பூவோ? புயலோ? காதல்! – 25

அத்தியாயம் – 25

“இப்போ எப்படி இருக்கு வரு?” மனைவியின் தலையைக் கோதி வாஞ்சையுடன் விசாரித்தான் ரித்விக்.

“ஏன் வரு அப்படிப் பார்க்கிற?” தான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன்னையே ஆழ்ந்து பார்க்கும் மனைவியின் பார்வைக்குக் காரணம் புரியாமல் கேட்டான்.

“நீங்க என்னை ‘வரு’ன்னு கூப்பிட்டீங்க ரித்வி…” என்று உதடுகள் துடிக்கச் சொன்னாள் வேதவர்ணா.

“அதனால் என்ன? நான் உன்னை அப்படித்தானே கூப்பிடுவேன்?” அவன் கூப்பிடாமல் விட்ட இடைப்பட்ட நாட்களை மறந்தவன் போல் கேட்டான்.

“அப்படியா?” என்று கணவனின் பார்வையை ஊடுருவி கொண்டே கேட்டாள் அவனின் மனைவி.

வரு என்ற அழைப்பு என்ன? சாதாரணமாகக் கூட அவளிடம் பேசாமல் புறக்கணித்தானே… மறந்து விட்டானா என்ன? என்று கேட்டது அவளின் பார்வை.

அமைதியாக அவளின் பார்வையை எதிர்கொண்டான் ரித்விக்.

“இப்போ எப்படி இருக்குன்னு கேட்டேனே?” இடையில் அவள் எதுவுமே பேசாதது போல் பாவித்து மீண்டும் கேட்டான்.

“என் மேல உள்ள கோபம் எல்லாம் போயிருச்சா ரித்வி?”

“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே வரு?”

“என் மேல உங்களுக்குக் கொஞ்சமும் கோபம் குறையலை. அதனால் தானே பேச்சை மாத்திட்டே இருக்கீங்க. அப்படித்தானே ரித்வி?” என்று கண்கலங்க கேட்டாள்.

அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன், “நாம இப்ப அதைப் பத்தி எதுவும் பேசவேண்டாம் வரு. இப்போ உன் ஹெல்த்தான் முக்கியம்…” என்றான்.

“அப்படியே நான் படியில் உருண்டிருந்தால் என் மேல உங்களுக்கு இருக்குற கோபம் சுத்தமா போயிருக்கும்ல…” என்று அவன் பேச்சை மாற்றுவது பிடிக்காமல் விரக்தியான குரலில் சொன்னாள்.

அவளின் வாயை வேகமாக விரல் கொண்டு மூடி, “வரு…” என்று அதட்டியவன், “என்ன பேச்சு பேசுற? நீ படியில் உருள இருந்தன்னு தெரிந்ததும் எனக்கு என் உயிரே போற மாதிரி ஆகிருச்சு. நீ என்னென்னா அசால்ட்டா எப்படிப் பேசுற. உனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால், இந்த ரித்விக்கும் இல்லை. அவ்வளவுதான். இதைத் தவிரச் சொல்றதுக்கு வேற இல்லை…” என்றான்.

“ம்ப்ச்… அப்படிச் சொல்லாதீங்க ரித்வி…” என்று இப்போது அவனின் வாயை மூடினாள் அவள்.

“வலிக்குது தானே? உனக்கு ஒன்னுன்னா எனக்கும் இப்படித்தான் வலிக்கும். ஏற்கெனவே அதிகம் பேசிட்டே. இனியும் ஏதாவது பேசி என்னை உயிரோடு கொன்றுவிடாதே!” என்றான்.

“சாரி ரித்வி. இனி அப்படிப் பேசலை. வெரி சாரி…” கணவனின் குரலில் இருந்த வலி அவளைப் பதற்றம் அடைய வைத்தது.

“ஹேய் ரிலாக்ஸ்டா. நானும் அப்படிப் பேசலை. இப்போ நாம அதைப் பற்றி எதுவுமே பேச வேண்டாம் வரு. நமக்குன்னு அந்த விஷயத்தைப் பற்றிப் பேச நேரம் வரும். அப்போ பேசலாம். இப்போ உன் ஹெல்த்தோட, பேபியும் நமக்கு முக்கியம். இப்போ அதை மட்டும் நினைப்போம். என்ன சரியா?” என்றான் ரித்விக்.

