மனம் கொய்த மாயவனே – 12

அத்தியாயம் – 12

செழியன் பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தாள் கிருதிலயா.

“ஆமா, நம்ம பெப்பர் பொடி எங்கே சரண்? ஆளே காணும். இன்னைக்குக் காலேஜுக்கு மட்டம் போட்டுட்டாளா?” என்று சரண்யாவிடம் சிந்துஜா கேட்டுக் கொண்டிருந்த சப்தத்தில் தன் சிந்தனையிலிருந்து வெளியே வந்தாள் கிருதிலயா.

“மிருதுளாவா? காலையிலேயே வந்துட்டாள். அவளோட ஆளைப் பார்க்கப் போயிருக்காள். அவனோட பாக்கெட் மணியைக் காலிப் பண்ணிட்டுத் தான் வருவாள்…” என்றாள் சரண்யா.

“நம்ம செட்லயே இந்த மிருதுளா மட்டும் ஏன்டி இப்படி இருக்காள்? இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் ஒருத்தன் பின்னாடி சுத்தினாள். அப்புறம் ஏதோ சண்டைன்னு பிரேக் அப் ஆகிடுச்சுன்னு சொல்லிட்டுத் திரிஞ்சாள்.

இப்போ என்னடான்னா அந்தச் சந்துருவை லவ் பண்றதா சொல்லிச் சுத்திக்கிட்டு அவன் பாக்கெட் மணியைக் காலிப் பண்ணிட்டு இருக்காள். இவள் என்ன இதே வேலையா பார்த்துட்டு இருக்காள்?” என்று முகச் சுளிப்புடன் கேட்டாள் சிந்துஜா.

“அது அவள் விருப்பம்டி சிந்து. அதுல ஏன் நாம தலையிடணும்?” என்று கேட்டாள் கிருதிலயா.

“அவள் விருப்பமா இருக்கலாம் கிருதி. ஆனா அவள் செய்து கொண்டிருப்பது தப்பு. நம்மில் ஒருத்தர் தப்பு பண்ணும் போது அதைத் தடுக்கணும் கிருதி. நம்ம தோழி மேல் நமக்கு அக்கறை இருக்கணும்ல?” என்றாள் சிந்துஜா.

“இதுல என்னடி தப்பு? காதல் பண்றது எல்லாம் இப்போ ரொம்பச் சகஜம். அதுவும் பாய் ஃபிரண்டு இல்லைனா நம்ம கூட இருக்குறவளுங்களே நம்மை ஒரு மாதிரி பார்க்கிறாளுங்க. அப்படி இருக்கும் போது நம்ம செட்ல அவளுக்காவது பாய் ஃபிரண்டு இருக்கான்னு சந்தோஷப் படுடி…” என்றாள் சரண்யா.

“அடுத்தவளுங்க நம்மை ஒரு மாதிரி பார்க்கிறதுக்காக எல்லாம் பாய் ஃபிரண்டு வச்சுக்கக் கூடாது…” என்ற சிந்துஜா,

“நீயே உன் மனசை தொட்டுச் சொல்லு சரண், மிருது உண்மையா காதல் பண்றாளா? இல்லை உண்மையான நட்போட பாய் ஃபிரண்டு வச்சுருக்காளா?” என்று தீர்க்கமாகப் பார்த்துக் கேட்டாள்.

“ஹான்… அது…” என்று தோழியின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் சரண்யா.

அவளுக்குத் தான் மிருதுளா பற்றி நன்றாகத் தெரியுமே? மிருதுளா வசதி குறைவான வீட்டைச் சேர்ந்தவள் அன்றாடம் உழைத்தால் தான் வயிற்றுப் பாட்டிற்கே செலவு செய்ய முடியும் என்ற நிலையில் இருக்கும் குடும்பம்.

அப்படி இருந்தும் மகளை நன்றாகப் படிக்க வைத்து விட வேண்டும் என்று கஷ்டத்துடன் மிருதுளாவைப் படிக்க வைத்துக் கொண்டிருந்தனர். மிருதுளாவிற்குப் பள்ளியில் படிக்கும் ஒரு தங்கையும் உண்டு.

