பிழையில்லா கவிதை நீ – 24

அத்தியாயம் – 24

“நல்லா யோசித்துப் பாருங்கம்மா. இந்த நேரத்தில் எங்களுக்கு வினயாவைக் கண்டுபிடிக்க உதவக் கூடிய ஒரே ஆள் நீங்கள்தான். ஆம்புலன்ஸ் ஓட்டுற ஃபிரண்ட் யாராவது பிரகாஷுக்கு இருக்காங்களா?” என்று தனத்திடம் விசாரித்துக் கொண்டிருந்தாள் ஜனார்த்தனி.

“இல்லைமா… அவனுக்கு அப்படிப் ஃபிரண்டு யாரும் இல்ல…” என்றார் தனம்.

“ஓ! சரி, அதை விடுங்க. பிரகாஷ் கூட ஸ்கூலில், காலேஜில் படித்த ஃபிரண்டு யாராவது பிகேவியர் சரியில்லாம இருந்திருக்கலாம். அப்படி யாராவது தெரியுமா?” என்று கேட்டாள்.

சற்று நேரம் யோசித்த தனம், “ஸ்கூலில் அப்படி யாரும் ஃபிரண்டு இருந்த மாதிரி தெரியலை. ஆனா காலேஜ் படிக்கும் போது ஒரு ஃபிரண்டு இருந்தான்…” என்றார்.

“அப்படியா? அப்படி என்ன பிகேவியர் தப்பா இருந்தது? பிரகாஷும் அவனும் திக் ஃபிரண்ட்ஸா?” என்று கேட்டாள்.

“எப்படிப்பட்ட ஃபிரண்ட்ஸ்னு தெரியலைமா. பிரகாஷ் இரண்டாவது வருஷம் படிக்கும் போது அவன் ஃபிரண்டு ஒருத்தன் கூடப் படிக்கிற பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துகிட்டதாகச் சொல்லி அவனைக் காலேஜ் டிஸ்மிஸ் செய்தது.

“அந்தப் பிரச்சினை நடந்தப்ப காலேஜே அமளிதுமளியா இருந்தது. பேரண்ட்ஸ் மீட்டிங் வைத்து இனி இது போல உங்க பசங்க யாரும் நடந்துகிட்டா இனி நேரா போலீஸ்ல தான் ஒப்படைப்போம்னு காலேஜில் சொன்னாங்க. அப்போ…” என்று அவர் தயக்கத்துடன் நிறுத்த,

“என்னாச்சுமா? சொல்லுங்க…” என்று ஊக்கினாள்.

“என்னைப் பிரின்ஸ்பால் தனியா பார்க்கணும்னு சொன்னார்னு போனேன். காலேஜில் இருந்து டிஸ்மிஸ் செய்த பையன் கூட அடிக்கடி பிரகாஷ் சுத்திட்டு இருந்தானாம். பிரச்சினை நடந்த சமயத்தில் பிரகாஷுக்கு நாலு நாளா காய்ச்சல்னு காலேஜுக்குப் போகலை.

அதனால் தான் அவன் டிஸ்மிஸ்ல இருந்த தப்பிச்சானாம். இல்லனா அவனுக்கும் இந்நேரம் டிஸ்மிஸ் கொடுத்துருப்போம். இனியாவது உங்க பையனை ஒழுங்கா இருக்கச் சொல்லுங்கன்னு கண்டிச்சாங்க.

எனக்கு ரொம்பக் கஷ்டமா போச்சு. வீட்டுக்கு வந்து பிரகாஷை சத்தம் போட்டேன். ஒரு தனி மனுஷியா அவனை நல்லபடியா வளர்த்து ஆளாக்கி கொண்டு இருக்கேன்னு அதுவரைக்கும் நான் பட்ட சந்தோஷம் எல்லாம் தவிடுபொடியான நாள் அது.

அப்போ அழுது புலம்பி நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொல்லி அவன் மனசை கொஞ்சம் மாத்திப் படிப்பில் கவனம் செலுத்த வச்சேன். அவனும் படிச்சு நல்ல வேலையில் சேர்ந்து பொறுப்பா மாறிட்டான்னு சந்தோஷப்பட்டேன். ஆனா இப்போ…” என்றவர் மேலும் சொல்ல முடியாமல் கதறி அழ ஆரம்பித்தார்.

