மதுவின் மாறன் 23 & 24

வாணி நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்திருக்க,  அவளருகில் இருந்த மாறனோ அவளையே ரசித்து பார்த்திருந்தான்.

வாணி மாறனுடன் வந்துவிட்டாள்.

வரமாட்டேன் என அவள் கூறிக்கொண்டிருந்த நேரம் அவளது பெற்றோர்கள் வந்து சேர்ந்து விட, என்ன தான் அவளது தந்தைக்கு அனைத்தும் தெரியும் என மாறன் கூறியிருந்தாலும், தனது தந்தைக்கு முன் மாறனை விட்டு கொடுக்க மனமில்லாமல், தங்களுக்குள் ஊடல் என தன் வீட்டினரிடம் காண்பிக்க மனமில்லாமல் அவனுடன் கிளம்பி வந்திருந்தாள்.

வந்தவள் நேராய் சென்று அவளது மாமா அத்தையிடம் பேசிவிட்டு அவர்களது அறைக்கு செல்ல, மாறன் அப்போது குளியலறையிலிருக்க, மெத்தையில் படுத்து கொண்டவளின் கண்கள் சொருக ஆரம்பித்தது.

ஒரு வாரம் அவனை எண்ணி கலங்கி பசலை நோயால் அவதியுற்று தூங்காது இருந்தவள்,  இன்று தன்னவனுடன்  இருத்தலிலேயே மிகுந்த நிம்மதிகுள்ளாக உறக்கத்திற்குள் ஆழ்ந்து போனாள்.

குளியலறையிலிருந்து வந்தவன், “அதுக்குள்ள தூங்கிட்டாளா?” என அவளருகில் அமர்ந்து அவளையே பார்த்திருந்தான்.

“ஏன் மது இப்படி ஒரு அடம் உனக்கு?  பாரு ஒரு வாரத்துல எவ்ளோ எடை குறைஞ்சி போயிருக்க?? கண்ணை சுத்தி கருவளையம் வந்திருக்கு…  தூங்காம அழுதுட்டே இருந்திருப்ப போல…  உனக்கு தான் மனசுல உள்ளதை யார்கிட்டயாவது சொல்லி புலம்பிட்டே இருக்கனுமே இல்லனா அதுவே உனக்கு ஸ்ட்ரஸ் ஆகுமே…. என்னை பத்தி நம்ம பிரச்சனைய பத்தி எப்படி நீ யாருகிட்டயுமே சொல்லாம இருந்த??”  என தூங்கும் அவளிடம் அவளின் துயர் எண்ணி இவன் கவலைக் கொண்டு தானாய் பேசி கொண்டிருந்தான்.

“ஆனா இந்த பொண்ணுங்களே இப்படி தான் போல, ஒன்னு சொல்ல கூடாதுனு நினைச்சிட்டா அவங்க பெரிய வாயாடியா இருந்தாலும் அவங்ககிட்ட இருந்து அந்த விஷயத்தை வாங்க முடியாது தான்” என தன் போக்கில் பேசிக் கொண்டே போனவன்,

“நான் இல்லாமல் உன்னால இருக்க முடியாது மது.  உனக்கது புரியுதா?? நீ இல்லாம என்னாலயும் இருக்க முடியாது மது.  அதை நான் இந்த ஒரு வாரத்துல ரொம்பவே தெரிஞ்சிக்கிட்டேன்.  என்னைய விட்டு என்னிக்குமே போய்டாத மது.  என்கூடவே இருந்து எவ்ளோனாலும் சண்டை போடு. விட்டுட்டு மட்டும் போய்டாதடி” என தூங்கும் அவள் முகம் நோக்கி தன் இத்தனை நாள் வலியை எண்ணங்களை கூறிக் கொண்டிருந்தவன், அவள் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்தவாறு படுத்தவன் உறங்கிப் போனான்.

