பூவோ? புயலோ? காதல்! – 30

அத்தியாயம் – 30

மறுநாள் ரித்விக், வேதவர்ணா, சித்ரா மூவரும் கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்திருந்தனர்.

அவர்களுடன் இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும் கோவிலுக்குக் கட்டாயம் வரவேண்டும் என்று அன்பு கட்டளையுடன் அழைப்பு விடுத்திருந்தனர்.

இப்போது இரு குடும்பத்திற்குள்ளும் நட்புணர்வு வேர் விட்டு நன்றாகத் தழைத்து வளர்ந்து கொண்டிருந்தது.

வளைகாப்பு முடிந்ததும் மனைவியை மட்டும் விட்டுவிட்டு குழந்தை பிறந்ததும் வருகின்றேன் என்று மகளுக்கு உத்தரவாதம் கொடுத்து விட்டு சந்திரசேகர் அன்று இரவே ஊருக்குக் கிளம்பியிருந்தார்.

அன்று விடுமுறை தினம் என்பதால் இளஞ்சித்திரனும், ரித்விக் குடும்பத்தார் கொடுத்த அன்பு கட்டளையை ஏற்றுக் கொண்டு, மனைவியுடன் கோவிலுக்குக் கிளம்பினான்.

குடியிருப்பு வளாகத்தின் கீழே இருந்த வண்டி நிறுத்தும் இடத்திற்கு வந்ததும், ரித்விக் காரை எடுக்க, வேதா கணவனின் அருகில் அமர்ந்து கொள்ள, சித்ரா பின்னால் அமர்ந்து கொண்டார்.

இளஞ்சித்திரன் மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல தன் இருசக்கர வாகனத்தை எடுத்த போது, “ஏன் தம்பி… கயலு எங்க கூடக் காரில் வரட்டுமே? இந்த நேரம் ரொம்ப ட்ராஃபிக்கா இருக்கும். புள்ளத்தாச்சி பொண்ணு எவ்வளவு நேரம் பைக்ல உட்கார்ந்து வர முடியும்? அதுவும் இப்போ மூணாம் மாசம் தான் நடந்துட்டு இருக்கு. இந்த நேரத்தில் அதிகமா பைக்கில் போகாம இருப்பது நல்லது தம்பி…” என்று இளஞ்சித்திரனிடம் சொன்னார் சித்ரா.

அவர் சொன்னதில் இருந்த நன்மை புரிய, “சரிங்கமா… உங்க கூடவே வரட்டும்…” என்ற இளஞ்சித்திரன், “போ கண்ணு…” என்று மனைவியை அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டுத் தான் மட்டும் இருசக்கர வாகனத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

இருசக்கர வாகனத்தில் இளஞ்சித்திரன் சென்று கொண்டிருக்கும் போதே ஒரு அலைபேசி அழைப்பு வர, நடுவில் வாகனத்தை நிறுத்தி பேச ஆரம்பித்ததில் காரில் சென்று கொண்டிருந்தவர்கள் அவனுக்கு முன்பே கோவிலை சென்றடைந்திருந்தனர்.

காரில் செல்லும் போதே கயற்கண்ணி, இளஞ்சித்திரன் பற்றிய விவரங்களை அனைத்தையும் விசாரித்திருந்தார் சித்ரா.

தங்களை அவர்கள் தேடிக் கொண்டிருப்பதை முழுதாகத் தவிர்த்து மேலோட்டமாக மட்டும் தங்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டாள் கயற்கண்ணி.

அவள் சொன்னதைக் கேட்டு சித்ரா அமைதியாகி விட, “என்னம்மா எங்களைத் தப்பா நினைக்கிறீங்களா?” என்று தயங்காமல் கேட்டிருந்தாள் கயற்கண்ணி.

“ச்சே ச்சே… இல்லமா கயல்… உங்க சூழ்நிலையையும் புரிஞ்சுக்க முடியுது. ஆனா நான் கொஞ்சம் பழைய மனுஷி தானே. அதான் சட்டுனு இதை எப்படி எடுத்துக்கன்னு தெரியலை. எங்க வீட்டிலும் காதலுக்கு ரொம்பக் கட்டுப்பாடு தான். ஆனா நாங்க எங்க மகள் ஆசைக்கு வேறு வழியில்லாமல் ஒத்துக்கிட்டோம். உங்க பக்கம் அது நடக்காம போயிருச்சு. அவ்வளவு தான் வித்தியாசம்…” என்றார் சித்ரா. அதையும் தாண்டிய வித்தியாசம் இருப்பதை அறியாதவராக!

