மனதோடு உறவாட வந்தவளே – 17

அத்தியாயம் – 17
ஜீவா வீட்டிற்குச் செல்ல அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது அவனின் வண்டி அருகில் பேச்சுச் சத்தம் கேட்டு நின்றான்.

அதுவும் அவனின் பெயர் அடிப்படவும் தன்னிச்சையாக அவனின் காதுகள் கூர்மை பெற்றன.

எப்பொழுதும் நிதின், ரஞ்சிவ், ஜீவா மூவரும் ஒரே இடத்தில் தான் வண்டியை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்திருந்த இடத்தில் தான் இப்போது நிதினும், ரஞ்சிவும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

“ஏன்டா இப்படிச் செய்த? ஜீவாக்குக் கஷ்டம் கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது? அப்படி என்ன அவன் மேல உனக்கு வெறுப்பு? எனக்கே நீ செய்தது கஷ்டமா இருக்கு. நிச்சயம் ஜீவா இதைத் தாங்க மாட்டான்டா” என்றான் ஒருவன்.

“அப்படி என்னடா பெரிசா செய்திட்டேன்? நான் அப்படி ஒன்னும் எதுவும் பெரிசா செய்யல” என மழுப்பினான் மற்றொருவன்.

“என்னது பெரிசா செய்யலையா? அப்ப இதை விட இன்னும் வேற செய்றதுக்கு இருக்கா என்ன?” எனக் கோபமாகக் கேட்டவனுக்குப் பதிலாக,

“என்னமோ நான் தான் அதைச் செய்தது போல இவ்வளவு கன்பார்ம்மா கேட்குற? ஏன் வேற யாரும் செய்துருக்க மாட்டங்களா என்ன?”

“நீ தான் செய்தேனு எனக்கு மட்டும் இல்ல ஜீவாவுக்கும் உறுதியா தெரிஞ்சு போயிருச்சு. ஜீவா கண்டுபிடிச்சிட்டான். நீ என்னமோ தெரியாம செய்துருப்பேனு நினைச்சுக்கிட்டு இருக்கான். ஆனா நீ வேணும்னே செய்தேன்னு தெரிஞ்சா ஜீவா எவ்வளவு வருத்தப்படுவான் தெரியுமா? எனக் கேட்டான்.

“எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற? நான் வேணும்னே செய்திருப்பேன்னு? அதெல்லாம் ஒன்னும் நான் அப்படிச் செய்யலை?” என்றான் மற்றவன்.

“எனக்கு உன் மேல நம்பிக்கை இல்லை. நீ வேணும்னே தான் செய்துருப்ப. எப்படி உறுதியா சொல்றேன்னா. உன் பார்வை தான் காரணம். நீ ஏன் ஜீவாவை சில நாளா அப்பப்ப முறைச்சுக்கிட்டு திரியுற?” எனக் கேட்கவும்,

“இல்லையே நான் ஏன் அவனை முறைக்கணும்? நான் சாதாரணமா தான் பார்க்கிறேன்” என்றான்.

“டேய்! சும்மா மழுப்பதே! ஜீவா வேணும்னா ப்ராஜெக்ட் டென்சன்ல கவனிக்காம இருந்திருக்கலாம். ஆனா உன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்குற நான் கவனிச்சுட்டேன்”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா உளறிக்கிட்டு இருக்காம தள்ளு நான் கிளம்புறேன்” எனச் சொல்லி விட்டு வண்டியை எடுக்கப் போனவனைத் தடுத்து நிறுத்தி,

“பார் நீயே என் சந்தேகத்துக்கு வலு சேர்க்குற போல நடந்துக்கிற. இப்ப எதுக்கு ஓடுற?” எனத் தடுத்து நிறுத்தினான்.

“ஹேய் விடுடா! நான் ஒன்னும் செய்யலைன்னு சொன்னா நீ நம்பப் போறது இல்லை. அப்புறம் ஏன் நிக்கணும்? அதான் கிளம்புறேன்” என்றான்.

“சும்மா அப்படியே ஒன்னும் தெரியாதது போல நடிக்காதடா. நிச்சயம் நீ சொல்ற பொய்களை நான் நம்ப மாட்டேன்” என்றான்.

“அப்படி நான் என்ன செய்துட்டேன்னு இப்படி நின்னு கேள்வி கேட்குற?” எனக் கடுப்பாகக் கேட்டான்.

