பிழையில்லா கவிதை நீ – 28

அத்தியாயம் – 28

“ஜனா சாப்பிடாம என்ன யோசனை?” என்று கேட்டுத் தட்டில் வைத்த காலை உணவை உண்ணாமல் ஏதோ சிந்தனையில் இருந்த மகளை நிகழ்வுக்கு அழைத்து வந்தார் சுகுமாரி.

“ஹான்… ஒன்னுமில்லைமா. ஒரு கேஸ் பத்தி நினைச்சுட்டு இருந்தேன்…” என்றவள் இட்லியைப் பிட்டு வாயில் போட்டாள்.

“இன்னும் எத்தனை நாளைக்குத் தான் கேஸு கேஸுன்னு ஓடப் போற ஜனா?”

“இதென்னம்மா கேள்வி? எப்பவுமே தான்…” என்று பதில் சொன்னவளை முகம் வாடப் பார்த்தார் சுகுமாரி.

“என்னம்மா? எதுக்கு இந்த வாட்டம்?”

“நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே ஜனா. நீ மனசு வருத்தப்படுவியோன்னு நினைச்சுத்தான் இத்தனை நாள் கேட்காம இருந்தேன். ஆனா இனியும் என்னால் அப்படி இருக்க முடியும்னு தோணலை…”

“என்னம்மா பில்டப் எல்லாம் பலமா இருக்கு? என்னன்னு சொல்லுங்க…”

“நான் வேறென்ன கேட்கப் போறேன் ஜனா? எல்லாம் உன் கல்யாணம் தான். எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற ஜனா?” என்று பட்டென்று கேட்டார்.

அவரின் கேள்வியில் இட்லியைப் பிட்டுக் கொண்டிருந்த அவளின் கை அப்படியே நின்றது.

அன்னையை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் மெள்ள திரும்பி தன் எதிரே அமர்ந்து உணவை உண்டு கொண்டிருந்த தந்தையை நோக்கின.

இப்போது பகலவனின் பார்வையும் அவளைத் தான் நோக்கிக் கொண்டிருந்தது.

அவரின் பார்வையை எதிர்கொண்டவள், ‘உங்களின் எண்ணமும் இது தானா?’ என்பது போல் பார்த்தாள்.

மகளின் கேள்வி புரிந்தது போல் புன்னகையுடன் அவளைப் பார்த்தார் பகலவன். அதுவே மனைவியின் எண்ணம் தான் என் எண்ணமும் என்று அவர் சொல்வதாக இருந்தது.

இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள் பின் ஒன்றும் சொல்லாமல் நிதானமாக உணவை உண்டு விட்டு எழுந்து வெளியே சென்றாள்.

“என்னங்க இவ இப்படி?” என்று சுகுமாரி கலக்கத்துடன் கேட்க,

“பொறுமையா இரு சுகு…” என்று எப்போதும் போல் சொன்னார் பகலவன்.

“இன்னும் எவ்வளவு நாளைக்கு?”

“இன்னும் கொஞ்ச நாள் மட்டும்!” என்று சொன்னவர் மனைவியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.

“அப்படியா சொல்றீங்க?” என்று சுகுமாரி முகம் மலர கேட்டார்.

“ம்ம்… எனக்கென்னமோ தோணுது…” என்றார்.

“நடந்தா ரொம்பச் சந்தோஷம்ங்க…”

“நடக்கும். கவலையை விடு…” என்றவர் தானும் எழுந்து சென்றார்.

அன்று மாலை வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனார்த்தனி.

அப்போது வீட்டின் அழைப்பு மணி அடிக்க, எழுந்து சென்று கதவைத் திறந்து வந்திருந்தவர்களைப் பார்த்தவளின் முகம் மலர்ந்தது.

“ஹாய் ஜனா…” என்று அழைத்துக் கொண்டு அங்கே நின்றிருந்தாள் வினயா. அவளின் அருகில் பரத்.

“ஹேய் வினயா! வா… வா… வாங்க பரத்” என்று உற்சாகமாக வரவேற்றாள்.

வீட்டிற்குள் வந்த வினயா தோழியை அணைத்துக் கொண்டாள்.

