மனதோடு உறவாட வந்தவளே – 19

அத்தியாயம் – 19

ராகவ் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட நித்யா “என்ன அத்தான் சொல்றீங்க? உடல் ரீதியான பிரச்சனை இல்லனா என்ன பிரச்சனை? என்ன ஆபத்து வரும்?” எனக் கேட்டாள்.

“நீ இதுவரை சொன்னதை வச்சு பார்த்தா இது மன ரீதியான பிரச்சனையா தெரியுது” என்றவன் தொடர்ந்து “நீ சொல்றவர் என்ன வேலை பார்க்கிறார்? அவரோட கேரக்டர் எப்படி?” எனக் கேட்டான்.

“ஐடி வேலைல இருக்கார். ரொம்ப நல்லவர் தான். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ரொம்ப அமைதியான டைப்” என்றாள்.

“நீ சொன்ன வேலையும், அமைதியான டைப்பும் தான் இப்ப பிராபளம்னு நினைக்கிறேன். இப்ப இந்த ஐடி பீல்ட்ல இருக்கிறவங்க நிறையப் பேர் இந்த மாதிரியான சிம்டம்ஸோட என்னோட ஹாஸ்ப்பிட்டல் வர்றாங்க. அதை வைத்து இன்னும் என் சந்தேகம் வலுக்குது. அதனால இது மன ரீதியான பிரச்சனையா இருக்கலாம்” என்றான்.

“ஓ வேலை டென்சன் சரி. ஆனா என்ன அத்தான் இது அமைதியா இருந்தா பிராப்ளம் வருமா என்ன?”

“என்ன இப்படிக் கேட்டுட்ட? அதானே உனக்கும் அமைதிக்கும் வெகு தூரமாச்சே நிச்சயம் உனக்குச் சந்தேகம் வரும் தான்” என அவளைக் கிண்டலடிக்க,

“அத்தான் ப்ளீஸ்! என்னை அப்புறம் கேலி பண்ணலாம் இப்ப விஷயத்துக்கு வாங்க” என்றாள் நித்யா.

“சரி சரி விட்டு”என்றவன், “சில நேரங்களில் மௌனமா இருக்குறது எவ்வளவு நல்லதோ. அதே மாதிரி பேச வேண்டியதை பேச வேண்டிய நேரத்தில் பேசாம மௌனமா இருக்குறது ரொம்பவே கெட்டது”

“இப்ப உன்னையே எடுத்துக்க உனக்கு இப்ப கல்யாணம் ஆகப் போகுது. உன் ஹஸ்பெண்ட் வெளியே வேலையா போய்ட்டு டென்ஷனா வர்றார். வந்து வெளியே இப்படி நடந்தது அதனால தான் டென்சன்னு சொல்லாம அவருக்குளே வச்சுக்கிட்டா என்ன ஆகும் தெரியுமா? அந்த விஷயம் அவருக்குள்ளயே பொதைஞ்சு ஒரு ஆறாத ரணமா மாறிடும். அது மட்டும் இல்லாம விஷயத்தை வெளியே பகிர்ந்து மனசை லேசாக்கலைனா அது ஒரு பாரமா மாறி அவரை ஒரு அழுத்தத்திற்கு உள்ளாக்கி கூட இருக்கிறவங்க மேல கோபம் எரிச்சலா அது மாறும்” என்றான்.

‘ஓ!’ எனக் கேட்டுக் கொண்டவள் “இப்ப என்ன பண்ணனும் அத்தான்?” எனக் கேட்க…

“இதுக்கு மேல நான் எதுவும் சொல்றதுனா இன்னும் அவங்க நடவடிக்கைகள் பற்றின டீடைல்ஸ் வேணும். நீ சொன்னதை மட்டும் வைத்து எதுவும் டிசிஷன் சொல்ல முடியாது” என்றான்.

