பூவோ? புயலோ? காதல்! – 36

அத்தியாயம் – 36

“நான் ஜெயிலுக்கே போனாலும் பரவாயில்லைடா. ஏ குலத்தைக் கெடுக்க வந்த உன்னைய வேரோட அழிச்சாதேன்டா ஏ குலத்துக்கே பெருமை…” என்று ஆவேசமாகச் சொல்லிக் கொண்டே மகனையே வெட்ட அரிவாளை ஓங்கியவரின் கை அடுத்த நொடி அவருக்குப் பின்னால் இருந்து மடக்கி பிடிக்கப்பட்டது.

“அருவாளை கீழே போடுங்க வேங்கையன்…” என்று சொன்ன குரலை கேட்டுப் பின்னால் திரும்பி பார்த்தார் வேங்கையன்.

அவரின் பெரிய மகனை கைது செய்த இன்ஸ்பெக்டர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து நொடியில் அவரின் முகம் அதிர்ச்சிக்கு தாவியது.

“நீங்களே நேரடியா பார்த்தீங்களா இன்ஸ்பெக்டர்? ஏ அய்யா மட்டும் இல்லை. ஏ சொந்தக்காரவுக கூட என்னைய வெட்டி போடுவோம்னு பேசியதை கேட்டீங்களா? உங்களுக்குச் சாட்சியை நான் நேராவே கொடுத்துட்டேன் இன்ஸ்பெக்டர்…” என்று இளஞ்சித்திரன் சொல்ல,

“இந்தச் சாட்சி போதும் இளஞ்சித்திரன். நீங்க உங்க கம்ளைண்ட்ல எழுதி கொடுத்தது எல்லாம் உண்மைன்னு கண் கூடா பார்த்துட்டோம். நான் கூட என்னடா கம்ளைண்ட்ல ஒரு ஊர்ல பாதிப் பேரையே எழுதி கொடுத்திருக்கீங்களேனு நினைச்சேன். ஆனா இப்போ அவங்க வாயாலேயே நாங்களே உன்னை வெட்டி போடுவோம்னு திமிரா சொல்றாங்க. இனி மேற்கொண்டு ஆக வேண்டியதை நான் பார்த்துக்கிறேன் இளஞ்சித்திரன்…” என்றார் இன்ஸ்பெக்டர்.

போலீஸ் அங்கே வந்ததை எதிர்பார்த்திராத அனைவரும் அதிர்ந்து நின்றிருந்தனர்.

தான் ஜெயிலுக்குச் சென்றாலும் பரவாயில்லை, தனக்குச் சாதி தான் முக்கியம் என்று மகன் கம்ளைண்ட் கொடுத்திருக்கிறேன் என்று சொன்ன பிறகும் ஆத்திரத்துடன் மகனை வெட்ட போன வேங்கையனின் கையில் இருந்த அரிவாள் இப்போது ஒரு கான்ஸ்டபிளிடம் இருந்தது.

“என்னடா போலீசை கூட்டிட்டு வந்து பூச்சாண்டி காட்டுறீயா?” தன் கையில் இருந்து அரிவாளை பறித்த ஆத்திரத்தில் கத்தினார் வேங்கையன்.

“பூச்சாண்டி எல்லாம் இல்லைங்க அய்யா. நிஜத்தையே காட்டுறேன். பெங்களூருல இருந்து இங்கே வந்து இப்படிச் சாதி விட்டு சாதி காதல் கல்யாணம் கட்டிக்கிட்டதுக்காக எங்களைக் கொல்ல நினைக்கிறாங்கனு பிராது கொடுத்தா போலீஸ் என்ன அப்படியேவா பிராதை ஏத்துக்கும்? ஆதாரம் கேட்டாங்க. அதான் நான் ஊருக்குள்ள போறேன். அங்கன என்ன நடக்குதுன்னு நீங்களே வந்து பாருங்கனு போலீஸையும் கூடவே கூட்டிட்டு வந்தேன். இங்கன நடந்ததையும், எல்லாரும் பேசியதையும், நீங்க வெட்ட வந்ததையும் போலீஸ் பார்த்தது மட்டுமில்ல வீடியோவே எடுத்திருச்சு…” என்று இன்னொரு இடத்தில் இருந்து அங்கே நடப்பதை எல்லாம் மப்டியில் இருந்த ஒரு கான்ஸ்டபிள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததைச் சுட்டிக் காட்டினான்.

