மதுவின் மாறன் 17 & 18

முழு கார் பயணத்திலும் பேசாது மெளனமாய் வந்தவள், வீட்டை அடைந்ததும் கதவை திறந்த தன் அத்தையிடம் சாப்பிட்டார்களா என கேட்டுவிட்டு விறுவிறுவென தங்களது அறைக்குள்  சென்றுவிட்டாள் வாணி.

காரை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு வந்த மாறன்,  “எங்க அம்மா அவ?”  என்று கேட்க,

“ஏன்டா உன் முன்னாடி இவ்ளோ பெரிய உருவமா நான் நிற்கிறது கண்ணுக்கு தெரியலை. இவ்ளோ நேரம் அவ கூட தான சுத்திட்டு வந்த…  வந்தும் அவள தான் தேடுற!!  அவ கூட பரவாயில்லடா “சாப்பிட்டாங்களா அத்தை?? மாமா சாப்பிட்டாங்களானு” கேட்டுட்டு போனா…  நீ என்னடானா என்னை பொருட்டாவே மதிக்காம இருக்கிற”  என வருத்தமாய் உரைக்க,

“அய்யோ அவ கோவமா போனத நினைச்சே வந்ததுல என்னலாம் பிரச்சனை ஆகுது. மதுஊஊஊ உன்னை வந்து கவனிச்சிக்கிறேன்” என மனதிற்குள் அவளை வறுத்தெடுத்தவன்,

“அப்படிலாம் இல்லம்மா!! என் செல்ல அம்மாக்காக தானே நான் இருக்கேன்.  அவ உங்களை மதிக்காம நடந்தா நானே கேட்டு சண்டை போடுவேனே!! அவ அப்படி இல்லாம என்னைய விட உங்க அம்மா தான் உங்களுக்கு முக்கியமா இருக்கனும்னு சொல்றவ. அதான் என்னை அவகிட்ட பித்தா அலைய வைக்குது போல”  என ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்க,

அவனை முறைத்துப் பார்த்திருந்த அவனின்  அம்மா,

“நான் இப்ப என் மருமகளை ஒன்னும் சொல்லலையே!! நீ ஏன் அவ மேல பித்து பிடிச்சி போய் இருக்கனு கேட்கலையே… என் மேல இருந்த அன்புலாம் குறைஞ்சு போன மாதிரி தெரியுதேனு தான் கேட்கிறேன்” என அவர் வேதனையாய் கூற,

“என் செல்ல அம்மாவ விட எனக்கு யாரு பெருசா இருக்க போறாங்க” என மாறன் அவனின் தாய் கன்னத்தை பற்றி கொஞ்ச,

“ம்ப்ச் போதும் ஐஸ் வச்சது” என அவனின் கையை தட்டிவிட்டாரவர்.

எப்படி அம்மாவை சமாதானம் செய்வதென யோசித்தவன், “அம்மா…  அப்பா எங்கே??” என்றான்.

“பரவால்ல அம்மாவ தான் மறந்துட்ட… அப்பாவ ஞாபகம் வெச்சிருக்கியே!! அது வரைக்கும் சந்தோஷம்” என அவர் அதற்கும் குதற்கமாய் பதிலுரைக்க,

“அம்மாஆஆஆ” என அலறினான் மாறன்.

“உள்ள தான் தூங்குறாரு உங்கப்பா. அவர் உனக்கு கல்யாணம் முடிக்கும் போதே சொன்னாரு.  பசங்களுக்கு மேரேஜ்னு செஞ்சிட்டா அவங்களுக்குனு ப்ரைவசி கொடுக்கனும். எல்லாத்துலையும் நம்மள கூப்டுல கேக்கலனுலாம் யோசிக்க கூடாதுனு சொன்னாங்க.  என் மூளைக்கு புரிஞ்சாலும் பாழும் மனசு கேட்காம வாடி வதங்குதே!! நான் என்ன செய்ய??”  என அவர் மாறனையே கேட்க,

“அம்மா!! இங்க வாங்க இப்படி உட்காருங்க… என்ன செய்யனும்னு நான் சொல்றேன்” என்றவன் அவரை நாற்காலியில் அமர வைத்து அவரின் காலினருகில் மண்டியிட்டவன்,

