மனதோடு உறவாட வந்தவளே – 5

அத்தியாயம் – 5

நாட்கள் விரைந்தோடி சடுதியில் விடிந்தால் காலையில் திருமணம் என வந்திருந்தது.

தனுவின் மனம் மணப்பெண்ணுக்கே உரிய வகையில் படபடப்பு, எதிர்பார்ப்பு, சொல்ல தெரியாத பயம், பிறந்த வீட்டை விட்டு செல்ல போகும் கவலை எல்லாம் கலந்திருந்தது.

அனைத்தையும் விட ஜீவாவுடனான வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு கலந்த பயம் அதிகம் இருந்தது.

பயத்திற்குக் காரணம் ஜீவா பற்றி அவளுக்கு முதல் நாள் அன்றே ஏற்பட்ட ‘அவனுக்கு என்னை நிஜமாகவே பிடித்திருக்கின்றதா இல்லையா?’ என்ற குழப்பம் இன்னும் தீராததால் தான்.

இத்தனை நாட்களில் ஜீவா அவளிடம் பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

போன் பேசிய இரண்டு தடவையும் அளவாக, பொதுவாகத் தான் பேசினான்.

அவளுக்கு அவனை அறிந்து கொள்ளும் வகையில் பேச ஆசை தான் என்றாலும் அவனே எதுவும் பேசாத போது தான் எப்படிப் பேச்சை வளர்ப்பது? என்ற தயக்கத்தில் அவளும் பதில் சொல்வதோடு நிறுத்திக் கொள்வாள்.

திருமணத்திற்கு முதல் நாள் நடக்கும் நிச்சயதார்த்ததிற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போதே ஜீவாவை பற்றிய சிந்தனையில் மூழ்கி இருந்தாள் தனுஸ்ரீ.

அப்பொழுது அங்கே வந்த சங்கரி, ” என்னம்மா ரெடி ஆகிட்டீங்களா? மாப்பிள்ளையை இன்னும் கொஞ்ச நேரத்தில் அழைச்சுட்டு வந்துடுவாங்க. வந்ததும் நிச்சயதார்த்தம் நடக்கும். சீக்கிரம் ரெடியாகி இருங்க” எனப் பெண்ணிற்கு நடக்கப் போகும் திருமணம் தந்த பரபரப்பில் படபடவெனப் பேசினார்.

அங்கே இருந்த நித்யா “அம்மா கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க இங்க எல்லாமே ரெடி. நம்ம தனு தான் இவ்வளவு நேரம் ஏதோ கனவுலகுல இருந்தா. இப்ப நீங்க மூச்சு விடாம பேசினதுல இந்த உலகத்துக்கு வந்துட்டா. அவளைப் பாருங்க! இது பூலோகமா, வேற லோகமானு முழிக்கிறதை” எனத் தனுஸ்ரீயை காட்டி கிண்டலடித்தாள்.

“ச்சூ! சும்மாயிரு நித்து!” என வெட்கத்துடன் தோழியைக் கண்டித்த தனு “நான் கிளம்பிட்டேன்ம்மா! நீங்க டென்சன் ஆகாம இருங்க. அப்பாவும், தருணும் என்ன செய்றாங்கம்மா? இங்க வந்ததுல இருந்து பார்க்கவே முடியலை இரண்டு பேரையும். நான் மேடைக்குப் போறதுக்கு முன்ன வர சொல்லுங்கம்மா. அப்பாகிட்ட ஆசீர்வாதம் வாங்கணும்” என்றாள்.

“இரண்டு பேருக்கும் வேலை சரியா இருக்கு. பார்த்துட்டு இருக்காங்க ” என்றவர் அலங்காரத்தில் ஜொலித்த தனுவை ரசனையுடன் பார்த்தார்.

மகளைப் பூரிப்புடன் பார்த்து அவளின் கன்னத்தை வருடி முத்தமிட்டு “போய் அப்பாவை வரச் சொல்றேன்” என வெளியில் சென்றார்.

