மனதோடு உறவாட வந்தவளே – 4

அத்தியாயம் – 4

தனுஸ்ரீயின் வீட்டு வரவேற்பறையில் சோபாவில் ஜீவரஞ்சனும் அவனின் குடும்பத்தினரும் அமர்ந்திருந்தார்கள்.

அங்கே பெண் பார்க்கும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது என்று சொல்வதை விட இரு குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது எனச் சொல்வது பொருந்தும்.

தனு, ஜீவாவின் சம்மதத்தின் விளைவாக வழக்கமான காபி கொடுத்து பார்க்கும் சம்பிரதாயமாக இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் சந்தித்துக் கொள்வது போல ஏற்பாடு செய்து கொண்டார்கள் சேகரனும், அறிவழகனும்.

ஜீவா தன் வீட்டுக்கு வந்து சென்ற மறு வாரத்திலேயே பெண்ணைப் பார்க்க முடிவு செய்து, இதோ இன்று கிளம்பியும் வந்து விட்டார்கள். அது ஞாயிறு விடுமுறை என்பதால் எல்லாருக்கும் வசதியாகவும் போனது.

தனு அவர்களை வரவேற்ற போது ஜீவாவை பார்த்தவள், அதன் பிறகு அவனைத் தொடர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டும், அவ்வப்போது நிமிர்ந்தும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஜீவா ரொம்ப ஆர்வமாகவும் இல்லாமல் கண்டு கொள்ளாமலும் இல்லாமல் சிநேக பாவத்துடன் தனுவை பார்த்தான். அவ்வளவுதான் அவனின் பார்வை.

அறிவழகன் பேச்சை ஆரம்பித்தார். “எங்களுக்குத் தனுஶ்ரீயையும் உங்க குடும்பத்தையும் ரொம்பப் பிடிச்சிருக்கு சேகரன். எங்களுக்கு இந்த ஜாதகம், ஜோசியம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. உங்களுக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இருந்தா பார்க்க வசதியா ஜீவாவின் பிறந்த நேரமும், நாளும் இந்தப் பேப்பரில் குறிச்சு எடுத்துட்டு வந்துருக்கோம். பார்த்துக்கோங்க” என்று தன் சட்டை பையில் வைத்திருந்த பேப்பரை எடுத்துக் கொடுத்தார்.

அந்தப் பேப்பரை கையில் வாங்காமல் “அதை உள்ளே வைங்க அறிவழகன். எங்களுக்கும் உங்க எண்ணம் தான். நானும் உங்களைப் போலவே தனுவோடதை எழுதி வைச்சிருந்தேன். இப்போ அதுக்குத் தேவையேயில்லாமல் போய்ருச்சு. தூரத்து சொந்தகாரங்களா இருந்த நாம இப்போ சம்பந்தி ஆகப் போறதுல எங்களுக்குப் பூரணச் சந்தோஷம்” என்றார் சேகரன்.

“எங்களுக்கும் ரொம்பச் சந்தோஷம். எதுக்கும் நம்ம பிள்ளைங்ககிட்ட அவங்க விருப்பத்தை இங்கேயே எல்லாரும் முன்னேயும் கேட்டுருவோம்” என்ற அறிவழகன், ஜீவாவை பார்த்து “சொல்லுப்பா உன் விருப்பத்தை” என்றார்.

அவ்வளவு நேரம் தனுவை பார்ப்பதை தவிர்த்து வந்த ஜீவா தந்தை கேட்டதும், நிமிர்ந்து அவளைப் பாத்துக் கொண்டே “எனக்குச் சம்மதம்பா” என்றான்.

சேகரனும், தனுவிடம் கேட்டார். “ம்ம் சம்மதம்பா” என்றாள் ஜீவாவை மெல்ல நிமிர்ந்து பார்த்து.

“அப்புறம் என்ன கல்யாண தேதியை குறிச்சிருவோம்” என்றார் அறிவழகன்.

“குறிச்சிடலாம் சம்பந்தி. அப்புறம் சீர்வரிசை எதுவும் பேசவில்லையே” எனக் கேட்டார் சேகரன்.

