பூவோ? புயலோ? காதல்! – 23

அத்தியாயம் – 23

“நீ சந்தோஷமா இருக்கியா கண்ணு? உன்னைய நான் நல்லா பார்த்துக்கிறேனா? ” என்று தன் மார்பில் அடைக்கலம் ஆகியிருந்த மனைவியிடம் கேள்வி எழுப்பினான் இளஞ்சித்திரன்.

“இப்போ எதுக்குய்யா இப்படிக் கேள்வி கேட்கிற?” என்று அவனின் மார்பில் நாடியை ஊன்றி லேசாக அண்ணாந்து கணவனின் முகம் பார்த்துக் கேட்டாள் கயற்கண்ணி.

“கேட்டதுக்குப் பதிலு சொல்லு கண்ணு!” தன்னிடம் வாயால் மட்டும் இல்லாமல் கண்களாலும் கேட்ட மனைவியின் புருவங்களை நீவி விட்டுக்கொண்டே கேட்டான்.

“ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்யா. நான் நினைச்சதை விட நீ என்னைய நல்லாவே பார்த்துக்கிற. நான் சரியா படிப்பை முடிக்காதவ. நீ பெரிய படிப்பு படிச்சு பெரிய சோலியில் இருக்குற ஆளு. உனக்கும், எனக்கும் எப்படிச் சரியா வரும்னு பயந்திருக்கேன். ஆனா என்னோட பயம் அநாவசியம்னு சொல்லுற மாதிரி என்னைய கண்ணுக்குள்ள வச்சு தாங்குற. இதை விட எனக்கு வேற என்ன வேணும்னு இருக்கு…” என்று பெரிதாகவே விளக்கம் சொன்னாள் கயற்கண்ணி.

“அப்புறம் ஏன் கண்ணு நேத்து நைட்டு அப்படி அழுத?” என்று அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்த வண்ணம் கேட்டான்.

“அது… அது வந்துய்யா…” என்று கயற்கண்ணி தடுமாறினாள்.

“ம்ம்… சொல்லு கண்ணு! நமக்கு ஒரு கெட்டது நடக்க நான் விட்டுருவேனா? நான் உனக்குத் துணையா இருக்கும் போது, ஏன் கண்ணு நீ தேவையில்லாம எதை எதையோ நினைச்சு அழணும்? இன்னமும் நீ அழுதது ஏ மனசை பிசைய வச்சுக்கிட்டு இருக்கு கண்ணு…” என்று வருத்தத்துடன் சொன்ன இளஞ்சித்திரனின் மனதில் இன்னும் இரவு நடந்தது மீண்டும் கண்முன்னால் நடந்து கொண்டிருப்பது போல் காட்சிகளாக விரிந்தன.

அதிக நேரம் கதவை தட்டிய பிறகு வந்து கதவை திறந்த மனைவியின் அழுத விழிகளைக் கண்டே பயந்து போன இளஞ்சித்திரன், அடுத்து அவனைக் கட்டிக்கொண்டு கதறி அழ ஆரம்பிக்கவும் துடித்தே போனான்.

“என்ன கண்ணு, ஏன் அழற?” என்று அவளைத் தன்னிடமிருந்து பிரிக்க முயன்று கொண்டே கேட்டான்.

அவனை விட்டு பிரிய மறுத்தவள், அழுகையை விடாமல் தொடர்ந்தாள்.

கதவு வேறு திறந்து கிடக்க, அக்கம்பக்க ஃப்ளாட்டில் உள்ளவர்கள் என்னவென்று கேள்வி கேட்டால் அவனுக்கே தெரியாததைப் பற்றி என்ன சொல்வான்? அதனால் முதல் வேலையாக மனைவியை உள்ளே தள்ளிக் கொண்டு போனவன் கதவை அடைத்துத் தாழ் போட்டான்.

அவன் என்ன செய்கிறான் என்பதைக் கூட அறியாமல் அப்படியொரு அழுகை அழுதாள் கயற்கண்ணி.

வீட்டிற்குள் வந்து சில நிமிடங்கள் கடந்த பிறகும், பல முறை “என்னாச்சு கண்ணு?” என்று அவன் கேட்ட பிறகும் கயற்கண்ணியின் அழுகை சிறிதும் குறைந்தபாடில்லை.

