பூவோ? புயலோ? காதல்! – 2

அத்தியாயம் – 2

கணினியின் முன் அமர்ந்து தன் நெற்றியை அழுந்த ஒரு முறை தேய்த்து விட்டுக் கொண்டு தன் பதட்டத்தைத் தணிக்க முயன்றவளின் முன் நிழலாட தலையை உயர்த்திப் பார்த்தாள் வேதவர்ணா.

அவளின் அலுவலகத் தோழி வித்யா நின்றிருந்தாள்.

“என்ன வேதா… எதுக்குத் தலையைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்க?”

“இந்தப் புரோகிராம் சரியா வர மாட்டேங்குது வித்யா. எங்கே தப்பு விட்டேன்னு தெரியலை. ஒரு மணிநேரமா பார்க்கிறேன் எரர்(error) பிடிபட மாட்டேங்குது…”

“எங்கே காட்டு… உனக்குப் பிடிபடாதது எனக்காவது படுதானு பார்ப்போம்…” என்றவள் வேதாவின் இருக்கையின் அருகே வந்து நின்று கணினி திரையைப் பார்த்தாள்.

‘என்ன எரர்?’ என்று தனக்குத் தானே கேட்பது போலச் சொல்லிக் கொண்டே வேதா பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் தானும் பார்க்க ஆரம்பித்தாள்.

ஒரு பத்து நிமிடம் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு இடத்தில் தவறான குறியீடு(code) இருந்தது கண்ணில் பட “இந்தக் கோட் பாரு வேதா, தப்பா இருக்கு…” என்றாள்.

அவள் சொன்ன இடத்தில் வேதாவும் பார்க்க, அந்தத் தவறான குறியீட்டை பார்த்து “இதுவா?” என்று திகைத்தவள் வித்யாவை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளும் அப்போது தோழியைத் தான் வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு என்னாச்சு வேதா? இந்தக் கோட் பாதித் தூக்கத்தில் எழுப்பி விட்டு அடிக்கச் சொன்னாலும் சரியா அடிக்கிற ஆள் நீ. இதைக் கண்டு பிடிக்க முடியாமல் ஒரு மணிநேரம் உட்கார்ந்து இருக்கியா?” என்று நம்பமுடியாமல் கேட்டாள்.

“அது தான் எனக்கும் ஒன்னும் புரியலை வித்யா. இந்தப் பக்கத்திலேயே தான் நான் எங்க தப்பு விட்டேன்னு தேடினேன். அப்படித் தேடியும் என்னால கண்டுபிடிக்க முடியலை. இப்போ நீ கண்டுபிடித்துக் குறிப்பிட்டு சொன்ன பிறகு தான் என் கண்ணுலேயே படுது…”

“ஏன் வேதா உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.

“காய்ச்சல் எல்லாம் இல்லை வித்யா. ஆனா காலையில் இருந்தே ஒரே பதட்டமா, படபடப்பா இருக்கு. ஏன்னு தெரியலை…” என்றாள் சோர்வுடன்.

“ஓ…! எதையும் நினைத்து டென்ஷன் ஆனாயா?”

“இல்லையே வித்யா…” என்றவளுக்கு என்ன காரணம் என்றே புரியவில்லை.

“சரி விடு…! கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்தா சரியா போகும். வா… கேன்டின் வரை போயிட்டு வருவோம்…” என்றழைத்தாள்.

அவளுக்கும் அதுவே சரியென்று தோன்ற வித்யாவுடன் கிளம்பிச் சென்றாள்.

அலுவலக உணவகத்தில் அந்த நண்பகல் வேளையில் ஆங்காங்கே சிலர் மட்டும் அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர். வேதாவை ஒரு இருக்கையில் அமர சொல்லி விட்டுத் தானே போய் இருவருக்கும் சமோசாவும், குளிர்பானமும் வாங்கிக் கொண்டு வந்தாள் வித்யா.

“தேங்க்ஸ் வித்யா…” என்ற வேதா முதலில் குளிர்பானத்தைச் சிறிது அருந்தினாள்.

“உன் தேங்க்ஸை நீயே வச்சுக்கோ…! சரி சொல்லு. அம்மா, அப்பாவிடம் பேசினியா? அவங்க எதுவும் சொன்னாங்களா? ஏன் டென்ஷன் ஆன?”

“அப்பாவிடம் பேசலை வித்யா. அம்மாவிடம் மட்டும் சண்டே பேசினேன். நல்லா தான் பேசினாங்க. அதெல்லாம் ஒரு பிராப்ளமும் இல்லையே…”

“அப்படியா?”

“ஆமா… ஆனா ஏன் இப்படி இருக்குனு காரணம் தெரியலை…”

“சரி விடு வேதா… சமோசாவை சாப்பிடு. கொஞ்ச நேரம் எந்தச் சிந்தனையும் இல்லாம மனதை அமைதியா வச்சுப்பாரு. ரிலாக்ஸ் ஆகிரும். அப்புறம் வேலையைத் தொடரலாம்…” என்றாள்.