“அத்தான் அப்போ நான் தனுவை இங்க வர சொல்லட்டா? அவ ரொம்பப் பயந்து போய் இருக்கா. இப்ப நீங்க சொன்னதெல்லாம் கேட்டா இன்னும் பயப்படுவா. ஆனா நீங்க பேசினா அவ பயம் போகும்னு நினைக்கிறேன். நீங்க தான் இரண்டு நாள் இங்க இருக்கப் போறதா சொன்னீங்களே வர சொல்லட்டுமா?” எனக் கேட்டாள்.

அவர்கள் பேசுவதை இவ்வளவு நேரமும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த திவ்யா தனு பேரை கேட்டதும் திகைத்து “ஹேய்! என்ன நித்து இவ்வளவு நேரமும் நீ தனு பத்தியா பேசிட்டு இருந்த? நீ சொன்ன பிரண்ட் ஹஸ்பெண்ட் ஜீவாவா? எனக் கேட்டாள்.

“ம்ம் ஆமா அக்கா. ஜீவா அண்ணா பத்திதான் இவ்வளவு நேரம் கேட்டேன். அவருக்குத் தான் பிராபளம்”

“தனுக்குக் கல்யாணம் முடிஞ்சு ஆறு மாதம் தானே ஆகுது.அதுக்குள்ள இவ்வளவு பிரச்சனையா? என வருத்தமாகக் கேட்டாள்.

அவர்கள் சொன்ன தனு யார் என்று ராகவிற்கும் தெரிந்திருந்தது.நித்யாவின் பேச்சில் அடிக்கடி தனுவின் பெயர் வரும் என்பதால் அறிந்திருந்தான்.

“என்னங்க வர சொல்லுங்க பாவம் அவ. நல்ல பொண்ணு என்கிட்ட அக்கான்னு ரொம்பப் பாசமா பேசுவா” என்றாள் திவ்யா.

“நீயே சொன்ன பிறகு மாட்டேனா சொல்ல போறேன்? வர சொல்லு நித்யா பேசுவோம்” என ராகவ் சம்மதித்தான்.


தனுவும், டாக்டர்.ராகவும் நித்யாவின் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்கள்.

இரவு தன் அக்கா மாமாவிடம் பேசின உடனேயே தனுவிற்குப் போன் போட்ட நித்யா தன் மாமா தன்னிடம் சொன்னதை இப்போதே சொன்னால் எங்கே இன்னும் பயந்து போவாளோ என நினைத்து அதைச் சொல்லாமல் ‘அக்கா உன்கிட்ட நேரில் பேசனும்னு சொல்றா. நாளைக்கு வீட்டுக்கு வா’ என மட்டும் சொல்லி சமாளித்து வர வைத்திருந்தாள்.

மறுநாள் தனு ‘என்ன சொல்ல போகிறார்களோ?’ என நினைத்துக் கொண்டே நித்யாவின் வீட்டிற்கு வந்தாள்.

நித்யாவின் அப்பா கல்யாண வேலையாக வெளியே சென்றிருக்க, மாப்பிள்ளை தங்கள் வீட்டிற்கு வந்திருப்பதால் விருந்து வைக்க என்று வீட்டிலேயே இருந்த அம்மாவை ‘மார்க்கெட்க்கு போவோம்’ எனத் தனியாக அழைத்துச் சென்றுவிட்டாள் நித்யா. செல்லும் முன் ‘எந்தத் தொந்தரவும் இல்லாமல் பேச தாங்கள் செல்வதே நல்லது’ எனத் தனுவிற்குப் போனில் தகவல் தெரிவித்து விட்டுத் திவ்யாவிடம் விவரம் கேட்டுக் கொள்ளுமாறு சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.

‘என்ன இவ என்னை வர சொல்லிட்டு அவள் வெளியே போய்ட்டா’ எனப் புலம்பிக் கொண்டே வந்த தனுவை திவ்யா வரவேற்றாள்.