மறுநாள் மாறன் விழித்த சமயம் மது அவளது அலுவலகத்தில் இருந்தாள்.  தான் காலையிலேயே அலுவலகம் செல்வதாய் அவனுக்கொரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

காலை எழுந்து அவள் அருகிலில்லை என்றதும் அந்த அறை முழுவதும் பார்த்துவிட்டு, அவளின் அன்னையிடம் கேட்ட பின்பே அந்த குறுஞ்செய்தியை பார்த்தான். 

“காலைலயே கடுப்ப ஏத்துறா… இதெல்லாம் ஒரு மெசேஜூ…  என்னமோ அவ மேனேஜர்கிட்ட  மார்னிங் ஷிப்ட் போறேன்னு சொல்ற மாதிரி ஒரு மெசேஜ் அனுப்பி வச்சிருக்கா பக்கி.  ஈவ்னிங் வரட்டும் பார்த்துக்கிறேன்” என கடுப்பாய்  மனதிற்குள் பேசி கொண்டவன், அவளுக்கு ஏதும் பதில் அனுப்பாமலேயே தனது அலுவலுக்கு கிளம்பி போனான்.

இத்தனை நாளாய் அவளில்லாது வேலையில் கவனம் செலுத்தாது நிலுவையில் கிடந்த வேலையெல்லாம் அவனை நகரவிடாமல் செய்ய,  இரவு வெகு தாமதமாகவே வீட்டிற்கு வந்தான்.

அவளும் அவனுக்கு எதுவும் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கவில்லை.
அன்று முழுவதும் அத்தனை வேலை பளுவிலும், எப்பொழுதும் அவள் குறுஞ்செய்தி அனுப்பும் நேரமெல்லாம் தனது கைபேசியை எடுத்து அவளது குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என பார்த்து பார்த்து ஏமாந்து போனான்.

“இப்படி தான் என் மெசேஜ் எப்ப வரும்னு பார்த்து பார்த்து ஏமாந்து போய் முன்னாடி என்கிட்ட சண்டை போட்டுறுக்கா போல…. அவளோட ஃபீலிங் இப்ப தான் புரியுது எனக்கு” என மனம் போன திக்கில் எண்ணங்களை சுழற்றிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான் மாறன்.

வீட்டிற்கு வந்தவன் நேராய் தங்களது அறைக்குள் செல்ல,  உறங்கும் வாணியையே பார்த்திருந்தான்.

“காலைல இருந்து சாப்டாளோ இல்லையோ??” என அவள் முகத்தையே பார்த்திருந்தவன், அவளை எழுப்பவென கைகளை கொண்டு சென்றவன், “ம்ப்ச் ரொம்ப ஆழ்ந்த தூக்கத்துல இருக்கா எழுப்பவும் மனசு வர மாட்டேங்குதே” என தூக்கிய கையை இறக்கி கொண்டான்.

“நான் சாப்பிட்டேனா இல்லையானு தெரிஞ்சிக்காம உன்னால இருக்க முடியாதே மது! “ஒரு வாரமா என்னைய கவலைபட வச்சல இப்ப நீ அனுபவினு” இப்படி இருக்கியா மது… ஒரு வாரமா தூரமா இருந்து கொன்ன…  இப்ப பக்கத்துல இருந்து பேசாம கொல்றடி… தூரமா இருக்கும் போது வந்த மிஸ்ஸிங் ஃபீல்ல விட பக்கத்துல இருந்துட்டு இப்படி பேசாம இருக்கிறது என்னைய ரொம்ப கொல்லுதுடி! எவன் தான் இந்த காதல கண்டு பிடிச்சானோ?” வெறுமையின் விளிம்பில் மனம் துடிக்க பேசியவன் ஆற்றாமையுடன் ரிஃப்ரஷ் ஆக சென்றான்.

வந்தவன்  முகத்தை துடைத்துக் கொண்டே அறையில் நடக்க அங்கிருந்த மேஜையில் ஒரு பாத்திரத்தை கண்டான்.

