பூவோ? புயலோ? காதல்! – 3

அத்தியாயம் – 3

அதிகாலை ஐந்து மணியளவில் பேருந்து சிறிது நேர ஓய்விற்காக நிறுத்தப்பட்ட போது, அரை உறக்கத்தில் இருந்த இளஞ்சித்திரன் பட்டெனக் கண்களைத் திறந்து பார்த்தான்.

பயணிகள் இறங்கி கொண்டிருப்பதைப் பார்த்து ஜன்னல் வழியே வெளியே என்ன இடம் என்று பார்த்து விட்டு, ஜன்னல் பக்கமாகத் தலையைச் சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த கயற்கண்ணியைப் பார்த்தான்.

“எழுந்திரு கண்ணு…” அவளின் கன்னத்தை இதமாகத் தட்டி எழுப்பினான்.

“ஹா…!” எனப் பதறிக் கொண்டு எழுந்தவளின் தோளை பிடித்து அழுத்தி, “நாந்தேன் கண்ணு. கீழ இறங்கு! காப்பித் தண்ணி குடிச்சுட்டு வருவோம்…”

“இல்லய்யா வேணாம்…” ஜன்னல் வழியே தெரிந்த பளீர் வெளிச்சத்தையும், பயணிகளின் நடமாட்டத்தையும் பார்த்துப் பயத்துடன் வேகமாகத் தலையை ஆட்டி மறுத்தாள்.

கயற்கண்ணியின் தாடையைப் பிடித்துத் தலையாட்டலை நிறுத்தியவன், அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டே, “கயலு…” என்று அழுத்தமாக அழைத்தான்.

‘கயலு’ என்றதிலேயே அவனின் கோபத்தை உணர்ந்து அமைதியாகப் பார்த்தாள்.

“நாம இப்ப நம்ம உயிரை காப்பாத்திக்கத்தேன் ஓடுறோம். இல்லைன்னு சொல்லலை. ஆனா அப்படி ஓட நம்ம உடம்பில் வலு வேணும். அந்த வலு கிடைக்க ஆகாரம் வேணும். பட்டினி கிடந்து சாகுறதுக்கா நாம இப்ப ஓடிக்கிட்டு இருக்கோம்?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

‘இல்லை’ என்று அவள் தலையை ஆட்ட, “அப்ப இறங்கி வா…” என்று அவளின் கையைப் பிடித்து எழுப்பி விட்டான்.

அவர்களின் பயணப்பை முதுகில் மாட்டிக் கொள்ளும் ஒரே ஒரு பெரிய பை மட்டும் தான் இருந்ததால் அதையும் எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு, அவளையும் அழைத்துக்கொண்டு இறங்கினான்.

தான் முதலில் இறங்கி சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு பின்பு அவளை இறங்கச் சொன்னான்.

அவளும் பயந்து கொண்டே இறங்க, முதலில் இயற்கை உபாதைக்குச் சென்று விட்டு, பல்லையும் தேய்த்துவிட்டு, பின்பு தேநீர்க் கடையில் ஆளுக்கொரு தேநீர் வாங்கிப் பருகியவர்கள், விடியும் நேரம் என்பதால் அப்பொழுதுதான் சூடாகப் போட்டுக் கொண்டிருந்த வடையையும் வாங்கிக் கொண்டு சில நொடிகள் அங்கேயே நின்றார்கள்.

இளஞ்சித்திரன் மீண்டும் பேருந்தில் ஏற வேண்டும் என்ற எண்ணமே இல்லாதது போலச் சுற்றிலும் ஆராய்ச்சியாகப் பார்த்த படி அங்கேயே நின்றிருந்தான்.

அவனின் முகத்தைப் பார்த்தவள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. நீ என்ன முடிவெடுத்தாலும் சரி என்பது போல் நின்றிருந்தாள். ஆனால் தங்களை யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் மட்டும் அவளின் கண்ணில் இருந்து மறைய மறுத்தது.

அதே பயம் அவனுக்கும் இருந்தாலும் சிறிது கூடத் தன் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அடுத்து என்ன செய்வது என்ற எண்ணத்துடன் நின்றிருந்தவன், “வா கண்ணு…” என்று அவளை அழைத்துக் கொண்டு தாங்கள் வந்த பேருந்தில் ஏறாமல் ஏற்கனவே அங்கே ஓய்வுக்கு வந்து நின்றிருந்த வேறு ஒரு பேருந்தின் நடத்துனரிடம் சென்று பேசினான்.