“கவலைப்படாதீங்க கயல். உங்க வீட்டிலும் மனசு மாறி உங்க கல்யாணத்தைச் சீக்கிரம் ஏத்துக்குவாங்க…” என்று முன்னால் அமர்ந்திருந்த வேதவர்ணா கயற்கண்ணிக்குச் சமாதானம் சொன்னாள்.

அவளின் சமாதானத்திற்கு இதழ் பிரியாமல் சிரித்து மட்டும் வைத்தாள் கயற்கண்ணி.

அவர்களுக்குத் தெரியாது தான். ஆனால் அவளுக்குத் தான் தன் கணவனின் வீட்டாரை பற்றித் தெரியுமே!

கோவிலின் முன் காரை நிறுத்திய ரித்விக். “டிராஃபிக் வர்றதுக்குள்ள எல்லாரும் இறங்கி கோவிலுக்குள்ள போங்க வரு. நான் போய்க் காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்…” என்றான்.

அவன் சொன்னதும் முதலில் இறங்கிய கயற்கண்ணி அங்கிருந்த ஒரு கடையின் முன் ஒதுங்கி நின்றாள்.

சித்ரா இறங்க போகும் நேரத்தில் திடீரெனக் கயற்கண்ணி அலறும் சத்தம் கேட்க, திடுக்கிட்டு அவள் இறங்கிய புறம் பார்த்தார்.

அங்கே…

கயற்கண்ணி கீழே இறங்கி நின்றதும் அங்கிருந்த ஒரு கடையின் வாசல் பக்கமாக ஒதுங்கி நின்று கணவன் வந்து விட்டானா என்று சாலையையே பார்த்தாள்.

சற்று அருகில் தான் வந்து கொண்டிருந்தான் இளஞ்சித்திரன். மனைவி தன்னைப் பார்த்ததைக் கண்டதும் வண்டியில் இருந்து ஒரு கையை எடுத்து, ஏதோ சைகை காட்டினான்.

அவன் சொல்ல வந்தது புரியாமல் ‘என்னய்யா?’ என்று இவளும் கையை ஆட்டிக் கேட்டாள்.

அவனோ இன்னும் வேகமாகக் கையை அசைத்தான். அவள் புரியாமல் முழிக்க, அதற்குள் மனைவியின் அருகே விரைந்து வந்த இளஞ்சித்திரன் வாகனத்தில் இருந்து துள்ளி குதித்து இறங்கி அவளின் கையைப் பிடித்து விருட்டென்று இழுத்தான்.

அடுத்த நொடி அவள் பயந்து அலறி கணவனின் முதுகிற்குப் பின்னால் சென்றிருக்க, மனைவியைப் பின்னால் இருந்து தாக்க வந்தவனைத் தடுத்து, தன் முன் அரிவாளை ஓங்கி கொண்டு வந்தவனை எட்டி உதைத்துக் கொண்டிருந்தான் இளஞ்சித்திரன். அவன் உதைத்த வேகத்தில் அரிவாள் தூர போய் விழுந்தது.

அங்கே நடந்ததைக் கண்ட ரித்விக் பதறி “நீங்க இரண்டு பேரும் கீழே இறங்காதீங்க…” என்று மனைவியையும், மாமியாரையும் எச்சரித்து விட்டு விரைந்து இளஞ்சித்திரனின் பக்கம் சென்றான்.

அதற்குள் நான்கு பேர் இளஞ்சித்திரனையும், கயற்கண்ணியையும் சூழ்ந்திருந்தனர்.

அவர்களில் ஒருவனைப் பிடித்து ரித்விக் கீழே தள்ள முயல, “ரித்விக் நீங்க கயலை கூட்டிட்டு இங்கே இருந்து கிளம்புங்க…” என்று தன் பின்னால் நின்றிருந்த மனைவியை ரித்விக்கின் புறம் அனுப்பி வைத்தான்.

“இல்லைய்யா… நான் உன்னைய விட்டு போக மாட்டேன்…” என்று கயல் அழ,

“போ கண்ணு…” என்று கத்திய இளஞ்சித்திரன் அவளைப் பிடித்துக் காரின் பக்கம் தள்ளினான்.

ஆனால் அவளைக் காரில் ஏற விடாமல் ஒருவன் தடுக்க, அந்த இடமே நொடியில் கலவரமானது.

