பூவோ? புயலோ? காதல்! – 31

அத்தியாயம் – 31

இளஞ்சித்திரன் அவசர சிகிச்சைப் பிரிவில் இரவே சிகிச்சை முடிந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தான்.

காலையில் தான் அவனைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி கிடைத்ததும் சக்கர நாற்காலியில் அங்கே வந்தாள் கயற்கண்ணி. அவளுடன் சித்ரா மட்டும் உடன் வந்தார்.

பல வகையான மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் இருந்த படுக்கையில் வயிற்றில் பெரிய கட்டும், தோளில் ஒரு கட்டுமாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான் இளஞ்சித்திரன்.

முகத்தில் ஆக்சிஜன் பொருத்தப்பட்டிருக்க, உணர்வே இல்லாமல் கிடந்த கணவனைக் கண்டதும் கண்ணீர் பெருகி கயற்கண்ணியின் கன்னம் நனைத்தது.

வார்த்தைக்கு வார்த்தை ‘கண்ணு’ என்றழைப்பவன் கண் திறவாமல் கிடந்தான்.

கணவனின் முகத்தருகே சக்கர நாற்காலியில் சென்று அமர்ந்த கயற்கண்ணி, நடுங்கும் கரங்களால் மெதுவாக அவனின் நெற்றியை தொட்டாள்.

‘உனக்கு ஒன்னும் ஆகாம பார்த்துக்குவேன் கண்ணுன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லி அலட்சியமா இருந்தியேய்யா… எனக்கு விழ இருந்த குத்தை எல்லாம் நீ வாங்கிக்கும் எண்ணத்தோடு தேன் அப்படிச் சொன்னியா?’ என்று மானசீகமாகக் கணவனிடம் கேட்டாள்.

‘ஆனா நீ இல்லாம போனா நானும் இல்லையேய்யா. அதை ஏன் நீ நினைக்காம போன?’ என்று ஆவேசமாக அவனிடம் கேள்வி கேட்க துடித்த உதடுகளைக் கடித்து அடக்கினாள்.

“சீக்கிரம் கண்ணை முழிச்சு என்னைய கண்ணுன்னு கூப்பிடுய்யா. உன்கிட்ட நான் பேசணும். நம்ம புள்ள… புள்ளயை பத்தி சொல்லணும்…” என்று வாய் விட்டு சொல்லி அழ ஆரம்பித்தாள்.

“கயலு, அழாதேமா…” என்று சித்ரா ஆறுதல் சொன்னார்.

“என்னால முடியலையேமா… புள்ள உண்டானது தெரிஞ்சதும் இவரு எம்புட்டு சந்தோஷப்பட்டாருனு தெரியுங்களாம்மா? இவரு முகத்துல அம்புட்டு சந்தோஷத்தை அன்னைக்குத்தேன் பார்த்தேன். ஆனா இப்போ… இப்போ… இவரு கண்ணு முழுச்சு வந்த பிறகு ஓ புள்ள இப்ப ஏ வயித்துல இல்லன்னு அவரு கிட்ட எப்படிச் சொல்லுவேன்?” என்றாள் கதறலாக.

அவளின் கதறல் சித்ராவிற்கும் கண்ணீரை வர வைத்தது.

“ம்ம்…” இருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருக்கும் போதே முனங்கல் சப்தம் கேட்க, வேகமாக இளஞ்சித்திரனை பார்த்தனர்.

இளஞ்சித்திரன் முகத்தைச் சுருக்கிக் கொண்டிருந்தான்.

“எய்யா…” கயற்கண்ணி மெதுவாகக் கணவனை அழைத்துப் பார்த்தாள்.

“ம்ம்…” என்று மீண்டும் முனங்கியவன், “க… கண்… கண்ணு…” என்று திணறலாக அழைத்தான்.

“இங்கன தேன் இருக்கேன்யா…” என்றவள் அவனின் குளுக்கோஸ் ஏறாத கையை மென்மையாக பற்றிக் கொண்டாள்.

