பூவோ? புயலோ? காதல்! – 4

அத்தியாயம் – 4

காலை ஏழு மணி. படுக்கையறையில் இருந்து சோர்வான தோற்றத்துடன் வரவேற்பறைக்கு வந்த வேதவர்ணா தன் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டே தன் அலைபேசியை எடுத்து அவளின் அன்னைக்கு அழைத்தாள்.

சில நொடிகளில் அந்தப் பக்கம் போன் எடுக்கப்படவும், “ம்மா! என்னால சுத்தமா முடியலை. ஒருமுறை வந்து கொஞ்ச நாள் இங்கே இருந்துட்டு போங்களேன்…” எனக் கெஞ்சலாகக் கேட்டாள்.

“ஏன்டி… இன்னைக்கு என்ன செய்தது உனக்கு? டெய்லி காலையில் போன் போட்டு புலம்புறதே உன் வேலையா போயிருச்சு…” என்று போனில் சிறிது கோபத்துடன் கேட்டார் அவளின் அன்னை.

“கோபப்படாதீங்கமா! என்னால முடியலைன்னு தானே வரச் சொல்றேன். இன்னைக்குக் காலையில் ஐஞ்சு மணியில் இருந்து ஒரே வாந்தி. படுக்கக் கூட என்னால முடியல. ஒருமுறை உங்க பிடிவாதத்தை விட்டுட்டு வந்துட்டுப் போனா தான் என்ன?” என வலித்த தலையை நீவி விட்டு கொண்டாள்.

“வா… வா…னா நான் எப்படிடி வர முடியும்? நீ முடியலைன்னு கூப்பிட்டதும் நான் கிளம்பி வர்ற சூழ்நிலையைவா நீ உருவாக்கி வச்சுருக்க? இப்போ என்னால வர முடியாதுடி. இது எல்லாப் பொண்ணுங்களுக்கும் இருக்குற சிம்டம்ஸ் தான். இன்னும் ஒரு இரண்டு மாசம் தான் இப்படி இருக்கும். அப்புறம் அதுவே குறைஞ்சுடும்.

அதுவரை எப்படியாவது சமாளிச்சு இருந்துக்கோ. அதுக்குள்ள நான் ஒரு முறை கிளம்பி வர முடியுதான்னு பார்க்கிறேன். வந்தாலும் இரண்டு நாள் தான் அங்க இருப்பேன். அதையும் இப்பவே சொல்லிடுறேன். அப்புறம் இன்னும் கொஞ்ச நாள் இருங்கனு அப்போ என் தலையை உருட்ட கூடாது…” என்றவரின் குரலில் இது மட்டுமே என்னால் செய்ய முடியும் என்ற அவரின் முடிவு தெரிந்தது.

அன்னையின் பிடிவாதத்தில் சோர்ந்து “ம்மா…” எனக் கண்களில் தேங்க ஆரம்பித்த நீருடன் கெஞ்சலாக அழைத்தாள் வேதவர்ணா.

மகளின் கண்ணீரை குரலிலேயே உணர்ந்த சித்ரா “என்னை என்ன தான்டி பண்ண சொல்ற? என் சூழ்நிலையையும் நீ புரிஞ்சுக்கோ. எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? மசக்கையா இருக்குற பொண்ணு பக்கத்தில் இருந்து அவளைத் தாங்கணும்னு. ஆனா அந்த ஆசை நிறைவேறாத மாதிரியான காரியத்தைச் செய்து வச்சது யாரு? நீ தானே? அன்னைக்கே தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். இதெல்லாம் நமக்குச் சரி வராது விட்டுடலாம்னு.

என் பேச்சை காது கொடுத்தாவது கேட்டியா என்ன? அப்போ அட்வைஸ் பண்ணும் போதெல்லாம் நான் உனக்கு விரோதி போலத் தெரிஞ்சேன். இப்போ வந்து குத்துது, குடையுதுன்னு என்னையும் போட்டு குடைஞ்சா என்னால என்ன பண்ண முடியும்? இதோ இது போலப் போன்ல புலம்ப மட்டும் தான் முடியும். கண்ணீர் விட்டா எதுவும் மாறப் போறது இல்லை வேதா.

