்லை.

மீண்டும் மீண்டும் எழுப்பித் தோற்றுப் போனாள்.

“என்னடி, வெற்றி பைத்தியம் பிடிச்சிருச்சா? இப்படி வெற்றி வெற்றினு ஏலம் போட்டுட்டு இருக்க?” என்று கேட்ட படி உள்ளே வந்தார் சரோஜா.

அவரின் கையில் சாப்பாட்டு தட்டு இருந்தது.

“க்கும்… இவன் என்னைச் சீக்கிரம் பைத்தியம் பிடிக்க விட்டுடுவான். வெற்றிக்கு காய்ச்சல் மா உடம்பு தீயா கொதிக்குது. ஆஸ்பத்திரிக்குப் போக எழுப்பினா எழுந்திருக்க மாட்டேங்கிறான். கண்ணைத் திறக்கவே இல்லை…” என்று வருத்தத்துடன் அன்னையிடம் விவரம் பகிர்ந்தாள்.

“காயத்துக்குக் காய்ச்சல் வந்திருக்கும். நேத்தே டாக்டர் மாத்திரை ஏதாவது சேர்த்துக் கொடுத்திருப்பாரு. அதில் இருக்கான்னு பாரு. சாப்பிட வச்சு மாத்திரையைப் போட சொல்லுவோம்…” என்றார் சரோஜா.

“கண்ணே திறக்கலை. சாப்பாடு எப்படிமா அவன் சாப்பிடுவான்?” என்று கேட்டுக் கொண்டே மாத்திரை இருந்த கவரை பார்த்தாள்.

“ரசம் நிறைய ஊத்தி தான் கொண்டு வந்தேன். நொறுங்க பிசைஞ்சு சாப்பிட வைப்போம்…”

“கஞ்சினா காய்ச்சல் வாய்க்கு குடிக்க இன்னும் நல்லா இருக்கும்…” என்று சொல்லிக் கொண்டே காய்ச்சல் மாத்திரையைப் பார்த்து எடுத்தாள்.

“வேலைக்கு நேரமாச்சுடி. கஞ்சி வைக்க எல்லாம் நேரமில்லை. நீ ஆம்பளை பையன் கூடத் தனியா இங்க இருக்க வேணாம்னு தான் இந்த ரசம் சோறை எடுத்துட்டு வந்தேன். சீக்கிரம் அந்தப் பையனை எழுப்பிச் சாப்பிட வச்சு மாத்திரை போட வச்சுட்டுக் கிளம்பு. வேலைக்குப் போகணும்…” என்றார் சரோஜா.

“அதானே? என்னடா அம்மா அக்கறையா தட்டைத் தூக்கிட்டு வந்துருச்சேனு பார்த்தேன்…” என்று நொடித்துக் கொண்டாள் அல்லி.

“வேற என்ன செய்றது? நான் தான் அடங்காப்பிடாரி பிள்ளையைப் பெத்து வச்சுருக்கேனே…” என்று சலித்துக் கொண்டார் சரோஜா.

“இப்பயும் அடங்காத வேலை தான் செய்யப் போறேன். நீ மட்டும் வேலைக்குப் போமா. நான் வெற்றியைப் பார்த்துக்கணும்…” என்ற மகளை முறைத்துப் பார்த்தார் சரோஜா.

“நீ செய்றது சரியில்லை அல்லி. வயசு பையன் கூட உன்னை எப்படித் தனியா விட முடியும்? நீ இங்கேயே இருக்குறதைப் பார்த்தா அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் என்ன சொல்லுவாங்க?” என்று கோபப்பட்டார் சரோஜா.

“உனக்கு எத்தனை தடவைமா சொல்றது. கேட்டா என் மருமவனுக்கு ஒன்னுன்னா என் மகள் தான் பார்க்கணும்னு சொல்லு…” என்று பிடிவாதமாகச் சொன்னாள் அல்லிராணி.

மகளின் பிடிவாதத்தைக் கண்டு அவளையே முறைத்துக் கொண்டு நின்றார் சரோஜா.

