பூவோ? புயலோ? காதல்! – 6

அத்தியாயம் – 6

அன்னை தன்னை இப்போது பார்க்க வரவில்லை என்ற கோபம் உள்ளுக்குள் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாத வேதவர்ணா, வழக்கம் போல் மசக்கையையும் சமாளித்துக் கொண்டு வேலைக்கும் சென்று வந்து கொண்டிருந்தாள்.

அதிகம் முடியாத நாட்களில் விடுமுறை சொல்லி விட்டு அவள் வீட்டில் இருந்தால், ரித்விக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஏற்பாட்டைச் செய்து கொண்டு தானும் மனைவியுடன் இருந்தான்.

இருவருக்கும் ஒன்று என்றால் அவர்களுக்கு அவர்களே தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், காதல் திருமணம் செய்து கொண்டதால் வேதாவின் குடும்பம் அவளை ஒதுக்கி வைத்திருந்தது.

ஆம்! முற்றிலும் இல்லை என்றாலும் ஒதுக்கி தான் வைத்திருந்தனர்!

திருநெல்வேலியில் உள்ள சிதம்பரம், லட்சுமியின் தம்பதிகளுக்கு மூன்று மகன்கள்.

மூத்தவர் ராஜேந்திரன், அவருக்கு அடுத்தவர் சந்திரசேகர், இளையவர் சரவணன்.

இரண்டாவது மகனான சந்திரசேகர், சித்ராவின் தம்பதிகளின் ஒரே பெண் தான் வேதவர்ணா.

ராஜேந்திரன், கமலா தம்பதியருக்கு இரண்டு மகள்கள்.

சரவணன், ராதா தம்பதியருக்குக் குழந்தைகள் இல்லை‌.

அனைவரும் ஒரே வீட்டில் தான் இருந்தனர். சிதம்பரம், லட்சுமி தம்பதியர் மகன்கள் பிரிந்து விடாமல் இருக்கும் படி ஒரே குடும்பமாக இருத்தி வைத்து காத்து வந்தனர்.

பழமையில் ஊறிப்போன அத்தம்பதிகளுக்குக் காதல் என்பதே கெட்ட வார்த்தை தான்.

ராஜேந்திரனின் மூத்த மகளுக்குத் தாங்களே மாப்பிள்ளை பார்த்து சீரும் சிறப்புமாகத் தூத்துக்குடியில் திருமணம் செய்து கொடுத்திருந்த நிலையில், படித்து முடித்துப் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலைக்குச் சென்ற வேதவர்ணா, வட மாநிலத்தைச் சேர்ந்த ரித்விக்கை அலுவலகத்தில் சந்தித்துக் காதல் என்று வந்து நின்ற போது குடும்பமே எதிர்ப்புத் தெரிவித்தது.

அதிலும் ரித்விக் தாய், தகப்பன் இல்லாமல் யாரோ தூரத்து சொந்தத்தின் பராமரிப்பில் வளர்ந்து ஸ்காலர்ஷிப்பில் படித்துத் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவன்.

அவன் ஓரளவு வளர்ந்த பிறகு தூரத்து சொந்தமும் தூரமாகி விடத் தனிமை பட்டுப் போய்த் தனி ஆளாய் நின்றவனுக்கு எப்படிக் கட்டி கொடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

அதிலும் அவனின் குலம் வேறு! கோத்திரம் வேறு! வட மாநிலத்தவன் என்பது வேறு என்று அனைவருக்கும் குறையாகத் தெரிய, வேதவர்ணா, ரித்விக்கின் காதலுக்கு எதிர்ப்பு வலுத்தது.

ஆனால் அதையும் விடத் தன் பிடிவாதத்தை வலிமையாக்கினாள் வேதவர்ணா.

அவர்களின் அத்தனை பேரின் எதிர்ப்பையும் புறம் தள்ளியவள் ரித்விக் தான் வேண்டும் என்று போராட ஆரம்பித்தாள்.

பட்டினி கிடந்து, ‘வாழ்ந்தால் அவனுடன் தான் வாழ்வு! இல்லை என்றால் சாவு!’ என்று போர்க்கொடி தூக்கி பெற்றோரை சம்மதிக்க வைத்தாள்.

அவளால் பெற்றவர்களை மட்டுமே சம்மதிக்க வைக்க முடிந்தது. அவர்களும் மகள் உயிரோடு வேண்டும் என்பதற்காக அரைமனதாகத் திருமணம் செய்து வைக்கச் சம்மதித்தனர்.