போ…! போய்க் கொஞ்ச நேரம் படுத்திருந்துட்டு ஆஃபிஸ் கிளம்பி போ! வீட்டில் தனியா இருந்து மயக்கம் கியக்கம் போட்டு விழுந்து வச்சுட போற. ஆஃபிஸில் என்றாலும் சுத்தி ஆளுங்க இருப்பாங்க. நீயும் பாதுகாப்பா இருப்ப. வீட்டில் இருந்தா உன்னை ஏன்னு கேட்க கூட ஆள் இல்லாம கிடப்ப. வெளிய போகும் போதும், வரும் போதும் கவனமா போய்ட்டு வா!

நான் சொன்ன கஷாயத்தை வச்சு குடி. கொஞ்சம் தெம்பா இருக்கும். வாந்தி வருதுன்னு எதுவும் சாப்பிடாம பட்டினி கிடக்காதே. வயித்துல ஏதாவது போட்டுக்கிட்டே இரு. அப்பத்தான் உன்னால தெம்பா நடமாட முடியும்…” என்று நீளமாகப் புத்திமதி செய்த சித்ராவின் தொடர்ந்த பேச்சை கேட்கும் சக்தி கூட இல்லாமல் போனை சாப்பாட்டு மேஜையில் வைத்து விட்டு அப்படியே தானும் அதில் தலையைச் சாய்த்தாள்.

சிறிது நேரம் சத்தம் இல்லாமல் இருக்கவும், “வேதா! லைன்ல இருக்கியா இல்லையா?” என்று சத்தமாக அழைத்தார் சித்ரா.

“ஹ்ம்ம்… இருக்கேன்மா…!” எனப் பேச்சு கொடுத்தவள் “அப்போ நீங்க வர மாட்டீங்க. அப்படித் தானேமா?” என மீண்டும் சோர்வாகக் கேட்டாள்.

“ஏய்! என்னடி திரும்பத் திரும்ப அதையே கேட்டுட்டு இருக்க? இங்கே அடுத்த வாரம் உங்க அப்பாவோட ஒன்னு விட்ட அண்ணன் வீட்டுல கல்யாணம் இருக்கு. அதுக்கு நாங்க இங்க இருந்தே ஆகணும்னு சொன்னேனா இல்லையா? இப்போ வர முடியாத நிலையில் இருக்கேன்னு சொன்னா புரிஞ்சுக்க. சும்மா சும்மா வா… வான்னுட்டு…” என்று வெளிப்படையாகவே சலிப்புடன் சொன்னார் சித்ரா.

அவரின் சலிப்பில் கண்ணில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் அவள் படுத்திருந்த மேஜையின் மீது வந்து விழுந்தது.

கண்களை ஒரு கையால் துடைத்துக் கொண்டே “உன் பொண்ணை விட உன் மச்சினன் வீட்டுக் கல்யாணம் பெருசா போயிருச்சாமா?” எனக் குரல் இறுக கேட்டாள்.

அதில் சில நொடிகள் மௌனம் கடைபிடித்த சித்ரா பின்பு குரலை செரும்பி கொண்டே “இது விதாண்டா வாதம் வேதா! இப்படி எல்லாம் நடக்கும்னு உன்கிட்ட ஏற்கனவே எடுத்துச் சொன்னேன். அப்போ எல்லாம் எனக்குச் சமாளிக்கத் தெரியும் நீ கவலைப்படாதேனு சொன்னவ, இப்போ உனக்கு முடியலைங்கவும் அதை எல்லாம் மறந்து போய்ப் பேசுறது சரியே இல்லை வேதா.

இப்போ உன் வேதனை அப்படிப் பேச வைக்குது. போ! போய் ரெஸ்ட் எடு. ஏற்கனவே ரொம்ப நேரம் பேசிட்டோம். அதுக்கே நான் இங்க என்னவெல்லாம் பேச்சு வாங்க போறேனோ? அப்புறம் பேசுறேன் வச்சுரு. உடம்பை பார்த்துக்கோ…!” எனப் போனை வைக்கும் போது அக்கறையாகச் சொல்லிவிட்டு அவளுக்கு முன் போனை வைத்தார் சித்ரா.