அவளின் பெற்றவர்கள் படிப்பாவது பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடும் என்ற கனவுகளுடன் இரு பெண் குழந்தைகளையும் தங்கள் கஷ்டப்பாடுகளையும் தாண்டி படிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் மிருதுளாவோ கல்லூரிக்கு வந்து படிக்கும் வேலையைத் தவிர மற்றதை செய்து கொண்டிருந்ததை அந்த அப்பாவி பெற்றோர் அறியாமல் போனார்கள்.

மிருதுளாவோ இத்தனை வருடங்கள் ஏழ்மையில் வாழ்ந்தவளுக்கு இனியாவது விரும்பியதை வாங்கி விட வேண்டும், நன்றாகச் செலவு செய்ய வேண்டும் என்ற ஆசை. தன் ஆசையை நிறைவேற்ற கல்லூரி வாழ்க்கையைப் பயன்படுத்த ஆரம்பித்தாள்.

அவளின் எண்ணத்திற்கு அவளின் அழகும் கை கொடுக்க, நன்றாகக் கையில் காசு வைத்திருக்கும் ஆண் நண்பர்களுடன் பழக ஆரம்பித்தாள்.

அவர்களைச் செலவழிக்க வைத்து அவர்கள் மூலமாகத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஆரம்பித்தாள். சில நாட்களில் அவளின் எண்ணம் புரிந்து தப்பிச் சென்ற ஆண் நண்பர்களும் உண்டு. இரண்டு மாதம் முன் ஒருவன் அப்படிக் கழண்டு கொள்ள, இப்போது அவள் பிடித்திருப்பதோ சந்துரு என்ற ஒருவனை.

வசதியான வீட்டுப் பையனான சந்துருவோ மிருதுளா கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்க, அவனிடம் காதல் என்ற பெயருடன் அவளே அறியாமல் நன்றாக மாட்டியிருந்தாள் மிருதுளா.

“நம்ம ஃபிரண்டா இருந்தாலும் அவங்கவங்களுக்குன்னு சில பிரவைசி இருக்கு சிந்து. அதில் நாம தலையிட கூடாது. மிருது வெளியில் யார்கிட்ட எப்படியோ நம்மகிட்ட உண்மையா தான் பழகிட்டு இருக்காள். நம்மகிட்ட அவள் போலி முகத்தைக் காட்டினால் தான் நாம யோசிக்கணும். அவளோட சொந்த விஷயம் நமக்குத் தேவையில்லை…” என்றாள் கிருதிலயா.

“எனக்கு உன்னை மாதிரி எல்லாம் பிரிச்சுப் பார்க்கத் தெரியலை கிருதி…” என்று சிந்து சொல்லிக் கொண்டிருக்க,

“ஏய், மிருது வர்றாள். பேச்சை விடுங்கடி…” என்று தோழிகளின் பேச்சை நிறுத்தினாள் சரண்யா.

“ஹாய்டி… என்னை விட்டுட்டு என்ன அரட்டை அடிச்சுட்டு இருக்கீங்க?” என்று கேட்ட படி அங்கே வந்தாள் மிருதுளா.

‘உன்னைப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம் என்றா அவளிடம் சொல்ல முடியும்?’ என்று உள்ளுக்குள் நினைத்தவர்கள் சிரித்து மழுப்பினர்.

அப்போது வகுப்பின் பேராசிரியர் வர அவர்களின் பேச்சு அத்தோடு நின்று போனது.

அன்றைய வகுப்புகள் முடிந்ததும் “நாளைக்குச் சந்துருக்கு ப்ரத்டே. அதுக்கு எனக்கு நம்ம காலேஜ் பக்கத்தில் இருக்கிற பெரிய ஹோட்டலில் ட்ரீட் வைக்கிறான். என்னை வேணும்னா உன் ஃபிரண்ட்ஸயும் கூடக் கூட்டிட்டு வான்னு சொல்லியிருக்கான். நீங்களும் வர்றீங்களாடி?” என்று தன் தோழிகளிடம் கேட்டாள் மிருதுளா.

“நான் வரலைடி மிருது. என்னோட அப்பா அப்படி ஹோட்டல் எல்லாம் போக விடமாட்டார்…” என்று முதல் ஆளாகக் கழண்டு கொண்டாள் சிந்துஜா.

“ஆமா, நீ சரியா பயந்தாங்கொள்ளி. நீ இப்படித் தான் சொல்லுவன்னு தெரியும். அவ கிடக்குறா. நீங்க வர்றீங்களா கிருதி, சரண்?” என்று கேட்டாள்.