நடந்த தகராறை பார்த்து சிலர் வேடிக்கை பார்க்கவும், அலறி ஓடவும் என்று இருந்தனர்.

“இளஞ்சித்திரன் நீங்களும் காரில் ஏறுங்க. இங்கிருந்து போயிடலாம்…” என்று ரித்விக் ஒரு பக்கம் கத்தினான்.

ஆனால் நான்கு பேரும் சுற்றி வளைத்துக் கொண்டதில் மூவராலும் காரின் பக்கம் நகரமுடியாமல் போனது.

நால்வரும் தங்கள் முகத்தைத் துணிவைத்துக் கட்டி மறைத்திருந்தனர். ஆனாலும் அவர்கள் யார் யார் என்று இளஞ்சித்திரனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

ஒருவனை ரித்விக் பிடித்துத் தடுக்க, இரண்டு பேரை இளஞ்சித்திரன் சமாளிக்க, ஒருவன் கயற்கண்ணியைத் தாக்க செல்ல என்று நிலைமை இருந்த நேரத்தில் எங்கிருந்தோ முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு வந்த இமயவரம்பன் கையில் கத்தியுடன் கயற்கண்ணியை நோக்கி வந்தான்.

அண்ணனை கண்டுவிட்ட இளஞ்சித்திரன், “கண்ணு தள்ளிப்போ…” என்று தன்னைப் பிடிக்க வந்த இருவரையும் ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு மனைவியிடம் ஓடியவன் அடுத்த நிமிடம் இமயவரம்பன் குத்திய கத்திக் குத்தை தன் வயிற்றில் வாங்கியிருந்தான்.

மனைவியைக் காப்பாற்ற தன் உயிரை கொடுக்கத் துணிந்திருந்தான்.

“எய்யா…” என்று கயற்கண்ணி அலறிக் கத்தினாள்.

கணவனின் வயிற்றில் இருந்து குபுகுபுவென்று ரத்தம் பொங்கி வந்ததைப் பார்த்து “அய்யோ…!” என்று கத்திய படி அவள் கணவனைத் தாங்க வர, தம்பியை தான் குத்திவிட்டதை உணர்ந்து ஒரு நொடி கண்களில் அதிர்ச்சியைக் காட்டிய இமயவரம்பன் அடுத்த நொடியே அதை உதறி தள்ளி, மீண்டும் கயற்கண்ணியைக் குத்த வந்தான்.

வயிற்றில் கத்தி குத்திய வலி உயிர் வதையைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்திலும் இளஞ்சித்திரனின் கவனம் மனைவியின் மீது இருக்க, தன்னைத் தாண்டி மனைவியைக் குத்த வந்த அண்ணனை தடுக்க மீண்டும் குறுக்கே பாய்ந்தான்.

அதில் இந்த முறை அவனின் தோளில் கத்தி குத்து விழ அப்படியே மடங்கி அமர்ந்தான்.

“அய்யோ வேண்டாம்…” என்று கயற்கண்ணி கதற, இம்முறையும் அவளைக் குத்த முடியாத ஆத்திரத்தில் இன்னும் கொடூரமாகப் பார்த்த இமயவரம்பன் அவளின் வயிற்றில் ஓங்கி எத்தியிருந்தான்.

அவன் எத்திய வேகத்தில் தள்ளிப் போய் விழுந்த கயற்கண்ணி “ஆ…ஆ… அம்மா..மா…” என்று அலறிக் கொண்டு சுருண்டு விழுந்தாள்.

“க… கண்ணு..ணு…” கத்தி குத்து வாங்கியும் கதறாத இளஞ்சித்திரன் மனைவியின் அலறல் தாங்காமல் கதறினான்.

அனைத்தும் அடுத்தெடுத்து வேகமாகக் கணப்பொழுதில் நடந்தேறியிருந்தது.

அங்கிருந்த சிலர் நடந்ததை முழுமையாக உணர்ந்து சப்தம் கொடுக்க ஆரம்பிக்க, அடுத்த நிமிடம் இமயவரம்பனும், அவனுடன் வந்தவர்களும் ஒரு வாகனத்தில் ஏறி பறந்திருந்தனர்.

அவ்வளவு நேரம் ஒருவனின் பிடியில் மாட்டியிருந்த ரித்விக் அவனைக் கீழே தள்ளி விட்டு தப்பி ஓடவும் எழுந்து இளஞ்சித்திரன், கயற்கண்ணியின் அருகில் வந்தான்.