திறந்து பார்த்தவனின் மனதில் சற்று பால் வார்த்தது போன்ற இருந்தது.

“ஹப்பாடா மதுப் பொண்ணு முழுசா நம்மளை வெறுத்துடல”  என மனதிற்குள் கூறிக் கொண்டவன்,

அவள் அவனுக்காக அங்க மேஜையில் வைத்திருந்த இட்லியை உண்டான்.
இரவு மாறன் தாமதமாய் வீட்டிற்கு வரும் சமயங்களில் இவ்வாறு அவனுக்காக தனியாய் இரவுணவை தங்களது அறையில் அவள் எடுத்து வைப்பது வழக்கம்.
ஆக அவ்வாறு அவள் இன்று அவனுக்காக எடுத்து வைத்ததை பார்த்ததும் அவனின் மனம் சற்று ஆசுவாசமடைந்தது.

உண்டு முடித்தவன் அவளருகில் சென்று படுத்து கொண்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.

“எப்படி மது உன் மனசுல திரும்பவும் நான் நம்பிக்கைய கொண்டு வர்றது?? நான் உன் காதலால தான் உயிர்ப்போட இருக்கேனு எப்படி உனக்கு நான் புரிய வைக்கிறது” என யோசித்துக் கொண்டே உறங்கி போனான்.
மறுநாள் காலை அவன் எழும்பும் வேளையிலும் அவள் அருகிலில்லை.
முந்தைய நாளின் சோர்வா அவனை காலை ஒன்பது வரை நித்திரையில் ஆழ்த்தியிருந்தது.

“இன்னிக்கும் ஆபிஸ் போய்ட்டாளா என்ன?” என எண்ணிக் கொண்டே, “மெசேஜ் எதுவும் செஞ்சிருக்காளா?” என தனது கைபேசியை எடுத்து பார்த்தவன் “அய்யய்யோ இவ்ளோ நேரம் தூங்கிட்டோமா?? எத்தனை மணிக்கு ஆபிஸ் போனாளோ??” என குறுஞ்செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

மெசேஜ் அலர்ட் எதுவும் அவளது எண்ணிலிருந்து வரவில்லை என்பதை பார்த்தவனின் மனது கோபத்தை தத்தெடுத்து கொள்ள, நேரே சென்று தனது அன்னையிடம் காண்பித்தான்.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ அதை நீங்க தான் பேசி தீர்க்கனும். அவ போறது வர்றது தெரியாம இருக்குற அளவுக்கு உனக்கு என்ன வேலை?? நீயா ஒரு ஃபோன் செஞ்சி இல்ல மெசேஜ் செஞ்சி பேச வேண்டியது தானே! என்கிட்ட வந்துட்டான் சண்டைய போடுறதுக்கு! சண்டைய உன் பொண்டாட்டிக்கிட்ட போட்டு ஒரு முடிவுக்கு கொண்டு வா..  எங்களைய கிறுக்கனா சுத்த விட்டுட்டு இருக்கீங்க நீங்க இரண்டு பேரும்” என பொறுமி தள்ளியவர்,

அவன் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதையும் திட்டும் சாக்கில் கூறிவிட்டு தனது வேலையை கவனிக்கலானார்.

தங்களது அறைக்கு சென்று ரிப்ஃரெஷ் ஆகி குளித்து முடித்து வந்தவன், அவளது கைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.
அவளது எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக குரல் செய்தி கூற,

அவளது அலுவலகம் சென்னையின் வெளிபுறத்தில் உள்ளதால் அவ்வபோது இவ்வாறு வருமாதலால் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பவென முடிவு செய்தான்.