“என் அம்மாக்கு அவங்க பையன் மேல தான் வச்சிருக்க பாசம் தான் பெரிசுனு இத்தனை நாள் இருந்திருக்கும்.  இப்ப இன்னொருத்தி வந்து அவளோட பாசத்தை காமிக்கவும் நம்ம மகனுக்கு அவ பெரிசா தெரிஞ்சு நம்ம அன்பை மறந்திடுவானோங்கிற கவலை வந்துட்டு.  நீங்க நினைக்கிறது தப்புனு உங்க மூளை சொன்னாலும்,  மனசு பொறாமை பட ஆரம்பிக்க உங்களுக்கு அதுவும் குற்றவுணர்வை தரனு அல்லாடிட்டு இருக்கீங்க. இதுக்கெல்லாம் ஒரு தீர்வு இருக்கு” என தீவிரமாய் மாறன் பேசி கொண்டிருக்க,

“எப்படி இதை சரி செய்றது…  என்ன தீர்வு வெற்றி?”  என ஆர்வமாய் அவர் கேட்க,

“ஹ்ம்ம் உங்களுக்கு ஒரு பேரனோ இல்ல பேத்தியோ வந்துட்டா இதெல்லாம் சரி ஆயிடும்” என்றவன் கூறிய நொடி,

“அடேய் படுவா” என அவன் முதுகில் ஒரு அடி போட்டு வாய் விட்டு சிரித்தார்.

அவனும் அவருடன் இணைந்து சிரித்திருக்க,
“ஆனா நீ சொல்றது சரி தான்டா வெற்றி.  பேரனோ பேத்தியோ வந்துட்டா உன்னைலாம் யாரு கண்டுக்க போறா… நீ உன் பெண்டாட்டி பின்னாடியே சுத்து நான் என் பேரன் பின்னாடி சுத்துறேனு உன்னைய நான் மறந்து போய்டுவேன்” என அவர் முகத்தை ஒழுங்கு காட்டி கூற,

“என்ன எனக்கு பொறாமை வர வைக்க ட்ரை பண்றீங்களா?? செய்ங்க செய்ங்க…  எங்கம்மாவ சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் பேரனே வந்தாலும் நான் தான் அவங்களுக்கு உயிர்னு எனக்கு தெரியும்.  அதனால நீங்க செல்றதலாம் கேட்டு நான் பொறாமை பட மாட்டேன்” என அவன் பதிலுக்கு ஒழுங்கு காட்ட,

அவன் கன்னத்தை பற்றி நெற்றியில் முத்தமிட்டார் அவனின் அன்னை.

“இவ்ளோ நாள் ஆச்சுடா உன்கிட்ட இப்படிலாம் பேசி… நீ டீனேஜ்ல இப்படி தான் பேசிட்டு இருப்ப… எப்ப பிசினஸ்னு ஊர் ஊரா சுத்த ஆரம்பிச்சியோ அப்ப என் குட்டி வெற்றிய ரொம்பவே நான் மிஸ் பண்ணேன்” என கூறியவர்,

“அப்புறம் உன் வாழ்க்கைல என்ன நடந்துச்சுனு எங்களுக்கு தெரியாது வெற்றி.  கல்யாணம் வேண்டாம்னு கிட்டதட்ட முப்பது வயசு வரை இருந்துட்டு திடீர்னு இவளை தான் கட்டுவேனு வாணிய பொண்ணு கேட்க சொல்லி வந்து நின்ன…  இப்ப நீ பழைய வெற்றியா… துள்ளலும் சந்தோஷமும் நிறைஞ்ச டீனேஜ் பையனா தெரியுறடா… எல்லாதுக்கும் காரணம் மதுவா தான் இருக்க முடியும்” என்றவர் கூற,

மென்னகை புரிந்தானவன்.

“சரி ரொம்ப நேரம் ஆகிட்டு. போய் தூங்குங்க”  என அவரை அறைக்குள்  அனுப்பி வைத்துவிட்டு,

தனதறைக்குள் நுழைந்த நொடி வாணி எங்கே என தேடினான்.

