மதுவின் மாறன் 19 & 20

படம் பார்த்து முடிந்தபின் திரையரங்கத்தை விட்டு ஒவ்வொருவராய் வெளி வந்துக் கொண்டிருந்த சமயம், மாறனின் முன்பு வந்து நின்றாள் ஒரு பெண்.

அது இரவு ஒன்பதரை மணியை நெருங்கி கொண்டிருந்த நேரம்.

“ஹாய் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் செய்ய முடியுமா ப்ளீஸ்” என்று கண்கள் சுருக்கி கெஞ்சும் பாவத்தில் அந்த பெண் கேட்க,

“நீங்க யாரு?தெரியாத ஆளு கிட்ட வந்து ஹெல்ப் கேட்டுட்டு இருக்கீங்க” என்று ஆராய்ச்சி பார்வையில் கேட்டான் மாறன்.

“நான் உங்க ஆபிஸ்க்கு எதிரில இருக்க பிஜில தான் தங்கியிருக்கேன்.  உங்களை அடிக்கடி அந்த பக்கம் பார்த்திருக்கேன்.  இப்ப இங்க மூவி பார்க்க வந்தேன்.  என் ஃப்ரண்ட் வரேன்னு சொல்லிட்டு லாஸ்ட் மினிட்ல வராம போய்ட்டா .. இப்ப நான் படம் பார்க்கும் போது என் பின்னாடி சில பொறுக்கி பசங்க ரொம்ப அசிங்கமா என்னைய கிண்டல் பண்ணிக்கிட்டே இருந்தாங்க.  இப்ப தனியா போக பயமா இருக்கு. அவங்க என்னைய ஃபாலோ பண்ற மாதிரி வேற ஃபீல் ஆகுது. என்ன செய்யலாம்னு யோசிட்டு இருந்தப்ப தான் உங்களை பார்த்தேன். அதான் உங்க கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு தோணுச்சு.  என்னைய பிஜில கொண்டு போய் விட்டுட்டு போறீங்களா ப்ளீஸ்” என்று கெஞ்சும் பாவனையில் கேட்க,

“என்னைய மட்டும் எப்படி நல்லவன்னு நம்புறீங்க”  என்று மீண்டும் ஆராய்ச்சி பார்வையிலேயே அவன் கேட்க,

“மச்சி உன் வருங்கால மனைவி இந்த பொண்ணா தான் இருக்குமோ” என்று அவன் நண்பன் அவன் காதை கடிக்க,
“ம்ப்ச் சும்மா இருடா” என்று அதட்டியவன்,
“சொல்லுங்க என்னைய மட்டும் எப்படி நம்புறீங்க. இப்படி நைட் டைம்ல கூட யாருமில்லாம வந்ததே தப்பு. உங்க சேஃப்டி உங்க கைல தாங்க இருக்கு” என்று கூற,

“எங்க வோனர் கிட்ட நீங்க பேசினதை பார்த்திருக்கேன்.  ஒரு லேடிஸ் பிஜி எதிரில இருக்கும் போதும் கூட நீங்க இந்த பிஜில இருக்க பொண்ணுங்களை திரும்பி கூட பார்த்ததில்லை.  ஆபிஸ் வருவீங்க நீங்க உண்டு உங்க உண்டுனு உங்க வேலைய மட்டும் பார்த்து போய்டுவீங்கனு எங்க வோனர் அப்ப உங்களை பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தாரு. அந்த நம்பிக்கைல தான் இப்ப இப்படி வந்து உங்களை கேட்கிறேன்” என்று தலையை குனிந்துக் கொண்டு மெதுவாய் வாய்க்குள் முணுமுணுக்க,

“மச்சி நீ அவங்களை நம்ம வண்டில கூட்டிட்டு போடா.  நான் பஸ்ல வீட்டுக்கு போய்டுவேன்” என்றான் அந்த நண்பன்.
சற்று நேரம் யோசித்த மாறன், “நீங்க ஆட்டோ பிடிச்சி முன்னாடி போங்க. அந்த ஆட்டோவ ஃபாலோ பண்ணிட்டு பின்னாடி நாங்க வரோம்” என்றான் மாறன்.

அவள் ஆட்டோ நோக்கி நடக்க, “ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ உங்க பேர் என்ன?”  என்று கேட்டான்.

“தீபா” என்றாள்.

பின் ஆட்டோ பிடித்து அவள் செல்ல,  அதன் பின்னோடு இருவரும் சென்று அவள் இறங்குவதை பார்த்ததும் விடை பெற்று செல்ல,

“தேங்க்ஸ் வெற்றி. உங்களை வெற்றினு கூப்பிடலாம்ல”  என்று கேட்டாள்.