இளஞ்சித்திரன் இரண்டு இடத்தில் கத்தி குத்து வாங்கியதில் சாலையில் விழுந்து கிடைக்க, கயற்கண்ணி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு தரையில் கிடந்து அலறிக் கொண்டிருந்தாள்.

நிமிட நேரத்தில் துரிதகதியில் இத்தனையும் நடந்திருக்க, வேதா காரில் இருந்த படி விக்கித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கயற்கண்ணி தரையில் கிடந்து துடிப்பதை பார்த்துச் சித்ரா காரில் இருந்து இறங்கி ஓடி வந்தார்.

வேதாவும் இறங்க போக, “நீ வராதே வரு…” என்று மனைவியின் பக்கம் கத்திய ரித்விக், “அத்தை நீங்க கயலை பாருங்க…” என்றவன் இளஞ்சித்திரன் பக்கம் சென்று “ஹெல்ப்…” என்று சுற்றி உள்ளவர்களைப் பார்த்துக் கத்தினான்.

அதில் இரண்டு, மூன்று பேர் உதவ வந்து இளஞ்சித்திரனை காரில் ஏற்றினர்.

ரத்தம் வெளியேறி கண்கள் சொருகி கொண்டிருந்த நிலையிலும் இளஞ்சித்திரனின் வாய் “க…கண்ணு… க…கண்ணு…” என்று முனங்கி கொண்டிருந்தது.

அவனின் காயம் பட்ட இடத்தில் காரில் இருந்த துவாலையை எடுத்து கட்டி ரத்தம் மேலும் வெளியேறாமல் இருக்க முதலுதவி செய்தான் ரித்விக்.

அடுத்து கயற்கண்ணியையும் தூக்கி இளஞ்சித்திரன் அருகில் அமர வைத்தனர்.

காரில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது கடினம் என்று ரித்விக்கிற்குப் புரிந்தது. ஆனால் ஆம்புலன்ஸுக்கு சொல்லி, அது வந்து… அது வரை காத்திருந்து என்று நேரத்தைக் கடத்த விரும்பாத ரித்விக் துணிந்து செயலில் இறங்கினான்.

“க…கண்ணு..ணு…” இளஞ்சித்திரன் முனங்க, “எய்யா..யா…” என்று கயற்கண்ணி கதற, சித்ரா அவளை மடித்தாங்கி கொண்டார்.

இளஞ்சித்திரனின் கண்கள் மயக்கத்தில் சொருகியது. ஆனால் தலையைத் தலையை உலுக்கி மயக்க நிலையை உதறி தள்ள முயன்றான்.

‘முழிச்சுக்கோ சித்திரா. ஓ கண்ணு உன்னைய நம்பித்தேன் வந்திருக்கா. அவ அழுகுறா. அவளுக்கு என்னமோ ஆச்சு. அவளுக்கு எதுவும் ஆக விடாதே சித்திரா. முழிச்சுக்கோ…!’ என்று மனம் கூக்குரலிட, மயக்கம் தன்னை அண்ட விடாமல் பிடிவாதமாகக் கண்களைத் திறந்து பார்த்தான்.

அவனின் கை மனைவியைத் தேடி துழாவின. “க…கண்ணு…” உதட்டை மெல்ல அசைத்து முனங்கினான்.

“ஆ…அம்மா… அய்யோ… எய்யா…” என்று வலிக்காக அம்மாவையும், கணவனின் நிலையை நினைத்து அய்யோவும், கணவனை அழைக்க எய்யாவும், என்று மாறி மாறி சொல்லி அலறிக் கொண்டிருந்தாள் கயற்கண்ணி.

அவளின் வயிற்று வலி அவளுக்கு ஒன்றை அப்போதே உணர வைக்க, வயிற்று பிள்ளைக்காக அழுவாளா? இல்லை உயிருக்கு போராடும் கணவனுக்காக அழுவாளா?

எதற்கு அழ? புரியவில்லை அவளுக்கு!

ஒன்று அவளுக்குள் உருவாகியிருக்கும் உயிர். இன்னொன்று அவளுக்கு உயிர் தந்த உயிரான கணவன்.

இருவருமே அவளுக்கு உயிர் அல்லவா!

இரண்டு உயிர்களுமே இப்போது இருக்கும் நிலை நெஞ்சை அறுக்க யாருக்காக அழுவாள்?

மனைவி தன் அருகில் தான் அமர்ந்திருக்கிறாள் என்பதை உணர்ந்து மெதுவாகக் கையைத் துழாவி அவளின் தொடையில் வைத்தான் இளஞ்சித்திரன்.