“சரி ரித்வி…” என்றாள் வேதவர்ணா.

“டாக்டர் என்கிட்ட பேபி நல்லா இருக்குன்னு தான் சொன்னாங்க. உங்ககிட்ட வேற எதுவும் சொன்னாங்களா ரித்வி?” என்று கேட்டாள்.

“பேபி ஓகே தான் வரு. ஒரு ப்ராப்ளமும் இல்லைன்னு சொல்லிட்டாங்க…”

“ஆனா எனக்கு அடிவயிற்றில் பெயின் விடாமல் இருந்ததே ரித்வி. என்னால் படியில் இறங்கி வரக்கூட முடியலை…”

“அது தசைபிடிப்பு தான் வரு. அப்புறம் எப்படி அவ்வளவு படி இறங்கி வந்தாய்?” என்று விசாரித்தான்.

“அது…” என்று இளஞ்சித்திரனின் உதவியைப் பகிர்ந்து கொண்டாள்.

“எனக்குத்தான் ரொம்பச் சங்கடமா இருந்தது. ஆனால் வலி ஒருபக்கம் என்றால் மயக்கம் வேறு வந்தது. அவர் என்னை உங்க அண்ணாவா நினைச்சுக்கோங்கன்னு சொன்னாரா, அதுக்கு மேலே என்னால் அமைதியாகத்தான் இருக்க முடிந்தது…” என்றாள்.

“இதில் சங்கடப்பட ஒன்னும் இல்லை வரு. இப்போ எல்லாம் யாருக்காவது ஒரு ஆபத்து வந்தால் அவங்களுக்கு உதவி பண்ணாம, செல்பி எடுக்கிறதும், அதை வாட்ச்அப், பேஸ்புக்ல போட்டு எத்தனை லைக் வருதுன்னு பார்க்கிற மனநிலை ரொம்ப வளர்ந்திருச்சு. அப்படி இருக்கிற காலநிலையில் அவர் பார்த்துக்கிட்டு நிக்காமல் உதவி செய்தாரே. அதுக்கே நாம எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்…” என்றான்.

“ஹேய் வரு… இதோ வந்துடுறேன். டாக்டரை பார்த்து முடிச்சதும், உன்னை ரூமுக்கு மாத்தவும் அப்படியே இங்கே வந்துட்டேன். இளஞ்சித்திரனும், அவரோட வொய்பும் இருக்காங்களா, கிளம்பிட்டாங்களான்னு பார்த்துட்டு வர்றேன்…” என்று மனைவியிடம் சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியே சென்றான்.

அவன் சென்று பார்த்த போது அதே இடத்தில் தான் இருவரும் அமர்ந்திருந்தனர்.

“சாரி… சாரி மிஸ்டர் இளஞ்சித்திரன். டாக்டர் ரூமில் இருந்து இன்னொரு வழியா வருவை ரூமுக்கு மாத்திட்டாங்க. நானும் கூடப் போக வேண்டியதாகிருச்சு. சாரி…” என்றான் ரித்விக்.

“பரவாயில்லை ரித்விக். நாங்க அவங்களுக்கு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுட்டுப் போகத்தான் வெயிட் பண்ணினோம். இப்போ சிஸ்டர் எப்படி இருக்காங்க?” என்று விசாரித்தான் இளஞ்சித்திரன்.

மருத்துவர் சொன்னதை இளஞ்சித்திரனிடம் பகிர்ந்து கொண்டான் ரித்விக்.

“தேங்க்யூ சோ மச் இளஞ்சித்திரன். நீங்க ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்த விவரத்தை பற்றி வரு சொன்னாள். ஒரு கிரிட்டிக்கல் சூட்சுவேஷனில் ஹெல்ப் செய்ததற்கு ரொம்ப நன்றி. உங்க உதவியை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்…” என்று இளஞ்சித்திரனை தோளோடு லேசாக அணைத்து நன்றி தெரிவித்தான் ரித்விக்.

