பூவோ? புயலோ? காதல்! – 15

அத்தியாயம் – 15

ஒரு நொடி திகைத்து நின்ற கயற்கண்ணி அடுத்த நொடி தன் கையை அவனிடமிருந்து வெடுக்கென்று பிடிங்கி கொண்டு அவனை உறுத்து ஒரு பார்வை பார்த்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளின் பின் வேகமாகச் சென்று வழி மறைத்தவன் “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிட்டு போ கயலு…” என்றான் அழுத்தமாக.

“யோவ்! ஓ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? நீ கேலி பேசி விளையாட இன்னைக்கு நாந்தேன் கிடைச்சேனா?”

“விடையாட்டு இல்லை கயலு. நெசமாத்தேன் கேட்குறேன். நாம கல்யாணம் கட்டிக்கலாமா?” என்று கேட்டதையே கேட்டவனை இப்போது பதட்டத்துடன் பார்த்தாள்.

“ஏய்… ஏய்… சும்மா விளையாடாம போ… போய்யா…” பதட்டத்துடன் கத்தினாள்.

அவளின் சப்தம் அதிகமாகவே கேட்க, வேகமாகச் சுற்றி முற்றி பார்த்து, “கத்தாதே கண்ணு…” என்று அவளை அடக்கினான்.

“இந்தா… கண்ணு, மூக்கு, கல்யாணம்னு உளறாம போய்யா…” என்று இன்னும் தான் கத்தினாள்.

அவளுக்குப் பதட்டம், பதட்டம் மட்டுமே அப்போது இருந்தது.

தான் அவ்வப்போது ஏதோ சீண்டி விளையாடியதற்காக அவனும் இப்படிச் சீண்டுகின்றான் என்றே நினைத்தாள்.

அதுவும் அவன் அவ்வூரின் பெரிய மனிதரின் மகன். உயர்ந்த இடம், வேறு சாதி. இவள் வேறு, சாதாரணக் கூலி தொழிலாளிகளின் மகள். அவளும் ஒரு கூலி தொழிலாளி. அப்படி இருக்க, அவன் அப்படிக் கேட்டதை அவளால் நம்பக் கூட முடியவில்லை.

அவளின் பதட்டத்திற்கு மாறாக வெகு நிதானமாக இருந்தான் இளஞ்சித்திரன்.

எப்போது அவனுக்குக் கல்யாணம் என்ற பேச்சின் போது அவளின் முகம் கண் முன் தோன்றியதோ, அப்போதே அவள் தான் அவனின் மனைவி என்ற முடிவிற்கே வந்து விட்டான்.

அவனுக்கும் நன்றாகவே தெரியும் தான். அவன் வேறு, அவள் வேறு என்று!

ஏன் தந்தையின் சாதி வெறி கூட அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மனதிற்குள் புகுந்த காதல் சாதியையும் பார்க்கவில்லை. அவளின் பொருளாதார நிலையையும் பார்க்கவில்லை.

அந்த நேரம், அந்த நொடி கயற்கண்ணியிடம் தன் மனதை சொல்வதே அவனுக்குப் பிரதானமாக இருந்தது.

அதுவும் காதல் என்ற வார்த்தையைச் சொல்லவில்லை. ‘கல்யாணம் செய்து கொள்வோமா?’ என்று தான் கேட்டான்.

காதல் என்பது கூடச் சில நேரம் தடுமாறும் நிலையைத்தான் உண்டாக்கும்.

காதல் ஒத்து வந்தால் மட்டுமே அடுத்துக் கல்யாணத்தைப் பற்றிச் சிந்திக்கும்.

ஆனால் காதல் என்பதைத் தாண்டி இளஞ்சித்திரனின் மனம் அவளுடன் கல்யாணம் என்பதைத் தான் சிந்தித்தது.

அவள் தான் அவனுக்கு மனைவி என்று முடிவே செய்து விட்ட நிலை அது!

அந்த நிலையில் தான் இளஞ்சித்திரன் இருந்தான்.

எப்போது? எந்த நொடி அவள் அவனின் மனதில் புகுந்தாள் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது.

