பூவோ? புயலோ? காதல்! – 12

அத்தியாயம் – 12

பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் ரித்விக், வேதவர்ணா தம்பதியருக்கு மிதமான ஓட்டத்திலேயே நாட்கள் கடந்து கொண்டிருந்தன.

அன்றைக்குப் பிறகு கணவனாகத் தன் தேவையைச் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்து கொண்டான் ரித்விக்.

அவன் அப்படி இருந்தது வேதாவிற்கு ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும், தன்னால் தான் அவன் அப்படி நடந்து கொள்கிறான் என்ற குற்றவுணர்வும் இன்னொரு பக்கம் அவளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

தான் ஏன் தாம்பத்திய உறவை எதிர்க்கிறோம் என்று அவளுக்கே புரியாமல் போனதில் ஒருவித குழப்ப மனநிலையுடனே தான் வேலை, வீடு என்று சுற்றிக் கொண்டிருந்தாள்.

மனதில் குழப்பம் இருந்தாலும் அதைக் கணவன் முன் வெளிப்படுத்தவும் தயங்கினாள்.

அத்தயக்கத்திற்குக் காரணமும் கணவன் தான் என்றால் அது மிகையல்ல!

அன்று காலை சமையலறையில் காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தான் ரித்விக்.

ஆம்! ரித்விக் தான்!

வேதவர்ணா மசக்கையின் காரணமாகக் காலை நேர மயக்கத்தில் அதிகம் ஆட்பட்டிருந்தாள்.

எழுந்து சிறிது நேரம் கடந்த பிறகும் அவளின் கால்கள் தள்ளாடுவதை இரண்டாவது மாதத்தில் கண்டவன் காலை வேலையைத் தன் பொறுப்பாக எடுத்துக் கொண்டான்.

நான்கு மாதங்கள் ஆன பிறகும் அவளின் மயக்கம் மட்டுப்படாமல் போக, அவளுக்கு முன் எழுபவன், காலை உணவை தயாரித்து விட்டு தான் அவளை எழுப்புவான்.

அதன் பிறகு இருவரும் சேர்ந்து மதியத்திற்குத் தேவையான உணவை தயார் செய்து விட்டு வேலைக்குக் கிளம்புவார்கள்.

அன்று அவன் காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்த போதே எழுந்து வந்த வேதா கணவன் சட்னி அரைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி அப்படியே சமையலறை வாசல் சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

பெண்தான் முன்னால் எழுந்து சமைக்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், மனைவியின் வேலையையும் கணவனே செய்வதைப் பார்த்து அவளின் பார்வை பெருமையில் மின்னியது.

மனம் பெருமை கொண்ட அதே நேரம் தான் அவனுக்கு மனைவியாக நியாயம் செய்யவில்லை என்பதும் மனதின் ஓரம் உறுத்த, நொடியில் அவளின் முகம் கசங்கி போனது.

அந்த நேரத்தில் தன் பின்னால் அரவத்தை உணர்ந்த ரித்விக் திரும்பி பார்க்க, வேகமாகத் தன் கசங்கிய முகப்பாவத்தை மாற்றிக் கொண்டு சோபையாகச் சிரித்தாள்.

தானும் பதிலுக்குச் சிரித்தவன், “குட்மார்னிங் வரு… கம்…” என்று மிக்சியை அணைத்து விட்டு மனைவியின் புறம் கையை நீட்டினான்.

அவன் நீட்டிய கரங்களுக்குள் வேகமாக வந்து அடைக்கலம் புகுந்து கொண்டாள்.

அவளின் தோளை சுற்றி கையைப் போட்டு மென்மையாக அணைத்துக் கொண்டவன், “இன்னைக்கு ஏன் சீக்கிரம் எழுந்த?” என்று மெதுவாகவே என்றாலும் சரியாகவே தமிழில் கேட்டான்.

மெல்ல அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “இப்போ எல்லாம் தமிழ் நல்லா பேச பழகிட்டீங்க ரித்வி…” என்றாள் ஆச்சரியமாக.