“அந்தப் பேச்சே வேணாம் சம்பந்தி. அது எல்லாம் உங்க விருப்பம். கல்யாண செலவு பாதிப் பாதியாகப் பிரிச்சுக்குவோம். எல்லோருக்கும் வசதியா ஒரு நாளை கல்யாண தேதியா குறிச்சிருவோம்” என முடித்தார் அறிவழகன்.

“அப்படியே செய்துருவோம்” எனச் சேகரன் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“தனு! அவங்க பேசட்டும் நீ இங்கே வந்து உட்காருமா” என அழைத்த தமிழரசி ஆனந்தை எழுந்து அந்தப் பக்கம் அமர சொன்னார்.

“அம்மா, அண்ணியைப் பார்த்ததும் என்னை விரட்டுறிங்களா?” எனச் செல்லமாகக் கோவித்தது போல நடித்தான் ஆனந்த்.

“சரிதான் போடா! எப்ப பாரு என்னைச் சுத்தி மூனு பேரும் ஆம்பிளைங்களா இருக்கீங்க. இப்ப தான் கண்ணுக்கு குளிர்ச்சியா எனக்கு மருமகள் வரப்போறா. இன்னும் உங்க முகத்தையேவா பார்க்க முடியும்?” என அலுத்தது போலச் சொல்லி அவனைக் கடுப்பேற்றிய தமிழரசி, “ஓடு! ஓடு! அந்தப் பக்கம்” என மகனை விரட்டினார்.

“என்னையவா விரட்டுறிங்க? வீட்டுக்கு வாங்க! உங்களைப் பார்த்துக்கிறேன்” என அம்மாவின் காதில் மெல்லிய குரலில் போலியாக மிரட்டிக் கொண்டே எழுந்தவன் தனுஶ்ரீயை பார்த்து மென்மையாகச் சிரித்தப்படி நகர்ந்தான்.

அங்கிருந்த அனைவரும் அவர்களின் செல்ல சண்டையைச் சன்னமாகச் சிரித்துக் கொண்டே பார்த்தனர்..

ஜீவா எல்லாவற்றையும் உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

தனுஶ்ரீ எழுந்து வந்து தமிழரசியின் அருகில் அமர்ந்தாள். அவள் வந்து அமர்ந்ததும் அவளின் ஒரு கையை எடுத்து தன் கையில் பிடித்துக் கொண்ட அரசி, அவளின் படிப்பை பற்றியும், வேலை பார்ப்பது பற்றியும் பேச்சு குடுத்தார்.

“உங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு நீயும், ஜீவாவும் இங்க சென்னையில் தான் இருப்பிங்க. உனக்கு வேலைக்குப் போகனும்னா தொடர்ந்து அப்பாகிட்டயோ, இல்லை வெளியே எங்கேயும் போய் வேலை பார்க்கணும்னாலும் பாரு. வீட்டிலேயே இருக்கிறதுனாலும் இரு. உன் விருப்பம் எதுவோ அது போலச் செய்!” என்றவர்

“சமைக்கத் தெரியுமா?” என்று கேட்டு, பின்பு அவரே தொடர்ந்து, “தெரியலைனாலும் கவலை படாதே! எனக்கு ஒரு போன் போடு. உனக்கு நான் சொல்லித் தர்றேன்” என்றார்.

மகளிடம் இதமாகப் பேசிக்கொண்டிருக்கும் அவளின் வருங்கால மாமியாரை பார்த்து சேகரனுக்கும், சங்கரிக்கும் சந்தோசமாக இருந்தது .

அப்பொழுது ஆனந்த் “ஏன்மா பாவம் அண்ணி! நீங்க சொல்ற சமையல் முறையைச் செய்து சாப்பிட்டு அவங்களுக்கு எதுவும் ஆகவா? அதுக்கு அவங்க சமைக்காமையே இருந்துறலாம்” என்றான்.

அவனை முறைத்து பார்த்த அரசி கண்களாலேயே ‘இப்ப வாயை மூட போறியா, இல்லையா?’ என மிரட்டினார். அதைப் புரிந்து கொண்ட ஆனந்தும் கப்பென்று தன் வாயை மூடினான்.

அதனையும் கவனித்த அனைவரும் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டனர்.

‘என் இமேஜை டேமேஜ் ஆக்குறதே இந்த அம்மாவுக்கு வேலையா போய்ருச்சு’ எனத் தனக்குள் முணங்கினான்.

