பிழையில்லா கவிதை நீ – 26

அத்தியாயம் – 26

“என்ன நீலேஷு சொளையா இருபத்து அஞ்சு லட்சம் அடிக்கப் பிளான் போட்டுருக்க. அதில் எனக்கு ஒரு லட்சம் தான்னா எப்படிப்பா? இன்னும் கொஞ்சம் கூடப் போட்டுக் குடேன்…” என்றான் பரிதி.

“இங்கே பார் பரிதி… இருபத்து அஞ்சு லட்சத்துல இருபது லட்சம் இன்னும் கன்பார்ம் ஆகலை. போலீஸ் அங்கே சுத்தி இங்கே சுத்தி தாணு வரை வந்துருச்சு. நம்மை நெருங்குறதுக்கு அடுத்ததாகப் பொண்ணோட அப்பன்கிட்ட நம்ம போட்ட மிரட்டல் போனை வச்சு தான் டார்கெட் பண்ணும். திரும்ப மிரட்டும் போது எப்படியும் போனை ட்ரேஸ் பண்ண ட்ரை பண்ணுவாங்க.

அதில் இருந்து தப்பிச்சு, பொண்ணோட அப்பன் பணம் கொடுக்க வரும் போது பின்னாடி போலீஸ் வந்தால் அது கண்ணில் மண்ணைத் தூவின்னு கத்தி முனையில் வேலை பார்க்கிற மாதிரி தான் வேலை செய்துட்டு இருக்கோம்.

அதனால் பணம் நம்ம கைக்கு வந்து சேரும்வரை எதுவும் உறுதியில்லை. பணம் வெற்றிகரமா நம்ம கைக்கு வந்து சேர்ந்துச்சுனா உனக்கு இன்னும் ஒரு லட்சம் தர்றேன். அதுக்கு மேலே எதிர்பார்க்காதே…” என்றான் நீலேஷ்.

“பணம் கைக்கு வந்ததும் பேச்சு மாறக் கூடாது நீலேஷு. சொன்னது போல இன்னும் ஒரு லட்சம் கொடுத்துடணும்…”

“அதெல்லாம் கரக்ட்டா கொடுத்துருவேன். நம்பிக்கை இல்லாம திரும்பத் திரும்பச் சொல்லாதே. நம்பிக்கை இல்லனா உன் ஜோலி கழுதையைப் பார்த்துட்டுப் போ. நான் தனியாவே இதை டீல் பண்ணிக்கிறேன்…” என்று கடுப்பாகச் சொன்னான் நீலேஷ்.

“கோவிச்சுக்காதே நீலேஷு. கண்பார்ம் பண்ணிக்கத்தான் சொன்னேன். சரி, அதை விடு. அதெப்படி இந்த முறை எந்தக் கஷ்டமும் இல்லாம சுளுவா பொண்ணைப் பிடிச்ச?

நாம ஒவ்வொரு முறையும் ஒரு பொண்ணைக் கஷ்டப்பட்டுக் கடத்தி நம்ம இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்து அதைத் தொழிலுக்கு ஏத்தமாதிரி மாத்திப் பார்ட்டிக்கிட்ட கை மாத்துறதே பெரிய பாடா இருக்கும். ஆனா இந்த முறை அப்படி எதுவும் கஷ்டமே இல்லாம பொண்ணு கிடைச்சுருச்சே, எப்படி?”

“எல்லாம் என் முன்னாள் பிரண்டு கைங்கரியத்தால் தான் பரிதி…”

“அதான் அவனை எப்படி உன் வழிக்குக் கொண்டு வந்த? இது பத்தி முன்னாடியே நான் கேட்டதுக்கு அப்புறம் சொல்றேன்னு சொன்ன. இப்பவாவது சொல்லு…”

“என் பிரண்டு என் வழிக்கு எல்லாம் வரலை பரிதி. இந்தக் கதையே வேற…” என்ற நீலேஷ் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

“பிரகாஷுக்கு அவன் மாமா பொண்ணு போல ஒரு கண்ணு. ஆனா மாமா பொண்டாட்டி கொஞ்சம் பணம் பணம்னு பறக்குற ஆளு. அதனால் பொண்ணு கேட்க தயங்கிச் சமயம் வரும் போது கேட்போம்னு தள்ளிப் போட்டுருக்கான்.

