பூவோ? புயலோ? காதல்! – 24

அத்தியாயம் – 24

அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் ஒரு வீட்டில் குடியிருந்த வேதவர்ணாவை, அதே தளத்தில் அவளின் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருந்த இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும் அவளைக் கீழே விழாமல் பிடித்து நிறுத்தியிருந்தனர்.

இருவரும் அவளின் கையைப் பிடித்திருந்தாலும், அந்தப் படியில் நிற்க முடியாமல் அப்படியே அமர போனாள் வேதவர்ணா.

“அச்சோ! என்ன செய்துங்க?” என்று விசாரித்த கயற்கண்ணி, “ஏய்யா இங்கிலிஸ்ல கேளுய்யா… நான் பேசுறது அவுகளுக்குப் புரியலை போல…” வேதாவிற்குத் தமிழ் தெரியாதோ என்று நினைத்து கணவனை ஏவினாள்.

“ஆர் யூ ஓகே சிஸ்டர்?” என்று இளஞ்சித்திரனும் கேட்க,

“நிக்க முடியலை, வலிக்குது…” என்று லேசாகக் கண்கள் கலங்கி இருக்க, வலி நிறைந்த குரலில் தமிழில் சொன்னாள் வேதவர்ணா.

அவள் தமிழில் பேசவும் ஆச்சரியமாக விழிகளை விரித்த கயற்கண்ணி, “ஹய்… இவுக தமிழு பேசுறாக…” என்று சந்தோஷமாகக் கூவினாள்.

ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில், எதிரெதிர் வீட்டில் நான்கு மாதங்களாக இருந்தாலும், இரு வீட்டினருக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் இருந்தது இல்லை.

ரித்விக், வேதவர்ணா இருவருமே வேலைக்குச் செல்வதால் இருவரும் வீட்டில் இருக்கும் நேரங்கள் குறைவு. அப்படியே வீட்டில் இருந்த நாட்களிலும் வேதா மசக்கையிலும், தன் பிறந்த வீட்டை பற்றிய வருத்தத்திலும் இருந்ததில், அக்கம் பக்கம் உள்ள வீட்டை திரும்பி கூடப் பார்த்தது இல்லை.

வளர்ந்து போன நாகரீகம் என்ற பெயரில் அண்டை வீட்டாரை பற்றிக் கூடத் தெரியாமல் இருக்கும் நகர நடைமுறை அந்த அடுக்குமாடிக் குடியிருப்பினருக்கும் ஒட்டிக் கொண்டதால், பக்கத்து வீடுகளில் யார்யார் இருக்கிறார்கள் என்பதைக் கூடக் கண்டு கொள்வதில்லை.

அப்படியே அடுத்த வீட்டினரை பார்த்தால், ஒரு சின்னப் புன்னகையுடன் விலகி சென்றுவிடுவார்கள்.

கயற்கண்ணி கிராமத்தில் இருந்து வந்தவள் என்பதால் வேறு மொழி பேசும் ஊரில் அண்டை வீட்டாரிடம் பேச பயந்து ஒதுங்கி கொண்டவள்.

அப்படியும் வேதா தம்பதியரை எதிரில் சில முறை கடந்து சென்ற போது, அவர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே போனதால் அவர்களைப் பார்த்துப் புன்னகைக்கக் கூடப் பயந்து விலகி போவாள்.

அதுவும் ரித்விக் வடமாநிலத்தவன் என்று அவனின் தோற்றமே காட்டிக் கொடுக்கும் என்பதால், வேதா தமிழ் பெண் என்பதை அறியாமல் ‘இந்தி பேசுறவக போல’ என்று அவளே நினைத்துக் கொண்டாள்.

அதனால் தான் இப்போது வேதா தமிழில் பேசவும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவள் சந்தோஷமாகக் குதிக்கவும், “இப்ப அதுவா கண்ணு முக்கியம்? அவுகளுக்கு எங்கன வலிக்குதுன்னு கேளு…” என்று அதட்டினான் இளஞ்சித்திரன்.