தனு வந்த சிரிப்பை அடக்கிய படி “ஓரளவு சமைக்கத் தெரியும் அத்தை. ஆனா நிறைய டிஷ் செய்தது இல்லை” என்றாள்.

“அதுவே போதும் தான்மா” எனப் புன்னகைத்தார்.

சேகரனும் ஜீவாவிடம் அவன் வேலை பற்றியும், தங்கி இருக்கும் இடத்தைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.

அதன் பிறகு அன்றைய நிகழ்வு சிறப்பாகவே சென்றது. அனைத்தும் பேசி முடித்ததும் ஜீவா குடும்பத்தினர் கிளம்பினார்கள்.

அப்படிக் கிளம்பும் பொழுதுத் தனுஶ்ரீயின் மனம் படபடவென அடித்துக் கொண்டது. ஜீவா தன்னிடம் சொல்லிக் கொள்ளப் பேசுவானோ என்று எண்ணியப்படி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ஆனால் எல்லோரிடமும் ‘போய் வருகிறேன்’ எனப் பொதுவாகச் சொன்னவன். தனுவை பார்த்து தலை அசைந்ததோ, இல்லையோ எனச் சந்தேகம் கொள்ளும் வகையில் விடைபெற்றான். அதில் அவள் மனம் சுணங்கியது. அதை அறியாமல் தன் பெற்றோருடன் சென்று கொண்டிருந்தான் ஜீவா.

காரில் சென்று கொண்டிருந்த போது “என்ன அண்ணா ரொம்ப ஹேப்பியா இருக்கப் போல உன் முகம் ஜொலிக்கிது” என்று கேலி செய்து கொண்டே வந்தான் ஆனந்த். அதற்கு ஜீவா மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலாகத் தர,

“ஹேய் அண்ணா நீ அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே? இந்நேரத்துக்குப் பொண்ணைப் பார்த்த சந்தோஷத்தில் கனவில் மூழ்கி இருக்க வேண்டாமா? உன் தன்னடக்கத்தைப் பார்த்து இங்கே பார்! என் கண்ணு வேர்த்துருச்சு” என்றான் ஆனந்த் அவனின் கண்ணீர் வராத கண்களைக் காட்டி.

“ஏன்டா அவன் வண்டி ஓட்டுவானா? இல்லை உன் முட்டை கண்ணைப் பார்ப்பானா?” எனக் கிண்டலடித்தார் அரசி.

“அப்பா இந்த அம்மா இப்பயெல்லாம் ஓவரா நக்கல் பண்றாங்க. நீங்க என்னனு கேட்க மாட்டீங்களா?” எனத் தந்தையிடம் புகார் வாசித்தான்.

“ஏன்டா நான் பேச போக அப்புறம் அவ என்னைக் கிண்டல் பண்ணவா? உன் பாடு! உன் அம்மா பாடு! என்னை ஆளை விடுடா சாமி” என்று பின்வாங்கியவர்,

“சரி ஜீவா நாங்க உன்னை ரூம்ல விட்டுடு அப்படியே கிளம்புறோம். இப்ப மணி ஆறு தான் ஆகுது. போகிற வழியில் சாப்பிட்டுக்கிறோம். நைட் ரெஸ்ட் எடுத்தாதான் காலைல ஆனந்தும் நானும் காலேஜ் ஆபிஸ் போக சரியா இருக்கும்” என்றார்.

“சரிப்பா” என்ற ஜீவா தன் அறையில் இறங்கிக் கொண்டு அவர்களை வழி அனுப்பி வைத்தான்.

எட்டு மணிவரை தன் ஆபிஸ் வேலை சிறிது பார்த்த ஜீவா வெளியே சென்று சாப்பிட்டு விட்டு வந்து தன் படுக்கையில் சாய்ந்தவனின் கண்ணில் வந்து நின்றது தனுவின் உருவம்.


ஜீவாவின் குடும்பத்தை அனுப்பி விட்டு உள்ளே வந்த சேகரன் குடும்பத்தினரின் முகம் மலர்ந்திருந்தது.

சோபாவில் வந்து அமர்ந்த தருண் “அப்பாடா” என்றான்.

“என்னடா ஏதோ வேலை செய்துட்டு வந்தது போல அப்பாடானு சொல்ற?” எனக் கேட்டார் சங்கரி.