மகனுக்காக வேண்டா வெறுப்பாகத் தலையை ஆட்டிவைத்தனர் சிதம்பரம் தம்பதியர். ராஜேந்திரனும் தம்பியின் மகள் விஷயத்தில் ஒட்டாமல் விலகி விட, சரவணனும் விலகி நின்றார்.

அண்ணன்கள் இருவருக்கும் குழந்தைகள் இருக்க, தனக்குக் குழந்தை இல்லாமல் போனதில் தானே எப்போதும் மனதளவில் சிறிது விலகி தான் இருப்பார் சரவணன்.

மூத்தார் குழந்தைகளைத் தங்கள் குழந்தைகளாகப் பாவிக்கும் மனநிலை ராதாவிற்கு இல்லாமல் போனதால் சரவணனும் அதையே பின்பற்றினார்.

அண்ணன், தம்பி மூவருமே அதிக ஒற்றுமையுடன் இல்லையென்றாலும், பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக அவர்களின் கீழ் படி நடந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.

ராஜேந்திரன் தனியாக ஜவுளி கடை வைத்து நடத்த, வேதவர்ணாவின் தந்தை சந்திரசேகர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். சரவணன் வங்கியில் பணிபுரிந்தார்.

ஆளுக்கு ஒரு வேலை என்ற முறையும் கூட அண்ணன், தம்பிகளுக்குள் அதீத ஒற்றுமையை உருவாக்காமல் போனதற்குக் காரணமாக அமைந்து போனது.

அதிலும் வேதவர்ணா காதல் திருமணம் செய்து கொள்ளவும் ‘என்ன என்றால் என்ன?’ என்ற அளவில் தான் பேச்சுவார்த்தை அண்ணன் தம்பிகளுக்குள் இருந்து வருகிறது.

அதிகம் ஒட்டி உரசாமல் இருந்தாலும் அன்னை, தந்தையின் பேச்சிற்குக் கட்டுப்பட்டவர்கள் மூவருமே!

அதிலும் சந்திரசேகர் தந்தை ஒரு சொல் சொன்னால் அதை மீறுவதில்லை. அப்படி இருந்தவர் மகளுக்காகவே தந்தையிடம் பேசி திருமணம் முடித்து வைத்தார்.

அதே நேரம் தந்தை போட்ட கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டார்.

ராஜேந்திரனின் மூத்த மகளுக்கு போல் ‘ஊர் மெச்சும் கல்யாணம்’ என்று இல்லாமல், ‘கல்யாணம்’ என்று பெயர் சொல்லும் படி மட்டும் சாதாரணமாகவே வேதவர்ணா, ரித்விக்கின் திருமணத்தை முடித்து வைத்தனர்.

மகளின் திருமணம் அப்படிச் சாதாரணமாக முடிந்ததில் சந்திரசேகர் தம்பதிகளுக்கு வருத்தம் நிறையவே இருந்தது.

ஆனால் ரித்விக்கே கணவனாக வந்ததில் மகிழ்ந்திருந்த வேதாவிற்கு அத்திருமணத்தில் ஒரு குறையும் தெரியாமல் போக மகிழ்ச்சியுடனேயே மன்னவனைக் கரம்பிடித்தாள்.

திருமணத்தை முடித்து வைத்த சந்திரசேகர் தந்தை விதித்த கட்டுப்பாடுகளில் படி அவளை ஒதுக்கியும் வைத்தார்.

பேத்தி என்ற பாசம் எல்லாம் அவளின் காதலில் அடிப்பட்டுப் போக, சிதம்பரமும், லட்சுமியும் அவளை அறவே ஒதுக்கினர்.

ராஜேந்திரன் தம்பதிகளும் அதையே செய்ய, அவர்களின் மகள்களையும் வேதாவுடன் ஒட்டுதல் வைத்திருக்கக் கூடாது என்று வெட்டி விட்டனர்.

தந்தையின் பேச்சுக்கு பணிந்து சரவணன் தம்பதிகளும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்ததையும் நிறுத்தி விட்டனர்.

பெற்ற மகள் என்பதால் சந்திரசேகர் தம்பதிகள் மட்டும் அவளுடன் பேசிக் கொள்ளலாம். எப்பொழுதாவது மகளைச் சென்று பார்த்துக் கொள்ளலாம். அவள் திருமணத்திற்குப் பிறகு இங்கே வர கூடாது என்ற நிபந்தனைகளுடன் வேதாவின் திருமணத்தை நடத்தி வைத்தவர்கள், அந்த நிபந்தனையை இப்போது வரை கட்டிக் காக்கவும் செய்தனர்.