தானும் அணைத்துக் கொண்ட ஜனா, “இப்போ ஹெல்த் எப்படி இருக்கு வினயா? நார்மலா ஃபீல் பண்றியா?” என்று விசாரித்தாள்.

“நல்லா இருக்கேன் ஜனா. இன்னும் ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கேன். ஆரம்பத்தில் இருந்தே நீ ரொம்பச் சப்போர்ட்டா இருந்தன்னு அப்பாவும், பரத்தும் சொன்னாங்க. ரொம்ப நன்றி ஜனா…” என்றாள்.

“உதை வாங்க போற. உன் நன்றியை நீயே வச்சுக்கோ. வா, வந்து உட்கார். நீங்களும் உட்காருங்க பரத். என்ன சாப்பிடுறீங்க?” என்று உபசரித்தாள்.

“இருக்கட்டும் சிஸ்டர். உங்களைப் பார்த்துட்டு நன்றி சொல்லிட்டுப் போகத்தான் வந்தோம்…” என்றான் பரத்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து வந்த சுகுமாரி வந்தவர்களை வரவேற்று அறிமுகம் முடிந்து அவர்களுக்குச் சிற்றுண்டி எடுக்க உள்ளே சென்றார்.

அன்னை உள்ளே சென்றதும் எதிரில் அருகருகே அமர்ந்திருந்த பரத்தையும், வினயாவையும் குறுகுறுவெனப் பார்த்தாள் ஜனார்த்தனி.

“என்ன ஜனா, ஏன் அப்படிப் பார்க்கிற?” என்று வினயா கேட்க,

“உங்க இரண்டு பேர் முகமும் ரொம்பப் பிரகாசமா இருக்கே… என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

பரத்தை நாணத்துடன் பார்த்துவிட்டுத் திரும்பித் தோழியைப் பார்த்த வினயா, “எங்களுக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு ஜனா. அடுத்த மாசம் கல்யாணம்…” என்றாள் வினயா.

“ஹேய்! சூப்பர் வினயா! கங்கிராட்ஸ்! எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. கங்கிராட்ஸ் பரத்…” என்று இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தாள்.

“ஆமா, கஸ்தூரி ஆன்ட்டி எப்படி இருக்காங்க? அவங்க உங்க கல்யாணத்துக்கு என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள்.

அன்னையைப் பற்றிக் கேட்டதும் வினயாவின் முகம் இறுகிப் போனது. பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். பரத் அவள் மனநிலை புரிந்து அவளின் கையை அழுத்திப் பிடித்தான்.

“என்ன இன்னும் அம்மா மேல உள்ள கோபம் போகலையாக்கும்?” என்று ஜனா கேட்க, வினயா தன் அமைதியைத் தொடர்ந்தாள்.

“என்ன இருந்தாலும் அவங்க உன் அம்மா வினயா…” என்று ஜனா சொல்ல,

“என்ன இருந்தாலும் நான் அவங்க பொண்ணுன்னு அவங்க யோசிக்கலையே ஜனா?” என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்டாள் வினயா.

“உன்னை அவங்க பொண்ணா நினைச்சதால் தானே உனக்கு ஒன்னு ஆனதும் பித்துப் பிடிச்சுப் போய் இருந்தாங்க. பாசம் இல்லாமயா? ஏதோ பொண்ணு வசதியா வாழணும்னு என்னென்னமோ செய்துட்டாங்க. அவங்க செய்தது எல்லாம் சரின்னு கண்டிப்பா சொல்ல மாட்டேன். ஆன்ட்டி மேலேயும் தப்பு இருக்கு தான்.

ஆனா நீயும் சட்டு சட்டுன்னு முடிவெடுக்காம கொஞ்சம் பொறுமையா இருந்து அவங்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம். இல்லையா, உன் அப்பாகிட்ட உன்னோட மனதில் இருந்ததை எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

நீங்க குடும்பமா பேசிருந்தாலே உனக்கு இவ்வளவு பெரிய இக்கட்டு வந்திருக்காது. கஸ்தூரி ஆன்ட்டி செய்தது தப்பா இருந்தாலும் அவங்க உன்மேல் வச்ச பாசம் பொய்யில்லை. நீயே நல்லா யோசிச்சுப் பாரு…” என்று பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.