சிறிது நேர நலவிசாரிப்பிற்குப் பிறகு நித்யா தன்னிடம் கேட்ட விவரத்திற்கு வந்த திவ்யா, “தனு நேத்து நித்யா சில விவரம் கேட்டாள். முதல நீ தான் அந்தப் பிரண்டுனு சொல்லாம தான் சொன்னா. ஆனா அவள் சொன்ன விஷயத்தைக் கேட்ட ராகவ் வேறு ஒன்னு சொன்னார். அதுக்குப் பிறகுதான் உன் ஹஸ்பண்டுக்கு தான் பிராப்ளம்னு தெரிஞ்சது. அதைப் பத்தி உன்கிட்ட நேரில் பேசுறது தான் நல்லதுன்னு இங்க வர வைச்சிட்டோம்” என்றாள்.

“என்னக்கா என்ன சொன்னாங்க?” எனத் தனு கேட்க…

“உனக்குத் தெரியும் தானே தனு ராகவ் மனநல டாக்டர்னு” எனத் திவ்யா கேட்க… “ம்ம் தெரியுமேக்கா” எனச் சொன்னவளிடம் மெதுவாக நேற்று ராகவ் சொன்னதைச் சொன்னாள் திவ்யா.

“என்ன? என்னக்கா சொல்றீங்க? மன ரீதியான பிரச்சனையா? என்ன பிரச்சனை?” என அதிர்ந்து போய்க் கேட்டாள் தனு.

“பயப்படாதே தனு. இதோ என்ன பிரச்சனைன்னு அவரே சொல்வாருடா ராகவ்கிட்ட கேளு” என அறையில் இருந்து வந்து கொண்டிருந்தவனைக் காட்டினாள்.

அவனைப் பார்த்ததும் எழுந்து நின்ற தனுவை ‘உட்காருமா உட்காரு’ என்றவன் தனுவின் எதிரே அமர்ந்தான்.

ராகவ் பற்றி நித்யா சொல்லி நன்றாகத் தெரியுமே தவிர அவனிடம் நேரடியாக அவள் பேசியது இல்லை. முதல் முறையாக அவன் எதிரே என்ன பேசுவது எனத் தெரியாமல் முழித்தவள், பின்பு மருத்துவரிடம் பேசுவது போல “திவ்யா அக்கா சொன்னாங்க. நீங்க ஜீவாவுக்கு மன ரீதியான பிரச்சனைன்னு சொன்னீங்கனு என்ன டாக்டர் அது? என்ன மாதிரியான பிராப்ளம்?” எனக் கேட்டாள்.

“ஆமா தனு சொன்னேன். அது நித்யா சொன்ன விஷயங்கள் அதுவாக இருக்கலாம்னு என்னை நினைக்க வைத்தது. ஆனால் அதுதான்னு நான் உறுதியா சொல்ல முடியாது. இப்போ உன்கிட்ட என்ன பிரச்சனையா இருக்கும்னு நான் உறுதியா சொல்லனும்னா இன்னும் கொஞ்சம் விவரம் தெரிஞ்சா தான்மா சொல்ல முடியும்” என ராகவ் சொல்ல…

“எந்த மாதிரி விவரம் டாக்டர்?” எனக் கேட்டாள்.

“நீங்க முதல் முதலா பார்த்ததில் இருந்து இப்போ வரை உங்க பார்வையில் ஜீவா எப்படி நடந்துக்கிட்டார்னு தெரியணும்” எனக் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்கவும் ‘இதுவரை பேசாத ஒரு புதிய ஆளிடம் எப்படிச் சொல்ல?’ என யோசித்து மௌனமாக இருந்தாள்.

அவளின் மௌனத்தைப் புரிந்துக் கொண்டவன் “நித்யாவோட பிரண்டுகிற முறையில் நான் உன்னை என்னை அண்ணன்னு கூப்பிட சொல்லிருக்கலாம். ஆனா ஏன் நான் இப்ப அப்படிச் சொல்லலை தெரியுமா?” எனத் தனுவை பார்த்துக் கேட்டான்.