அவரும் தலையசைக்க “கோயம்புத்தூருக்கு இரண்டு டிக்கெட் கொடுத்துருங்க…” என்று வாங்கிக் கொண்டு “ஏறு கண்ணு…” என்று அவளுடன் ஏறினான். பேருந்தின் கடைசி இருக்கையில் மட்டும் இடம் இருக்க, அங்கே அவர்கள் அமர்ந்த மறு நிமிடம் பேருந்தும் கிளம்ப, கோயம்புத்தூரை நோக்கி அவர்களின் பயணம் தொடர்ந்தது.

கயற்கண்ணி ‘ஏன் நாம சென்னைக்குப் போகலை? ஏன் இப்போ கோயம்புத்தூர் பஸ்ஸில் ஏறி இருக்கோம்?’ என்று ஏதாவது கேட்பாளா என்று அவளின் முகத்தைப் பார்த்தான்.

அவளோ அந்த எண்ணமே இல்லாதவள் போல் அவன் தோளில் இருந்து கழற்றி வைத்த பயணப்பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து பருகி கொண்டிருந்தாள்.

அவள் பருகி முடித்து விட்டு தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து “வேணுமாய்யா” என்று பாட்டிலை நீட்ட “வேணாம் கண்ணு…” என்றான்.

“அப்ப ஏன்யா என்னையவே பாக்குற?”

“ஒன்னுமில்லை கண்ணு சும்மா தேன்…” என்றவன் “இப்ப நாம கோயம்புத்தூர் போகப் போறோம் கண்ணு…” என்று தானே சொன்னான்.

“சரிய்யா… போகலாம்…” என்று முடித்து விட்டாள்.

அவள் கேட்க மாட்டாள் என்று அதிலேயே உறுதியாகி விட அவனுக்குப் புன்னகை வந்தது.

முதல் நாள் நள்ளிரவில் ஆரம்பித்த அவர்களின் பயணம் மறுநாள் இரவு எட்டு மணி அளவில் கோவையில் சென்று முடிந்தது. பேருந்து நிற்கும் இடத்தில் உணவை முடித்துக் கொண்டு கோவை வந்து சேர்ந்தனர்.

பேருந்தை விட்டு இறங்கியதும் அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் யோசித்தவன் தான் எடுத்த முடிவைக் கண்டு தானே அஞ்சியவனாகச் சில நொடிகள் மூச்சை இழுத்து விட்டுத் தன்னை நிதானித்துக் கொண்டான்.

பின்பு ஒரு முடிவுடன் கயற்கண்ணியின் புறம் திரும்பி, “கண்ணு ஆபத்துன்னு தெரிஞ்சே இப்ப ஒரு வேலை பாக்க போறேன். என்ன நடந்தாலும் என் கையை மட்டும் விட்டுறாதே…” என்றான்.

“என்னய்யா சொல்ற? என்ன செய்யப் போற?” பயத்துடன் கேட்டாள்.

“இப்ப கொஞ்ச நேரத்துல உனக்கே தெரிஞ்சுடும் கண்ணு. வா…” என்று அவளின் கையை இறுக பற்றிய படி பேருந்து நிறுத்தத்திற்கு வெளியே அழைத்துக் கொண்டு வந்தான். சிறிது தூரம் நடந்ததும், ஒரு பேக்கரி கடை இருக்க அங்கே நின்றான்.

எங்கே அழைத்துப் போகின்றான். இந்தக் கடையில் என்ன வாங்க போகின்றான் என்று ஒன்றும் புரியவில்லை என்றாலும், அவன் இழுத்த இழுப்பிற்கு நடந்து கொண்டிருந்தாள்.

அந்தக் கடையில் ஒரு பிரெட் பாக்கெட் வாங்கியவன் ஓரக் கண்ணால் பார்த்து விட்டு, காசை வேகமாகக் கொடுத்துவிட்டு, “வெரசா வா கயலு…” என்று அவளின் கையைப் பிடித்துக் கொண்டு விறுவிறுவென்று ஓட்டமும் நடையுமாக அவளை இழுத்துச் சென்றான்.

ஏன்? என்னானது? என்று ஒன்றும் பிடிப்படாமல் அவனின் பின் ஓடினாள்.

மீண்டும் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்தவன் வேறு ஒரு பேருந்தில் ஏறினான். அவனுடன் ஏறி பேருந்தில் அமர்ந்தவள், ‘ஏன் ஓடிவந்தான்?’ என்பது போலப் பார்த்தாள்.

அவளின் பார்வையைப் புரிந்தவன் “தெரிஞ்சவுக பாத்துட்டாகக் கண்ணு…” என்றான் மூச்சு வாங்கிக்கொண்டே.