அவரின் தோளைத் தட்டி ஆறுதல் படுத்தினாள் ஜனார்த்தனி.

“என் பையன் பொழைச்சு வருவானாமா?” என்று அழுகையினூடே கேட்டவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியானாள் ஜனா.

பிரகாஷின் உயிருக்குத் தற்போது ஆபத்து இல்லையென்றாலும் அவன் கோமா நிலைக்குச் சென்றிருந்தான். திரும்பிக் கண் விழிக்கவும் செய்யலாம். விழிக்காமலும் போகலாம் என்று மருத்துவர் சொல்லியிருந்தார்.

‘வினயாவைக் காப்பாத்துங்க’ என்று மட்டும் சொன்னவன் அதன் பிறகு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கோமா நிலைக்குச் சென்றுவிட வேறு தகவல் எதுவும் அவனிடமிருந்து பெற முடியவில்லை.

மகனை நினைத்து அழுத தனத்திற்கு ஆறுதல் சொன்னவள் ஜெகனுக்கு அழைத்துப் பிரகாஷின் காலேஜ் நண்பனைப் பற்றிச் சொன்னாள்.

“ஓகே ஜனா. நீ அங்கயே இரு. சில இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணிட்டுப் போட்டோஸ் அனுப்புறேன். அதைப் பார்த்துத் தனத்தை ஐடன்டிபை பண்ண முடியுதான்னு பார்த்துச் சொல்ல சொல்லு…” என்றான்.

“ஓகே ஜெகா…” என்றாள்.

ஜனார்த்தனியிடம் பேசி முடித்த ஜெகவீரன் சப்இன்ஸ்பெக்டரிடம் பேச ஆரம்பித்தான்.

“லாரி வைத்து ஆக்சிடெண்ட் பண்ற அக்யூஸ்ட் லிஸ்ட் எல்லாம் எடுத்து விசாரிக்க ஆரம்பிங்க கேசவ். ஒருத்தனைக் கூட விடக் கூடாது…” என்றான்.

“ஓகே சார். உடனே அந்த வேலையை ஆரம்பிக்கிறேன்…” என்ற சப்இன்ஸ்பெக்டர் கேசவ் எழுந்து தனக்குக் கொடுத்த வேலையைச் செய்யச் சென்றார்.

“செந்தில், இப்போ ஜனா ஒரு இன்பர்மேஷன் கொடுத்தாள். அது என்னன்னு விசாரிக்கணும். பிரகாஷ் படித்த காலேஜூக்குப் போன் போட்டு விசாரிங்க. சஸ்பெண்ட் ஆனவன் அப்புறம் என்ன ஆனான்? இப்போ எங்கே இருக்கான்? இந்த டீடைல்ஸ் எல்லாம் வேணும். அப்படியே அவன் போட்டோ அனுப்ப சொல்லுங்க… க்வீக்…” என்று அடுத்தக் கட்டளை பிறப்பித்தான்.

“இதோ சார்…” என்ற செந்தில் கல்லூரி எண்ணை தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்.

நிமிட நேரம் கூடச் சோர்ந்து போகாமல் அடுத்தடுத்து வேலைகளை ஜெகன் முடுக்கிவிட, அடுத்தச் சில மணி நேரத்தில் சப்இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் அவன் கேட்ட தகவலைக் கொண்டு வந்து கொடுத்தனர்.

“சார் தாணுன்னு ஒருத்தனோட லாரி நம்ம சந்தேக லிஸ்டில் வருது. அவன் லாரி அடையாளத்தையும், சிசிடிவியில் பார்த்த பிரகாஷை ஆக்சிடெண்ட் செய்த லாரி அடையாளத்தையும் பார்க்கும் போது அடையாளம் ஒத்துப்போகுது சார்…” என்றார் சப்இன்ஸ்பெக்டர்.

