பிழையில்லா கவிதை நீ – 25

அத்தியாயம் – 25

“நீலேஷ்! பெண்களைக் கடத்தி அவர்களைக் கொடுமைபடுத்திப் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபட வைக்கும் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன்.

பொண்ணுங்களைக் கடத்தவே அவர்கள் பல வழிகளைக் கையாள்வார்கள். அப்படிக் கடத்திய பெண்களைத் தனியாக அடைத்து வைத்துப் பத்து, பதினைந்து நாட்களோ அதற்கு மேலோ அடித்துச் சித்ரவதை செய்வார்கள்.

அடித்தும் பெண்கள் அவர்கள் வழிக்கு வரவில்லை என்றால் போதை மருந்து கொடுத்து அந்த மயக்கத்தில் இருப்பவர்களைப் பாலியல் தொழிலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ஒரு முறை அந்தத் தொழிலில் அவர்கள் வீழ்ந்து விட்டால் அவ்வளவு சுலபத்தில் அவர்களை அதில் இருந்து மீட்டுக் கொண்டு வர முடியாது.

அப்படியே மீட்டுக் கொண்டு வந்தாலும் அந்தப் பெண்கள் அவர்கள் அனுபவித்த கொடுமைகளில் இருந்து மீண்டு வர வெகுநாட்கள் ஆகும்.

கொடுமைகள் தாங்காமல் அந்தப் பெண்களுக்குப் புத்திப் பேதலித்துப் போவதும் உண்டு. இந்த விஷயம் எல்லாம் இங்கே இருக்கும் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு கொடூர கும்பலைச் சேர்ந்த நீலேஷ் என்பவனிடம் தான் இப்போ வினயா மாட்டியிருப்பாள்னு நான் சந்தேகப்படுறேன். இப்போ எப்படி நாம வினயாவைக் காப்பாத்த போறோம்? அடுத்து நாம செய்ய வேண்டியது என்னன்னு பேசப்போறோம்…” என்றான் ஜெகவீரன்.

ஒரு சிறிய மேஜையைச் சுற்றி இரண்டு கான்ஸ்டபிள்களும், சப் இன்ஸ்பெக்டரும், ஜனார்த்தனியும் அமர்ந்திருக்க, எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் இன்ஸ்பெக்டர் ஜெகவீரன்.

“நமக்கு இப்போ கிடைச்ச ஒரே ஆதாரம் தாணு தான். அவனும் நீலேஷ் தான் பிரகாஷை லாரி ஏத்திக் கொல்ல சொன்னதுன்னு உண்மையை ஒத்துக்கிட்டான். ஆனா அது தவிர அவனுக்கு வேற எந்த விவரமும் தெரியலை.

நீலேஷோட போன் நம்பர்னு தாணு கொடுத்த நம்பருக்குப் போன் போட்டால் அந்த நம்பர் இப்போ உபயோகத்தில் இல்லைனு வருது. சோ, அந்த வழியும் அடைந்து விட்டது…” என்று சொல்லி ஜெகன் நிறுத்த,

“ஜெகா, இந்த இடத்தில் எனக்கு ஒரு டவுட்…” என்றாள் ஜனார்த்தனி.

“என்ன டவுட் ஜனா?”

“பொண்ணுங்களைத் தவறான வழிக்கு உபயோகிக்கும் கும்பலைச் சேர்ந்தவன் தானே நீலேஷ்? ஆனால் பொண்ணை வைத்து மிரட்டிப் பணம் பறித்துப் பெண்ணைத் திருப்பி ஒப்படைக்கும் கடத்தல்காரன் போலச் சேதுராமன் அங்கிள்கிட்ட பணம் கேட்டு மிரட்டியிருக்கானே ஜெகா… அது எப்படி?” என்று கேட்டாள்.