கட்டிலில் அவள் இல்லாததை கண்டவன், திரும்பி பார்க்க குளியலறையிலிருந்து வெளி வந்த வாணி அவர்கள் அறையில் இருக்கும் மேஜையில் ஏறி நின்றாள்.

“இது நம்ம ரொமேன்ஸ் பண்ற ஸ்பாட் ஆச்சே.  என் உயரத்துக்கு வரனும்னா ஏறி நிக்கிற இடமாச்சே.  இப்ப எதுக்கு ஏறி நிக்கிறா?? அவ கோபத்துல வந்ததுக்கும் இப்ப இப்படி நிக்கிறதுக்கும் யோசிச்சு பார்ததா”  என தன் மண்டையை தட்டி யோசித்தவன்,
“அய்யோ ஒரு வேளை அடிக்க போறாளோ” என தன் கன்னங்களை கை வைத்து மறைத்து அவளை பார்க்க,

அவனையே அதுவரை பார்த்திருந்தவள், அவன் அவளை பார்த்ததும் கை காட்டி அருகே அவனை அழைத்தாள்.

“எதுக்காக இவ நம்மளை கூப்பிடுறானு தெரியலையே… எதுவா இருந்தாலும் நம்ம இதை ரொமேன்ஸ் சீனா மாத்திடுவோம்” என மனதில் எண்ணிக் கொண்டு அவளருகே அவன் செல்ல,

அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்து அருகே இழுத்தவள் ஆழ்ந்த முத்தங்களை அவன் முகத்தில் பதித்தாள்.

“லவ் யூ கண்ணப்பா” என அவன் நெற்றியை முட்டி தன் நெஞ்சில் அவனை சாய்த்து அணைத்து கொண்டவள் இருக்க,

“லவ் யூடா செல்லகுட்டி” என அவனும் அணைத்துக் கொண்டான்.

இருவரும் மோன நிலையில் சில நிமிடங்கள் மௌனமாய் கடந்திருக்க,
“நீங்க இவ்ளோ நேரம்  அம்மாகிட்ட பேசினதை கேட்டேன்ப்பா. உங்க மேல லைட்டா கோபமா தான் வந்தேன். ஆனா அத்தைகிட்ட நீங்க பேசினதை பார்த்ததும் கோபத்தை விட லவ் ஓவர் ஃப்ளோ ஆகிட்டு” அவன் தலையில் தன் கன்னம் வைத்து பேசி கொண்டிருந்தாள் வாணி.
அவள் நெஞ்சில் தலை சாய்த்திருந்தவன் வாய் விட்டு சிரித்தான்.

“பார்க்க அவளோ சந்தோஷமா இருந்துச்சு. ஏன் இத்தனை நாளா நீங்க இப்படி நடந்துக்கல அத்தை கிட்ட.  வேலைக்கு போன பிறகு ஆளே மாறிட்டீங்கனு அத்தை சொன்னாங்களே… உங்களை பத்தி நான் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கோ??”  என்றவள் கேட்க,

அவளை தன் கைகளில் ஏந்தி கட்டிலில் அமர வைத்தவன், அவள் மடியினில் தலை சாய்த்து கொண்டான்.

“பாஸ்ட் தெரிஞ்சு என்ன செய்ய போற மதும்மா. இப்ப நான் எப்படி நடந்துக்கிறேஙகிறது தானே முக்கியம்” என அவள் விரலில் சொடுக்கெடுத்துக் கொண்டே அவன் கூற,

அவன் கையிலிருந்து தன் விரலை உறுவியவள், “இல்லங்க நான் தெரிஞ்சிக்கனும். என்னை  ஹாஸ்பிட்டல்ல பார்க்கிறதுக்கு முன்னாடி எங்க பார்த்தீங்க. அப்படி என்னை முதல் நேரம் பார்க்கும் போது மருதன் என்னைய பத்தி யோசிச்சது போல நீங்களும் என்னமோ நினைச்சிருக்கீங்க”  என வாணி நேரடியாய் கேட்க,

மாறன் அதிர்ந்து அவள் மடியை விட்டு எழுந்து அமர்ந்தான்.