மகளும் அன்னைக்குச் சரியாக விறைத்துக் கொண்டு நின்றாள்.

“ம்ம்…” என்று வெற்றி காய்ச்சலில் அனத்தும் சப்தம் கேட்டு இருவரும் முறைப்பதை விட்டுவிட்டு அவனைப் பார்த்தனர்.

“ப்ளீஸ்மா, நீ வேலைக்குக் கிளம்புமா. நான் வெற்றியைக் கவனிக்கணும். மதியம் வேற ஏதாவது சமைச்சுக் கொடுக்கணும். என்னால அவனை இந்த நிலைமையில் விட்டுட்டு வர முடியாது…” என்றாள் கெஞ்சுதலாக.

சில நொடிகள் அமைதியாக இருந்த சரோஜா ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு “சரி பார்த்துக்க…” என்று சொல்லி விட்டுக் கையில் இருந்த சாப்பாட்டுத் தட்டை மகளின் கையில் கொடுத்தவர், “கவனமா இருக்கணும்…” என்று ஒரு எச்சரிக்கையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

“க்கும்… இவன் என்னை எதுவும் செய்துட்டாலும்… நான் இவனை எதுவும் செய்தாத்தான் உண்டு…” என்று நக்கலாக முணுமுணுத்துக் கொண்டாள் அல்லிராணி.

“இவனுக்குக் காய்ச்சலா இருக்கவும் இம்புட்டு நேரம் நான் இந்த வீட்டுக்குள்ள இருக்கேன். இல்லனா என்னை இங்க நிற்க இவன் விடுவானா என்ன? நேத்துக் காலையில் என்ன விரட்டு விரட்டினான்…” என்று தன்போக்கில் புலம்பிக் கொண்டே வெற்றியை எழுப்ப ஆரம்பித்தாள்.

அவளின் சிறிது நேர தொடர் உலுக்கலில் மெதுவாகக் கண்களைத் திறந்தான் வெற்றி.

கண்களைத் திறந்ததும் எதிரில் இருந்தவளை இமைகளைச் சிமிட்டிப் பார்த்தான்.

“ஆள் முழுங்கி… இங்க என்ன பண்ற?” என்று பாதி வந்த உணர்வில் குழப்பத்துடன் கேட்டான் வெற்றி.

“என்னது, ஆள் முழுங்கியா? யோவ் வெற்றி, யாரைச் சொல்ற?” புரியாத குழப்பத்துடன் அவனின் தோளில் கை வைத்து உலுக்கிக் கேட்டாள்.

அதில் இன்னும் நன்றாகக் கண்களைத் திறந்தவன் “ஏய், நீ எங்கே இங்கே?” என்று பதறி எழுந்தான்.

எழுந்தவனைத் தலையில் இருந்த காயம் வலி கொடுத்து நான் உந்தன் புது விருந்தாளி என்று அவனுக்கு ஞாபகப்படுத்தியது.

வலியில் தலையைப் பிடித்தவன் காலை வேகமாக அசைத்ததால் முட்டியில் வலியை உணர்ந்து முகத்தைச் சுருக்கினான். காய்ச்சலில் கண்கள் வேறு தீயாக எரிந்தன.

அதை விட எதிரில் இருந்தவளைப் பார்த்து இன்னும் எரிச்சல் பட்டான்.

‘க்கும்… வெற்றி போய் வெங்காயம் வந்துட்டான். இனி வெங்காயத்தைக் கண்ணில் தேய்ச்சு விட்டது போல எரிஞ்சு விழுவான்’ என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டவள், “ம்ம்… உன் கூட டூயட் பாடிட்டுப் போகலாம்னு வந்தேன்…” என்றாள் நக்கலாக.

அதில் இன்னும் அவளை அவன் உறுத்து விழித்துப் பார்த்தான்.