‘சரி’ என்பது போல் தலையசைத்தாள் வினயா.

“சரி சொல்லு… ஆன்ட்டி இப்போ எப்படிப் பிகேவ் பண்றாங்க?” என்று கேட்டாள்.

“இன்னும் முழுசா குணமாகலை. வீட்டில் இப்போ படுத்தே தான் இருக்காங்க. என்னைப் பார்த்ததும் கொஞ்சம் நார்மலா இருக்காங்கன்னு டாக்டர் சொல்லியிருக்கார். நானும் அப்பாவும் தான் அவங்ககிட்ட பேசுறது இல்லை. எங்ககிட்ட மன்னிப்புக் கேட்டாங்க…” என்றாள் வினயா.

“மன்னிப்பு கேட்ட பிறகும் கோபமா இருக்கியா நீ? இப்போ சரி, உன் கல்யாணத்தில் இரண்டு பேரும் ராசியாகியிருக்கணும் ஆமா…” என்று அதட்டினாள் ஜனார்த்தனி.

“சரி தாயே, சரி…” என்றாள் வினயா.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சுகுமாரி கொடுத்த சிற்றுண்டியை உண்டு விட்டுப் பரத்தும், வினயாவும் விடைபெற்றுக் கிளம்பினர்.

ஜனாவும் வாசல் வரை வழி அனுப்ப சென்றாள்.

“அடுத்து இன்ஸ்பெக்டர் ஜெகவீரன் சார் வீட்டுக்குப் போறோம் ஜனா. ஏழு மணிக்கு மேல வீட்டில் தான் இருப்பேன் வாங்கன்னு சொன்னார்…” என்று வெளியே நடந்து கொண்டே வினயா தகவல் தெரிவித்தாள்.

ஜெகனின் பெயரைக் கேட்டதும் ஜனார்த்தனியின் முகம் மாறியது.

ஆனாலும் தோழியின் முன் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் “ஓகே வினயா. போயிட்டு வாங்க…” என்று வழியனுப்பி வைத்தாள்.

அவர்கள் கிளம்பியதும் உள்ளே வந்து அமர்ந்த ஜனாவின் முகத்தில் முன் இருந்த இலகுத்தன்மை தொலைந்து ஒருவித இறுக்கம் அவளைச் சூழ்ந்து கொண்டது.

ஜெகவீரனிடம் பேசி ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று வினயாவைப் பார்த்துவிட்டு மருத்துவமனையில் இருந்து விடைபெற்றதுடன் சரி. அதன் பிறகு இருவரும் எங்கேயும் பார்த்துக் கொள்ளவும் இல்லை. தொலைபேசியில் பேசிக் கொள்ளவும் இல்லை. இவளும் அழைக்கவில்லை. முக்கியமாக அவனும் இவளுக்கு அழைக்கவில்லை.

அவ்வப்போது அவளின் நினைவில் வந்து மட்டும் அவளை ஆட்கொண்டிருந்தான்.

அதையும் அவள் தான் வேண்டாத நினைவு என்று அவனின் நினைவை ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் அவ்வப்போது ஒருவித வலி அவளின் மனதை இறுக்கிப் பிடிக்கத்தான் செய்தது. அதையும் உதறித் தள்ள முயன்று கொண்டிருந்தாள்.

அவள் யோசனையில் இருந்த போதே அவளின் அலைபேசி அவளை அழைத்தது. எடுத்து யாரெனப் பார்த்தாள்.

யஷ்வினியின் அக்கா அவளின் தோழி யமுனா அழைத்துக் கொண்டிருந்தாள்.

ஜனா அழைப்பை எடுத்தவுடன், “ஜனா, ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்டி. இந்த உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். உன்னால் தான் இப்போ என் குடும்பமே சந்தோஷமா இருக்கு…” என்று ஆர்ப்பரித்தாள் யமுனா.

“ஏய் யமுனா, நிறுத்து! நிறுத்து! இப்போ எதுக்கு எனக்குத் தேங்க்ஸ்?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

“அந்தச் சுனில் இனி நம்ம யஷ்வினி வழிக்கே வர மாட்டேன்னு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டான்டி ஜனா. அப்படி அவளுக்கு எதுவும்னா அதுக்கு நான் தான் பொறுப்புன்னு வேற கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டான். இதுக்கெல்லாம் காரணம் நீ தானே… அதான் உனக்கு நன்றி சொல்றேன். இன்னும் கூடச் சொல்வேன்…” என்றாள் யமுனா.