“உ… உனக்கு…” என்று அவளுக்கு என்ன ஆனது என்று கேட்க முயன்றான்.

“எனக்கு என்னய்யா? நான் நல்லா தேன் இருக்கேன். நீ சீக்கிரம் எழுந்து வந்துருய்யா. அதுதேன் எனக்கு வேணும்…” கதறலாக வர துடித்த அழுகையை அடக்கி கொண்டு சொன்னாள்.

அவளின் பதிலை கேட்டு அப்படியே அமைதியாகி போனான் இளஞ்சித்திரன்.

அதன் பிறகு எதுவும் கேட்கவில்லை.

மயக்கத்தில் இருந்து மீண்டவன், உறக்கத்திற்குச் சென்றான்.

செவிலி வந்து அவனைப் பரிசோதிக்க ஆரம்பிக்க, கயற்கண்ணி மீண்டும் அவள் அனுமதிக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.

இளஞ்சித்திரனுக்கு உணர்வு வந்த பிறகு மருத்துவரை சந்தித்துப் பேசிவிட்டு வந்தான் ரித்விக்.

“டாக்டரு என்ன சொன்னாங்கண்ணே?” என்று விசாரித்தாள் கயற்கண்ணி.

“அபாயக் கட்டத்தை இளஞ்சித்திரன் தாண்டிட்டார். இப்போ கான்ஷியஸ் வந்த பிறகு இன்னும் முன்னேற்றம் தெரியுதாம். வயிற்றில் தான் கொஞ்சம் ஆழமான காயம். அது தையல் பிரிக்கக் கொஞ்சம் லேட் ஆகும். தோளில் இருக்குற காயம் கொஞ்சம் சீக்கிரம் சரியாகிடும்னு சொல்லியிருக்காங்க சிஸ்டர்…” என்றான்.

“உங்களைக் கொல்ல வந்தது யாரு கயல்?” என்று வேதவர்ணா மெதுவாக அவளிடம் விசாரித்தாள்.

“அவரோட அண்ணே…” என்றாள் கயற்கண்ணி.

“வாட்…!” என்று அந்த அறையில் இருந்த மூவருமே அதிர,

சாதி விட்டு சாதி தன்னைக் கல்யாணம் செய்ததால் அவர்கள் தங்களைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்ற உண்மையை அவள் சொல்ல கேட்டவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

“ஆணவக் கொலையா?” என்று அதிர்வுடன் கேட்டாள் வேதவர்ணா.

அவர்கள் செய்திகளாகப் பார்த்த விஷயம் இப்போது தங்கள் கண்முன்னே நிகழ்ந்ததை நம்பமுடியாமல் விழித்தனர்.

“அப்போ உங்களைத் திரும்பத் தேடி வருவாங்களா?” என்று சித்ரா கேட்டார்.

“நாங்க உயிரோடு இருக்குற வரை எங்களைத் துரத்திக்கிட்டுதேன் இருப்பாங்கமா…” என்று கயற்கண்ணி அழுகையுடன் சொன்னாள்.

“அப்போ இங்கே தேடி வரவும் சான்ஸ் இருக்கே?” என்று வேதா பயந்த குரலில் கேட்க,

“இல்ல வரு இங்கே வர முடியாது. ஏற்கெனவே இந்த வழக்கை விசாரிக்க, போலீஸ் வந்தாங்க. எனக்கு முழு விவரம் தெரியாததால் இவங்க இரண்டு பேரும் கண் முழிக்கும் வரை காத்திருக்கச் சொல்லியிருக்கேன். அதனால் ஒரு கான்ஸ்டபிள் இங்கே ஹாஸ்பிட்டலில் தான் இருக்கார். போலீஸ் இங்கே இருக்குற வரை இவங்களைக் கொல்ல வந்தவங்க வர சான்ஸ் இல்லை. போலீஸ் எப்போ வேணும்னாலும் இவங்களை விசாரிக்க வரலாம்..” என்றான் ரித்விக்.

