பூவோ? புயலோ? காதல்! – 22

அத்தியாயம் – 22

“வீட்டுக்கு கிளம்பிட்டியா வேதா?” என்று கேட்ட தோழி வித்யாவை பார்த்து புன்முறுவல் பூத்தாள் வேதவர்ணா.

“இதோ கிளம்பணும் வித்தி…” என்றாள்.

“உனக்குத் தான் அழைப்பு வருமே உன் ஹஸ்பெண்ட்கிட்ட இருந்து. இன்னுமா வரலை?”

“இன்னும் வரலை வித்தி…” என்று வேதா சொல்லிக் கொண்டு இருந்த போதே, அவளின் கைப்பேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலியை எழுப்பியது.

அதை எடுத்துப் பார்த்தாள் வேதா.

“இதோ அழைப்பு வந்துருச்சு வித்தி. நான் கிளம்புறேன்…” என்று சொல்லி இருக்கையை விட்டு எழுந்த வேதாவின் வயிறு நிறைமாதத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

எட்டாம் மாதம் நிறைவடையும் நிலையில் இருந்தது அவளின் தாய்மை பேறு.

பெரிதாக இருந்த வயிற்றின் மீது ஒரு கையைப் பாதுகாப்புக்காக வைத்துக் கொண்டு மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

“என்ன வேதா, இப்போ எல்லாம் உன் ஹஸ்பெண்ட்கிட்ட இருந்து போன் வராமல் மெசேஜ் மட்டும் வருது. முன்னாடி எல்லாம் வழக்கமா போன் பண்ணி பேசி தானே உன்னை வர சொல்லுவார்?” என்று அவளுடன் நடந்து கொண்டே யோசனையுடன் கேட்டாள் வித்யா.

தோழியின் கேள்வியில் வேதாவின் முகம் ஒரு நொடி கசங்கி போனது.

ஆனால் உடனே வித்யாவிற்குத் தெரியாத வண்ணம் தன் முகப்பாவனையை மாற்றியவள், “போனும் பண்ணுவாங்க வித்தி. சில நேரம் மெசேஜூம் செய்வாங்க. அவங்க பிஸிக்கு தகுந்தாற்போலப் போனோ, மெசேஜோ வரும்…” என்று சொல்லி சமாளித்தாள் வேதவர்ணா.

‘வேலை முடிந்து வீட்டிற்குக் கிளம்பும் நேரத்தில் என்ன பிஸி?’ என்று வித்யாவிற்குத் தோன்றிய கேள்வியை அவள் கேட்க நினைத்ததை உணர்ந்தது போல், “அதோ காரை எடுத்துட்டு ரெடியா இருக்காங்க வித்தி. நாளைக்குப் பார்ப்போம். பை…!” என்று தோழியிடம் விடைபெற்று சென்று காரில் ஏறினாள் வேதா.

“இவங்களுக்குள்ள என்னமோ சரியில்லாதது போல இருக்கே. என்ன அது? இல்லை எனக்குத் தான் தப்பா தோணுதா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு செல்லும் காரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் வித்யா.

வித்யா நினைத்தது சரிதான் என்பது போல் தான் காருக்குள் நிலைமை இருந்தது.

மனைவியைக் கண்டதும் கண்களில் காதல் பொங்க பார்த்து, இதழ்கள் விரிய புன்னகைத்து வரவேற்கும் ரித்விக், இப்போதோ அவள் புறமே திரும்பாமல் சாலையை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தான்.

காரை சாலையில் செலுத்திய பிறகும் அவனின் பார்வை சாலையைத் தவிர மனைவியின் புறம் திரும்பவே இல்லை.

அவனின் முகம் இறுக்கத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

மனைவி என்றொருத்தி அவனுடன் தான் காரில் வந்து கொண்டிருக்கிறாள் என்பதை மறந்து போனானோ என்று நினைக்கும் வண்ணம் பாவனைக் காட்டினான்.

