பூவோ? புயலோ? காதல்! – 1

அத்தியாயம் – 1

ஹ…ஹ…! ஸ்…ஸ்…! என்று பலமாக மூச்சிரைக்க, இதயம் அதிவேகமாகத் துடிக்க ஓடி வந்தவள் அதற்கு மேல் முடியாமல் சட்டென்று அந்தப் பாழடைந்த சுவற்றின் மீது சாய்ந்து நின்றாள்.

அவள் நின்றதும் தானும் மூச்சிரைக்க நின்றவன் தான் பற்றியிருந்த அவளின் கரத்தை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

சுவற்றில் சாய்ந்து தன் நெஞ்சை நீவி விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, “என்னால இதுக்கு மேல ஓட முடியலய்யா…” அவனைப் பார்த்துத் திணறலுடன் சொன்னாள்.

தன் மூச்சையும் சீர் செய்ய இழுத்து மூச்சு விட்டவன், “இன்னும் கொஞ்ச தூரந்தேன் கண்ணு. ஊருக்கு வெளிய இருக்கப் பைக்கை எடுத்துட்டுப் போயிடலாம். அப்புறம் ஓட வேண்டியிருக்காது. இங்கன நிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துடா. வா…! வெரசா போயிருவோம்…” என்று அவளின் கையில் அழுத்தம் கொடுத்து அழைத்தான்.

அவனின் அழைப்பிற்கு ஏற்றவாறு அவளின் கால்கள் மீண்டும் நகர்ந்தன.

அரைமணி நேரத்திற்கு மேலான அவர்களின் ஓட்டம் மீண்டும் தொடர்ந்தது.

ஊருக்கு வெளியே சிறிது தூரம் ஓடினார்கள். அந்தச் சாலையின் இருமருக்கிலும் இருந்த பெரிய, பெரிய மரங்கள் இருட்டில் பயங்கரமாகக் காட்சியளித்தன. ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் ஓடி ஒரு மரத்தின் அருகில் நின்று மீண்டும் மூச்சு வாங்கினார்கள்.

அவள் அந்த மரத்தின் மீது சாய்ந்து அதிகமாகத் துடித்த இதயத் துடிப்பை சமன் செய்ய முயன்று கொண்டிருக்க, அவன் அவளை விட்டு நகர்ந்து அந்த மரத்தின் பின் மண்டிக்கிடந்த புதர்களின் பக்கம் சென்றவன், அங்கே நிறுத்தியிருந்த தன் இருசக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு வந்தான்.

வண்டியைச் சாலையில் நிறுத்தி இயக்கியவன், “வெரசா வா கண்ணு, போகலாம்…” என்று அவளை அழைத்தான்.

அவள் ஏறி அமர்ந்ததும், அந்த வாகனம் வேகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தது. அந்த ஊரின் எல்லையைத் தாண்டியதும், தான் பிறந்து வளர்ந்த ஊரை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றாள்.

வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது “கண்ணு…” என்று மெல்ல அழைத்தான் அவன்.

கண்களில் ஆறாகப் பெருகிய நீரை துடைத்து விட்டுக் கொண்டிருந்தவளுக்கு அவனின் அழைப்புக் காதில் மெல்லிய ஓசையாகக் கேட்டது.

ஆனால் அவனின் அழைப்பை கவனத்தில் கொண்டு பதில் சொல்ல முடியாமல் அவளின் மனது ஏதேதோ எண்ண அலைகளில் சுழன்றடித்துக் கொண்டிருந்தது.

அவளின் கவனம் தன்னில் இல்லை என்பதை உணர்ந்தவன், “கயலு…” என்று இம்முறை அழுத்தி அழைத்தான்.

அவனின் அழைப்பை அதன்பிறகு தான் நன்றாக உணர்ந்தவள் “ஹான்…! என்னய்யா கூப்பிட்டியா?” என்று சுதாரித்துக் கொண்டு கேட்டாள் அவனின் கயற்கண்ணி.

அவளின் குரலின் பேதத்திலேயே அவள் அழுவதை உணர்ந்தவன் “அழறியா கண்ணு?” என்று கேட்டான்.

அவன் கேட்டதும் இன்னும் தான் அழுகை வந்தது. கதறி அழத் தோன்றிய மனதை அடக்க முயன்றவள் வாயை கையால் மூடிக்கொண்டு தேம்பினாள்.