அவன் அப்படிச் சொன்னதும், “அண்ணே எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?” என்று கேட்டாள் கயற்கண்ணி.

“என்ன சிஸ்டர் சொல்லுங்க…”

“எங்களைக் கொல்ல வந்தது யாருன்னு உங்க யாருக்கும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம்ணே. நானும் என்கிட்ட போலீஸ் விசாரிச்சா சொல்ல போறது இல்லை…” என்றாள் மெதுவாக.

“ஏன் சிஸ்டர்?”

“என்ன கயலு இது முட்டாள்தனமா இருக்கு?”

“ஏன் கயல் இப்படிச் சொல்றீங்க?” என்று மூவருமே கேள்விகளை வீசினர்.

“அவரும் இதே தேன் செய்வாருங்கமா. அவர் கண்ணு முழிச்சு போலீஸ்கிட்ட என்ன சொல்ல போறாரோ அதே தேன் நானும் சொல்ல போறேன்…” என்றாள் கயற்கண்ணி.

அவள் சொன்னதை மூவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழந்தையை அழித்து விட்டார்கள், கணவனும் சாவின் விளிம்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறான். அப்படியிருக்கக் கொல்ல வந்தவனை அவள் காட்டிக் கொடுப்பது அவர்களுக்குப் பாதுகாப்பு என்று மூவரும் எடுத்து சொல்லியும் ஒரே பிடிவாதமாக இருந்தாள் கயற்கண்ணி.

அதே போல் அவள் சொன்னதையே தான் மீண்டும் கண்விழித்துப் போலீஸ் இளஞ்சித்திரனிடம் விசாரணை செய்த போதும் அவனும் சொன்னான்.

தங்களைக் கொல்ல வந்ததே யார் என்று தெரியாது. முகமூடி போட்டிருந்ததால் யாரென்று தெரியவில்லை. எங்களுக்கு விரோதிகள் யாரும் இல்லை என்று இளஞ்சித்திரன் சொல்ல, அப்போ யார் இவர்களைத் தாக்க வந்தது என்று தெரியாமல் மேலும் விசாரணையை வேறு கோணத்தில் நடத்த காவல்துறையினர் முடிவு செய்தனர்.

ஆனால் முக்கியமாக இளஞ்சித்திரன் அவனின் சார்பாக எந்தக் கம்ளைண்டும் கொடுக்க மறுத்துவிட்டான். சம்பந்தப்பட்டவனே எந்தக் கம்ளைண்டும் கொடுக்காததால் அவ்வழக்கை விசாரிக்க வந்த போலீஸாரும் அவனைக் கடுமையாகத் திட்டிவிட்டு சென்றிருந்தனர்.

இளஞ்சித்திரன், கயற்கண்ணி இருவரையும் வினோதமாகப் பார்த்தனர் ரித்விக் குடும்பத்தினர்.

ஆனால் இருவரின் முடிவில் இருந்தும் சிறிதும் மாற்றம் இல்லை.

இரண்டாவது நாள் நன்றாகத் தெளிவாகவே இருந்தான் இளஞ்சித்திரன். காவல்துறையினர் வந்து சென்ற பிறகு மீண்டும் அன்று தான் கயற்கண்ணியை நன்றாகக் கண்விழித்துப் பார்த்தான்.

கயற்கண்ணி மெதுவாக நடக்க ஆரம்பித்திருந்தாள். அவனின் படுக்கையின் அருகில் ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்திருந்த மனைவியின் முகத்தைப் படுத்த படியே அமைதியாகப் பார்த்தான்.

அவனுக்கு இன்னும் குழந்தையைப் பற்றிய விவரம் சொல்லப்படவில்லை.

இரண்டு நாட்களும் மயக்கத்தில் தான் அவனின் பெரும்பான்மையான நேரங்கள் சென்றதால் மனைவியும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டது அவனின் கருத்தில் படாமல் போனது.