தனுவுடன், நித்யாவும் உறவுக்கார தோழிகளும் சலசலத்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்த சேகரனிடம் ஆசீர்வாதம் வாங்க குனிந்த மகளை நிமிர்த்தி மனம் நெகிழ பார்த்து விட்டு லேசாக அணைத்து தலையை வருடி “நல்லாயிரும்மா” என வாழ்த்தினார். தருணும் வந்து வாழ்த்து சொல்லிவிட்டுப் போனான்.

மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும் சிறிது நேரத்தில் மணப்பெண்ணை அழைத்துப் பெரியவர்கள் தாம்பூலம் மாற்றித் தனுவை நிச்சயப் புடவையைக் கட்டிக் கொண்டு வர சொன்னார்கள்.

உடை மாற்றிவிட்டு வந்தவளை மேடையில் ஜீவரஞ்சனின் அருகில் அமர வைத்தார்கள்.

ஜீவாவின் அருகில் அமர்ந்தவள் மெதுவாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். அவனும் அப்போது தான் அவளைப் பார்த்துவிட்டு திரும்பி அமர்ந்திருந்தான். ஆனால் அவள் பார்க்கும் போது இவளை கண்டு கொள்ளாமல் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது.

மனம் லேசாகச் சிணுங்க முகத்தில் லேசான வாட்டம் தெரிய நேராக வந்திருந்த உறவினர்களைப் பார்த்தவாறு அமர்ந்தவள். அனைவரும் தங்களையே பார்ப்பது உணர்ந்து முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தாள்.

உறவினர்கள் ஒவ்வொருவராக வாழ்த்து சொல்ல வரவும் எழுந்து நின்று இருவரும் புன்னகை முகமாகப் புகைப்படத்திற்கு அவர்களுடன் நின்றனர்.

இரவு நிச்சயதார்த்தம் மட்டும் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. அனைவரும் வாழ்த்தி சென்றதும் இருவரையும் சாப்பிட அழைத்துச் சென்றனர்.

இருவரும் அருகருகில் அமர்ந்ததும் பரிமாறிவிட்டு சென்ற பிறகு தனுவின் பக்கம் மெல்ல சாய்ந்த ஜீவா “ஏன் மேடைல ஒரு மாதிரி இருந்த?” எனக் கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.

சாப்பிட கையைக் கொண்டு போன தனு அப்படியே கைகள் நிற்க ‘என்ன இவன் நம்மிடம் தான் பேசினானா?’ என்ற பார்வையுடன் அவனைப் பார்த்தாள். அதுவும் அவனின் அந்தக் குரல் அவளை ஏதோ செய்தது.

“என்ன ஏன் மேடைல வந்து உட்கார்ந்ததும் ஒரு மாதிரி உன் முகம் ஆச்சேனு கேட்டா இந்த முழி முழிக்கிற?” அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

அவன் மீண்டும் கேட்கவும் உணர்வுக்கு வந்தவள் “இல்லையே! ஒன்னும் இல்லை. நான் நல்லா தான் இருந்தேன்” என்று சமாளித்தவள் ‘பின்ன நீ ஏன் என்னைப் பார்க்கலை? அதான் அப்படி இருந்தேன்னா சொல்ல முடியும்?’ என மனதில் எண்ணியவள்,

‘நான் இவர் என்னைப் பார்க்கலைனு வருத்தப்பட்டா, இவர் என்னனா என்னைப் பார்த்ததும் மட்டும் இல்லாம என் வாட்டத்தையும் கவனிச்சுருக்காரே?’ என முகம் மலர்ந்தவள் அவனைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தாள்.

அவளின் புன்னகையில் அவனின் கேள்வியும் மறந்துதான் போனதோ?? அவளை ரசனையுடன் பார்த்துவிட்டு அதற்கு மேல் எதுவும் கேட்காமல் சாப்பிட ஆரம்பித்தான்.

தன்னை ஜீவா கவனித்தான் என்பதிலேயே அகமகிழ்ந்து போன தனுவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அப்படியே அவளோடு ஒட்டிக்கொண்டது.

எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் ஜீவரஞ்சனின் நண்பர்கள் தங்கள் இருப்பைக் காட்ட ஆரம்பித்தனர்.

பாட்டைப் போட்டு நடனம் ஆடவும், பெண்ணையும் மாப்பிள்ளையையும் கேலி செய்யவும் என யாரும் முகம் சுழிக்காத அளவிற்கு அந்த இடத்தையே கலைகட்ட வைத்தார்கள்.

நிதினும், ரஞ்சிவ்வும் ஜீவாவுடனே சுற்றிக்கொண்டு கேலி செய்து தள்ளினர். “போதும் விடுங்கடா!” என ஜீவா சொல்லவும் தான் விட்டார்கள்.

ஜீவாவின் அருகில் இருந்த தனுவிடம் “நீங்க பாவம் சிஸ்டர் இவன்கிட்ட நீங்க என்னபாடு படப் போறீங்களோ? அதை நினைச்சாலே எனக்குப் பயமா இருக்கு” என்றான் நிதின்.

‘ஏன் இப்படிச் சொல்கிறான்?’ எனப் பயந்தது போலப் பார்த்த தனுவை பார்த்து “டேய் நிதின்! பேசாம இருடா! பாரு சிஸ்டர் பயப்படுறாங்க” என்ற ரஞ்சிவ் “நீங்க பயப்படாதிங்க சிஸ்டர். அவன் சும்மா ஏதோ உளருவான்” என அவளைச் சமாதானப்படுத்தினான்.

“ஒன்னுமில்லை சிஸ்டர். ஜீவா சரியான வொர்க்ஹாலிக். வேலைனு வந்துட்டா வீட்டையே மறந்து வேலை பார்ப்பான். அதான் நீங்க பாவம்னு சொன்னேன்” என நிதின் சொல்லவும்,

“அடப்பாவி! என்னைப் பத்தி போட்டுக்கொடுக்கத்தான் இங்க வந்தீங்களா? போங்கடா அங்கிட்டு” என அவர்களைப் போலியாக விரட்டினான் ஜீவா.

“இன்னைக்குத் தாண்டா அந்த வேலையைப் பார்க்க முடியும். அப்புறம் நீ குடும்பஸ்தனா ஆகிருவ. இனி எங்க கூட நின்னு பேசனாலும் உனக்கு நேரம் இருக்குமோ, என்னமோ?” என்று நிதினும், ரஞ்சிவும் கேலி செய்து கொண்டே தங்கள் போட்டுக் கொடுக்கும் வேலையைச் செவ்வனே செய்தனர்.

ஆனந்தும் தன் அண்ணன் கல்யாணத்தில் செய்ய நினைத்திருந்த அத்தனை கலாட்டாவும் சந்தோசமாகச் செய்தான்.

பெரியவர்கள் யாருக்கும் தொந்தரவு இல்லாத அவர்களின் கலாட்டாக்களை மற்றவர்கள் ரசித்துக் கொண்டனர்.


மறுநாள் காலை திருமண வீட்டாரின் மனமகிழ்வுடன் விடிந்தது.

காலையில் இருந்து பரபரப்பும் சந்தோசமுமாகச் சுற்றிய இரு குடும்பத்து ஆட்களும், திருமணத்திற்கு வந்த கூட்டத்தின் சலசலப்பும், அன்றைய நாயகன், நாயகி திருமணக் கோலத்தில் தயாராகி இருந்த அழகும், என அந்தத் திருமண மண்டபமே கலகலத்தது.

ஜீவரஞ்சன் இன்று பட்டு வேட்டி, சட்டையில் மாப்பிள்ளைக்களையுடன் இன்னும் கம்பீரமாகக் காணப்பட்டான்.

தனுஸ்ரீ அழகான பட்டுபுடவையில் சகல அலங்காரத்துடன் முகமும், மனமும் மின்ன அழகாக ஜொலித்தாள்.