“ஹ்ம்ம் கூப்பிடலாம்” என்றான்.

“உங்க ஃப்ரண்ட் பேரு சொல்லவே இல்லயே” என்றவள் கேட்க,

“என் பேரு அஸ்வின் சிஸ்டர்” என்றவன்,

“சிஸ்டர் வெற்றி நம்பர் வாங்கிக்கோங்க,  உங்களை பார்த்தா பெங்களூருக்கு புதிசுனு தெரியுது. எந்த நேரம் என்ன உதவினாலும் நம்ம வெற்றி செய்வான்” என்று கோர்த்துவிட,

அவனை நன்றாய் முறைத்து விட்டே வெற்றி தனது நம்பரை கொடுத்து அவளுடையதை பெற்றுக் கொண்டான்.

பின் இருவரும் வண்டியில் வெற்றியின் இல்லத்திற்கு சென்றனர்.

அஸ்வின் வெற்றியுடன் கல்லூரியில் படித்த தோழன்.  பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராய் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறான்.

வெற்றி இங்கு அலுவலகம் தொடங்கியதும் அவனுடன் சேர்ந்து தங்கி கொண்டான்.
வெற்றியின் இந்த காதலை அறிந்த ஒரு நபர் இவன் தான். (பின்னே இந்த காதல தண்ணீ ஊத்தி வளர்த்தது இவன் தானே)

அன்றிரவு வெற்றியிடம், “மச்சி தீபா தங்கச்சி தான்டா உன் வருங்கால மனைவினு எனக்கு பட்சி சொல்லுதுடா. அதெப்படி இத்தனை பேரு இருக்கும் போது அவங்க உன்கிட்ட வந்து உதவி கேட்டாங்க. எல்லாம் விதி அதான் அப்படி நடக்குது” என என்னன்வோ கூறி வெற்றியின் மனதை இவன் கலைக்க,

அவளின் அழகும் தோற்றமும் அவன் கண் முன்னே வந்து போக,  “நமக்கு ஏத்த ஜோடியா தான் அந்த பொண்ணு தெரியுது. நமக்கு மனைவியா வர்ற அத்தனை தகுதியும் இருக்கு தான்” என்று எண்ணிக் கொண்டான்.

அப்பொழுது மாறன் திருமணத்திற்கான தகுதியாய் எண்ணியது அழகும் ஜோடி பொருத்தமும் மட்டுமே.

அன்றிரவே அப்பெண்ணிடமிருந்து மாறனுக்கு “பத்திரமாய் வீடு போய் சேர்ந்துட்டீங்களா?” என்றொரு குறுஞ்செய்தி வந்திருக்க,
மாறனின் மனம் பூரித்து குதூகலித்து போனது.

அக்குறுஞ்செய்தியை பார்த்ததும், “அஸ்வின் சொல்ற மாதிரி இவ தான் நான் கட்டிக்க போற பொண்ணா இருக்குமோ?? இவளை கட்டிக்கிட்டா நல்லா தான் இருக்கும்” என எண்ணிக் கொண்டே பதில் செய்தி அனுப்பினான்.

பின் குறுஞ்செய்தியிலேயே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தங்களின் நட்பை வளர்ந்திருந்தவர்கள்,
வாரயிறுதி நாட்களில் ஊர் சுற்றி, பின் அலுவலகம் செல்லும் நேரமெல்லாம் அவளை நேரில் சந்தித்து உரையாடி என தங்களது நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருந்தனர்.

ஒரு நாள் தாங்கள் குடியிருக்கும் இல்லத்திற்கே அவளை அழைத்து சென்றான் மாறன்.

அங்கு தான் தன் காதலை அவனிடம் உரைத்தாள்  தீபா.

இங்கு…

கண்ணில் நீர் வழிய அமைதியாய் இவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்த வாணி,
“நம்ம இப்ப நான் இருக்க பெங்களூர் வீட்டுலயா இதெல்லாம் நடந்துச்சு” என்று கேட்டாள்.

அவளின் கேள்வியில் சிரிப்பு வந்தது மாறனுக்கு.