“இது மனிதனுக்கு மனிதன் செய்து கொள்கிற சின்ன உதவிதான் ரித்விக்…” என்றவன், “நாங்க சிஸ்டரை பார்க்கலாமா?” என்று கேட்டான்.

“வாங்க இளஞ்சித்திரன்…” என்று இருவரையும் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துப் போனான் ரித்விக்.

இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும் உள்ளே சென்ற போது ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க, தளர்ந்த கண்களை மூடிப் படுத்திருந்தாள் வேதவர்ணா.

“வரு…” என்று ரித்விக் அழைக்க, கண்களைத் திறந்து பார்த்தவள் இளஞ்சித்திரன், கயற்கண்ணியைக் கண்டதும் தானும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தாள்.

“இருக்கட்டும் சிஸ்டர். இப்போ பெயின் எப்படி இருக்கு?”

“பரவாயில்லை அண்ணா…” என்றாள் வேதவர்ணா.

அவள் அண்ணா என்றழைத்ததில் இளஞ்சித்திரனின் முகத்தில் சிறு முறுவல் வந்து அமர்ந்து கொண்டது.

“பெரியவங்க யாரும் துணைக்கு இல்லையாங்க?” என்று விசாரித்தாள் கயற்கண்ணி.

அவளின் கேள்வியில் ரித்விக், வேதா இருவரின் முகமும் சட்டென்று சுணக்கத்தைப் பிரதிபலித்தது.

அவர்களின் முக மாற்றத்தை நொடியில் கவனித்து விட்ட இளஞ்சித்திரன் “பேசாம இரு கண்ணு…” என்று மனைவியை அதட்டினான்.

“இல்லய்யா… நிறை மாசமா இருக்காவுகளே. அதுதேன் துணைக்கு ஆளு இல்லையான்னு கேட்டேன்…” கணவன் எதற்கு அதட்டுகின்றான் என்று புரியாமல் தயக்கத்துடன் சொன்னாள் கயற்கண்ணி.

“வருவோட அம்மா சீக்கிரமே வருவாங்க சிஸ்டர்…” என்று முதலில் சுதாரித்துக் கொண்ட ரித்விக் பதில் சொன்னான்.

ரித்விக் அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்த அதே நொடியில் வேதாவின் தலை மறுப்பாக அசைந்தது.

அதையும் கண்டுவிட்ட இளஞ்சித்திரனின் கண்கள் யோசனையுடன் இருவரையும் ஆராய்ந்தது.

மனைவியின் தலையசைப்பை ரித்விக்கும் கண்டு கொண்டான். அது ‘இப்போ என்னவெல்லாம் யோசித்துக் குழப்பிக் கொள்கிறாளோ?’ என்ற கேள்வியை அவனுக்குள் எழுப்பியது.

இரு ஆண்மக்களின் ஆராய்ச்சியைக் கவனிக்காமல் கயற்கண்ணி அவர்களைப் பற்றி விசாரிப்பதில் குறியாக இருந்தாள்.

அவர்கள் தமிழில் பேசியதே அவளுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்து விட்டிருந்தது.

“உங்க சொந்த ஊரு எதுங்க?” என்று வேதாவிடம் கேட்டாள் கயற்கண்ணி.

“ஹேய்… சும்மா இரு கண்ணு. அவுக ஏற்கனவே உடம்பு முடியாம இருக்காங்க. இப்போ போய் இதெல்லாம் விசாரிச்சுக்கிட்டு…” என்று கடிந்து கொண்டான் இளஞ்சித்திரன்.

‘எப்போ பார்த்தாலும் என்னை அதட்டிக்கிட்டே இருக்க. தனியா மாட்டுவல, உன்னைய அப்ப பார்த்துக்கிறேன்’ என்பது போலக் கணவனை ஒரு பார்வை பார்த்தாள் கயற்கண்ணி.

‘அட! கண்ணிவெடி ஃபுல் பார்ம்ல இருக்கா போலயே? சித்திரா இன்னைக்கு நீ கண்ணிவெடி வெடிக்கிறதை வேடிக்கை பார்க்கலாம்’ என்று நக்கலுடன் நினைத்துக் கொண்டான்.