சித்ராவின் மடியில் சாய்ந்திருந்தாள் கயற்கண்ணி. கணவனின் தொடுகையை உணர்ந்தாலும் அவளால் எழ முடியவில்லை.

அவளின் தொடையின் மீது வைத்த கையை அதன் பிறகு இளஞ்சித்திரன் அகற்றவே இல்லை. மயக்கத்திலும் ஆழ்ந்து விடவில்லை.

ரித்விக் காரை அதிவேகத்தில் செலுத்த, “ரித்வி…” என்று பின்னால் அவர்களின் நிலைமையைப் பார்த்த படியே அழுகையுடன் கணவனை அழைத்தாள் வேதா.

“நீ டென்ஷன் ஆகிறாதே வருமா… அவங்களுக்கு ஒன்னும் ஆகாது. பார்த்துக்கலாம்…” என்ற ரித்விக், ஒரு கையில் காரை ஓட்டிக் கொண்டே போனை எடுத்து சில அழைப்புகள் விடுத்தான்.

போலீஸ் கேஸ் என்பதால் எப்படியும் உடனே மருத்துவமனையில் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த ரித்விக், தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களைப் பிடித்து அவர்கள் மூலமாக ஒரு காவல்துறை நண்பரை பிடித்து உதவி கேட்டான். நிமிட நேரத்தை கூட வீணடிக்காமல் துரிதமாகச் செயல்பட்டான்.

அதற்குள் மருத்துவமனை வந்திருக்க, இளஞ்சித்திரன், கயற்கண்ணி இருவரையும் அவசர பிரிவிற்கு அழைத்துச் சென்றனர்.

உள்ளே செல்லும் முன், “ரித்… ரிக்விக்… ஏ.. க.. கண்ணு…” என்று அரை மயக்க நிலையிலும் மனைவியைக் கவனித்துக் கொள்ளச் சொல்லும் எண்ணத்துடன் முனகினான் இளஞ்சித்திரன்.

“நாங்க கவனிச்சுக்கிறோம் இளஞ்சித்திரன். நீங்க கவலைப்படாம ட்ரீட்மெண்ட் பண்ணிக்கோங்க…” என்று அவனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வேகமாகச் சொன்னான் ரித்விக்

அவனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு தான், தான் வரும் வரை அவர்கள் மனைவிக்குத் துணை இருப்பார்கள் என்ற எண்ணம் உண்டாக அதன் பிறகு தான் மயக்கத்தில் ஆழ்ந்தான்.

ஆம்! உடலில் இரண்டு பாகத்தில் கத்தி குத்து வாங்கிய பின்னும் தனக்கு என்ன ஆகுமோ என்று அவன் சிறிதும் பயம் கொள்ளவில்லை. மீண்டும் வருவோம் என்று உறுதியான நம்பிக்கையுடனே சிகிச்சைக்குச் சென்றான்.

அவனுக்கு வாழ வேண்டும்! அவனின் கண்ணான கண்ணுவுடன் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும்!

அது மட்டுமே அவனின் மனம் முழுவதும் வியாபித்திருக்க, தன் கண்ணுவை பார்க்க மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடனேயே உள்ளே சென்றான்.

வீறு கொண்டு மீண்டு வருவேன்
வீழ்த்த துடிக்கும் விதியிடமிருந்து!

இருவருக்கும் உள்ளே சிகிச்சை நடந்து கொண்டிருக்க, வெளியே இருந்த இருக்கையில் அன்னையின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் வேதவர்ணா.

கணவன் தன் அருகில் வந்து அமர்ந்ததும், “என்ன ரித்வி… இப்படி எல்லாம் நடக்குது? இவங்களைக் கொல்ல வந்தது யாரா இருக்கும்?” என்று கண்ணீருடன் கேட்டாள்.

“அவங்க காதல் விஷயத்தில் நம்மகிட்ட அவங்க சொல்லாமல் விட்டது இன்னும் ஏதோ இருக்கு என்பது என் ஊகம் வரு. ஒருவேளை வேற பிரச்சினையா கூட இருக்கலாம். என்னன்னு அவங்களே சொன்னாத்தான் உண்டு…” என்று ஒரு பெருமூச்செறிந்து கொண்டே சொன்னான்.

“இரண்டு பேருமே ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. அவங்களுக்கு இப்படி ஒரு சோதனையா?” என்று வருத்தத்துடன் புலம்பினார் சித்ரா.