“அதையும் நான் யோசிச்சேன் ஜனா. அவன் இரண்டு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டம் போட்டிருக்கலாம். ஒன்னு வினயாவைப் பணம் கொடுத்தால் தான் ஒப்படைப்போம்னு சொல்லி மிரட்டி அவளை ஒப்படைக்காமலே சேதுராமனை ஏமாத்தி லம்பா பணம் அடிக்கலாம்னு திட்டம் போட்டுருப்பான்.

இரண்டு திருப்பி ஒப்படைக்காத வினயாவைப் பாலியல் தொழிலுக்காக வித்து அதில் இருந்து ஒரு சம்பாத்தியம் பண்ணலாம்னு திட்டம் போட்டிருக்கலாம்…” என்றான்.

“அவன் திட்டம் நீங்க முதலில் சொன்னதைப் போல இருந்தால், அப்போ திரும்ப அங்கிளுக்குப் பணம் கேட்டுப் போன் பண்ணுவான்ல?” என்று பரபரப்பாகக் கேட்டாள் ஜனார்த்தனி.

“கண்டிப்பா பண்ணுவான்…” என்றான்.

“அப்போ அந்த நேரத்தைப் பயன்படுத்தி அவன் பணம் வாங்க வரும் போது மடக்கிப் பிடிக்கலாமே ஜெகா?”

“பிடிக்கலாம் தான் ஜனா. ஆனா அது மட்டுமே சாத்தியம் இல்லை. நாம கொஞ்சம் பிசகினாலும் பணத்தை அடிச்சுட்டு எஸ்கேப் ஆகிடுவான். வினயாவும் நம்ம கைக்குக் கிடைக்க மாட்டாள்.

அதோட மிரட்டிப் பணம் கேட்குறவன் போலீஸுக்குத் தெரியாமல் தனியா வான்னு ஆர்டர் போடுவான். நாம சேதுராமனை பின்னாடி ஃபாலோ பண்றோம்னு தெரிஞ்சா அடுத்து அவன் என்ன செய்வான்னு தெரியாது…” என்றான்.

“அப்போ இதுக்கு வேற என்ன வழி ஜெகா?” என்று கேட்டாள்.

“வினயாவையும் காப்பாத்தணும், அதே நேரம் அவனையும் மடக்கிப் பிடிக்கணும். அதுக்கு நாம யூஸ் பண்ண போறது இரண்டு வழி…” என்றான்.

“என்ன இரண்டு வழி? அதை எப்படி நடைமுறைப்படுத்த போறோம்?” என்று கேட்டாள்.

“அது இப்போ முடிவு பண்ண முடியாது ஜனா. முதலில் நீலேஷ் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கணும். வினயா எங்க இருக்காள்னு தெரிஞ்சால் தான் மேற்கொண்டு யோசிக்க முடியும்…” என்றான்.

“நீலேஷ் இருப்பிடத்தை எப்படிக் கண்டுபிடிக்கப் போறோம்?” என்று கேட்டாள்.

“முன்னாடி ஒரு முறை நீலேஷை ஒரு பாரில் பார்த்திருக்கிறதாகத் தாணு சொன்னான். அந்தப் பாரில் போய் விசாரிப்போம். அங்கே இருக்குற யாருக்காவது நீலேஷை தெரிஞ்சிருக்கலாம்…” என்றான்.

“அப்போ வாங்க, உடனே போய் விசாரிக்கலாம்…” என்று நாற்காலியை விட்டு எழுந்தாள் ஜனார்த்தனி.

“ஹலோ மேடம், நில்லுங்க! நீங்க எங்கே கிளம்புறீங்க?” என்று கேட்டு அவளை நிற்க வைத்தான் ஜெகவீரன்.

“வேற எங்கே? பாருக்குத்தான்…”

“பாருக்கு எல்லாம் நாங்க போய்க்கிறோம். நீ வர வேண்டாம்…” என்றான்.

“ஹலோ, என்ன? என்னை இந்தக் கேஸில் இருந்து கழட்டி விடலாம்னு பார்த்தீங்களா?” என்று அவனை அடிக்கப் போவது போலக் கேட்டு மேஜையின் மீது கையால் ஓங்கி அடித்தாள்.