ஆனா ஒரு விசேஷத்துக்குப் போனப்ப பொண்ணுக்கு அந்த அத்தைக்காரி ஒரு பணக்கார கொம்பனைப் பிடிச்சி மாப்பிள்ளை பார்த்து அங்கே வச்சே பொண்ணு பார்க்க ரெடி பண்ணிருக்கா. அது தெரிஞ்சதும் பைய அப்செட்.

இப்போ என்ன பண்றதுன்னு அவன் முழிச்சுட்டு இருந்தப்ப தான் அந்தப் பொண்ணே மாப்பிள்ளைகிட்ட போய் வேற பையனை லவ் பண்றதா சொல்லிக் கல்யாணத்தை நிறுத்தி இருக்கு. அதைப் பார்த்த பிரகாஷுக்கு ஒரு பக்கம் சந்தோசம்னாலும் அவள் லவ் பண்றது தெரிஞ்சு உடைஞ்சு போய்ட்டான்.

அவளை எப்படிக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுட்டு நின்னப்ப தான் அத்தைக்காரி அந்தப் பொண்ணைத் தரதரன்னு கோபமா வீட்டுக்கு இழுத்துட்டுப் போயிருக்கு.

அந்த அத்தைக்காரி மகள் மேலே கோபமா இருக்குற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பொண்ணு கேட்டுப் பார்ப்போம். லக் இருந்தா கட்டிக்கலாம்னு இவனும் அவங்க பின்னாடியே போயிருக்கான்.

அங்கே போனப்ப ஆத்தாளும், மகளும் வீட்டுக்குள்ள சண்டை போட்டுட்டு இருந்து இருக்காங்க. அதைப் பிரகாஷ் ஜன்னல் வழியா பார்த்துட்டுச் சமயம் பார்த்து உள்ளே போவோம்னு வெயிட் பண்ணிருக்கான். அப்போத்தான் சண்டை முத்தி அம்மா, பொண்ணைத் தள்ளிவிட்டதில் மண்டை உடைஞ்சு மயக்கம் போட்டுருச்சு.

இவன் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கதவைத் தட்டி உள்ளே போயிருக்கான்.

அந்த அம்மா இவன் கிட்ட பொண்ணை ஹாஸ்பிட்டல் அழைச்சுட்டுப் போக ஹெல்ப் கேட்டுருக்கு.

அப்போ பொண்ணு பக்கத்தில் போய்ப் பார்த்துருக்கான். மண்டை உடைஞ்சு ரத்தம் வெளியேறியதில் பொண்ணு மயக்கமா இருந்ததைப் பிரகாஷ் தனக்குச் சாதகமா பயன்படுத்திக்க நினைச்சான்.

அத்தைக்காரி சாதாரண ஒரு வேலையில் இருக்கும் தனக்கு எப்படியும் பொண்ணு சாமானியத்தில் தராது. பொண்ணு வேற எவனையோ லவ் பண்றா. அவளையும் வழிக்குக் கொண்டு வர முடியாதுன்னு நினைச்சவன் மயக்கமா இருந்தவளைச் செத்துட்டாள்னு சொல்லியிருக்கான்.

அவள் மயக்கமா இருக்கும் போதே ஒரு தாலியைக் கட்டிப் பொண்டாட்டியா ஆக்கிட்டா கல்யாணம் ஆன பிறகு என்ன செய்ய முடியும்? பொண்ணால காதலனையும் தேடிப் போக முடியாது. அம்மாகாரியும் வேற மாப்பிள்ளை தேட முடியாது.

தாலியைக் கட்டிப் பொண்ணை மறைச்சு வச்சு கொஞ்ச நாள் குடும்பம் நடத்திட்டு அப்புறம் ஏதாவது சொல்லிச் சமாளிச்சுக்கலாம்னு உடனே திட்டம் போட்டுருக்கான். அதனால போலீஸ், அது இதுன்னு சொல்லி ரொம்பப் பயமுறுத்தியிருக்கான்.