சரண்யா யோசனையுடன் இருக்க, கிருதிலயா ‘சரி’ என்று சொல்லியிருந்தாள்.

“நீ என்னடி சரண் யோசிக்கிற? சும்மா வாடி…” என்று அழைத்தாள் மிருதுளா.

சிறிது தயக்கத்துடனேயே ‘சரி’ என்று சம்மதம் சொல்லியிருந்தாள் சரண்யா.

சந்துருவால் மிருதுளாவின் வாழ்வு மட்டும் இல்லாமல் தன் வாழ்வும் மாறப் போவதை அறியாமல் சற்றும் யோசிக்காமல் சந்துருவின் பிறந்த நாளுக்கு உற்சாகத்துடனே கிளம்பினாள் கிருதிலயா.


“நாளைக்கு ஈவ்னிங் நான் காலேஜில் இருந்து வர லேட் ஆகும் அத்தை…” என்று பவானியிடம் தகவல் சொல்லிக் கொண்டிருந்தாள் கிருதிலயா.

“என்ன விஷயம்? ஏன் லேட் ஆகும்?” என்று அவளின் பேச்சைக் கேட்டுக் கொண்டே அங்கே வந்த செழியன் கேட்டான்.

“என் ப்ரண்டோட ப்ரண்டுக்கு நாளைக்கு ப்ரத்டே. அதுக்கு எங்களுக்கும் அழைப்பு வந்திருக்கு. அதுக்கு நாங்க போறோம்…” என்றாள்.

“ப்ரண்டோட ப்ரண்டா?” என்று செழியன் ஒரு மாதிரியாக இழுக்க…

“மாமா ப்ளீஸ், ஏதாவது சொல்லிடாதே! காலேஜ் பக்கத்தில் இருக்கும் ஹோட்டல் தான் போறோம். போய் விஷ் பண்றோம். ட்ரீட்ல கலந்துகிறோம். கிளம்பி வீட்டுக்கு வந்திடுவோம். அவ்வளவு தான்!” என்று அவன் மறுப்பாகப் பேசும் முன் வேகமாகத் தங்கள் நிகழ்ச்சி நிரலைச் சொன்னாள்.

“ஏன் கிறுக்கி, இவ்வளவு வேகம்? நீ போற இடம், பார்க்கிற ஆளுங்க எப்படினு தெரிய வேண்டாமா? ப்ரண்ட்னா பரவாயில்லை. ப்ரண்டோட ப்ரண்ட் பங்ஷனுக்கு எதுக்கு நீ போகணும்னு தான் யோசனையா இருக்கு…” என்றான்.

“இதுல யோசிக்க என்ன மாமா இருக்கு? போய்ட்டுச் சீக்கிரமே வந்துடுறேன். ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சுதலாக.

அவளின் கெஞ்சுதல் தான் செழியனின் நெற்றியைச் சுருங்க வைத்தது.

‘என் இஷ்டம்! நீ என்ன எதுக்கு எடுத்தாலும் இப்படி யோசிக்கிற? நீ சம்மதிக்கலைனாலும் நான் அப்படித்தான் போவேன்…’ என்று அவளின் அடாவடி இல்லாமல் அடங்கிக் கேட்பது செழியனை யோசனையின் பிடியில் தள்ளியது.

‘இப்படிக் கெஞ்சிக் கேட்பது இவளின் இயல்பு இல்லையே?’ என்பது போல் அவளை ஊடுருவும் பார்வை பார்த்தான்.

ஆனால் கிருதி அவனின் கண்களைச் சந்திக்கத் தயங்கிச் செழியனை நேராகப் பார்க்க மறுத்தாள்.

அவள் தான் தோழி கேட்டதில் இருந்து செழியனைப் பிடித்தத்தையும் தாண்டி யோசிக்க ஆரம்பித்திருந்தாளே! அதில் அவளுக்கு ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொள்ள, ஒரு புது வித அவஸ்தையை உணர்ந்தாள்.

அந்த அவஸ்தை அவளைத் துடுக்காகப் பேச விடாமல் அவனிடம் கெஞ்ச வைத்தது.