“ஜனா…” என்று கடுமையாக அழைத்துக் கண்களால் அவளை எச்சரித்தான்.

அவனின் கண்களின் ஜாடையில் பார்வையைத் திருப்ப, அங்கிருந்த மற்ற காவலர்கள் இவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டு வந்த நமட்டுச் சிரிப்பை தங்களுக்குள் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

‘அனைவரின் முன்பும் தான் செய்தது சற்று அதிகப்படியான காரியம்’ என்ற உணர்வு வர அமைதியானாள்.

ஆனாலும் அதற்கு எதுவும் அவனிடம் வருத்தம் தெரிவிக்க விரும்பாதவள், ஒன்றுமே நடவாவது போல் தன் கைகள் இரண்டையும் ஜீன்ஸ் பேண்ட்டின் பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டு தலையை அலட்சியமாகச் சிலுப்பினாள்.

அவள் காட்டிய பாவனையில் ‘சண்டி குதிரை’ என்று பல்லைக் கடித்தான் ஜெகவீரன்.

“இந்தக் கேஸுக்கு நான் ரத்தமெல்லாம் சிந்தியிருக்கேன். அப்படியெல்லாம் கேஸ் முடியாம நான் விலக முடியாது…” என்று சிலுப்பிய தலையுடனே முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னவள், தன் காயம் பட்ட கையைக் குறிப்பிட்டுக் காட்டினாள்.

‘ஐயோ! இவளோட!’ இப்போது வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டவன், “ஜனா, என்னைக் கொஞ்சம் பேச விடுறீயா?” என்றான்.

“பேசுங்க…” என்றாள்.

“உன்னைக் கேஸை விட்டெல்லாம் விலகச் சொல்லலை. நீயும் இந்தக் கேஸில் இருக்க. உன்னோட வேலை எங்க கூடவே வர்றது இல்லை…”

“அப்போ நான் என்ன செய்யணும்?”

“நீ மிசஸ் கஸ்தூரி அட்மிட் ஆகியிருக்குற ஹாஸ்பிட்டலுக்குப் போ! அங்கே தான் உனக்கு வேலை…”

“அங்கே எனக்கு என்ன வேலை? ஆன்ட்டிக்கு நர்ஸ் வேலையா பார்க்க முடியும்?” என்று நக்கலாகக் கேட்டாள்.

“ம்கூம்… இல்லை. டாக்டர் வேலை பார்க்கப் போகணும்…” என்று அவளை விட நக்கலாகச் சொன்னான்.

அதற்கு அவள் முறைக்க, “முறைக்காதே! என்னை முழுசா சொல்ல விடு. சேதுராமனுக்கு அவன் திரும்பவும் போன் போட்டுப் பணம் கேட்டு மிரட்டுவான். அப்படி அவன் மிரட்டினான்னா கண்டிப்பா அதைச் சேதுராமன் போலீஸுக்குச் சொல்ல மாட்டார்.

பொண்ணு நல்லபடியா கிடைக்கணும்னு மறைக்கத்தான் நினைப்பார். சோ, நீ அங்கே இருந்து அவர் நடவடிக்கையை வாட்ச் பண்ணி எனக்கு இன்பார்ம் பண்ணு. அதுக்குப் பிறகு என்ன செய்யணும்னு உனக்குச் சொல்றேன்…” என்றான்.

“யா… ஓகே. நான் கிளம்புறேன்…” என்று விடைபெற்றுக் கிளம்பினாள் ஜனார்த்தனி.

“கேசவ், நீங்க ஸ்டேஷன்லயே இருங்க. ஜனாகிட்ட இருந்து இன்பர்மேஷன் வந்ததும் நீங்க தான் ஜனா கூடப் போய் நான் சொல்ற வேலையைச் செய்யணும். உங்க கூட ஒரு கான்ஸ்டபிளைக் கூப்பிட்டுக்கோங்க…” என்றான்.