‘ஏன்’ என்பது போலத் தனு அவனைப் பார்க்க… “ஏன்னா இப்ப நம்ம உறவு முறை வச்சுக் கூப்பிட்டா கண்டிப்பா உன்னாலே என்கிட்டே எதையும் சொல்ல முடியாது. உனக்கு அப்படிச் சங்கடம் வரக் கூடாதுன்னு தான் நான் நீ என்னை டாக்டர்னு கூப்பிடும் போது மறுப்பு சொல்லாம இருந்தேன்”

“அதனால் இப்ப ஜீவாவுக்காக ஒரு டாக்டரை சந்திக்கப் போயிருந்தா என்ன பண்ணிருப்பயோ அது போல ஒரு டாக்டர்கிட்ட பேசுற போல நீ பேசினா தான் ஜீவாவை சரி பண்ண வழி கண்டுபிடிக்க முடியும்மா” என்றான்.

அவன் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்து தன் தயக்கத்தை உதறி ‘ஜீவா தன்னைப் பெண் பார்க்க வந்த போது தனக்கு ஏற்பட்ட அவன் வெளிக்காட்டாத ஆர்வம் பற்றிய தன் குழப்பம், திருமணத்திற்கு முன்னும், திருமணத்திற்குப் பின்னும் அதிகம் பேசாத அவனின் குணம், உடம்பு சரியில்லாததைக் கூடத் தன்னிடம் சொல்லாமல் விட்டது, இப்போது அவன் அடிக்கடி படும் கோபம், தூக்கம் இல்லாமல் இருப்பது, ஒரு நாள் இரவு மூட்அவுட்டாக வந்த அன்று மூச்சு விடக் கஷ்டப்பட்டது.ஆபீஸே கதி என அவன் இருப்பது’ என எல்லாம் சொல்லி ‘நேற்று நிதின் தன்னிடம் சொன்ன ஆபீஸ் விஷயம்’ வரை அனைத்தையும் சொன்னாள்.

அவள் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட ராகவ் “அப்போ ஜீவா எதையுமே மனசு விட்டுப் பேசுறது இல்லை. அதான் பிரச்சனையோட ஆரம்பப் புள்ளி. அதுவும் இல்லாம நிதின் சொன்னதை வச்சு பார்த்தா ஜீவா தன்னை வேலையில் அளவுக்கு அதிகமா ஆழ்த்திக்கிறார்னு நினைக்கிறேன்” என்றவன் சிறிது நேரம் யோசனையில் இருந்தவன்,

“அந்த ரஞ்சிவ்கிட்ட கொஞ்சம் கூடத் தன் கோபத்தைக் காட்டிக்கலை, அதை இதுவரைக்கும் யார்க்கிட்டேயும் பகிர்ந்துக்கவும் இல்லை அப்படித்தானே?” எனக் கேட்டான்.

“ம்ம் ஆமா டாக்டர்” எனத் தலையசைத்த தனு “ஆபீஸில் கூட மூச்சு திணறல் வந்ததா நிதின் அண்ணா சொன்னார். எப்பயேயும் இல்லாத அளவிற்கு ஆபீசில் இப்ப எல்லாம் ரொம்ப டென்ஷனோடயும் கோபத்தோடையும் இருக்காராம்.எதுனால் அப்படி இருக்கும் டாக்டர்?” எனக் கேட்டாள்.

சிறிது நேரம் யோசித்த ராகவ். “எனக்கு நித்யா சொல்லும் போது கொஞ்சம் டவுட் இருந்தது. இப்ப நீ சொன்னதை எல்லாம் வச்சு பார்க்கும் போது
ஜீவாவிற்கு “மனஅழுத்தம்” ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்குன்னு உறுதிப் படுத்துற மாதிரி இருக்கு நீ மேலும் சொன்ன தகவல்கள். அந்த ஸ்ட்ரெஸ் தான் மூச்சு திணறலுக்கும் காரணம்” என்றான் ராகவ்.