“அச்சோ! நான் ஒருத்தி…” என்று தன்னையே திட்டிக்கொண்ட கயற்கண்ணி, “எங்கனக்குள்ளங்க வலிக்குது?” என்று விசாரித்தாள்.

அடிவயிற்றில் கைவைத்த வேதா, “அடிவயிறு சுர்ருனு இழுக்குது. ஆ! அம்மா முடியலை…” பல்லைக் கடித்துக் கொண்டு முனங்கினாள்.

“ஒருவேளை பிரசவ வலி வந்துருச்சோ என்னவோ கண்ணு. பேசாம இவுகளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதுதேன் நல்லதுன்னு தோணுது…” என்றான் இளஞ்சித்திரன்.

“உங்களுக்குத் துணையா யாரு இருக்காங்க?” என்று கயற்கண்ணி வேதாவிடம் விசாரிக்க, “யாருமில்லை…” என்று தலையை அசைத்தாள்.

“உங்க வீட்டுக்காரர் எங்கன இருக்கார்?”

“ஆபீஸ்… ஆஆ…” என்று சொல்லிக் கொண்டே வலியில் லேசாகக் கத்தினாள் வேதவர்ணா.

“போதும் கண்ணு. விசாரிக்க இது நேரமில்லை. நாமளே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவோம். அப்புறமா அவுக சொந்தக்காரங்ககிட்ட சொல்லிக்கலாம்…” என்றவன், “இப்போ இவுகளை எப்படி ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறது?” என்று வாய்விட்டு சொல்லி யோசிக்க ஆரம்பித்தான்.

அப்போது ஏதோ ஒரு வேலையாக மாடி ஏறி வந்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளி, இங்கே உள்ள நிலையைப் பார்த்து என்னவென்று விசாரித்தான்.

அவனிடம் விவரத்தை சொல்ல, தனக்கு ஒரு வாடகை காரின் விவரம் தெரியும். தான் அந்தக் காரை வரவைக்கிறேன் என்றான்.

அவன் காரை வரவைக்க ஏற்பாடு செய்யக் கீழே ஓடினான்.

“இப்போ மூணு மாடி இறங்கணுமே? இப்போ பார்த்து லிப்ட் வேற வேலை செய்யலை…” என்ன செய்வது என்று தெரியாமல் மலைத்தான் இளஞ்சித்திரன்.

“நாம ஆளுக்கு ஒரு பக்கமா தாங்கி பிடிச்சு மெல்ல கூட்டிட்டு போயிடலாம்யா…” என்றாள் கயற்கண்ணி.

“நீ வெயிட்டு தாங்க கூடாது கண்ணு…” மனைவியின் தாய்மை நிலை அவனை உடனே மறுப்பைத் தெரிவிக்க வைத்தது. மூன்று மாடி இறங்க வேண்டும். அவளின் மீது கணம் இறங்கினால் அவளால் தாங்க என்று நினைத்தான்.

“அதெல்லாம் ஒன்னும் செய்யாதுய்யா. நம்ம புள்ள பத்திரமா இருக்கும். வேற எதுவும் பேசாம பிடி அவுகளை…” என்று கணவனைத் துரிதப்படுத்தினாள்.

அவள் துரிதப்படுத்த வேதாவின் நிலையும் ஒரு காரணமாக இருந்தது. முன்பு ஓரிரு வார்த்தைகள் பேசியவள் இப்போது அதுவும் முடியாமல் விட்டால் அப்படியே கீழே அமர்ந்து விடுவேன் என்பது போல் பல்லைக் கடித்து வலியில் கண்கலங்க நின்றிருந்தாள்.

“சரி பிடி…” என்று மனைவியை வேதவர்ணாவின் இடது பக்கம் பிடிக்க வைத்தான்.