“உனக்கெப்படி தெரியும்??” என்றவன் அதிர்ச்சியாய் கேட்க,

“பெங்களூர்ல அன்னிக்கு நான் தூங்கிட்டேன்னு நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருந்தீங்க… அப்ப கேட்டேன்” என்றவள் சொன்ன நொடி,

“எப்படி இவளை எதிர் கொள்வது” என்ற பெரும் பதட்டத்தில் மாறனின் இதயம் தாறுமாறாய் துடிக்க,

“ஆனா நீங்க அப்ப அப்படி நினைச்சதுக்காக இப்ப எவ்ளோ குற்றவுணர்வுல துடிக்கிறீங்க நான் இதை எவ்ளோ கவலைபடுவேனு ஃபீல் பண்றீங்கனும் புரிஞ்சிதுங்க.”

“நான் கஷ்டபடுவேனு நினைச்சு என்கிட்டே நீங்க சொல்லாம இருக்க உங்க ஃபாஸ்ட்லாம் எனக்கு இப்ப தெரிஞ்சிக்கனும். ஏன் இதை கேட்கிறேனா உங்களுக்கு இது பெரும் பாரமாய் மனசுல இருந்துட்டே இருக்கும்.  அதைவிட நீங்க சொல்லி நான் கஷ்டபட்டாலும் உங்களுக்கு நான் திரும்ப நார்மல் ஆயிடுவேன்.  இல்லனாலும் உங்க காதலால என்னை சரி ஆக்கிட மாட்டீங்களா?” என அவன் கண் பார்த்து அவள் கேட்க,

தன் மீதான அவளின் அக்கறையிலும் தன் காதல் மீதான அவளின் அளவிலா நம்பிக்கையிலும்  பூரித்து போனவன், தன் கடந்த கால கதையை உரைக்கலானான்.

அத்தியாயம் 18

வாணி பெங்களூரில் தங்களது தோழிகளுடன் வீடு எடுத்து தங்கியிருந்த நேரமது.  இளாவிற்கு வேணியை நிச்சயம் செய்திருந்த சமயமது.

ஞாயிறு இரவு 7 மணியளவில் ஃபோரம் மாலிலுள்ள பிவிஆர் சினிமாஸ்க்குள் நுழைந்தனர் இளா,வேணி மற்றும் வாணி.

மதியும் மஹாவும் அந்த வாரயிறுதி நாளில் தங்களின் நிச்சயத்திற்காக சென்னைக்கு சென்றிருக்க, வாணி வேணி மற்றும் இளா கான்சூரிங்க் படம் பார்க்கவென வந்திருந்தனர்.

வேணி நடுவே உட்கார, அவளின் இரு பக்கமும் வாணி மற்றும் இளா அமர்ந்திருந்தனர்.

வேணி தன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, “படம் ஆரம்பிக்கப் போகுது. என்னடி போன்ல பார்த்துட்டு இருக்க??” என்று கேட்டாள் வாணி.

“நமக்கு தான் அவங்க பேசுற இங்கிலீஷே புரியாதே…. அப்புறம் படம் புரியலைனா என்னப் பண்றது. அதான் படத்தோட கதைய ஒரு தடவை படிச்சி வச்சிக்கலாம்னு கூகுள் பண்றேன்” என்றுரைத்தாள் வேணி.

“ஹே சூப்பர்டி. நான் கூட இப்படி இங்கிலீஷ் படத்துல வந்து உட்கார வச்சிட்டியே. புரியாம அதுல என்னத்த பார்க்கிறதுனு நினைச்சேன். நல்ல ஐடியாடி” என்ற வாணி, வேணியுடன் சேர்ந்து அவளின் கைபேசியில் கதை படித்தாள்.

“அடப்பக்கிகளா…. படம் பாக்க முன்னாடியே கதை தெரிஞ்சா அதுல என்ன சுவாரசியம் இருக்கு இதுக்கு எதுக்கு தியேட்டருக்கு வரணும்” எனக் கேட்டான் இளா.

“நீயெல்லாம் அடிக்கடி இங்கிலீஷ் படம் பார்க்குற ஆளு. அதனால உனக்கு எங்க கஷ்டம் புரியாது” என இளாவிற்கு பதிலுரைத்தாள் வேணி.

படம் திரையில் போடத் தொடங்கியதும் திரையை கவனிக்கத் தொடங்கினர் மூவரும்.