இரவு உணவை உண்ண அமர்ந்த படி பேசிக் கொண்டிருந்ததால் செழியன் தன்னைப் பார்க்கிறான் என்று உணர்ந்ததும் சாப்பிடுவது போல் குனிந்து கொண்டாள்.

சில நொடிகள் அவளைப் பார்த்த செழியன் அவள் உணவு உண்ணுவதில் கவனமாக இருப்பதைக் கண்டு “சரி, போயிட்டு வா…” என்றவன் தானும் உண்ண ஆரம்பித்தான்.

“ஓகே மாமா. என் செல்ல மாமா!” என்று நிமிர்ந்து பார்த்துச் சொன்னவள் அவனைப் பார்த்துக் குறும்பாகக் கண் சிமிட்டினாள்.

“என்னை ஐஸ் வைத்துக் கொஞ்சியது போதும். சாப்பிடு…” என்று சிரித்துக் கொண்டே சொன்னவன் உணவு உண்ணுவதில் கவனத்தை வைத்தான்.

இரவு உணவு முடிந்ததும் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டுப் பவானி படுக்கப் போய் விட, செழியன் செய்தி பார்க்கத் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தான்.

கிருதிலயாவும் அங்கிருந்த இன்னொரு சோஃபாவில் அமர்ந்தாள்.

“படுக்கப் போகலையா கிருதி? நான் நியூஸ் தான் பார்க்கப் போறேன்…” என்றான்.

“எனக்குத் தூக்கம் வரலை மாமா. நானும் டீவி பார்க்கிறேன்…” என்றாள்.

“நான் நியூஸ் தான் பார்ப்பேன். மாத்த சொல்லிக் கலாட்டா பண்ணக் கூடாது…” என்று கண்டிப்புடன் சொன்னான்.

“ஐய்ய… எந்த நேரமும் ருத்ரையாவா இருக்காம டீவியைப் பாரு மாமா…” என்று கேலியாகச் சொன்னாள்.

“வர வர உனக்குக் கொழுப்புக் கூடிப் போயிருச்சு…” என்று சொல்லிவிட்டுச் செய்திகளில் மூழ்கிப் போனான்.

கிருதியும் சிறிதும் நேரம் செய்தியைக் கவனித்தவள் பின் மெதுவாகத் திரும்பிச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

செழியனுக்கும், கிருதிலயாவிற்கும் சில வருடங்கள் வித்தியாசம் இருந்தாலும், ஒருமையில் அழைத்துக் கொள்வதும், திட்டிக் கொள்வதும், சண்டை போட்டுக் கொள்வதும் எந்தளவிற்கு நடக்குமோ அதே அளவு பாசமும் உண்டு.

ஒருவருக்கு ஒருவர் பாசம் வைப்பதில் அவர்களுக்குள் எந்தக் குறைவும் இல்லை என்றே சொல்லலாம்.

ஆனால் இப்பொழுதோ தோழி தூண்டி விட்டதில் பாசத்தையும் தாண்டி கிருதிலயாவிற்கு யோசிக்கத் தோன்றியது.

யோசனையின் விளைவாக அவனை ரசித்துப் பார்க்க நினைத்து அவனின் புறம் திரும்பினாள்.

செழியன் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உடையவன் என்பதால் நன்றாக முறுக்கேறிய உடலமைப்பைக் கொண்டிருந்தான்.

அவன் அணிந்திருந்த பனியனையும் தாண்டிக் கை சதைகள் உருண்டு திரண்டு திரட்சியுடன் உடற்பயிற்சியினால் உண்டான பலனைக் காட்டிக் கொண்டிருந்தன.

மார்பு பகுதி உரம் ஏறியது போல் திரண்டு கட்டுமஸ்தான உடல் என்று எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

தொப்பை எதுவும் இல்லாமல் கச்சிதமான ஒட்டிய வயிறு அவன் சிக்ஸ் பேக் உடையவனாக இருக்கலாம் என்பதைக் கட்டியம் கூறியது.

அணிந்திருந்த முக்கால் கால்சட்டையையும் தாண்டித் தெரிந்த காலின் திரட்சி அவனின் வலுவை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அவனின் போர் வீரன் போன்ற உடலமைப்புக் கிருதியைக் கிறங்க வைத்தது.

‘பெரிய ஹீரோ மாதிரி இருக்க மாமா. உன்னைப் போய் இத்தனை நாள் கவனிக்காம போனேனே…’ என்று நினைத்துக் கொண்டாள்.