வலது பக்கம் தான் பிடித்துக் கொண்டு, “நாங்க பிடிச்சுக்கிறோம் சிஸ்டர். மெதுவா இறங்குங்க. ஹாஸ்பிட்டல் போய்டலாம்…” என்றான் இளஞ்சித்திரன்.

வேதவர்ணா படியில் மெதுவாக இறங்க ஆரம்பித்தாள். ஆனால் சில படிகள் இறங்கி கொண்டிருந்த போதே அதற்கு மேல் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அடிவயிற்றில் மட்டுமில்லாது, பின்னால் நடுமுதுகிலும் வலி சுண்டி இழுக்க, அப்படியே நின்று விட்டாள்.

“அச்சோ! என்னாச்சுங்க?” என்று கயற்கண்ணி கேட்க,

“இறங்க முடியலை…” என்றாள் கலக்கத்துடன்.

வலியில் அவளுக்கு அதிகமாக வேர்த்துக் கொட்டியது. மயக்கம் வேறு வரும்போல் இருந்தது. மயங்கி விழுந்து விடுவோமோ? என்று பயந்தாள்.

இப்போ எப்படிக் கீழே வரை இறங்க போகிறோம் என்று நினைத்து பயந்தவளுக்குக் கண்களில் இருந்து கண்ணீர் சரசரவென்று இறங்கியது.

“சிஸ்டர் ஆபத்துக்குப் பாவமில்லை. என்னை உங்க அண்ணனா நினைச்சுக்கோங்க…” அவளின் அந்த நிலையைக் கண்டு அவசரமாகச் சொன்ன இளஞ்சித்திரன் சட்டென்று அவளைத் தூக்கியிருந்தான்.

“பின்னாடி வா கண்ணு…” என்று மனைவியும் வேறு பேச இடம் கொடாதவன் வேதவர்ணாவை தூக்கி கொண்டு விரைந்து கீழே இறங்கினான்.

வேதா அவன் தூக்கியதில் சங்கடத்துடன் முதலில் நெளிந்தாள். ஆனால் கண்ணியமாக இளஞ்சித்திரன் அவளைத் தூக்கியிருந்த பாங்கும், அவளின் வலியும் அவளை மறுப்பு தெரிவிக்க விடவில்லை.

அவர்கள் கீழே இறங்கிய போது காவலாளி அழைத்து வந்த காரும் சரியாக வந்து சேர்ந்திருக்க, வேதாவை காரின் பின் இருக்கையில் ஏற்றியவன், கயற்கண்ணியைப் பின்னால் அமர சொல்லிவிட்டு, முன்னால் ஏறிக் கொண்டான் இளஞ்சித்திரன். வாகனம் அருகில் இருந்த மருத்துவமனையை நோக்கி விரைந்தது.

“அவுங்களால பேச முடிஞ்சா அவுகளோட வீட்டுக்காரரு போன் நம்பர் கேளு கண்ணு…” பின்னால் திரும்பி பார்த்துச் சொன்னான் இளஞ்சித்திரன்.

வேதாவை தன் தோளில் சாய்த்திருந்த கயற்கண்ணி, அவளின் முகத்தைத் தன் சேலை முந்தானையால் துடைத்து விட்டு மெதுவாக அவளைப் பேச வைத்து தொலைபேசி எண்ணை கேட்டாள்.

அடிவயிற்றில் சுர்ரென்று பிடித்து இழுத்த வலியை பொறுத்துக் கொண்டு கணவனின் தொலைபேசி எண்ணையும், அவனின் பெயரையும் சொன்னாள் வேதவர்ணா.

அவள் எண்ணை சொல்ல சொல்ல தன் கைப்பேசியில் எண்ணை அழுத்தி ரித்விக்கை தொடர்பு கொண்டான்.

“ஹலோ மிஸ்டர் ரித்விக்?”

