பூவோ? புயலோ? காதல்! – 21

அத்தியாயம் – 21

தன் தோளில் தலைசாய்த்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் நெற்றியில் இதழ் பதித்து “விடிஞ்சிருச்சு கண்ணு…” என்று மென்மையாக அழைத்துக் கயற்கண்ணியை எழுப்பினான் இளஞ்சித்திரன்.

கணவனின் தோளில் இருந்த தன் தலையை, அவனின் வெற்று மார்பிற்கு மாற்றிய கயற்கண்ணி, முகத்தை இப்படியும், அப்படியுமாகத் திருப்பி அவனின் மார்பு ரோமங்களைத் தன் இரு கன்னத்திலும் உராய விட்டு, “ரொம்பக் குளுருதுய்யா…” என்று முனங்கினாள்.

அவள் உராய்ந்ததில் உணர்வுகள் உச்சத்தில் ஏற, அவளைத் தன்னோடு இறுக்கமாக அணைத்தவன், “டிசம்பர் மாசம் இந்த ஊரு இப்படித்தேன் இருக்குமாம் கண்ணு…” என்று அவளின் முகத்தைத் தூக்கி தன் முகத்திற்கு நேராகக் கொண்டு வந்து காதின் ஓரம் கிசுகிசுப்பாகச் சொல்லி, அப்படியே அவளின் கன்னத்தில் தன் அதரங்களைப் பதித்தான்.

“யோவ்! வேணாம்… ராவு ஏற்கனவே ரொம்ப நாழிக்குப் பொறவு தூங்கி இப்போ எழுந்திரிக்கவே முடியாம புரண்டுகிட்டுக் கிடக்கேன். இப்போ திரும்பவும் ஆரம்பிக்காதே!” என்று போலியாக அலறிய கயற்கண்ணியின் தேகம் மட்டும் கணவனை விட்டு இம்மியும் அகன்றபாடில்லை.

தன்னை ஒட்டி உரசிக் கொண்டே போலியாக அலறும் மனைவியை அடுத்தச் சில, பல நிமிடங்கள் உண்மையாகவே அலற விட்டான் இளஞ்சித்திரன்.

கணவன், மனைவிக்கான இன்பமான சிணுங்கல்கள் அங்கே தொடர்ந்தன.

அவனும், நானும்! அவளும், நானும்! என்று சொல்வது போல் சுவையான, சுகமான காதலை திகட்ட திகட்ட அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருந்தனர் இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும்.

அவர்கள் பெங்களூருக்கு வந்து, தங்கள் திருமண வாழ்க்கையை ஆரம்பித்து முழுதாக நான்கு மாதங்கள் முடிந்திருந்தன.

இந்த இடைப்பட்ட நாட்களில் புதிய அலுவலக நண்பர்களின் உதவியுடன், தங்கள் திருமணத்தை முறைப்படி பதிவு செய்திருந்தான்.

மஞ்சள் தாலி கயிருக்கு பதிலாகத் தாலி செயினும், தங்க தாலியும் செய்து மனைவிக்குப் போட்டிருந்தான்.

ஏற்கனவே இருந்த கையிருப்பு பணத்துடன், புதிய வேலையில் கிடைத்த பணமும் அவர்கள் இருவரின் மண வாழ்க்கைக்குப் போதுமானதாக இருந்தது.

உறவினர்கள் பற்றிய பயம் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாலும், அதையும் தாண்டி அவர்களின் காதல் வாழ்க்கை ரம்மியமாகவே சென்று கொண்டிருந்தது.

“போதும் விடுய்யா… சோலிக்கு நேரமாவ போவுது…” என்று கணவனை விட்டு விலகியவள் எழுந்து கொள்ள நினைக்க,

“நீ தேன் குளுருதுன்னு சொன்னீயே கண்ணு…” என்று அவளை மீண்டும் தன் கைகளுக்குள் கொண்டு வர நினைத்தான் அவன்.

“போச்சு… போச்சு… அதெல்லாம் குளிரு ஓடியே போச்சு…” என்றவள் படுக்கையில் இருந்து எழுந்து தள்ளி போய் நின்று கொண்டாள்.