வேதாவோ சாலையை வெறிப்பதும், அவ்வப்போது கணவனின் முகத்தைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

அவளின் பார்வையைக் கண்டாலும் ரித்விக் சற்றும் அவளைத் திரும்பி பார்த்தான் இல்லை.

இதற்கு முன்னால் தான் காரில் ஏறியதும், கணவன் எப்படிப் புன்னகைத்த வண்ணம் பேசிக் கொண்டு வருவான்?

இப்போதோ சிரிப்பையே தொலைத்தவன் போல் அல்லவா வருகிறான் என்று அவனின் முகத்தைப் பார்த்து நினைத்த வேதா துயர பெருமூச்சு விட்டாள்.

அவள் மூச்சு விட்ட வேகத்தில் வயிற்றில் இருந்த குழந்தை அவளை எட்டி உதைக்க, “ஸ்ஸ்ஸ்…” என்று மெலிதாக முனங்கி, வயிற்றில் கையை வைத்தாள்.

மனைவியின் முனங்கல் சத்தத்தில் சாலையை விட்டு அவளின் புறம் திரும்பி பார்த்தான் ரித்விக்.

அவள் வயிற்றைத் தடவி கொண்டிருந்ததைப் பார்த்ததும் குழந்தையின் விளையாட்டு என்பதைப் புரிந்து கொண்டவன் முகத்தில் மலர்ச்சி வந்து அமர்ந்து கொண்டது.

“ஹாய் பேபி… என்ன செய்றீங்க? அம்மாவை உதைக்கிறீங்களா? அம்மா பாவம் பேபி. வேலைக்குப் போய்ட்டு வந்து டையர்டா இருக்காள். அதனால் கொஞ்ச நேரம் சமத்தா இருங்க…” என்று கொஞ்சலாகப் பேசினான்.

அவனின் பேச்சுக்குச் செவி சாய்த்தது போல், குழந்தை தன் அசைவை குறைத்து அமைதியாகியது.

“நீ சரியான அப்பா கோண்டா இருக்கப் பேபி. உன் பப்பா சொன்னதும் புட்பால் ஆடுறதை நிறுத்திட்டியே…” என்று அலுத்துக் கொண்ட வேதா, கணவனின் புறம் திரும்பி, “பேபி உங்க குரலை நல்லா அப்சர்வ் பண்றா ரித்வி…” என்று குதூகலமாகச் சொன்னாள்.

தன் முகம் பார்த்துக் குதூகலமாகச் சொன்ன மனைவியை இப்போது வெறுமை பார்வை பார்த்தான் ரித்விக்.

அவனின் பார்வையில் அவளின் குதூகலம் அப்படியே அடங்கிப் போனது.

“ஏன் ரித்வி, நான் டயர்டா இருக்கேன். டிஸ்டெப் பண்ண கூடாதுன்னு பேபிக்கிட்ட அக்கறையா சொல்றீங்க. ஆனா என்கிட்ட சாதாரணமா கூடப் பேச மாட்டிங்களா ரித்வி? நான் பண்ணியது தப்பு தான். ஆனா மூணு மாசம் ஆகியும் இன்னும் நீங்க கொஞ்சம் கூட என்னை மன்னிக்காம இப்படி இருப்பது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு ரித்வி. உங்களுக்குப் பேபி தான் வேணுமா? நான் வேண்டாமா ரித்வி?” என்று வலி நிறைந்த குரலில் கேட்டாள் வேதவர்ணா.

அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மீண்டும் சாலையில் மட்டும் கவனத்தை வைத்து வாகனத்தைச் செலுத்திய கணவனின் உதாசீனத்தில் உள்ளுக்குள் உடைந்து போனாள்.

தன்னையே சுற்றி வந்த கணவனுக்கு வலியை பரிசாகத் தந்த தனக்கு அவனின் இந்த உதாசீனம் தேவைதான் என்று நினைத்துக் கொண்டாள்.