“யெஸ், ரித்விக் ஹியர்…” என்று அந்தப்பக்கம் ரித்விக் சொல்லவும்,

“ஐயாம் இளஞ்சித்திரன், உங்க ஃப்ளாட்டுக்கு ஆப்போசிட் ஃப்ளாட்டில் குடியிருக்கேன்…” என்று இளஞ்சித்திரன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ஓ யெஸ்! உங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனா பேசியது இல்லை. என்ன விஷயம் சொல்லுங்க…” என்று கேட்டான் ரித்விக்.

“இங்கே சின்ன ஃப்ராப்ளம் மிஸ்டர் ரித்விக். உங்க வொய்ப் மாடிப்படி ஏறும் போது கால் ஸ்லிப் ஆகிட்டாங்க…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“வாட்! வரு… வருவுக்கு என்னாச்சு?” என்று பதறி துடித்துக் கொண்டு கேட்டான் ரித்விக்.

“கீழே விழாம பிடிச்சிட்டோம். பட், அவங்க வயிற்றில் பெயின் இருக்குன்னு சொல்றாங்க. நானும், என் வொய்ப்பும் அவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போயிட்டு இருக்கோம். நீங்களும் ஹாஸ்பிட்டல் வந்திருங்க…” என்றவன் அருகில் இருந்த மருத்துவமனையின் பெயரை சொன்னான்.

“இதோ… இதோ வந்துட்டேன். வரு இப்போ எப்படி இருக்காள்? கான்ஷியஸ்ல இருந்தா போனை அவகிட்ட கொடுங்களேன்… ப்ளீஸ்…” என்று இறைஞ்சுதலாகக் கேட்டான் ரித்விக்.

“இதோ கொடுக்கிறேன், பேசுங்க…” என்று உடனே போனை வேதாவிடம் நீட்டி, “உங்க ஹஸ்பென்ட் உங்ககிட்ட பேசணுமாம் சிஸ்டர்…” என்றான்.

போனை வாங்கிய வேதா, “ரித்வி…” என்று வலி நிறைந்த குரலில் அழைத்தாள்.

“வரு…வரும்மா… என்னடா… என்ன செய்துடா?” என்று கரகரப்பான குரலில் உயிர் உருக கேட்டான்.

வலியை மீறி வேதாவின் மனதில் ஒரு இதம் பரவியது.

கணவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை ‘வரு’ என்று அழைக்கின்றான்.

அன்றைய சண்டைக்குப் பிறகு ஏதாவது முக்கியமாகப் பேச வேண்டும் என்றால் ‘வர்ணா’ என்று அழைத்துத் தான் பேசுவான்.

அப்பொழுதெல்லாம் கணவனின் கோபத்தில் அவளின் மனம் நத்தையாகச் சுருண்டு விடும்.

தான் பேசிய வார்த்தையால் அவன் எவ்வளவு காயப்பட்டிருக்கிறான் என்று அவளுக்குப் புரிய வைத்த நாட்கள் தான் அவன் சரியாகப் பேசாமல் இருந்த இந்த இடைப்பட்ட காலம்.

தான் ஏன் அன்று அப்படிப் பேசினோம் என்று அவளை அவளே திட்டிக்கொண்ட காலகட்டமும் அதுதான்.

சில தம்பதிகள் செய்யும் தவறு ஒன்று. கணவன், மனைவிக்குள் சண்டை வந்தால் தன் துணையின் குறையைப் பெரிதாக எடுத்து பேசி சண்டையை வளர்ப்பது.

ரித்விக்கின் குறையாக அவள் அந்த நேரத்தில் கருதியது, அவனின் புறம் சொந்தங்கள் யாரும் இல்லாதது. சொந்தங்கள் இருந்தால், தான் தேடும் சொந்தங்களின் அருமை தெரிந்திருக்கும் என்று அன்றைய கோபத்தில் அவளுக்குத் தோன்ற வைக்க, அதை வார்த்தைகளால் கொட்டியிருந்தாள்.