அவன் குறுஞ்செய்தி அனுப்பவென வாட்ஸப் திறந்து பார்க்க, அவளது லாஸ்ட் சீன்(last seen) முந்தைய நாள் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய நேரத்தை காண்பிக்க அவனின் மனதில் ஏதோ சரியில்லை என தோன்றவாரம்பித்தது.
“எப்பவும் வாட்ஸப்ல யாருக்காவது மெசேஜ் அனுப்பிட்டு ஆன்லைன்ல தானே இருப்பா!! கல்யாணம் ஆன இவ்ளோ நாள்ல இத்தனை நேரம் வாட்ஸப் அவ யூஸ் செய்யாம இருந்து நான் பார்த்ததில்லையே… இப்ப ஃபோனும் நாட் ரீச்சபிள்ல இருக்கே!! எதுவும் பிரச்சனையா அவளுக்கு” என எண்ணும் போதே அவனது மனம் பதற,

“அப்டிலாம் இருக்காது!! நம்ம அவ ஆபிஸ்க்கே போய் பார்த்துடலாம்” என தன்னை தானே தேற்றிக் கொண்டவன் அவளின் அலுவலகத்திற்கு செல்ல ஆயத்தமான நேரம் அவனுக்கொரு அழைப்பு வந்தது.

அத்தியாயம் 24

கைகள் நடுங்க, உடலெல்லாம் பதற்றத்தின் உச்சத்தில் வியர்வையில் குளித்திருக்க, தனது இருசக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தான் மாறன்.

அவனின் மனம் வாகனம் பயணிக்கும் சாலையில் அல்லாது மதுவின் நினைவிலேயே சுழன்றிருந்தது.

“மதும்மா! ஏன்டா இப்படி என்னை கதற விட்டுட்ட!! எல்லாம் என்னால தான்”  மனசாட்சி ஒரு பக்கம் குத்தி கிழிக்க, இதயத்தின் வலி கண்களில் நீரை பெருக்க, மூக்கை உறிஞ்சி, ஒரு கையால் கண்ணை துடைத்து ஆசுவாசமாக முயற்சித்துக் கொண்டே வண்டியை அவளது அலுவகத்திற்கு ஓட்டிச்சென்றுக் கொண்டிருந்தான் மாறன்.

அவளது அலுவலகத்தை அடைந்தவன், அவனுக்கு முன்பு அழைத்த வாணியின் தோழி எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

“அண்ணா!! நாங்க இப்போ ஹாஸ்பிட்டல் வந்துட்டோம்ணா. ஆபிஸ்ல இருந்து அரை மணி நேரத்துல வந்துடலாம்ணா இந்த ஹாஸ்பிட்டலுக்கு… நீங்க சீக்கிரம் வாங்க”  என உரைத்து அந்த மருத்துவமனையின் பெயரை கூறினாள் வாணியுடன் பணிபுரியும் அவளது தோழி திவ்யா.

மறுபடியும் தனது இருசக்கர வாகனத்தில் அந்த மருத்துவமனைக்கு பயணிக்க தொடங்கிய நொடி திடீரென மழை பொழிய தொடங்க,  அம்மழையில் நனைந்தே சென்றவனின் மூளை திவ்யா ஃபோனில் உரைத்ததை நினைவு கூர்ந்தது.

வாணியை நேரில் சென்றே கண்டுவிட்டு வந்திடலாமென எண்ணி தனது இரு சக்கர வாகனத்தில் ஏறப்போன நேரம் அவனுக்கு அழைத்திருந்தாள் திவ்யா.

மதுவுடன் பணிபுரியும் தோழியென திவ்யா ஏற்கெனவே மாறனுக்கு பரிச்சயமானவள் தான்.

“அண்ணா, வாணி மயக்கம் போட்டு விழுந்துட்டா” அவள் அங்கே பதட்டத்துடன் கூறிய நேரம்,

இங்கே படபடப்பில் போனை தவற விட்டிருந்தான்.

அவசர அவசரமாய் ஃபோனை எடுத்தவன், “என்ன… என்னாச்சு என் மதுக்கு” கேட்கும் போதே அவனின் கண்ணில் நீர் கோர்த்திருந்தது.