வேதவர்ணா ஊருக்கு சென்று விட்டு வந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தன.

தன்னை நேரில் பார்த்தால் பெரியவர்களின் மனம் மாறும் என்ற நம்பிக்கையில் கிளம்பியவள், அவர்கள் எப்போதுமே மாறமாட்டார்கள் என்று தெரிந்து போனதில் மனசோர்வுடன் ஊர் வந்து சேர்ந்திருந்தாள்.

ஊரில் இருந்து வந்த மனைவியை வரவேற்றது ரித்விக்கின் வெறுமையான பார்வை தான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் கணவனை வேகமாக அணைத்துக் கொண்டாள் வேதா.

அவளுக்கு அப்போது இருந்த மனநிலையில் அன்று பேசியது எதுவுமே நினைவில் இல்லை.

ஆனால் ரித்விக்கிற்கு அதைத் தவிர வேறு எதுவுமே நினைவில் இல்லை!

அதனால் மனைவியின் அணைப்பை ஏற்றுக் கொள்ளாமல் நாசுக்காக அவளை விலக்கி நிறுத்தினான்.

ஆனால் அதைக் கூட உணராமல் “நான் உங்ககிட்ட நிறையப் பேசணும் ரித்வி. நீங்க சொன்னதைக் கேட்டு நான் ஊருக்குப் போகாமல் இருந்திருக்கணும். அப்படி நான் கேட்காமல் போனது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு நல்லா புரிஞ்சு போயிருச்சு…” என்று வருத்தமாகச் சொன்னவள் கணவனின் முகப்பாவனையைக் கவனியாமல் போனாள்.

“நான் வீட்டுக்குப் போனதும் பாட்டி என்னை உள்ளே விடவே இல்லை. அம்மாவும் முதலில் என்னைத்தான் திட்டினாங்க. அப்புறம் எனக்கு ரொம்ப டயர்டா இருந்ததில் மயக்கம் வந்திருச்சு. நான் மயக்கம் போட்டதும் தான், போனா போகுதுன்னு என்னை உள்ளே விட்டாங்க…”

“அப்போ நீ மயக்கம் போடலைனா வாசலில் இருந்த படியே திரும்ப வந்திருப்பாய். அப்படித்தானே?” என்று தன் மௌனத்தை விடுத்து வரண்ட குரலில் கேட்டான் ரித்விக்.

“ஆமா ரித்வி, அப்படித்தான் வந்திருப்பேன். வேற என்ன செய்ய முடியும். வாசலிலேயே நிக்கவும் முடியாதே?” கணவனின் குரலில் இருந்த பேதத்தை உணராமல் சாதாரணமாகப் பதில் சொன்னாள் வேதவர்ணா.

அவளின் பிறந்த வீடே என்றாலும் தன் மனைவி அங்கே வாசலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டதைக் கேள்வி படும் போது ஒரு கணவனின் மனம் என்ன பாடு படுமோ அதைத்தான் ரித்விக்கின் மனமும் அனுபவித்துக் கொண்டிருந்தது.

மயக்கம் வரும் வரை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறாள். அதையும் அனுபவித்து விட்டு வந்து மனைவி நிதானமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவளை என்ன செய்ய? என்பது போல் பார்த்த ரித்விக்கின் முகம் இறுகி போனது.

எது எல்லாம் நடக்கக் கூடாது என்று அவளை ஊருக்கு செல்ல விடாமல் தடுக்க முயன்றானோ அதெல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது.

“அப்புறம் மயக்கம் தெளிந்து எழுந்தப்ப அப்பா வந்திருந்தார்…” என்று கணவனின் வேதனையை உணராமல் அடுத்து தந்தை பேசியது, தாத்தா பேசியது அனைத்தையும் கூறினாள் வேதவர்ணா.