‘சென்னையில் கல்லூரியில், பேருந்தில் என்று பல வகையான பெண்களை எதிரில் பார்த்த பொழுது எல்லாம் தடுமாறாத அவனின் மனம், தன் ஊரில் தன் வயலில் வேலை செய்யும் பெண்ணிடம் எப்படித் தடுமாறியது?’ என்ற கேள்விக்கு அவனுக்குப் பதில் தெரியவில்லை என்றாலும் அந்தத் தடுமாற்றத்தை அவனின் மனம் சுகமாய்த் தாலாட்டியது.

“உளறலை கயலு, உண்மை! எனக்கு உன்னைய பிடிச்சுருக்கு. உன்னைய கல்யாணம் கட்டிக்க ஆசப்படுறேன்…”

“இந்தா பாரு… நீ இப்படிப் பேசுறது சரியில்ல. இனி நான் ஓ வழிக்கே வர மாட்டேன். இப்படிப் பேசாத…” என்று பயந்த குரலில் சொன்னவள் யாராவது தன்னைக் காக்க வந்து விடமாட்டார்களா என்பது போல் சுற்றிலும் பார்த்தாள்.

அவளின் பயந்த குரலும், மருண்ட விழிகளும் அவனை நிதானிக்க வைக்க, “போ…!” என்றான் ஒற்றை சொல்லாய்.

‘என்ன சொன்னாய்?’ என்பது போல் அவள் நொடி பொழுது புரியாமல் முழிக்க, “வீட்டுக்கு போ…!” என்று அழுத்தி சொன்னவன், தானே முதலில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அதில் நிம்மதி பெருமூச்சு விட்டவள் ‘நல்ல வேளை நம்மகிட்ட விளையாண்டான் தான் போல…’ நினைத்துக்கொண்டே தானும் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் இரண்டு அடிகள் எடுத்து வைத்ததும், “நான் இப்போ பேசினது விளையாட்டா இல்ல கயலு. சீரியஸா தேன் கேட்டேன். அதை எப்பவும் மறக்காதே. அதோட கண்ணுன்னு தேன் இனி உன்னைய கூப்பிட போறேன். கயற்கண்ணியில் கண்ணியைக் கண்ணு ஆக்கிட்டேன். நீ எப்பவும் எனக்குக் கண்ணு தேன். என் கண் போல உன்னைய பார்த்துப்பேன்…” என்று அவன் பின்னால் இருந்து சொல்ல, அவளின் கால்கள் அப்படியே நிலைத்து நின்றன.

வாய்ப் பெரிதாகத் திறந்து கொண்டது. கண்கள் அகல விரிந்தன. மூச்சுக்கு தடுமாறியவள் போல் மூச்சை இழுத்து இழுத்து விட்டாள்.

“யாரோ வர்ற மாதிரி இருக்கு. இங்கிருந்து போ கண்ணு…” என்று அவளின் நிலையைக் கலைத்தவன், அவள் அங்கிருந்து சென்ற பிறகு தான் அவன் சென்றான்.

அதன் பிறகு ஒரு வாரம் அவன் கண்ணிலேயே அவள் படவில்லை. வயல்வெளிகளிலேயே சுற்றி சுற்றி வந்தான்.

அவளின் தந்தையை ஒரு தென்னந்தோப்பில் வேலை செய்யும் போது பார்த்தான். அன்னையை நெல் நடவும் இடத்தில் பார்த்தான். ஆனால் அவள் மட்டும் எங்கேயும் கண்ணில் அகப்படவில்லை

யாரிடம் அவளைப் பற்றி விசாரிப்பது என்றும் தெரியவில்லை.

அவளைப் பார்க்காத அந்த ஒரு வாரம் அவனின் காதலின் வலு கூடியிருந்தது.

கண்ணில் படாதது கருத்தில் நிற்காது என்ற கருத்து எல்லாம் உண்மை இல்லை என்று சொல்வது போல் கண்ணில் படாதது மனதில் அழுத்தமாக ஏறி அமர்ந்து கொண்டிருந்தது.