“பெரிசா ஒன்னுமில்லைணா! நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க.  ஒரு வாரமா அவ ஒழுங்காவே சாப்பிடலணா… மதியம் பேருக்கு இரண்டு வாய் சாப்பிட்டுட்டு வச்சிடுவா… அவ ரொம்ப சோகமாவே இருந்தா…  கண்ணுல எப்பவும் நீர் கட்டிக்கிட்டே இருந்துச்சு… அப்படி என்னடி உனக்கு பிரச்சனைனு நான் கேட்டதுக்கு வாயே திறக்காம இருந்துட்டா…  உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைனு மட்டும் புரிஞ்சிது.  அதனால ரொம்ப எதுவும் கேட்காம விட்டுட்டேன்.  இப்படி சாப்பிடாம இருந்தனால லோ பிபி ஆகிருக்கும்னு நினைக்கிறேன்.  ஆபிஸ்ல இருக்கிற ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்தோம்.  டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்க…  சீக்கிரம் வாங்க”  என்றவள்  இணைப்பை துண்டித்திருந்தாள்.

“அவ சாப்பிட்டாளானு கூட பார்க்காம இருந்திருக்க நீ” அவனின் மனசாட்சி அவனை வதைக்க, “அவ அப்பா கூட தானே இருந்தா!! ஒழுங்கா பார்த்துப்பாங்கனு நினைச்சேனே” என எண்ணி கொண்டே வந்தவன்,

“லோ பிபினு தானே திவ்யா சொன்னாங்க! வேற எதுவும் பெரிய விஷயமோ??பின்னே ஏன்  வெளி ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டு போனாங்க”  என அவனின் மனம் கண்டதையும் எண்ணி கலங்கி மழை நீருடன் விழி நீரும் கலக்க மருத்துவமனை சென்றடைந்தான்.

மருத்துவமனை வந்தததும் திவ்யாவை அழைத்து மது இருக்கும் அறைக்கருகில் சென்றவனை திவ்யா பார்த்து பேசினாள்.

“என்ன அண்ணா!! இப்படி நனைஞ்சிட்டு வந்திருக்கீங்க… வாணிக்கு ஒன்னுமில்ல அண்ணா…  அங்க டிரிப்ஸ் போட முடியலைனு இங்க கூட்டிட்டு வந்தோம்” என்றவள் கூறியதும் சற்று ஆசுவாசமானவன் அழைத்திருந்தான் வாணியின் தந்தைக்கு.

அறைக்கருகே இருந்த ஜன்னலினருகில் சாய்ந்து நின்றவன் சற்று தன்னை நிதானமாக்கி கொண்டான்.

அவர் அழைப்பை ஏற்றதும்,
“மாமா…  ஏன் மாமா இப்படி பண்ணீங்க? வாணி ஒரு வாரமா அங்க ஒழுங்கா சாப்பிடாம இருந்திருக்கா…. நீங்க கவனிக்காம இருந்திருக்கீங்களே மாமா!! இப்ப ஹாஸ்பிட்டல்ல வந்து கிடக்கிறா மாமா.  நீங்க அவளை நல்லா பார்த்துப்பீங்கனு தானே உங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தானே அவகிட்ட கூட நான் பேசாம இருந்தேன்”

இந்நேரம் வாணி தனது தந்தையை வெகுவாய் தேடியிருப்பாள் என எண்ணியே, அவளின் தந்தையை  வர சொல்லலாம் என நினைத்தே அவருக்கு அழைப்பை விடுத்திருந்தான் மாறன். 

ஆயினும் அவன் மனதின் ஆற்றாமை அவனையும் மீறி வார்த்தைகளாய் வெடித்து அவரிடம் புலம்பலாய் உரைக்க வைத்திருந்தது.