“அவங்களுக்குச் சொந்த மகள், பேத்தியை விடச் சொந்தபந்தங்களின் பேச்சும், பார்வையும் தான் முக்கியமா படுது. அப்பா கூடத் தாத்தாவுக்குத் தான் சப்போர்ட் பண்ணி பேசினார். மனசு கேட்காமல் திரும்ப ஒரு முறை அப்பாகிட்ட பேசி பார்த்தேன்…” என்றவள் தந்தைக்கும், தனக்கும் நடந்த பேச்சுவார்த்தையை விவரிக்க ஆரம்பித்தாள்.

“உங்க பொண்ணு எனக்காகப் பார்க்காமல் ஏன்பா சொந்தபந்தத்தைப் பெருசா நினைச்சு இந்த வீட்டில் எல்லோரும் பேசுறீங்க?” என்று வேதா கேட்க,

“நாம என்ன யாருமில்லாத அத்துவான காட்டிற்குள்ளா வாழுறோம் வேதாமா? நம்மைச் சுத்தி உள்ள மனுஷங்களும் சேர்ந்து தான் உலகம். அப்படியிருக்கும் போது அவங்களைப் பொருட்டா நினைக்காமல் எப்படி இருக்க முடியும்?” என்று திருப்பிக் கேட்டார் அவளின் தந்தை.

“அப்படினா நம்மைச் சுத்தி உள்ளவங்க என்ன சொல்லுவாங்களோன்னு பயந்து நம்ம வாழ்க்கையை நாம வாழாம இருக்க முடியுமாப்பா?”

“நம்ம வாழ்க்கையை நாம வாழ்வது தப்பு இல்லை தான். ஆனா அதுக்காக நம்மைச் சுத்தி உள்ளவங்க பேச்சையும் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது வேதா…”

“அடுத்தவங்க என்ன சொல்லுவாங்களோன்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் பார்த்துக்கிட்டு இருந்தால் நம்ம வாழ்க்கையை நாம வாழவே முடியாதே அப்பா? அப்படிப் பார்த்தால் அந்த இடத்தில் நம்ம வாழ்க்கை இருக்காதே அப்பா. அவங்க எண்ணங்கள் தானே அங்கே தடம் பதிக்கும்?”

“இந்த இடத்தில் நீ ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணும் வேதாமா. அடுத்தவங்க என்ன பேசுவாங்கன்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் பார்க்க வேண்டியது இல்லைதான். ஆனால் அவங்க என்ன பேசுவாங்கன்னும் நாம பார்த்துக் கொள்வது நல்லது…”

“நீங்க என்ன அப்பா சொல்ல வர்றீங்க?”

“நம்மைச் சுத்தி உள்ள மனுசங்க நம்மைப் பார்க்கும் விதமும், பேசும் விதமும் கூட நம்மளோட ஒழுக்க முறைகளுக்கு முக்கியக் காரணம் வேதா. அடுத்தவங்களோட கண்ணோட்டம் நம்ம மீது மட்டும் இல்லன்னா, மனிதனுக்குப் பயம்னு ஒன்னு இல்லாமல் போய்விடும். நாம அடுத்தவர்களின் பேச்சுக்கு ஆளாகிறோம், அடுத்தவர்களால் கவனிக்கப்படுகிறோம் என்கிற போது மனிதன் ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை வாழ முயலுகின்றான்…”

“அப்படியே இருந்தாலும் அது எல்லா விதத்திலும் எப்படிப்பா சரியாக வரும்? ஊர், உலகத்துக்குப் பயந்து சொந்தப் பொண்ணையே ஆதரவு இல்லாமல் விடுவது தான் ஒழுக்க முறையா?” என்று திருப்பிக் கேட்ட வேதாவின் குரலில் சூடு பறந்தது.