“ஹேய்! என்ன யமுனா சொல்ற? அப்படியா கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான். எப்படி?” என்று வியந்து கேட்டாள் ஜனா.

“ஏய்! என்ன விளையாடுறீயா? இன்னுமா உனக்கு விஷயம் தெரியாது?” என்று நம்பாமல் கேட்டாள் யமுனா.

“எனக்கு ஒன்னும் தெரியாது. நீ முதலில் என்ன நடந்ததுன்னு சொல்லு…”

“இன்னைக்கு எங்க வீட்டுக்கு ஜெகவீரன்னு ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார் ஜனா. அவர் ஒரு கவர் கொடுத்தார். அதில் தான் அந்தச் சுனில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த லெட்டர் இருந்தது.

இதைப் பத்திரமா வச்சுக்கோங்க. இனி சுனில் உங்க பொண்ணு வழிக்கு வர மாட்டான். அப்படி வந்தால் இந்த லெட்டர் வச்சு நீங்க ஆக்சன் எடுக்கலாம்னு சொன்னார்.

எப்படிச் சார் அவன் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்? நாங்க தான் போலீஸ் கம்ளைண்ட் வாபஸ் வாங்கிட்டோமே. அப்புறம் நீங்க எப்படி இந்த விஷயத்தில்னு கேட்டோம். அதுக்கு ஜனார்த்தனி உங்களுக்காக ரொம்ப வருத்தப்பட்டாங்க.

அவங்க கேட்டுக்கிட்டதுக்காகத் தான் நீங்க வாபஸ் வாங்கிட்டாலும் பர்சனலா இந்த வேலை பார்த்தேன்னு சொன்னார். நாங்க நன்றி சொன்னதுக்கு இந்த நன்றி ஜனார்த்தனிக்குப் போக வேண்டியதுன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.

அதான் உனக்கு நன்றி சொல்றேன். அப்பா, அம்மா, யஷ்வினி எல்லாருமே உனக்கு நன்றி சொல்ல சொன்னாங்க. எங்களுக்காக அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட பேசினதுக்கு நன்றி ஜனா…” என்று யமுனா மீண்டும் நன்றி சொல்ல ஜனார்த்தனி வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

‘அவள் தான் அவனிடம் எந்த உதவியும் கேட்கவில்லையே? அப்புறம் எப்படி?’ என்று யோசித்தாள்.

“ஜனா லைனில் இருக்கியா?” என்று யமுனா அவளின் நினைவை கலைக்க,

“ஹான்… நன்றி எல்லாம் வேண்டாம் யமுனா. யஷ்வினியின் பிராப்ளம் சால்வ் ஆனதில் சந்தோசம்…” என்று சொல்லிப் பேச்சை முடித்து விட்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.

‘எதுக்கு இந்த உதவி? எனக்காகவா? நான் யஷ்வினியை நினைச்சுக் கவலைப்பட்டதுக்காகவா? ஆனா ஏன்? என்ன அவசியம்?’ என்று யோசித்தாள்.

‘அவளுக்காகத் தான்’ என்று அவளின் உள்மனம் எடுத்துச் சொன்னது.

மேலும் விவரம் அறிய ஜெகனுக்கே அழைத்துப் பேசுவோமா? என்று நினைத்தாள். ஆனால் என்றுமில்லாமல் ஏதோ ஒரு தயக்கம் ஆட்கொண்டது.

ஆனாலும் என்ன காரணம் என்று தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்ற ஆர்வம் உந்தி தள்ள ஜெகனுக்கு அழைத்தாள்.

உடனேயே அழைப்பை ஏற்றான் ஜெகவீரன்.

“என்ன மேடம் என் ஞாபகம் இப்பத்தான் வந்ததா?” என்று எடுத்தவுடன் கேட்டான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு அவனின் குரலைக் கேட்ட ஜனார்த்தனியின் முகம் பல உணர்வுகளைப் பிரதிபலிக்க முயன்றது.