அவரின் வேகத்தில் மீண்டும் சுணங்கி போன வேதவர்ணா அப்படியே மேஜையின் மீது கண்களை மூடி படுத்துக் கொண்டாள். தாய்மை தாங்கிய உடம்பு அவளை அசத்தியது. தாயின் அருகாமைக்கு அவளின் மனது ஏங்கியது. அவரின் மடியில் படுத்து, அவர் சமைத்த உணவை உண்ண தாயாக நிற்கும் அவள் இந்த நிலையில் பிள்ளை மனமாக மாறி ஆசை கொள்ள, அந்த ஆசை நிராசையான வேதனையில் மனம் வலித்தது.

‘அப்படி என்ன தப்புச் செய்துவிட்டேன் நான்?’ எனத் தன்னையே கேட்டுக் கொண்டாள்.

வெறும் வயிற்றில் வாந்தி எடுத்ததில் தொண்டை வறண்டு போயிருந்தது. தாகம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும், எழுந்து செல்ல கூட முடியாமல் உடம்பும், மனமும் சோர்ந்து போயிருக்க, சிறிதும் அசையாமல் அப்படியே இருந்தாள்.

அரைமணி நேரம் கடந்தும் அப்படியே இருந்தவளின் தலையை ஒரு கை இதமாகக் கோதி விட்டது. அந்தச் சுகத்தில் லயித்தவள் “இன்னும் நல்லா…” என முனங்கினாள்.

கணவன் எழுந்து வந்ததைக் கூடக் கவனத்தில் கொள்ளாமல் அசந்து படுத்திருந்தவளுக்கு அவனின் வருடல் இதத்தைத் தத்தது. அதை இழக்க பிரியம் இல்லாதவள் அவனின் கரத்தை இன்னும் தன்னுடன் அழுத்திக் கொண்டாள்.

“நோ வரு! வேக் அப்! பர்ஸ்ட் ட்ரிங்க் யுவர் மில்க். நெக்ஸ்ட் ரெஸ்ட்…!” என இதமாக ரித்விக் அதட்ட… “நோ ரித்வி! பர்ஸ்ட் ரெஸ்ட்…” எனப் பதிலுக்கு இவள் கொஞ்சலுடன் சொன்னாள்.

“நோ… நோ வரு! கெட்டப்…!” என விடாமல் எழுப்பிய ரித்விக், அவள் கையில் பால் கப்பை கொடுத்தான். “திஸ் இஸ் டூ மச் ரித்வி. என்னை ரெஸ்ட் எடுக்க விட மாட்டிங்கிறீங்க…” எனச் சிணுங்கியவள் பாலை மெல்ல பருகினாள். காய்ந்த தொண்டைக்கு இதமாக இருக்க முழுவதும் குடித்துவிட்டு தான் கப்பை கீழே வைத்தாள்.

அதற்குள் அவளின் எதிரே அமர்ந்திருந்த ரித்விக் “இவ்வளவு பசியை வச்சுக்கிட்டு ரெஸ்ட் எடுக்குறேன்னு சொல்ற? எப்ப எழுந்த? என்னை எழுப்பி இருக்கலாம்ல? அங்கே உன்னைக் காணோம்னு வந்து பார்த்தா இங்கே படுத்திருக்க. கஷ்டமா இருந்தா என்னைக் கூப்பிட வேண்டியது தானே?” எனக் கேட்டான்.