அந்த நேரத்தில் ரித்விக் மேலான காதல் மட்டும் முக்கியமாகப் படச் சொந்தங்களின் உதாசீனத்தைப் பொறுத்துக் கொண்டு தன் காதல் கல்யாண வாழ்க்கையைச் சந்தோஷமாகவே ஆரம்பித்தாள் வேதவர்ணா.

குடும்பத்தினரின் உதாசீனம் வருத்தத்தைத் தந்திருந்தாலும், காதலனை கரம் பிடித்த மகிழ்வில் இருந்தவளுக்குக் குடும்பம் இரண்டாம் பச்சமாகத் தான் ஆகிப் போனது.

‘அப்பா, அம்மாவிடம் பேசலாமே? அதுவே போதும்!’ என்ற மனநிலைக்கு அந்த நேரத்தில் வந்திருந்தவளுக்கு, வேறு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை தான்!

ஆனால் அப்போது தெரியாதது எல்லாம் இப்போது பூதாகரமாகத் தெரிந்தது.

கணவன் சொன்னது போல் அதன்பிறகு அன்னையை வாருங்கள் என்று வேதவர்ணா அழைக்காமல் இருந்தாள்.

அன்றும் வாந்தி அதிகமாக இருக்க விடுமுறை எடுத்திருந்தவள், சோர்வுடன் கணவனின் மடியில் படுத்திருந்தாள்.

ரித்விக்கோ, மனைவியை மடியில் தாங்கி அவளின் கேசத்தை ஒரு கையால் நீவி விட்டுக் கொண்டே, இன்னொரு கையால் மடிக்கணினியை தட்டிக்கொண்டு இருந்தான்.

வேலையில் மூழ்கி இருந்தாலும் தன் மீதும் ஒரு கவனம் வைத்திருந்த கணவனைப் பார்த்த வேதா “ரித்வி…” என்று மெல்ல அழைத்தாள்.

“ம்ம்…” கணினியை விட்டுக் கண்களைத் திருப்பாமல் ‘ம்ம்’ கொட்டினான் ரித்விக்.

“ரித்வி…”

“ம்ம் வரு…”

“ரித்வி…”

“யெஸ் வரு, டெல் மீ…”

“ரித்வி கண்ணா…” என்று மீண்டும் மீண்டும் அவனின் பெயரை அழைத்தாளே தவிர, அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.

தான் செய்த புரோகிராமை சரி பார்த்து ஓட விட்டவன், கணினியில் இருந்து கண்களைத் திருப்பி மனைவியைப் பார்த்தான்.

“ரித்வி கண்ணா…” என்று மீண்டும் அழைத்தவள் தன் தலையில் இருந்த அவனின் கையை எடுத்து தன் உதட்டிற்கு எடுத்து சென்று அழுந்த முத்தமிட்டாள்.

அதில் குனிந்து மடியில் இருந்த மனைவியின் நெற்றியில் உதடுகளைப் பதித்தவன் “உன் ரித்வி கண்ணாவுக்கு என்ன வச்சுருக்க? சொல்லேன்…” என்றான்.

“இப்போ நாம எங்கயாவது வெளியே போவோமா? வீட்டுக்குள்ளேயே இருக்க எனக்கு ஒரு மாதிரியா இருக்கு…”

‘வெளியேவா?’ என்று நினைத்தவன் மணியைப் பார்த்தான். மணி மாலை நான்கு ஆகியிருந்தது.

“சிக்ஸ் ஓ க்ளாக் வீடியோ கால் இருக்கு வரு… அதுக்குப் பிறகு இன்னைக்கு நைட்டுக்குள்ள ஒரு ப்ரோகிராம் செய்து முடிக்கணும்…” என்று சொன்ன கணவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள் வேதா.

‘என்ன?’ என்பது போல் ரித்விக் விழி உயர்த்திக் கேட்க, அவனின் மடியில் இருந்து எழுந்தவள், “எனக்கு அதெல்லாம் தெரியாது ரித்வி. இன்னைக்கு நாம வெளியே போகணும்….” என்றாள் முடிவாக.

“வேலை இருக்கு வரு. புரிஞ்சுக்கோ…” என்று அமைதியாகவே பதில் சொன்னான்.

“கொஞ்ச நேரம் வெளியே போய்ட்டு வந்து அப்புறம் வேலையைப் பாருங்க…” இப்போது அவளிடம் பிடிவாதம் கூடி வந்திருந்தது.