“மாப்பிள்ளை முதல்ல என் பொண்ணுக்கு என்ன ஆச்சுனு சொல்லுங்க”  என பதற்றத்தின் உச்சியில் ஆங்காரமாய் கேட்டாரவர்.

அவளது உடல் பிணியையும் மருத்துவமனையின் விபரங்களையும் கூறி அவரை உடனே வருமாறு பணித்தான்.

அடுத்து தனது பெற்றோருக்கு அழைத்து, அவன் ஹலோ கூறிய நொடி,  “என்னடா!! சண்டை சமாதானம் ஆயிடுச்சா… இனியும் இப்படி சண்டை போட்டீங்கனா அவ்ளோ தான் சொல்லிட்டேன்…  உங்க சண்டைல எங்களையும் சேர்த்துல்ல பாடாய் படுத்துறீங்க”  என அவனின் தாய் பேசி கொண்டே போக,

“அண்ணா, டாக்டர் உள்ளே கூப்பிடுறாங்க”  என்று திவ்யா அழைத்ததும்,

“அம்மாஆஆஆ இரும்மா நான் அப்புறம் பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்தவன் அறையினுள் சென்றான்.

அவன் உள்நுழைந்து துவண்ட கொடியாய் படுத்திருந்த வாணியை பார்த்து அவளருகே சென்றான்.

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்

ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்
உனக்காக உனக்காக

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

திவ்யாவின் கைபேசி அலற, அதனை ஏற்று வெளியில் சென்றுவிட்டாள்.

“வாழ்த்துக்கள் வெற்றி” மருத்துவர் அவனுக்கு கை குலுக்கி வாழ்த்து கூறினார்.

மாறன் முதலில் புரியாமல் விழித்து பின் புரிந்த நொடி வாணியை பூரிப்பாய் கண்ணில் நீருடன் பார்க்க,  அவள் ஆமென தலையை அசைத்து மெலிதாய் சிரித்தாள்.

அடடா.. அடடா..
இன்று கண்ணீரும் தித்திக்கிறதே

கண்ணீரின் தித்திப்பை உணர்ந்தனர் இருவரும்.

“அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க!! அவங்களை நல்லா சத்தானதா சாப்பிட சொல்லுங்க. இந்த டிரிப்ஸ் முடிஞ்சதும் நீங்க டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம்” என்றுரைத்து அங்கிருந்து நகன்றார் மருந்துவர்.

அவள் சற்றாய் நிமிர்ந்து எழுந்தமற, ஒரு பக்கமாய் அவள் இடையை சுற்றி கை போட்டு அவள் தோளில் சாய்ந்தவன், தனது இத்தனை நேர மனதின் போராட்டத்தை அவளிடம் இறக்கி கொண்டிருந்தான்.

அவன் உடலின் குலுங்கலில் “அவன் அழுகிறான்” என புரிய, இவள் கண்களிலும் நீர் கட்டிக்கொள்ள, ட்ரிப்ஸ் ஏறாத கையால் அவன் தலை கோதியவள், “எனக்கு ஒண்ணுமில்லைப்பா”  என அவன் காதில் உரைத்து, முதுகை தடவினாள்.

அவள் தோளிலில் சாய்ந்து கொண்டே, “ரொம்ப பயந்துட்டேன் மதும்மா!! எல்லாம்  என்னால தான்னு கில்டி ஃபீல் ஆகிட்டு” என மூக்கை உறிஞ்சி கொண்டே கண்ணில் நீர் வர சொன்னான் மாறன்.

“ஆமாமா உங்களால தான். நீங்க செஞ்சி வச்ச வேலைனால தான் நான் இப்படி வாந்தி எடுத்துட்டு மயக்கம் போட்டு கிடக்கிறேன்” என அவனை தேற்றும் பொருட்டு இவள் கிண்டலாய் உரைக்க,

சற்றாய் சிரித்தவன்  சற்று ஆசுவாசமாகி அவளிலிருந்து பிரிந்து அமர்ந்தான்.