மல்லாக்கில் படுத்து தலைக்குக் கீழ் கைகளை வைத்து தலையைத் தாங்கி, உடையைத் திருத்திக் கொண்டிருந்த மனைவியை ரசித்துப் பார்த்தான் இளஞ்சித்திரன்.

அவனின் கண்கள் குறும்புடன் மனைவியின் மேல் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன.

கணவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தும், அவனுக்கு முதுகை காட்டி நின்று சேலையை நன்றாகக் கட்டிக் கொண்டிருந்த கயற்கண்ணியின் முகத்தில் கணவனுடன் நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் பூரிப்பு பூவாக மலர்ந்திருந்தது.

“என்னைய பார்த்தது போதும், போய்க் குளிய்யா… அப்புறம் சோலிக்கு நேரமாச்சுன்னு அரக்க பறக்க ஓடுவ…” திரும்பியே பார்க்காமல் கணவனை விரட்டினாள்.

“அதை என்னைய பார்த்து சொல்லு கண்ணு…” என்று புன்சிரிப்புடன் சொன்னான் இளஞ்சித்திரன்.

“ம்கூம்… நான் மாட்டேன். நீ குளிக்கப்‌ போ! நா காபி போட போறேன்…” என்று அதற்கு மேல் அங்கே நிற்காமல் அறையை விட்டு வெளியே ஓடியே விட்டிருந்தாள் கயற்கண்ணி.

மனைவியின் ஓட்டத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தான் இளஞ்சித்திரன்.

முதல் நாள் வந்திறங்கிய அதே வீட்டில் தான் இன்னும் இருந்தனர்.

தயாராக இருந்த படுக்கையறையை உபயோகிக்காமல், பழைய பொருட்களைப் போட்டிருந்த அறையை ஒதுக்கி தங்கள் படுக்கையறையாக உபயோகித்து வந்தனர்.

அந்த அறையில் கட்டில் வாங்கிப் போடாமல் ஒரு மெத்தையை மட்டும் வாங்கிப் போட்டிருந்தான்.

எழுந்து கீழே இருந்த மெத்தையைத் தட்டி போர்வையை மடித்து வைத்தவன் குளியலறைக்குள் நுழைந்து தயாராக ஆரம்பித்தான்.

கயற்கண்ணி அதற்குள் பக்கத்துக் குளியலறையில் குளித்து விட்டு வந்து, பாலை காய்ச்சி காஃபி தயாரித்து விட்டு காலை, மதிய உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குளித்து விட்டு வந்த இளஞ்சித்திரன் அவள் தயாராக வைத்திருந்த காஃபியை எடுத்துப் பருகி கொண்டே மனைவி வேலை செய்யும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

“தினமும் ஏன்யா அப்படிப் பார்க்கிற?” கணவனின் ஊடுருவும் பார்வையைக் கண்டு ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து கேட்டாள்.

“என் கண்ணும்மா எவ்வளவு அழகுன்னு பார்க்கிறேன்…” என்று ரசித்து அவளுக்கான பதிலை சொன்னான்.

“ஏன்யா இந்தப் பட்டணத்திலும், நீ படிச்ச ஊரிலும் பார்த்த அழகான பொண்ணுங்களை விட நான் அப்படி என்னய்யா அழகா இருக்கேன்?”

“அவங்க எல்லாம் அழகான பொண்ணுங்களா இருக்கலாம் கண்ணு. ஆனா ஏ மனசை கொள்ளை அடிச்ச பொண்ணான உன்னைய விட, அவங்க அழகு எல்லாம் எனக்குப் பெருசா தெரியலை கண்ணு…” என்று அவளை இன்னும் ஆழ்ந்து ரசித்துக் கொண்டே சொன்னான்.

எந்த மனைவிக்குத் தான் கணவன் தன்னை அழகி என்று சொன்னால் பெருமை இல்லாமல் இருக்கும்?

கயற்கண்ணிக்கும் பெருமையாகவே இருந்தது.

அதுவும் தன்னை விரும்பி கைப் பிடித்தவன், எந்த ஒரு குறையும் வைக்காமல் சொர்க்கத்தில் வாழ்வது போல் வாழ வைப்பதில் அவளுக்குப் பூரிப்பாகவே இருந்தது.