“பரவாயில்லை அண்ணா…” என்றவள் “எனக்குச் சொந்த ஊரு திருநெல்வேலி…” என்று கயற்கண்ணிக்குப் பதில் சொன்னாள் வேதா.

“இவரு?” என்று ரித்விக்கை காட்டி கேட்டாள் கயற்கண்ணி.

‘இவ அடங்க மாட்டா போலயே? இன்னைக்கு இவுக ஜாதகத்தையே வாங்கிட்டுதேன் ஏ பொஞ்சாதி நகருவா’ என்று நினைத்துக் கொண்டான் இளஞ்சித்திரன்

“அவர் மும்பை…” என்று வேதவர்ணா சொல்ல,

“நீங்க காதல் கல்யாணமா?” என்று அடுத்தக் கேள்வி கயற்கண்ணியிடமிருந்து பிறந்தது.

“கண்ணு, தேவையில்லாம பேசிட்டு நிக்காதே. வா கிளம்பலாம்…” என்று இப்போது அதிகமாகவே அதட்டினான் இளஞ்சித்திரன்.

“அண்ணா எதுக்கு அவங்களைத் திட்டிட்டே இருக்கீங்க? லேடீஸ் நாங்க தானே பேசுறோம். விடுங்க…” என்றாள் வேதவர்ணா.

“இல்ல சிஸ்டர், இன்னும் உங்களுக்குப் பெயின் இருக்கு போல, பேசிட்டே அடிக்கடி முகத்தை நீங்க சுளிக்கிறதில் இருந்தே தெரியுது. நீங்க ரெஸ்ட் எடுக்கணும்ல? பேசிட்டே இருந்தா. நீங்க ரெஸ்ட் எடுக்க முடியாது…” என்றான் இளஞ்சித்திரன்.

அவர்களின் பேச்சை அமைதியாகப் பார்த்தபடி அமர்ந்து விட்டான் ரித்விக்.

அவனின் கண்கள் மனைவியைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஏனோ கயற்கண்ணியிடமும், இளஞ்சித்திரனிடமும் பேசும் போது மனைவி இலகுத்தன்மையுடன் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

“யெஸ் லவ் மேரேஜ் தான்…” என்று கயற்கண்ணிக்குப் பதில் சொன்னாலும், அவளின் கண்கள் கணவனைக் காதலுடன் தீண்டியது.

“ஐய்… சுப்பருங்க…” என்று ஆர்ப்பரித்தாள் கயற்கண்ணி.

“நான் அப்போவே நினைச்சேன். ஆனா நான் பார்க்கும் போதெல்லாம் நீங்க ரெண்டு பேரும் இங்கிலீஷ்ல பேசுவீங்களா? அதுதேன் நீங்களும் தமிழ் பேசுரவுகன்னு எனக்குத் தெரியாம போய்ருச்சு…” என்றாள் கயற்கண்ணி.

“நாங்களும் காதல் கல்யாணம் தேன். அதுவும் சாதாரணக் கல்யாணம் இல்லை. ஊரை விட்டே…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மனைவியை நெருங்கிய இளஞ்சித்திரன் அவளின் கையைப் பிடித்து அழுத்தி, “அவுகளை ரெஸ்ட் எடுக்க விடு கண்ணு. எனக்குச் சோலிக்கு நேரமாகுது. நாம கிளம்பலாம்…” என்றான்.

“நாங்க கிளம்புறோம் ரித்விக். ஹெல்த்தை பார்த்துக்கோங்க சிஸ்டர்…” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்காமல் மனைவியை இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான் இளஞ்சித்திரன்.

“யோவ்! ஓ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கிற? என்னைய எதுக்கு இப்படி இழுத்துக்கிட்டு வந்த?” என்று வழியில் எல்லாம் உம்மென்று வந்த கயற்கண்ணி வீட்டிற்குள் நுழைந்ததும் கோபத்துடன் எகிறினாள்.

இளஞ்சித்திரனோ மனைவியின் கோபத்தைக் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்தான்.