“தப்பு செய்துட்டு உனக்குக் கோபம் வேற வருதா?” என்றவன், “நானும் சில நாளா கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன். நீ ஜீவாவை ஒரு மாதிரி முறைக்கிற மாதிரி பார்க்கிறதும், அவன் எதுவும் சந்தோசமான விசயம் சொன்னா உன் முகத்தில் தெரியுற வித்தியாசமும், வெளிய சிரிச்சு பேசிட்டு அந்தப் பக்கமா போனதும் உன்கிட்ட தெரியுற கடுப்பும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்”

“நான் கூட முதலில் அதைப் பெரிசா நினைக்கல. ஆனா ப்ராஜெக்ட் ரிலிஸ் செய்த அன்னைக்கு டீமில் இருக்கிற நாங்க எல்லாம் அவ்வளவு சந்தோசமா இருக்கோம். ஆனா உன்கிட்ட உண்மையான சந்தோசம் இல்லை. ஏன் உனக்கு மட்டும் அப்படிச் சந்தோசம் வரலைன்னு நினைச்சு பார்த்தப்ப தான், நீ இத்தனை நாளும் ஜீவா மேல வெறுப்போட தான் சுத்திக்கிட்டு இருக்கனு புரிஞ்சது”

“அப்படி என்னடா உனக்கு அவன் மேல வெறுப்பு? அவன் நம்ம பிரண்ட் தான அவன்கிட்ட ஏன் உனக்கு இப்படியெல்லாம் கடுப்பு வருது? என்ன காரணம்?” எனக் கேட்டான்.

அவன் சொல்ல, சொல்ல அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த இருவர் அதிர்ந்தார்கள்.

‘என்ன இவன் நம்மைக் கவனித்தானா?’ என ரஞ்சிவும், ‘என்ன ரஞ்சிவுக்கு என் மேல் வெறுப்பா?’ என ஜீவாவும் நினைத்து ஒரே நேரத்தில் திகைத்துப் போனார்கள்.

அதிர்ந்தாலும் சில நொடியில் சுதாரித்த ரஞ்சிவ் “ஆமா அவன் மேல எனக்கு வெறுப்பு தான். அதுக்கென்ன இப்ப?” எனத் தெனாவட்டாகக் கேட்டவன், “இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. ஆமா நான்தான் ப்ராஜெக்ட்ல எரர் வர வைச்சேன். அதுவும் தெரியாம செய்யல. தெரிஞ்சே தான் செஞ்சேன்” எனப் பட்டென உடைத்தான்.

“என்ன?” என இப்போது நிதின் அதிர்ந்தான் ‘அவன் வேண்டுமென்றே செய்துருக்க வேண்டும்’ என அனுமானத்தில் தான் அவனைத் துருவினான். ஆனால் அவனாகச் சொல்லி கேட்கும் போது வருத்தமாக உணர்ந்தான்.

அதுவும் அவர்களுக்குப் பின்னால் நின்றுக் கேட்டுக் கொண்டிருந்த ஜீவா திகைத்து சிலையாகி போனான். உண்மையாக இப்படி ஒரு விஷயத்தை அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை.

தெரியாமல் ஏதோ ஒரு அஜாக்கிரதையாக இருந்து யாராவது செய்திருப்பார்கள் அதைக் கண்டு பிடித்து ‘இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கோங்க’ என அவர்களை எச்சரிக்க வேண்டும் என நினைத்து தான் யார் செய்த பிழை எனக் கண்டுபிடிக்க ஆரம்பித்தான். அப்பவும் கூட யார் பிழை செய்திருந்தாலும் எரர் வர விட்டதற்காக மேலிடத்திலிருந்து அவர்களுக்குப் பிரச்சனை எதுவும் வராமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும் எனவும் நினைத்திருந்தான்.

ஆனால் தன் நண்பனே அதைச் செய்திருப்பான் என அவன் கண்டுபிடித்த போது ஜீவாவால் நம்பமுடியவில்லை. ஏன்னென்றால் ‘அந்த எரர் வந்த இடத்தில் சரியாகக் கச்சிதமாக வேலை செய்யக் கூடியவன் ரஞ்சிவ். அந்த இடத்தில் அவனால் பிழை வந்தது என்றால் எப்படி நம்ப முடியும்?’ ஆனாலும் ‘தெரியாமல் எப்படியாவது நடந்திருக்கும்’ எனத் தான் நினைத்தான். ஆனால் ‘தன் மேல் விரோதம் கொண்டு வேண்டும் என்றே செய்திருப்பான்’ எனச் சிறிதும் நினைக்கவில்லை. அதிர்ந்தவன் சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டான்.