தனி அறையில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தாலும், அவனுக்கு உணர்வு வரும் நேரமெல்லாம் அவளை மெல்ல இங்கே அழைத்து வந்து காட்டிக் கொண்டிருந்தனர்.

இன்று சற்று தெளிவாக இருந்த கணவனை லேசாகக் கண்கள் கலங்க பார்த்தாள் கயற்கண்ணி.

“இங்கன வா கண்ணு…” என்று மென்மையாகத் தன் படுக்கையில் வந்து அமர சொல்லி அழைத்தான் இளஞ்சித்திரன்.

அவள் இருக்கையில் இருந்து எழுந்து படுக்கையில் அமர, அவளின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தான்.

இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. கண்கள் மட்டும் ஒன்றோடு ஒன்று கலந்து நின்றன.

‘ஏன்யா இப்படிச் செய்த?’ என்று கணவனைக் கேள்வி கேட்க கயற்கண்ணியின் நாவு துடித்தாலும் ஒன்றும் கேட்காமல் அமைதியாகவே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இளஞ்சித்திரனின் பார்வை மனைவியின் தலையில் இருந்து படுக்கையில் தெரிந்த கால் வரை ஆராய்ச்சியாக ஊர்ந்து சென்றது.

பின் மெதுவாகக் குளுக்கோஸ் ஏறாத கையை நகர்த்தி மனைவியின் அருகே கொண்டு வந்தவன், அவளின் வயிற்றின் மீது கையை வைத்தான்.

கையை வைத்த அடுத்த நொடி அவனின் கண்களில் இருந்து சரசரவென்று கண்ணீர் இறங்கி வந்தது.

மனைவியிடம் எதுவுமே கேட்கவில்லை அவன்!

மனைவியின் வயிற்றில் கையை ஊர்ந்து செல்ல விட்டவன் முகம் கசங்கி, உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. கண்களிலும் நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.

‘புரிந்து கொண்டான். அவன் புரிந்து கொண்டான்…’ என்று உணர்ந்து கொண்ட கயற்கண்ணி “எய்யா…” என்று விக்கித்து அழைத்து உடைந்து அழ ஆரம்பித்தாள்.

‘அம்மாவை காப்பாத்த என் கூடச் சேர்ந்து வேண்டிக்கோனு கேட்டேனே தங்கம். ஆனா அம்மாக்குள்ள இருந்த உன்னைய காப்பாத்தணும்னு இந்த அப்பன் நினைக்காம போய்ட்டேனே… அதனால தேன் இந்த அப்பன் வேணாம்னு போய்ட்டியா தங்கம்?’ என்று குழந்தையிடம் அன்று போல் மானசீகமாகக் கேட்டான் இளஞ்சித்திரன்.

‘அம்மாக்குள்ள நீ பத்திரமா இருப்ப, அதுனால ஓ அம்மாவை மட்டும் காப்பாத்தினா போதும்னு இந்த அப்பன் நினைச்சுப்புட்டேனே தங்கம். நீ எப்படி என்னைய நினைக்காம போகலாம்னு தேன் இந்த அப்பன் உனக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டியா தங்கம்?’ என்று குழந்தையிடம் நியாயம் கேட்பவன் போல உடைந்து போய்க் கேட்டவன் கண்கள் தொடர்ந்து கண்ணீர் சிந்தின.

‘உன்னைய காப்பாத்தாம போன இந்த அப்பனை மன்னிச்சுடு தங்கம்…’ என்று குழந்தையிடம் மனதிற்குள் மன்னிப்பு கேட்டவன், “என்னைய மன்னிச்சுடு கண்ணு. நம்ம புள்ளயை காப்பாத்த முடியாத பாவி ஆகிட்டேன் நான்…” என்று உடைந்த குரலில் மனைவியிடம் மன்னிப்பு கேட்டான்.