“ஹே இங்கிலீஷ்ல டைட்டில் போடுறான்டி. அப்பாடா தப்பிச்சோம்” என கையிலடித்துக் கொண்டனர் வாணியும் வேணியும்.

இவர்களைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டான் இளா.

“நீங்களாம் சாப்ட்வேர் இன்ஜினியர்னு வெளில சொல்லிடாதீங்க” என மெல்லமாய் இவர்களுக்கு கேட்குமாறு இளாக் கூற,

“டேய் இவங்க நம்ம பேசுற மாதிரியாடா இங்கிலீஷ் பேசுறாங்க. நம்ம நாட்டு இங்கிலீஷ் எங்களுக்கு நல்லா புரியும். அவங்க தான் நம்மளுக்கு புரியாத மாதிரி பேசுறாங்க. சோ ஃபால்ட் எங்க மேல இல்ல. அவங்க மேல தான்.” என நாட்டு இங்கிலீஷ்க்கு வக்காளத்து வாங்கினாள் வேணி.

“சரி சரி படம் போட்டாச்சு பாரு. அப்புறம் வக்காளத்து வாங்கலாம் உன் நாட்டு இங்கிலீஷ்க்கு” என்றான் இளா.

குண்டூசி போட்டாலும் சத்தம் வரும் அமைதியான சூழலில் படம் ஆரம்பித்த சில நொடியிலேயே வாணி மற்றும் வேணிக்கு பயம் கவ்விக் கொள்ள, பயம் தெரியாதிருக்க இருவரும் படத்தில் வரும் திகில் காட்சிகளையும் கிண்டலடித்துச் சிரித்து பார்த்துக் கொண்டிருந்த சில நிமிடங்களில் கேட்டது அந்தக் குரல்.

“எக்ஸ்க்யூஸ் மீ. கேன் யூ பிளீஸ் பீ சைலண்ட்” எனக் கோபமாய் காட்டமாய் இவர்களின் முன் இருக்கையிலிருந்த ஒருவன் வாணியையும் வேணியையும் பார்த்துக் கூற,

“எவ அவ??” என்பதைப் போல் அவனை நோக்கியவர்கள்,

“சாரி” எனக்கூறி கப் சிப் என வாயை மூடிக் கொண்டனர் இருவரும்.

இவர்களை பார்த்து வாய் மூடி சிரித்தான் இளா.

இளாவின் சிரிப்பை போல் இன்னொருவனும் இவர்களது செயலில் சிரித்துக் கொண்டிருந்தான்.

ஆம் அவன் தான் நம் மாறன்.

வாணியின் அருகில் தான் அமர்ந்துக் கொண்டிருந்தான் வெற்றிமாறன்.

ஆனால் வாணியின் முகத்தை காணவில்லை அவன்.

வாணி வேணியின் பேச்சிலேயே சிரித்திருந்து அமர்ந்திருந்தவன், இளா வேணி ஜோடி என்பதையும் வாணி தனியாள் என்பதையும் அவர்களது பேச்சிலேயே அறிந்துக் கொண்டான்.

“இவ்ளோ பேச்சு பேசுதே இந்த பொண்ணு பார்க்க எப்படி இருக்கும்??” என்று அவனது மைண்ட் வாய்ஸ் கேட்க, இடைவேளை சமயத்தில் வாணியின் முகத்தை காண வேண்டுமென்ற ஆவல் பூத்தது அவனின் உள்ளத்தில்.

மாறனுடன் வந்த அவனின் நண்பன், “என்னடா படம் பார்க்காம யோசிசிட்டு இருக்க?” என்று அவன் காதில் கிசுகிசுக்க,
“இன்னிக்கு என்னோட வருங்கால மனைவியை சந்திக்க போறேனு என் மனசுல ஒரு பட்சி சொல்லுது மச்சான்” என்று தன் நண்பனை வெறுப்பேற்றுவதற்காய் மாறன் தன் வாயில் வந்ததை கூறினான்.

“உனக்கென்னடா மச்சி!! பார்க்க ஹீரோ மாதிரி இருக்க, உனக்கேத்த மாதிரி அழகா அம்சமா ஒரு பொண்ணு கிடைக்கும்” என்றவனின் நண்பன் இவனை உசுப்பேத்த,

ஹா ஹா ஹா என சிரித்து படத்தை பார்க்கலானான் மாறன்.