“டேய்! என்னடா இதெல்லாம்? ஏன்டா அப்படிச் செய்த?” எனக் கேட்ட நிதின், “பாவம்டா அவன் எவ்வளவு டென்சன் ஆனான்னு பார்த்தியா? அதுவும் மேனேஜர் வேற பயங்கரமா திட்டி விட்டிருக்கார். அதுவும் அவன் லீடர் ஆனா பிறகு வந்த முதல் ப்ராஜெக்ட். இதை மட்டும் அவன் சரியா செய்யாம போய் இருந்தா அவனுக்கு எவ்வளவு பெரிய அவமானம். அதை விட அவனுக்கு மேல இருக்குறவன் அத்தனை பேருக்கும் அவன் பதில் சொல்லணும். ஏன் அவனுக்கு வேலை கூடப் போய் இருக்கும். என்னடா இப்படிச் செய்து வச்சுருக்க? அப்படி என்னடா அவன் மேல உனக்குக் கோபம்?” எனக் கேட்டான்.

“ம்ம்! நீ இப்ப சொன்னியே, அதெல்லாம் நடக்கட்டும் தான் செய்தேன்” என நிதானமாகச் சொன்னான் ரஞ்சிவ்.

‘அடப்பாவி!’ எனத் திகைத்து நின்ற நிதினை கண்டு கொள்ளாமல், “நாம மூனு பேரும் ஒண்ணா தான் படிச்சோம். ஒண்ணாதான் வேலையில் சேர்ந்தோம். ஆனா அவன் மட்டும் முதலில் லீடர் ஆகிட்டான்” என ரஞ்சிவ் விரோதத்துடன் சொன்னான்.

“டேய்! நீ என்ன லூசா? அவன் இதுவரை செய்த வேலை எல்லாம் வச்சு அவனுக்குப் பதவி உயர்வு கிடைச்சது. ஆனா எப்படியும் இன்னைக்கு இல்லைனாலும் இன்னொரு நாள் நாமளும் கண்டிப்பா லீடர் ஆகிருப்போம். அதுக்குப் போயா உனக்கு அவன் மேல அவ்வளவு வெறுப்பு?” எனக் கேட்ட நிதினை நிதானமா பார்த்தவன்,

“அவன் லீடர் ஆனதும் இல்லாம அவனுக்குக் கீழே நான் வேலை பார்த்து அவனுக்குப் பதில் சொல்லி வேலை பார்க்கிறது எனக்குப் பிடிக்கலை. அதுவும் தான் காரணம். அதுவும் என் கூடப் படிச்சவன் அவன். அவன் எனக்கு லீடரா இருந்து கேள்வி கேப்பான். வேலை செய்யலைன்னு திட்டுவான். அவன் கேட்குற கேள்விக்கு எல்லாம் நான் அவனுக்குக் கீழே இருந்து பதில் சொல்லணுமாக்கும்” எனத் தன் காரணங்களை அடுக்கிக் கொண்டே போனான்.

“அடப்பாவி! உனக்கு இவ்வளவு பொறமை இருக்கும்னு நான் நினைக்கவே இல்லடா. இத்தனை நாளும் நீ அடுத்தவனுக்குக் கீழே தான வேலை பார்த்த? அவனுங்க கேட்குற கேள்விக்குப் பதில் சொல்ல தான செய்த? இப்ப ஜீவாவுக்கு கீழே வேலை பார்த்ததில் மட்டும் உனக்கு என்ன குறைஞ்சு போய்ருச்சு?” எனக் கேட்டான் நிதின்.

“ஆமா குறைஞ்சு தான் போய்ட்டேன். நம்ம கூடப் படிச்சவனுக்கு நான் கை கட்டி பதில் சொல்லணுமாக்கும்? போடா நீ வேணா அப்படி இரு. என்னால இருக்க முடியாது. அவனுக்கு மட்டும் எல்லாமே பெஸ்டா கிடைச்சிருது.

ஆனா எனக்கு அப்படி இல்லைங்கும் போது இன்னும் அவன் மேல வெறுப்பு கூடுது. இந்த ப்ராஜெக்ட் அவன் சரியா முடிக்க முடியாம போகணும்னு நினைச்சேன். ஆனா சரியான டைம்க்குச் செய்து கொடுத்துட்டான் ச்சே” என்றான் ரஞ்சிவ்.