“யோவ்! என்னய்யா இப்படிப் பேசிட்டு…” என்றவள் மேலும் ஒன்றும் சொல்ல முடியாமல் அழுதாள்.

தனக்காக உயிரையே கொடுக்கத் தயாரானவன் அவன். தன் மேல் ஒரு அடி கூட விழ கூடாது என்று போராடினானே! அவன் கத்தி குத்து வாங்கி அசந்த நேரம் தான் இமயவரம்பன் அவளைத் தாக்கினான்.

அவனால் முடிந்த வரை அவளைக் காக்க தானே அவன் போராடினான். அவ்வளவு போராடியும் குழந்தை இல்லாமல் போனதில் அவன் மேல் எப்படிக் குறை சொல்ல முடியும்?

ஆனால் அப்படியும் அவன் தன்னையே குறை சொல்லிக் கொள்வதை அவளால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை.

“நீ என்ன பண்ணுவய்யா? நீ ஒரு தப்பும் பண்ணலையா. எல்லாம் நம்ம விதி! அவ்வளவு தான்…!” என்றாள் விரக்தியாக.

“விதி இல்லை கண்ணு, சதி…!” என்று சொன்னவனின் குரல் என்றைக்கும் இல்லாமல் கடுமையாக ஒலித்தது.

கணவனின் குரலில் இருந்த பேதத்தைக் கண்டவள், “ய்யா…?” என்று புரியாமல் கேள்வியாக அழைத்தாள்.

“என் மேல தேன் தப்பு கண்ணு. நாந்தேன் தப்புப் பண்ணிட்டேன். என் தப்புனால தேன் என் புள்ள கருவா இருக்கும் போதே அதோட உசுரு போயிருச்சு. என் தப்பு தேன். என் தப்பே தான்…” என்றான் ஆவேசமாக.

“என்னய்யா பேசுற? நீ எதுவும் செய்யலைய்யா.. உன்னையவே நீ ஏன் குறை சொல்லிக்கிற?” முற்றிலும் மாறி போன கணவனின் குரல் அவளுக்குள் பயத்தை விதைக்க அவனைத் தேற்ற முயன்றாள்.

“அதே தான் கண்ணு. நான் எதுவுமே செய்யலை. அது தேன் நான் செய்த தப்பு. இனியாவது செய்றேன் கண்ணு. செய்றேன்… செய்தே தீருவேன்…” என்று கண்கள் பளபளக்க தீவிரமாகக் கூறினான்.

“என்னய்யா செய்யப் போற?” பயத்துடன் கேட்டாள்.

“சொல்றதை விடச் செய்யும் போது தெரிஞ்சுக்கோ கண்ணு. ஆனா எப்பயும் போல என் மேல இருக்குற நம்பிக்கையை மட்டும் விட்டுடாதே…” என்று மனைவியின் கண்களை ஆழ்ந்து பார்த்துச் சொன்னான்.

அவனின் பேச்சும், தீவிரமும் அவளைத் திகைத்துப் போக வைத்தது.

“நீ ஏன் கண்ணு ஏ அண்ணனை போலீசில் காட்டிக் கொடுக்கல?” என்று கேட்டான்.

“நான் எப்படிய்யா காட்டிக் கொடுக்க முடியும்? என்ன இருந்தாலும் அவரு ஓ கூடப் பிறந்தவர் ஆச்சே… அதுமட்டுமில்லாம நீ எப்படியும் ஓ அண்ணனை காட்டிக் கொடுக்க மாட்டேன்னு ஏ உள்மனசு சொல்லிச்சு. போலீஸ் கிட்ட நீ சொன்னதையே நானும் சொல்லணும்ல? அதனால தேன் நீ சொன்னதையே நானும் சொன்னேன்…” என்றாள்

அவளின் பதிலில் இளஞ்சித்திரனின் கண்களில் காதல் பூ பூத்தது. சில முறை அவனே உணர்ந்திருக்கின்றான். அவளும், அவனும் சிந்திப்பதில் ஓர் ஒற்றுமை இருப்பதை. இப்பொழுதும் தான் என்ன நினைப்போம் என்று அவள் உணர்ந்து இருக்கிறாள் என்பதில் மகிழ்வு உண்டானது.