ராகவ் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த தனு “என்ன டாக்டர் சொல்றீங்க மனஅழுத்தமா?” என அதிர்ந்தப் படியே கேட்க…

“ம்ம் ஆமாம் மன அழுத்தம் தான். ஜீவாவோட குணமும் அவரோட வேலையும் அவரை டிப்ரஷன்ல தள்ளியிருக்கு” என்றவன் தொடர்ந்து, “இப்ப டிப்ரஷன் நிறையப் பேருக்கு வரும்”

உதாரணமா…”நாம ஒண்ணு மனசுல இப்படி நடந்திருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சு இருப்போம். ஆனா அது நடக்காத போது ஒரு அழுத்தத்திற்கு உள்ளாவோம். அப்புறம் கொஞ்ச நேரத்தில் வேற எதிலாவது மனதை செலுத்தினா அந்த அழுத்தம் அவங்களுக்குக் குறையும். நான் சொல்றது இது ஒரு எக்ஸாம்பில் தான். இது போல அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி நடக்கும். ஆனா அவங்க எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் அவங்க மனசை செலுத்தி தங்களைத் தாங்களே சரி செய்துக்குவாங்க”

“அப்படினா, ஒரு சிலர் தங்களைப் பாதித்ததை எழுதுவாங்க. இல்லையா தங்களுக்கு நெருங்கிய உறவினர்களோ, நண்பர்கள்கிட்டேயோ சேர் செய்துப்பாங்க. அப்படி எதுவும் இல்லாம எந்த வித விஷயங்களையும் சேர் செய்துக்காம அவங்கக்குள்ளேயே வச்சுக்கும் போது அது மன அழுத்தமா மாறிடுது” என்றான்.

“அதோட சிம்டம்ஸ் தான் கோபம், எரிச்சல், தூக்கமின்மை, மூச்சு திணறல் எல்லாம்” என்ற ராகவ், “இதை இந்த ஸ்டேஜிலேயே சரி பண்றது நல்லது. இல்லனா டிப்ரஷன் இன்னும் அதிகமாச்சுனா விபரீதத்தில் கூடக் கொண்டு போய் விடலாம்” என்றான்.

“என்ன? என்ன விபரீதம்?” எனக் குரல் நடுங்க பயந்து கொண்டே கேட்டாள் தனு.

அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் “இதை நான் உன்னைப் பயமுறுத்த சொல்லலைமா. இப்படியும் நடக்கலாம்னு தான் சொல்றேன்” என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

அவன் யோசிப்பதைப் பார்த்து “பரவாயில்லை டாக்டர் சொல்லுங்க” எனச் சிறிது தைரியத்தை வர வைத்துக் கொண்டு கேட்டாள்.

‘ம்ம்ம்’ என இழுத்தவன் “டிப்ரஷன் அளவுக்கு அதிகமாகும் போது சிலருக்கு அது தற்கொலை எண்ணத்தைக் கூடத் தூண்டும்” என்றான்.

அவன் சொல்லி முடித்ததும் இருந்த அவளின் தைரியம் எல்லாம் பறந்தோட்ட ‘என்ன?’ என அதிர்ந்த தனுவின் சுவாசம் கூட ஒரு நிமிடம் நின்றது போல் ஆனது.

அவள் அப்படி இருக்கவும், அவர்கள் பேசுவதற்குத் தொந்தரவு இல்லாமல் சாப்பாட்டு மேஜை அருகே அமர்ந்து இருந்த திவ்யா வேகமாக அருகில் வந்தாள்.

“ஹேய் தனு! ஒன்னும் இல்லம்மா. ஒன்னும் இல்லை ரிலாக்ஸ் பண்ணு” எனச் சொல்லி தண்ணீர் குடுத்து அமைதிப் படுத்திவிட்டு தனுவின் அருகில் அமர்ந்து அவளின் கையைப் பிடித்து அழுத்திவிட்டாள்.