அவனை விநோதமாகப் பார்த்த நிதின் “டேய்! நீயும் தான கூட இருந்து வேலை பார்த்த. அந்தச் சந்தோசம் கூட வேண்டாமாடா? இப்படிப் பேசுற? அவன் வருத்தப்பட்டப்ப கூடவே இருந்து பெரிய நல்லவன் மாதிரி ஆறுதல் வேற சொன்ன. கூடவே இருந்து நல்லா நடிச்சிருக்கடா. அப்படித் தானே?” எனக் கேட்டான்.

“ஆமா அப்படித்தான். ஆனா நான் நினைச்சளவு அவனுக்கு ஒண்ணும் பனிஸ்மென்ட் கிடைக்கலையே? ஆனா அதே நேரம் அவனுக்கு மேலிடத்தில் இருந்து டோஸ் கிடைச்சுசே அதுவே இப்ப எனக்கு பெரிய சந்தோசம் தான்” என்றவன் தொடர்ந்து “அதுவும் இல்லாம இந்த வேலை சரியானதுல எனக்கும் லாபம் பாரு. அதான் லாஸ்ட் மினிட்ல எல்லாரும் கூடச் சேர்ந்து அப்படி வேலை பார்க்க வேண்டியதாகப் போய்ருச்சு. அப்படி நடிக்கலைனா நான் முன்னேயே உங்ககிட்ட மாட்டிருப்பேனே” என்றான்.

“அப்படி நடிக்கிறதுல உனக்கு என்ன லாபம்டா?”

“ஆமாம்! இந்த ப்ராஜெக்ட் நல்ல படியா முடிஞ்சதுல. இதைக் காரணம் காட்டி இன்னொரு கம்பெனில லீடர் போஸ்டோட வேலை வாங்கிட்டேன். எனக்கு அது லாபம் தானே?” என்றான்.

“என்னது? வேற வேலை வாங்கிட்டியா எப்போ?

“ஆமா இந்த ப்ராஜெக்ட்ல சேர்ந்ததுல இருந்தே வேற வேலை தேடிக்கிட்டு தான் இருந்தேன். இப்ப ஒரு வாரம் முன்ன ஒரு கம்பெனி இண்டர்வ்யூ போனப்ப லீடர் போஸ்ட் கேட்டேன். அவங்க யோசிச்சிட்டு சொல்றேன்னு சொன்னாங்க. இரண்டு நாள் முன்ன இந்த ப்ராஜெக்ட் முடிச்சுட்டு அவங்ககிட்ட சொன்னேன். இதைப் பெஸ்டா முடிக்க நானும் காரணம்னு. அதனால லீடர் போஸ்ட்க்கு ஓகே சொல்லிட்டாங்க. நானும் இங்க லெட்டர் குடுத்துட்டேன்”

“இன்னும் ஒரு மாதம் தான். அப்புறம் நான் லீடர். இன்னொரு நல்ல கம்பெனி, நல்ல சம்பளம். நீ இங்கே அவனுக்குக் கீழேயே வேலை பார்த்துட்டு இரு” என்றான்.

அவன் அப்படி ஒவ்வொரு வார்த்தையையும் தெனாவட்டாகப் பேச ‘இவன் இப்படி எல்லாம் பேசுவானா?’ என்பது போல அவனை அதிர்ந்து பார்த்த நிதின், “டேய்! உனக்குக் கொஞ்சம் கூட மனசு உறுத்தலையாடா? இது உன் நண்பனுக்குச் செய்த துரோகமா உனக்குத் தெரியலையா? எனக் கேட்டான்.

“நான் முன்னேறணும்னு நினைச்சேன். இதுல எங்க இருந்து துரோகம் வந்தது?” எனத் திருப்பிக் கேட்டான். தான் செய்த தவறு கொஞ்சம் கூட உரைக்காமல்.

“டேய்! கூட இருந்தே நல்லா பழகிட்டு, தன் நண்பனுக்குக் கெடுதல் நினைக்கிறது உன் பாஷைல நல்ல செயலாக்கும்?” என நிதின் கேட்க…

அவனைக் கண்டு கொள்ளாமல் கிளம்பப் போன ரஞ்சிவ் தன்னை மறைத்து அவ்வளவு நேரமும் நின்று கொண்டிருந்த நிதினை நகர வைத்து விட்டு சொல்லப் போனவன் நிமிர்ந்து பார்த்தான்.

அங்கே இவர்களையே கண்ணில் வலியுடன், வேதனை மனம் முழுவதும் பரவியது போல் நின்று கொண்டிருந்த ஜீவாவை பார்த்து ஒரு நிமிடம் திடுக்கிட்டவன், பின்பு என்ன நினைத்தானோ தோளை குலுக்கி விட்டுக் கொண்டான்.