அந்த அம்மா ரொம்பப் பதட்டத்தில் இருந்ததால், பிரகாஷும் சொந்தக்காரன் என்பதால் அவன் சொன்னதை நம்பி பயத்திலும், அதிர்ச்சியிலும் அவன் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டியிருக்கு.

உடனே பிரகாஷ் என்கிட்டே போன் பண்ணி விஷயத்தைச் சொன்னான். அவன் ஒரு திட்டம் போட நான் ஒரு திட்டம் போட்டேன்…”

“எது? நம்ம வழக்கமான வேலைக்கு அந்தப் பொண்ணை யூஸ் பண்ணிக்கிறதா?” என்று கேட்டான் பரிதி.

“ஆமா. நீ சொன்னியே ஒரு பொண்ணைக் கடத்தி தொழிலுக்கு விக்க நாம எவ்வளவு கஷ்டப்படுறோம்னு. இப்ப ஒரு கஷ்டமும் இல்லாமையே ஒரு பொண்ணு மாட்டினா எப்படிக் கைக் கட்டி வேடிக்கை பார்க்கிறது? அதான் முடிவு பண்ணினேன். பிரகாஷ் திட்டத்தை அப்படியே என் திட்டமா மாத்திக்கலாம்னு…” என்றான் நீலேஷ்

“அவனுக்கு நீ என்ன தொழில் செய்றன்னு தெரியுமா?” என்று கேட்டான் பரிதி.

“ஏதோ இல்லிகல் வேலை செய்றேன்னு தான் தெரியும். பொண்ணுங்களை வச்சு தான் இல்லிகல் வேலைன்னு தெரியாது. அதனால் தான் என்னை நம்பி ஐடியா கேட்டான்.

நானும் அடுத்து என்ன செய்றதுன்னு ஐடியா கொடுத்தேன். நம்ம தொழிலுக்கு யூஸ் பண்ணும் ஆம்புலன்ஸ் ஆம்னி வேனை எடுத்துட்டுப் போய்ப் பொண்ணையும் தூக்கிட்டு வந்து என் இடத்தில் வச்சோம்.

எந்த வேலையும் ஆதாயம் இல்லாம செய்ய முடியாதுன்னு பிரகாஷ்கிட்ட பணம் கேட்டேன். அவன் அத்தைக்காரிக்கிட்டயே வாங்கிட்டு வர்றேன்னு போனவன் நகையை அள்ளிட்டு வந்தான். சரி, வந்த வரைக்கும் லாபம்னு வாங்கி வச்சுக்கிட்டேன்…”

“பொண்ணுக்கு எப்போ முழிப்பு வந்துச்சு?” என்று கேட்டான் பரிதி

“நம்ம இடத்துக்கு வந்ததுமே வந்திருச்சு. எழுந்து எங்க இருக்கேன் என்னன்னு கேட்டு முரண்டு பிடிச்சாள். நம்மகிட்ட இருந்த மயக்க ஊசி போட்டு அடக்கினோம்…”

“பிரகாஷ் பொண்ணுக்குத் தாலி கட்டணும்னு சொல்லலையா?”

“சொல்லாம இருப்பானா? மறுநாளே தாலி கட்ட தவிச்சான். நான் தான் கொஞ்சம் பொறுமையா இருன்னு அடக்கி வச்சேன். அவன் பாட்டுக்குத் தாலி கட்டிட்டேன். குடும்பம் நடத்த போறேன்னு அவள் மேல பாஞ்சுட்டான்னா… நான் எப்படி நம்ம பார்ட்டிக்குப் பொண்ணை ஃபிரெஸ்ஸா கொடுக்கிறது? ஃபிரெஸ் பொண்ணுக்குத் தானே பார்ட்டி அஞ்சு லட்சம் தருவான்…” என்றான் நீலேஷ்.

“நீ ரொம்ப விவரம்பா நீலேஷ்…” என்று அவனின் தோளில் தட்டினான் பரிதி.

“விவரம் இல்லைனா இந்தத் தொழிலில் நிலைச்சு நிக்க முடியுமா?”