“ஓகே சார்…” என்றான் கேசவ்.

“செந்தில் நீங்க என் கூட வாங்க…” என்றவன் காவல்நிலையம் வெளியே வந்து காரில் ஏறினான்.

தாணு சொன்ன பார் சுத்தம் என்ற ஒன்றையே துறந்து காட்சி தந்தது.

அனைத்து டேபிளும் ஆட்கள் நிரம்பி வழிந்து, இடம் பற்றாமல் சிலர் நின்று கொண்டும் இருந்தனர்.

ஜெகவீரனின் காவல் உடையைப் பார்த்ததும் அங்கிருந்த அனைவரின் கண்களும் உச்சத்தில் ஏறிய போதையிலும் மிரண்டு விழித்தன.

சிலர் பயத்தில் எழுந்தும் நின்றனர். அவர்களைக் கண்டுகொள்ளாத ஜெகன், அங்கிருந்த ஒரு வேலையாளை அழைத்தான்.

“என்னங்க சார்?” என்று அவன் தயக்கத்துடன் கேட்க,

“இந்தப் போட்டோவில் இருக்குறவனைப் பார்த்துருக்கியா?” என்று நீலேஷின் புகைப்படத்தைக் காட்டிக் கேட்டான்.

அப்புகைப்படத்தைச் சில நொடிகள் உற்றுப்பார்த்தவன், “இல்லை சார். நான் பார்த்தது இல்லை…” என்றான்.

“நல்லா யோசிச்சுப் பார்த்துச் சொல்லு. இவன் இங்கே வந்திருக்கான்…”

“இல்லை சார், எனக்குத் தெரியலை…” என்று அவன் உறுதியாக மறுக்க, அவனைப் போகச் சொன்ன ஜெகன் அங்கே வேலை பார்த்த அடுத்தடுத்த நபர்களை அழைத்து விசாரித்தான்.

அடுத்தடுத்து தெரியவில்லை என்ற பதிலே கிடைத்தது.

இன்னும் ஒருவனை மட்டும் விசாரிக்க வேண்டியது இருக்க அவனை அழைத்தான்.

நீலேஷின் புகைப்படத்தைப் பார்த்ததும் அவனின் கண்ணில் ஒரு திடுக்கிடல் வந்தது. ஆனால் நொடியில் தன் திடுக்கிடலை மறைத்துக் கொண்டவன், “நான் இந்த ஆளை பார்த்ததே இல்லை சார்…” என்றான்.

“அப்படியா? நல்லாப் பார்த்துச் சொல்லு…”

“இல்ல சார். தெரியவே தெரியாது…” என்று உறுதியாகச் சாதித்தான்.

“சரி, போ!” என்று அவனை அனுப்பிய ஜெகன், “டைம் வேஸ்ட் செந்தில். வாங்க போகலாம்…” என்றவன் பாரை விட்டு வெளியேறினான்.

போலீஸ் வெளியே செல்வதை வேலை செய்வது போலப் பாவனைக் காட்டிக் கொண்டு ஓரக்கண்ணால் பார்த்த அந்த வேலையாள், அவர்கள் சென்றதை வாசல் வரை சென்று பார்த்து உறுதி செய்துவிட்டு விறுவிறுவென்று பாரின் அருகில் இருந்த சந்திற்குள் நுழைந்து, தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

ஆனால் அழைப்புக் கிடைக்காமல் போக, ‘ச்சே…’ என்று அலுத்துக் கொண்டவன் மீண்டும் முயற்சி செய்தான்.

இப்போது அழைப்பு போய், அழைப்பும் ஏற்கப்பட்டது.

“ஹலோ அண்ணாத்தே, நான் தான் பார்ல வேலை செய்ற மணி பேசுறேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அண்ணாத்தே…”

“…..”

“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாருக்குப் போலீஸ் வந்துச்சு அண்ணாத்தே…”

“…..”