அவளின் நினைவுகள் அவனை ஆக்கிரமிக்க, அவள் தான் அவனின் மனைவி என்ற முடிவு உறுதிபடுத்தப்பட்டது போல் உணர்ந்தான்.

இளஞ்சித்திரன் இங்கே தேடி தவிக்க, கயற்கண்ணி அங்கே தேட விட்டு தவித்தாள்.

ஆம்! அவளும் தவித்தாள்.

அவனின் கண்ணில் படக்கூடாது என்று ஓடி ஒளிந்தாலும், அவனின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் அவளின் மனதை தடம் புரள செய்து கொண்டிருந்தது.

அன்று மாலை அலுப்புடன் வீட்டிற்குள் நுழைந்தவளை அவளின் அன்னை வேலம்மாள் முறைத்துப் பார்த்தார்.

“ஏன்டி இப்படிக் கொழுப்பெடுத்துப் போய்த் திரியுற?” என்று கோபத்துடன் வரவேற்ற அன்னையைப் புரியாமல் பார்த்தாள் கயற்கண்ணி.

“என்னம்மா ஆச்சு? ஏன் நான் வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் நுழையாததுமா காவடி தூக்குற…” என்று எரிச்சலுடன் கேட்டுக் கொண்டே சுவற்றில் சாய்ந்து இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்து கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டாள்.

“இந்தா, இதுக்குத்தேன் காவடி தூக்குதேன்…” என்று அவள் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டதை சுட்டிக்காட்டியவர், “உன்னைய யாருடி ஒன்றரை மயிலுக்கு அப்பால இருக்குற கருசக்காட்டுக்கு சோலி பார்க்க போவ சொன்னது? நானும் ரெண்டு நாளா சொல்லி அலுத்துப் போனேன். சொன்ன பேச்சை கேட்காம ஆடிட்டு இருக்க…” என்று எரிச்சலுடன் சொன்னார்.

அவர் கோபத்தில் குதிக்க, அவளோ அமைதியாகக் கால்களைப் பிடித்த வண்ணம் இருந்தாள்.

“நாளைல இருந்து ஒழுங்கா வேங்கையா வயலுக்குக் கூலிக்கு வர்ற. அதை விட்டுப்புட்டு கருசக்காட்டுக்குப் போனா காலை ஒடைச்சுப்புடுவேன். என்ன இங்கன சோலிக்கு வர்றியா?” என்று கேட்டார்.

‘எனக்கு மட்டும் அம்புட்டுத் தொலைவு கருசக்காட்டுக்கு போயி சோலி பார்க்கோணும்னு வேண்டுதலா என்ன? நான் ஏன் இங்கன இல்லாமல் அம்புட்டு தொலைவுல சோலிக்கு போறேன்னு தெரிஞ்சா, நீயே இனி அங்கன போயே சோலியை பாருன்னு சொல்லுவமா…’ என்று தனக்குள் புலம்பி கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவள் பதில் சொல்லாமல் ஏதோ யோசனையில் இருப்பதைப் பார்த்த வேலம்மாள் “என்னடி பேய் அடிச்சது போல உட்கார்ந்து இருக்க. இங்கனக்குள்ள சோலிக்கு வர்றியா இல்லையா?” என்று அதட்டலுடன் கேட்டார்.

அதட்டலில் அன்னையை நிமிர்ந்து பார்த்தவள் தலை தன்னால் ‘வர்றேன்’ என்பது போல் ஆடியது.

“இப்பவாவது சொன்ன பேச்சை கேட்டீயே. இங்கனங்குள்ள சோலியைப் பார்த்தோமா, கூலியை வாங்கினோமா, வீட்டுல சோறாக்கி தின்னோமா, அக்கடான்னு கட்டையைச் சாச்சோமானு இல்லாம அம்புட்டு தொலைவுல போயி சோலியை பார்த்துட்டு வந்து காலை நீட்டி உட்கார்ந்தே கிடக்கா. காலு வலிக்குதுன்னு சொல்லியே வீட்டுல ஒத்த வேலை பார்க்கிறது இல்லை. இங்கன கொடுக்குற கூலியை தானே கருசக்காட்டுலயும் வாங்குற. அங்கன மட்டும் என்னமோ கூடத் தர்றது போல ஓடுறா…” என்று புலம்பி கொண்டே வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் வேலம்மாள்.