அதில் இன்னும் ஆத்திரமாக மகனை முறைத்துப் பார்த்தார் வேங்கையன். அவன் இந்தளவுக்கு இறங்கி வேலை செய்வான் என்று அவர் நினைக்கவே இல்லை.

அதனால் ‘வெட்டி போட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருப்போம்’ என்று நினைத்து வந்தவரின் கை இப்போது போலீஸின் பிடியில் மாட்டிக் கொண்டிருக்க, செய்வதறியாது முறைக்க மட்டுமே அவரால் முடிந்தது.

“இங்கே இளஞ்சித்திரனை வெட்டிப் போட்டுருவோம்னு சொன்னவங்க பேரல்லாம் கம்ளைண்ட்ல இருக்கு. இப்போ நாங்க எடுத்த வீடியோவிலும் நீங்க எல்லாம் என்ன பேசினீங்கனு இருக்கு. இதுக்கு மேலயும் நீங்க ஜெயிலுக்குப் போகணும்னு ஆசையா இருந்தா இங்கயே இருங்க…” என்று இன்ஸ்பெக்டர் அங்கிருந்தவர்களைப் பார்த்து சொன்னார்.

இவ்வளவு நடந்து போலீஸ் வந்த பிறகும் இளஞ்சித்திரனின் அங்காளி, பங்காளிகள் நின்று கொண்டிருப்பார்களா என்ன?

“ஓ குடும்பப் பிரச்சனையில் நாங்க ஏன் ஜெயிலுக்குப் போகணும் வேங்கையா?” என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொருவராக அங்கிருந்து கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

அவர்களோடு சென்று கொண்டே, சங்கரும், சுதாகரும் ‘வெற்றிடா!’ என்பது போல் ரகசியமாக நண்பனுக்குக் கட்டை விரலை தூக்கிக் காட்டி விட்டுச் சென்றனர்.

தன் முதுகிற்குப் பின்னால் சென்று கொண்டிருந்த உறவினர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு கோபத்துடன் மகனின் புறம் திரும்பிய வேங்கையன் “நான் ஜெயிலுக்குப் போனாலும் பரவால்லடா. தன்னோட குல பெருமையைக் காக்க வேங்கையன் சொந்த மகனையே வெட்டிட்டான்னு ஏ சாதி சனத்துக்கிட்ட எனக்குப் பெருமைதான்டா கிடைக்கும். உன்னைய உசுரோட விட்டுப் போட்டா தேன் ஊரு சனமே என்னைய கேவலமா பார்க்கும். அந்தக் கேவலத்தை வர விட மாட்டேன்டா…” என்று ஆவேசமாகக் கத்திய வேங்கையன், கான்ஸ்டபிள் கையில் இருந்த அரிவாளை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து மகனை வெட்ட வந்தார்.

நொடியில் அவரின் ஆவேசத்தைக் கண்டு காவல்துறையினர் அவரைப் பிடிக்க வர, “எய்யா…” என்று அதிர்ச்சியில் கயற்கண்ணி கத்த, “மாப்ள… ” என்று அவளின் பெற்றவர்கள் அதிர்ந்து போகத் தந்தையின் கோபம் எப்படிப்பட்டது என்று நன்றாகவே அறிந்திருந்த இளஞ்சித்திரன் பேசிக் கொண்டிருந்தாலும் அவரிடம் கூடுதல் கவனத்துடனேயே இருந்தான்.

அதனால் அவர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தவன் போல் நொடியில் இளஞ்சித்திரன் அவரின் கையை லாவகமாகப் பிடித்துத் தடுத்திருந்தான்.

அடுத்து அவரின் மணிக்கட்டில் ஒரு அடி போட்டான். அடுத்த நிமிடம் அந்த அரிவாள் அவனின் கைக்கு மாறியிருந்தது.

“என்ன எந்த நேரமும் நான் வெட்டு வாங்கிட்டே இருப்பேன்னு நினைச்சீங்களா? இப்போ நான் எல்லாத்துக்கும் தயாராத்தேன் வந்திருக்கேன். இந்த அருவா நான் வெட்டினாலும் வெட்டும் தானே? நான் வெட்டட்டுமா?” என்று கேட்டுக் கொண்டே அரிவாளை தந்தையை நோக்கி ஓங்கினான்.