“எல்லாம் உன் கூட இன்னொரு அண்ணாத்தே வருமே… அதைத் தேடித்தான் வந்துச்சு…”

“…..”

“ம்கூம் அண்ணாத்தே, நான் மூச்சே விடலை. தெரியவே தெரியாதுன்னு சொல்லிட்டேன். உடனே விஷயத்தை உன் காதுலயும் போட்டுட்டேன். அடுத்தத் தடவ பார்க்கு வரும் போது என்னைக் கொஞ்சம் கவனிச்சிக்கோ அண்ணாத்தே…” என்றான்.

அந்தப் பக்கம் சொன்ன பதிலையும் வாங்கிக் கொண்டு, “சந்தோஷம் அண்ணாத்தே. மறந்துடாதே…” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டுத் திரும்பியவன் முகம் இருண்டு போனது.

சந்து நுழைவு வாயிலில் சந்தின் இருபுறமும் இருந்த சுவற்றில் கைகளை ஊன்றி உதட்டை லேசாகச் சுளித்து, ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கிய படி நின்று கொண்டிருந்தான் ஜெகவீரன்.

அவனைக் கண்டதும் மிரண்டு விழித்த மணி அடுத்த நொடி சந்தின் இன்னொரு வழியாக ஓட திரும்ப அவனின் பின் நின்று கொண்டிருந்தார் கான்ஸ்டபிள் செந்தில்.

“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது ராசா…” என்று சொல்லிக் கொண்டே அவனின் அருகில் வந்த ஜெகன், மணியின் கையைப் பிடித்து முறுக்கி அவனின் சட்டைப் பையில் இருந்த கைபேசியை எடுத்தான்.

“எந்த அண்ணாத்தைக் கிட்டயோ நல்லா கவனிக்கச் சொன்னியே, உனக்கு என்ன வேணும் சொல்லு. இந்தப் போலீஸ் அண்ணாத்தே அவனை விடச் செமத்தியா கவனிக்கிறேன்…” என்று சொல்லிக்கொண்டே அவனின் கையை முறுக்கினான்.

“சார்… சார்… வலிக்குது சார்…” என்று மணி அலற,

“ஷ்ஷ்! கத்தாதே மணி! சரி சொல்லு, யார்கிட்ட பேசின? நீலேஷ் பத்தி உனக்கு என்ன தெரியும்?” என்று கேட்டான்.

“எனக்கு ஒன்னும் தெரியாது சார்…” என்றான் மணி.

“ஓகோ! உனக்கு ஒன்னும் தெரியாது? ஓகே, உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நான் நம்புறேன். எனக்கு இதை மட்டும் சொல்லு. ஒண்ணுமே தெரியாதவன், போலீஸ் தலை மறைஞ்சதும் இந்தச் சந்துக்குள்ள ஒளிஞ்சிருந்து பேச வேண்டிய அவசியம் என்ன? இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. இந்த அண்ணாத்தே உன்னை விட்டுறேன்…” என்றான்.

“பார்ல வேலை பார்க்கிறவங்க பாருக்குள்ள போன் பேச கூடாது சார். அதான் இங்கே வந்து பேசினேன். என் பிரண்டுக்குத் தான் பேசினேன் சார்…” என்றான் மணி.

“ஓ! பிரண்டை எல்லாம் அண்ணாத்தேன்னு கூப்பிடுவியோ?” என்று ஜெகன் கேட்க,

“அ… அது… சார்…” என்று பதில் சொல்ல முடியாமல் திணறினான் மணி.

“அது… இதுன்னு எந்த இழுவையும் வேண்டாம் மணி. இப்போ நான் கேட்கும் போதே கடகடன்னு எல்லா உண்மையையும் சொல்லிடு. அப்புறம்னா போலீஸ் லத்தி உன் உடம்பில் இருக்குற ஒவ்வொரு எலும்பையும் கலகலன்னு ஆட்டம் காண வச்சு சுளுவா உன்கிட்ட பதில் வாங்க வேண்டியது இருக்கும். உனக்கு எப்படி வசதி?” என்று கேட்டான் ஜெகவீரன்.