ரஞ்சிவின் பார்வை சென்ற இடத்தைக் கவனித்த நிதின் திரும்பி பார்க்க, அங்கே ஜீவா நின்ற கோலம் அவனைப் பதற வைத்தது. இத்தனை வலியுடன் அவனை நிதின் பார்த்ததே இல்லை. அவன் அப்படி நிற்கவும் “ஜீவா” எனக் அழைத்துக் கொண்டே அருகில் சென்று அவனின் கையைப் பற்றினான்.

அதில் சுதாரித்து அவனைப் பார்த்தவனிடம் “அவன் கிடக்குறான் விடு ஜீவா. துரோகி! கூட இருந்தே குழி பறிக்கும் பச்சோந்தி. நீ வா போகலாம்” என அவனை நகர்த்திக் கொண்டு போகப் பார்த்தான்.

நிதினின் கையை நிதானமாக விடுவித்த ஜீவா, “நீ எப்படி? உனக்கும் என் மேல பொறாமை இருக்கா?” எனக் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும் அடிவாங்கிய உணர்வுடன் “என்ன ஜீவா, நான் அப்படின்னு நீ நினைக்கிறியா?”

“ம்ம் என்னால யாரையும் நம்ப முடியல. பார் நம்மில் ஒருத்தனா இருந்தவன் இப்படித் தனியா பிரிஞ்சு நிற்கிறான்” என்றவன்,

“சரிவிடு! இப்ப நான் இருக்குற மனநிலையில் என்ன பேசினாலும் உன்னைக் காயப்படுத்தும் நான் கிளம்புறேன்” என்றவன் தன் வண்டியின் அருகில் சென்று அதை இயக்கியவன், அங்கே நின்று கொண்டிருந்த ரஞ்சிவை நிமிர்ந்து பார்த்து “லீடர் பதவியோடு வேலை கிடைச்சதிற்கு வாழ்த்துக்கள்” என்றுவிட்டு விருட்டென வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான். ஜீவா அந்த இடத்தில் ஒன்றும் காட்டி கொள்ளவில்லை என்றாலும், அவனின் மனம் வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அந்த வலியுடனே வீட்டிற்குச் சென்றான்.

அவன் செல்லவும் நிதினும், ரஞ்சிவிடம் எதுவும் பேசாமல் கிளம்ப “டேய்! உனக்கு என்னடா கோபம்? என்கிட்ட பேசாம கூடப் போற?” எனக் கேட்ட ரஞ்சிவை ‘இவன் என்ன லூசே தானா?’ என்னும் பார்வை பார்த்தவன்,

“உன் கூடப் போய் இத்தனை நாளும் பிரண்டா இருந்ததை நினைச்சா எனக்கு அருவருப்பா இருக்கு. இனியும் நான் எப்படி உன் கூடப் பழகுவேன்னு எதிர்பார்க்கிற? ஏன் ஒருத்தன் முதுகுல குத்திட்ட. அடுத்து என் முதுகுலேயும் குத்தவா? இனி உன் சங்காத்தமே எனக்கு வேண்டாம் சாமி. என்னை ஆளை விடு” என்றவன் கிளம்பிவிட்டான்.

தனியாக நின்ற ரஞ்சிவிற்குத் தான் செய்த காரியம் எவ்வளவு தவறென்றும், உண்மையான நட்பை தவற விட்ட வலியையும் உணரவே இல்லை.

அந்த நேரத்தில் அவனின் மனதில் ஓடியதெல்லாம் ‘நானும் லீடர்’ எனச் செருக்கும், இனி ஜீவாவிற்குக் கீழ் வேலை பார்க்க வேண்டியது இல்லை என்ற நிம்மதியும், இந்தக் கம்பெனியை விட அங்கே அதிகமாகக் கிடைக்கப் போகும் சம்பளமும் மட்டுமே. அதையும் தாண்டி அங்கே வலியுடன் சென்ற உயிர் நட்பின் வேதனை படவே இல்லை.

இன்று இல்லை என்றாலும் என்றாவது அவன் செய்த துரோகத்தின் வலியை உணர்வானா? அவனுக்கே வெளிச்சம்!