“இனி இந்த வீட்டில் என் ராஜ்ஜியம் தான். அக்கா பங்குக்கு வர மாட்டாளே? அந்தச் சந்தோஷம் தான்ம்மா” என்றான் கேலியுடன்.

தம்பியின் பேச்சைக் கேட்டு அவனைப் பார்த்து முறைத்தாள் தனு.

“யாரு நீ? உன் அக்காவை விட்டு இருக்குறதுக்குச் சந்தோச படுற ஆளா? அவ கல்யாணம் நடந்து கிளம்புற அன்னக்கி நீ அழுகாம இருக்கியானு நானும் பார்க்கிறேன்” என்றார் சங்கரி.

அதைக் கேட்டதும் அனைவர் முகத்திலும் லேசான சோகம் இழையோட அமைதி ஆகினர்.

அதை மாற்ற சங்கரி “என்னங்க மாப்பிள்ளை குடும்பம் ரொம்ப நல்ல மாதிரியா தெரியுறாங்கல்ல? எனக்கு மனதுக்குத் திருப்தியா இருக்குங்க” என்றார்.

“ஆமாம்மா எனக்கும் தான்” என்ற சேகரன், ” இந்தச் சம்பந்தத்தைச் சொன்ன மாமாவுக்குத் தான் நன்றி சொல்லனும்” என்றார்.

“ஆமாங்க அவங்களுக்கு வேற ஒரு வேலை வந்ததால வர முடியலைனு சொன்னாங்க. இப்போ நம்ம போனுக்காகக் காத்துகிட்டு இருப்பாங்க. போன் போடுங்க பேசுவோம்” என்ற சங்கரியும், சேகரனுடன் சேர்ந்து போன் பேச செல்ல, தருண் எழுந்து படிக்கச் சென்றான்.

அவ்வளவு நேரமாக மலர்ந்த முகத்துடன் இருந்த தனுஸ்ரீயின் முகம் யோசனைக்குச் சென்றது. எல்லாம் ஜீவாவை பற்றித் தான்.

‘ஜீவா தன்னை என்ன மனநிலையில் பார்த்தார். நேத்து நித்யாகிட்ட பேசும் போது மாப்பிள்ளைனாலே ரொம்ப ஆர்வமா பார்ப்பாங்க. அவ அக்காவை பார்க்க வந்த மாமா கூட அப்படித்தான் பார்த்தாங்கன்னு சொன்னாளே. ஆனா இவர் என்ன எதுவும் ஆர்வத்தைக் காட்டாமல் ஏதோ தெரிந்த நபரை பார்க்கும் பாவனையைக் காட்டினாரோ?

இல்லை ஒருவேளை அவருக்கு என்னை ஆர்வமாகப் பார்க்கும் விருப்பம் இல்லையா? இல்லை என்னைப் பிடிக்காமல் வந்திருப்பாரோ? பெற்றோருக்காகச் சரி என்றிருப்பாரா?’ எனத் தன் போக்கில் சிந்தனையைப் பறக்க விட்டாள்.

அவளின் அந்தச் சிந்தனைக்குக் காரணம் ஜீவாவின் பார்வைதான். அவனின் பார்வையில் ஆர்வம் எதுவும் இல்லை. அவன் சாதாரணமாகப் பார்த்தது தனுவை இப்படி எல்லாம் எண்ண வைத்தது.

சிறிது நேரம் யோசனையில் இருந்தவள் பின்பு ‘அவனைப் பார்த்ததே இப்போ தான் முதல் முறை. அதுக்கே உனக்கு இத்தனை குழப்பமா? உன் சிந்தனையைப் பறக்க விடாம அமைதியாக இரு. போகப் போக அவனைப் பற்றி உனக்குத் தெரியத்தானே போகுது’ என அவளின் மனமே அவளை அதட்டியது.

அதில் தெளிந்தவள் தன் அன்னை தன்னை அழைக்கும் குரல் கேட்டு எழுந்து சென்றாள் தனுஸ்ரீ.

அப்போது சமாதானம் ஆனாலும் ஏனோ அந்த நிமிடம் வந்த ஒரு குழப்பம் அவளின் மனதோடு ஒட்டிக் கொண்டு வரும் நாட்களிலும் அவளைத் தொடர்ந்தது.