“என்ன… என்னய்யா வேடிக்கை? நான் என்ன பேசினாலும் எதுக்குத் திட்டிட்டு இருந்தன்னு சொல்லுய்யா…” என்று இப்போது அவனை அதட்டினாள் அவள்.

“பின்ன என்ன கண்ணு? காணாததைக் கண்டது போல அவுககிட்ட அப்படிப் பேசிட்டு இருக்குற? அவுக உன்னைய பத்தி என்ன நினைப்பாக?” என்று கேட்டான்.

“காணாததைத் தானேய்யா கண்டுட்டேன். இந்த ஊருக்கு வந்து இப்போ தானே தமிழு பேசுறவகளைப் பார்த்தேன். அதுவும் இத்தனை நாளு எதுத்த வீட்டுலயே அவுக இருந்தது தெரியாம போயிருச்சேன்னு நானே கவலையில் இருக்கேன்…” என்றாள் வருத்தமாக.

“இந்த ஊர்லயும் நம்ம பக்க ஊருக்காரவுக நிறையப் பேரு இருக்காவுக கண்ணு…”

“ஆனா நான் பார்த்தது இல்லையேய்யா…” என்று கைகளை விரித்து உதடுகளைப் பிதுக்கினாள்.

“வெளியிலே நாலு இடத்துக்குப் போயிட்டு வந்தா உனக்குத் தெரிஞ்சிருக்கும் கண்ணு. ஆனா நாந்தேன் உன்னைய எங்கயும் கூட்டிட்டு போகாம, வீட்டுக்குள்ளேயே அடைச்சுப் போட்டுட்டேனே…” என்று வருத்தமாகச் சொன்னான் இளஞ்சித்திரன்.

“என்னய்யா இது இப்படி வருத்தப்படுற? நீ எங்கன என்னைய அடைச்சுப் போட்ட? என்னைய சாதாரணமா வெளிய கூட்டிட்டு போற சூழ்நிலை உனக்கு அமையலை. அதுக்கு நீ என்ன பண்ணுவ? நான் சந்தோஷமாத்தேன் இருக்கேன்யா…” என்றாள் கயற்கண்ணி.

“நெசமாவே நீ சந்தோஷமாத்தேன் இருக்கியா கண்ணு? இல்லைனா என்னைய சமாதானப்படுத்த சும்மா சொல்றியா?” என்று கேட்டான் இளஞ்சித்திரன்.

அவனிடம் தான் அவளை நன்றாகத்தான் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறோமா என்ற தவிப்புத் தெரிந்தது.

கணவனின் தவிப்பு அவனின் கண்களிலும், குரலிலும் தெரிய, சுவற்றில் கையைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றிருந்தவனை நெருங்கி நின்ற கயற்கண்ணி “ஓ கூட வாழ்வதில் நான் சந்தோஷமா இருக்கேன்னு எப்படிச் சொன்னா நீ நம்புவய்யா?” என்று கேட்டாள்.

தன்னை நெருங்கி நின்று எப்படியும் நம்ப வைத்து விட வேண்டும் என்ற தவிப்புடன் இருந்த மனைவியைப் பார்த்த இளஞ்சித்திரன், அவளின் கையைச் சுண்டி இழுத்து, இன்னும் தனக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து அணைத்தவன், “கிஸ் பண்ணு நம்புறேன்…” என்றான்.

அவனின் குரல் இறுக்கமாக வர, அவனின் உதட்டோரம் எட்டிப்பார்த்த சிரிப்பை கவனிக்காமல் வருத்தத்துடன் சொல்கிறான் போல என்று நினைத்து, அவனின் அணைப்பில் இருந்து விலகி கணவனின் கன்னத்தில் மெதுவாகத் தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள்.

“ம்கூம் கண்ணு. இங்கே கொடுத்தாதேன் நம்புவேன்…” என்று தன் உதட்டில் விரல் வைத்துக் காட்டி இன்னும் இறுக்கமாகச் சொன்னான்.

“ஹான்… அங்கன எப்பவும் நீதானேய்யா கொடுப்ப…‌ இப்ப என்னைய கொடுக்கச் சொல்ற?” என்று தயங்கினாள்.