ஆனால் இது மகிழ்ந்து கிடக்கும் நேரமல்ல என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் மனைவியின் வயிற்றில் அழுத்தமாகத் தன் கையை வைத்தான்.

‘இந்த அப்பனை மன்னிச்சிரு தங்கம்’ என்று வயிற்றில் கரைந்து போன குழந்தையிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டான்.

பின் தன் மனைவியின் கையை அழுத்திப் பிடித்து “இப்ப சொல்றேன் கேட்டுக்கோ கண்ணு. இனி உனக்கு மட்டுமில்ல, எனக்கும் உறுதியா எதுவும் ஆக விடமாட்டேன். அதேபோல இனி நமக்குன்னு ஒரு பிள்ளை வந்தால் அதுக்கும் எதுவும் ஆக விடமாட்டேன். நம்ம பரம்பரையையே தழைக்கச் செய்து வாழவைப்பேன்…” என்று உறுதிமொழி போல் மனைவியிடம் சொன்னவன் கண்களில் ஒரு முடிவை எடுத்துவிட்ட உறுதி தெரிய, அதை அவனின் கண்கள் அப்பட்டமாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

“என்னைய்யா… என்னென்னமோ பேசுற?” என்று கயற்கண்ணி பயத்துடன் கேட்க,

“இனிமே பேச்சே இல்ல கண்ணு. செயல்தான்! இதுக்கு மேல என்னைய ஒன்னும் கேட்காதே…!” என்றான்.

அதன் பிறகு அவன் மனைவியிடம் அதுபற்றி எதுவும் பேசவில்லை.

இளஞ்சித்திரனை தனியாகச் சந்திக்க நேர்ந்த போது “நீங்க தவறா நினைக்கலைனா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா இளஞ்சித்திரன்?” என்று கேட்டான் ரித்விக்.

“என்ன ரித்விக் கேளுங்க? அதுக்கு முன்னாடி நீங்க எங்க உயிரை காப்பாத்தினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ரித்விக். காரில் வரும் போது நீங்க துரிதமா செயல்பட்டது என் கருத்தில் பதிந்து போனது. நீங்க அப்படிச் செயல்பட்டதால் தான் நானும், என் கண்ணுவும் இப்போ உயிரோடு இருக்கோம்…” என்று நன்றி தெரிவித்தான்.

“அப்படிப் பார்த்தால் எங்க கட்டாய அன்பு அழைத்தல் மூலமா தான் கோவிலுக்கு வந்து ஆபத்தில் மாட்டிக்கிட்டீங்க. நீங்க உங்க வீட்டில் இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காதுனு நானே கில்டியா ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் இளஞ்சித்திரன். நீங்க என்னென்னா நன்றி சொல்லிட்டு இருக்கீங்க…” என்று வருத்தத்துடன் சொன்னான் ரித்விக்.

“இல்ல… அப்படி இல்லை ரித்விக். என்னைக்கா இருந்தாலும் எங்க வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும். இப்போ எங்க கூட நீங்க இருந்ததால்தான் என் கூட வந்தவங்ளை தடுக்கச் சண்டை போட்டீங்க. எங்களைக் காப்பாற்றி உடனே ஹாஸ்பிட்டலில் சேர்த்தீங்க. ஒருவேளை நாங்க தனியா வெளியே போகும் போது இப்படி நடந்திருந்தால் காப்பாற்றி ஹாஸ்பிட்டலில் சேர்க்க கூட ஆள் இல்லாம, நாங்களும் கூட இல்லாமல் போயிருக்கலாம். அப்படி எதுவும் எங்களுக்கு நடக்காமல் எங்களைக் காப்பாற்ற தான் கடவுள் உங்களை அனுப்பி வச்சதா நினைக்கிறேன்…” என்றான் இளஞ்சித்திரன்.