“யோவ்! என்னய்யா நீ?” என்று பதறி வேகமாகக் கயற்கண்ணி கணவனைத் தடுக்க,

“சின்னவனே…” என்று அலறிக்கொண்டு கணவனுக்கும், மகனுக்கும் நடுவில் வந்து நின்றார் ருக்மணி.

ஓங்கிய அரிவாளுடன் நின்ற இளஞ்சித்திரன் அன்னையைக் கூர்மையாகப் பார்த்து, “நீ கூட ஓ மவன் அவனுக்குப் புடிச்ச மாதிரி வாழ்க்கை வாழ்ந்துட்டு போகட்டுமேனு நினைக்கலையேமா…” என்று கேட்டவன்,

“நீயும் இவங்களை மாதிரியே சாதியை பிடிச்சுக்கிட்டு தொங்கு…” என்று ஆத்திரமாகச் சொன்னான்.

தன்னைத் தந்தை வெட்ட வந்த போது பேசாமல் இருந்த அன்னை, அவரைத் தான் வெட்ட ஓங்கவும் தடுக்க வந்தவரை கண்டு வெறுத்துப் போனான்.

“இளஞ்சித்திரன் நாங்க எதுக்கு இருக்கோம்? அருவாளை கீழே போடுங்க…” என்று இன்ஸ்பெக்டர் அவனை அதட்டினார்.

“சாரி இன்ஸ்பெக்டர்…” என்ற இளஞ்சித்திரன் அரிவாளை தூக்கிப் போட்டான்.

இப்போது போலீசாரின் வலுவான பிடியில் அகப்பட்டுத் தன்னை வெட்ட வந்த மகனை அதிர்ந்த முகத்துடன் பார்த்த வேங்கையனின் முகத்தைப் பார்த்தவன் “நான் வெறுமனே அருவாளை ஓங்கினதுக்கே உங்க கண்ணுல மரணப் பயம் வந்துருச்சுங்க அய்யா. ஆனா நீங்க என்னைய சாவின் விளிம்பு வரைக்கும் கூட்டிட்டு போய்ட்டீக. அது மட்டுமா? ஏ பொஞ்சாதி வயித்துல இருந்த ஏ புள்ளயையும் உங்க மவன் எட்டி உதைச்சு அழிச்சுப்புட்டான்.

இத்தனை நடந்த பிறகும் உங்களை எல்லாம் சும்மா நிக்க வைச்சுக் கேள்வி தேன் கேட்டுக்கிட்டு இருக்கேன். ஏன்னா உங்களை ஏ அய்யாவாச்சே, அவனை ஏ அண்ணனாச்சேனு நினைச்சேன். ஆனா நீங்க என்னைய கொஞ்சம் கூட உங்க மவனாகவும், அவன் என்னைய கூடப்பிறந்த தம்பியாவும் நினைக்கலை. அப்படி இருக்கும் போது நான் மட்டும் ஏன் உங்களுக்காக இனி பாக்கணும்?

ஏற்கனவே சின்ன வயசில் இருந்து நீங்க என்ன அக்கிரமம் செஞ்சாலும் வேடிக்கை பாத்துட்டு அமைதியா போய்க்கிட்டு இருந்துட்டேன். அதுக்குத் தண்டனையா தேன் ஏ புள்ள என்ன விட்டு போயிருச்சு போல. ஆனா இனியும் நான் முன்ன போல அமைதியா இருக்கத் தயாராயில்லை. இனி நீங்க சின்னத் தப்புப் பண்ணனினா கூட அதுக்குத் தண்டனை உங்களைத் தேடி வரும்.

அதோட ஆரம்பம் தேன் வரம்பண்ணே ஜெயிலுக்குப் போனது. இப்போ என்னைய வெட்ட வந்ததுக்காக உங்க மேலேயும் பிராது கொடுக்கிறேன். அதுவுமில்லாம எனக்கு நீங்க புத்திர சோகத்தைக் காட்டிப்புட்டிக அய்யா. இனி நீங்க புள்ள இருந்தும் இல்லாமல் இருக்கும் இந்தப் புத்திர சோகம் எப்படி இருக்கும்னு அனுபவிச்சு பாருங்க…” என்றான்.