“அந்தத் தாணுவை அமுக்கணும் கேசவ்…”

“அமுக்கிறலாம் சார்…” என்றார் கேசவ்.

“பிரகாஷ் ஃபிரண்டு நீலேஷ் போட்டோ காலேஜில் இருந்து வாட்ச்அப்பில் அனுப்பிட்டாங்க சார்…” என்று தகவல் சொன்னார் செந்தில்.

“இப்போ எங்கே இருக்கான்?”

“அது தெரியலை சார்…” என்று சொல்லிக் கொண்டே நீலேஷின் புகைப்படத்தை ஜெகனிடம் காட்டினார்.

கல்லூரியில் படித்த போது எடுத்த புகைப்படம் என்பதால் நீலேஷ் அதில் மிக இளமையாக இருந்தான்.

அந்தப் புகைப்படத்தைச் சில நொடிகள் கூர்ந்து பார்த்த ஜெகவீரன், ‘இவனை எங்கயோ பார்த்தது போல் இருக்கே’ என்று நினைத்தான்.

“கேசவ், இந்தப் போட்டோவைப் பாருங்க. இவனை எங்கயாவது பார்த்த ஞாபகம் வருதா?” என்று கேட்டான்.

கேசவ் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து அவன் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “காட் இட்!” என்று வேகமாகச் சொன்னான் ஜெகவீரன்.

“என்ன சார். இவன் யாருன்னு தெரிஞ்சதா?” என்று கேசவ் கேட்டான்.

“அக்யூஸ்ட் பைலில் இவன் முகத்தைப் பார்த்திருக்கேன் கேசவ். செந்தில் அந்தப் பைல் எல்லாம் எடுத்துட்டு வாங்க…” என்றான்.

“கேசவ், நீங்க அந்தத் தாணு எங்க இருக்கான்னு பாருங்க. அவனைப் பற்றி இன்பர்மேஷன் கிடைத்தால் எனக்குத் தகவல் கொடுங்க. நான் இங்கே அந்த நீலேஷ் யார், இப்ப எங்க இருக்கான்னு பார்க்கிறேன்…” என்றான்.

“யெஸ் சார்…” என்ற கேசவ் அவனுக்குச் சல்யூட் ஒன்றை அடித்து விட்டுத் தாணுவைத் தேடிச் சென்றான்.

“செந்தில் இந்தப் பைல் வேண்டாம் அந்தப் பைல் எடுத்துட்டு வாங்க…” என்று பணிந்தான்.

முதலில் எடுத்த சிறுசிறு குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் லிஸ்ட் அடங்கிய கோப்புகளை வைத்து விட்டு, பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் லிஸ்ட் அடங்கிய கோப்புகளை எடுத்து வரச் சொன்னான் ஜெகவீரன்.

அக்கோப்புகளில் நடத்திய சிறிது நேர தேடுதல் வேட்டையிலேயே அகப்பட்டான் நிலேஷ்.

கல்லூரியில் படித்த போது எடுத்த புகைப்படத்திற்கும், சமீபத்தில் எடுத்த புகைப்படத்திற்கும் நிறைய மாற்றங்கள் இருந்தாலும் அவனின் முகத்தை அடையாளம் காண முடிந்தது.

“இதோ இவன் தான் செந்தில்…” என்று செந்திலிடம் அவன் புகைப்படத்தைக் காட்டி அர்த்தத்துடன் அவரைப் பார்த்தான்.

“சார்…” என்று விழிகள் விரிய பார்த்தார் செந்தில்.

பெண் பிள்ளை வைத்திருக்கும் தகப்பனாகிற்றே! அவரின் வேலையில் பல குற்றங்களைப் பார்த்திருந்தாலும் அவரின் மனம் ஆடித்தான் போனது.

“பொண்ணு கிடைப்பாளா சார்?” என்று வருத்தத்துடன் ஜெகவீரனிடம் கேட்டார்.

“ம்ம்… ரொம்ப இக்கட்டான கேள்வி செந்தில். முயன்று பார்ப்போம்…” என்று மட்டும் சொன்னவன் ஜனாவிற்கு அழைத்தான்.