அவள் பதில் சொல்லாததே அவளின் நிலையை எடுத்துக்காட்ட, “அழாத கண்ணு…! நமக்கும் வேற வழி இல்லையே. என்ன செய்ய முடியும் சொல்லு?” என்று கேட்டான் அவளின் இளஞ்சித்திரன்.

“கஷ்டமா இருக்குய்யா…” என்றாள் தேம்பிய படியே.

“எனக்கும் தான்…” என்று வருத்தத்தைக் குரலில் தாங்கி சொன்னவன், மேலும் பேசாமல் மௌனத்தைத் தத்தெடுத்துக் கொள்ள, அவளும் தன் அழுகையை அடக்க முயன்ற படி அமைதியாக வந்தாள்.

அரைமணி நேரத்திற்குப் பிறகு மதுரை மாட்டுத்தாவணியை வந்தடைந்தார்கள். அங்கே வாகன நிறுத்தத்தில் தன் வண்டியை நிறுத்தி விட்டு, அவளை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அந்த நள்ளிரவு வேளையிலும் அந்தப் பேருந்து நிலையம் பரபரப்பாக இருந்து ‘தூங்கா நகரம்’ என்பதனை எப்பொழுதும் போல் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

பல முறை இளஞ்சித்திரன் வந்து சென்ற இடம் தான். ஆனால் என்றும் இல்லாமல் இன்று தன் கண்களை நாலா புறமும் அலசி ஆராய்ந்து மனதில் கவ்விய பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் தன்னவளை காப்பது தன் கடமையென அவளின் கையை இறுக பற்றிய படி அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.

முதலில் சென்னை செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்திற்குச் சென்று, புறப்படத் தயாராக இருந்த ஒரு பேருந்தில் அமர்ந்து கொண்டார்கள்.

இன்னும் பத்து நிமிடத்தில் வண்டி கிளம்பும் என்று நடத்துனர் வெளியே ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்க, “உனக்கு எதுனா வாங்கியாரவா கண்ணு?” தன் அருகில் இருந்தவளிடம் கேட்டான்.

“ஒன்னும் வேணாய்யா… நீ எங்கனயும் இறங்கி போவாத…” என்று அவனின் கைகளைப் பயத்துடன் இறுக பற்றிக் கொண்டாள்.

“சரி… சரி… பயப்படாதே…!” என்று அவளின் கையில் லேசாகத் தட்டிக் கொடுத்தவன், நடத்துனர் வந்ததும் “சென்னைக்கு ரெண்டு டிக்கெட்…” என்று பயணச்சீட்டு எடுத்துக் கொண்டான்.

“அண்ணே, வண்டி எப்ப கெளம்பும்?” என்று நடத்துனரிடம் கேட்க,

“இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல கிளம்பிரும்…” என்று விட்டு நகர்ந்தார்.

“நீ இங்கனக்குள்ளாரயே இரு கண்ணு. நான் பாத்ரூம்மு போயிட்டு வந்துடுறேன்…” என்று அவளின் காதோரம் குனிந்து மெல்ல சொன்னான்.

“வெரசா வந்துருய்யா…” என்று பயத்துடன் சொன்னவளிடம், “நீயும் சூதானமா இரு…” என்றுவிட்டு இறங்கி சென்றான்.

பேருந்தை விட்டு இறங்கியவன், கழிவறை பக்கம் செல்லாமல், பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று சுற்றும், முற்றும் பார்த்தான். பின்பு கடையின் புறம் திரும்பியவன், “ஒரு தண்ணி பாட்டில் கொடுங்க…” என்று வாங்கி விட்டு, தாங்கள் செல்லவிருந்த பேருந்தின் முன் புறம் வந்து நின்றான்.

பின்பு பேருந்து கிளம்பத் துவங்கவும் ஏறி வந்து அமர்ந்து கொண்டான்.

அவன் வரும் வரை கயற்கண்ணி பயத்துடன் இருப்பதைப் பார்த்துத் தண்ணீர் பாட்டிலை நீட்டியவன் “குடி கண்ணு…” என்று கொடுத்தான்.

“நாந்தேன் வேணாமுனு சொன்னேன்ல. அப்புறமும் ஏன்யா கடை பக்கம் போன? யாராவது பார்த்தா என்னாவுறது?”

‘பார்க்கட்டும்னு தேன் கண்ணு போனேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், “என்னைய யாரும் பாக்கலை. பயப்படாம குடி…” என்று வெளியே அவளுக்குச் சமாதானம் செய்தான்.