“நான் ஐஞ்சு மணிக்கே எழுந்துட்டேன் ரித்வி. பாத்ரூம் போக எழுந்தேன். அப்ப இருந்தே வாந்தி வர்ற ஃபீலில் உறக்கம் வரலை. அதான் அப்படியே அம்மாகிட்ட பேசிட்டு இங்கேயே சாஞ்சுட்டேன். ஏற்கனவே நைட் நீங்க லேட்டா தான் தூங்கினீங்க. அதான் மார்னிங் ரெஸ்ட் எடுக்கட்டும்னு உங்களை எழுப்ப மனசு வரலை…” என்றாள்.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ரித்விக் அவள் சொன்ன மத்ததை விடுத்து “ஆன்ட்டிகிட்ட பேசினியா?” என முகம் இறுக கேட்டவன் அவளின் கண்களை ஆராய்ந்தான். அவள் கண்களில் அழுததிற்கு அடையாளமாக இமையின் ரோமம் எல்லாம் கண்ணீரால் காய்ந்து ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தது. அதைக் கண்டதும் முகம் மேலும் இறுக அந்த இடத்தை விட்டு செல்ல தன் இருக்கையை விட்டு எழுந்து நின்றான்.

அதை உணர்ந்த வேதவர்ணா சட்டெனத் தன் கையை நீட்டி அவன் கரத்தை பற்றித் தன் அருகே இழுத்தாள். அவள் அழுததில் கோபம் இருந்தாலும் அவள் இழுத்த இழுப்பிற்கு வந்து நின்றான்.

தன் அருகில் நின்றிருந்தவனின் இடுப்பில் கை போட்டு அணைத்து, அவனின் வயிற்றில் முகம் புதைத்து, “சாரி ரித்வி! நீங்க என்னை நல்லா தான் பார்த்துக்கிறீங்க. ஆனா என்னோட உடல் நிலை அம்மாவை ரொம்பத் தேட வைக்குது. நானும் என்னைக் கண்ட்ரோல் பண்ணி தான் பார்க்கிறேன். என்னால முடியலையே என்ன பண்ண?” எனக் கலக்கத்துடன் கேட்டவள் அவன் வயிற்றில் நாடியை வைத்து அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் தன் வயிற்றில் முகம் புதைத்ததுமே தன்னால் அவளின் தலையைக் கோதி விட்டவன், வேதவர்ணாவின் பார்வையைப் பார்த்து தன் கைகளில் அவளின் முகத்தை ஏந்தி, இன்னும் நன்றாகத் தன் முகத்தைப் பார்க்க வைத்து, கலங்கி இருந்த கண்களைத் துடைத்து விட்டு அவளின் நெற்றியில் ஒரு முத்தத்தைப் பதித்தான்.

“விடு வரு! அழாதே! நீ ஆன்ட்டி கிட்ட பேசியதால எனக்குக் கோபம் இல்ல. தனியா உட்கார்ந்து அழுதுருக்க. அதான் எனக்குக் கோபம். இப்படித் தான் இருக்கும்னு தெரிஞ்ச பிறகு அழுது உடம்பை கெடுத்துக்காதே! போய்க் கொஞ்ச நேரம் படுத்திரு. நான் போய்ப் பிரேக் பாஸ்ட் செய்துட்டு உன்னை எழுப்புறேன். அப்புறம் கிளம்பி ஆஃபிஸ் போகலாம்…” என்றான்.

“வேணாம் ரித்வி. இனி படுக்க முடியாது. நானும் ஹெல்ப் பண்றேன். பேசிக்கிட்டே வேலையை முடிப்போம். அப்புறம் இரண்டு பேரும் சேர்ந்தே ஆஃபிஸ் கிளம்புவோம்…” எனப் பேசிக் கொண்டே எழுந்து சமையலறையை நோக்கி நடந்தவளை தடுத்து நிறுத்திய ரித்விக் அவளைத் தன் முன்னால் நிறுத்தி “என்ன சொன்ன? திருப்பிச் சொல்லு…!” என்றவன் கண்களில் குறும்பு கூத்தாடியது.

‘அப்படி என்ன சொன்னோம்?’ எனச் சட்டெனப் புரியாமல் நொடிகள் நின்ற வேதா அவனின் கண்களில் இருந்த குறும்பை பார்த்து தான் சொன்னதை மறுபடியும் மனதில் ஓட்டி பார்த்தவள் கடைசியாகச் சொன்ன வரிகளை நினைத்து அவனின் கற்பனையைக் கணித்தவள் முகத்திலும் கேலி வந்து அமர்ந்தது.