அனைத்தும் காதில் விழுந்தாலும் நாளை பற்றிய பயம் அப்போதே அவளை ஆக்கிரமித்தது.

அவனுக்கு எப்படி அப்படி ஒரு எண்ணம் வந்தது?

பெரிய படிப்பெல்லாம் படித்தவன் எப்படித் தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாகச் சொன்னான்.

ஒருவேளை அவனுக்கு இது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டோ?

அன்று வயலுக்குச் செல்லும் வழியில் யாரிடமோ மீண்டும் சென்னையில் தான் வேலை பார்க்க போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தானே.

அப்படி இருக்கும் போது இங்கே இருக்கும் வரை தன் மனதை கெடுக்கின்றானோ?

என்று ஏதேதோ நினைத்து குழம்பிய படி அமர்ந்திருந்தாள்.

ஆனாலும் அவனின் கண்கள் பொய் சொல்லவில்லையே. அதில் எந்தக் கபடமும் தெரியவில்லையே. முகத்தைத் தாண்டி அவனின் கண்கள் மேயவில்லையே.

அப்போ உண்மையாகவே என்னை விரும்புகின்றானோ? என்று நினைத்தாள்.

“இந்தா இந்தக் கீரையை ஆஞ்சு வை. அப்படியே இந்தக் காயை நறுக்கி கொடு. குழம்பை கூட்டி வைக்கிறேன்…” என்று அவளின் முன் அரிவாள்மணையையும், கீரை, காய்கறிகளை வைத்து விட்டு அவளின் நினைவை கலைத்தார் வேலம்மாள்.

அப்போதும் அவள் முழுதாகத் தெளியாமல் அன்னையை மலங்க மலங்க பார்த்து வைத்தாள்.

அவள் அப்படி முழிப்பதை வினோதமாகப் பார்த்த வேலம்மாள் “ஏய்… என்னடி உட்கார்ந்துகிட்டே கனா காங்கிறயா?” என்று சத்தமாக ஒரு அதட்டல் போட்டார்.

அதில் பட்டெனத் தெளிந்தவள், “இதோமா…” என்று சொல்லிக் கொண்டே காய்களை நறுக்க ஆரம்பித்தாள்.

அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு பாயை விரித்துப் படுக்கையில் விழுந்தவளுக்கு உறக்கம் வராமல் இளஞ்சித்திரன் நினைவு தான் கண்களுக்குள் வந்து நின்றது.

வெறுமனே கண்களை மூடிய படி படுத்திருந்தாள். அப்போது அவளின் அருகில் படுத்திருந்த அன்னை எழுந்து சென்று வீட்டின் கதவை திறக்கும் சப்தம் கேட்டு மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள்.

விளக்குகள் அனைத்தையும் அணைத்திருந்ததால் வீடே இருட்டாக இருக்க, வேலம்மாள் கதவை திறந்ததும், சற்றுத் தூரத்தில் இருந்த தெருவிளக்கின் வெளிச்சம் வீட்டிற்குள் தெரிந்தது.

வேலம்மாள் கதவை திறந்து வாசல் படியிலேயே அமர்ந்தவர் திண்ணையில் படுத்திருந்த கணவனை எழுப்பினார்.

“யோவ், இந்தா எழுந்திருய்யா…” என்று எழுப்ப, ‘இப்போ எதுக்கு இந்த அம்மா அப்பாவை எழுப்பிக்கிட்டுக் கிடக்கு?’ என்று யோசனையுடன் வாசலை பார்த்தாள்.