காரணமே தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

அப்படியும் அவளின் அழுகையைப் பார்த்துக் கொண்டு அவனால் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

அதனால் ஒரு வித வேகத்துடன் அவளைத் தன்னிடமிருந்து பிரித்தவன், அவளின் இருபக்க தோளையும் பிடித்துக் குலுக்கியபடி, “கண்ணு இப்போ என்னன்னு சொல்லப் போறீயா? இல்லையா?” என்று அதட்டினான்.

அவனின் அந்த அதட்டல் வேலை செய்ய, கண்களில் தேங்கிய விழிகளுடன் கணவனை மலங்க மலங்க பார்த்து வைத்தாள்.

“எதுக்கு அழுகுறன்னு கேட்டேன். சொல்ல போறீயா இல்லையா?” என்று மீண்டும் ஒரு அதட்டல் போட்டான்.

மலங்க விழித்தவள் அந்த அதட்டலில் திடுக்கிட்டு பயந்து அவனைப் பார்த்தாள்.

அவள் பயந்து போனதைப் பார்த்து, அவளின் மேல் இரக்கம் வந்தாலும், அதை வெளியே காட்டாமல் மறைத்தவன் ‘நீ இப்போ சொல்லியே ஆக வேண்டும்’ என்பது போல் அவளை உறுத்துப் பார்த்தபடி நின்றிருந்தான்.

அதில் அவளுக்கு இன்னும் தான் கண்களில் இருந்து கண்ணீரை பெருக வைத்தது.

“அழாதே கண்ணு…!” என்று கடுமையாக மீண்டும் ஒரு அதட்டல் போட, தேம்பல் சத்தத்தை வெளியே விடத் தயாராக இருந்த வாயை இரு கரங்கள் கொண்டு சட்டென்று மூடிக்கொண்டாள்.

கண்களில் கண்ணீர் பெருகி கழுத்து வரை வடிந்திருக்க, அவனின் கோபத்தில் உண்டான பயம் முகம் முழுவதும் பரவியிருக்க, லேசாக உடல் நடுங்கி, வாயை இரண்டு உள்ளங்கையாலும் அவள் மூடிக்கொண்டு நின்றிருந்த கோலம் இளஞ்சித்திரனின் உள்ளத்தை உருக்க, அவளை வேகமாகத் தன்னருகே இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.

“என்ன கண்ணு இப்படிப் பயந்து நடுங்குற? நீ விடாம அழுகவும் தான், கொஞ்சம் அதட்டினேன். என்ன விசயத்துக்கு நீ அழுகுறன்னு தெரியாம எனக்கும் பயமா இருக்குல்ல?” என்று சாந்தமாகக் கேட்டான்.

கணவனின் அணைப்பில் அடங்கியதும் பயம் குறைந்தவள், அவனின் மனநிலையையும் புரிந்து கொண்டாள்.

சில நொடிகளுக்குப் பிறகு அவனை விட்டு விலகி சென்று தொலைக்காட்சியை இயக்கினாள்.

“ஏ கேள்விக்குப் பதில் சொல்லாம என்ன கண்ணு இப்ப போய் டிவியைப் போட்டுட்டு இருக்க?” என்று புரியாமல் கேட்டான்.

அவனுக்குப் பதிலை வார்த்தைகளால் சொல்லாமல், அமைதியாகத் தொலைக்காட்சியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே வந்தவள் ஒரு செய்தி சேனல் வந்ததும் அதை வைத்து விட்டு, ஓடி வந்து மீண்டும் அவனின் அணைப்பில் அடங்கிக் கொண்டாள்.

“நீ செய்றது ஒன்னும் புரியல…” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே அந்தச் செய்தி சேனலில் சொன்ன செய்தியை திகைத்துப் பார்த்தான்.

அந்தச் செய்தியில் ஒரு இளைஞன் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடக்க, அவனின் அருகில் நின்று ஒரு இளம்பெண் அழுது கொண்டிருந்தாள்.

“மனைவியின் கண் முன்னே நடந்த பயங்கரம்! காதலித்து வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால், மகளின் கண் முன்பே மருமகனை கூலிப்படை வைத்து வெட்டிய தந்தை!

மணமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்! இந்த ஆணவக் கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்…” என்ற செய்தியை ஒரு பெண்மணி வாசித்துக் கொண்டிருந்தார்.

அந்தச் செய்தியை பார்த்ததுமே மனைவியின் அழுகைக்கான காரணம் அவனுக்குப் புரிந்து போனது.

தன் மார்பில் சாய்ந்திருந்த மனைவியின் முகத்தைத் தூக்கி தன் முகம் பார்க்க வைத்தவன், “அவங்களுக்கு நடந்த மாதிரி நமக்கும் நடந்திருமோனு பயந்து போய் அழுதாயா கண்ணு?” என்று கேட்டான்.

“ம்ம்…” என்று தலையசைத்தவள் அந்தக் காட்சியைக் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாமல் மேனி நடுங்கி போனாள்.

“எனக்கு ரொம்பப் பயமா இருக்குய்யா. ஏதோ மனசை போட்டு உறுத்துற மாதிரியே இருக்கு. அந்த நியூஸ்ல வந்தவங்க யாரு எவருனே தெரியாது. ஆனா அவங்க கிடந்த கோலம், என்னைய நடுங்க வச்சுருச்சுய்யா. இப்படி நம்மையும் வெட்டத்தானே ஓ அய்யா நம்மள தேடிட்டு இருக்காரு. அவரு கையில் மட்டும் நாம மாட்டினா, என்ன நடக்கும்னு நினைச்சுப் பார்க்கவே ரொம்பப் பயமா இருக்குய்யா…” என்று வாய் விட்டு புலம்பியவள் மீண்டும் கதறி அழ ஆரம்பித்தாள்.

அவனுக்கும் அந்தக் காட்சி மனதை பிசைந்தது. தனக்கே இப்படி இருந்தால் மனைவியின் மனநிலை என்ன என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனாலும் அவளின் கதறல் அவனை உலுக்க, யாரென்று அறியாத அந்த இளைஞனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி விட்டு, மனைவியைத் தேற்ற நினைத்தான்.

அவளின் முகத்தை நிமிர்த்தித் தன் இரு உள்ளங்கைகளிலும் அவளின் கன்னத்தைத் தாங்கி பிடித்தவன், “அழாதே கண்ணு… ஷ்ஷ் அழாதே! இங்கே பாரு… என் முகத்தைப் பாரு…!” என்று தன் முகம் பார்க்க வைத்தான்.

“ஏ அய்யனும் நம்மளை இப்படி வெட்டி போட துடிச்சுட்டுதேன் இருப்பார். இல்லைன்னு சொல்லலை கண்ணு. ஆனா அவர் வெட்ட வந்தா இந்தா வெட்டிக்கோங்கன்னு நான் கொடுத்துட்டு இருப்பேன்னு நினைச்சியா கண்ணு? ஏ மேல மட்டுமில்ல ஓ மேலேயும் கை வைக்க முடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன்…” என்று உறுதிப்படக் கூறினான்.

அவனின் உறுதி அவளைச் சமாதானம் செய்தாலும், அவளின் அழுகை அடங்குவேனா என்று அடம் பிடித்தது.

தேம்பிக் கொண்டே இருந்தாள். அதைக் கண்டவன் இந்த முறை வார்த்தைகளால் அழாதே என்று சொல்லாமல் செய்முறையில் கண்டிக்க ஆரம்பித்தான்.

அவளின் அடுத்தத் தேம்பல் ஒலி, அவனின் அதரங்களுக்குள் அடைக்கலமாகிப் போனது. இரவு உணவையும் மறந்து மனைவியைச் சமாதானம் செய்யும் வேலையைக் கணவனுக்கே உரிய பாணியில் கடைபிடிக்க ஆரம்பித்தான் இளஞ்சித்திரன்.

கயற்கண்ணியும் கணவனின் சமாதானத்தில் கண்ணீரை மறந்து காதலில் கரைந்து போனாள்.

மறுநாள் மதியவேளையான அந்த நேரத்திலும் மனைவியைத் தன் கையணைப்பில் வைத்திருந்தான் இளஞ்சித்திரன்.

அன்று அவன் வீடு இருக்கும் ஏரியாவிலேயே ஒரு கம்பெனியிலிருந்து அவனுக்கு வேலை வந்திருக்க, அங்கே சென்று கணினியை பழுது நீக்கி கொடுத்துவிட்டு வந்தான்.

