மனதோடு உறவாட வந்தவளே – 8

அத்தியாயம் – 8

மேலும் ஒரு மாதம் சென்றிருந்த நிலையில், ஜீவரஞ்சனுக்குக் காய்ச்சல் வந்த போது தம்பதிக்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு ஊடலுக்குப் பிறகு இத்தனை நாட்களும் வழக்கம் போலத் தடையில்லாமல் சென்று கொண்டிருந்தது.

‘அப்படியே சென்றால் எப்படி?’ என்ற எண்ணம் விதிக்கு தோன்றியதோ? ஜீவரஞ்சனின் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை உணர ஆரம்பித்தாள் தனுஸ்ரீ.

திருமணம் முடிந்ததில் இருந்து மூன்று மாதமாகத் தினமும் ஓட்டப் பயிற்சிக்குச் சென்றவன், இந்த ஒரு மாதமாக பயிற்சிக்குச் செல்வதையே விட்டிருந்தான்.

எப்பொழுதும் வழக்கமாக ஆபிஸ் விட்டு ஏழு மணி அளவில் வீடு வந்து விடுபவன், இப்பொழுது வீடு வர ஒன்பது மணியாகியது.

“ஏன் நேரமாகின்றது?” என்ற தனுவின் கேள்விக்கு “வேலை அதிகம் அதான்” என ஒற்றைவரி பதிலே கிடைத்தது. சும்மாவே வார்த்தைகளை அளந்து பேசுபவன், வேலை பழுவில் பேச்சை இன்னும் குறைத்துக் கொண்டான்.

அதில் தனியாக வாடுவது தனுஸ்ரீயாகத் தான் இருக்கும். அப்படியே நாட்கள் சென்றிருந்தால் கூடப் பிரச்சனை வராமல் இருந்திருக்கலாம்.

ஆனால் இத்தனை நாட்களும் இல்லாத அளவிற்கு இப்போது அடிக்கடி ஜீவாவிடம் மாற்றங்கள் ஏற்பட்டன. எதற்கு எடுத்தாலும் எரிச்சல், கோபப்படுவதை வாடிக்கை ஆக்கிக் கொண்டான்.

சின்னச் சின்ன விஷயத்திற்கு எல்லாம் சிடுசிடுத்தான். அவள் எதுவும் கேட்டால் சரியாகப் பதில் சொல்லாமல் வாட்டினான். அவன் செய்வது தனுஸ்ரீக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனாலும் பொறுமையாக இருந்தாள்.

அவள் பொறுமையும் பறக்கும் நாளும் வெகு தூரத்தில் இல்லை.

ஜீவா வீட்டுக்கு வர ஒன்பது மணி என்றிருந்தது சில நாட்களாக நள்ளிரவு என்றானது.

ஒரு நாள் சிறிது பொறுமை இழந்தவள் “ஏன் ரஞ்சன் இப்படிப் பண்றீங்க? தினமும் நடுசாமம் வர்றீங்க. நான் இங்கே தனியா கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கேன். அட்லீஸ்ட் வீட்டுக்கு வந்தாவது உங்க வேலையைப் பாருங்களேன்” எனச் சலிப்பாகக் கேட்டவளை நிதானமாகப் பார்த்தவன்,

“நீ முதல என்னைப் புரிஞ்சுக்கோ தனு. என் வேலை அப்படி இருக்கு” என்றான் இழுத்து வைத்த பொறுமையுடன்.

“வேலைனா எல்லாருக்கும் டென்ஷன் இருக்கத் தான் செய்யும்.ஆனா நீங்க என்கிட்ட சரியா பேச கூட மாட்டிங்கிறீங்க. நானும் நீங்க பேசுவீங்கனு உங்க முகத்தையே பார்த்துகிட்டு இருக்கேன். ஆனா வேலை தவிர உங்க கண்ணுக்கு ஒன்னும் தெரிய மாட்டிங்குது” என வருத்தமாகப் பேசிக் கொண்டு போனவளை தன் கையைக் காட்டி நிறுத்தினான்.

“இப்ப உன் வாயை கொஞ்சம் மூடுறியா. நான் இப்படித் தான். நீயும் என்னை இப்படியே ஏத்துக்கப் பழகு. அது முடியலையா பேசாம போ! என்னைத் தொந்தரவு பண்ணாதே” என எரிந்து விழுந்தவனை அதிர்ந்து பார்த்தாள் தனு.

அவளின் அதிர்வை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து அறைக்குச் சென்று கொண்டே “ஏற்கனவே இந்த வேலைனால எனக்கு டென்சன் உச்சத்துக்கு ஏறுது. இதுல இவ கிட்ட பேசனுமாம். என் நிலைமை சந்தோசமா பேசுறாப்புலயா இருக்கு” என அவள் காதில் விழும்படி முணங்கி விட்டுச் சென்றான்.