“முன்னாடி வரைக்கும் எனக்குனு ஒரு குடும்பம் இருந்தது. ஆனா எப்போ என்னைய உங்க வீட்டுப் புள்ளயா பார்க்காம குத்தி போட்டீகளோ அப்பவே உங்களுக்கும், எனக்கும் இருந்த உறவு அறுந்து போயிருச்சு. உங்களுக்கு நான் உறவே இல்லாதப்ப நான் எந்தச் சாதி பொண்ணைக் கல்யாணம் கட்டியிருந்தாலும் அதெல்லாம் உங்களுக்கு இனி பொருட்டே இல்லை தானே… அதுனால இனி ஏ விஷயத்துல குறுக்க வராம உங்க சோலியை மட்டும் பாருங்க…” என்ற இளஞ்சித்திரன் “ஏ அய்யா எத்தனை முறை என்னைய வெட்ட வந்தாருன்னு பார்த்தீங்க தானே இன்ஸ்பெக்டர்? இப்போ ஏ தற்காப்புக்கு தான் நான் அருவாளை ஓங்கினேன். ஏ அய்யா மேல இப்போ நடந்ததுக்குக் கம்ளைண்ட் எழுதி தர்றேன்…” என்றான்.

அவனின் கம்ளைண்டை ஏற்றுக் கொண்டவர் “உங்க மகன் இளஞ்சித்திரனை கொலை முயற்சி செய்ததற்காக உங்களை இப்போ நாங்க அரஸ்ட் பண்றோம் வேங்கையன்…” என்று வேங்கையனை கைது செய்த இன்ஸ்பெக்டர், “இனி நான் பார்த்துக்கிறேன் இளஞ்சித்திரன்…” என்று சொல்லி விட்டு, இளஞ்சித்திரன் வந்த காரில் வேங்கையனை அழைத்துப் போனார்.

“அய்யோ… என்னங்க…” என்று ருக்மணி அழுது கொண்டே பின்னால் போனார்.

சாந்தாமணியும் நடந்ததைப் பார்த்து அழுது கொண்டே மாமியாரின் பின் போனாள்.

வீட்டில் இரண்டு ஆண் மக்களும் ஜெயிலுக்குச் சென்றதை ஜீரணிக்க முடியாமல் கோபமாகத் திரும்பி வந்த ருக்மணி மகனை உறுத்து விழித்து, “நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா…” என்று சாபமிட்டார்.

சாந்தாமணி மட்டுமில்லாமல் இப்போது ருக்மணியும் சாபமிட, கலங்கி போன கயற்கண்ணி கணவனின் கையை நடுக்கத்துடன் பற்றினாள்.

மனைவியின் நடுக்கத்தை உணர்ந்தவன் அவளின் கையை இறுக பற்றிக் கொண்டு, அன்னையை அமைதியாகப் பார்த்தவன், “சாபம் கூட யார் கொடுக்கிறாங்கனு பொறுத்து தான் அது பலிக்கும் மா…” என்றான் அழுத்தமாக.

‘பிள்ளையைவே கொல்ல நினைத்த உங்க சாபம் என்னை ஒன்றும் செய்யாது’ என்று சொல்லாமல் சொல்லிக் காட்டினான்.

“அவரையும் போலீஸ் பிடிச்சுட்டு போயிருச்சு. இப்போ மாமாவையும் போலீஸ் பிடிச்சுட்டு போயிருச்சு. இவன் கிட்ட பேசி நேரத்தை வீணாக்காதீங்க அத்தை. வாங்க மாமாவை வெளியே கொண்டு வர பார்ப்போம்…” என்று இளஞ்சித்திரனை பார்த்துக் கோபமாக முறைத்துக் கொண்டே சொன்ன சாந்தாமணி, ருக்மணியை அங்கிருந்து அழைத்துப் போனாள்.

சென்றவர்களைப் பார்த்து அலட்சியமாக உதட்டை சுழித்துக் கொண்டான் இளஞ்சித்திரன்.

அவர்கள் சென்றதும் மனைவியின் புறம் திரும்பிய இளஞ்சித்திரன், “இனிமே அவுக நம்ம வழிக்கு வர மாட்டாங்க கண்ணு. நாம இனி நம்ம வாழ்க்கையை நிம்மதியா வாழலாம்…” என்றான்

கயற்கண்ணியின் முகத்தில் இருந்த கலக்கம் எல்லாம் கலைந்து சென்று நிம்மதியான மலர்ச்சி வந்து அமர்ந்து கொண்டது.