“சரி சொல்லு, அப்புறம் என்னாச்சு?”

“அப்புறம் என்ன? நாங்களே எதிர்பாராம அந்தப் பொண்ணோட அப்பன் பாரின்ல இருந்து வந்திறங்கிப் போலீஸ்ல கம்ளைண்ட் கொடுத்தான். நல்லவேளையா பொண்ணு செத்துப் போயிட்டாள்னு நினைச்சு அம்மாகாரிக்குப் பித்துப் பிடிச்சுப் போயிருச்சு.

ஒருவேளை அம்மாகாரி நடிக்கிறாளோ என்னவோன்னு நினைச்சு அவ அட்மிட் ஆகியிருக்கிற ஹாஸ்பிட்டலுக்கே போய் மிரட்டிட்டு வர்றேன்னு போன பிரகாஷ் அந்தப் பொம்பிளைகிட்ட பேச முடியலைன்னு பார்த்துட்டு மட்டும் வந்துட்டான்.

விஷயம் போலீஸுக்குப் போனதால் கவனமா விஷயத்தை டீல் பண்ணனும்னு நினைச்சுட்டு இருந்தேன். அப்பத்தான் பிரகாஷ் அவன் மாமா எவ்வளவு சம்பாதிக்கிறார். என்ன சேர்த்து வச்சுருக்கார்னு உளறினான்.

அப்போதான் ஒரு ஐடியா போட்டேன். பொண்ணைப் பார்ட்டிக்கு வித்தா அஞ்சு லட்சம் தான் கிடைக்கும். ஆனா பொண்ணோட அப்பனை மிரட்டிப் பணம் வாங்கினா இருபது லட்சம்னு கணக்குப் போட்டேன்.

அதையும் விடப் பொண்ணோட அப்பனை மிரட்டி வாங்கின பணம், பொண்ணை வித்த பணம் இரண்டும் சேர்ந்தால் எப்படி இருக்கும்னு தோணுச்சு. லம்பா வர்ற காசை ஏன் விடணும்னு பொண்ணோட அப்பனுக்குப் போன் போட்டு மிரட்டினேன்.

அது பிரகாஷுக்குப் பிடிக்கலை. அந்தப் பணம் வந்தா பாதி உனக்குப் பாதி எனக்குன்னு டீல் போட்டேன். சரின்னு என் வழிக்கு வந்தான். அதோட இருந்தானா அந்த முட்டாப்பய?

காரில் வரும் போது ரோட்டுல வினயா ஃபிரண்டு அந்த டிடெக்டிவ் தான் போலீஸ் வரை இந்த விஷயத்தைக் கொண்டு போய் அவன் வினயாவுக்குத் தாலி கட்டுவதை இத்தனை நாள் தள்ளிப் போட காரணமே அவள் தான்னு காண்டுல அவ மேல காரை இடிச்சுட்டு வந்து, போலீஸ் அவன் பின்னால் விரட்டி வந்துன்னு ஒரு வழி பண்ணிட்டான்.

இவன் இனி நம்ம கூடவே இருந்தால் எனக்குத் தான் பிரச்சினை எப்படி அவனை வெட்டி விடலாம்னு யோசிச்சுட்டு இருக்கும் போதே, பார்ட்டிக்கிட்ட பொண்ணை எப்போ, எங்கே கை மாத்தி விடணும்னு நான் பேசிட்டு இருந்ததை ஒட்டுக் கேட்டுட்டுப் பொண்ணைக் கூட்டிட்டுப் போறேன்னு துள்ளினான்.

இது உனக்கே தெரியுமே பரிதி? நீ தானே அவனை அடிச்சு விரட்டின. நம்ம அடிச்சு விரட்டியவன் அடுத்துப் போலீஸ் ஸ்டேஷன் தான் போவான்னு தோணுச்சு. அதான் தாணுகிட்ட சொல்லி லாரியை வச்சு தூக்க சொன்னேன்…” என்றான் நீலேஷ்.

“இப்போ தாணு மாட்டிக்கிட்டானே நீலேஷு. இனி போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்குமே. எப்படிப் பொண்ணோட அப்பாகிட்ட பணம் வாங்க போறோம்?” என்று கேட்டான் பரிதி.