தங்கள் வாழ்க்கை இப்படியே எந்த இன்னல்களும் இல்லாமல் தொடர வேண்டும் என்று கடவுளிடம் தினமும் கோரிக்கை வைத்தபடி சந்தோஷமாக ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்து வந்தாள்.

“இன்னைக்கு எலக்ரானிக் சிட்டி வரைக்கும் போகணும் கண்ணு. அதனால நைட் லேட்டாத்தேன் வருவேன். அதுவரைக்கும் நீ பத்திரமா இரு. என்ன சரியா?” என்று கேட்டான்.

“சரிய்யா… நான் பத்திரமாத்தேன் இருப்பேன். நீ சூதானமா போயிட்டு வா! அப்பப்ப போனு மட்டும் பண்ணுய்யா…” என்று தன் கலக்கத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் தைரியமாகப் பேசுவது போல் சொன்னாள்.

அவன் வீட்டில் இருக்கும் வரை தைரியமாகவும், சந்தோஷமாகவும் வளைய வருபவள், அவன் வெளியே கிளம்பினாலே உள்ளுக்குள் பதறி விடுவாள்.

இப்போது தான் உலகம் சிறியதாகிற்றே. தன் ஊர்க்காரர்கள் யாராவது இங்கேயும் இருக்க வாய்ப்புண்டு. அப்படி இருந்தால் அவர்கள் கண்ணில் தாங்கள் பட்டு விடக்கூடாதே என்ற பதைப்பு மட்டும் இன்னும் அவளை விட்டு அகலவில்லை.

அதுவும் இளஞ்சித்திரனின் வேலை ஹார்ட்வேர்ட் சம்பந்தப்பட்டது என்பதால் கணினியை பழுது பார்க்க, கம்பெனி சொல்லும் இடத்திற்கு நேரில் போய்க் கணினியை சரி செய்து கொடுத்து விட்டு வர வேண்டும் என்பதால் அவன் அதிகமான நேரங்கள் வெளியே சுற்றும் படியாகத் தான் இருக்கும்.

அந்த வேலைக்காகவே பழைய இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியிருந்தான் இளஞ்சித்திரன்.

வெளியே அவன் சுற்றிக் கொண்டே இருக்கவும் அவளுக்கு அதுவே அதிகப் பயத்தைத் தர போதுமானதாக இருந்தது.

அவள் தன் பயத்தை மறைத்து பேச முயன்றாலும் குரலில் லேசாகப் பிசிறு தட்டியதை வைத்தே அவளின் பயத்தை அறிந்து கொண்டவன் அவளை நெருங்கினான்.

அடுத்த நிமிடம் அவனின் கைகளில் இருந்தாள் கயற்கண்ணி.

அப்படியே அவளைத் தூக்கியிருந்தான்‌ அவன்.

அவன் சட்டென்று தூக்கவும் பதறியவள், “யோவ்! விடுய்யா… விடு…!” என்று கத்தினாள்.

“ஷ்ஷ்! கத்தாதே கண்ணு. இன்னும் செத்த நேரம் பொறு விடுறேன்…” என்று நிதானமாகச் சொன்னவன் இன்னும் இறுக்கமாக அவளைப் பிடித்துக் கொண்டான்.

“நீ வர வர ரொம்ப ரோதனை பண்றய்யா…” என்று அலுத்துக் கொண்டாள்.

“ஏ பொஞ்சாதிய நான் தூக்குறேன். இதுல நீ என்னத்த ரோதனையைக் கண்டுட்ட கண்ணு?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

“ஓ பொஞ்சாதி தேன். இப்போ யாரு அதை இல்லைன்னு சொன்னாங்களாம்? அதை என்னைய தூக்கி காட்டி தேன் நிரூபிக்கணுமா?” என்று சிணுங்கலாகச் சொல்லி கொஞ்சினாள்.

“வேற மாதிரியும் கூட நிரூபிக்கலாமே…” என்று குறும்புடன் சொன்னவன், நிதானமாக அவளைக் கீழே இறக்கி விட்டு தன் கைகளை விட்டு விலக்காமல் இறுக அணைத்துக் கொண்டான்.

அவனின் அணைப்பில் அடங்கியவளுக்கு, கணவனின் குறும்பு சிரிப்பைத் தந்தது.