“கயலு மாசமா வேற இருக்காள். வண்டியில் வரும்போதே கவனிச்சேன். அவள் ட்ரெஸ் எல்லாம் ரத்தம். வயித்துப் பிள்ளைக்கு என்னாச்சோ?” என்று சித்ராவின் புலம்பல் தொடர, வேதவர்ணாவின் மேனி நடுங்கியது.

மனைவியின் அதிர்ந்த முகத்தைக் கண்ட ரித்விக், “வரு… வருமா இங்கே பாரு…” என்று மனைவியின் முகத்தைத் தன் புறம் திருப்பியவன், “நீ டென்ஷன் ஆகாதே…!” என்று மனைவியைத் தேற்றினான்.

நடந்த நிகழ்வுகளைக் கண்ட அதிர்ச்சியில் மனைவிக்கும் எதுவும் ஆகிவிடுமோ என்று பயந்தான் ரித்விக்.

“நீயும், அத்தையும் வீட்டுக்கு போறீங்களா? நான் இங்கே பார்த்துக்கிறேன்…” என்றான்.

“இல்ல ரித்வி… நான் டென்ஷன் ஆகலை. நானும் இருக்கேன். அவங்க இரண்டு பேருக்கும் ஒன்னும் ஆகாதுல?” என்று கேட்டாள்.

“ஆகாதுமா…” என்றான் ரித்விக்.

சிறிது நேரத்திற்குப் பிறகு கயற்கண்ணிக்குச் சிகிச்சை கொடுத்த மருத்துவர் ரித்விக்கை அழைத்தார்.

அவன் மட்டும் உள்ளே செல்ல, “சாரி டூ சே மிஸ்டர். அந்தப் பேஷன்டுக்கு அபார்ஷன் ஆகிவிட்டது…” என்றார் மருத்துவர்.

“ஓ…!” என்று அதிர்வை உள்வாங்கிய ரித்விக், “வேற எதுவும் ப்ராப்ளம்?” என்று வருத்தத்துடன் கேட்டான்.

“உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அபார்சன் ஆனதால் கிளீன் பண்ணிருக்கோம். ப்ளட் லாஸ் அதிகமா இருக்கு. ரத்தம் ஏத்தி கிட்டு இருக்கோம். இன்னைக்கு ஒரு நாளைக்கு அப்சர்வேஷனில் வச்சிருந்துட்டு நாளை ரூமுக்கு மாத்திடுவோம்…” என்றார்.

“அபார்சன் ஆனது அந்தச் சிஸ்டருக்கு தெரியுமா டாக்டர்?”

“இல்லை, ஆழ்ந்த மயக்கத்தில் இருக்காங்க. அவங்க முழிச்சதும் தான் சொல்லணும்…” என்றார்.

மருத்துவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தவன் என்னவென்று விசாரித்த மனைவியிடமும், மாமியாரிடமும் விஷயத்தை மெதுவாகச் சொன்னான்.

அவர்கள் கயலை நினைத்துக் கண்ணீர் வடித்தனர்.

கயற்கண்ணி கண்களைத் திறந்ததும் முதலில் கேட்ட கேள்வி கணவன் எப்படி இருக்கிறான் என்று தான்.

அவனுக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லவும் அழ கூடச் சக்தியில்லாமல் மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.

கயற்கண்ணி கத்தி அழவில்லை. ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.

இளஞ்சித்திரன் எப்படி மனைவியுடன் வாழ திரும்பி வருவோம் என்று நம்பிக்கையுடன் சென்றானோ… அதே போல் கணவன் வருவான் என்ற நம்பிக்கை கயற்கண்ணிக்குள் விதையாக விழுந்து விருட்சமாக வளர, கணவனை நினைத்து மௌன கண்ணீர் மட்டுமே வடித்தாள்.

அடுத்து சிறிது நேரத்தில் குழந்தையைப் பற்றிச் சொல்ல, அவளின் மௌன கண்ணீரும் அப்படியே நின்று போனது.

பிறக்க போகும் பிள்ளை பற்றித் தானும், கணவனும் பேசிக் கொண்டதெல்லாம் மனதிற்குள் ஓட, வெடித்து வர துடித்த அழுகையை அடக்க வழி தெரியாமல் கதறி அழ ஆரம்பித்தாள் கயற்கண்ணி.

உதிரத்தில் உதித்த மகவுதனை
கையிலேந்த காத்திருந்த நொடியில்
காலன் வந்து கண் வைக்க
கனவாய்ப் போனது
தாயவளின் ஈரைந்து மாத தவம்!