தானும் எழுந்து கொள்வோமா என்று நினைத்த நொடி, “இந்தா எழுந்துருச்சு உட்காருய்யா. உம்ம மவள பத்தி கொஞ்சம் பேசணும்…” என்று சொன்னது காதில் விழ, அடுத்த நிமிடம் தன் எண்ணத்தை விட்டுவிட்டுக் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

‘என்னைய பத்தி என்ன பேச போவுது இந்த அம்மா?’ என்று நினைத்துக் கொண்டே காதை தீட்டி வைத்துக் காத்திருந்தாள்.

“என்ன வேலு என்ன விசயம்? என்னத்துக்கு என்னைய எழுப்புறவ? மவள பத்தி காலையில பேச வேண்டியது தானே…” என்று சலிப்புடன் சொல்லிக் கொண்டே எழுந்து அமர்ந்திருந்தார் கந்தசாமி.

“இப்போதேன் பேசி ஆவோணும்…”

“என்னனு சொல்லு…”

“நம்ம கயலுக்கு வெரசா ஒரு கல்யாணத்தை முடிக்கோணும்யா…”

“கல்யாணம் என்ன பொட்டி கடைலயா விக்கிது. நீ கேட்டதும் போயி வாங்கியார…”

“இந்தாய்யா, இந்த இடக்கு பேச்சு எல்லாம் இங்கன வேணாம். புள்ள வாழ்க்கை பாத்துப் பதமா பேசு…”

“அதுக்கு எதுக்குடி ஓ மொகரக்கட்டைய இப்படி வெட்டிகிற? புள்ள வாழ்க்கை மேல எனக்கு மட்டும் அக்கறை இல்லையா? இப்போ இருபது முடிஞ்சி இருபத்தி ஒன்னு தானே ஆரம்பிச்சிருக்கு. அதுக்குள்ளார என்ன அவசரம்?”

“இருபத்தி ஒன்னு தானே இல்லைய்யா. இருபத்து ஓரு வயசு ஆகி போச்சு…” என்று இருபத்தி ஒன்றை நீட்டி முழங்கி அழுத்தமாகச் சொன்னார்.

“எதுக்குடி இப்போ இந்த நீட்டு நீட்டுற…?”

“பின்ன என்னய்யா, உன்னைய கல்யாணம் கட்டிக்கிட்டு நான் வந்தப்ப எனக்குப் பதினெட்டு தேன் ஆச்சு. அப்படிப் பார்த்தா நம்ம மவளுக்கு இப்பயே மூணு வயசு அதிகமாகி போச்சு. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ இந்த வருசத்துக்குள்ள புள்ளக்குக் கல்யாணத்தை முடிச்சு வைக்கிற…”

“ஏன்டி இப்படி அவசரப்படுற? இன்னும் கொஞ்சம் கைல காசு சேர்த்துப்போமே. இப்போ இருக்குற காசை வச்சு என்னத்தைக் கல்யாணம் பண்ணுவ?”

“பரவாயில்லய்யா… கையில இருக்குற காசை வச்சுக் கல்யாணத்தை முடிச்சுப்புடலாம். ஓ ஒன்னு விட்ட அக்கா மவன் பக்கத்து ஊர்ல குத்தகைக்கு எடம் பிடிச்சுப் போட்டு விவசாயம் பாக்குதான்ல அவன் நம்ம கயலுக்கு சரியா வருவான். அங்கேயே பேசி முடிச்சிடலாம்…”

“ஏய்… ஏய்… என்னடி கல்யாணம் பண்ணி வைய்னு சொல்லி வாயை மூடங்குள்ளயும் மாப்ள வரைக்கும் போயிட்ட? எதுக்கு இப்படி நீ அவசரப்படுற? அதை மொதல்ல சொல்லித் தொலை…” என்று அதட்டினார்.

“உம்ம மவ செய்றது ஒன்னும் சரி இல்லைய்யா. அதுக்குத்தேன் சீக்கிரம் கல்யாணம் முடிச்சுப்புடுவோம்னு பாக்குதேன்…”

“என்னடி சொல்ற? எவனையும் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்காளா என்ன?” என்று பதட்டத்துடன் கந்தசாமி கேட்ட அதே நேரம், அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த கயற்கண்ணியும் பதட்டமானாள்.