உங்களைக் காதலித்ததைத் தப்பு என்று நினைக்கிறேன் என்று அவள் சொன்னதும் அந்த நேர கண்மூடித்தனமான கோபத்தில் தானே தவிர, அவளின் உள்மனம் என்றுமே அப்படி நினைத்தது இல்லை என்று உறுதிப்பட இத்தனை நாட்களில் புரிந்து கொண்டாள்.

கணவன் சரிவரப் பேசாமல் இருந்த நாட்களில் தான், முன் போல் எதற்கு எடுத்தாலும் கோபப்படாமல், உறவுகளைப் பற்றி நினைத்து உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக இருந்தாள்.

கணவனை எப்படிச் சமாதானம் செய்து பழையபடி அவனை மாற்றுவது என்று யோசித்தே அவளின் நாட்கள் கழிந்ததால் அவளை வேற எண்ணம் எதுவும் அண்டவில்லை.

அவளின் அந்த நிலையே அவளை முன்பை விட நிதானமுள்ளவளாகவும் மாற்றியிருந்தது.

“வரு… என்னடா… பேச முடியலையா? வலிக்குதா? இதோ நான் காரில் ஏறிட்டேன்டா, வந்துடுறேன். பயப்படாம இரு. உனக்கு ஒன்னும் செய்யாது…” மனைவியை அவன் வரு அழைத்த இதத்தில் அமைதியாகி போனதில் அவளால் முடியவில்லையோ என்று பதறி போனவன், வேகமாகப் படபடத்தான்.

“ஐயாம் ஆல் ரைட் ரித்வி. நீங்க கவனமா வாங்க…” என்று தன்னைச் சமாளித்துக் கொண்டு சொன்னாள்.

வலியில் இருக்கும் போது கூடத் தன் கவனத்தைப் பற்றி மனைவி கவலைப்பட்டதைக் கேட்டு நெக்குறுகி போனான் ரித்விக்.

“தைரியமா இருடா. நான் வந்துடுறேன். போனை அவர்கிட்ட கொடுடா, பேசணும்…” என்று இளஞ்சித்திரனிடம் கொடுக்கச் சொன்னான்.

“சொல்லுங்க ரித்விக்…” என்று போனை வாங்கி இளஞ்சித்திரன் சொன்னதும்,

“நீங்க இப்போ போய்ட்டு இருக்குற ஹாஸ்பிட்டலில் தான் என் வொய்ப் வேதவர்ணாவுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்துக்கிட்டு இருக்கோம். என் வொய்ப் பேரை சொல்லுங்க. அங்கயே அவளோட டீடைல்ஸ் எல்லாம் இருக்கும். அங்கே டாக்டர் காயத்ரி தான் அவளுக்கு வழக்கமா ட்ரீட்மெண்ட் பண்ற டாக்டர். நான் கிளம்பிட்டேன். நான் வரும் வரை பார்த்துக்கோங்க. ப்ளீஸ்…” என்றான் ரித்விக்.

“ஓகே மிஸ்டர் ரித்விக். நீங்க வாங்க. நாங்க பார்த்துக்கிறோம்…” என்று இளஞ்சித்திரன் பேசி முடிக்கவும், மருத்துவமனையும் வந்திருந்தது.

வேதவர்ணா அடுத்தச் சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

ரித்விக் விவரங்கள் சொல்லியிருந்ததால் இளஞ்சித்திரனுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும் வெளியில் காத்திருக்க ஆரம்பித்து அரைமணி நேரம் கடந்த பிறகு ஓட்டமும், நடையுமாக வந்து சேர்ந்தான் ரித்விக்.

“சாரி டிராபிக்ல மாட்டிக்கிட்டேன். வரு எங்கே இருக்காள்?” என்று இளஞ்சித்திரனின் முன் மூச்சு வாங்க நின்று கேட்டான் ரித்விக்.