அவன் சொன்னதைக் கேட்டு பயத்துடன் அவள் பார்க்க, “பயப்படாத கண்ணு. நான் வேணுமே தேன் அவுக கண்ணில் பட்டேன். தூரத்துச் சொந்தம். அவுக கடை இங்கனக்குள்ள இருக்குனு தெரிஞ்சே தேன் அங்கன போனேன். நம்மைப் பார்த்துட்டார். இன்னேரம் விசயம் ஏ அய்யாவுக்குப் போயிருக்கும்…” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு கயற்கண்ணியின் உடம்பு நடுங்கியது. “அவுக நம்மள பிடிச்சுருவாகளேயா…” என்று கண்கள் விரிய பயத்துடன் சொன்னாள்.

“பிடிக்க முடியாது கண்ணு. பிடிக்க விடவும் மாட்டேன். கையை விடப் புத்தியை வேலை செய்ய வச்சுக்கிட்டு இருக்கேன் கண்ணு. ஏ அய்யனுக்கும், அண்ணனுக்கும் அருவாளையும், கையையும் தான் ஓங்க தெரியும். ஆனா எனக்குப் புத்தியை தீட்ட தெரியும். ஏ புத்தி நம்மை மாட்ட விடாது…” என்று அவளுக்குத் தைரியம் சொன்னவன்,

“நானும் வேங்கையன் ரத்தம் தேன் கண்ணு. ஆனா அவுகளை மாதிரி கெட்ட ரத்தம் ஓடுறவன் இல்ல. அவுக நம்ம உயிரை எடுக்க வந்தா, அவுக உயிரை எடுக்கவும் ஏ உடம்பில் வலு இருக்கு! வீரமும் இருக்கு! இது ரெண்டும் இருந்தும் ஏன் இப்படி ஓடுறோம் தெரியுமா? ஏன்னா நான் மனுசன்! பாசமுள்ள மனுசன்!

“ஏ அய்யாவுக்கு ஏ மேல மகன்கிற பாசம் இல்லாம போயிருக்கலாம். ஏ அண்ணனுக்குத் தம்பி மேல அன்பு இல்லாம போயிருக்கலாம். ஆனா எனக்கு அவுக மேல பாசமும், அன்பும் இருக்கு. ஏ தகப்பனாரு உசுரும், ஏ உடன்பிறந்தவனோட உசுரும் ஏ கையாலேயே போய்ற கூடாதுன்னு தேன் உன்னைய கூட்டிட்டு ஊர் ஊரா ஓடுறேன்.

நான் இப்படிப் பயந்து ஓடுறதைப் பார்த்தா ஊர் உலகம் என்னைக் கோழைனு தேன் சொல்லும். ஆனா அப்பனையும், அண்ணனையும் கொன்ன கொலைகாரன்னு பேர் வாங்குறதுக்குக் கோழைனு பேர் வாங்குறதுல எனக்குத் தலைகுனிவு இல்லை கண்ணு…” என்றான்.

அவன் வீட்டாரின் மீது அவன் வைத்திருக்கும் அன்பை பார்த்து நெகிழ்ந்தவள், தன் கைக்குள் இருந்த அவனின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

அந்த இறுக்கம் அவனுக்கு இதமாகவே இருக்க, அவளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்து “அடுத்த ஓட்டத்துக்குத் தயாராகிக்கோ கண்ணு… அடுத்து குமரிக்குப் போறோம். அங்கனயும் ஒரு சொந்தகாரப் பய இருக்கான்…” என்றான்.

“இந்தப் பாசக்காரன் கூட எம்புட்டுத் தொலைவு வேணும்னாலும் ஓடியார தயாரா இருக்கேன்யா…” என்றாள் உறுதியுடன்.

“இந்த நேசக்காரிக்காக நான் எதுவும் செய்வேன் கண்ணு…” என்று திருப்பிச் சொல்லி காதலுடன் அவளைப் பார்த்தான்.

அவனின் காதல் பார்வையில் கட்டுண்டு போனாள் கயற்கண்ணி.

இளஞ்சித்திரன் சொன்னது போலவே அடுத்து கன்னியாகுமரிக்கு அவளை அழைத்துச் சென்றான்.

அங்கேயும் ஒரு சொந்தகாரரின் கண்களில் பட்டுவிட்டு, அடுத்தப் பேருந்தை பிடிக்க ஓடினார்கள்.

அடுத்து அவர்கள் ஏறிய பேருந்து இளஞ்சித்திரன் தாங்கள் வாழ்வதற்குத் தேர்ந்தெடுத்த ஊர்!

அவ்வூர் அந்த இளம் காதல் ஜோடிகளுக்கு இன்பத்தையும், துன்பத்தையும் கொடுக்க, அவர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

உற்றார், உறவினர், ஊர் என அனைத்தையும் துறந்து காதல் என்னும் ஒன்றை மட்டும் பற்றுக்கோளாகக் கொண்டு வாழ்க்கையின் எதிர்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த அந்தக் காதல் ஜோடியின் காதல் இனி அவர்களைச் சுட்டெரிக்குமா? சுடரொளி வீசுமா?