நேற்று போல் இல்லாமல் இன்று ஜீவா அவளைப் பார்த்ததும் மட்டும் இல்லாமல் அவளை ரசித்துப் பார்த்ததையும் கண்டவள் மனம் சும்மாவா இருக்கும்? ரெக்கையில்லாமல் தான் பறந்தாள்.

சடங்குகள் அனைத்தும் செய்து நல்ல முகூர்த்த நேரத்தில் தன் கையில் இருந்த பொன் தாலி கட்டி தனுஸ்ரீயை தன்னில் பாதியாக மாற்றிக் கொண்டான் ஜீவரஞ்சன்.

தன் கழுத்தில் தாலி ஏறும் சமயத்தில் கடவுளை தொழுது தங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டிக்கொண்டாள் தனுஸ்ரீ.

திருமணக் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் வாழ்த்தி முடிய மதியம் ஆகியது.

மதிய உணவை முடித்துவிட்டு மணமக்களை ஜீவரஞ்சன் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

ஆரத்தி எடுத்து வரவேற்றுப் பால்பழம் கொடுக்கும் சடங்கு செய்தனர்.

தனுவின் பெற்றோர் சிறிது நேரம் இருந்தவர்கள் நாளை சென்னையில் வரவேற்பு வைத்திருந்ததால் மாலையே கிளம்புவதாக இருந்தனர்.

“சரிங்க சம்பந்தி நாங்க கிளம்புறோம். நீங்க எல்லாரும் நாளைக்கு மதிய உணவுக்கு அங்க இருக்குற மாதிரி வந்துருங்க” என்ற சேகரன் “போய்ட்டு வர்றோம் மாப்பிள்ளை. போயிட்டு வர்றோம் தனும்மா. நாளைக்கு வந்துருங்க” என்றவர் குரல் லேசாக நெகிழ்ந்து இருந்தது.

அடுத்து சங்கரி, தனுவிடம் “இங்க அத்தையும், மாமாவும் இருப்பாங்கடா நாங்க கிளம்புறோம்” என்றுவிட்டு அவள் கையை இறுக பிடித்துப் பின் விடுவித்தார்.

தருணும் அக்காவின் அருகில் வந்தவன் பேச கூட முடியாமல் போய் வருவதாகத் தலையை ஆட்டினான்.

தனு பிறந்த வீட்டினரின் விடை பெறுதலுக்குக் கண்கலங்க விடை கொடுத்தாள். அவர்கள் செல்லும் போது மேலும் மனதிற்குக் கஷ்டமாகதான் இருந்தது. ஆனால் நாளையே அங்கே செல்வோம் என்பது சிறிது ஆறுதலாக இருந்ததால் அமைதியாக இருந்தாள்.

ஆனாலும் அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் அருகில் இருந்த ஜீவா “ரிலாக்ஸ் தனு” என்றுவிட்டு மென்னகை புரிந்தான். அதிலேயே அவளின் முகம் மலர தானும் புன்னகை புரிய ஆரம்பித்தாள்.


இரவு உணவை முடித்து விட்டு தனுவை ஜீவாவின் அறைக்கு அனுப்பிவைத்தனர். உள்ளே நுழைந்தவள் பதட்டமாக உணர்ந்தாள்.

அவளின் பதட்டத்தை உணர்ந்தது போல “உட்காரு தனு. ஏன் இவ்வளவு பதட்டபடுற? அமைதியா இரு!” என்ற ஜீவரஞ்சனின் குரலில் இதுவரை இல்லாத உரிமை அதிகமாகத் தெரிந்தது.

“ம்ம்” எனத் தலையசைத்தவள் கட்டிலில் அமர்ந்து தன்னை நிதானத்திற்குக் கொண்டு வர முயன்றாள்.

அவளின் முயற்சியைக் கண்டவன் அவளின் விரல்களைப் பிடித்து இன்னும் தன் அருகில் இழுத்தவன் “பயப்பட எதும் இல்லை தனு. ஏதாவது பேசு பயம் போயிரும்” என்றான்.