“ஹ்ம்ம்… ஓகே வித்யா…” என்றவளிடம் வேறு பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள் வித்யா.

அவளிடம் பேசிக் கொண்டே இரண்டு வாய் சமோசாவை உண்ட வேதாவின் முகம் மாற, அதைக் கண்டு தன் பேச்சை நிறுத்திய வித்யா “என்ன வேதா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே வேதா இருக்கையை விட்டு வேகமாக எழுந்து வாயை மூடிக் கொண்டே கைகழுவும் இடம் நோக்கி ஓடினாள்.

அவளின் பின்னால் வித்யாவும் ஓடினாள்.

அங்கே கைகழுவும் இடத்தில் ஓங்கரித்து வேதா வாந்தி எடுக்க ஆரம்பிக்கவும், அவளின் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

வாந்தி எடுத்து முடித்து வாயை கழுவி விட்டு நிமிர்ந்த வேதவர்ணாவின் தலை கிறுகிறுவெனச் சுத்தியது.

அவள் அந்த இடத்திலேயே அப்படியே அமரப்போக, அவளின் நிலை உணர்ந்து பதறிய வித்யா அவளை ஈரமாக இருந்த அந்த இடத்தில் அமர விடாமல் அவளின் தலையைப் பிடித்துத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு “வேதா… என்ன செய்யுது?” என்று பதட்டத்துடன் விசாரித்தவள் சிறிது தூரத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து “ஹலோ…! ப்ளீஸ் ஹெல்ப்…!” என்றழைத்தாள்.

ஆணும், பெண்ணுமாக அமர்ந்திருந்தவர்களில் அந்தப் பெண் வேகமாக அருகில் வந்து வேதாவின் இன்னொரு பக்கம் பிடித்து உதவி செய்ய… இருவரும் சேர்ந்து அந்த ஆடவன் எடுத்துப் போட்ட இருக்கையில் வேதாவை அமர வைத்தனர்.

“வாட் கேப்பன்ட்?” என்று அந்தப் பெண் விசாரிக்க…

“சீ இஸ் நாட் வெல்… தேங்க்ஸ்… ஐ வில் டேக் கேர்…!” என்று அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்தவள் மேஜையின் மீது தலைசாய்த்துப் படுத்திருந்த வேதாவைப் பார்த்தாள்.

“என்ன செய்யுது வேதா?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.

“நின்னா தலைசுத்துது வித்தி…” என்று முனங்கலாகச் சொன்னாள் வேதவர்ணா.

‘என்ன செய்வது?’ என்று யோசித்த வித்யா தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் மேஜையில் இருந்த குளிர்பானத்தையும், தங்கள் கைப்பேசியையும் எடுத்து வந்தவள் “இந்தக் கூல்டிரிங்ஸ் கொஞ்சம் குடி வேதா…” என்று அவளை நிமிர்த்திச் சிறிது பருக வைத்தாள்.

கொஞ்சம் குடித்து விட்டு வேதா மீண்டும் மேஜையில் சாய்ந்து கொள்ள, வேதாவின் கைப்பேசியை எடுத்து வேகமாக ஒரு எண்ணிற்கு அழைத்து விட்டு வைத்தாள்.

சிறிது நேரத்தில் அதே அலுவலக வளாகத்தில் இருந்து அரக்க, பறக்க ஓடிவந்த அந்த ஆடவன் “வாட் கேப்பன்ட் வரு?” என்று வேதாவின் அருகில் அமர்ந்து அவளின் தலையைத் தன் தோளில் சாய்த்துப் பதட்டத்துடன் விசாரித்தான்.

“மயக்கமா வருது ரித்வி…” அவனின் தோளில் வாகாகச் சாய்ந்து கொண்டு முனங்கினாள் வேதவர்ணா.

அவள் பேச சிரமப்படுவதைப் பார்த்து வித்யாவின் புறம் கவலையாகத் திரும்பியவன் “என்னாச்சு வித்யா? காலையில் கூட நல்லா இருந்தாளே… இப்ப ஏன் இப்படி இருக்கா?” என்று ஆங்கிலத்தில் விசாரித்தான்.

வித்யா சற்று முன் நடந்ததை எல்லாம் சொன்னாள். “வாமிட் பண்ணவும் தலை சுத்துதுன்னு படுத்துட்டா ரித்விக். அதான் உங்களை வரச் சொன்னேன்…” என்றாள்.

“தேங்க்ஸ் வித்யா. நான் இவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன். கார் வரை இவளைப் பிடிக்கக் கொஞ்சம் ஹெல்ப் செய்ய முடியுமா?” என்று கேட்டான்.