“அவ லவ் சொன்னதை விட,  எந்த வீட்டுல வச்சி லவ் சொன்னாங்கிறது தான் முக்கியமா மதுபொண்ணு” என சிரித்துக் கொண்டே கேட்க,

“ஆமா நாம இப்ப இருக்க பெங்களூர் வீட்டுல எனக்கு நிறைய நல்ல நினைவுகள் மெமரீஸ் இருக்கு. அங்க வச்சி தான் இதெல்லாம் நடந்திருந்தா இனி இந்த வீடு எனக்கு துயரமான நினைவுகளை வழங்கும் இடமா மாறிடும்”  என நா தழுதழுக்க அழுதுக் கொண்டே வாணி கூற,

“ம்ப்ச் மதும்மா நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காதேனு சொன்னேன்” என்று கூறிக்கொண்டே அவளருகில் வந்து அவள் தலையை அவன் கோத,

அவன் மார்பில் சாய்ந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

“இதெல்லாம் அப்ப நடந்தது மதும்மா. அது லவ் கூட இல்ல.  ஈர்ப்பு தான்னு தெரிஞ்சிக்கிட்டேன்.  நான் காதலுக்கான அர்த்தம் தெரிஞ்சிக்கிட்டது உன்கிட்ட தான்.” என்றவன் அவளை ஆறுதல் படுத்த,

அவனில் இருந்து பிரிந்து அமர்ந்தவள், “ம்ம் நான் அழல.  நீங்க சொல்லுங்க” என கண்களை துடைத்துக் கொண்டு அழுகையால் ஏற்பட்ட விக்கலில் விக்கி கொண்டே கூற,

சற்றாய் அவளுக்கு வீசிங் தொடங்க ஆரம்பித்தது.

அவளுக்கு குடிக்க தண்ணீர் அளித்து, அவள் சைனஸ்க்கு போட வேண்டிய மாத்திரைகள் அளித்தவன், “இரு வரேன்” என்று எழுந்து செல்ல,

அவன் கையை பற்றியவள், “எங்க போறீங்க? மீதிக் கதையை சொல்லிட்டு போங்க”  என்றாள்.

“உன் ஹெல்த் சரியாக்குறது தான் எனக்கு இப்ப முக்கியம் மதும்மா. இதுக்கு நான் சொல்லாம இருந்தேன்.  பேசி பேசியே என்னை சொல்ல வச்சிட்டல”  என்று சற்று கடுப்பாய் உரைத்தவன், சமையலறை சென்றான்.

அவன் அவ்வாறு உரைத்ததற்கும் சேர்த்து அழுதாளவள்.

சமையலறையில் நின்றுக் கொண்டு இவளுக்காக அவன் பால் காய்ச்சி கொண்டு இருக்க, அவனின் மனமெல்லாம் இவளின் அழுகையை எண்ணி வேதனையில் திளைத்திருந்தது.

“இதுக்காக தான் சொல்லாம இருந்தேன்.  கேட்டாளா?? இப்ப கண்டதையும் கற்பனை பண்ணி அவளையே அவ கஷ்டபடுத்திப்பா. முதல்ல எல்லாத்தையும் முழுசா சொல்லி முடிக்கனும். என் லவ் முழுக்க அவளுக்கு மட்டும் தான்னு புரிய வைக்கனும்” என தனக்குள்ளேயே கூறிக்கொண்டவன் அவளுக்கு பால் கலந்துக் கொண்டு போய் கொடுத்தான்.

அவனிடம் பால் வேண்டாமென கூறியவள், “அப்ப நான் கேட்கலைனா வாழ்க்கை முழுக்க இதை என்கிட்ட சொல்லாம மறைச்சிருப்பீங்களா” என்று அந்த கேள்வியிலேயே அவள் நிற்க,

“நீ பால் குடிச்சா தான் என்கிட்ட இருந்து பதில் வரும்” என்றவன் அவளை தன் கைக்குள் வைத்து அவளுக்கு பாலை புகட்டினான்.

அவனின் இந்த கனிவிலும் காதலிலும் அவளுக்கு கண்ணீர் சுரந்தது.

இவனின் இக்கனிவையும் அன்பையும் ஏற்று கொள்ளவும் முடியாமல் ஏற்று கொள்ளாமல் இருக்கவும் முடியாமல் இருதலை கொள்ளியாய் அவளின் மனம் தவித்தது.

அவள் பால் அருந்தி முடிந்ததும், அவளருகிலேயே அமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்தவன்,

“இப்ப நம்ம இருக்க பெங்களூர் வீடு நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்ச பிறகு வாங்கி கட்டினது மது. உனக்காக நான் பார்த்து பார்த்து கட்டியது அது” என்றான்.

“நிஜம்மாவா??” என ஆச்சரியமாய் சிறு பிள்ளை போல் அவள் கேட்க,

அவள் கன்னம் பற்றி முத்தமிட்டவன்,
“என் செல்லகுட்டிய விட எனக்கு யாரடா பெரிசா பிடிச்சிட போகுது இந்த உலகத்துல”  என்றான்.

“இப்படி பேசி பேசியே என்னைய நீங்க  ஏமாத்தி வச்சிருக்கீங்களோனு தோணுது எனக்கு” என்றவள் கூறிய நொடி அவள் மடியிலிருந்து சட்டென்று எழுந்தமர்ந்தான் மாறன்.