அதைக் கேட்டவள் கண்ணில் வேதனை தெரிய அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை அறியாமலேயே கண்ணீர் கன்னம் நனைத்தது.

என்னதான் தினமும் தன் சொந்தங்களுடன் பேசினாலும், இருவர் மட்டும் இருக்கும் வீட்டில் ஒருவர் மற்றவரிடம் பேசாமல் தவிர்க்கும் போது உண்டாகும் வலி மனதை உலுக்கும்.

இங்கே ஜீவரஞ்சன் இந்தச் சில நாட்களாக அவளிடம் பேசிய வார்த்தைகள் விரல் விட்டு எண்ணும் அளவில் வரவும் தான் பொறுக்க முடியாமல் கேள்வி கேட்டாள். ஆனால் அவன் சரியாக நின்றுக் கூடப் பேசாமல் தான் தொந்தரவு தருவதாகச் சொல்லிவிட்டு செல்லவும் அவள் மனம் வலித்தது. சோபாவில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தவளை தேற்றத்தான் ஆள்ளில்லை அங்கு.

இது நடந்து ஒரு வாரம் கழித்து ஒரு நாள் தன் ஆபிஸில் இருந்து பதினொரு மணி அளவில் வீட்டை திறந்து உள்ளே வந்த ஜீவரஞ்சன் காலணியைக் கழற்றி எப்போதும் காலணி பலகையில் எடுத்து வைப்பவன், இன்று கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டு எதையும் கவனியாமல் டீப்பாய் மேல் தன் பேக்கை தூக்கி போடுவதைப் போல வைத்துவிட்டுச் சோபாவில் தொப்பென்று அமர்ந்து, கைகளால் தலையைத் தாங்கி அப்படியே அமர்ந்து விட்டான்.

அவன் உள்ளே நுழைந்ததில் இருந்து அவனையே கவனித்தப்படி சோபாவில் அமர்ந்திருந்த தனுஸ்ரீ அவனைப் புரியாமல் பார்த்தாள்.

‘இன்னைக்கு என்னாச்சு இவருக்கு? ஏதோ வித்தியாசம் தெரியுதே?’ எனக் குழம்பியவள், எழுந்து அவன் அருகில் போய் அமர்ந்தாள். அவள் வந்த அரவம் கூட உணராமல் தன்னுள்ளேயே மூழ்கி இருந்தான் ஜீவரஞ்சன்.

அவனின் தோளின் மீது கையை வைத்த தனு “என்னங்க” என்றாள்.

அதில் கூடக் கலையாமல் இருக்கவும் தோளை அசைத்து உலுப்பினாள். அதில் லேசாக உணர்வு பெற்றவன் “ப்ச்” என அவளின் கையைத் தட்டிவிட்டான்.

அவன் அப்படிச் செய்யவும் முகம் சுருங்கினாள். ஆனால் அவனின் முகத்தில் தெரிந்த வலியைப் பார்த்து, அவன் ஏதோ தாங்க முடியாத வேதனையில் இருப்பதாகப் பட்டது. அதனால் அவனின் செயலை ஒதுக்கி வைத்து விட்டு ‘என்னாச்சு? ஏன் இப்படி இருக்கார்னு தெரியலையே?’ என உள்ளுக்குள் பதறினாள்.

“ஏன் இப்படி இருக்கீங்க? அதையாவது சொல்லுங்க! எனக்குப் பதட்டமா இருக்கு” என்றாள்.

அவளின் பதட்டத்தைப் பார்த்துத் தன்னைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்று கொண்டே “ஒன்னும் இல்லை தனு. நீ பதட்டப் படாதே! கொஞ்சம் வேற டென்ஷன் சரி ஆகிருவேன்” என அவளைச் சமாதானப்படுத்தினான்.

அவன் தன்னிடம் சொல்லாமல் தவிர்ப்பதாகத் தோன்றவும், ‘சரி பொறுமையா என்னனு கேட்போம்’ என நினைத்து “சரி சாப்டீங்களா, இல்லையா?” எனக் கேட்டாள்.

“ம்ம் இல்லை, பசிக்கலை. என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடு. நீ போய்ப் படு. நான் வர்றேன்” என்றான்.

இவனிடம் பேசினால் எல்லாம் வேலை நடக்காது எனத் தெரிந்து வைத்திருந்த தனு அமைதியாக எழுந்து சமையலறைக்குச் சென்றவள், திரும்பி வரும் போது கையில் சாதத்தில் ரசம் ஊற்றி கரைத்து ஸ்பூன் போட்டு எடுத்து வந்து ஊட்டுவதற்கு வாயை திறக்க சொன்னாள்.