தொடர்ந்து அவனின் முகத்தைப் பார்த்தாள். அலை அலையான கேசம் மேலே ஓடிக் கொண்டிருந்த காற்றாடியில் இருந்து வந்த காற்றினால் சிலுப்பிக் கொண்டு நின்றது.

பெரிய நெற்றி, அவ்வப்போது ஏதோ யோசனையின் விளைவால் சுருங்கிய புருவம், தீட்சண்யமான கண்கள், கூரான நாசி, கருகருவென்று இருந்த மீசை சற்றுப் பெரிதாகவே இருக்க, மீசையை இருபக்கமும் லேசாகச் சுருட்டி விட்டிருந்தான்.

அந்த லேசான முறுக்கு மீசை அவனுக்கு அதிகக் கம்பீரத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. நான் அழுத்தமானவன் என்று சொல்வது போல் இருந்த அவனின் உதடுகள்… எனச் செழியனின் முகத்தை அணுஅணுவாக ரசித்துப் பார்த்தாள் கிருதிலயா.

அவனின் தோற்றம் என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு அவளை வசியம் செய்வது போல் இருந்தது.

ஆம்! செழியன் கம்பீரமான ஆண்மகன். அவனின் தோற்றத்திற்கும் வீட்டில் கிருதியுடன் பேசும் போது இருக்கும் விளையாட்டுத்தனத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இருக்காது.

வீட்டிற்கு வெளியே அவன் எப்படியோ? ஆனால் வீட்டில் பவானியின் மகனாக, கிருதியின் மாமனாக நடந்து கொள்வான்.

கிருதிலயா தன்னை மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, ஏதோ உந்துதலில் வேகமாக அவளின் புறம் செழியன் திரும்பிப் பார்க்க, அதை உணர்ந்தவள் நொடியில் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“என்ன கிருதி, என்கிட்டே எதுவும் சொல்ல வந்தியா…” அவள் ஏதோ தன்னிடம் சொல்லத்தான் தன்னைத் திரும்பிப் பார்த்தாளோ என்று நினைத்தான்.

அவன் தான் கனவிலும் அவள் தன்னை அப்படி ரசித்துப் பார்ப்பாள் என்று நினைத்தது இல்லையே. அதனால் விகல்பம் இல்லாமல் கேட்டான்.

“ஹான்… ஒன்னுமில்லை மாமா. எனக்குத் தூக்கம் வருது. நான் தூங்கப் போறேன்னு…” என்று இழுத்தவள் அதற்கு மேல் அமர்ந்திருந்தால் ஏதாவது உளறி விடுவோம் என்று நினைத்து, வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.

“அதுக்கு ஏன் இவ்வளவு அவசரமா எழுந்துக்கிற? போ… போய்ப் படு…” என்று சொன்னவன் மீண்டும் செய்தியில் மூழ்கிப் போனான்.

அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து ஓடினாள் கிருதிலயா.

தன்னுடைய அறைக்குச் சென்றவள் “ஊப்ப்…” என்று பெரிதாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.

“உன்கிட்ட ஏதோ இருக்கு மாமா. உன்னை நான் லவ் பண்ணிருவேன் போல…” என்று மெதுவாக முனங்கிக் கொண்டே படுக்கையில் விழுந்தாள்.

மறுநாள் கல்லூரி சென்ற கிருதிலயா வழக்கம் போலத் தோழிகளுடன் கலாட்டா, வகுப்பு என்று அன்றைய பொழுதை கழித்தாள்.

மாலை ஆனதும் “போகலாமாடி…” என்று கேட்டுக் கொண்டு வந்தாள் மிருதுளா.

“போகலாம் மிருது. ஆனா நாங்க இரண்டு பேரும் கொஞ்ச நேரம் தான் அங்கே இருப்போம். சீக்கிரம் கிளம்பிருவோம். சரியா?” என்றாள் கிருதிலயா.

“சரிடி கிருதி. நோ ப்ராபளம். வாங்க போகலாம்…” என்று சரண்யாவையும், கிருதிலயாவையும் அழைத்துச் சென்றாள்.