“தேங்க்ஸ்ப்பா” என்றாள் மனம் நிறைந்த உணர்ச்சிபெருக்குடன்.

“எதுக்கு?” என்பது போல் அவன் அவளை நோக்க,

“உங்களுக்கு ஞாபகம் இருக்கா?? மேரேஜ் முன்னாடி நான் சொன்னது…” என்றவள் கேட்க,

“என்ன சொன்னேன்??” என்றவன் கேட்டான்.

“எனக்கு இருக்க பீரியட்ஸ் பிராப்ளமுக்கு நமக்கு குழந்தை பிறக்கிறது டிலே ஆகலாம். அதுக்கு டிரீட்மெண்ட் எடுக்குற மாதிரி கூட ஆகலாம்.  இதுக்கெல்லாம் ஓகேனா மட்டும் என்னைய கல்யாணம் செஞ்சிக்கோங்கனு சொன்னேன்”

“நீங்க அதை அப்ப பெரிசாவே எடுத்துக்கல. குழந்தைங்கிறது கடவுள் கொடுக்கிற வரம்!! அது எப்ப நமக்கு கொடுக்கனும்னு நினைக்கிறாரோ அப்ப தருவார்.  அதை அப்ப பார்த்துக்கலாம்.  எனக்குனு எனக்காகனு எனக்கு பொண்டாட்டி ஆகவேனு பிறந்து வளர்ந்தவ நீ னு நான் மனபூர்வமா நம்புறேன்!! இந்த ஜென்மத்துல உன்னைய தவிற வேற யாரும் எனக்கு பொண்டாட்டி ஆக முடியாதுனு சொன்னீங்க”

“சரி…  அதுக்கென்ன இப்போ” என்பது போல் மாறன் பார்க்க,

“இதெல்லாம் நான் மறந்திருந்தேன்ங்க.  இவங்க நான் உண்டாயிருக்கேனு சொன்னதும் தான் ஞாபகம் வந்துச்சு. அதுல ஒன்னு புரிஞ்சிக்கிட்டேன்”

“என் மனசு புரிஞ்சிடுஞ்சா மதும்மா!! என் மேலுள்ள கோபமெல்லாம் போய்டுச்சா மதும்மா” என அவன் ஆர்வமாய் அவள் கை பற்றி கேட்க,

“என்ன நடந்தாலும் என்னை உங்க மனைவியா ஏத்துகிறதுல உறுதியா இருந்திருக்கீங்க.  குழந்தையே பிறக்கலைனாலும் நான் தான் உங்க மனைவியா வேணும்னு இருந்திருக்கீங்க. இப்ப எனக்கான உங்க இந்த பரிதவிப்பு எல்லாம் என் மேல இருக்க உங்க காதலை புரிய வச்சிடுச்சுங்க” என்றவள் கூறியதும் ஆழ்ந்த நிம்மதிகுள்ளானான் மாறன்.

அவனின் மாமாவிற்கு அழைத்து வீட்டுக்கு வந்து மதுவை பார்த்துக் கொள்ளுமாறு உரைத்தவன், அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றான்.

மருத்துவமனையில் பணம் செலுத்திவிட்டு வரவேற்பறையிலிருந்து அவர்கள் வெளியில் சென்ற நொடி,  அங்கு வந்த பெண்ணைப் பார்த்து அதிர்ந்து நின்றான் மாறன்.

அவனின் கண்கள் சட்டென பதற்றத்துடன் வாணியை நோக்க,

மாறனை கண்ட அந்த பெண்ணும் ஒரு நொடி அதிர்ந்து, பின் இயல்நிலைக்கு திரும்பி இவர்களை நோக்கி நடந்து வந்தாள்.

இவர்களின் பார்வையிலேயே அது மாறனின் முன்னாள் காதலி தீபா என புரிந்து கொண்டாள் மது.

–நர்மதா சுப்ரமணியம்