மறுநாள் காலையில் தன் அலுவலகத்திற்குச் சென்று அவன் இருப்பிடத்தில் அமர்ந்த சிறிது நேரத்தில் ஜீவாவின் அருகில் வந்தார்கள் அவனது இரு நண்பர்களான நிதின், ரஞ்சிவ்.

ஜீவா, ரஞ்சிவ், நிதின் மூவரும் புதுச்சேரி கல்லூரியில் முதல் ஆண்டில் இருந்தே நண்பர்கள் இளங்கலை படிப்புடன் முதுகலை படிப்பும் ஒன்றாகவே முடித்து விட்டுக் கல்லூரியில் நடந்த நேர்காணல் தேர்வில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அலுவலத்திலும் ஒன்றாகச் சேர்ந்து என அவர்களின் நட்பு இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

ஜீவாவின் தோளில் கைவைத்த ரஞ்சிவ், “என்னடா ஜீவா, நேத்து எல்லாம் எங்கே போன? வாராவாரம் ஊருக்குப் போறவன் இந்த வாரம் இங்க இருக்கப் போறதா சொன்னதும் நேத்து வெளியே போகலாம்னு பிளான் போட்டு மதியத்தில் இருந்து நானும் நிதினும் மாத்தி மாத்தி போன் போடுறோம் நீ எடுக்கவே இல்லை. சரி ஈவ்னிங் போகும் போது அப்படியே உன்னையும் கூட்டிட்டு போகலாம்னு வந்தா உன்னோட ரூம் பூட்டி இருந்தது. அப்படி எங்கேடா போன?” என விசாரித்தான்.

நிதின் சென்னையில் வேலை கிடைத்ததும் தன் அக்காவின் வீட்டில் தங்கிக் கொண்டான். இரு வாரத்திற்கு ஒரு முறை நிதின் புதுச்சேரியில் இருந்த பெற்றோரை பார்க்க செல்வான். இல்லையென்றால் மகளை, மகனை பார்க்க அவர்கள் இங்கே வந்து விடுவார்கள்.

ரஞ்சிவ்விற்கு அப்பா சமீபத்தில் தான் தவறினார். வீட்டிற்கு ஒரே பிள்ளை. ஆதலால் தன் அம்மா புதுச்சேரியில் தனியே இருக்க வேண்டாம் என்று இங்கேயே அழைத்து வந்து வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கி கொண்டனர். அதற்கு முன் ஜீவாவுடன் தான் அவன் அறையிலேயே தங்கி இருந்தான்.

அதனால் தான் ஜீவாவும் இந்த வாரம் ஊருக்கு போகவில்லை என அறிந்ததும் வெளியே செல்ல நிதினும் ரஞ்சிவ்வும் முடிவெடுத்து ஜீவாவை அழைத்துப் பார்த்தனர்.

“நேத்து அப்பாவும், அம்மாவும் இங்க வந்திருந்தாங்கடா. அதான் நான் போனை சைலென்டல போட்டு வச்சுருந்தேன். நீங்க ஈவ்னிங் வீட்டுக்கு வந்த போது வெளியே போய் இருந்தோம். அதான் பூட்டியிருந்திருக்கும்” என்றான்.

“ஹேய்! அப்பா, அம்மா வந்திருந்தாங்களா? எதுக்குடா? அவங்க வருவாங்கன்னு தெரிந்து தான் நீ ஊருக்கு போகலையா. ஆமா எதுவும் விசேஷமா? என்ன விஷயமா வந்தாங்க?” எனக் கேட்டான் ரஞ்சிவ்.

‘அது…’ என்ற இழுத்த ஜீவா “நேத்து பொண்ணு பார்க்க போனோம்டா. அதான் வந்தாங்க” என்று சிறு தயக்கத்துடன் சொன்னான்.

“அடப்பாவி! பொண்ணு பார்க்க போனியா? ஏன்டா எங்ககிட்ட சொல்லவே இல்லை. சொல்லியிருந்தா நாங்களும் வந்திருப்போம்ல. ஒருவேளை நாங்க வரக்கூடாதுன்னு தான் எங்ககிட்ட முதலிலேயே சொல்லலையா?” எனச் சிறிது கோபத்துடன் கேட்டான் நிதின்.