“சேர்ந்து கிளம்புவோம்னு சொன்னதும் ஐயாவுக்கு ஆசை துள்ளுதோ? அதெல்லாம் ஒன்னும் கிடையாது. ஒழுங்கா போய் வேலையைப் பாருங்க ரித்வி… ” எனப் பொய்யாக மிரட்டினாள்.

அவளின் மிரட்டலில் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றவனை உதட்டை பிதுக்கி பார்த்தாள். பின்பு வேகமாக அவனின் பின்னால் இருந்து அணைத்தவள் “என் ரித்வி செல்லம் ரொம்பக் கோபமா போகுதே…!” எனக் கொஞ்சலாகக் கேட்டாள்.

அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க “பேசு ரித்வி…” என்றாள். அவன் முதுகு இறுகி இருக்கவும் ரொம்பக் கோபம் போலயே என நினைத்துக் கொண்டே அவனை எவ்வாறு சமாதானம் செய்வது என யோசித்தாள்.

தன் உடம்பை இறுக்கமாக வைத்திருந்த ரித்விக்கின் முகம் குறும்பில் மின்னியது. அவனைச் சமாதானம் செய்ய வேதா முன் பக்கம் வரவும் வேகமாகத் தன் முகப்பாவத்தை மாற்றி இறுக்கமாக வைத்து கொண்டவனைப் பாவமாகப் பார்த்தாள் வேதவர்ணா.

“நீ ரொம்பப் பண்ற ரித்வி. வர வர உன் சேட்டை அதிகம் ஆகிருச்சு. பாவம் புள்ளதாச்சி பொண்ணுனு நினைக்காம நீ இப்படிக் கோவிச்சுட்டு இருக்கிறது சரியே இல்லை…” எனப் படபடவெனப் பொறிந்தாள்.

அவ்வளவு நேரமாக அவனுக்காகத் தமிழில் நிறுத்தி நிதானமாகக் கணவனுக்குப் புரியும் விதமாகப் பேசிய வேதா, இப்போது வேகமாகப் பேசவும், பேச்சுப் புரியாமல் இப்பொழுது பாவமாகத் திருதிருவென முழித்துக் கொண்டு நிற்பது அவனின் முறையானது. ரித்விக் தமிழில் பேசுவான் என்றாலும் நிறுத்தி நிதானமாகத் தான் பேசுவான். அதனால் மனைவியிடம் அதிகம் ஆங்கிலத்தில் தான் உரையாடுவான். (இங்கே ரித்விக் ஆங்கிலத்தில் பேசுவதும் தமிழில் வரும். இருவரின் உரையாடலும் ஆங்கிலம், தமிழ் இரண்டும் கலந்தே இருக்கும்)

அவனுக்கு மெதுவாகப் பேசினால் தான் தமிழைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவளின் படபடவென்ற பேச்சில் விழித்துக் கொண்டு நின்றான்.

அவனின் முழியில் பக்கெனச் சிரித்து விட்டாள் வேதா.

“திஸ் இஸ் டூ மச் வரு…” அவன் குழந்தை போலக் காலை உதைத்துச் சொல்ல, அவளுக்கு இன்னும் சிரிப்பு அதிகமாகியது.

சிரித்தவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன் அவளின் இதழை நோக்கி குனிந்தான். சட்டென்று அவனிடம் இருந்து விலகியவள் “படவா! கோபமா இருக்குற மாதிரி நடிக்கவா செய்ற? எப்படி உன்னை என் வழிக்கு வர வச்சேன் பார்த்தியா?” எனத் தன் ஆட்காட்டி விரலை அசைத்து மீண்டும் படபடவெனப் பேசி கேலி செய்தவளின் விரலை பிடித்து நிறுத்தி “தமிழில் பேசினாலும் மெதுவா பேசு வரு. அப்போ தான் எனக்குப் புரியும்…” என்றான் கெஞ்சலாக.