“நாங்க வந்தப்ப எமர்ஜென்சி டாக்டர்தான் இருந்தாங்க. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் டாக்டர் காயத்ரி வந்தாங்க. உள்ளே பார்த்துக்கிட்டு இருக்காங்க…” என்று அங்கே மூடியிருந்த அறைக்கதவை காட்டினான் இளஞ்சித்திரன்.

“ஓ…!” என்ற ரித்விக் அறைக்கதவை வருத்தத்துடன் பார்த்தான்.

அந்த அறைக்கதவின் கண்ணாடி வழியாக மனைவியைப் பார்க்க நினைத்து எட்டி எட்டிப் பார்த்தான். ஆனால் கதவிற்கு அந்தப்பக்கம் ஒரு திரை மாட்டப்பட்டிருக்க ஒன்றும் பார்க்க முடியாமல் போனது.

ரித்விக் ஏக்கத்துடன் கதவையே பார்த்துக் கொண்டிருக்க, அருகில் நின்றிருந்த கணவனின் கையைச் சுரண்டி அழைத்த கயற்கண்ணி, “பாக்க பாவமா இருக்குயா. அவருக்கிட்ட ஏதாவது சொல்லு…” என்றாள் மெதுவான குரலில்.

மனைவிக்கு இசைவாகத் தலையசைத்த இளஞ்சித்திரன், ரித்விக்கை நெருங்கி அவனின் தோளில் கைவைத்து, “டோன்ட் வொரி மிஸ்டர் ரித்விக். உங்க மிசஸுக்கு ஒன்னும் ஆகாது…” என்றான்.

இளஞ்சித்திரனின் புறம் திரும்பிய ரித்விக்கின் கண்கள் கலங்கி இருந்தன. ஆனால் தன் கலங்கலைப் பற்றிக் கவலைப்படாது, “ஒன்னும் ஆகக்கூடாது. ஆகவே கூடாது…” என்றான் உணர்ச்சி வசத்துடன்.

“கண்டிப்பா ஒன்னும் ஆகாது. கவலைப்படாதீங்க…” என்று அவனுக்குச் சமாதானம் சொன்னான் இளஞ்சித்திரன்.

“ம்ம்…” என்ற ரித்விக் சில நொடிகள் மௌனமாக இருந்தான்.

பின் தன் அடைத்த தொண்டையைச் சரி செய்யச் செருமி விட்டு, “என்ன நடந்தது இளஞ்சித்திரன்? படியில் உருண்டாளா?” என்று வேதனையுடன் கேட்டான்.

“இல்லை ரித்விக். ஒரு இரண்டு மூணு படிக்கட்டில் சட்டென்று அப்படியே சரிந்து இறங்கிட்டாங்க. அப்போதான் நானும், என் மனைவியும் பார்த்து மேலும் சரியவிடாமல் பிடித்தோம். அவங்க அடுத்தப் படியில் மட்டும் சருக்கியிருந்தால் உருண்டிருப்பாங்க. நல்லவேளையா அப்படி எதுவும் நடக்கலை…” என்று நடந்ததைத் தெரிவித்தான் இளஞ்சித்திரன்.

“ஓ காட்!” என்று அதிர்ந்த ரித்விக்கிற்கு உடம்பும், மனதும் நடுங்கி போனது. படிகளில் மட்டும் உருண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

“என் வருவை விழாமல் பிடித்து உடனே ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்ததிற்குத் தேங்க்யூ சோ மச் மிஸ்டர் இளஞ்சித்திரன்…” என்று மனதார நன்றி தெரிவித்தான் ரித்விக்.

“இட்ஸ் ஓகே ரித்விக். எங்களால் முடிந்த சின்ன உதவி. அவ்வளவுதான்…” என்றான் இளஞ்சித்திரன்.