“தப்பா சொல்ற வேதா.‌ உன்னை ஆதரவு இல்லாமல் விட்டிருந்தால் இங்கே வந்து நீ இப்படி என்னிடம் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்திருக்க முடியாது. நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை நீ கேட்டேங்கிறதுக்காக அமைத்துக் கொடுத்தோம். அதனால் இந்தக் குடும்பத்திற்குத் தலைக்குனிவு வந்து விட்டதாகத் தாத்தா நினைக்கிறார்.

அப்படி இருக்கும் போது இந்த நேரத்தில் நானும் தாத்தாவின் பின்னால் தான் நிற்பேன். ஒருமுறை உனக்காக என் அப்பாவின் பேச்சை நான் மீறி வந்தேன். இப்போ நான் அவரின் பேச்சை கேட்கும் நிலையில் தான் இருக்கேன். ஆனா நீ உனக்கு அமைந்த சந்தோஷமான வாழ்க்கையை மட்டுமே பார்க்காமல் இப்படியெல்லாம் பேசி மேலும் உறவுகளுக்குள் நீதான் விரிசல்கள் விழ வைத்துக் கொண்டு இருக்கிறாய். இது நல்லதுக்கு இல்லம்மா. நாங்க எல்லாம் பழமையில் ஊறிப்போனவர்கள். நாங்க இப்படித்தான் இருப்போம். எங்களை மாத்த நினைச்சு தேவையில்லாத வேலை எதுவும் செய்யாமல் நீ ஊருக்கு கிளம்பும் வேலையை மட்டும் பார்…” என்று கண்டிப்போடு தன் பேச்சை முடித்துக்கொண்டார் சந்திரசேகர்.

“அப்பா இப்படி எல்லாம் பேசினார் ரித்வி. எனக்குத் தான் ரொம்பக் கஷ்டமா போய்ருச்சு. அவர் இப்படினா, எல்லாத்துக்கும் காரணமான தாத்தாவுக்குப் பேத்தின்னு என் மேல கொஞ்சம் கூடப் பாசம் இல்லாமல் போயிருச்சு ரித்வி.

தாத்தா இத்தனை நாளில் கொஞ்சமாவது மாறியிருப்பார்னு நினைச்சேன். ஆனா அவர் கொஞ்சமும் மாறலை. இன்னும் அதிகமாகத்தான் தன் கோபத்தைக் காட்டினார். அவர் திரும்ப உங்ககிட்ட ஃபோன்ல பேசியதை நீங்க சொன்ன போது நான் நம்பலை. என் மேல கொஞ்சமாவது அவருக்குப் பாசம் இருக்கும். அதை இத்தனை நாளில் புரிந்து கொண்டிருப்பார்.

அதனால் அவர் அப்படித் திரும்பப் பேசி இருக்க மாட்டார்னு நினைச்சேன். ஆனா அப்படிப் பேசியதாக அவரே சொன்ன போது ரொம்ப வருத்தமா இருந்தது ரித்வி. உங்களை நம்பாமல் போனதுக்குச் சாரி ரித்வி. உங்க பேச்சை கேட்டு நான் பேசாமல் இங்கேயே இருந்திருக்கணும். இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமாகத்தான் மனவருத்தத்தை வாங்கிட்டு வந்திருக்கேன்…” என்று வருத்தத்துடன் புலம்பிய மனைவியை உணர்ச்சிகளற்ற பார்வை பார்த்தான் ரித்விக்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தான் கணவனின் அந்த வெறுமையான பார்வையைக் கண்டுகொண்டாள் வேதவர்ணா.

“ரித்வி?” என்று கேள்வியுடன் அழைத்தாள்.

“இவ்வளவு நேரம் உன் உறவினர்கள் பேசியதை எல்லாம் விளக்கமாகச் சொன்னாயே வர்ணா! நீ என்னைப் பேசிய வார்த்தைகளுக்கு என்ன விளக்கம் தரப் போகிறாய்?” என்று அழுத்தமாகக் கேட்டான் ரித்விக்.