“இப்போ திரும்பப் போன் போட போறேன் பரிதி. போலீஸ் கெடுபிடி இருக்கத்தான் செய்யும். அதுக்காகப் பார்த்தால் முடியுமா? பக்காவா திட்டம் போட்டால் போலீஸுக்குத் தண்ணி காட்டிட்டுப் பெர்ஃபெக்டா பணத்தையும் தூக்கலாம், பொண்ணையும் விக்கலாம்.

என்னென்ன செய்யணும்னு யோசிச்சு வச்சுட்டேன். இனி அதைச் செயல்படுத்த வேண்டியது தான் பாக்கி. இன்னைக்கு அந்தப் பொண்ணுக்கு ஊசி போட்டுட்டயா பரிதி?”

“போட்டுட்டேன். அந்தப் பொண்ணு மயக்கத்துல தான் இருக்கு. நான் கொஞ்சம் வீடு வரை போய்ட்டு வர்றேன் நீலேஷு…”

“சரி போய்ட்டு வா. சீக்கிரம் வந்துரு. இன்னைக்கு நைட்டே பொண்ணோட அப்பனை பணம் கொண்டு வரச் சொல்லலாம்னு இருக்கேன். வேலை கிடக்கு…” என்றான்.

“சரி நீலேஷு…” என்ற பரிதி அவனின் வீட்டிற்கு வந்து குளித்து, உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது அவனின் கைபேசி அழைத்தது.

அழைப்பை ஏற்றுப் பேச பாரில் வேலை செய்யும் மணி பாருக்குப் போலீஸ் வந்து விசாரித்த தகவலை சொல்ல, அவன் முகம் மாறியது.

மணியிடம் பேசி முடித்துவிட்டு உடனே நீலேஷுக்கும் அழைத்து விவரத்தைத் தெரிவித்தான்.

“போலீஸ் ரொம்ப வேகமா இருக்கு பரிதி. நாம அதை விட வேகமா இருக்கணும். இப்போ தான் பொண்ணோட அப்பனுக்குப் போன் போட்டுப் பேசினேன். நைட்டே பணத்தைக் கொண்டு வரச் சொல்லிட்டேன்.

என்னோட போன் காலை ட்ரேஸ் பண்ணாத மாதிரி பேசி முடிச்சுட்டேன். ஆனாலும் அந்த ஆளுக்கு வந்த போனை வச்சுப் போலீஸ் மோப்பம் பிடிக்கும். நீ முதலில் இங்கே வந்து சேர். அடுத்து என்ன செய்றதுன்னு சொல்றேன்…” என்றான் நீலேஷ்.

“இதோ கிளம்பிட்டே இருக்கேன் நீலேஷு…” என்றவன் கிளம்பித் தயாராகி வீட்டைப் பூட்டிக் கொண்டு தன் பைக்கை எடுத்த அடுத்த நொடி போலீஸ் அங்கே வந்து நின்றது.

“செந்தில், இதானே பரிதி வீடு? பைக்கில் கிளம்புறவன் தான் பரிதி போல. ட்ரைவர் அந்தப் பைக்கை பிடிங்க…” என்றான் காரில் இருந்த ஜெகவீரன்.

போலீஸ் காரை கண்டதும் தன் பைக்கின் வேகத்தை அதிகரித்தான் பரிதி.

“விடாதீங்க… கார் ஸ்பீடை கூட்டுங்க…” என்று ஜெகவீரன் துரிதப்படுத்தினான்.

ஓட்டம் தொடர்ந்தது.

பரிதி இருசக்கர வாகனத்தில் சிறிய சாலைக்குள்ளும் புகுந்து செல்ல, காவல் வாகனம் சில இடங்களில் பின் தொடர முடியாமல் தடுமாறியது.

அந்தத் தடுமாற்றம் சற்று நேரத்தில் தோல்வியையும் தழுவ முயல, “செந்தில் ஜனாவைக் காரில் வந்து இடிச்சவன் ஈ சி ஆர் ரோட்டில் தானே மிஸ் ஆனான்?” என்று கேட்டான் ஜெகவீரன்.