சின்ன உதவியா? மனைவி அவனின் உயிர் மூச்சல்லவா? அவளுக்கு ஒன்றென்றால் அவனே இல்லையே என்று நினைத்துக் கொண்டான் ரித்விக்.

மனைவியின் நிலையை நினைத்து அவன் கலங்கி நின்றிருந்த நேரத்தில், ஒரு செவிலி வந்து மருத்துவர் அழைப்பதாகச் சொல்லி ரித்விக்கை அழைத்தார்.

“இதோ வந்துடறேன்…” என்று இளஞ்சித்திரனை பார்த்துச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான் ரித்விக்.

“வாங்க மிஸ்டர் ரித்விக், உட்காருங்க…” என்று ஆங்கிலத்தில் வரவேற்றார் மருத்துவர்.

அவர்களின் உரையாடல் மேலும் ஆங்கிலத்தில் தொடர்ந்தன.

“என் வொய்ப் எப்படி இருக்காள் டாக்டர்?” என்று கலக்கத்துடன் கேட்டான்.

“மிசஸ் வேதவர்ணாவுக்கு லேபர் பெயின் வரவில்லை ரித்விக். அவர்கள் படியில் சருக்கியதில் அடிவயிற்றிலும், நடுமுதுகிலும் மூச்சுப் பிடிப்பு போல் ஏற்பட்டுள்ளது. அதுதான் அவங்க வலிக்கான காரணம். பேபிக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. மூமெண்ட் எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால்…”

“ஆனால் என்ன டாக்டர்?” வேகமாகக் கேட்டான் ரித்விக்.

“வேதாவிற்கு ஹை லெவலில் பிரஷர் இருக்கு. பிரசவ நாள் நெருங்கும் நிலையில் அவங்களுக்கு இவ்வளவு பிரஷர் இருப்பது குழந்தைக்கும், அவங்களுக்கும் நல்லது இல்லை…” என்றார் மருத்துவர் காயத்ரி.

“ஓ!” என்று அதிர்ந்த ரித்விக். ஏசி அறையிலும் வேர்த்து வழிந்த முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான்.

“ஏற்கனவே லைட்டா அவங்களுக்குப் பிரஷர் இருக்குன்னு சொல்லி நாம அதுக்கு ட்ரீட்மெண்ட்டும் எடுத்துட்டு இருந்தோம். ஆனால் இப்போ அதை விட அதிகமா இருக்கு…” என்று சொல்லி ரத்த அழுத்தத்தின் அளவை சொன்னார் மருத்துவர்.

“ஓ நோ! பிரஷரை குறைக்க வழியில்லையா டாக்டர்?” என்று பதட்டத்துடன் விசாரித்தான்.

“அதுக்கான ட்ரீட்மெண்ட் பற்றிப் பேசத்தான் உங்களை அழைத்தேன் ரித்விக். இப்போ வேதாவிற்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்கிறது. இப்போ அதிகமாக இருந்த பிரஷரை குறைக்க ஒரு இன்ஜெக்ஷன் போட்டுருக்கோம். இன்னும் இன்னைக்கு நைட் அண்ட் மார்னிங் ஒன்னுன்னு இரண்டு இன்ஜெக்ஷன் போடணும். மூச்சுப்பிடிப்பால் பெயின் வேற இருக்கு. அதைக் குறைக்கவும் ட்ரீட்மெண்ட் பண்ணனும். இங்கே இரண்டு நாளைக்கு அட்மிட் பண்ணனும். பிரஷர் குறையவும் தான் டிஸ்சார்ச் பண்ணமுடியும்…” என்றார் மருத்துவர்.

“ஓ ஓகே டாக்டர். அவளுக்குச் சரியானால் போதும்…” என்றான் ரித்விக். தானே இன்னும் மனைவியின் இரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணமாக இருக்கப் போகின்றோம் என்பதை அறியாமல்!