நிதின் தன்னிடம் சொன்னதை எல்லாம் கேட்ட தனு ‘ஓ! ப்ராஜெக்டை முடிக்க அவ்வளவு கஷ்டப்பட்டாரா ரஞ்சன்? அதான் வீட்டுக்கு கூட நேரம் கெட்ட நேரத்தில் வந்திட்டு இருக்காரோ?” என நினைத்தவள் ரஞ்சிவ் செய்த காரியத்தை நினைத்துக் கோபம் கொண்டாள்.

“என்ன அண்ணா இது சின்னபிள்ளை தனமா? இதுக்கு எல்லாம் பொறமைப்பட்டா வேலைல குடைச்சல் தருவாங்க? நட்பு எல்லாம் பெருசு இல்லையா? என்ன அது கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல். நான் செய்த தப்பை கூட உணர்ந்து கொள்ளாமல் அப்படி என்ன மனசு அவரது?” எனக் கேட்டாள்.

“அவன் காலேஜ் படிக்கிற காலத்திலேயே அடுத்தவங்க மேல இப்படிப் பொறமை படுவான்மா. ஆனால் எங்க மேல ஒரு நாளும் பட்டது இல்லை. ஆனா இப்ப எனக்கே சந்தேகமா இருக்கு? எங்க மேலையும் அவன் பொறாமை பட்டது எங்களுக்குத் தெரியாமையே பார்த்துக்கிட்டானோன்னு தோணுது. அவனுக்குள்ள இப்படி ஒரு அழுக்கை வச்சிக்கிட்டு எங்ககிட்ட பழகுவான்னு நாங்க நினைக்கவே இல்லை”

“அவன் அடுத்தவங்க மேல பொறமை படும் போதெல்லாம் நாங்க கண்டிச்சிருக்கோம். அப்ப எல்லாம் நல்லவன் போலச் சரிடா இனி நான் இப்படி இருக்க மாட்டேன், என்னை மாத்திக்கிறேன்னு சொல்லி எங்க வாயை அடைச்சிருக்கான். ஆனா அவன் கொஞ்சம் கூடத் திருந்தலைன்னு இப்பத்தான் தெரியுது”

“ஜீவா தான் பாவம் ரொம்ப உடைஞ்சிட்டான். அன்னைக்கு என்னைக் கூடச் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்டவன், மறுநாள் ஆபீஸ் வந்து சாரி கேட்டான்” என்றவன் அன்று நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.


ரஞ்சிவால் தனக்கு ஏற்பட்ட வலியை எல்லாம் தனக்குள்ளேயே வைத்துத் தாங்கிக்கொண்டு மறுநாள் அலுவலகம் வந்த ஜீவா நேராகச் சென்று நிதினை சந்தித்தான்.

“சாரி நிதின். அவன் அப்படிச் செய்ததுக்கு நீ என்ன செய்வ? உன்னையும் அப்படி நினைச்சது போலப் பேசினது தப்பு. சாரிடா” என்றான்.

“சரி விடு ஜீவா. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? இனி நாம அதைப் பத்தி பேசவேண்டாம்” என்றவன், “இப்ப ரிப்போர்ட் கொடுக்கணுமே ஜீவா? ரஞ்சிவ் தான் எரர் வர காரணம்னு தெரிஞ்சா அவன் மேல நடவடிக்கை எடுப்பாங்கல? அதில் மாட்டட்டும் அப்பத்தான் அவனுக்குப் புத்தி வரும்” என்றான்.

“இல்ல நிதின் நான் ஏற்கனவே நம்ம டீமில் யார் பிழை செய்திருந்தாலும் அவங்களைப் பனிஷ் பண்ணாத மாதிரி பார்த்துக்கணும்னு நினைச்சேன். ஏன்னா இப்ப இந்த முதல் ப்ராஜெக்ட் வெற்றி அடைஞ்சதுக்கு நீங்களும் காரணம். என் விரட்டலுக்கு எல்லாம் நீங்க கோபப்பட்டுப் போகாம கூட இருந்து வேலை முடிச்சதுக்கு இதைச் செய்யணும்னு நான் ஏற்கனவே முடிவு எடுத்திருந்தேன். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை” என்றான்.

“என்ன சொல்ற ஜீவா? அவன் உனக்கு வெற்றியே கிடைக்கக் கூடாதுன்னு செய்த வேலை அது? அதுக்கு நீ சப்போர்ட் பண்ண போறீயா?” என நிதின் கேட்டான்.

“அவன் புத்தி அது. அதுக்காக நானும் பழிவாங்க கிளம்பனுமா என்ன? விடு போய்த் தொலையட்டும்” என்றான் ஜீவரஞ்சன்.