“அதுதேன் சொல்றேன் கண்ணு. எப்பயும் நாந்தேன் கொடுக்கிறேன். இப்போ நீ கொடு. அப்போதேன் நம்புவேன்…” என்றான்.

“ஹா போய்யா… எனக்கு வெட்கமா இருக்கு. உனக்குச் சோலிக்கு‌ நேரமாச்சுன்னு தானே என்னைய இழுத்துக்கிட்டு வந்த? இப்போ நீ சோலிக்குக் கிளம்பு. நான் அப்புறமா கொடுக்கிறேன்…” என்று தள்ளிப்போட பார்த்தாள்.

“ஆமா என் பொஞ்சாதி நான் கேட்டதைக் கொடுக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறா. இப்போ அந்தச் சோலிதேன் எனக்கு முக்கியமாக்கும்?” என்று சலித்துக் கொண்டவன்,

“ம்கூம்… நமக்குக் கல்யாணமாகி நாலு மாசம் ஆச்சு. ஆனா இன்னும் நான் கேட்டதைக் கொடுக்க மாட்டேங்கிற…” என்று வருத்தமாக உதடுகளைப் பிதுக்கி சொன்னான்.

“என்னய்யா இப்படிச் செய்ற? எனக்கு வெட்கமா இருக்குன்னு தானே தயங்குறேன். ஆனா நீ இப்படிப் பேசுற?” என்று அவளும் வருத்தமாகக் கேட்டாள்.

“நான் கேட்டதைக் கொடு கண்ணு. அப்போ தேன் நீ சந்தோஷமா இருக்கன்னு நம்புவேன். இல்லனா உறுதியா நீ சொல்றது பொய்யின்னு தேன் சொல்லுவேன்…” என்றான் அழுத்தமாக.

அவன் அப்படிச் சொன்னதும், தன் தயக்கத்தை விடுத்து மெதுவாகக் கணவனின் முகத்தை நெருங்கினாள் கயற்கண்ணி.

அவளின் உதடுகள், அவனின் உதட்டுடன் உரச சிறிது மட்டுமே இடைவெளி இருக்க மேலும் உதடுகளை உரச விடாமல் விலகியே வைத்திருந்தாள்.

இளஞ்சித்திரனோ தன் மனைவியிடம் இருந்து அவளாகக் கொடுக்கப் போகும் முதல் இதழோற்றலுக்காகக் கண்கள் மின்ன, உள்ளத்தில் பொங்கிய ஆர்வத்துடன், ஆனால் வெளியே முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு காத்திருந்தான்.

ஆனால் இடைவெளியை நிரப்பாமல் நாணத்தில் அவள் தயங்க, எதிர்பார்ப்புடன் அவன் மயங்க, அங்கே கணவன் மனைவிக்குள் அழகான கண்ணாமூச்சி விளையாட்டு ஒன்று ஆளுகை செய்தது.

“கணவன், மனைவிக்குள் சகலமும் சகஜம் கண்ணு…” என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி சொல்லி மனைவி விட்ட இடைவெளியை நிரப்ப தூண்டினான்.

“ம்ம்… நீ கண்ணை மூடிக்கோ…” என்று இன்னும் தயங்கினாள்.

“கண்ணை மூடினா என் கண்ணுவின் கண்காட்டும் ஜாலங்களைப் பார்க்க முடியாது கண்ணு…” என்றான் காதலுடன்.

“ஹக்கும்… ஹக்கும்… என்று அவள் சிணுங்க,

“சரி போ… நீ சந்தோஷமா இல்லைன்னு…” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே, வேகமாகத் தன் இதழ் கொண்டு அவனின் அதரங்களை மூடியிருந்தாள் கயற்கண்ணி.

அடுத்த நொடி காதல் தம்பதிகளின் கண்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து நிற்க, இதழ்களோ கவிபாடி கொண்டிருந்தன.

முத்தத்தில் ஓர் யுத்தம் வெற்றிகரமாக அரங்கேறியது!

முத்தமிட்டு மொத்தமும் கேட்கும்
மாய வித்தைக்காரன்
காதல் சித்தம் பிடிக்க வைக்கின்றான்!