“ச்சே, ச்சே! அப்பிடி எல்லாம் இல்லடா. அப்பா பேமிலி மீட்டிங் போல வச்சுப்போம்னு சொன்னார். அவங்க சைடும் யாரையும் கூப்பிடலை. நாமும் நம்ம சொந்தங்கள் இல்லாம நாம மட்டும் போவோம்னு சொன்னார். உங்க கிட்ட சொல்லிட்டு அப்புறம் நீங்க வர வேண்டாம்னு என்னால சொல்ல முடியுமா? அதான் சொல்லலை கோவிச்சுக்காதடா” என்று சமாதானத்துடன் சொன்னவன் தொடர்ந்து,

“அதோட நீங்க கேலி பண்ணுவீங்கனு உங்க இரண்டு பேர்கிட்டேயும் சொல்ல எனக்கு ஒரு மாதிரி இருந்ததுடா” என நண்பனை சமாதான படுத்தினான் ஜீவா.

அவன் சொன்னதும் “வாவ்! சூப்பர்டா ஜீவா! அப்ப நம்ம மூவர் குழுவில் நீ பர்ஸ்ட் குடும்பஸ்தனா ஆகப் போறனு சொல்லு. பொண்ணு எப்படி? வேலை பார்க்கிறாங்களா? உனக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்கா?” எனச் சாதாரணமாக விசாரித்தான் ரஞ்சிவ்.

ஜீவா விவரம் சொன்னவன் “நான் ஒகே சொல்லிட்டேன். அவங்களும் சம்மதிச்சிட்டாங்க” என்றான்.

“இவனைப் பாருடா! பொண்ணை முடிவு பண்ணிட்டு கடைசியா நம்மகிட்ட வந்து சொல்றான். அப்படியா நாம வேண்டாதவங்களா ஆகிட்டோம்” என மீண்டும் ஆதங்கப்பட்டான் நிதின்.

“டேய் விடுடா! நம்ம ஜீவா தான் எப்படின்னு நமக்கே தெரியும்ல? எப்பயும் அளவாதான் பேசுவான். ஆனா நம்மகிட்ட சொல்லவேண்டிய விஷயத்தைத் தயங்காம சொல்லுவான்ல. என்ன முன்னயே சொல்றதுக்குக் கூச்சப்பட்டு இப்ப சொல்லியிருக்கான். விடேன்!” என நிதினை சமாதான படுத்திய ரஞ்சிவ்,

“இவன் கல்யாணத்துல ஜீவாவே மிரண்டு போற அளவு ஒரு கலக்கு கலக்கிருவோம் விடு!” என்றான்.

“பின்ன இவனை என்ன சும்மாவா விடுவேன். ஜீவாவுக்குக் கல்யாணம்னா சும்மாவா? செம்மையா கலக்கிருவோம்” என நிதினும் தன் நண்பன் தன்னிடம் சொல்லவில்லையே என்ற கோபத்தை மறந்து மகிழ்ச்சியாகப் பேசினான்.

இருவர் பேசுவதையும் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா.

“பாருடா! சிரிச்சே இவன் எல்லாத்தையும் மயக்கிருவான்டா” என்றான் ரஞ்சிவ் புன்னகையுடன்.

“சரிதான் போங்கடா அரட்டை! போய் வேலையைப் பாருங்க. ரொம்ப நேரமா பேசிகிட்டே இருக்கோம். கொஞ்சம் வேலையும் பார்ப்போம். போங்க கேன்டின்ல உங்க மீதி அரட்டையை வச்சிப்போம்” எனச் சிரிப்புடன் விரட்டினான் ஜீவா.

“ஆமாம்மா வா! டீம் லீடரே சொல்லிட்டார். இன்னமும் இங்கேயே இருந்தால் லீடர் கோவிச்சுக்கப் போறார்” எனத் தானும் சிரிப்புடன் கிண்டலடித்த நிதின், ரஞ்சிவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவரவர் சீட்டில் சென்று அமர்ந்த இரு நண்பர்களில் ஒரு நண்பனின் முகம் முழுவதும் வெறுப்பு கலந்து கசப்பாய் புன்னகைத்துக் கொண்டதை ஜீவாவும், இன்னொரு நண்பனும் அறியாமலேயே போனார்கள்.


