மதுவின் மாறன் 1

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ…..

நேற்றேன் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்..

தன் கான இன்னிசையால் கந்தர்வ குரலால் ஈர்த்து அரங்கத்தை அதிர வைத்துக் கொண்டிருந்தார் எஸ் பி பி.

அருகே இளையராஜா நிற்க, தன் நண்பனை கண்களால் தழுவி பாடிக் கொண்டிருந்தார் எஸ் பி பி.

அது இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி.

மனம் குதூகலிக்க துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள் அந்த இசைஞானியின் ரசிகை.

தன் பல வருட ஆசை நிறைவேறிய இத்தருணத்தை தற்சமயமும் நம்ப முடியாமல் தன்னை கிள்ளி பார்த்து ஆனந்தத்தில் திளைத்திருந்தாள் ராஜாவின் ரசிகையான வாணி.

அருகில் மாறன் அமர்ந்திருந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு பாடலுக்கும் அவளின் பரவசம்,  ஆனந்தம், துள்ளல் என அவளின் ஒவ்வொரு முக பாவங்களையும் ரசித்துக் கொண்டிருந்தான் மாறன்.

எனையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!!

தன் சுற்றம் மறந்து இது வரை மேடையை மட்டுமே நோக்கி கேட்டிருந்தவளின் விழிகள் இந்த வரிகளில் அன்னிச்சையாய் தன்னவனை திரும்பி பார்த்தது.

காதல் ஒளி கண்களில் பரவ நேசமாய் பார்த்திருந்தாள் அவனை.

அவளின் பார்வை மொழி புரிந்ததோ அவனுக்கு. அவள் காதருகே சென்றவன்,  என்றும் அவளுக்காக பாடும் இவ்வரிகளை அவள் செவி மட்டும் கேட்கும் வண்ணம் பாடினான்.

சுற்றி இருந்த கூச்சல் சத்தம் மேடையின் பாடலிசை அனைத்தும் மறந்து அவளுக்கு அவன் குரல் மட்டுமே உள்ளுக்குள் ரீங்காரமாய் கேட்க,  தன்னை மீறி அவன் கன்னத்தில் இதழ் பதித்திருந்தாள்.

“தேங்க்ஸ்ப்பா!! இப்படி ஒரு சர்ப்ரைஸ் நிஜமா எதிர்பார்க்கல. மனசு பூரிச்சு போய் இருக்கு” உரைத்தவள் அவன்  கைகளை கோர்த்து தோளில் தலை சாய்த்து விழிகளை மூடிக்  கொண்டாள்.

நெடுநாளைய அவளின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவளறியாது அவள் பிறந்தநாளின் நிமித்தமாய் ஆனந்த அதிர்ச்சியாய் இந்த இன்னிசை கச்சேரிக்கு அழைத்து வந்திருந்தான் மாறன்.

பாடலைக் கேட்டுக் கொண்டே அவனின் தோளில் மோன நிலையில் சாய்ந்திருந்தவளின் விழிகள் கலங்கியது அடுத்து வந்த பாடலில். அந்த உயிரை உருக்கும் குரலில்.

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ…ஓர்…மோகம்

காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்போலே இன்பமேது

இந்த வரிகளில் அக்கணம் உறைந்திடக்கூடாதா என்று எண்ணி அகமகிழந்திருந்தவள்,

இன்று  அதே கண்ணீருடன்  தொலைகாட்சியில் ஓடிய இப்பாடலை அந்நாட்களை நினைத்துக் கொண்டு கேட்டிருந்தாள் மதுரவாணி.

அன்று அது சந்தோஷக் கண்ணீர். இன்று இது சோக கண்ணீர்.

எதனால் இந்த சோக கண்ணீர்? தெரிந்துக் கொள்ள வாருங்கள் கதைக்குள் செல்வோம்.

—–

சில மாதங்களுக்கு முன்பு

அன்று மதுரவாணி வெற்றிமாறனுடனான ஊடலில் கோபமான சோகத்தில் மெத்தையில் அமர்ந்திருக்க,

சட்டென்று கதவு திறக்கும் ஓசை கேட்க, இவள் அவசரமாய் கண்களை துடைத்து திரும்பி பார்க்க உள்நுழைந்தான் வெற்றி மாறன்.