அவளின் ஆச்சரியத்தில் சிரித்தவன், “ட்ரைனிங் யாரு? என் வரு வாச்சே…” என்று பெருமையுடன் சொன்னவன், “நீ எனக்குத் தமிழ் பேச வைக்கிற தண்டனை கொடுக்கிறதா நினைச்சு, என்னை நல்லா பேச வச்சுட்டு இருக்க…” என்றவன் அவளின் மூக்குடன் தன் மூக்கை உரசினான்.

“சரி சொல்லு… என்ன சீக்கிரம் எழுந்துட்ட?” என்று மீண்டும் கேட்டவன் தோளில் சாய்ந்து கொண்டவள் “தூக்கம் வரலை ரித்வி…” என்று மட்டும் சொன்னாள்.

“ம்ம்… ஓகே… இரு ஹார்லிக்ஸ் போட்டு தர்றேன். குடிச்சுட்டுப் பிரேக் பாஸ்ட் ரெடி பண்ணலாம்…” என்றான். தொடர்ந்து தமிழில் பேச முடியாமல் சிறிது தடுமாறியவன் மீண்டும் ஆங்கிலத்திற்குத் தாவியிருந்தான்.

“பிரேக் பாஸ்ட்டா?” என்று கேள்வியாக இழுத்தவள் பார்வையைச் சமையல் மேடை பக்கம் ஓட்டினாள். இரண்டு வகைச் சட்னி தயாராக அறைத்து வைத்திருந்தான்.

அடுப்பின் மீது இருந்த இட்லி குக்கரின் மேல் ஆவி பறந்து இட்லி தயாராக இருப்பதை எடுத்துக் காட்டியது.

‘அவ்வளவுதானே காலை உணவு. இன்னும் என்ன?’ என்பது போல் கணவனைப் பார்த்தாள்.

அவளின் கேள்வி பார்வையைப் புரிந்தவன் உதட்டில் ரகசிய புன்னகை ஒன்று பூத்தது.

“என்ன ரித்வி கண்ணா… உங்க பார்வையே சரியில்லையே… என்ன விஷயம்? இன்னும் என்ன ப்ரேக்‌ பாஸ்ட் செய்யப் போறீங்க?” என்று கேட்டவளை அதே சிரிப்பு மாறாமல் பார்த்தவன், “நீ ஹார்லிக்சை குடிச்சு முடி, சொல்றேன்…” என்று அவளைப் பார்க்காமல் பார்வையைத் திருப்பி அவளுக்குத் தேவையான பாலை ஹார்லிக்ஸ் கலந்து ஆற்ற ஆரம்பித்தான்.

“ம்கூம்… ரித்வி கண்ணா என்னமோ மறைக்கிறா போல இருக்கே… இது சரியில்லையே… என்னன்னு சொல்லுங்க ரித்வி…” என்று சிணுங்கியபடி கேட்டாள்.

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு. முதலில் இந்தப் பாலை குடி‌…!” என்று அவளின் கையில் பால் கப்பை திணித்தவன் தயாராகியிருந்த இட்லியை ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்துவிட்டு மீண்டும் இட்லி ஊற்ற ஆரம்பித்தான்.

“எதுக்குத் திரும்ப இட்லி ஊத்துறீங்க ரித்வி? நம்ம வீட்டுக்கு யாரும் கெஸ்ட் வர்றாங்களா என்ன? அப்படி என்ன எனக்குச் சர்ப்ரைஸ் வச்சிருக்கீங்க?” என்று பாலை கூடக் குடிக்காமல் அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டாள்.

“அதுதான் சர்ப்ரைஸுனு சொல்லிட்டேனே… அது நடக்கும்போது நீயே தெரிஞ்சுக்கோ. இப்போ முதலில் பாலை குடிச்சு முடி…!” என்று அவளைச் செல்லமாக அதட்டியவன் சாம்பார் வைக்கத் தேவையான காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தான்.