அந்த வேலை சீக்கிரமே முடிந்துவிட அப்படியே மனைவியையும் ஒர் எட்டு பார்த்துவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்து வீட்டிற்கு வந்திருந்தான்.

மதிய உணவை மனைவியுடன் முடித்துவிட்டு, நேற்று நடந்த நிகழ்வைப் பற்றி அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“நீ எல்லாமே பார்த்துப்பதான்யா… ஆனா ஓ அய்யா சொந்த பந்தத்தை எல்லாம் கூட்டிட்டு வருவார். ஆனா நாம ரெண்டு பேரும் தனியா இருக்கோமேய்யா. அதனால்தான் எனக்குப் பயம்…” என்றாள்.

“எத்தனை பேரை வேணும்னாலும் கூட்டிட்டு வரட்டும் கண்ணு. அதனால் என்ன?” என்று அசால்டாகக் கேட்ட கணவனை விழி விரித்துப் பார்த்தாள்.

“அத்தனை பேரை நீ ஒருத்தனே எப்படியா சமாளிப்ப?” என்று வியப்பு மாறாமலேயே கேட்டாள்.

“நான் சமாளிக்கிறது எல்லாம் அப்புறம் இருக்கட்டும் கண்ணு. மொதல்ல நாம இருக்கிற இடத்தை அவங்க கண்டுபிடிக்கிறதே கஷ்டம். அப்படி இருக்கும்போது தேவையில்லாம நாம ஏன் பயந்துக்கணும்?” என்று கேட்டான்.

கணவன் ஏனோ மிக அலட்சியமாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனை யோசனையுடன் பார்த்தாள்.

அப்போது இளஞ்சித்திரனின் கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி கேட்க, சட்டைப் பையில் இருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.

அதில் வந்த செய்தியை படித்தவனின் முகம் சுருங்கியது. தன் முக மாற்றத்தை மனைவி கவனிக்கும் முன் அவளை விட்டு மெதுவாக விலகியவன், “குடிக்கக் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா கண்ணு…” என்று அவளைச் சமையலறைக்குள் அனுப்பினான்.

கயற்கண்ணி திரும்பி வந்த போது, வரவேற்பறையில் இளஞ்சித்திரன் இல்லை.

“தண்ணி கேட்டுட்டு எங்கன போனாங்க?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டே படுக்கையறைக்குள் சென்று பார்த்தாள்.

அங்கேயும் இல்லை என்றதும் “எங்கன இருக்கய்யா?” என்று கேட்டுக் கொண்டே மீண்டும் வரவேற்பறைக்கு வந்தாள்.

அப்போது வெளிக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் இளஞ்சித்திரன்.

“என்கிட்டே தண்ணி கேட்டுட்டு வெளியே இங்கனய்யா போன?” என்று கேட்டாள்.

“ஒரு போன் பேச வேண்டியது இருந்தது கண்ணு. இங்கன சிக்னல் சரியா இல்லைன்னு வெளியே லிப்ட்கிட்ட நின்னு பேசிட்டு வந்தேன்…” என்று சொன்னவனின் குரல் சுரத்தையின்றி ஒலித்தது.

புருவத்தைச் சுருக்கி, தாடையைத் தடவி மனைவி நீட்டிக் கொண்டிருந்த தண்ணீரை கூட வாங்க மறந்து யோசனையின் பிடியில் சிக்கியிருந்தான் இளஞ்சித்திரன்.

“என்ன யோசனைய்யா? இந்தா தண்ணி…” என்று கயற்கண்ணியின் குரல் கேட்டதும், சட்டென்று யோசனையின் பிடியிலிருந்து வெளியே வந்தவன், தண்ணீரை வாங்கிப் பருகினான்.

“என்ன யோசனைன்னு கேட்டேன்யா. போனுல யாரு? பேசிட்டு வந்ததில் இருந்து ஒரு மாதிரியா இருக்க?” என்று அவன் கொடுத்த டம்ளரை திருப்பி வாங்கிக் கொண்டே கேட்டாள்.