அவன் ‘வேண்டாம்’ எனத் தலை அசைக்கவும் “ப்ளீஸ்” என்றாள். அதற்கு மேல் மறுக்காமல் வாயை திறந்தான். அவன் மீண்டும் மறுக்கும் முன் கொடுத்துவிட எண்ணி வேக வேகமாக ஊட்டிவிட்டாள். தன் வயிறு நிரம்பவும் தான் அவளைப் பார்த்து “நீ சாப்டீயா?” எனக் கேட்டான்.

“ம்ம் சாப்பிட்டேன்” என்றவள் அவனுக்குத் தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்து “எழுந்து போய் டிரஸ் மாத்திட்டு படுங்க! நான் லைட் பண்ணிட்டு வர்றேன்” என்றாள்.

ஆனால் அவனோ “நான் உன்னைப் போய்த் தூங்க சொன்னேன். நீ போ! நான் வருவேன்” என்றான்.

“இங்க பாருங்க ரஞ்சன்! உங்களுக்கு ஏதோ மனகஷ்டம்னு புரியுது. அது என்னனு என்கிட்ட சொல்லவும் மாட்டீங்கறீங்க. உங்களுக்குச் சொல்ல இஷ்டம் இல்லனா விடுங்க பரவாயில்ல. அதுக்காக இப்படியே நீங்க வருத்தப்படுவதைப் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது”

“நீங்க இன்னும் இப்படியே இருந்தா எனக்கு என்ன விஷயம் ஏன் இப்படி இருக்கீங்கன்னு சொல்லிட்டு இங்க இருங்க. இல்லையா போய்ப் படுங்க” என்றாள்.

‘இவளிடம் சொல்வதற்குப் படுப்பதே மேல்’ என நினைத்தானோ அமைதியாக எழுந்து சென்றான்.

அவன் நடந்து போவதை பார்த்துவிட்டு “ஹ்ம்ம் என்னனு சொல்றாரா பாரு. சரியான அமைதி மன்னன்” என மனதிற்குள் கடிந்து கொண்டு விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு தானும் படுக்கச் சென்றாள்.

உள்ளே இலகுவான உடைக்கு மாறி கட்டிலில் படுத்திருந்த ஜீவரஞ்சன் மேலே ஓடும் காற்றாடியையே வெறித்த படி இருந்தான். அவன் மனதில் வேதனை நிரம்பி வழிந்தது. இன்று தன் காதில் விழுந்த வார்த்தைகளை எண்ணி மனம் கசந்தான்.

‘நான் எங்கே தவறு செய்தேன்? நண்பன் என நம்பி இருந்தது என் தவறா? என் நண்பன் என இருந்தவன் என்னென்ன வார்த்தைகளைப் பேசி விட்டான்? கூடவே இருந்து முதுகில் குத்துவது என்பது இது தானா? அவன் பொய்த்துப் போவான் என நினைக்கவே இல்லையே?’.என மீண்டும் மீண்டும் நண்பன் என நினைத்தவனின் செய்கையை எண்ணி வருந்தியவன். மூச்சுக் காற்றுக்குத் தவித்தவன் போல வேக வேகமாக மூச்சை இழுத்து விட்டான்.

அதைத் தாங்க முடியாமல் எழுந்து அமர்ந்து தன்னை ஆசுவாச படுத்திக் கொள்ள முயன்றான். அப்போது அறைக்குள் நுழைந்த தனு அவனின் வேகமான மூச்சை பார்த்து பதறி அருகில் ஓடி வந்தாள்.

அவனின் அருகில் அமர்ந்து “என்ன செய்து ரஞ்சன்? ஏன் இப்படி மூச்சு வாங்குது?” எனக் கேட்ட படி அவனின் நெஞ்சை நீவி விட்டு அமைதி படுத்த முயன்றாள்.

அவளின் பதட்டத்தைப் பார்த்துத் தன்னைச் சமாளித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக மூச்சு விட ஆரம்பித்தான். அவன் சாதாரணமாக மூச்சு விடவும், அவளும் பதட்டம் தணிந்து அவனை அணைத்துக் கொண்டு கண்மூடி அவன் மார்பில் சாய்ந்தாள்.

அவனின் மார்பில் இருந்தபடியே “ஏன் இப்படி வந்தது ரஞ்சன்?” எனக் கேட்டாள்.
தனக்கு வந்த மூச்சுத் திணறலில் தானுமே பயந்திருந்த ஜீவா மனைவியை இறுக அணைத்துப் பிடித்த படி “தெரியலை தனு. இந்த ரூம்மே காத்தோட்டம் இல்லாம இருக்குறது போல இருக்கு. அதனாலயா இருக்கும்” என்றான்.