“நீ ரொம்பச் சேட்டைக்காரன்யா…” என்று செல்லமாக அலுத்துக் கொண்டாள்.

“சேட்டை இதோடு முடியாது கண்ணு…” என்றவன் தன் அடுத்தச் சேட்டையை அவளின் இதழ்களில் காட்டினான்.

இதழ்களுக்குள் யுத்தம் சில நிமிடங்கள் தொடர்ந்தன.

அதை அவனே முடிவிற்குக் கொண்டு வந்தவன், “சேட்டை நல்லா இருந்ததா கண்ணு?” என்று கண்ணைச் சிமிட்டி குறும்பு புன்னகையுடன் கேட்டான்.

“கேள்வியைப் பாரு? போய்யா…” என்று சிணுங்கிக் கொண்டே அவனின் தோளில் செல்லமாக அடித்தாள்.

கணவன் காட்டிய இணக்கத்தில் கயற்கண்ணியை அண்டியிருந்த பயம் எங்கோ ஓடி ஒளிந்திருந்தது.

தொடர்ந்த நிமிடங்கள் கொஞ்சலும் மிஞ்சலுமாக மனைவியுடன் நேரத்தை கடத்திய இளஞ்சித்திரன் அவளைச் சாதாரண மனநிலைக்கு முழுமையாக மாற்றிய பின்பே வேலைக்குக் கிளம்பினான்.

இளஞ்சித்திரன் வேலைக்குக் கிளம்பியதும் வீடே வெறிச்சோடி போனது போல் இருந்தது கயற்கண்ணிக்கு.

ஆனால் அவன் சிறிது நேரத்தில் குறும்புத்தனம் செய்து தன் மனநிலையை மாற்றியதையே நினைத்து அடுத்த நிமிடங்களை ஓட்டினாள்.

அவனின் செயல்கள் அவளிடம் ஓர் உதட்டோர புன்னகையை நிரந்தரமாக்கி இருந்தது.

கணவனை நினைத்துக் கொண்டே சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுங்க வைத்தவள், வீட்டை துடைத்துச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

வீடு வெகுவாகவே சுத்தமாகத் தான் இருந்தது. ஆனாலும் அவளின் தனிமையான நேரத்தை நெட்டி தள்ள, சுத்தமாக இருந்த வீட்டை மீண்டும் துடைத்தாள்.

அந்த வேலையும் முடிய, அழுக்குத் துணிகளைத் துவைத்து மாடியில் சென்று காய வைத்து விட்டு வந்தாள்.

மாடியில் இருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்ததுமே கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

“என்ன இது தலைய சுத்துது?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து பருகினாள்.

தண்ணீரை பருகியதும் சாதாரணமாக உணர்ந்தவள் “இந்தக் குளுரு ஊருக்கு வரவும் நீ ரொம்பவும் தான் சொகுசு பழகிட்டடி கயலு. மெத்தைக்கு(மொட்டை மாடி) போய்ட்டு வர்றதுக்குக் கூடத் தலை சுத்துது உனக்கு…” என்று தன்னையே திட்டிக் கொண்டவள் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து விட்டு அப்படியே சுவற்றில் சாய்ந்து தரையில் வாகாக அமர்ந்து கொண்டாள்.

கணவனுக்கு மதிய உணவை கொடுத்து விடக் காலையிலேயே சமைத்து விடுவதால், சமையல் வேலை இல்லை என்பதால் அடுத்தச் சில மணி நேரங்கள் தொலைக்காட்சியோடு தான் அவளின் பொழுது கழியும்.

அந்த மதிய நேரத்தில் பெண்கள் நலம் பற்றிய நிகழ்ச்சி ஒன்று கண்களில் பட, அதை வைத்துக் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முதலில் கைவினைப் பொருட்கள் செய்யும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு பெண் மருத்துவர் கர்ப்பகால உணவு முறையைப் பற்றி விரிவாகப் பேச ஆரம்பித்தார்.

அந்நிகழ்ச்சியை ஏனோ தானோ என்று பார்த்துக் கொண்டிருந்த கயற்கண்ணிக்கு சட்டென்று ஏதோ மூளையில் பொறி தட்ட, இன்னைக்கு என்ன தேதி என்று வேகமாகக் காலண்டரை பார்த்தாள்.