“என் செல்லகுட்டிக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா?” என அவன் அவள் தோளை தொட்டு தன் பக்கம் திருப்ப, வெடுக்கென முகத்தை திருப்பி தன் இடத்திலிருந்து நகர்ந்து அருகிலிருந்த மெத்தைக்கு மாறினாள் வாணி.

“என்னைய இப்படி தான் கொஞ்சி கொஞ்சி ஏமாத்திட்டிருக்கீங்க நீங்க? உங்க பேச்சை நான் கேட்கிறதா இல்ல”  என கூறிக் கொண்டு தன் கைபேசியில் கவனம் செலுத்துவது போல் பாவனை செய்து ஓரக்கண்ணால் அவள் அவனைப் பார்க்க,  அவன் அந்த மெத்தையிலமர்ந்து அவள் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

“பார்க்குறத பாரு!! என்ன பார்த்தாலும் நான் இந்த தடவை இறங்கி போக மாட்டேன்” என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள் முகத்தை திருப்பிக் கொள்ள,

சரியாய் அந்நேரம் மாறனின் கைபேசி ஒலித்தது.

“சொல்லுடா ஆஷிக். எப்படி இருக்க?” என மாறன் சத்தமாய் பேசிய நேரம்,

தாங்கள் சண்டைப் போட்டிருப்பதையும் மறந்து மாறனின் அருகில், “அந்த பன்னி டாக் ஃபெல்லோ உங்களுக்கு மட்டும் போன் பண்றானா? என்னையலாம் மறந்துட்டான்ல அவன்.  அவனை ஒரு வழி பண்றேன் இன்னிக்கு” எனக் கூறிக் கொண்டே மாறனின் கையிலிருந்த பேசியை பறித்தாள்.

“இந்தியால தான் இருக்கியா? இல்ல வேற எங்கயும் போய்ட்டியா? வாணினு ஒரு ஃப்ரணட் உனக்கு இருந்ததா நியாபகம் இருக்கா? இந்த வாணி இல்லனா மாறன் உனக்கு ஃப்ரண்ட் ஆயிருக்க முடியுமா? நீயும் அவரை மாதிரி என்னைய புரிஞ்சிக்கல தானே” என அவள் கோபத்தில் பொரிந்து தள்ள,

சத்தமாய் சிரித்தான் மாறன்.  அவன் சிரிப்பில் தன் பேச்சை நிறுத்தி கைபேசியை நோக்கியவளுக்கு எரிச்சல் மீதுற,

“ஃபோன் வராமலே வந்த மாதிரி ஆக்டிங்கா” என அவனை அடிக்க பாய, (தனது கைபேசியிலிருந்த ஃபேக் கால் ஆப்ஷன் மூலம் தானே தன் மொபைலுக்கு அழைப்பு வரவைத்திருந்தான் மாறன்).

அவளை கைகளில் மொத்தமாய் அள்ளி  தன் உயரத்திற்கு தூக்கியவன், அவளை வழக்கமாய் நிறுத்தி வைக்கும் மேஜையில் நிறுத்தினான்.

அவள் நெற்றியுடன் தன் நெற்றியை முட்டியவன், “இதுல நின்னாதான்டி என் உயரத்திற்கு வர நீ” எனக் கூற,

“அவளோ அலுத்துகிறவரு எதுக்கு என்னை கட்டிக்கிட்டீங்களாம்” என அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,

தன் பக்கம் அவள் முகத்தை திருப்பியவன்,  அவளிதழ் நோக்கி குனிய, அவனை நெருங்க விடாது இவள் தன் முகத்தை திருப்ப, எக்குதப்பாய் அந்த முத்தம் அவள் கன்னத்தில் வந்து விழுந்தது.

தன் கன்னத்தை அழுந்த துடைத்தவாறு, “பாசமில்லாம யாரும் எனக்கு கிஸ் பண்ண வேண்டாம்” என்றுரைத்தவள் அந்த மேஜையை விட்டு இறங்க முயல,

அவளை இறங்க விடாது தன் கைவளைக்குள் கொண்டு வந்தவன்,  “இப்ப என்ன கோவம் உனக்கு என் மேல?” என்றான்.