“நோ… என் ரித்வி கண்ணா! நீ என் மேல கோபப்பட்டல. இன்னைக்கு ஃபுல்லா நான் இப்படித் தான் உன்கிட்ட பேசுவேன். அதான் உனக்குப் பனிஷ்மெண்ட்…” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு “நோ….!” எனச் சத்தமாகவே அலறினான்.

அதில் அவன் வாயை வேகமாக மூடியவள் “ஷ்ஷ்! ஷ்ஷ்! டோன்ட் சவுண்ட் ரித்வி!” என அடக்கியவளின் கையைத் தன் வாயில் இருந்து எடுத்தவன் “ஹேய்! நவ் யூ டாக்கின் இன் இங்கிலிஷ். பிரேக் தி பனிஷ்மெண்ட்…” எனச் சந்தோஷமாக ஆர்ப்பரித்தான்.

வேகமான தமிழில் பேசி திணற வைத்தவள் ஆங்கிலத்தில் பேசவும், அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

“கிடையாது! கிடையாது அதெல்லாம் கிடையாது…!” என வேதா வேகமாக மறுக்க… “யெஸ்…! யெஸ்…!” என அழுத்தி சொல்லி தனக்குக் கிடைத்த தண்டனையைத் திருப்பி வாங்க வைத்தவன் விசில் அடித்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றான்.

அதைக் கண்டு வேதா அசந்து நின்றவள் ‘ஆமா நாங்க இப்போ எதுக்கு வழக்காடினோம்?’ என யோசித்தாள். வந்தான், பால் கொடுத்தான். அம்மாகிட்ட பேசினேன் சொன்னதும் இறுக்கமா இருந்தான். பிறகு என்னைச் சமாதானம் செய்தான். பிறகு சேர்ந்து கிளப்புவோம்னு சொன்னதை வச்சு என்னமோ குறும்பு பண்ணினான்.

நான் மாட்டேன்னு சொல்லவும் கோபப்பட்டான். அப்புறம் ஸ்பீட் தமிழ்னு பனிஷ்மெண்ட் கொடுத்தா அதை ஒன்னும் இல்லாததா ஆக்கிட்டு போயிட்டான். சேர்ந்து கிளம்புவோம்னு சொன்னதையே மறந்துட்டுப் போறான். என்னடா இது?’ எனக் கன்னத்தில் விரலை வைத்து தட்டி யோசித்தாள்.

அவள் நின்ற கோலத்தைச் சமையலறை வாசலில் நின்று எட்டி பார்த்து ஒரு சின்னச் சிரிப்புடன் மீண்டும் உள்ளே சென்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் ரித்விக்.

இங்கே நின்று யோசித்துக் கொண்டிருந்தவள் சட்டெனக் கண்களை விரித்து ‘அட! என் ரித்வி கண்ணா! சோ ஸ்வீட்!’ எனச் செல்லமாகக் கொஞ்சி கொண்டு சந்தோஷமாகச் சமையலறைக்குள் சென்று அடுப்பின் முன் நின்று கொண்டிருந்தவனைப் பின்னால் இருந்து அணைத்து அவனின் முதுகில் ஒரு முத்தத்தைப் பதித்து “என் மனசை மாத்த என்னவெல்லாம் குறும்பு பண்ற நீ?” எனக் கேட்டுக் கொண்டே மீண்டும் முதுகில் ஒரு முத்தத்தை வைக்க, அதில் சிலிர்த்து நின்றவன் அவளை முன்னால் இழுத்து தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன் அப்பொழுது செய்யாமல் விட்டதை இப்பொழுது செய்தே விட்டிருந்தான்.

இதழ்கள் இரண்டும் சில நொடிகள் இளைப்பாறிய பிறகு அதை விடுவித்து விட்டு தன் மார்பில் அவளைச் சாய்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

(ஆங்கில உரையாடல்கள்)
“நீ அழக்கூடாது வரு. நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். சோ அழுவது நோ யூஸ். நம்ம பேபி வரவை நினைச்சு சந்தோஷமா இரு. அம்மா வரலைன்னு கவலைப்படாதே! அம்மாக்குப் பதில் உனக்கு என்ன வேணுமோ அதை என்கிட்ட கேளு. என்னால முடிஞ்சதை நான் செய்து தர்றேன். என்ன சரியா?” என அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி வைத்து கேட்டான்.