அவள் அமைதியாகும் வரை மௌனமாக இருந்த ராகவ் “பயப்படாதேமா டிப்ரஷனை கண்டுக்காம விட்டா அந்த மாதிரி ஆக நிறைய வாய்ப்பு இருக்குனு தான் சொல்றேன். அப்படியே எல்லாருக்கும் நடக்கும்னு சொல்லலை. இப்ப தான் ஜீவாவிற்கு டிப்ரஷன் இருக்குறது தெரிஞ்சிடுச்சே. சோ கவலை இல்லம்மா. இனி எப்படி அதில இருந்து ஜீவாவை வெளியே கொண்டு வர்றதுன்னு பார்ப்போம்” என்றான்.

ராகவ் அப்படிச் சொல்லவும் பயம் தெளிந்தவள்.”அதுக்கு என்ன செய்யணும் டாக்டர்?” எனக் கேட்டாள்.

“ஜீவாவை முதலில் மனசு விட்டு பேச வைக்கணும். அவர் மனதில் அடைத்து வைக்கிற துக்கம் சந்தோசம் எல்லாத்தையும் வாயை விட்டு சொல்ல வைக்கணும். அதை விட ரொம்ப முக்கியம் இப்படி உணவு தூக்கம் மறந்து வேலை பார்ப்பதில் இருந்து அவரின் கவனத்தைத் திருப்பணும். அது தான் நாம முதலில் செய்ய வேண்டிய வேலை” என்றவன்,

“இப்ப நீ சொல்லும் போது இன்னும் ஒன்னையும் கவனிச்சேன். அவர் உன் மேல வச்சிருக்குற காதலை கூட வெளியே காட்டிக்கிறது இல்லன்னு. என்ன சரி தானே?” எனத் தனுவிடம் கேட்க…

“ம்ம் ஆமா” என இழுத்து நிறுத்திய தனு மருத்துவரிடம் சொல்ல வேண்டிய கடமையில் “அவருக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருக்குனு எனக்குப் புரியுது. நான் லேசா கண் கலங்கினா கூட அவராலே தாங்க முடியல. ஆனா ஒரு நாளும் தன் காதலை அவர் வார்த்தையா சொன்னது இல்லை” என்றாள் மெல்லிய குரலில் தயக்கத்துடன்.

அவளின் தயக்கத்தை உணர்ந்தவன் பேச்சை மாற்றி “வீட்டில் எப்படி உன் கிட்ட பேசுவார்? நீங்க பேசுறதை கவனிச்சுப் பதில் சொல்லுவாரா? இல்லை எப்படி?” எனக் கேட்க…

“நான் பேசினா கவனிச்சுப் பதில் சொன்னவர் தான் டாக்டர். ஆனா அதுவும் இப்ப இல்லை. பேச சந்தர்ப்பம் கூடக் கொடுக்கிறது இல்லையே?” என்றாள்.

அவளிடம் அத்தனை விவரங்களையும் கேட்ட ராகவ்,

“உடனே ஜீவாவோட இயல்பை நாம மொத்தமாகவும் மாத்த முடியாது. அதுனால நாம அவரை ரொம்பப் போர்ஸ் பண்ணாம இப்போதைக்கு அவருக்குள் போட்டு அழுத்தி அவரின் குணத்தையே மாற்றிக்கிட்டு இருக்குற விஷயங்களை மட்டும் வெளியே வர வைக்க முயற்சி செய்வோம். அதுக்கு முதல் படி நீ இப்ப சொன்னீயே உன்னை அவருக்குப் பிடிக்கும்னு. சோ நாம அதை வச்சே அவர் கவனத்தை வேலையில் இருந்து திருப்பலாம்” என்றவன்,

ஜீவாவை பேச வைக்க முயற்சி எடுக்கும் வகையில் சில ஆலோசனைகள் சொன்னான்.

சொல்லி விட்டு “இது சும்மா இப்போதைக்கு ஆரம்பக் காலச் சின்ன நடவடிக்கை மட்டும் தான்மா.இந்த ஐடியா சின்னபிள்ளை தனமா கூடத் தெரியலாம். ஒரு டாக்டர் பிரச்சனையைச் சரி பண்ணுவதை விட்டுவிட்டு இப்படி ஐடியா சொல்றானேன்னு கூடத் தோன்றலாம். ஆனால் சில சின்ன விஷயமும் நமக்குப் பெரிதாக உதவும்.