‘என்னது பேசனுமா? நானா பேச மாட்டேன்னு சொல்றேன். எனக்கு வார்த்தையே வரமாட்டிங்குதே? நான் என்ன பண்ண?’ மனதிற்குள் நினைத்தவள் அமைதியாக இருந்தாள். அதுவும் என்றும் இல்லாத அவனின் உரிமை குரலே அவளை மேலும் தடுமாற வைத்தது.

அவளைச் சமாதான படுத்தும் வகையில் மீண்டும் ஜீவாவே பேச ஆரம்பித்தான்.

மெல்ல, மெல்ல அவள் சகஜ நிலைக்கு வரவும் மெதுவாக அவளைத் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தான்.

அவர்களின் மணவாழ்க்கை சந்தோஷமாக ஆரம்பமாகியது.


காலையில் முதலில் கண்விழித்த தனு தன் அருகில் லேசாக அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த தன்னுடையவனாக முழுமையாக மாறி விட்டுருந்த ஜீவாவை கண்டாள்.

முதல் முதலாகப் போட்டோவில் பார்த்தவுடனே தன் மனதை கவர்ந்த அவனின் முகத்தைப் பார்த்தாள்.

முழித்திருக்கும் போது அவளைச் சில சமயம் குழப்பத்தில் ஆழ்த்திய அந்தக் கண்கள் இப்பொழுது அமைதியாகத் துயில் கொண்டிருந்தது.

‘புகை பழக்கமும், எனக்கும் ரொம்பத் தூரம்’ என உணர்த்தும் அவனின் உதடுகளும், அவனின் அழகுக்கு அழகு சேர்க்கும் அளவான மீசையும்’ என அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

பின்பு அவன் எழும்முன் குளித்துவிட்டு வர நினைத்து எழுந்தவள் மெதுவாகப் பட்டும் படாமல் அவனின் கன்னத்தில் தன் முத்திரையைப் பதிந்து விட்டு எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.

அவள் கதவு மூடும் சத்தம் கேட்டு கண்திறந்த ஜீவா, தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டே சந்தோசமாகச் சிரித்தான்.

அவள் அவனை விட்டு விலகும் போதே அவனுடைய உறக்கமும் கலைந்துவிட்டது. ஆனால் சோர்வாக இருந்ததால் எழுந்து செல்ல மனம் இல்லாமல் கண்ணைத் திறக்காமல் இருந்தான். அவள் தன்னைப் பார்த்ததை உணர்ந்தவன் ‘என்ன தான் செய்கிறாள் பார்ப்போம்’ என உறங்குவதாகக் காட்டிக் கொண்டான்.

எழுந்து செல்லும் முன் செய்த அவளின் பட்டும் படாத முத்திரை அவனுக்குச் சிரிப்பை வரவைத்து விட்டது.

ஆனால் அவள் வெளியே வந்த போது ‘ஒன்றுமே தனக்குத் தெரியாது’ என்பதைப் போலக் காட்டிக் கொண்டு அவளிடம் காலை வணக்கத்தைச் சொன்னான்.

அவளும் பதிலுக்குச் சொல்லி விட்டு அன்றைக்கு அவளின் வீட்டுக்கு செல்ல போவதால் கிளம்பத் தயாரானாள்.

“நீங்களும் குளிச்சுட்டு கிளம்புறீங்களா? அத்தை கோவிலுக்குப் போய்ட்டு ஊருக்கு போகணும்னு சொன்னாங்க” என்றாள்.

“கிளம்பலாமே” என்றவன், அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் முத்திரைக்குப் பதில் கொடுத்து விட்டு அவள் சுதாரிப்பதற்குள் குளியலறைக்குள் புகுந்து விட்டான்.

“ஆ” எனச் சின்ன அதிர்வுடன் நின்றிருந்தவள் பின்பு தெளிந்து “அமைதி மன்னன்” அப்பப்ப “அதிரடி மன்னனாகவும்” மாறுகிறாரே என்று அவனைப் பற்றி யோசித்தபடி அப்படியே நின்றிருந்தவள் கண்ணாடியை பார்த்து “ஆனா ‘அமைதி மன்னன்’ தான் அவருக்கு ரொம்ப பொருந்தி வருது” என வாய்விட்டு சொல்லி கொண்டாள்.