“இங்கே வந்த புதுசுல வீட்டுக்குத் தூரமானேன். அப்புறம் ஆகவே இல்லையே ஏன்?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டவள் குழப்பத்துடன் யோசித்தாள்.

தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த நிகழ்ச்சியும், வயல்வெளிகளில் வேலை செய்த போது மூத்த பெண்கள் பேசிய சில விஷயங்களும் ஞாபகத்தில் வந்து அவளுக்கு ஒன்றை உணர்த்த, பட்டென்று விரிந்த கண்களுடன் தன் வயிற்றைப் பற்றினாள்.

சில நொடிகளா? சில நிமிடங்களா? சில மணி நேரமா? எத்தனை மணி துளிகள் கடந்து சென்றன என்று அவளே அறியாள்!

அறிந்து கொண்ட விஷயம் அவளை அசைய விடாமல் செய்திருக்க, அவளை அசைக்கவே அலைபேசி அழைத்தது.

இளஞ்சித்திரன் மனைவிக்காக வாங்கித் தந்திருந்த பட்டன் மாடல் போன் அது!

வேலைக்கு நடுவில் தவறாமல் இரு முறையாவது அழைத்து அவளிடம் பேசி விடுவான்.

கணவன் தான் அழைக்கின்றான் என்று அறிந்தும் அலைபேசியை எடுத்துப் பேசாமல் தயக்கத்துடன், தடுமாற்றத்துடன் கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின் தன் தயக்கத்தை மெல்ல உதறி கைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவள் ஒன்றும் பேசாமல் மௌனம் சாதித்தாள்.

“கண்ணு… என்னாச்சு கண்ணு? இன்னைக்கு ஏன் போன் எடுக்க இம்புட்டு நேரம்?” முதல் மணியிலேயே அழைப்பை ஏற்றுப் பேசும் மனைவி இன்று தாமதமாக எடுக்கவும் பதற்றத்துடனேயே விசாரித்தான்.

கணவனின் பதற்றம் அவளின் மௌனத்தைக் கலைக்க, “ஹா… ஒன்னு… ஒன்னுமில்லைய்யா…” என்றாள் தடுமாற்றத்துடன்.

“கண்ணு… என்ன? என்ன கண்ணு? ஏன் எப்படியோ பேசுற?” அவளின் தடுமாற்றத்தில் அவனுக்கு இன்னும் தான் பதற்றம் அதிகரித்தது.

அவனின் பதட்டம் புரிந்தாலும், தான் அறிந்து கொண்ட விஷயத்தை எப்படிச் சொல்ல என்று தயங்கியவள் தடுமாறித்தான் போனாள்.

“ஊருல இருந்து யாரும் போன் போட்டாங்களா கண்ணு?” என்று இளஞ்சித்திரன் கேட்க,

“என்னய்யா கேட்குற? எனக்கு யாரு போன் போடுவா? அதுவும் ஊர்ல இருந்து?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

“ஹான்… ஒன்னுமில்லை கண்ணு. சும்மா தேன் கேட்டேன். சரி சொல்லு… எதுக்கு லேட்டா போனை எடுத்த?” என்று இப்போது அவன் தடுமாறியவன் உடனே பேச்சையும் மாற்றினான்.

அவளுக்கு இருந்த சந்தோஷ உணர்வில் கணவனின் தடுமாற்றத்தை கவனியாமல் போன கயற்கண்ணி, மீண்டும் தன் காரணத்தைச் சொல்ல தயங்கினாள்.

“என்ன கண்ணு சொல்லு… நாந்தேன் சொல்லிருக்கேன்ல என்ன விசயமானாலும் என்கிட்ட நீ தயங்காம சொல்லலாம்னு. சொல்லு…”

“அது… அது… வந்துய்யா…” என்று இழுத்தவளுக்கு, கணவன் அடிக்கடி சொல்லும் இன்னும் ஒன்றும் ஞாபகத்தில் வந்தது.

“புருஷன், பொஞ்சாதிக்குள்ள சகலமும் சகஜந்தேன் கண்ணு…” என்று சொல்லி அவளின் சில தயக்கங்களில் இருந்து அவளை வெளியே கொண்டு வருவான்.

அது ஞாபகம் வரவும் அவளின் தடுமாற்றம் தள்ளிச் சென்றது.