“இது என்ன பிடிவாதம் வரு? இன்னைக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டதே பெரிய விஷயம். உனக்கு வாமிட்டிங் அதிகம் இருக்கவும் தான் பெர்மிஷன் வாங்கி வீட்டில் இருந்து வேலை செய்றேன். ஆப்டர் நூன் வரை உனக்கு வாமிட்டிங் இருந்ததில் ஒரு வேலையும் பார்க்கலை. இனி தான் வேலை பார்க்கணும். இதில் வெளியே போனா வேலையை முடிக்க முடியாது…” தன் நிலையை அமைதியாகவே எடுத்து சொன்னாலும் அழுத்தத்துடன் சொன்னான்.

அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாதவன் ரித்விக்.

பொறுமையானவனும் கூட!

பெற்றோர் இல்லாமல் தானே வளர்ந்தோம் என்று மனதை தறி கெட்டு ஓட விட்டவனும் அல்ல!

கட்டுக்கோப்புடன் வளர்ந்தவனை வேதாவின் காதல் தான் வசியம் செய்தது.

அவனின் அமைதியான குணம் தான் வேதாவை வசீகரித்ததும் கூட!

அவனுக்கு நேர் எதிர் தான் வேதவர்ணா. வேண்டும் என்றால் உடனே வேண்டும் என்று நினைக்கும் பிடிவாதக்காரி!

அவளின் பிடிவாத குணம் தான் அவளின் காதலை கை கூட வைக்க உதவியது.

இப்போதும் பிடிவாதம் தான் பிடித்தாள். கணவனின் வேலை எப்படி இருக்கும் என்று அறிந்தவளே புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ள முயலாமல் வெளியே போக வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்தாள்.

“நீங்க வந்து வேலை பாருங்க ரித்வி… கொஞ்ச நேரம் மட்டும் போயிட்டு வந்துடலாம்…” என்று சொன்னதையே சொன்ன மனைவியைப் பார்த்து இப்போது ரித்விக்கின் முகம் சுருங்கியது.

“ப்ளீஸ்… அண்டர்ஸ்டேன்ட் மை சுச்சுவேஷன் வரு…” என்றான் இழுத்து பிடித்த பொறுமையுடன்.

“நீங்க என்னைப் புரிஞ்சுக்கோங்க ரித்வி…” என்றவளை லேசாகத் துளிர்த்த கோபத்துடன் பார்த்தான்.

இதே அவள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் இப்படிக் குறுக்கிட்டால் எப்படி நடந்து கொண்டிருப்பாள்? என் வேலையைப் புரிந்து கொள்ள முடியாதா? என்று கத்தியிருப்பாளே.

இப்போது தான் பொறுமையாக எடுத்து சொன்ன பிறகும் புரிந்து கொள்ளாமல் பேசும் மனைவியை என்ன செய்ய என்பது போலப் பார்த்தான்.

ஊடல் இல்லாத காதல் தான் ஏது?

அவர்களுக்குள்ளும் ஊடல் வந்துள்ளது. அந்த நேரத்தில் எல்லாம் அவளை விட அவன் பொறுமையாகப் போய் விடுவான்.

வேதா சில நேரங்களில் மட்டுமே இறங்கி வருவாள்.

ஆனால் இப்போது இருக்கும் வேலையில் இறங்கி வர மனமில்லாத ரித்விக் மனைவியிடம் இருந்து பார்வையைத் தவிர்த்து விட்டு கணினியின் புறம் திரும்பினான்.

கணவனின் செயலில் அவனை முறைத்துப் பார்த்தவள் அறையை விட்டு எழுந்து வரவேற்பறைக்குச் சென்றாள்.

காலை உதைத்துக் கொண்டே போனவளை நிமிர்ந்து பார்த்த ரித்விக் பின்பு மீண்டும் குனிந்து வேலையில் ஆழ்ந்தான்.

மனைவியைச் சமாதானம் செய்ய அவனின் வேலையும் இடம் கொடுக்கவில்லை.

தன் பின்னால் சமாதானம் செய்ய வருவான் என்று எதிர்பார்த்த வேதா அவன் வரவில்லை என்றதும் மெல்ல படுக்கை அறையை எட்டிப் பார்த்தாள்.