அன்னை தன்னைப் பற்றிப் பேச ஆரம்பிக்கவுமே திக்கென்று அதிர்ந்து தான் போனாள்.

அதுவும் திருமணப் பேச்சு பேசவும் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

அந்நொடியில் இளஞ்சித்திரனின் வார்த்தைகள் தான் காதில் எதிரொலித்தது.

“நாம கல்யாணம் கட்டிக்கலாமா கண்ணு?”

“நீ என்னோட கண்ணு. நான் உன்னைய கண் போலப் பார்த்துப்பேன்”

என்றதே மீண்டும் மீண்டும் காதில் கேட்டுக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள்.

இளஞ்சித்திரனுக்கு எப்படி வீட்டில் திருமணப் பேச்சு எடுத்ததும் கயற்கண்ணி மனக்கண்ணில் வந்தாளோ, அதே போல் கயற்கண்ணியின் திருமண விஷயம் பேசும் போது இளஞ்சித்திரன் மனக்கண்ணில் வந்து அவளின் மனதில் ஸ்திரமாக வந்து அமர்ந்து கொண்டான்.

இன்னாருக்கு இன்னார் என்று கடவுள் எழுதி வைப்பாராம்.

இளஞ்சித்திரனுக்குக் கயற்கண்ணி தான் என்று எழுதி வைத்தார் போலும்.

கடவுள் போட்ட முடிச்சு ஸ்திரமாக விழுந்ததோ? இங்கே இளஞ்சித்திரன், கயற்கண்ணி தம்தம் மனதில் மாற்றி மாற்றி அழுத்தமாக விழுந்து போனார்கள்.

தன் மனதை கயற்கண்ணி அறிந்து கொண்ட அதே நொடியில் அவளின் அன்னை அவளின் மீது சந்தேகத்தை எழுப்ப மொத்தமாக அதிர்ந்து விதிர்த்துப் போனாள்.

பயத்தில் உடல் நடுங்க தொடங்கினாலும் தாயின் பேச்சை கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“மனசுல எவனையும் நினைச்சுட்டு இருக்காளானு தெரியலைய்யா. ஆனா அவ நடவடிக்கை எதுவும் எனக்குச் சரியா படலை…”

“என்னடி சொல்ல வர்ற? தெளிவா சொல்லுடி…”

“கருசக்காட்டுக்கு சோலிக்கு போவாதேடினு சொன்னா அங்கன தேன் போவேன்னு வீம்புக்குனே போறா. ஒரு வாரமா ஏதோ யோசிச்சுக்கிட்டே சுத்துறா. இன்னைக்கு இனி கருசக்காட்டுக்கு சோலிக்குப் போகக் கூடாதுனு சொன்னா என்னத்தையோ பறி கொடுத்தவ மாதிரி புசுக்குபுசுக்குனு முழிக்கிறா. இதெல்லாம் பார்த்தா எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. பொட்டைப்புள்ள எவனையும் நம்பி தடம் மாறி போனா நம்ம மான மரியாதையே நாறிப் போயிடும். அதுதேன் சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிச்சுப்புடுவோம்னு சொன்னேன்…” என்றார் வேலம்மாள்.

மகள் இளஞ்சித்திரனை தவிர்க்க தான் கரிசல் காட்டிற்கு வேலைக்குச் சென்றாள் என்று அறியாமல், அவள் கரிசல் காட்டிற்குப் போவதே வேறு யாரையோ பார்க்கத்தான் என்று நினைத்துக்கொண்டார் வேலம்மாள்.

அன்னையின் நினைப்பை கேட்டு வறட்சியாகச் சிரித்துக் கொண்டாள் கயற்கண்ணி.

மனைவி சொன்னதைக் கேட்டு சில நொடிகள் யோசனையுடன் இருந்த கந்தசாமி பின் மனைவியின் கருத்துப் படி மகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இங்கே கயற்கண்ணிக்குத் திருமணப் பேச்சு நடக்க, இளஞ்சித்திரன் வீட்டிலும் அவனுக்குப் பெண் தேடும் படலம் துரிதமாக நடந்து கொண்டிருந்தது.