“உங்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்யா…” என்று மெதுவான குரலில் சொன்னாள்.

“அதைத்தேன் சொல்லுன்னு அப்போ இருந்து கேட்குறேன் கண்ணு…”

“அது… வந்து… நா…”

“நீ…?”

“வீட்டுக்கு தூரமாகி மூணு மாசம் ஆச்சுய்யா…” என்றாள் ரகசியமான குரலில்.

“என்ன தூரம்?” என்று முதலில் புரியாமல் முழித்தவன், பின்பு தங்கள் திருமணம் ஆன புதிதில் அவள் சொன்ன தூரம் ஞாபகம் வர, “ஓ! ஆமா கண்ணு… நீ மூணு மாசமா அதைப் பத்தி எதுவும் சொல்லவே இல்லையே. நானும் உன் கூட இருக்கணும்கிற ஆசையில் அதைப் பத்தியே மறந்து போய்ட்டேன். இப்போ அதுக்கு என்ன செய்யணும் கண்ணு. டாக்டர்கிட்ட போகணுமா?” விஷயம் பிடிபடாமல் மாதாந்திரப் பிரச்சினையோ என்று நினைத்துக் கேட்டான்.

“டாக்டரம்மாகிட்ட போவணும் தான்யா. ஆனா இது வேற…” என்றாள் பூரிப்புடன்.

“வேறயா?” இன்னும் புரியாமல் முழித்தான்.

“அது… என் வயித்துல, ஓ… ஓ…” பிள்ளை என்று முடிக்க முடியாமல் வெட்கத்துடன் இழுத்தாள்.

“என்ன சொல்ல வர்ற கண்ணு? ஒன்னும் புரியலையே…” என்று சொல்லிக் கொண்டே வந்தவன், அவளின் வார்த்தைகளை எல்லாம் ஒரு கோர்வையாக்கி மனதில் ஓட்டி பார்த்தவனுக்கு விஷயம் சட்டென்று பிடிபட்டது.

பிடிபட்ட நொடியில் ” நெசமா? நெசமாவா கண்ணு…?” என்று கேட்டு மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தான்.

வானம் வசப்பட்ட உணர்வில் இருந்தான் இளஞ்சித்திரன்.

உள்ளத்தில் ஆர்ப்பரித்த மகிழ்ச்சி அலை அவனின் முகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

தகப்பன் ஆகிவிட்ட சந்தோஷத்தை மனைவியுடன் கொண்டாட அடுத்தச் சில மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.

கயற்கண்ணி கதவை திறந்து விட்டதும் வேகமாக வீட்டிற்குள் வந்து கதவை சாற்றியவன், அதை விட வேகமாக அவளைக் கைகளில் அள்ளியிருந்தான்.

“யோவ்… என்னய்யா?” அவனின் வேகத்தில் தடுமாறி போனாள் கயற்கண்ணி.

“ஷ்ஷ்! பேசாதே கண்ணு!” என்றவன் தன் கைவளைவிற்குள் அவளைப் பொக்கிஷமாகக் கொண்டு வந்து அணைத்திருந்தான்.

“சோலி இருக்குனு சொல்லிட்டு போனயேய்யா…” என்று கேட்டாள்.

“ம்ப்ச்… ஒன்னும் பேசாதே கண்ணு. இந்த நிமிஷத்தை மட்டும் அனுபவி!” என்றவன் தன் அணைப்பை இறுக்கினான்.

அவளும் அவனின் அணைப்பில் சுகமாக அடங்கிப் போனாள்.

“எனக்கு எம்புட்டு சந்தோஷமா இருக்குத் தெரியுமா கண்ணு?” என்று கேட்டவன் அவளின் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் இதழ் பதித்தான்.

“கிளம்பு, ஹாஸ்பிட்டல் போய்ச் செக்கப் பண்ணிட்டு வருவோம்…”

“சோலி இருக்கு, எலக்ட்ரானிக் சிட்டி போகணும்னு சொன்னயேய்யா?”

“அதுக்கு வேற ஒருத்தரை அனுப்பிட்டு நான் பெர்மிஷன் கேட்டு வந்துட்டேன் கண்ணு. இனி நாளைக்குப் போனா போதும்…” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.