“வாங்க ரித்விக்…” என்று வித்யாவும் உதவிக்கு வர, இருவரும் சேர்ந்து வேதாவை காரில் அமரவைத்தனர்.

வித்யாவிற்கு நன்றி சொன்னவன் “இவளுக்கு உடம்பு சரியில்லைனு உங்க லீடரிடம் இன்பார்ம் பண்ணிருங்க வித்யா…”

“நான் பார்த்துக்கிறேன் ரித்விக். நீங்க முதலில் அவளை ஹாஸ்பிட்டல் அழைச்சுட்டு போங்க…!” என்றாள்.

அவளிடம் விடைபெற்று அந்தப் பெரிய ஐடி வளாகத்தில் இருந்து வெளியே வந்தவன் மருத்துவமனையை நோக்கி விரைந்து சென்றான்.

சோர்ந்து இருக்கையில் சாய்ந்திருந்தவளை பார்த்து பதறியவன் “வரு… வரு… ஆர் யூ ஓகே?” என்று கேட்டுக் கொண்டே வண்டியை செலுத்தினான்.

வேதாவிற்கு அவன் கேட்பது காதில் விழுந்தாலும் வாயை திறந்து பதில் சொல்ல முடியாமல் சோர்வுடன் இருந்தவள் ‘ஓகே’ என்பது போலத் தலையை மட்டும் அசைத்தாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு பெங்களூரின் புகழ்பெற்ற அந்தப் பெரிய மருத்துவமனையில் வண்டியை நிறுத்தினான். வேதாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு உள்ளே சென்று நிலைமையைச் சொல்லி மருத்துவரை பார்க்க அரை மணி நேரம் ஆனது.

அந்த அரைமணி நேரத்தில் வேதா அவனின் தோளில் சாய்ந்து குட்டி தூக்கமே போட்டு முடித்திருந்தாள்.

அதனால் தலைசுற்றல் சிறிது குறைந்திருக்க… சற்று தெளிவுடனே மருத்துவரை சந்தித்தாள்.

மருத்துவர் சில பரிசோதனைகள் செய்யச் சொல்ல… அனைத்தும் செய்து முடிக்க மேலும் ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

மருத்துவப் பரிசோதனைகளைப் பார்த்த மருத்துவர் “கங்கிராட்ஸ் மிஸஸ் வேதவர்ணா. யூ ஆர் இன் பிரகனண்ட்…” என்ற நல்ல செய்தியை சொல்ல… வேதாவின் முகமும் அருகில் அமர்ந்திருந்த அவளின் கணவன் ரித்விக்கின் முகமும் பிரகாசமாக ஜொலித்தது.

“வேதவர்ணா நீங்க கொஞ்சம் வீக்கா இருக்கீங்க. நல்ல ஹெல்த்தி புட் எடுத்துக்கோங்க. டானிக், டேப்லட்ஸ் எழுதி தர்றேன். ரெகுலரா ஃபாலோ பண்ணுங்க. நீங்க வீக்கா இருப்பதால் தான் உங்களுக்கு அதிகமான தலைசுற்றல் இருந்திருக்கு…” என்றவர் அவளுக்குரிய மருத்துவ ஆலோசனைகளும், உணவு முறைகளும் சொல்லி அனுப்பினார்.

மருத்துவரை பார்த்து விட்டுத் தங்கள் காருக்கு வந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டனர்.

ரித்விக் மனைவியை மென்மையாக அணைத்து “ஐயாம் வெரி ஹேப்பி வரு…” என்று சொல்ல “நானும்…” என்றாள் தாயாகி விட்ட சந்தோஷத்துடன்.

அதே சந்தோஷத்துடனே இருவரும் தங்கள் வீட்டிற்குச் சென்றனர். காரில் போகும்போதே ரித்விக் அவனின் வேலை இடத்திலும், வேதா அவளின் வேலை இடத்திலும் விடுமுறை சொன்னார்கள்.

இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தாலும் இருவருமே வேறு வேறு பிரிவுகளில் இருந்தனர்.

அடுத்து வித்யாவிற்கு அழைத்த வேதா சந்தோஷமான செய்தியை சொல்ல “ஹேய்…! கங்கிராட்ஸ் வேதா! இந்த நல்ல விஷயம் தெரியத்தான் காலையிலிருந்து டென்ஷனா இருக்குனு என்னையும் சேர்த்து டென்ஷன் ஆக்கிட்டு இருந்தியா?” என்றவள் “ஆனாலும் கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்ட வேதா. உடம்பை பார்த்துக்கோ… நல்லா ரெஸ்ட் எடு…!” என்று சொல்லி விட்டு வைத்தாள்.