“என்ன கிருதி, சீக்கிரம் கிளம்பலாம்னு சொல்ற. ட்ரீட் பெருசா இருக்கும்டி. நல்லா அனுபவிக்கிறதை விட்டுட்டுச் சீக்கிரம் வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போறோம்?” சாப்பாட்டு ராணியாக ஜொள்ளினாள் சரண்யா.

“அலையாதேடி! என்னை என் மாமா சீக்கிரம் வீட்டுக்கு வரணும்னு சொல்லியிருக்கு. அதனால தான்…” என்று செழியனைப் பற்றித் தோழியிடம் சொல்லும் போதே அவளின் கண்கள் மயக்கத்தைப் பிரதிபலித்தன.

“ஏய், என்னடி புதுசா உன் மாமாவைப் பத்தி பேசும்போது உன் முகமே மாறுது…” என்று கேட்டாள் சரண்யா.

“முகம் மாறுதா! அப்படியா? எப்படி?” என்று கேட்டாள் கிருதி.

“எப்படியா? உன் கண்ணுல ஒரு மயக்கம்! கன்னத்துல சிவப்பு! பேச்சுல கொஞ்சல்… ஆஹா! ஆஹா! என்னடி காதலில் விழுந்தே விட்டாய் தானே?” என்று உற்சாகமாகக் கேட்டாள் சரண்யா.

“என் முகம் இப்போ அப்படியா இருக்கு?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் கிருதி.

“ஆமாடி, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு. உன் மாமாவை நீ லவ் பண்ற தானே?” என்று விடாமல் கேட்டாள் சரண்யா.

“லவ்வானு தெரியலைடி சரண். ஆனா என் மாமாவை பார்க்கும் போது இப்போ எல்லாம் எனக்கு எப்படியோ இருக்கு…”

“அது தான்டி கிருதி, காதல்!” என்று ஆர்ப்பாட்டமாகச் சொன்னாள் சரண்யா.

“அப்படியா சொல்ற?” என்று இன்னும் சந்தேகத்துடன் கேட்டாள் கிருதி.

“உனக்குச் சந்தேகமே வேண்டாம் டி கிருதி. ஒரு ஆம்பளயை நமக்கு ரொம்பப் பிடிச்சாலோ, அவங்களைப் பார்க்க வெட்கமா இருந்தாலோ, அவங்க மேல நமக்கு வித்தியாசமான உணர்வு தோன்றினாலோ அது தாண்டி காதல்…” என்று எல்லாம் அறிந்தவள் போல் காதலுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள் சரண்யா.

“அப்போ நான் என் மாமாவை லவ் தான் பண்றேன் போல இருக்கு சரண்…” என்று குழைந்த குரலில் சொன்னாள் கிருதிலயா.

“ஏய் கிருதி, சரண் சீக்கிரம் வாங்கடி. சந்துரு ஹோட்டலுக்குப் போயாச்சாம். நம்மளைச் சீக்கிரம் வர சொன்னான்…” என்று அதுவரை சற்றுத் தள்ளி நின்று சந்துருவிடம் பேசிக் கொண்டிருந்த மிருதுளா இருவரையும் அழைத்தாள்.

“இதோ வந்துட்டோம் மிருது…” என்று கிருதி சொல்லி முன்னால் நடக்கப் போனவளைக் கைப்பிடித்து நிறுத்திய சரண்யா,

“அப்போ நீயும் ஒரு நாளைக்கு ட்ரீட் வைக்கணும் கிருதி. சீக்கிரம் உன் மாமாகிட்ட உன் லவ்வை சொல்லிட்டு, அவரும் நீயுமா, இதோ இவ மிருது போல ட்ரீட் வைக்கணும். என்ன சரியா?” என்றாள்.

“சரிடி, வைக்கிறேன்…” என்று வெளியே சொன்னாலும் ‘அச்சோ! மாமாகிட்ட லவ் சொல்லணுமா, எப்படி?’ என்று உள்ளுக்குள் பதறிப் போனாள்.

எதுவென்றாலும் பட்பட்டென்று பேசும் குணம் கொண்ட கிருதிலயாவே எப்படிக் காதல் சொல்வது என்று புரியாமல் குழம்பிப் போனாள்.

அவளை மேலும் யோசிக்க விடாமல் மிருதுளாவும் அவர்களுடன் சேர்ந்து நடந்து பேசிக் கொண்டே வர, கிருதியின் மனநிலை அப்போதைக்குத் திசை திரும்பியது.