“ஆமா சார்…” என்று செந்தில் சொன்னதும் உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தவன் ஈ சி ஆர் சாலையில் இருக்கும் சிக்னல்களில் பரிதியின் இருசக்கர வாகன எண்ணை சொல்லி வண்டியை மடக்கச் சொன்னான்.

“ட்ரைவர், வண்டியை ஈ சி ஆர் ரோட்டில் விடுங்க…” என்றான்.

ஜெகனின் அந்தத் துரித நடவடிக்கைக்குக் கை மேல் பலனாகச் சற்று நேரத்தில் காவலர்கள் பிடியில் அகப்பட்டான் பரிதி.

இங்கே பரிதி பிடிப்பட்ட அதே நேரத்தில் மருத்துவமனையில் இருந்து சேதுராமனின் மர்ம நடவடிக்கையை நோட்டம் விட்ட ஜனார்த்தனி உடனே ஜெகனுக்கு அழைத்து விவரத்தைச் சொன்னாள்.

“ஜெகா, அங்கிள் ஒரு பேக்கை ஹாஸ்பிட்டல் ரூமில் மறைச்சு வச்சுருக்கார். நார்மலா இல்லாம அவஸ்தையா நெளிந்துகிட்டு அடிக்கடி பாத்ரூம் போய்ட்டு வர்றார்…” என்று ஜெகனிடம் போனில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஜனார்த்தனி.

“நீயும் அந்த ரூமிலா இருக்க?” என்று கேட்டான் ஜெகன்.

“இல்லை ஜெகா. போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வந்ததும் உள்ளே போய் நலம் விசாரிச்சுட்டு வந்தேன். அப்போ தான் அந்த ரூமில் கட்டிலுக்கு அடியில் மறைச்சு வச்சுருந்த பேக்கை பார்த்தேன்.

ஆனா நான் ஒன்னும் பார்க்காதது போல வெளியே வந்துட்டேன். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சுத் திரும்ப ஆன்ட்டி இருக்குற ரூமை யாருக்கும் தெரியாம நோட்டம் விட்டப்ப தான் அவர் மறைந்து நின்று போன் பேசுறதைப் பார்த்தேன்…” என்றாள்.

“அவருக்கு நீலேஷ்கிட்ட இருந்து தான் போன் வந்துட்டு இருக்கு ஜனா. நாம அவனை ட்ரேஸ் பண்ணிட கூடாதுன்னு நேக்கா பேசிட்டு இருக்கான். ஆனாலும் அவன் இருக்குற இடத்தைச் சீக்கிரம் ட்ரேஸ் பண்ண நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம்.

சேதுராமன் நமக்குச் சொல்லாம தான் அவன்கிட்ட பணத்தைக் கொடுக்கக் கிளம்புவார். கவனமா வாட்ச் பண்ணு. உன் கூட அவரை வாட்ச் பண்ண கேசவை அனுப்புறேன். சேதுராமனுக்கு நீ அவரை வாட்ச் பண்றது தெரியாம பார்த்துக்கோ…” என்றான்.

“நீங்க கவலையே படாதீங்க ஜெகா. இப்ப நேருக்கு நேரா பார்த்தால் கூட அங்கிளால் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது…” என்றாள்.

“ஹேய்! என்ன வேஷம் போட்டுட்டு வந்துட்டயா?” என்று கேட்டான்.

“யா… யா…” என்று ஜனா சொல்ல,

“என்ன கெட்டப்?” என்று கேட்டான்.

“இப்ப அதுவா முக்கியம்? அங்கே என்ன நிலவரம்?”

“நீலேஷ் கையாள் பரிதியை மடக்கிப் பிடிச்சுட்டோம். அவனை விசாரிக்கத்தான் ஸ்டேஷன் அழைச்சுட்டுப் போய்ட்டு இருக்கேன். கேசவ் வந்ததும் அவர் கூட எனக்கு ரிப்போர்ட் அனுப்பிக்கிட்டே இரு…” என்றான்.

“யெஸ் ஜெகா…” என்றாள் ஜனார்த்தனி.