அதுவும் நீ முதலில் செய்யப் போவது கட்டாயம் ஜீவாவை வேலை ஸ்ட்ரெஸ்ல இருந்து டைவர்ட் பண்ணனும்னு நம்புறேன். இது அவர் கவனத்தை லேசா திசை திருப்ப தான். ஆனா இந்த ஐடியா மட்டுமே தீர்வு இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் டாக்டர்கிட்ட ஜீவாவை காட்டணும்” எனச் சொல்லி தனுவை அனுப்பி வைத்தான்.

டாக்டர் சொன்ன விஷயத்தில் ஆரம்பக் கட்டம் தான் தனு கையில் எடுத்த மௌனம்.

தனக்குப் பிடித்தவர்களின் மௌனம் அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த தானே செய்யும். அதைத் தான் அவள் கடைப்பிடித்தாள்.


ராகவ் தன்னிடம் சொன்னதைத் தன் அத்தை, மாமாவிடம் பகிர்ந்துக்கொண்டாள் தனு.

“என்னமா சொல்ற மனஅழுத்தமா? அதனாலயா இப்படி எல்லாம் நடந்து கிட்டான்?” எனக் கேட்ட அறிவழகன், “இதை எல்லாம் கேள்விதான் பட்டுருக்கோம் ஆனா இப்ப நம்ம வீட்டுலேயா?”என வருத்தத்துடன் பேசியவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.பின்பு தன்னைதானே சமாதானப்படுத்திக் கொண்டு “சரி தான் இனி கவலை பட்டு என்ன பண்ண? இனி ஆக வேண்டியதை பார்ப்போம்” என்றவர், “நீ சொல்லுமா டாக்டர் என்ன சொன்னார்” எனக் கேட்க.

“ஆமா மாமா எனக்கும் முதலில் கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் டாக்டரும், திவ்யா அக்காவும், நித்யாவும் பேசி என் பயத்தைப் போக்கினாங்க” என்ற தனு, அரசி அமைதியாக இருப்பதைப் பார்த்து “என்ன அத்தை அமைதியா இருக்கீங்க?” எனக் கேட்டாள்.

“நீ சொன்னதை எல்லாம் கேட்கும் போது ரொம்ப வேதனையா இருக்குமா. ஜீவாக்கு போய் இப்படியானு இருக்கு. டிப்ரஷன்ல கொண்டு விடுற அளவுக்கு அப்படி என்ன வேலை பார்க்க வேண்டி இருக்கு இவனுக்கு” என்றவர் லேசாகக் கலங்க தொடங்கி இருந்த கண்களைத் துடைத்துக்கொண்டே “ஆனா இதில் கவலை பட்டு இனி என்ன செய்ய முடியும்? டாக்டரை பார்த்து சரி படுத்திறலாம்னு மனசை தேத்திக்க வேண்டியது தான்மா. நீ மேலே டாக்டர் சொன்னதைச் சொல்லு” என்றார் குரலில் சோகம் இழைந்தோட்ட.

“எல்லாம் சரி ஆகிரும் அத்தை” என அவரைச் சமாதான படுத்தியவள் “டாக்டர் என்னை ஒரு இரண்டு மூணு நாளைக்குப் பேசாம இருந்து ஜீவாவிடம் ஏற்படும் மாற்றத்தை கவனிங்க. அவரிடம் தெரியும் சேன்ஜஸ் வச்சு நாம இன்னும் சில முயற்சிகள் எடுத்துப் பார்க்கலாம். அதோடு கூடச் சீக்கிரம் அவரை ஹாஸ்ப்பிட்டலுக்குக் கூட்டிக் கொண்டு வரவும் முதலில் முயற்சி எடுங்கன்னு சொன்னார்”