அவன் சொல்லாமல் போனதில் சிணுங்கியவள் பாலை குடித்து விட்டு “சரி விடுங்க, நானே தெரிஞ்சுக்கிறேன்…” என்று கோபம் போலச் சொல்லிவிட்டு “நகருங்க… நானே சாம்பார் வைக்கிறேன்…” என்று அவனை விரட்டினாள்.

“நோ… நோ வரு… நீ போய்க் குளிச்சிட்டு வா. நான் ரெடி பண்றேன்.‌..” என்று பதிலுக்கு அவளை விரட்டினான்.

“நாம எப்பவும் லன்ச் ரெடி பண்ணிட்டு தானே குளிப்போம்? ஆனா இன்னும் லன்ச் ரெடி செய்யலையே? அதுக்குள்ள குளிக்கச் சொல்றீங்க?” என்று புரியாமல் கேட்டாள்.

“ம்கூம்… இதுக்கு மேல நீ என்ன கேட்டாலும் நான் பதில் சொல்றதா இல்லை. போய்க் குளிச்சிட்டு வா…”என்று அவளை மேலும் அங்கே நிற்க விடாமல் ‌விரட்டினான்.

அவனின் விரட்டலில் முகத்தைச் சுருக்கி பார்த்தவள், “போ… போய்யா…” என்று செல்லமாகச் சிணுங்கி கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளின் சிணுங்கலில் சிரித்தவன், அவள் சென்றதும் வேகமாகச் சாம்பார் வைக்கும் வேலையை ஆரம்பித்தான்.

அவள் குளித்து விட்டு வந்த போது முக்கால் வாசி வேலையை முடித்திருந்தவன், மீதியை மனைவியைப் பார்க்க சொல்லிவிட்டு தான் குளிக்கச் சென்றான்.

முக்கியமாக மதிய உணவை தயார் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்ற கணவனைப் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் வேதவர்ணா.

“இந்த ரித்விக்கு என்னாச்சு? காலையிலிருந்தே எல்லாமே மர்மமாகச் செய்துக்கிட்டு இருக்கார்…” என்று புலம்பிக்கொண்டே மீதியிருந்த வேலைகளை முடித்தாள்.

அவள் வேலைகளைச் செய்து முடித்துவிட்டு நிமிர்ந்தபோது வீட்டின் அழைப்பு மணி அவளை அழைத்தது.

‘இந்த நேரத்தில் யார்?’ என்ற கேள்வியுடன் போய்க் கதவை திறந்தாள்.

வெளியில் நின்றிருந்த நபரை பார்த்து அவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“அம்மா நீங்க தானா? நிஜமாவே நீங்க தானா?” என்று நம்ப முடியாமல் ஆர்ப்பரித்தாள்.

“நான் தான் வேதா. எப்படி டி இருக்க?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் அவளின் அன்னை சித்ரா.

“நான் நல்லா இருக்கேன்மா. நீங்க வந்ததைத் தான் என்னால நம்பவே முடியலை…” என்று இன்னும் நம்ப முடியாமல் கண்களைச் சிமிட்டி அன்னையைப் பார்த்தாள்.

“அதான் வந்துட்டேனே… வா உள்ளே போகலாம்…” என்று வீட்டிற்குள் வந்தவரின் பின்னால் வேதாவின் கண்கள் ஆவலாகப் பாய்ந்தன.

வீட்டிற்குள் நுழைந்தவர், “என்ன வேதா, என்ன தேடுற?” அவளின் கண்கள் அலைபாய்ந்ததைப் பார்த்து கேட்டார்.

“அப்பாவைமா… அப்பா வரலையா?” என்று இன்னும் வாசலுக்கு வெளியே இருந்த பார்வையை விலக்காமல் கேட்டாள்.

“அப்பா வரலை வேதா. நான் மட்டும் தான் வந்தேன். நீ கதவை மூடிட்டு வா…” என்றவர் சோஃபாவில் சென்று அமர்ந்தார்.

“வரலையா?” என்று முகத்தைச் சுருக்கியவள், முக வாட்டத்துடன் கதவை மூடி விட்டு வந்தாள்.