அவளுக்கும் தாகம் தொண்டையை அடைக்க வேகமாக அருந்தினாள். அவள் தண்ணீர் அருந்தும் வேகத்தைப் பார்த்து ‘இம்புட்டு தாகத்த வச்சுக்கிட்டு பயத்துல வேணாம்னு சொல்லிருக்காளே’ என்று நினைத்துக்கொண்டான்.

தாகம் அடங்கியதும் பாட்டிலை ஓரமாக வைத்து விட்டு அவனின் கையுடன் தன் கையைக் கோர்த்துக் கொண்டாள்.

அவனும் அவளின் கையை அழுத்தி கொடுத்து அதிலேயே அவளுக்கான ஆறுதலைத் தந்தான்.

பேருந்து மாட்டுத்தாவணியை விட்டு வெளியே வந்து சென்னையை நோக்கி நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்தது. கயற்கண்ணி ஜன்னல் வழி தெரிந்த இருட்டை வெறித்த படி வந்தாள்.

இளஞ்சித்திரன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பின்பு தன் கைப்பேசியை எடுத்து அதில் இருந்த அவனின் சிம் கார்டை கழட்டியவன் தன் நண்பனின் பெயரில் வாங்கியிருந்த புதிய சிம்கார்டை பொருத்திவிட்டு தன் சிம்மை ஜன்னல் வழியே தூக்கி எறிந்தான்.

அவனின் கை தன் பக்கம் நீண்டு எதையோ எறிந்ததை உணர்ந்து அவனின் பக்கம் திரும்பியவள் “என்னய்யா?” என்றாள்.

அவளின் காதின் ஓரம் குனிந்தவன் “என் சிம்கார்ட்டு கண்ணு…” என்று முணுமுணுத்தான்.

“ஓ…!” என்றவள் அதன் பிறகு எதுவும் கேட்காமல் மீண்டும் ஜன்னல் பக்கம் பார்வையைத் திருப்பினாள். அவளின் கண்கள் கலங்கியிருந்ததை அந்தப் பேருந்தில் மெலிதாகக் கசிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தவன் திரும்பியிருந்த அவளின் முகத்தைத் தன் புறம் திருப்பி அவளின் கன்னத்தில் கைவைத்து “அழுதாலும் எதுவும் மாறப் போறதில்லை கண்ணு. ஓ கண்ணீரை வேஸ்ட் பண்ணாதே…!” என்று மென்மையாகக் கடிந்து கொண்டான்.

“ம்ம்…!” என்றவள் ‘சரி’ என்பதாகத் தலையசைத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

பின்பு “இன்னேரம் நாம அங்கின இல்லன்னு தெரிஞ்சிருக்கும்ல யா?” என்று கேட்டாள்.

இளஞ்சித்திரன் மணியைப் பார்த்தான். மூன்று எனக் காட்டியது. “இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிரும் கண்ணு. நாலு மணி இன்னும் ஆகலை. ஏ அய்யா நாலுக்குத் தான் கண் முழிப்பாரு. எந்திரிச்சதும் நான் இருக்கேனானு தேன்‌ பார்ப்பாரு…” என்றான்.

அவன் சொன்னதும் அவளின் கைகளில் மெல்லிய நடுக்கம் ஓடிச் சென்றது.

அதனை உணர்ந்தவன் அவளின் கன்னத்தில் மென்மையாகத் தட்டி “கவலைப்படாதே…! நம்மள அம்புட்டு வெரசா கண்டுபிடிக்க முடியாது…” என்று நம்பிக்கையாகச் சொன்னவன் “செத்த நேரம் கண்ணை அசத்துக் கண்ணு. இறங்குறப்ப உசுப்பி விடுறேன்…” என்றான்.

“ம்ம்…” என்றவள் பின்னால் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

அவளின் முகத்தையே சில நொடிகள் பார்த்தவன் ‘உனக்கும் எதுவும் ஆக விட மாட்டேன். உனக்காக எனக்கும் எதுவும் ஆக விட மாட்டேன் கண்ணு’ என மனதிற்குள் சூளுரைத்தது போல் சொல்லிக் கொண்டான்.