கல்லூரியில் இருந்து நடந்து போகும் தூரத்தில் இருந்த அந்த உணவகத்திற்குள் தோழிகள் மூவரும் நுழைந்த போது ஒரு மேஜையைச் சுற்றி இருந்த இருக்கையில் சந்துருவும் அவனின் நண்பர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

சந்துருவைப் பார்த்ததும் தோழிகளை விட்டுவிட்டு ஆர்ப்பாட்டமாக உள்ளே ஓடிய மிருதுளா, “ஹாய் சந்து… ஹேப்பி ப்ரத்டே…” என்று அவனின் தோளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே வாழ்த்துச் சொன்னாள்.

“ஹாய் மிரு குட்டி. தேங்க்யூ செல்லம்…” என்று அவளிடம் கொஞ்சலாகச் சொன்ன சந்துரு, “உன் ப்ரண்ட்சை அங்கேயே விட்டுட்டு வந்துட்ட பார். போய்க் கூட்டிட்டு வா…” சிறிது தள்ளி நின்ற கிருதி, சரண்யாவைக் காட்டிச் சொன்னான்.

“ஹேய், சாரிடி. வாங்க…” என்று தோழியைச் சந்துருவின் அருகில் அழைத்துச் சென்றவள் அவர்களை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

“சந்து, இவ கிருதிலயா, இவ சரண்யா, இன்னொருத்தி சிந்துஜா. அவள் வரலை. அவளை இன்னொரு நாளைக்கு அறிமுகப்படுத்துறேன்…” என்று சந்துருவிடம் சொன்னவள், “இவர் தான்டி என் லவர் பாய் சந்துரு…” என்று காதலனைத் தோழிகளுக்கு அறிமுகப்படுத்தினாள்.

“ஹாய்… ஹலோ…” என்று அவர்கள் அறிமுகம் ஆகிக்கொள்ள,

“ஹேப்பி ப்ரத்டே சீனியர்…” என்று கிருதியும், சரண்யாவும் வாழ்த்தினர்.

“தேங்க்யூ கிருதிலயா, சரண்யா. சீனியர்னு எல்லாம் கூப்பிட வேண்டாம். சந்துருனே கூப்பிடுங்க…” என்றான்.

“ஆமா, இதில் யார் கரம் மசாலா, யார் சாம்பார் பொடி?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சந்துரு.

‘அடிப்பாவி! நமக்குள்ள இருக்குற பட்டப்பேர் எல்லாம் கூட உன் ஆளுகிட்ட சொல்லுவியா?” என்று தோழியை முறைத்துப் பார்த்தனர் கிருதியும், சரண்யாவும்.

‘ஹிஹி…’ என்று மிருதுளா இளிப்பது போலப் பல்லைக் காட்டினாள்.

பின் சந்துருவின் புறம் திரும்பி, “கிருதி கரம் மசாலா, சரண் சாம்பார் பொடி…” என்று சொல்ல, இருவரும் அவளை முறைக்க, சந்துரு பெரிதாகச் சிரித்தான்.

“இது என்ன இப்படிப் பட்டப்பெயர்?” என்று கேட்டான்.

“அது வந்துங்க, இந்த உலகத்துக்கு முக்கியமானதே சாப்பாடு தான். அதான் விதவிதமான குணமாக நாங்க இருந்தாலும் எங்க ப்ரண்ட்ஷிப் எங்களுக்கு முக்கியம்னு காட்ட சாப்பாட்டு பொருள் பேரா வச்சுக்கிட்டோம்…” என்று சரண்யா விளக்கம் சொன்னாள்.

“அட! சூப்பருங்க!” என்று பாராட்டியவன் “ஆமா மளிகை சாமான் பெயர் எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சுருக்கே… உங்களுக்கு எல்லாம் சமைக்கத் தெரியுமா?” என்று கேட்டான்.

“மளிகை சாமான் பெயர் தெரிஞ்சா சமைக்கத் தெரியணும்னு அவசியம் இல்லைங்க சந்துரு. சாப்பிட தெரிஞ்சா போதும். சமைக்கத் தான் தெரியாது. சாமான் பெயராவது தெரிஞ்சு வச்சுப்போமேனு ஒரு நல்ல எண்ணம் தான்…” என்றாள் கிருதிலயா.