“அதான் நான் வந்திருக்கேனே? இங்கே வா வேதா. உனக்கு உடம்புக்கு எப்படி இருக்கு?” என்று மகளைத் தன் அருகில் அமரவைத்து அவளின் கன்னத்தைத் தடவி கொண்டே கேட்டார்.

அன்னையின் பரிவில் நெகிழ்ந்தவள் அவரின் தோளில் சலுகையாகச் சாய்ந்து கொண்டு, “உடம்பு பரவாயில்லைம்மா. இப்போ எல்லாம் வாந்தி இல்லை. மயக்கம் மட்டும் இருக்கு. ரொம்பச் சோர்வா இருக்கு…” என்று தன் உடல் நிலையைச் சொன்னவள், “உங்களைத் தான் எனக்கு ரொம்பத் தேடுச்சும்மா…” என்று முடித்தவளுக்கு அப்போது தான், தான் அழைத்த போதெல்லாம் அன்னை வராமல் இருந்தார் என்று ஞாபகத்தில் வர, அவரின் தோளில் இருந்து விலுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தாள்.

மகளின் மனதை புரிந்து கொண்டதைப் போல் அவளின் தலையைப் பிடித்து மீண்டும் தன் தோளில் சாய்த்துக் கொண்டவர், “முடிந்து போனதை நினைக்காதே வேதா. இப்ப நான் வந்துட்டேன் தானே? அதை மட்டும் நினை…!” என்றார்.

“ஆனா நான் தேடும் போது நீங்க வரலையேம்மா?” என்று வருத்தமாகச் சொன்னாள்.

“நான் என்ன செய்யட்டும் வேதா? எனக்கும் வர ஆசைதான். ஆனா நம்ம சூழ்நிலை ஒத்துவரலைங்கும் போது என்ன செய்ய முடியும்?” என்று தானும் வருத்தமாகவே கேட்டார் சித்ரா.

‘பெற்ற மகளை விட மற்ற உறவுகள் தான் அவருக்குப் பெரிதா?’ என்று தான் அவளுக்குத் தோன்றியது.

அதை அவளின் முகச்சுருக்கமும் காட்டிக் கொடுத்தது.

மகளின் முகத்தைப் பார்த்து அதைக் கண்டு கொண்டாலும் மேலும் அதைப் பற்றிப் பேச விருப்பம் இல்லாத சித்ரா “அது சரி மாப்பிள்ளை எங்கே?” என்று கேட்டு அவளைத் திசை திருப்பினார்.

அவர் மாப்பிள்ளை என்றதும் தான் காலையில் ரித்விக் இட்லி அதிகம் ஊற்றியது நினைவில் வர, “நீங்க வருவது ரித்விக்கு முன்னாடியே தெரியுமா அம்மா?” என்று கேட்டாள்.

“தெரியுமாவா? என்னை வர வச்சதே மாப்பிள்ளை தானே…” என்றார்.

“என்ன? ரித்வியா?” சந்தோஷ அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“ஆமா… மாப்பிள்ளை தான் பத்து நாளுக்கு முன்னாடி போன் போட்டு ‘வேதா உங்களை ரொம்பத் தேடுறா. ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுப் போக முடியுமான்னு கேட்டார்’ நானும் வருவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்குனு கிளம்பிட்டேன். டிக்கெட் எடுத்துக் கொடுத்து இங்கே வருவதற்கான எல்லா ஏற்பாடும் மாப்பிள்ளைதான் செய்து கொடுத்தார்…” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அறையிலிருந்து வெளியே வந்தான் ரித்விக்‌.

“வணக்கம் அத்தை. வாங்க…” என்று தமிழில் அழகாக வரவேற்ற மருமகனை பார்த்து மரியாதை நிமிர்த்தமாகப் புன்னகைத்தார் சித்ரா.

“ட்ராவலில் எதுவும் ப்ராப்ளம் இல்லயே அத்தை?” என்று விசாரித்தவன் கண்கள் ஓரப்பார்வையாக மனைவியை நோட்டம் விட்டது.