அத்தியாயம் 20

மாறனுக்கு அவளின் கேள்வியில் கோபத்தை விட வருத்தமே மேலோங்கியது.

“நம்பிக்கைலாம் சொல்லி புரிய வைக்க முடியாது மதும்மா. அது என் நடத்தைல, நான் காட்டுற அன்புல, தானா உன் மனசுல ஆழமா வரனும்.  என்ன நடந்தாலும் எதுவாலும் என் மாறனுக்கு நான் எப்பவுமே அதே ஸ்பெஷல் ப்ளேஸ்ல தான் இருப்பேங்கிற நம்பிக்கைய உன் மனசுல நான் தான் விதைக்கனும்”

சற்று இடைவெளி விட்டவன், தன் குரலை செருமிக் கொண்டு,

“ஆனா அந்த நம்பிக்கைய நானே விதைச்சிட்டு நானே கெடுத்துட்டும் இருக்கேன்னு புரியது”  என்றான் வலி நிறைந்த குரலில்.

அவளில் இருந்து சற்று தள்ளி அமர்ந்தவன், தன் கதையை கூறலானான்.

அவன் அவ்வாறு தள்ளி அமர்ந்ததே அவள் மனதை வெகுவாய் காயம் செய்தது.

அன்று தீபா அவ்வாறு காதல் கூறியதும் அந்த நேரம் உலகத்திலேயே தான் மட்டுமே மகிழ்வான ஆள் என்ற இன்ப கடலில் நீந்தி கொண்டிருந்தான் மாறன்.
தன்னை விரும்பும் ஒரு பெண் தானாய் தன்னிடம் வந்து தன் காதலை கூறும் போது,  தான் அப்பெண்ணை விரும்பாமல் இருக்கும் போதும் ஓர்  ஆணுக்கு அது ஒரு பெருமித உணர்வை அளிப்பதாய் இருக்கும்.
அத்தகைய மனநிலையில் தான் மாறன் அன்று இருந்தான்.

அவனும் அவளின் காதலை ஏற்றுக் கொண்டு முன்மொழிந்தான்.

பின் இருவரும் காதல் பறவைகளாய் சுற்றி திரிந்தனர். நாட்கள் மாதங்களாக சென்று கொண்டிருந்த நேரம், அவ்வப்போது வரும் சிறு சிறு சண்டையும் பெரும் பிரச்சனையாய் இருவருக்குள்ளும் உருபெற்றிருக்க அது பெரும் வெறுப்பை விதைக்க தொடங்கியது இருவருக்குள்ளும்.

இருவரும் பேசி கொள்வதையே விரும்பாமல் இருந்த நாட்கள் அதிகமாயின.

இருவருக்கும் இருவர் மீதிருந்த அழகின் ஈர்ப்பும் குறைந்து, மற்றவரது நல்ல குணங்கள் செயல்கள் எல்லாம் மறக்கடிக்க பட்டு பிடிக்காத குணங்களே மனதில் பதிய ஆரம்பித்தது.

அதுவே மற்றவரை வெறுக்கவும் செய்தது.

அழகின் ஈர்ப்பினால் உண்டாகும் காதல், தான் காதலிப்பவரிடம் இருக்கும் அனைத்து குணங்களையும் ஏற்று கொள்வதாய் உரைத்தாலும், அந்த ஈர்ப்பு குறைய குறைய மனம் தனக்கு பிடிக்காத குணங்கள் எல்லாம் முன்னிருத்தி சண்டையிட வைக்கும்.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி அவள்/அவன் மட்டுமே தனக்கு போதும் என்று காதலிப்பவர்களுக்கு தங்கள் காதலர்களிடம் இருக்கும் பிடிக்காத குணங்களை தாண்டியும் அக்காதல் அவர்களை காதலிக்க வைக்கும்.  எப்படி இருந்தாலும் நீ  எனக்கு வேண்டும் என மனம் போராடும்.  எங்கேயும் அவர்களை விட்டு கொடுக்காது வாதாடும்.  இப்படி இருப்பவர்கள் இறுதி வரை காதல் குறையாமல் வாழ்வார்களா என்றால் அவ்வாறு கிடைக்காது.  வாழ்வில் அனைவருக்குமே ஏதோ ஒரு இடத்தில் தனது இணை தன்னிடம் காண்பிக்கும் காதல் குறைந்து விட்டதாய் எண்ண வைக்கும்.