மாறன்,  தன் தொழிலை புதிதாய் தொடங்கி அது நல்லமுறையில் லாபத்தை அளித்திருந்த சமயமது.

சுயமாய் தொழில் செய்யும் கர்வமும், தான் அழகு என்ற அகந்தையும், அதனால் தன்னை மணக்கவிருக்கும் பெண் பேரழகியாய் சற்று மார்டனாய் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அப்போது இருந்தது மாறனுக்கு.

இடைவேளை சமயத்தில் வாணியை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தொத்திக் கொள்ள, மூவருக்கும் பின்னேயே சென்றான் மாறன்.

அங்கு பார்ப்கார்ன் வாங்குமிடத்தில், வாணியும் வேணியும் அது வேண்டும் இது வேண்டும் என்று இளாவிடம் கேட்டு அவனின் முக சுளிப்பில் சிரித்துக் கொண்டிருக்க,

சரியாய் அந்நேரம் பார்த்தான் மாறன்.

பார்த்ததும் மாறன் மனதில் தோன்றியது, “சரியான பட்டிகாடா இருக்கும் போல இந்த பொண்ணு” என்பது தான்.

“பெங்களூர்ல இருந்துட்டு முழு நீள சுடிதார் போட்டு உலாவுதுனா கண்டிப்பா நாகரிகமா லாம் இருக்காது.  ஆளுக்கும் பேச்சுக்கும் சம்பந்தமேயில்ல. ஏதோ கிராமத்துல பிறந்த வளர்ந்த பொண்ணா தான் இருக்கனும். சரி கலரா அழகா இருந்தாலும் பரவாயில்லை.  அது கூட இல்லையே. சோ சேட் மாறா.  உன் எக்ஸ்பெக்டேஷன் புஸ்வானமாகிடுச்சே”
என மனதில் எண்ணிக் கொண்டவன் தன் இடத்திற்கு போய் அமர்ந்துக் கொண்டான்.

“என்னடா  திடீர்னு அந்த பொண்ணுங்க பின்னாடியே போன??  இப்ப இப்படி வந்து உட்கார்ந்திருக்க??” என்று அவனின் நண்பன் கேட்க,

“அந்த பொண்ணு பேச்சு குரல்லாம் நல்லா இருந்துச்சுடா!! அதான் பார்க்க எப்படி இருக்கும்னு ஒரு எக்ஸ்ஸைட்மெண்ட்ல பார்க்க போனேன்” என்று அவன் கூறிய நொடி,

“ஏன்?? அந்த பொண்ணு தான் உன்னோட வருங்கால மனைவினு பட்சி சொல்லுச்சா” என்று சிரித்து கொண்டே கேட்க,

“என்னது அந்த பொண்ணு என் வௌய்ப் பா  நோ சான்ஸ்” என பதறி கொண்டு வந்தது அவனின் பதில்.

அதற்குள் படம் ஆரம்பித்திருக்க மீண்டும் படத்தில் மூழ்கினர் இருவரும்.

இங்கு..

இங்கு இந்த நிகழ்வை மாறன் பெரும் குற்றவுணர்வுடன் வாணியிடம் கூறிக் கொண்டிருக்க,

கட்டிலில் இருந்து இறங்கி தங்களது அறையில் இருந்த சோபாவில் போய் அமர்ந்துக் கொண்டாள் வாணி.

மாறன் இறங்கி அவள் அருகில் செல்ல போக, “வேண்டாம்ப்பா நீங்க அங்கிருந்து சொல்லுங்க” என்றாள் கவலை தோய்ந்த குரலில்.