அவன் ஓரப்பார்வையாகப் பார்க்க, மனைவியோ நேராகவே கணவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தான் சொல்லாமலேயே தன் தேடலை கணவன் உணர்ந்து கொண்டிருக்கிறான் என்ற பூரிப்பு அவளின் முகம் முழுவதும் பிரதிபலித்தது.

பூரிப்புடன் காதலும் மின்ன பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் புறம் பார்வையைத் திருப்ப முடியாமல், மாமியாரிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தான் ரித்விக்.

சித்ரா மருமகனை பெருமையுடன் பார்த்துக் கொண்டே அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அது மருமகன் தமிழ் பேசுவதால் வந்த பெருமை!

மகளை விரும்பி பெண் கேட்ட போதும், திருமணத்தின் போதும் தமிழ் தெரியாமல் தடுமாறி உறவுகளுக்கிடையே சலசலப்பை உண்டாகிய மருமகன் இப்போது ஓரளவு நன்றாகவே தமிழ் பேச, அவரின் மனதில் ஒரு வித திருப்தி உண்டானது.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, “ஓகே அத்தை… போய்ப் பிரஸ் ஆகிட்டு வாங்க, சாப்பிடலாம்…” என்றவன் மனைவியின் புறம் திரும்பி, “வரு அத்தையைக் கவனி…” என்று அவளின் பார்வையைக் கலைத்தான்.

“ஹா… என்ன?” என்று தூக்கத்தில் இருந்து முழித்தவள் போல் அவள் திருதிருத்து வைக்க, மகளின் பார்வையைக் கவனித்து வைத்திருந்த சித்ரா “அவ இருக்கட்டும் மாப்பிள்ளை. நானே பார்த்துக்கிறேன்…” என்று அவர்களுக்குத் தனிமை கொடுத்து விட்டு அங்கிருந்த இன்னொரு படுக்கை அறைக்குச் சென்றார்.

“என்ன வரு அத்தைக்கு ஹெல்ப் பண்ணுனு சொன்னா முழிக்கிற?” என்று அவளின் மனநிலை புரிந்தும் கேட்டவனின் அருகில் வந்தவள் கணவனின் கையைப் பிடித்துத் தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அவள் அழைத்துச் சென்ற விதம் அன்று அலுவலக உணவகத்தில் நடந்ததை ஞாபகப்படுத்த, புன்சிரிப்புடன் மனைவியின் பின் சென்றான்.

உள்ளே சென்று கதவை அடைத்ததும் அன்று போல் அவசரமாக இல்லாமல் நிறுத்தி நிதானமாகக் கணவனின் அதரங்களைச் சிறை செய்தாள்.

கணவனுக்கான தேவையைத் தான் நிறைவேற்றவில்லை என்ற அவளின் குற்றவுணர்ச்சி எதுவும் இப்போது அவளின் ஞாபகத்தில் கூட இல்லை.

அன்னையின் வருகை அவளை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்திருக்க, ரசித்து அவனின் அதரங்களைக் கொய்து கொண்டிருந்தாள்.

மனைவியின் இதழ்கள் தந்த இன்பத்தை மட்டும் அனுபவித்து, அவளின் விருப்பத்திற்குத் தன் அதரங்களை விட்டுவிட்டு வாளாதிருந்தான் ரித்விக்.

அன்று போல் ஆர்பரிக்கவும் இல்லை. அடுத்து என்ன என்ற தேடுதலும் இல்லை.

‘என் மனைவியின் மகிழ்ச்சியை நானும் உள்வாங்கிக் கொள்கிறேன்’ என்ற பாவத்தை மட்டுமே அவனின் செய்கை உணர்த்திக் கொண்டிருந்தது.

அவனை விட்டு பிரிந்தவள் “ஐயாம் வெரி, வெரி ஹேப்பி ரித்வி கண்ணா…” என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“என் வரு ஹேப்பினா நானும் ஹேப்பி…” என்று அவளின் உச்சியில் முத்தமிட்டு சொன்னவன், “வரு…” என்று தயக்கத்துடன் அழைத்தான்.