அதையும் தாண்டி அவர்கள் மனமொத்த காதல் தம்பதியராய் வாழ்நாள் முழுமைக்கும் வாழ முடிவதற்கான காரணம்,  அவ்வாறு எப்பொழுதெல்லாம் தன் இணையின் காதல் குறைவதாய் எண்ணுகிறார்களோ அந்நேரம் சரியாய் தன் அன்பை அவரிடம் சேர்ப்பிக்க மற்றவர் எடுக்கும் முயற்சியும், அவ்வாறு தோன்றும் போது தன் இணை தனக்காக செய்யும் சிறு சிறு விஷயங்களிலும் இருக்கும் காதலை புரிந்துக் கொண்டு தன் காதலை அவர்களிடம் உணர்துவதிலுமே அது முழுமையான காதலாய் நிலைபெற்று நிற்கிறது.

இங்கு மாறன் தீபா காதலில் இருவருமே தங்களின் காதல் அழகால் வந்த ஈர்ப்பு மட்டுமே என்று ஒரு கட்டத்தில் உணர தொடங்கி விட்டனர்.

சரியாய் அந்நேரம் இவள் மீதிருந்த காதலினால் தொழிலை சரியாய் கவனியாமல் விட்டு அது பெரும் நஷ்டத்தில் சென்று கொண்டிருக்க, மாறன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானான்.

இது தான் மாறனை விட்டு பிரிய சரியான நேரம் என்றுணர்ந்த தீபா அவனிடம் பிரேக் அப் செஞ்சிடலாம் எனக் கூறி பிரிந்து விட்டாள்.

தொழிலின் நஷ்டமும் இவளின் இந்த திடீர் முடிவும் மாறனின் மனநிலையை வெகுவாய் பாதித்து அவனை பெரும் கவலைக்குள் ஆழ்த்தியது.  வாழ்வின் விரக்தி நிலையில் இருந்தான் மாறன்.

“நிஜமா சொல்றேன் மதும்மா.  அவ என்னைய விட்டு போய்ட்டாளேனுலாம் நான் வருத்தபடலை.  அதனால நான் விரக்தியாகலை.  உண்மைய சொல்லனும்னா மனசு நிம்மதியாச்சு. ஹப்பாடா போய்ட்டாளா இனி டார்ச்சர் பண்ண மாட்டானு தோணுச்சு.  எங்க இரண்டு பேருக்குமே என்னமோ செட் ஆகலை.  இரண்டு பேரும் எப்போதும் சண்டையே போட்டுட்டு இருந்தது எங்க நார்மல் வாழ்க்கைய அது ரொம்பவே பாதிச்சிது.  அதனால இனி சண்டைலாம் இல்லாம நிம்மதியா இருக்கலாம்னு தான் தோணுச்சு.

எனக்கு என் மேலயே ஒரு வெறுப்பு. எனக்கு லவ்லாம் செட் ஆகாது.  பொண்ணுங்க எல்லாமே இப்படி தான் சண்டை போட்டு உசுரவாங்குவாங்க.  இனி கல்யாணமே செஞ்சிக்க கூடாதுனுலாம் நினைச்சிருக்கேன்.  இது எல்லாத்தையும் மாத்தினவ நீ தான்.  நீ எவ்ளோ சண்டை போட்டலும் மனசு திரும்ப உன்கிட்ட தான் வந்து நிக்கும். உன் காதல் இல்லாம என்னால வாழ முடியாதுனு அடிக்கடி நினைச்சிருக்கேன் மது”

எதுவும் பேசாமல் அவன் கூறுவதை அமைதியாய் கேட்டு கொண்டிருந்தாள்.

மாறன் தன் மீதான காதலை பற்றி கூறும் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அப்போது மது இல்லை.

ஆகையால் ஏதும் எதிர்வினை காட்டாது அமைதியாய் இருந்தாள்.

பின் அவனே தொடர்ந்தான்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல மாதம் வருஷமாகி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் தொழில் மட்டும் முன்னேற்றம் இல்லாமல் அன்றாடம் ஜீவனத்திற்கு மட்டும் லாபம் கிடைத்துக் கொண்டிருந்தது.
மாறன் பெங்களூர் வந்து தொழில் தொடங்கிய நாளிலிருந்து சென்னை செல்லவேயில்லை. 

நாளுக்கு ஓரிரு முறை தாய் தந்தையரிடம் அலைபேசியில் பேசி கொள்வான்.
அவ்வப்போது அவனது தந்தை அவனை  வந்து பார்த்துவிட்டு செல்வார்.  இந்த தீபாவின் காதல் பிரிவினை விரக்தி இவை எதுவும் அவனது வீட்டினருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

ஆனால் தொழிலின் நஷ்டம் மட்டும் கடையிலுள்ள வேலையாள் மூலமாகவும் அவன் கடன் பெற்றவரின் மூலமாகவும் தெரிந்து விட்டது.