“மேரேஜ் ஃபிக்ஸ் ஆன டைம்ல, நமக்கு கல்யாணமான புதுசுல ஒரு நாளுக்கு மூனு நேரமாவது நான் ஆபிஸ்ல இருக்கும் போது போன் பண்ணுவீங்க. இப்ப என்னடானா சாப்டாங்களானு நான் மெஸேஜ் செஞ்சாலும் ரிப்ளை இல்ல”

“உங்களுக்கு என் மேல அக்கறை இல்ல,  பாசமில்ல,  ஒன்னுமில்லை. நான் மட்டும் ஏன்  உங்ககிட்ட பாசமா நடந்துக்கிடனும்” என கண்ணில் நீர்  வழிய அவள் கூற,

அவள் மனதின் ஏக்கம் அவன் மனதை சுட,

“எப்ப தான்டா உனக்கு இந்த இன் செக்யூர்டு  ஃபீல் போகும்” என வருத்தமாய் கேட்டான்.

பதிலுரைக்காது மீண்டும்  அவள் அம்மேஜையை விட்டு இறங்க முயல, “இப்ப எங்க போற? இபப்டியே நின்னு பேசு” என்றவன் கேட்க,

“எனக்கு ஹர்ட் ஆகுது. இதுக்கு மேல நான் பேச விரும்பல”  என அவள் மீண்டும் இறங்க முயல, 

இறங்க விடாது அவளை இழுத்து அணைத்தவன், “சாரிடா செல்லகுட்டி.  இப்படி சின்ன சின்ன விஷயமெல்லாம் உன்னை ஹர்ட் பண்ணுதுனு எனக்கு இப்ப தானே புரியுது. சீக்கிரம்  சரி பண்ணிக்கிறேன். உன்னோட புருஷனுக்கு ஒரு சான்ஸ் தர மாட்டியா?” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்க,

‘இப்படி இவர் சோகமா மூஞ்ச வச்சிக்கிட்டாலும் கஷ்டமா இருக்கு. அதுக்காக சண்டை போடாம இருந்தாலும் கஷ்டமா இருக்கு. எவன் தான் இந்த லவ்வ கண்டு பிடிச்சானோ?’ என வாய்க்குள் முனகி கொண்டே அவனை வெறித்துப் பார்க்க,

“உன் மாம்ஸ் அவ்ளோ அழகாவா இருக்கேன் மதுக்குட்டி. இப்டி வெறிச்சி பார்த்துட்டு இருக்க”  என கண்ணடித்து அவன் கேட்க,

“ரொம்ப தான் நினைப்பு” என நொடித்துக் கொண்டவள்,

“சரி சரி மன்னிச்சிட்டேன் மன்னிச்சிட்டேன்.  என்னைய இறக்கி விடுங்க” என்றாள்.

இது தான் வாணியின் குணம்.  சிறு சண்டை நேர்ந்தாலும் பெரியதாய் எண்ணி சோகத்தில் ஆழும் அதே நேரம், அவளை சமாதானம் செய்துவிட அவன் முயன்றுவிட்டால் போதும், அதுவும் அவனின் முகம் வாடினாலே போதும் தனது சோகம் சண்டை எதுவாயினும் அவனுக்காக அந்நேரமாவது ஒதுக்கி வைத்து இயல்பு நிலைக்கு திரும்பி விடுவாள்.

“நம்ம டீல் என்னனு நியாபகம் இருக்கா அருமை பொண்டாட்டியே?” என்றவன் கேட்க,

“டீலா அப்படிலாம் எனக்கு எதுவும் நியாபகம் இல்லையே” என நமட்டு சிரிப்புடன்  அவள் கூற,

“அப்போ ஞாபகப்படுத்திடுவோம்” என்றுரைத்தவன் அவளிதழை முற்றுகையிட்டிருந்தான்.

இருவரும் மற்றவரில் மூழ்கியிருக்க, வாசற்கதவின் அழைப்பொலி  அவர்களின் மோன நிலையை கலைத்தது.

— தொடரும்