இங்கே பேருந்து சென்னையை நோக்கி விரைந்தோடி கொண்டிருந்த நேரத்தில் இளஞ்சித்திரன் சொன்னது போல் அங்கே மதுரை மாவட்டத்தில் கடையோடியாக இருந்த அந்தச் சிற்றூரில் அதிகாலை நான்கு மணிக்கு வீடே அதிர “டேய் வரம்பா…” எனக் கத்தினார் இளஞ்சித்திரனின் தந்தை வேங்கையன்.

அவர் போட்ட சத்தத்தில் வீடே முழித்துக் கொண்டது. பதறி எழுந்த ‘வரம்பா’ என்று தந்தையால் அழைக்கப்பட்ட இமயவரம்பன் தன் தோளில் சாய்ந்து உறங்கி கொண்டிருந்த மனைவியைத் தள்ளி விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே ஓடினான்.

கணவன் தள்ளி விட்டதில் கட்டிலின் ஓரம் போய் விழுந்து அரண்டு எழுந்தாள் அவனின் மனைவி சாந்தாமணி.

“அடப்பாவி மனுஷா…! இப்படியா தள்ளி விட்டு போவ?” அவள் கதவை பார்த்துக் கத்த “வாயை மூடுடி…!” என்று அவளை அதட்டிக் கொண்டே தந்தையை நோக்கி ஓடினான்.

அந்த மாடி பகுதியில் தன் அறையில் இருந்து இன்னொரு மூலையில் இருந்த தம்பியின் அறையில் தந்தை இருப்பதைப் பார்த்து அங்குச் சென்றவன் “என்னங்க ஆச்சுய்யா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

“என்ன? என்னாச்சு நொய்யா? அந்தப் பயல காணோம்…” என்று ஆத்திரத்துடன் கத்தினார்.

“எப்படி அய்யா? எப்படி முடியும்? நாம தான் வெளிய பூட்டு போட்டோமே?”

“நாம அவன உள்ளார விட்டு வெளிய பூட்டினது அப்படியே தான் இருந்துச்சு. சன்னலை பேர்த்துட்டு போயிருக்கான்…” என்று அறையில் உடைந்து கிடந்த ஜன்னலை காட்டினார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தத் தெருவே விழித்திருந்தது. அந்தத் தெருவிலேயே உயரமும், பழமையும், புதுமையும் தாங்கியிருந்த அந்தப் பெரிய வீட்டே அல்லோலப்பட்டது.

இளஞ்சித்திரனின் அன்னை ருக்மணி “இந்தப் பயலுக்குப் புத்தி இப்படியா போகணும்?” என்று ஆங்காரமாகக் கத்திய படி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்.

“எல்லாம் அந்தச் சிறுக்கி கைங்கர்யம் தேன்…” என மாமியாருடன் ஒத்து ஊதிக்கொண்டிருந்தாள் சாந்தாமணி.

“அய்யா… அந்தப் பொட்ட கழுதையையும் காணோம். அவளோட ஆத்தா தெருவுல ஒக்காந்து ஒப்பாரி வைச்சுக்கிட்டு இருக்கா…” என்று கயற்கண்ணியின் வீட்டில் சென்று பார்த்து விட்டு வந்த இமயவரம்பன் கோபத்துடன் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“இந்தப் பயலோட வண்டியையும் காணோம். அந்தக் கழுதையையும் காணோம். இரண்டும் ஓடிப்போயிருச்சுங்க…” என்று கையைப் பின்னால் கட்டிக்கொண்டு கூடாரத்தில் கோபத்துடன் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவர் நின்று,

“வரம்பா, நீ என்ன செய்வியோ… ஏது செய்வியோ தெரியாது. அந்தப் பய உயிரோட இங்கன இருக்கணும். இல்ல பொணமா இங்கன இருக்கணும். எங்கன இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு இழுத்துட்டு வாடா…! அந்தப் பொட்டச்சியையும் சும்மா விடாதே. நம்மூரு பயலுகளையும் கூடக் கூட்டிட்டு போ…!” என்று உத்தரவிட்டார்.

“இதோ… இப்பயே போறேன்யா…” என்று தன்னுடன் சிலரையும் அழைத்துக்கொண்டு இளஞ்சித்திரனையும், கயற்கண்ணியையும் தேடிச்சென்றான் இமயவரம்பன்.

காதல் கொண்டேன்
உனை கரம்பிடிக்க!
கழுவேற்ற காத்திருக்கும்
மனித காலன்களின் கரம் சேராமல்
பற்றிய நம் கரம் தனை
சாவின் விளிம்பில் நின்றும் காப்பேனடி!