“அப்பா, தொழில் திரும்ப நல்ல நிலைமைக்கு கொண்டு வா.  உனக்கு நான் பக்கபலமா இருக்கேன்னு சொல்லி தைரியம் சொல்லிட்டு, அவங்க கிட்ட இருந்த காசுலாம் கொடுத்துட்டு போனாங்க. தொழில் திரும்பவும் நல்ல லாபத்தோடு போக வைக்குறதே பெரும்பாடாய்ட்டு. எப்பவும் மனசு சங்கடமா துக்கமாவே இருக்கும் அப்பலாம்”
அப்ப தான் அஸ்வின் ஒரு அட்வைஸ் செஞ்சான்.

“நம்ம எவ்ளோ துன்பத்தில் இருந்தாலும் அதுலாம் தாண்டி நம்ம மனசை சந்தோஷமா வச்சிக்க நம்மளோட துன்பம்லாம் பெரிசே இல்லனு நம்ம மனசை நம்ப வச்சி அதை கடந்து வர்ற உதவி செய்றது பிரார்த்தனை தான்டா.  அதுக்காக தினமும் கோயிலுக்கு போய் மந்திரம் சொல்லு ஜபம் செய்னுலாம் சொல்ல மாட்டேன். தனக்கு இது வேணும் அது வேணும்னு கேட்டு சாமி கும்பிடுறதே தப்புடா. கடவுள்ங்கிறது நமக்கூட ஒரு ஆளா உருவமா நமக்கு கூட இருந்து கைட் பண்ற குருவா நட்பா ஒரு உறவா எதோ ஒன்னா முதல்ல நம்ம மனசுல எடுத்து வச்சிக்கனும்.  தினமும் எப்படி நீ என்கிட்ட உன்னோட சுக துக்கத்தை பகிர்ந்துக்குற அப்படி அவர்கிட்ட நீ சொல்லிட்டே வந்தாலே போதும்.  எல்லாம் அவர் பார்ப்துப்பார்ங்கிற நம்பிக்கை தானா உன் மனசுல விதையும். போக  போக அன்றாடம் நிகழும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கும். எல்லாமே நன்மைக்கேனு மனசு நம்ப ஆரம்பிக்கும்.  அவர் நல்லதை மட்டுமே செய்வாருனு நேர்மறை எண்ணத்தை மனசல கொண்டு வரும்.  இது நீ வாழ்க்கைல அடுத்து எடுத்து வைக்கிற ஒவ்வொரு முயற்சிலையும் அவர் உன்னை கைபிடிச்சி அழைச்சிட்டு போற உணர்வை உனக்கு கொடுக்கும்னு பெரிசா விளக்கும் கொடுத்து அஸ்வின் என்னைய மறுநாளே ஐயப்பன் கோயிலுக்கு கூட்டிட்டு போய் மாலை போட வச்சான்.”

“தினமும் மனசுல உள்ள சோகம் துக்கம் அன்றாட நிகழ்வுனு இல்லாமே இந்த ஐயப்பன் கிட்ட வந்து சொல்லிட்டு போனு சொல்லிட்டு அவன் வேலை மாறுதலாகி ஹைதராபாத் போய்ட்டான்.”

“இத்தனை நாள் கூட இருந்துட்டு அவன் அப்படி போறது என்னைய தனிமை படுத்திடும்னு நினைச்சிட்டு அவன் இப்படி சொல்றானோனு எனக்கு முதல்ல தோணுச்சு.  ஆனா மாலை போட்டுட்டு அவன் சொன்னது போல செஞ்சதுல அப்படி ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷன் எனக்குள்ள மது”

“மாலை போட்டு கிட்டதட்ட இருபது நாள் ஆகியிருந்த சமயம் உன்னை பார்த்தேன்” என்று மாறன் கூறிய நொடி,

“என்னது என்னைய பாத்தீங்களா??” என்று ஆச்சரியமாய் கேட்டாள் மது.