“முதலில் டாக்டர் சொன்ன படி மௌனமா இருந்து ரஞ்சன் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்து கிட்டு இருந்தேன். அதற்குப் பலனா ரஞ்சன் கிட்ட சில மாற்றங்கள் தெரிஞ்சது. நான் பேசாம இருந்தது அவர் மனசை பாதிச்சது. ஏன் நான் பேசலைன்னு கேள்வி கேட்டார்.அப்புறம் அவரும் கோபமா சுத்தினார்”

“ஆனா நான் கண்டு கொள்ளாதது போல இருக்கவும், அவர் கவனம் வேலையை விட்டு என் பக்கம் திரும்புச்சு. நான் ஏன் பேசலை என்பது தான் அவர் மனதில் ஓட ஆரம்பிச்சதுன்னு அந்த நாட்களில் அவரின் நடவடிக்கையை வச்சுப் புரிஞ்சிகிட்டேன். அதை டாக்டர்கிட்ட சொல்லி அடுத்த முயற்சி எடுக்கலாம்னு இருந்தப்ப இவர் நேத்து நைட் முழுவதும் வராமல் இருந்து என்னைக் கொஞ்சம் டென்சன் படுத்திச் சண்டை போடும் அளவுக்குக் கொண்டு வந்துட்டார்”

“ஆனா நான் கொஞ்சம் அஜாக்கிறதையா தான் நடந்து கிட்டேன் போல. அவர் நிச்சயம் இவ்வளவு கோபப் படுவார்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை. இப்படி அடி படும் அளவுக்குப் போகும்னு எதிர்பார்க்கலை” என முடித்தாள்.

அவள் சொன்னதை எல்லாம் கவலையுடன் கேட்டுக் கொண்டிருந்த அறிவழகனும் தமிழரசியும் அவள் முடிக்கவும் நிகழ்வுக்கு வந்து, “இப்ப அடுத்து என்னம்மா செய்யணும்? இன்னைக்கு அவன் நடந்து கொண்டதை பார்த்தா இன்னும் அவன் கொஞ்சம் கூடச் சரி ஆகலை போலேயே?” என அரசி கவலையாகக் கேட்டார்.

“ம்ம் ஆமா அத்தை. அதுக்கு டாக்டர்கிட்ட கவுன்சிலிங் போகணும். அதைப் பத்தி பேச தான் உங்களை வர சொன்னேன். உங்களுக்குச் சொல்லாம நான் இதைச் செய்ய முடியாது. உங்க சம்மதமும் இதுக்கு வேணும்” என்றவள்,

“அவர் மன அழுத்தம் குறையக் கவுன்சிலிங் போக வேண்டியது ஒரு மன நல மருத்துவர் கிட்ட. அதை நீங்க எப்படி எடுத்துக்குவீங்க? ஜீவா எப்படி அதைப் பீல் பண்ணுவாருனு தெரியல? அதான் உங்க கிட்ட பேசி முடிவெடுக்கவும், டாக்டர் சொன்னதை அவர்கிட்ட சொல்லும் போது நீங்களும் இருந்தா நல்லா இருக்கும்னு தான் உங்களுக்கு முதலில் தெரிய படுத்தினேன் அத்தை” என்றாள்.

தனு எல்லாம் சொல்லி முடித்ததும் சிறிது நேரம் அங்கே அமைதி சூழ்ந்தது.

பின்பு ஒரு பெருமூச்சை ஒன்றை வெளியிட்ட அறிவழகன், “உன் தயக்கம் புரிஞ்சதுமா. நாங்க எதுவும் நினைக்க மாட்டோம். உடம்பு சரி இல்லைனா டாக்டரை பார்க்குற மாதிரி மனசு சரியில்லைங்கும் போதும் டாக்டரை பார்க்க போறோம். இதில் சங்கடப்பட எதுவும் இல்லை.நாம ஜீவாகிட்ட பேசலாம்” என்றார் அறிவழகன். “சரி தானே அரசி” எனத் தன் மனைவியிடமும் கேட்டார்.

“ஆமாங்க” எனச் சொல்லி அரசியும் தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.