அப்பொழுது “என்ன? என்னைக் கிளம்பச் சொல்லிட்டு நீ அப்படியே நிக்கிற?” என்ற கேள்வி வந்து கலைத்து திரும்பி பார்க்க வைத்தது.

துவாலை எடுக்க வெளியே வந்த ஜீவாதான் நின்றிருந்தான்.

“இதோ கிளம்பிட்டேன்” எனத் திரும்பி நின்று தலை வாற ஆரம்பித்தாள்.

அவள் சொன்ன அமைதி மன்னன் அவனின் காதிலும் விழுந்தது. ஆனாலும் அதை பற்றி ஒன்றும் கேட்காமல் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே மீண்டும் உள்ளே சென்றான்.

கிளம்பி தயாராகிக் காலை உணவை முடித்துக் கொண்டு சென்னைக்குச் செல்லும் வழியில் இருந்த கோவிலுக்குச் சென்றுவிட்டு அப்படியே சென்னைக்குப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

ஜீவாவின் பெற்றோர் தம்பி இன்னும் சில நெருங்கிய உறவினர்கள் என ஆட்கள் கிளம்பியதால் ஒரு வேன் பிடித்து அதிலேயே அனைவரும் சென்றனர்.

சென்னை வந்ததும் தனுவின் குடும்பமும், உறவினர்களும் வாசலுக்கு வந்து மாப்பிள்ளை பொண்ணுக்கு ஆர்த்திக் காட்டி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

மதிய உணவை முடித்துக் கொண்டு மாலை வரவேற்பிற்குத் தயாராகினார்கள்.

தனுவின் கல்லூரி தோழிகள், கடை ஊழியர்கள், திருமணத்திற்கு வரமுடியாத சொந்த பந்தங்கள், ஜீவாவின் அலுவலக நண்பர்கள் என இங்கேயும் கூட்டம் நிரம்பியது.

வரவேற்பு நல்ல படியாக முடிந்து சந்தோசமாக வீடு வந்து சேர்ந்தனர். பின்பு புதுமணத் தம்பதிகளை மட்டும் சென்னையில் விட்டுவிட்டு மற்ற ஜீவாவின் சொந்தங்கள் அனைவரும் புதுச்சேரிக்கு கிளம்பி சென்றார்கள்.


தனுஸ்ரீயின் சொந்தங்கள் ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும் கிளம்பி இருந்தார்கள்.

மகளுக்கு நல்ல படியாகத் திருமணத்தை முடித்து வைத்த பூரிப்புடன் இருந்தனர் சங்கரியும், சேகரனும். அந்தச் சந்தோசத்துடனே அவரவர் அறைக்குப் படுக்கச் சென்றனர்.

உள்ளே வந்த சங்கரி “இப்ப எனக்கு ரொம்பத் திருப்தியா இருக்குங்க. மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க நாங்கனு எதுவும் குத்தம், குறை சொல்லாம தனுவோட மாமியாரும் சரி, மாமனாரும் சரி அப்படித் தன்மையா நடந்து கிட்டாங்க.

நம்ம மாப்பிள்ளை அமைதியான டைப்பா தெரிஞ்சாலும் நல்ல குணசாலியா தெரியுறார். அந்தத் தம்பி ஆனந்த் மட்டும் என்ன ரொம்ப நல்ல மாதிரியா இருக்கார் ” என மகளின் புகுந்த வீட்டு பெருமைகளை அடுக்கினார்.

அறைக்குள் வந்ததில் இருந்து மூச்சுவிடாமல் பேசிய சங்கரியை புன்சிரிப்புடன் பார்த்தார் சேகரன்.

அவரைக் கவனித்த சங்கரி “என்ன சிரிக்கிறீங்க?” எனக் கேட்டார்.