இருபது நாட்கள் கடந்திருந்தன…

ஜீவாவின் குடும்பமும், தனுவின் குடும்பமும் ஜவுளிக்கடையில் இருந்தனர்.

முகூர்த்த புடவையும், மாப்பிள்ளை உடையும் எடுக்க வந்திருந்தார்கள்.

இரு குடும்பமும் சந்தித்துக் கொண்ட நாளில் இருந்து நாப்பத்தி ஐந்தாவது நாளில் வந்த ஒரு முகூர்த்ததைத் திருமணத்திற்குக் குறித்திருந்தார்கள்.

முகூர்த்தம் குறித்ததும் திருமண வேலைகள் மளமளவென ஆரம்பித்தது.

இந்த இடைப்பட்ட நாட்களில் தமிழரசியின் விடாத தொனதொனப்பின் காரணமாக அவர் கேட்டு வாங்கித் தந்த தனுவின் நம்பருக்கு ஒரு முறை அழைத்தான் ஜீவா.

அதுவும் தன் அம்மாவிடம் ஒரு வாக்குவாதம் நடத்தியதற்கு அப்புறம் தான் பேசவே செய்தான்.

“என்ன அம்மா கல்யாணத்துக்கு முன்னாடி இரண்டு பேரும் பேசக்கூடாதுனு பேரன்ஸ் சொல்லுவாங்களாம். நீங்க என்ன நீங்களே நம்பர் வாங்கிக் கொடுத்து பேசு, பேசுனு சொல்றீங்க?” என்றவனிடம்,

“இப்ப எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி என்னடா சாக்கு கிடைக்கும் பொண்ணை வெளியே கூட்டிக்கிட்டு போவாம்னு காத்திருக்கும் மாப்பிள்ளை தான்டா அதிகம். நீ என்னடானா போன் பேசவே யோசிக்கிற” என்றார் அரசி.

“அம்மா கல்யாணத்துக்கு அப்புறம் காலமெல்லாம் நானும், அவளும் தானே பேசப் போறோம். அதை இப்பயே பேசாட்டி என்ன?” என்று அவன் தயங்க…

“அப்படிச் சொல்லாத ஜீவா! இப்பவெல்லாம் இரண்டு பேரும் பேசிக்கலைனா தான் பிரச்சனையா ஆகும். மாப்பிள்ளைக்குப் பிடிக்காத கல்யாணமா இருக்குமோ? அதான் போன் கூடப் பேசலையோனு நினைப்பாங்க. அந்த நினைப்பை நாமே ஏன் குடுக்கணும் சொல்லு?” என்று கேட்டார்.

அவர் அவ்வளவு சொல்லியும் “அம்மா” என்ற ஜீவா மேலும் ஏதோ தடை சொல்ல முயல, அவன் பேசும் முன் இடையிட்ட அரசி “நீ பேசுற அவ்வளவு தான்” எனப் போனை வைத்துவிட்டார்.

அவர் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்த அறிவழகன் “ஏன் அவனைக் கட்டாயப் படுத்துற அரசி? அவன் விருப்பப்படி விட்டுடேன்” என்றார்.

“அப்படி இல்லைங்க. அவன் சும்மாவே ரொம்ப வெளிபடையா உணர்வை காட்டிக்க மாட்டான். இப்ப அவனுக்குனு ஒரு பொண்ணு வர போறா. இனியும் அப்படி இருந்தா அவ நிலைமையை நினைச்சு பாருங்க? இவன் என்ன நினைக்கிறானே தெரியாம குழம்பி போகாது அந்தப் பொண்ணு. அதான் இவன் பேசி நல்லா பழகணும்னு கட்டாயப் படுத்துறேன்” என்றார்.

“நீ சொல்றதும் சரிதான் அரசி” என அவரும் ஒத்துக்கொண்டார் அறிவழகன்.

இங்கே தனுஸ்ரீ ‘அத்தை என் போன் நம்பரை ஜீவாகிட்ட குடுக்கப் போறதா சொன்னாங்களே. ஜீவா பேசுவாரா? என்ன பேசுவார்?” என அவளுக்குள்ளேயே யோசித்தவள் போனையே பார்த்தாள்.

அவளின் பார்வையில் உயிர் பெற்றது போல் அது ஒளிர்ந்தது. ஜீவா தான் அழைத்திருந்தான்.