“ஆமா மடிவாலா ஐயப்ப கோவில்ல பார்த்தேன்” என்றவன் கூறியதும்,

“அப்புறம் எப்படி ஹாஸ்ப்பிட்டல்ல பார்த்தது தான் ஃப்ர்ஸ்ட் மீட்னு சொன்னீங்க?? பொய் சொன்னீங்களா??” என்று முகத்தை உர்ரென்று வைத்து அவள் அவனை கேட்க,

அவளின் முக பாவனையை ரசித்து பார்த்தவன், அவள் தலையில் கை வைத்து மண்டையை ஆட்டி கன்னத்தை கிள்ளி, “என் கிட்ட மட்டும் எப்பவும் இப்படி சின்ன பிள்ளையாவே ரியாக்ட் பண்ணு மது. ஐ லவ்ட் இட்”  என ரசித்துணர்ந்து கூற,

அதற்கும் அதே பார்வையே அவள் பார்த்து வைக்க, “என்ன இதுக்கும் நான் உன்னை கொஞ்சி கொஞ்சி ஏமாத்தி வச்சிருக்கேன்னு தோணுதா” என அவன் சிரித்து கொண்டே கேட்க,

தன் கையை மடக்கி அவன் கன்னத்தில் ஒரு குத்து குத்தினாள்.

வாய்விட்டு சிரித்தவன், “ஏன் மதும்மா உனக்கு இந்த  ஸ்டண்ட் வேலைலாம்” என அதற்க்கும் அவளை அவன் வார,

“சரி சரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க”  என்றாள்.

“நான் உன்கிட்ட என் காதலை உணர்ந்து ஹாஸ்பிட்டல்ல தானே.  என் காதலை அப்பாகிட்ட சொன்னது அங்க தானே.  அதனால அது தான் எனக்கு உன்னுடனான முதல் சந்திப்பு.  அதுக்கு முன்னாடி நடந்த எந்த சந்திப்பையும் நான் நினைவு படுத்திக்க விரும்பலை. அதுவுமில்லாம அதுக்கு முன்னாடி நடந்த அந்த சின்ன சின்ன மீட் தான் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி அன்னிக்கு மாமாகிட்ட உன்னைய பொண்ணு கேட்க வச்சிருக்குனு பின்னாடி புரிஞ்சிது” என்றவன் அந்த கோவில் நிகழ்வை கூறலானான்.

“அன்னிக்கு நீ கோயில்ல கண்மூடி உட்கார்ந்திருந்த,  ஆனா கண்ணுலருந்து தண்ணியா வந்துட்டு இருந்துச்சு.  மனமுருகி கடவுள்கிட்ட ஏதோ சொல்லிட்டு இருக்கனு புரிஞ்சிது.  உன் மனசுல ஏதோ உள்ளார்ந்த சோகம் இருக்கோனு தோணுச்சு”

“உன்னை தியேட்டரில் பார்த்த பிறகு வாழ்க்கை கொடுத்த அடில யாரையும் ஹர்ட் பண்ண கூடாது, அழகுல ஒன்னுமில்லை, மனசால கூட யாரையும் குறைவா மதிப்பிட கூடாது பேச கூடாதுனு பெரிய பாடம் வாழ்க்கை கத்து கொடுத்துச்சு.  அதுவும் அந்த இருபது நாள் சாமி கும்பிடுறேனு ஆன்மிக சிந்தனைகள் கதைகள்னு படிச்சதுல என் மனசுல பெரிய மாற்றம். சக மனுஷனை எப்படி மதிச்சு வாழனுங்கிறது தானே நம்ம ஆன்மிகம் நமக்கு முதல்ல சொல்லி கொடுக்கிறது.  அதனால மனித இயல்புகள் புரிய ஆரம்பிச்சிது.”

“உன்னை அங்க கோயில்ல பார்த்ததும் இது அந்த தியேட்டர்ல பார்த்த பொண்ணு தானேனு தோணுச்சு.  உன்கிட்ட நேரிடியா வந்து நான் நினைச்சதை சொல்லி சாரி கேட்கனும்னு தோணுச்சு.  ஆனா உன் கண்ணீர் என் மனசை என்னமோ செஞ்சது. உன்கிட்ட வந்து ஆறுதல் சொல்லி உனக்கு நான் இருக்கேனு சொல்லனும்னு தோணுச்சு.  எல்லாமே தோணுச்சே ஒழிய அதை அங்கே செய்ற தைரியம் எனக்கு இல்ல”

“நீ கண் திறந்து கொஞ்சம் நார்மல் ஆனதும் தானா அந்த ஸ்மைல் உன் ஃபேஸ்ல வந்துட்டு.  இந்த சிரிப்புக்குள்ள எல்லாத்தையும் மறைக்கிறது இது தானா .. நம்ம இந்த பொண்ணுகிட்ட நிறைய கத்துக்க வேண்டியது இருக்கும் போலயேனு நினைச்சேன்.  அப்ப உன் ஃப்ரண்டு ஒரு பொண்ணு ஒல்லியா உன் பக்கத்துல வந்து உட்கார்ந்து அவங்க சோகத்தை சொல்லி அழுதாங்க.  நீ அவங்களுக்கு சமாதானம் சொல்லி எல்லாமே நல்லதுக்கு தான்னு நம்பு னு நிறைய பாஸிட்டிவ்வா பேசி அப்புறம் கிண்டல் பண்ணி அந்த பொண்ணோட மனநிலைய கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டு இருந்த”

“இதை பார்ககும் போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா .. வாட் எ கேர்ள்னு தோணுச்சு” என்றான்.