“ஹாஹா” எனச் சந்தோசமாகச் சிரித்த சேகரன் “இது மனமகழ்ச்சிமா! அதான் சிரிக்கிறேன். நீ இப்ப சொல்லிட்ட நான் சொல்லலை அவ்வளவு தான். ஆனா மனசுக்கு நிறைவா இருக்கு இந்த நிமிடம்” எனச் சொல்லி தன் மகிழ்ச்சியையும் மனைவியிடம் பகிர்ந்து கொண்டார்.

சம்பந்தி வீட்டை பற்றி இப்பொழுது பெருமையாகப் பேசிக் கொண்டவர்களே, இன்னும் சில நாட்களில் அவர்களிடம் கோபத்தைக் காட்டுவோம் என்று நினைத்தும் பார்க்கவில்லை.


அவளின் அறையில் இருந்த ஜீவாவிடம் வந்த தனு கட்டிலில் அமைதியாக அமர்ந்தாள்.

“என்ன தனு இன்னைக்கும் ரொம்ப அமைதியா இருக்க இப்பயும் பயமா?” என மெல்ல பேச்சை ஆரம்பித்தவனைப் பார்த்து “நாம கொஞ்ச நேரம் பேசலாமாங்க?” எனக் கேட்டாள்.

“ம்ம் பேசு தனு” என உடனே சம்மதம் தந்தான். “உங்களை நான் ரஞ்சன்னு கூப்பிடலாமா? இல்ல பேர் சொல்லி கூப்பிட கூடாதா?” எனக் கேட்டாள்.

“உன் விருப்பம் போலப் பேர் சொல்லியே கூப்பிடு தனு”

“ஆமா நீங்க என்னை எப்படிக் கூப்பிடுவீங்க?”.

“தனுனுதான் கூப்பிடுவேன். ஏன் கேட்குற?”

“நீங்க எனக்குனு தனியா எதுவும் பேர் வைக்க மாட்டிங்களா? நான் இப்ப உங்களை ரஞ்சன்னு சொல்ற மாதிரி?”

“ஏன் தனு? தனியா ஒரு ஸ்பெசல் பேர் வச்சுக் கூப்பிட்டாதான் பாசம்னு அர்த்தமா? எல்லாரும் கூப்பிடுற பேரையே நானும் கூப்பிட்டா பாசம் இல்லைனு ஆகிருமா?” என ஜீவா அவளிடம் கேட்ட கேள்வியில் ‘அடேயப்பா! இவர் நிஜமாவே இவ்வளவு நீளமா பேசுவாரா?’ என்பது போல வாயை பிளந்து பார்த்தாள்.

அவளின் பாவனையில் மெல்லிய சிரிப்பை உதிர்த்தவன் “என்ன நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம அப்படிப் பார்க்குற?” எனவும் சுதாரித்தவள்,

“இல்ல, என் ப்ரண்ட்ஸ் எல்லாம் காலேஜ் படிக்கிறப்ப பேசிக்குவாங்க தனிப் பேர் வச்சு கூப்பிடுறதே கணவன், மனைவிக்கு இடைல இன்னும் நெருக்கத்தைக் கூட்டும்னு அதான் கேட்டேன்” எனச் சொல்லியவள், “உங்களுக்கு எப்படிக் கூப்பிட தோனுதோ அப்படியே கூப்பிடுங்க” என்றாள்.

வெளியே அப்படிச் சொல்லிவிட்டாலும் உள்ளுக்குள் ‘தனியா பேர் வச்சுக் கூப்பிட்டா தான் என்ன?’ எனச் செல்லமாகக் கோபித்தும் கொண்டாள்.

அவளின் கோபத்தை உணர்ந்தவன் போல “எனக்கு எப்ப உன்னை வித்தியாசமா பேர் வச்சு கூப்பிட தோணுதோ அப்ப கண்டிப்பா கூப்பிடுவேன்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு சந்தோசத்துடன் “சரிங்க” என்றவளை பார்த்து “என்ன ரஞ்சன்னு கூப்பிட போறேன்னு சொல்லிடு வெறும் ‘ங்க’ போடுற?” எனக் கேட்டுக்கொண்டே, அடுத்து பேசக்கூட இடம்கொடாமல் தனுவை அருகில் இழுத்தவன் அவளின் அதரங்களைத் தன் வசமாக்கினான். அவள் சொல்ல நினைத்த ‘ரஞ்சன்’ அவனுள் சென்று சேர்ந்தது.