அவன் வேலையில் ஆழ்ந்ததைக் கண்டு இன்னும் கோபம் வர, பால்கனியில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

இரவு ஏழு மணி வரை அவள் அங்கேயே அமர்ந்திருக்க, அவளின் பின் வந்து நின்ற ரித்விக், “கிளம்பு வரு, வெளியே போய்ட்டு வரலாம்…” என்றான்.

சாலையில் செல்லும் வாகனங்களையும், மேக கூட்டங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவள், “ஒன்னும் வேண்டாம்… நீங்க போய் வேலையைப் பாருங்க…” முகத்தைக் கூடத் திருப்பாமல் பதிலை சொன்னாள்.

“என் வேலையை எப்போ பார்க்கணும்னு எனக்குத் தெரியும். இப்ப என் கூட வர்ற, கிளம்பு…” என்று முடிவாகச் சொன்னவன், இருக்கையில் இருந்த அவளின் கைப்பற்றி நிற்க வைத்தான்.

நீண்ட நேரமாக அமர்ந்திருந்தது காலின் ரத்த ஓட்டத்தைப் பாதித்திருக்கக் காலை ஊன முடியாமல் தள்ளாடினாள்.

அவளைத் தன் கை வளைவில் நிறுத்திக் கொண்டவன், “அப்படி என்ன கோபம் வரு? இதுக்கு முன்னாடி எல்லாம் நான் சொன்னா புரிஞ்சுக்குவாய் தானே… இப்போ மட்டும் ஏன் இப்படிப் பண்ற?” என்று வருத்தத்துடன் கேட்டான்.

காலை உதறி ரத்த ஓட்டத்தைச் சரி செய்து கொண்டே, கணவனின் முகத்தைப் பார்த்தாள். அவனின் முகத்தில் இருந்த வருத்தத்தைப் பார்த்து, ‘தான் அவனைக் கஷ்டப்படுத்துக்கிறோம்’ என்று நினைத்தவள், “நான் வேணும்னு செய்யலை ரித்வி. நிஜமாவே வீட்டுக்குள்ளே இருப்பது மூச்சு முட்டுவது போல இருந்தது. அதான் வெளியே போய்ட்டு வந்தா சரியாகும்னு நினைச்சேன். உங்க வேலையையும் நான் புரிஞ்சு இருந்திருக்கணும். சாரி…” என்று உடனே மன்னிப்பும் கேட்டாள்.

“உடனே வந்து சமாதானம் செய்யாததுக்கு நானும் சாரி…” என்று ரித்விக்கும் சொல்ல, இருவரும் மாறி மாறி சொல்லிக் கொண்டதில் புன்னகை வந்தது.

முகம் மலர ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்தார்கள்.

“நான் தான் ரித்வி சாரி சொல்லணும். நீங்க சொல்ல தேவையில்லை. நான் புரிஞ்சுக்காம அடம் பிடிச்சிட்டேன். நீங்க போய்ப் புரோகிராமை முடிங்க. நான் டின்னர் செய்றேன்…” என்றாள்.

“சாரி போதும் வரு, விட்டுடு. டின்னர் செய்ய வேண்டாம். வெளியே போய்ச் சாப்பிடலாம். உனக்கும் வெளியே போனது போல இருக்கும். டின்னர் வேலையும் முடியும். கிளம்பு போய்ட்டு வரலாம்…” என்றான்.

“உங்க வேலை?”

“அது வந்து பார்த்துக்கலாம். கால் முடிஞ்சது. இன்னும் ஒன் ஹவர் பிறகு வேலை ஆரம்பிச்சா போதும்…” என்றவன் உடனே மனைவியைக் கிளம்ப வைத்து, தானும் கிளம்பினான்.

இரவு உணவை வெளியே முடித்து விட்டு வரும் போது, அவர்களின் ஊடல் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போயிருந்தது.

சின்னச் சின்ன விஷயங்களில் கூடக் கோபம் கொள்ளும் வேதாவின் மனநிலையைச் சாதாரணமாக எடுத்துக் கொண்ட ரித்விக்கிற்குத் தெரியவில்லை. அவர்களின் வாழ்வின் அஸ்திவாரத்தையே வேதவர்ணாவின் கோபம் ஆட்டம் காண வைக்கும் என்று!

புயலுக்கு முன் அமைதி போல அடுத்து வந்த நாட்கள் சின்னச் சின்ன உரசல்களுடன் அமைதியாகவே கடந்து சென்று கொண்டிருந்தன.

அதிகப் பொறுமையுடன் இருக்கும் ரித்விக் இனி வரும் நாட்களிலும் அப்படியே இருப்பானா?