போனை கையில் எடுக்காமல் சில நொடிகள் பார்த்தவள், மனம் படபடக்கக் கையில் எடுத்து, அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவள் மெதுவாக “ஹலோ” என்றாள்

“நான் ஜீவா! தனுஸ்ரீ?…” என இழுத்தான்.

“ம்ம்! நான் தான். சொல்லுங்க” என்றாள் அமைதியான குரலில்.

அந்தப் பக்கம் சிறிது நேரம் அமைதியான ஜீவா “எப்படி இருக்க?” என்றான்.

“நான் நல்லா இருக்கேன். நீங்க?”

“ம்ம் நானும் நல்லா இருக்கேன்”

‘அப்புறம்’ என இழுத்து மேலே என்ன பேச எனத் தடுமாறியவன், பொதுவான விசயமே பேசுவோம் என நினைத்து வீட்டில் உள்ளவர்களின் உடல்நலம், படிப்பு, வேலை பற்றி விசாரித்தான்.

அனைத்திற்கும் நல்ல பிள்ளையாகப் பதிலளித்தாள் தனுஸ்ரீ ஆனாலும் அவள் மனதில் ‘இது ஏற்கனவே தெரிந்தது தானே? இதையே ஏன் திரும்பக் கேட்கிறார். திருமணமாகப் போகிறவர்கள் இப்படித் தான் பேசுவார்களோ?’ என்ற எண்ணம் மட்டும் விடாமல் ஓடிக் கொண்டிருந்தது.

பின்பு ஏதாவது உருப்படியாகப் பேசுவோம் என நினைத்தானோ? என்னவோ? முக்கியமான விசயத்திற்கு வந்தான் “நமக்கு வாடகை வீடு பார்த்துகிட்டு இருக்கேன். அதில் ஒரு வீடு எனக்கு ஓகேவா இருக்கு. நமக்கு ட்ரஸ் எடுக்கப் போகும் போது எல்லோரும் சேர்ந்து போய்ப் பார்ப்போமா?” எனக் கேட்டான்.

“சரிங்க போகலாம்” என்றாள் தனு.

அதற்கு மேல் என்ன பேச என்று தெரியாமல் “ஓகே சரி வைக்கிறேன் பை” என்றான்.

“பை” என்றாள் தனு.

அவ்வளவு தான் அன்று அவன் பேசியது. வேறு அநாவசிய பேச்சுக்கள் எதுவும் அவனிடம் இல்லை. அப்படிப் பேசியதிலும் புது நபரிடம் பேசிய தயக்கம் அவனிடம் இருந்தது.

இப்போது துணிக்கடையிலும் தனுவை பார்த்துப் புன்னகைத்தான் அவ்வளவுதான் பேச முயற்சி செய்யவில்லை.

அந்தப் புன்னகையே தனுவிற்கு அப்போதைக்குப் போதுமானதாக இருந்தது.

பார்த்த புடவையை எல்லாம் அம்மாவும், அத்தையும் ‘இது எடுப்போமா?’ என அவளிடம் அபிப்பிராயம் கேட்கும் போதெல்லாம் தனுவின் பார்வை ஜீவாவையே தேடி சென்றது..

ஜீவாவும் அவர்கள் ‘என்ன பார்க்கிறார்கள்?’ எனத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் திரும்பி சம்மதம் கேட்கும் பாவனையில் பார்க்கும் போது அவன் எந்த முகபாவனையும் காட்டாமல் இருக்கும் போது அதை வேண்டாம் என ஒதுக்கியவள். அவன் முகம் மலர்ச்சியைக் காட்டும் போது இதையே எடுப்போம் என்றாள்.

அவ்வாறு இரண்டு பட்டு புடவைகளைத் தேர்வு செய்தாள். வார்த்தைகள் பேசாமல் அங்கே இருவரின் முக உணர்வும் பேசிக் கொண்டது.

இவர்களின் இந்த மெளன நாடகத்தைப் பெரியவர்கள் கண்டு கொண்டாலும், காணாது போல் அவர்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

ஜீவாவிற்கும் எடுத்து முடித்தவர்கள் அவன் அவர்களுக்காகப் பார்த்திருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குச் சென்று வீட்டை பார்த்து அதையே முடிவு செய்து விட்டு வந்தார்கள்.