மறுநாள் மதிய விருந்தை முடித்துக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்து தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜீவா அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்து தொலைகாட்சியில் கண் வைத்திருந்தாலும் கவனத்தை அதில் வைக்காத தருணை பார்த்தான்.

அவன் நிலையைக் கலைக்கும் விதமாக “என்ன தருண் எங்கே இருக்குக் கவனம்? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என விசாரித்தான்.

ஜீவாவின் கேள்வியில் தன்னிலைக்கு வந்த தருண் “ஒன்னும் இல்ல மாமா நீங்களும் அக்காவும் நாளைக்குக் கிளம்பிருவீங்க. அக்கா இல்லாத வீடு எப்படி இருக்கும்னு தோணுச்சு. மனசுக்கு கஷ்டமா இருக்கு அதான்” என்றான்.

தருணுக்கு, ஜீவாவை ரொம்பப் பிடித்திருந்தது. அதனால் மனதில் தோன்றியதை அப்படியே அவனிடம் சொல்லி விட்டான்.

ஆனால் “ச்சு, சும்மா இருடா!” என அவனை அடக்கப் பார்த்தார் சங்கரி. ‘மாப்பிள்ளை என்ன நினைப்பாரோ?’ என்ற கவலை அவருக்கு.

“பரவாயில்லை அத்தை. என்கிட்ட தானே சொன்னான். அவன் வருத்தம் எனக்கும் புரியுது” என்ற ஜீவா,

“இப்ப என்ன தருண்? நாங்களும் இந்த ஊரில் தானே இருக்கப் போறோம்? உனக்கு எப்ப தனுவை பார்க்கணும்னு தோணினாலும் அங்க வந்துரு. இதுக்கேன் கவலை படுற?” என அவனைச் சமாதானப் படுத்தினான்.

அவனின் பொறுமையான பேச்சில் ” ஓகே மாமா” எனச் சந்தோசமாகத் தலையசைத்தான் தருண்.

இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த சேகரன், தன் மருமகனை பெருமையாகப் பார்த்தார் என்றால், சங்கரி மருமகனின் அனுசரணையான பேச்சில் லேசாகக் கண்கலங்கினார்.

இவ்வளவு நேரம் புது மணபெண்ணின் பொழிவுடன் இருந்தாலும் ‘இந்த வீட்டிற்கு இனி அம்மா வீடு என்ற முறையுடன் மட்டுமே தான் வர முடியும்’ என்ற எண்ணத்தில் கலங்கி போய் அமர்ந்திருந்த தனு தன் கணவனின் பேச்சில் மனம் நெகிழ காதலுடன் அவனைப் பார்த்தாள்.

அவளைப் புரிந்தவன் போல் அருகில் அமர்ந்திருந்த தனுவின் கையை அழுத்தி பிடித்துக் கொண்டான் ஜீவா.

அதைப் பார்த்த பெற்றவர்கள் மனம் குளிர்ந்து பேச வார்த்தைகள் இன்றி அமைதியாகினர். அவர்களின் மனநிலை புரிந்தவன் போல வேறு பேசி இயல்புக்கு மாற்ற முயன்றான் ஜீவரஞ்சன்.


மறுவீட்டு விருந்தை முடித்துக் கொண்டு கிளம்பிய தம்பதியர் அடுத்து மூணார்க்கு தேன்நிலவிற்குச் சென்றனர்.

அங்கே புதுமணத் தம்பதிகளுக்கே உள்ள களிப்புடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுவிட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள்.

அதோடு சேர்ந்து அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனையும் அவர்களுக்காகக் காத்திருந்தது.