‘இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் சரியான நேரத்தில் உதவி அவர்களுக்குள் இன்னும் நட்பு பலப்படத்தான் இத்தனை இன்னல்கள் தங்களைத் தீண்டி சென்றனவோ? கடவுளின் விருப்பமும் இது தானோ?’ என்று ரித்விக் மனதில் கேள்விகள் ஓடியது.

“நீங்க எதுவும் ஃபீல் பண்ணாதீங்க ரித்விக். என்கிட்ட என்னமோ கேட்கணும்னு நினைச்சதை கேளுங்க…” என்றான் இளஞ்சித்திரன்.

“நீங்க ஏன் உங்க அண்ணனை பற்றிப் போலீசில் சொல்லலை இளஞ்சித்திரன்? சொல்லியிருந்தால் இனியும் இது போல் ஆபத்து உங்களுக்கு வராது இல்லையா?” என்று கேட்டான்.

“இந்த நேரம் எங்கள் காதல் விஷயத்தை, எங்க வீட்டு நிலைமையைப் பற்றிய முழு விபரமும் உங்க கிட்ட கண்ணு சொல்லியிருப்பாள்னு நினைக்கிறேன் ரித்விக்?” என்று இளஞ்சித்திரன் கேட்டான்.

அதற்கு ரித்விக் ‘ஆமாம்’ என்று தலையை அசைக்க,

“என்னோட அண்ணனும், அப்பாவும் எப்படிப்பட்டவர்கள் என்று இப்போ உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். எங்க ஊரில் என்னோட அய்யாவுக்கும், அண்ணனுக்கும் செல்வாக்கு அதிகம். பக்கபலமும் அதிகம். இப்போ ஒருவருக்கு எந்த இடத்தில் பலம் அதிகமாக இருக்கிறதோ, அதே இடத்தில் பலம் குறைந்து ஒன்றும் இல்லாமல் போனால் என்ன ஆகும் ரித்விக்?” என்று கேட்டான் இளஞ்சித்திரன்.

“கஷ்டமாக இருக்கும், அவமானமாக இருக்கும், கீழே இறங்கிப் போய் விட்டோமே என்று தலைகுனிவாக இருக்கும். உடைந்து போவோம்…” என்று ரித்விக் காரணங்களைச் சொல்ல,

“யெஸ்! என் விஷயத்திலும் நீங்க இனி பார்க்கப் போறது அதையே தான் ரித்விக். இங்கே நான் கம்ளைண்ட் கொடுத்திருந்தால் இது எதுவுமே அவ்வளவு சுலபத்தில் நடக்காது ரித்விக். சொந்த ஊருக்குள்ள எப்படித் தலை நிமிர்ந்து நின்னு சாதி வெறி பிடிச்சு ஆடி எத்தனை பேர் உயிரை அலட்சியமாகக் கொன்னாங்களோ அதே இடத்தில், அவங்களால தன் குடும்பத்தில் ஒருத்தரை பலி கொடுத்து தவிக்கும் மனிதர்களின் முன் அவங்க கீழ் இறக்கி வேதனை பட்டு நிக்கணும் ரித்விக்.

அவங்க தெனாவெட்டா தலை நிமிர்ந்து சுத்தின இடத்திலேயே தலை குனிந்து நிற்கும் அளவுக்கு அவங்க பலத்தை ஒன்றுமில்லாமல் போகச் செய்வது தான் அவங்க சாதி வெறிக்கு பலியான என் குழந்தைக்குக் கிடைத்த வெற்றி ரித்விக்…” என்று கண்கள் பளபளக்க, குரலில் செய்து முடித்துவிடும் வேகத்துடன் கூறினான் இளஞ்சித்திரன்.