“பாரு இதுக்கு தான் நான் சொல்லாம இருந்தேன். நீ மனசு சங்கடபடுவேனு தான் எதுவும் சொல்லாம இருந்தேன்” என்று மாறன் அவளருகில் தரையில் அமர்ந்து அவளது கை பற்றி கூற,

“நீங்க என்னைய குறையா நினைச்சது எனக்கு கவலை இல்லப்பா. ஆனா என் மாறன் சைட் அடிச்சது இல்ல.  பொண்ணுங்களை மதிப்பா நடத்துவாருங்கிற என்னோட நம்பிக்கை இங்க அடி வாங்கிட்டுப்பா” என்றவள் கூறிய நொடி,

“அய்யோ மதும்மா அதெல்லாம் அப்ப இருந்த மாறன்.  வாழ்க்கைய புரிஞ்சிக்காம டீன்ஏஜ் வயசுல இருக்கிற போல ப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து குட்டி சுவரா சுத்திட்டு இருந்த மாறன் அது”

“என்னிக்குமே எபப்டிபட்ட ஆளா இருந்தாலும் அவங்களை குறையா பேச கூடாது. எல்லார்கிட்டயும் அழகான ஒரு விஷயம் ஒரு திறமை இருக்கும். அதை பார்த்து எப்பவும் என்னிக்கும் எல்லாரையும் பாராட்ட கத்துக்கனும். இப்படி பல விஷயம் உன் கிட்ட இருந்து கத்துகிட்டேன்  மதும்மா. கண்டிப்பா முன்னாடி இருந்த மாறன் இல்ல நான்” என்று குற்றயுணர்வில் முகம் சுருங்க பேசிட்டு இருந்த மாறனை பார்த்தவள்,

அவனின் அம்முகமும் அவளின் மனதை வதைக்க, அவனை சரி செய்ய எண்ணியவள், “ஆமா அன்னிக்கே என்னைய உங்க வௌய்ப்னு உங்க ஃப்ரண்ட் கரெக்ட்டா சொல்லிருக்காரே” என பூரிப்பாய் கூற,

அவனது முகம் மேலும் வேதனையை காட்டியது.

“நானும் அன்னிக்கு என்னோட வருங்கால மனைவியை கடவுள் எனக்கு காமிச்சிட்டாருனு நினைச்சி பூரிச்சி போனேன் தான்” என விரக்தியாய் உரைத்தான் மாறன்.

அவனின் பேச்சில் அவளுக்கு குழப்பம் அதிகமாக,  “என்ன சொல்ல வர்றீங்க வெற்றி?? என்னாச்சு அன்னிக்கு” என்று கேட்டாள்.

“என் வாழ்க்கைல அந்த நாள் தான் கடவுள் எனக்கு பாடம் புகட்ட துவங்கிய நாள். அந்த நாள் நாளா தான் என்னோட அறியாமைகள், தவறுகள் தெரிஞ்சிது. என்னோட வாழக்கையோட கண்ணோட்டமே தவறுனு புரிஞ்சிது” என்றான் மாறன்.

“அப்படி என்ன நடந்துச்சுங்க” என்று வாணி கேட்க,

“அன்னிக்கு தான் நான் என் பழைய காதலியை கண்ட நாள்.  அவ தான் என் வருங்கால மனைவினு நான் நம்பி பூரிச்சி போன நாள்” என்று மாறன் கூற,

அது பேரிடியாய் வந்து விழுந்தது வாணியின் மனதில்.

“வேற பொண்ணை லவ் பண்ணீங்களாப்பா?? அப்புறம் எப்படி என்னைய லவ் பண்ணேன் சொன்னீங்க??” என கோபமும் ஆற்றாமையும் கலந்து கண்ணில் நீராய் பெருக வாணி அவனிடம் கேட்க,

அவளின் கண்ணீரை துடைத்தவன், “ப்ளீஸ் மதும்மா நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத!! நான் முழுசா என்ன நடந்துச்சுனு சொல்றேன்” என்றவன் அவள் கையை பற்ற,

தன் கையை உறுவி கொண்டவள், “நீங்க அங்க கட்டில்ல உட்கார்ந்து சொல்றதா இருந்தா சொல்லுங்க இல்லனா எதுவும் சொல்ல வேண்டாம்” என்று கோபமாய் அழுகை குரலில் கூறி தன் இடத்திலிருந்து அவள் எழுந்து கொள்ள,

“இல்ல இல்ல மதும்மா .. நீ முழுசா கேட்டா தான் என்ன நடந்துச்சுனு உனக்கு புரியும். என்னோட தவறும் நான் எப்படி திருந்தினேங்கிறதும் உனக்கு புரியும்” என்றவன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அக்கதையை கூறலானான்.

— தொடரும்