கணவனின் குரலில் இருந்த அழுத்தம், பார்வையிலிருந்த‌ கடுமை, முகத்திலிருந்த இறுக்கம் அனைத்தையும் விக்கித்துப் பார்த்தாள் வேதா.

“பதில் சொல் வர்ணா…” அவனின் குரலில் காரம் ஏறியது.

“ரித்..ரித்வி…” என்று திக்கியவளுக்குக் கணவனை அவள் சாடிய வார்த்தைகள் அனைத்தும் கண் முன்னால் வலம் வந்தன.

“நான் உனக்காகத் தான் ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்றேன். இதோ… இப்போ உன் வீட்டுக்கு போயிட்டு வலியை வாங்கிட்டு வந்திருக்கியே… அது உனக்கு வர வேண்டாம் என்றுதான் உன்னைப் போக விடாமல் தடுக்க முயற்சி செய்தேன்.

ஆனா அதற்கு நீ எனக்குக் கொடுத்த பெயர் அநாதை! நீ என்னை அநாதைன்னு சொன்னது கூட எனக்கு ரொம்ப வலிக்கலை. ஏன்னா அது ஒரு காலத்தில் உண்மைதான். நல்லா கவனி! ஒரு காலத்தில் தான். எப்ப நீ என் வாழ்க்கையில் வந்தியோ, அந்த நிமிஷத்தில் இருந்து நான் அநாதை இல்லை.

அப்படித்தான் நான் நினைச்சுட்டு இருந்தேன். அப்படி இல்லைன்னு என் நெற்றியில் அடித்தது போல் சொல்லிவிட்டாய். அதுவும் உன் குடும்பத்தை விட, நீதான் என்னை இன்னும் அநாதையா நினைச்சுட்டு இருக்கிறாய். என் மனைவி நீ மட்டும் இல்லாமல், இப்போ என் குழந்தையும் உன் வயிற்றில் இருக்கும் போது நான் எப்படி அநாதை ஆவேன்?” என்று இறுக்கத்துடன் கேள்வி கேட்ட கணவனைக் கண் கலங்க பார்த்தாள் வேதவர்ணா.

“இல்லை ரித்வி. நான் அப்படி நினைக்கலை. அந்த நேரத்தில் எனக்கு இருந்த கோபத்தில் என்ன சொல்றது என்று தெரியாமல் சொல்லிட்டேன். நான் போய் உங்களை அப்படி நினைப்பேனா ரித்வி? அது ஏதோ கோபத்தில் வந்த வார்த்தைகள்…” என்று கணவனுக்குத் தன் நிலையை எடுத்து சொன்னாள்.

“நீ என்னிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறாய் வர்ணா, மனதில் இருப்பதுதான் வார்த்தைகளாக வரும் என்று. அப்படிப் பார்த்தால் நீ என்னைப் பற்றி என்ன நினைச்சுட்டு இருக்கியோ அதுதானே வார்த்தையா வந்திருக்கு?” என்று கேட்டான்.

“அய்யோ கடவுளே! என் மனசில் அப்படி ஒரு எண்ணம் இல்லை ரித்வி…” என்று வேகமாக மறுத்தாள் வேதா.

‘நம்ப முடியாது!’ என்று மறுப்பாகத் தலையசைத்த ரித்விக், “சரி, அந்தப் பேச்சை விடு! உன் தாத்தா திரும்ப என்கிட்ட பேசியது தெரிந்தால் ஏற்கனவே உன் வீட்டை நினைச்சு ஏக்கத்தில் இருக்கும் நீ இன்னும் உடைந்து போவாய் என்றுதான் உன்னிடம் சொல்லாமல் வைத்திருந்தேன். ஆனால், அன்னைக்கு நான் வேறுவழி இல்லாமல் சொன்ன போது நீ நம்பக் கூட இல்லை. அப்போ உனக்கு நம்பிக்கைக்கு உரியவனா நான் இதுவரை நடந்து கொள்ளவே இல்லையா?” என்று குரலில் எட்டிப்பார்த்த வலியை மறைத்துக் கொண்டு கேட்டான் ரித்விக்.

“உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்குமா ரித்வி? நீங்கதான் எனக்கு வேணும்னு பிடிவாதமா இருந்து உங்களைக் கட்டிகிட்டவள் நான். உங்க மேல நம்பிக்கை இல்லாமல் எப்படி உங்களைக் கல்யாணம் பண்ணிருப்பேன்?”

“உன்னோட இந்தக் கேள்வியே அர்த்தமில்லாதது வர்ணா…” என்று சலனமே இல்லாமல் சொன்னான்.

“என்ன சொல்றீங்க ரித்வி?” என்று புரியாமல் கேட்டாள்.

“அதான் சொன்னியே… உங்களைக் காதலிச்சதையே தப்போன்னு நினைக்கிறேன்னு… அதிலேயே என் மீதான உன் நம்பிக்கை உடைந்து போய்விட்டது வர்ணா…” என்றான் கரகரத்த குரலில்.

அவனின் கண்கள் லேசாகக் கலங்க ஆரம்பித்தன. மனைவியின் வார்த்தைகள் அவனை ஜீரணிக்க விடாமல் வலிக்க வைத்துக் கொண்டிருந்தது.

இனிக்க இனிக்கக் காதலித்த மனைவியிடம் இருந்து அப்படி ஒரு பேச்சு வரும் என்று கனவில் கூட எதிர்பார்த்திராதவன் அதை நினைவிலேயே கேட்ட போது உடைந்து தான் போனான்.

கணவனின் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்ததைக் கண்டு கொண்டதும், வேதாவிற்குச் சகலமும் பதறிப் போனது.

“ரித்வி கண்ணா என்னப்பா இது?” என்று கலங்கிப் போனவள் வேகமாக அவனின் கன்னத்தில் கையை வைத்து விரலால் கண்களைத் தொட்டாள்.

“உங்களைக் காதலிச்சதுக்காக நான் உண்மையில் என்னைக்கும் வருத்தப்பட்டது இல்லை ரித்வி. நீங்க என்னை நம்பணும்…” என்றாள் இறைஞ்சுதலாக.

“அப்படியா?” அவளின் கையைத் தன் கன்னத்தில் இருந்து எடுத்து விட்டவன் நம்பாமல் விரக்தியாகக் கேட்டான்.

கணவனின் விலகலிலும், விரக்தியிலும் துடித்துப் போனவள், “என்னை நம்புங்க ரித்வி…” என்றாள்.

“அன்னைக்கு நம்புற மாதிரி நீ பேசலை வர்ணா…”

“ரித்வி அன்னைக்கு நான் ஏன் அப்படிப் பேசினேன்னு எனக்கே தெரியலை. திடீர்னு ஒரு ஆவேசம், எதுக்கு எனக்கு அப்படி ஒரு கோபம் வந்ததுன்னு தெரியலை. ஏதோ ஒரு மன உளைச்சல் என்னை ஆட்டிப்படைத்ததில் நான் என்ன பேசுறேன்னு நானே உணராமல் ஏதேதோ பேசிட்டேன். நான் மனசறிஞ்சு பேசலை ரித்வி…” என்றாள்.

“அதெப்படி அப்படிக் கோபம் வரும்? என்னை விட உனக்கு உன் குடும்பம் மட்டும்தான் தேவையாக இருந்தது. அதனால் தான் அப்படி எடுத்தெறிஞ்சு பேசினாய். அதானே உண்மை? அப்படி இருக்கும் போது இப்போ உன் குடும்பம் நீ எதிர்பார்த்த மாதிரி நடக்கலை என்றதும், என்னைச் சமாதானம் செய்ய என்னென்னவோ சொல்ற…” என்றான் ரித்விக்.

கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் நீண்டு கொண்டே செல்ல, வேதா எவ்வளவோ தன் பக்கமாக எடுத்து சொல்லியும் ரித்விக் அதைச் சிறிதும் ஏற்பதாக இல்லை.