“ரொம்ப ஓவரா தான் எனக்கு ஐஸ் வச்சிட்டு இருக்கீங்க.  இதுல என்ன வாட் எ கேர்ள்னு சொல்ற அளவுக்கு இருக்கு” என தன் முகத்தை அவள் சுழிக்க,

அவளருகே சென்று அமர்ந்தவன் அவள் கையை தன் தலை மீது எடுத்து வைத்து, “நான் மனசார விரும்புற என் மது சாட்சியா என் மேல சத்தியமா இப்ப வரைக்கும் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இப்பனு இல்ல எப்பவுமே நான் மனசறிஞ்சு ஒரு பொய்யும் உன்கிட்ட சொன்னதில்லை”  என்றான்.

அவன் அவ்வாறு செய்ததும் தன் கையை பட்டென்று அவன் தலையிலிருந்து உருவியவள், “என்னங்க இது” என கூறி பதறிபோனாள்.

“கணவன் மனைவி உறவுக்கு பரஸ்பர நம்பிக்கை தான் பெரிய அஸ்திவாரம் மதும்மா.  அது குலஞ்சு போச்சுனா நிம்மதி போய்டும். அன்பு குறைய ஆரம்பிக்கும்.  அந்த நம்பிக்கைய என்னிக்கும் நான் காப்பேன். நீ என் மேல இருக்கும் அந்த நம்பிக்கைய என்னிக்கும் விட்டுடாதனு தான் சொல்ல வரேன்”

“நீ  இதுவரைக்கும் நான் வேற யாரையும் லவ் பண்ணேனானு கேட்டதே கிடையாது. அப்படி கேட்டிருந்தேனா நான் கண்டிப்பா உண்மைய சொல்லிருப்பேன்” என்றவன் கூறியதும்,

“என்னைய தவிற நீங்க வேற யாரையும் காதலிச்சிருக்க மாட்டீங்கங்கிற நம்பிக்கைல தான் நான் அப்படி கேட்கலை.  ஆனா அப்படி இருந்தாலும் நம்ம மேரேஜ்க்கு முன்னாடி நான் தெரிஞசிக்கவும் விரும்பலை. அப்ப என்னோட இன்செக்யூரிட்டி ஃபீல் இன்னும் அதிகமாகும்னு தோணினதும் ஒரு காரணம்.  ஆனா இப்ப இருவரும் சரி பாதினு வெகுவான புரிதலோட வாழும் போது எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிறது தான் நல்லதுனு தோணுச்சு.  அதான் உங்க மனசுல உள்ளதுலாம் சொல்லுங்கனு கேட்டேன்” என்றாள்.

அவளின் மனம் இவன் காதலை முழுதாய் நம்பினாலும் தற்சமயம் அவனின் முன் காதலை கேட்டு அடிபட்ட மனது அவன் கூறும் எதையும் பூரிப்பாய் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

“சரி சொல்லுங்க ஏன் அப்படி தோணுச்சு” என்றாள்.

“உனக்குள்ளயே ஒரு கவலை சோகம் அழுகை இருக்கும் போது,  அதை மறைச்சிட்டு இன்னொருத்தருக்கு நீ ஆறுதல் சொல்ற, அவங்களை தேத்துற, சிரிக்க வைக்கிற. இது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா மது. இது தான் தன்னலம் பார்க்காமல் தன்னை சுற்றியுள்ள அனைவரையும் சந்தோஷமாய் வச்சிருக்கனுங்கிற உயர்ந்த உள்ளம்.”

“அந்த குணம் போதும் உன்னையவே ரொம்ப பிடிச்சி போச்சு அப்ப”

“அதுக்கப்புறம் தினமும் கோயில்ல வரும் போதெல்லாம் உன் ஞாபகம் வரும்.  உன்னை அடுத்து பார்க்கும் போது கண்டிப்பா உன்கிட்ட சாரி கேட்கனும்னு நினைச்சிப்பேன். கடவுளா பார்த்து நம்ம அடுத்து மீட் செய்ற மாதிரி ஒரு வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்தார்”

“எனக்கு நீ ப்ளட் டொனேட் பண்ண”  என்றான்.

“என்னது?? அது நீங்களா??” என்று அதிர்ச்சியின் விளிம்பிற்கே சென்று வந்தாள் வாணி.

— நர்மதா சுப்ரமணியம்