“எழுந்து போய் வாயைக் கொப்பளிச்சிட்டு வா. சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். சாப்பிட்டு மாத்திரை போடு. உனக்குக் காய்ச்சல் தீயா கொதிக்குது…” என்றாள்.

“ம்ம்… என்னை நான் பார்த்துக்குவேன். நீ கிளம்பு. சாப்பாடு எல்லாம் ஒன்னும் வேணாம். நான் இட்லி அக்கா கடைல சாப்பிட்டுக்கிறேன்…” என்றான்.

“யாரு, நீ பார்த்துக்குவ? அரைமணி நேரம் போட்டு உலுக்கி உன்னைக் கண்ணு முழிக்க வச்சுருக்கேன். இல்லனா நீயா எப்ப எழுந்து, எப்ப மாத்திரை போட்டு, எப்ப காய்ச்சல் விடுறது? பிகு பண்ணாம எழுந்திரி வெற்றி…” என்றாள்.

அவளிடம் மேலும் பேச தெம்பு இல்லாதவன் “ம்ப்ச்…” என்று சலிப்பைக் காட்டிவிட்டு எழ முயன்றான்.

தரையில் பாயில் படுத்திருந்து விட்டு முட்டியில் காயம் இருக்கும் நிலையில் சட்டென்று எழ முடியாமல் தடுமாறியவனின் கையை வேகமாகப் பிடித்துக் கொண்டாள் அல்லி.

“பார்த்து வெற்றி…” என்று கைத்தாங்கலாக அவனைப் பிடித்துக் கொண்டாள்.

அவளின் உதவியுடன் மெதுவாக எழுந்து விட்டவனுக்கு அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை.

தலை பாரமாக இருக்கக் காய்ச்சலில் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.

கால் காயமும் நடக்க விடாமல் வலி சுண்டி இழுக்க, “ச்சே…” என்று தன் நிலையை நினைத்தே கடுப்பாக முனங்கிக் கொண்டான்.

நேற்று கூடச் சிறிது நடக்க முடிந்தது. இன்றோ ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியாமல் பயங்கர வலியாக இருந்தது.

பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொள்ள முயன்று அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்றான்.

வெற்றியின் நிலையை உணர்ந்தவள் சற்றும் தயங்காமல் அவனின் கையை எடுத்து தன் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்ட அல்லி, “ம்ம்… இப்போ மெதுவா நடந்து பாரு…” என்றாள்.

அல்லியின் கையையே தயக்கத்துடன் பிடித்து எழுந்த வெற்றி, அவளின் இந்தச் செயலை சற்றும் எதிர்பாராமல் வேகமாகத் தன் கையை விலக்கிக் கொள்ளப் போனான்.

“யோவ்! உன்கிட்ட இல்லாத கற்புக்கு நான் கேரண்டி. கம்முன்னு வா. சும்மா அலட்டிக்கிறான்…” என்று கடுப்பான அல்லி இன்னும் அழுத்தமாக அவனின் கையைத் தன் தோள் மேல் போட்டுக் கொண்டாள்.

“என்ன வாய்டி உன் வாய். என்ன பேச்சுப் பேசுற?” என்று வெற்றியும் கடுப்படிக்க,

“ஹான்… என் வாய் நல்ல வாய் தான். நீ செய்றது தான் என்னை நாறவாய் ஆக்குது. இப்போ நான் செய்றதுக்கு எல்லாம் பேசாம இருக்குற. இல்லனா உன் வாயிலேயே கடிச்சு வச்சுருவேன்…” என்றாள் மிரட்டலாக.

‘இவள் செய்தாலும் செய்வாள்…’ என்று நினைத்த வெற்றி அதன் பிறகு வாயைத் திறப்பானா என்ன?

அவளின் உதவியுடன் மெல்ல நடந்து கொண்டே லேசாகத் திரும்பி அல்லியைப் பார்த்தான்.

அவளோ கடமையே கண்ணாக அவன் நடக்க உதவி கொண்டிருந்தாள்.