‘கோபத்தில் என்ன வேண்டும் என்றாலும் பேசி விடலாமா?’ என்று கேட்டான். அவளுக்காகத் தான் யோசிக்க, தன்னைப் பற்றி அவள் சிறிதும் யோசிக்கவில்லையே என்றான்.

“நான் பேசியது தப்புத்தான் ரித்வி சாரி…” என்றாள்.

“சாரி என்ற ஒரு வார்த்தை பேசிய பல வலிக்க வைத்த வார்த்தைகளை இல்லை என்று ஆக்கிவிடாது வர்ணா. நீ நிறையப் பேசிவிட்டாய். அதை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவே இல்லை. இதோ இங்கே வலித்துக் கொண்டே இருக்கு…” என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டினான்.

அதில் பதறி போன வேதா வேகமாக அவனின் நெஞ்சின் மீது கை வைக்க வர, சட்டென்று பின்னால் நகர்ந்த ரித்விக், ‘தொடாதே…!’ என்பது போல் மறுப்பாகத் தலையசைத்தவன் அவளை விட்டு விலகி போனான்.

அன்று விலகியவன் இன்னும் அப்படியே தான் இருந்தான். அவனிடம் இருந்த இலகுத்தன்மை முற்றிலும் தொலைந்து போய் இருந்தது.

வழக்கம் போல மனைவிக்கு வீட்டு வேலையில் உதவி செய்தான், வேலைக்குத் தன்னுடனே அழைத்துப் போனான், திரும்பும் வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டான். அவளுக்கான எல்லா வேலைகளையும் வழக்கம்போல் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருந்தான்.

ஆனால் பேச்சு வார்த்தை முற்றிலும் குறைந்து விட்டது. மிகவும் தேவை என்றால் ஒழிய பேசவே செய்யாமல் மனைவியிடம் இருந்து விலகி இருந்தான்.

வேதாவின் மன்னிப்புக்கோரும் படலமும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் ரித்விக் தான் இலகுவதாக இல்லை.

அவர்களின் காதல் வாழ்க்கையில் புயல் தன் வேலையைக் காட்டியிருக்க, அந்தப் புயலில் சிக்கி அல்லாட ஆரம்பித்தார்கள் அந்தக் காதலர்கள்!


அன்று வேதாவிற்கு மிகவும் களைப்பாக இருக்க, அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு வீட்டில் இருந்தாள்.

ரித்விக் அவளுடன் வீட்டில் இருக்க முடியாத நிலையில் வேலை அவனுக்கு அழைப்பு விடுக்க, அவன் மட்டும் அலுவலகத்திற்குச் சென்றிருந்தான்.

தனியாக வீட்டிற்குள் படுத்தே இருக்க முடியாமல், அன்று மதியவேளையில் அவர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் சிறிது நேரம் நடந்து விட்டு மீண்டும் தன் வீட்டிற்கு மின்தூக்கி அன்று பார்த்து வேலை செய்யாததால் படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறிக் கொண்டிருந்தாள்.

மூன்று மாடிகள் ஏறியதில் மூச்சு வாங்க, அலுப்புடன் ஏறிக் கொண்டிருந்த வேதாவின் கால்கள் ஒரு படியில் ஏறும் போது அவளுக்குத் தடுமாற்றம் வர வழுக்கி விழப் போனாள்.

இரண்டு, மூன்று படிகளில் சரிந்தும் இறங்கியிருந்தாள்.

அடுத்துப் படிகளில் உருளத்தான் போகின்றோம் என்று அவள் பயந்து போயிருந்த தருணத்தில், “அய்யோ! பார்த்துங்க…” என்று பதறிக் கொண்டே இரண்டு கரங்கள் அவளை மேலும் சரிய விடாமல் பிடித்து நிறுத்தியிருந்தன.