பரிசோதனையின் முடிவில் கர்ப்பத்தை மருத்துவர் உறுதி செய்தார்.

“த்ரீ மந்த்ஸ் ஆகியும் பிரகன்சி சிம்டம்ஸ் எதுவும் தெரியலையே டாக்டர்?” என்று இளஞ்சித்திரன் கேட்க,

“சிலருக்கு டெலிவரி வரைக்குமே வாந்தி, மயக்கம் எதுவும் இல்லாமல் கூட இருக்கும். அதைப் பற்றிப் பயப்பட ஒன்னும் இல்லை…” என்ற மருத்துவர் சத்து மாத்திரைகளை எழுதி கொடுத்து அனுப்பினார்.

மருந்தை வாங்கிக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்து வீட்டை நோக்கி சென்றார்கள்.

அப்போது வழியில் ஒரு கோவில் திறந்திருந்தது தெரிய, “கோவிலுக்குப் போகலாமாய்யா?” என்று கேட்டாள் கயற்கண்ணி.

“போகலாம் கண்ணு…” என்றவன் வண்டியை கோவில் அருகே நிறுத்தினான்.

இருவரும் ஜோடியாக வெளியே வருவது அரிது என்பதால் அந்த இனிமையான தருணத்தை அனுபவிக்கக் கணவனை ஒட்டியே நடந்து வந்தாள் கயற்கண்ணி.

அதை உணர்ந்த இளஞ்சித்திரனும் அவளின் கையை மென்மையாக பற்றித் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து கடவுளுக்கு நன்றி செலுத்தினர்.

பின் சிறிது நேரம் மண்டபத்தில் அமர்ந்து இருந்து விட்டு வெளியே வந்தனர்.

இளஞ்சித்திரன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டிருக்க, அதுவரை கயற்கண்ணி சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது சாலையில் ஒரு பேருந்து செல்ல, அதில் இருந்த ஒருவனின் பார்வை கயற்கண்ணியின் மேல் விழுந்தது.

அவளைப் பார்த்த வேகத்தில் தன் கைப்பேசியில் அவளை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டான் அவன்.

அவனைக் கவனிக்காத கயற்கண்ணியோ கணவன்‌ வண்டியை எடுக்கவும் ஏறி அமர்ந்தாள்.

அடுத்து இருவரையுமே‌ தன் கைப்பேசி கேமிராவில் புகைப்படம் எடுத்தவன், அதை உடனே இமயவரம்பனுக்கு அனுப்பி வைத்துவிட்டு அலைப்பேசியிலும் இளஞ்சித்திரனையும், கயற்கண்ணியையும் தான் பார்த்த விஷயத்தை ஒலிபரப்ப ஆரம்பித்தான் அவர்களின் ஊரைச் சேர்ந்த அந்த இளைஞன்.

அவன் தங்களைப் பார்த்து விட்டதை அறியாமல் வீடு போய்ச் சேர்ந்தார்கள் இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும்.


மறுநாள் இரவு இளஞ்சித்திரன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து வெகுநேரம் கதவை தட்டியும் கதவை திறக்காமல் போனாள் கயற்கண்ணி.

அவளின் அலைபேசிக்கும் அழைத்துப் பார்த்தான். ஆனால் மணி அடித்து ஓய்ந்ததே தவிர அவள் அழைப்பை ஏற்கவே இல்லை.

அதில் என்னமோ, ஏதோ என்று பதறியவன், மீண்டும் விடாமல் கதவை தட்டினான்.

அதற்குப் பலனாகச் சில நிமிடங்களுக்குப் பிறகு வந்து கதவை திறந்த கயற்கண்ணி அழுது வீங்கிய விழிகளுடனும், தளர்ந்த நடையுடனும் நின்றிருந்தாள்.

அவளை அப்படிக் கண்டு துடித்துப் போன இளஞ்சித்திரன், “என்னாச்சு கண்ணு?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

கணவன் கேள்வி கேட்ட அடுத்த நிமிடம் கதவு திறந்தே கிடப்பதையும் மறந்து, அவனைப் பாய்ந்து கட்டிக்கொண்டு அவனின் மார்பில் விழுந்து கதறி அழ ஆரம்பித்தாள் கயற்கண்ணி.