அவன் ஒவ்வொரு எட்டு எடுத்து வைக்கும் போதும் அவன் வலியில் முகத்தைச் சுருக்கியதை விட அவள் அதிகம் சுருக்கினாள்.

தன் வலியை அவள் வலி போல் உணர்ந்து தனக்காகத் துடிப்பவளின் முகத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்து குளியலறைக்குச் சென்றான்.

அவனை உள்ளே விட்டு விட்டு அல்லி வெளியே காத்திருக்க, காலைக்கடன்களை முடித்துப் பல்லைத் துலக்கி விட்டு வெளியே வந்தான்.

மீண்டும் தன் தோளில் அவனின் கையைப் போட்டு வீட்டிற்குள் அழைத்துப் போனாள்.

சுவரில் சாய்ந்து காலை நீட்டிக் கொண்டு அவன் வசதியாக அமர்ந்ததும் அன்னை கொண்டு வந்து கொடுத்த ரசம் சாதத்தை நன்றாக நொறுங்க பிசைந்து தட்டை அவனின் கையில் கொடுத்தாள்.

“என் அம்மா வேலைக்கு நேரம் ஆச்சுன்னு வீட்டில் இருந்த ரசம் சோற்றைத் தான் கொடுத்துட்டுப் போச்சு. நான் உனக்கு மத்தியானம் கஞ்சி வெச்சு துவையல் அரைச்சு தர்றேன். இப்ப இதைச் சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டுப் படுத்து தூங்கு…” என்றாள் அல்லிராணி.

“என்ன கஞ்சி காய்ச்ச போறியா? நீ வேலைக்குப் போகலையா?” என்று கேட்டான் வெற்றி.

“நான் இன்னைக்கு வரலைன்னு என் அம்மாகிட்ட சொல்லி விட்டுட்டேன். நீ இப்படிக் கண்ணு கூடத் திறக்காமல் இருக்கும் போது நான் எப்படி வேலைக்குப் போக முடியும்? நான் உன் மருமகனை பார்த்துக்கணும்‌, நீ வேலைக்குப் போமானு சொல்லிட்டேன். எங்கம்மாவும் போயிருச்சு…” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னவளை ஆழ்ந்த பார்வை பார்த்தான் வெற்றி.

“திரும்பப் புரியாத பார்வை பார்க்க ஆரம்பிச்சிட்டான்…” என்று சலித்தாள்.

அவளையே பார்த்துக்கொண்டு அவன் சாப்பிட்டு முடித்த தட்டை வாங்கி வைத்துக் கையைக் கழுவ உதவி விட்டு அவனுக்கு மாத்திரையை எடுத்துக் கொடுத்தாள்.

மாத்திரையைப் போட்டு விட்டுச் சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் பின்பு திரும்பப் படுத்துக் கொண்டான்.

கண்களை மூடி தூங்காதவன் பார்வை அவளையே வட்டமிட்டு வலம் வந்தது.

அதைக் கண்டவள் “நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா வெற்றி?” என்று கேட்டாள்.

“கேட்கக் கூடாதுன்னு சொன்னா வாயை மூடிட்டு இருக்கப் போறியா?” என்று திருப்பிக் கேட்டான்.

“கேட்கணும்னு முடிவு எடுத்துட்டா கேட்டே தீருவேன்…” என்று சொன்னவளை நக்கலாகப் பார்த்தான்.

“அப்புறம் எதுக்கு அந்தக் கேள்வியைக் கேட்கணும்? என்ன கேட்கணும் என்றாலும் சட்டுபுட்டுனு கேளு. கண்ணு சொருகுது…” என்றான்.

ஆனால் அவள் கேட்ட கேள்வியில் அவனின் தூக்கம் எங்கோ ஓடிப் போனது.

“நீ நிஜமாவே பொண்ணுங்க கூட அந்த மாதிரி பழகுறவன் தானா வெற்றி?” என்ற கேள்வியைக் கேட்டு அவனின் தூக்கத்தை விரட்டியடித்துக் கொண்டிருந்தாள் அல்லிராணி.