அவளின் கேள்வியில் உள்ளுக்குள் அதிர்ந்தவன் வெளியே முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு, “வேலை விசயமாத்தேன் போனு கண்ணு. அதைப் பத்தி தேன் யோசிச்சுட்டு இருந்தேன்…” என்றவன், “சரி கண்ணு, நான் போயி அதை என்னன்னு பார்த்துக்கிறேன். நீ செத்த நேரம் ரெஸ்ட் எடு. நம்ம புள்ள உன்னைய அசத்த ஆரம்பிச்சுட்டான் போல. முகம் எல்லாம் சோர்ந்து கிடக்கு…” என்று பிள்ளையைப் பற்றிப் பேசி தன்னைப் பற்றிய கேள்வியில் இருந்து அவளை வெளியே வர வைத்தான்.

குழந்தையைப் பற்றிப் பேசவும், தன் வயிற்றைத் தடவி கொண்டே பூரிப்பாகக் கணவனைப் பார்த்தாள்.

“ஓ புள்ள ரொம்பச் சமத்துய்யா… எனக்கு வாந்தி, மயக்கம் கூட ரொம்ப வர விடலை…” என்று உற்சாகத்துடன் சொன்னாள்.

அவளின் உற்சாகம் அவனையும் தொற்றிக் கொள்ள, மனைவியை நெருங்கி நின்று அவளின் வயிற்றில் கை வைத்து இதமாகத் தடவினான்.

அந்த இதத்தில் மேனி சிலிர்த்து அவள் அமைதியாக நின்று விட, இன்னும் இதமாக அவளின் மணி வயிற்றில் கையை ஓட விட்டவன், பின் நடுவயிற்றில் அப்படியே கையைத் தேங்க வைத்துக் கண்களை மூடி தன் பிள்ளையை உணர முயன்றான் இளஞ்சித்திரன்.

மனம் பிள்ளையைப் பற்றிய சிலாகிப்பில் மூழ்கி கிடக்க, கருவாக இருந்த பிள்ளையிடம் மனதோடு உறவாடுபவன் போலக் கண்களை இறுக மூடி மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

‘நான் கேள்விப்பட்ட விசயம் உண்மையா இருந்தா, இனி எந்த நேரமும் என்னமும் நடக்கலாம் தங்கம். ஓ அம்மாவுக்கு எதுவும் ஆக விடாம பார்த்துப்பேன்னு அவளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கேன். அந்த வாக்கை நான் எப்படியாவது காப்பாத்திடணும். ஓ அம்மாவை காக்க எனக்குப் பலனை கொடுன்னு என்னோட சேர்ந்து நீயும் சாமிக்கிட்ட வேண்டிக்கோ தங்கம்…” என்று குழந்தையுடன் மனதோடு உரையாடினான்.

“யோவ்! என்னய்யா தூங்கிட்டியா? சோலிக்கு போவணும்னு சொல்லிட்டு நின்னுட்டே தூங்கிட்டு இருக்க…” என்று சொன்ன மனைவியின் குரல் கேட்டதும் தான் கண்களைத் திறந்தான் இளஞ்சித்திரன்.

“எப்போ பார்த்தாலும் என்னைய சோலிக்கு அனுப்புறதுலேயே குறியா இரு…” என்று கேலியாகச் சொல்லி அவளின் நெற்றியில் முட்டினான்.

“உனக்குச் சோலிக்குப் போகப் பிடிக்கலைனா, பேசாம வீட்டுலயே இரு! உன்னைய யாரு வேணாம்னு சொன்னாங்களாம்? எல்லா நேரமும் நீ வீட்டுலயே இருந்தாலும் எனக்குச் சந்தோசந்தேன்…” என்றாள் கொஞ்சலாக.

“எந்த நேரமும் வீட்டுலயே இருக்கிறதா?” என்று கேட்டவன் அவளைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தான்.

“என்னய்யா ஒரு மார்க்கமா பார்க்குற?” என்று அவனைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“வருசத்துக்கு ஒரு புள்ள போதுமா கண்ணு? இல்ல ரெண்டு வேணுமா?” என்று வாயிற்குள் அடக்கிய சிரிப்புடன் கேட்டான்.

“வருசத்துக்கு ஒன்னு இல்லனா ரெண்டு புள்ளயா? என்னய்யா சம்பந்தம் இல்லாம பேசுற?” என்று குழப்பமான முகத்துடன் கேட்டாள்.