“ம்ம்…” என்று நிமிர்ந்து தன் முகம் பார்த்தவளின் கண்ணோடு கண் நோக்கியவன், “உன்கிட்ட கிடைக்கும் என் தேவைக்காக நான் அத்தையை வர வைக்கலை…” என்றான்.

மனைவியின் மனக்குழப்பத்தைப் போக்க மட்டுமே அவன் செய்த விஷயம் அவளின் பார்வையில் தவறான கண்ணோட்டத்தைக் கொடுத்து விடக்கூடாது என்று அதைச் சொன்னான்.

அவன் அப்படிச் சொன்னதின் சாராம்சத்தை உள்வாங்கியவள், “கண்டிப்பா அப்படி நான் நினைக்க மாட்டேன் ரித்வி…” என்று சொல்லி கணவனைக் குளிர்வித்தவள், அன்று இரவும் அவனை மனைவியாகக் குளிர்வித்தாள்.

அன்னை வந்ததில் விடுமுறை சொல்லிவிட்டு வீட்டில் இருந்த வேதாவிற்கு அன்று முழுவதும் இதமான மனநிலையே நிலவியது.

அன்னை, மகளுக்குத் தனிமை கொடுத்துவிட்டு ரித்விக் அலுவலகம் சென்று விட, மதியம் அன்னையிடம் சொல்லி பிடித்த உணவை செய்து உண்பதும், அவரின் மடியில் தலை வைத்துப் படுத்தும், அவரைத் தலைவாரி விடச் செய்தும், என்று அன்று ஒவ்வொரு நொடியையும் அன்னையுடன் கழித்தாள்.

அந்நிறைவு அன்று இரவும் வேதாவிடம் வியாபித்திருக்க, நான்கு மாதங்களுக்குப் பிறகு, எந்த மன உளைச்சலும் இல்லாமல், விருப்பத்துடன் கணவனின் கைகளில் அடைப்பட்டு, அவனுக்கும் மனநிறைவை கொடுத்தாள்.

மனைவியின் நெருக்கத்தில் நெகிழ்ந்த போதும் “இது கிடைக்கும்னு நான் அத்தையை வர வைக்கலை வரு…” என்று மீண்டும் அந்த நேரத்திலும் சொன்னான்.

அவள் அன்று மறுத்ததுக்காகத் தான் செய்தோம் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றிவிடுமோ என்று பயந்தான்.

தான் ஒன்று நினைத்துச் செய்ய அதற்கு வேறு வரிவடிவம் கொடுத்து விட்டால் அதைத் தன்னால் தாங்க முடியாது என்பதால் தான் மீண்டும் அவளுக்குப் புரிய வைத்தான்.

அவனின் கைகளுக்குள் தான் விருப்பத்துடன் புகுந்திருக்க, இப்போது போய் ஏதேதோ பேசுகிறானே என்று நினைத்தவள் “நான் ஒன்னும் நினைக்கலைடா புருஷா…” என்று அவனின் காதில் உதட்டை வைத்து கத்தியவள், தானே அவனின் வாயை அடைக்கும் வேலையையும் ஆரம்பித்து வைத்தாள்.

அன்றைய இல்லறம் அவர்களுக்கு இன்பத்தை வாரி வழங்கியிருந்தது.

சித்ரா இருந்த மூன்று நாட்களும், வேதா எந்த அழுத்தமான மனநிலையும் இல்லாமல் அமைதியாக இருந்தாள்.

அதைக் கண்ட ரித்விக்கும் மகிழ்ந்து போனான்.

ஆனால் சித்ராவின் வருகையே வேதாவை முன்பை விட அதிகமான உளைச்சலுக்கு ஆளாக்க போகிறது என்பதை அப்போது அறியாமல் போனான் ரித்விக்.

ஆம்! சித்ரா வந்து சென்ற பிறகு அவர்களின் சோதனை காலம் படு தீவிரமாகத் தம்பதிகளைச் சுற்றிக் கொள்ள ஆரம்பித்தது.

அவர்களைச் சூழ்ந்த காதல் தீ இருவரின் மனதையும் சுட்டெரிக்கவும் காத்திருந்தது.