அவன் கையை முறுக்கியதே கை உடைந்து போனது போல வலிக்க, இதில் மற்ற போலீஸ் அடி எப்படியிருக்குமோ என்று மிரண்டவன், “சொல்றேன் சார்…” என்றான் மணி.

“குட் மணி! சரி சொல்லு, யாருக்குப் போன் போட்ட? நீலேஷை உனக்கு எப்படித் தெரியும்?” என்று விசாரித்தான்.

“அவரைப் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது சார். இந்தப் பாருக்கு ஒரு இரண்டு, மூணு தடவை வந்திருக்கார். அவ்வளவு தான் தெரியும்…”

“இப்போ யார்கிட்ட பேசின?”

“அது எங்க ஏரியா அண்ணாத்தே சார். அந்த நீலேஷ் சார் கூட அண்ணாத்தேயும் வரும். அதான் அண்ணாத்தேக்குத் தெரிஞ்சவரை தேடிப் போலீஸ் வந்துச்சுன்னு சேதி சொன்னா ஏதாவது காசு தரும்னு சொன்னேன்…”

“அந்த அண்ணாத்தே பேர் என்ன?”

“பரிதி சார்…”

“பரிதி வீடு எங்க இருக்கு? அவன் என்ன தொழில் பண்றான்?”

“வீடு அம்மாபேட்டைல இருக்கு சார். தொழில் பத்தி எல்லாம் விவரம் தெரியாது சார். அடி ஆளு போல வாட்டசாட்டமா இருக்கும். அதுபாட்டுக்கு வெளியே போகும், வரும். திடீர்ன்னு கை நிறையக் காசு கொண்டு வரும். எப்படி அண்ணாத்தே இவ்வளவு காசு சம்பாதிக்கிறன்னு கேட்டா திட்டும்…” என்றான்.

“இவ்வளவு தான் தெரியுமா? இல்ல வேற உண்மையை எதுவும் மறைச்சு வச்சுருக்கியா?”

“இவ்வளவு தான் சார் தெரியும்…”

“செந்தில், இவனைப் போலீஸ் கஸ்டடியில் வச்சுட்டு நாம அடுத்த வேலையைப் பார்ப்போம்…” என்றான்.

“சார், அது தான் எல்லாம் சொல்லிட்டேனே சார்…” என்று மணி கெஞ்ச,

“எங்ககிட்ட சொன்னதைப் பரிதிக்குச் சொல்லி அவனைத் தப்பிக்க வைக்க முயற்சி பண்ண மாட்டன்னு நிச்சயம் இல்லையே மணி. உன்னை ஒன்னும் பண்ண மாட்டோம். கொஞ்ச நேரம் ஸ்டேஷன்ல உட்கார்ந்து இருக்கப் போற. அவ்வளவுதான்…” என்ற ஜெகன் அவனைக் காவலில் வைத்தான்.

காவல்நிலையம் செல்லும் வழியிலேயே பரிதியின் தொலைபேசி எண்ணை டிபார்ட்மெண்ட்டில் சொல்லி அந்த எண் இப்போது எந்த ஏரியாவில் சிக்னல் காண்பிக்கிறது என்று செக் செய்து சொல்ல சொன்னான்.

மணியைக் காவலில் வைத்துவிட்டு மீண்டும் வெளியே வந்த போது, பரிதியின் அலைபேசி சிக்னல் அம்மாபேட்டையில் காண்பிப்பதாகத் தகவல் வந்து சேர்ந்தது.

“பரிதி அவன் வீட்டில் தான் இருக்கான் போலச் செந்தில். வாங்க, அம்மாபேட்டை வரை போயிட்டு வந்திடலாம்…” என்றான் ஜெகவீரன்.