“வீட்டுலயே இருந்தா வருசத்துக்கு ஒன்னு இல்லை இரண்டு புள்ள பெத்துக்கிற சோலிதேன் பார்க்க முடியும் கண்ணு…” என்றான் நக்கலாக.

“என்னது?” என்று வாயை பிளந்தவள், அவன் சொன்ன சேதி புரிந்து பொய்யான முறைப்புடன் அவனின் நெஞ்சில் குத்தினாள்.

“சோலிக்குப் போவலைனா புவ்வாக்கு என்ன செய்றதுன்னு கேட்பன்னு பார்த்தா, புள்ள பெத்துக்கிறதை பத்தியா பேசுற…” என்று கேட்டுக் கொண்டே அவனைச் செல்லமாக அடித்தாள்.

“எனக்குத் தோணுறதை தானே கண்ணு சொல்ல முடியும்? எனக்குப் புள்ள நினைப்புத்தேன் வந்தது…” என்று அவளின் அடிகளை வாங்கிக் கொண்டே இன்னும் சிரித்துக் கொண்டே சொன்னான்.

“நல்லா வந்துச்சு நினைப்பு…” என்று சொல்லிக் கொண்டே இன்னும் அடியை தொடர, அவளின் இரு கைகளையும் தன் ஒற்றைக் கையால் பிடித்துத் தடுத்தவன், இன்னும் தனக்கு நெருக்கமாக அவளை இழுத்து, இதழில் வேகமாக ஒரு முத்தத்தைப் பதித்தான்.

“என்னைய அடிச்சதுக்குத் தண்டனை…” என்று இதழ்களுக்கு இடைவெளி விட்டு சொன்னவன், மீண்டும் அவளின் இதழ்களைச் சிறை செய்து தன் தண்டனையைத் தொடர்ந்தான்.

சிறிது நேரம் கடந்த நிலையில் இருவரின் முகத்திலும் மலர்ச்சி மலர்ந்திருந்தது.

மீண்டும் வேலைக்குக் கிளம்பத் தயாரானான் இளஞ்சித்திரன்.

“நானும் கீழே வரைக்கும் வரட்டுமாய்யா…” என்று அவனிடம் கேட்டாள் கயற்கண்ணி.

“எதுக்குக் கண்ணு? கடைக்கு எதுவும் போவணுமா?” என்று எச்சரிக்கை பூத்த கண்களுடன் கேட்டான்.

“கடைக்கு இல்லைய்யா… இங்கன கீழே கேட் கிட்டே இந்நேரம் நல்லா காத்து வரும்யா. செத்த நேரம் அப்படியே காலாற நடந்துட்டு வந்து படுப்போம்னு நினைச்சேன்…” என்றாள்.

“ஓ! சரி கண்ணு. நடந்துட்டு வா! ஆனா கேட்டை தாண்டி இந்த வெயிலுல வெளியே போவாத கண்ணு. எதுவும் வேணும்னா என்கிட்ட சொல்லு. நான் வாங்கிக் கொடுத்துட்டு சோலிக்கு கிளம்புறேன்…” என்றான்.

“நான் எங்கனயும் போவலையா. எனக்கு எதுவும் வேணாம். நீ சோலிக்கு கிளம்பு…” என்றாள்.

“சரி வா! சாவி எடுத்துக்கோ…!” என்று நிம்மதியுடன் சொன்னவன், அவளையும் அழைத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான்.

மின்தூக்கி வழியாகக் கீழே இறங்கி செல்ல முடியாமல் அது பழுது என்ற அறிவிப்பு பலகையின் மூலம் அறிவித்துக் கொண்டிருந்ததால் படி வழியாக இறங்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் இரண்டு படிகள் இறங்க, அப்போது நிறைமாத கர்ப்பிணி பெண் மெதுவாக மேலே ஏறி வந்து கொண்டிருக்கும் போதே சரிந்து விழ போக, இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும் பதறி போய், “அய்யோ! பார்த்துங்க…” என்று ஆளுக்கு ஒரு கையைப் பிடித்து நிறுத்தி அவளைக் கீழே விழ விடாமல் தாங்கி பிடித்திருந்தனர்.