மலர்ந்த முகத்துடன் தங்கள் வீட்டிற்குள் நுழைந்த இருவரும் ஒருவரை ஒருவர் வேகமாகத் தழுவிக்கொண்டனர். ரித்விக் மனைவியின் முகம் முழுவதும் முத்தமிட்டு தன் மகிழ்வை வெளிப்படுத்தினான்.

“ரொம்பச் சந்தோசமா இருக்கு ‌வரு. நமக்கே நமக்குன்னு ஒரு குட்டி பேபி… நினைக்கும் போதே என்னமோ பண்ணுதுல?” என்று ஆர்வமாக மனைவியின் முகத்தைக் கைகளில் ஏந்தி கண்கள் மின்ன கேட்டான் ரித்விக்.

“ஹம்ம்… என்னென்னமோ பண்ணுது…” என்றாள் அவளும் அவனுக்குக் குறையாத ஆர்வத்துடன்.

அவர்களின் உரையாடல் ஆங்கிலத்தில் தான் தொடர்ந்தது. ரித்விக்கிற்குத் தமிழ் ஓரளவு தான் தெரியும் என்பதால், பல நேரங்களில் அவர்களின் உரையாடல் ஆங்கிலத்தில் தான் இருக்கும். மற்ற நேரங்களில் இருவரின் தாய் மொழியும், இருவரின் வாயிற்குள்ளும் சிக்கி கபடியாடும்.

ரித்விக் மீண்டும் மனைவியை இதமாக அணைத்துக் கொண்டான். அவனின் அணைப்பில் சுகமாக அடங்கி இருந்தவள் பின்பு மெல்ல தலையை உயர்த்திப் பார்த்து “இனி அப்பா, அம்மாவுக்கு நம்ம மேல இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கிற கோபமும் குறைஞ்சுரும்ல ரித்வி?” என்று கண்ணில் ஆர்வம் மின்ன கேட்டாள்.

தன் மார்பளவில் இருந்த மனைவியின் முகத்தை நோக்கி குனிந்து அவளின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்த ரித்விக் “நம்ம பேபியை நம்மளோட காதலின் சின்னமா மட்டும் பார் வரு. உன் பேரன்ட்ஸை சமாதானப்படுத்த போகும் கருவியா பார்க்காதே…!” என்று கண்டனத்துடன் சொன்னான்.

அவனின் கண்டன குரலில் நொடியில் அவளின் முகம் வாட்டத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

“ஸாரி ரித்வி… இனி அப்படிச் சொல்ல மாட்டேன். நம்ம பேபி நம்ம லவ்வுக்குக் கிடைச்ச கிப்ட் மட்டும் தான்…” என்று தனக்குத் தானே அழுத்தமாகச் சொல்லிக் கொண்டாள்.

“தட்ஸ் குட்…!” என்று அவளைப் பாராட்டி விட்டு நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்தான்.

“அய்ய… எனக்கு அங்க வேண்டாம்…” செல்லமாக முகத்தைச் சுருக்கி காட்டினாள்.

அதைக் கண்டு சிரித்துக் கொண்டே அடுத்து அவளின் கன்னத்தைத் தீண்டினான்.

“நாட் பேட்…!” தன் உதட்டை சுழித்து இது எனக்குப் பற்றவில்லை என்று காட்டினாள்.

அதில் அவனுக்கு மேலும் சிரிப்பு வர, அவளின் இதழை நோக்கி குனிய, ஆர்வத்துடன் கண்களை இறுக மூடி கொண்டாள். அவளின் ஆர்வத்தைக் கண்டு அவளிடம் விளையாடி பார்க்கும் ஆர்வம் வர, இதழை தீண்டாமல் நேரத்தைக் கடத்தினான்.

சிறிது நேரம் கடந்த பிறகும் அவன் ஒன்றும் செய்யவில்லை என்று உணர்ந்தவள் கண்களைத் திறக்காமலேயே “திருடா… இப்போ நீ என்னை ஏமாத்தினா அப்புறம் ஒரு வாரத்திற்கு நீ ஏமாந்து போவ…” என்று செல்லமாக மிரட்டினாள்.

“அடிப்பாவி…! ஒரு கிஸுக்கு ஒரு வார தண்டனையா?” என்று அலறியவன், வேகமாக அவளின் இதழை இம்சை செய்ய ஆரம்பித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு இருவரும் விலகி ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

அவளின் கலைந்த கேசத்தை ஒதுக்கி விட்டவன் “ரொம்ப டயர்டா தெரியுற… போய்ப் படுத்து ரெஸ்ட் எடு! நான் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வர்றேன்…” என்று மனைவியை உள்ளே அனுப்பினான்.

உள்ளே சென்று படுக்கையில் படுத்து ஆர்வத்துடன் தன் அன்னைக்கு அழைத்துத் தங்களின் புது வரவை அறிவித்து விட்டு, வேதவர்ணா அலைபேசியை அணைத்த போது அவளின் முகம் வேதனையைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.