“ஹ்ம்ம்…” எனத் தலையை ஆட்டினாள். ஆனாலும் அவளின் முகம் தெளிவில்லாமல் இருக்க “என்ன வரு?” என விசாரித்தான்.

“அம்மா, அப்பாகிட்ட சம்மதம் வாங்கி, அவங்க இரண்டு பேரோட முன்னிலையில் தானே நம்ம கல்யாணம் நடந்தது ரித்வி. அப்படியிருக்கும் போது என்னமோ ஓடிப் போய்க் கல்யாணம் முடிச்சது போல ஏன் நம்மளை இப்படி விலக்கி வச்சுருக்காங்க? நீங்க இந்தி பையன் அதனால வேணாம்னு முதலில் நம்ம காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சவங்க, அப்புறம் என் பிடிவாதத்தில் மனசு மாறி சரினு தானே சொன்னாங்க.

அதுக்கும் எத்தனை கண்டிஷன் போட்டாங்க. அப்ப அவங்க கண்டிஷன் போடும் போதெல்லாம் இப்போ கோபத்தில் இப்படிச் சொல்றாங்க. அப்புறம் மனசு மாறிடுவாங்கனு நினைச்சேன். ஆனா இப்போ என்னால முடியலைன்னு அழுதும் அம்மா அடுத்த வாரம் சொந்தத்தில் கல்யாணம் இருக்கு வர முடியாது. நான் தான் அப்பவே சொன்னேன்லனு சொல்றாங்க. என்னை விட அவங்களுக்குச் சொந்தம் தான் முக்கியமா போயிருச்சு. அதைத் தான் என்னால தாங்க முடியல…” என்று சொன்னவளின் கண்கள் மீண்டும் உடைப்பெடுக்க ஆரம்பிக்க,

“ஷ்ஷ்…! இப்ப தானே சொன்னேன் அழக்கூடாதுனு? அதானே வரு உண்மை. அவங்க நாங்க இப்படித் தான் இருப்போம்னு நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லும் போதே சொன்னாங்க தானே? அதை மறந்துட்டு அவங்களைச் சும்மா வரச் சொல்லி போன் போட்டா அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க.

விட்டுடு! இனி கூப்பிடாதே! அவங்களா உன்னைப் பார்க்க வரணும்னு நினைக்கும் போது வரட்டும். அப்போதான் உனக்கும் சந்தோஷம். அவங்களுக்கும் சந்தோஷம். அதை விட்டு நாம வலுக்கட்டாயமா அவங்களைக் கூப்பிடும் போது அவங்களுக்கு நம்ம மேலே வெறுப்பு தான் வரும்.

இன்னும் அவங்களுக்கு நார்த் இண்டியனான என்னை நீ மேரேஜ் பண்ணிக்கிட்டதை ஏத்துக்க முடியலை. அதான் இப்படி இருக்காங்கனு நினைக்கிறேன். நாள் போகப் போக அவங்க கோபம் எல்லாம் போயிரும். அதுவரை பொறுமையா இரு…!” என்று பொறுமையாக அவளுக்கு எடுத்துச் சொன்னான்.

என்னதான் அவன் சமாதானம் செய்தாலும், அவளின் மனம் ஏனோ எதையும் ஏற்கும் மனநிலையில் இல்லை. அவளின் கர்ப்பம் தரித்த ஹார்மோன் மாற்றம் வேறு அவளின் மனதிற்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்துக் கொண்டிருக்க, ‘என்னை இப்படி விட்டுட்டாங்களே?’ என்ற எண்ணம் அவளின் மனதை விட்டு அகல மறுத்தது.

அடுத்து வந்த நாட்கள் அவளின் அந்த எண்ணத்திற்குச் சூழ்நிலை எண்ணை ஊற்றி வளர்த்ததே தவிரச் சிறிதும் குறைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.