“செம்ம எண்ணம் போங்க…” என்றவன் “சரி, வாங்க. நான் என் ப்ரண்ட்ஸை உங்களுக்கு அறிமுகப்படுத்துறேன்…” என்று அழைத்தான்.

அங்கே அடுத்தச் சில நிமிடங்கள் அறிமுகப்படலம் நடந்தது.

“டேய் சந்துரு, மிருதுளாவை விட இந்தக் கிருதி ரொம்ப அழகா இருக்காள்டா. நீ பேசாம அவளை ரூட் விட்டு இருந்திருக்கலாம். இப்போ பார் காதலியோட ப்ரண்ட்னு பழக வேண்டியது இருக்கு…” அனைவரும் சந்துரு தருவித்துத் தந்த உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருக்க, சந்துருவின் நண்பனான ரவி அவனின் காதில் மெல்ல முணுமுணுத்தான்.

“டேய் ரவி, சும்மா இருடா! அவளுங்க காதில் விழுந்துட போகுது…” என்று அதட்டினான் சந்துரு.

“டேய், ஓவரா நல்லவன் வேஷம் போடாதே. அவளுங்க காதில் விழுவதற்கு எல்லாம் பயந்தவனா நீ?” என்று நக்கலாகக் கேட்டான்.

“பயம்னு யார் சொன்னா? எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான். கோழி எல்லாம் இந்தா என்னைப் பிரியாணி போட்டுக்கோனு தானா வரணும்டா. அப்படி நம்மைத் தேடி வர வைக்கணும்டா.

அதுக்கு இந்த நல்லவன் வேஷம் தான் கை கொடுக்கும். அதனால தேவையில்லாம அவளுங்க முன்னாடி எதுவும் பேசாம பொத்திக்கோ…” என்று நண்பனிடம் சொன்ன சந்துரு எதிரே இருந்த கிருதிலயாவைப் பார்த்து மென்மையாகச் சிரித்து வைத்தான்.

அவர்கள் பேசிக் கொண்டதை அறியாமல் பதிலுக்குச் சிரித்த கிருதி, சரண்யாவின் புறம் திரும்பி, “இந்த மிருதுவை பார் சரண். இந்த முறை ஒரு நல்லவனைப் பிடிச்சுட்டா போல இருக்கு. இந்தச் சந்துரு பார்க்கவும் லுக்கா இருக்கான், பழகவும் ஷாப்ட் கேரக்டர் மாதிரி தெரியுது. இவனையாவது அவள் ஏமாத்தாம உண்மையா காதலிச்சா பரவாயில்லை…” என்று தோழியிடம் முணுமுணுத்தாள்.

“எனக்கு என்னமோ இந்த முறை இவனை மிருது விடமாட்டாள்னு தான் நினைக்கிறேன் கிருதி. ஏன்னா ஆளு ரொம்பப் பசை உள்ள இடமா தெரியுறான். இப்போ நம்மளுக்கு எல்லாம் வாங்கிக் கொடுத்த டிபனை பாரேன். இது எல்லாமே காஸ்ட்லி. இன்னும் இவளுக்கு வேற தனியா என்ன வாங்கிக் கொடுத்திருக்கானோ தெரியல. இந்தக் காசே அவளை அவனை விட விடாது…” என்றாள்.

“என்னமோடி… ஆளை மாத்திக்கிட்டே இல்லாம மிருது நிலையா நின்னா நல்லது தான்…” என்று பேசிக் கொண்டே ஒரு கட்லெட்டை எடுத்துக் கடித்தாள்.

தோழிகள் இருவரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மிருதுளாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் சந்துருவின் பார்வை கிருதியின் மீதும், சரண்யாவின் மீதும் ரகசியமாகப் பதிந்து மீண்டது.

‘கரம் மசாலா மட்டும் இல்லாம அந்தச் சாம்பார் பொடியும் ருசியாத்தான் இருப்பாள் போல. ஆளே ஒரு மார்க்கமாத் தான் இருக்காள்’ என்று சரண்யாவையும் அவனின் கண்கள் மேய்ந்தன.

அவனின் பார்வையை உணராமல் தோழிகள் இருவரும் அவனின் வெளித்தோற்றத்தையும், பகட்டையும் பார்த்து அவனை நல்லவன் என்று நினைத்துக் கொண்டனர்.