அவன் அப்படிச் சொல்லவும் நிமிர்ந்து அந்த அறையைப் பார்வையிட்டாள். அறையில் குளிர்சாதனம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த அறையின் கதவும் விரிய திறந்து தான் இருந்தது. குளிர்சாதனத்தால் அவளுக்கு லேசாகக் குளிர்ந்து கொண்டிருந்த நிலையில் எப்படிக் காத்தோட்டம் இல்லை என்று சொல்கிறான் எனப் புரியாமல் முழித்தாள்.

அவளை மேலும் சிந்திக்க விடாமல் ஜீவாவிடம் தெரிந்த ஒரு வித பதட்ட நிலை தனுவை திசை திருப்பியது. “என்ன செய்து ரஞ்சன்? என்னனு சொல்லுங்களேன்” எனக் கேட்டவளை கண்டு கொள்ளாமல் அப்படியே படுத்துக் கொண்டான்.

அவளும் அவன் மீதே சாய்ந்து படுக்கவும், தன் பதட்டத்தைக் காட்டி கொள்ளாமல் கண்களை இறுக மூடி கொண்டான். அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த தனு ‘கேட்டாலும் சொல்ல மாட்டிங்கிறார். தனக்குள்ளேயே மருக வேற செய்றார். இவரை எப்படித் தான் சரி பண்றது?’ என நினைத்தாள்.

அவளின் யோசனையில் ஒன்று தோன்ற அவனை அந்த நிலையில் இருந்து மாற்றுவது ஒன்றே அவளின் குறிக்கோளாகக் கொண்டு அவனின் கவனத்தைத் தன் மேல் திருப்ப முயன்றாள்.

அவன் அசையாமல் இருக்கவும் அவனை இன்னும் நெருங்கி படுத்தவள் மெதுவாக அணைத்து தன் மேல் அவனின் கவனத்தைத் திருப்ப வைத்து அதில் வெற்றியும் கண்டாள்.

அங்கே அவர்களின் தாம்பத்தியமே அவனுக்கு மருந்தானது.

சிறிது நேரம் கழித்து அவன் உறங்கவும், அவனையே பார்த்த தனுவின் மனதில் ‘என்ன நடந்துருக்கும்?. ஏன் இப்படி மூச்சு விட்டார்? இதை என்னனு தெரிந்து கொண்டே ஆக வேண்டும்?’ என நினைத்தப்படி கண்ணயர்ந்தாள்.

மறுநாள் காலையில் ஜீவா அலுவலத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது அவன் பின்னால் வந்து நின்று “ரஞ்சன் உங்களுக்கு ஏன் நைட் அப்படி மூச்சு வாங்குச்சு? எனக்குப் பயமா இருக்கு. வாங்க டாக்டர்கிட்ட போகலாம்” என அழைத்தாள்.

அலுவலகத்திற்குச் செல்லும் அவசரத்தில் இருந்தவன் “அது எல்லாம் ஒன்னும் வேணாம். எனக்கு எதுவும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன்” எனச் சொல்லிக் கொண்டே சாப்பாட்டு மேஜைக்கு வந்தவன் சாப்பிட ஆரம்பித்தான்.

அவனுக்குப் பரிமாற்றிக் கொண்டே “எதையும் அப்படி அசால்ட்டா விடக்கூடாது ரஞ்சன். என் மனதிருப்திக்காவது ஒரு முறை வாங்களேன்” எனக் கெஞ்சலாக அழைத்தாள்.

“இங்க பாரு தனு! எனக்கு ஒன்னும் இல்லைனு சொன்னா விடு. அதுவும் இல்லாம எனக்கு ஹாஸ்பிடல் வர்றதுக்கு எல்லாம் நேரம் இல்லை” என்றவன் எழுந்து கையைக் கழுவிவிட்டு “நான் கிளம்புறேன்” எனச் சொல்லிக் கொண்டே நகர்ந்தான்.

செய்வதறியாது அப்படியே நின்றிருந்த தனுஸ்ரீக்கு அவனுக்கு என்ன பிரச்சனை எனத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் எண்ணம் வலுப்பெற்றது.

இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்த பத்து நாட்கள் கழித்துத்தான் நடுஇரவை தாண்டிய பிறகும் வர நேரமாகும் எனக் கூடச் சொல்லாமல் ஜீவா இருந்ததும், தனு போன் செய்த போது எரிந்து விழுந்ததும் நடந்தது.