“ஜனா இப்போ இரண்டு போட்டோ அனுப்புறேன். அதைப் பார்த்து அவனைச் சமீபத்தில் பிரகாஷ் கூட எங்கயாவது பார்த்திருக்காங்களான்னு தனத்திடம் கேட்டுச் சொல்லு…” என்றான்.

“சரி ஜெகா…” என்ற ஜனா தன் வாட்ச்அப்பிற்கு வந்த புகைப்படங்களைத் தனத்திடம் காட்டினாள்.

அந்தப் புகைப்படத்தைச் சில நொடிகள் பார்த்த தனம், “பத்து நாளைக்கு முன்னாடி நானும், பிரகாஷும் கடை வீதிக்குப் போனப்ப எதிரில் இவனைப் பார்த்தோம் மா. ஆனா ரொம்ப நேரம் பிரகாஷ் அவன் கூடப் பேசலை. நான் அது யாருப்பான்னு பிரகாஷ்கிட்ட கேட்டதுக்குத் தெரிஞ்சவர்மான்னு மட்டும் தான் சொன்னான்…” என்று நிலேஷின் சமீபத்தைப் புகைப்படத்தைப் பார்த்துச் சொன்னார்.

“ஓ! சரிமா. இந்தப் போட்டோவில் இருக்குறவனைத் தெரியுதான்னு பாருங்க…” நீலேஷின் பழைய புகைப்படத்தைக் காட்டினாள்.

அதைப் பார்த்த சில நொடிகளிலேயே “இவன் தான்மா அந்தக் காலேஜில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட பையன்…” என்றார்.

பின் இரண்டு படத்தையும் பார்த்து விட்டு “இவன் தான் இப்ப இப்படி இருக்கானாமா? அடையாளமே தெரியலைமா. தெரிஞ்சிருந்தா அன்னைக்குப் பார்த்தப்பயே பிரகாஷை அவன் கூடப் பேச விடாமல் செய்திருப்பேன். கூடா நட்பு என்ன ஆகும்னு என் மகனே எனக்கு நிரூபிச்சுட்டானே…” என்று சொல்லி அழ ஆரம்பித்தார்.

“கடைவீதியில் பேசினப்ப பிரகாஷும், நீலேஷும் என்ன பேசிக்கிட்டாங்கமா. நல்லா யோசிச்சுப் பாருங்க…” என்று கேட்டாள்.

“இரண்டு பேரும் நலம் விசாரிச்சிக்கிட்டு, வேலையெல்லாம் எப்படிப் போகுதுன்னு பேசிக்கிட்டாங்க. அப்புறம் வழக்கம் போலப் போனில் பேசிக்கலாம்னு சொல்லிக்கிட்டாங்கமா. வேற எதுவும் பேசலை…” என்றார்.

உடனே ஜெகனுக்கு அழைத்த ஜனார்த்தனி தனம் சொன்ன விவரத்தைச் சொன்னாள்.

“இனி அந்த அம்மாகிட்ட நீ எதுவும் விசாரிக்க வேண்டாம் ஜனா. கேஸ் வேற கோணத்தில் போய்க் கொண்டு இருக்கு. இப்போ ஜெட் வேகத்தில் வேலை செய்தாகணும்…” என்றான் ஜெகவீரன்.

“வேறு கோணம்னா எப்படி ஜெகா?”

“அதைப் போனில் சொல்ல முடியாது ஜனா…”

“அப்போ நான் நேரில் வர்றேன்…” என்றாள்.

“உனக்கு அடிப்பட்டிருக்கு ஜனா. இனியாவது கொஞ்ச நேரம் வீட்டில் போய் ரெஸ்ட் எடேன்…” என்றான் அக்கறையாக.

அவனின் அக்கறையில் ஜனா அமைதியை நாட, “என்ன சத்தத்தையே காணோம்?” என்று கேட்டான்.

தன் தொண்டையைச் செருமிக் கொண்டவள், “நான் வந்தே தீருவேன். கேஸ் முடியுற வரை இனி ஒரு தடவை ரெஸ்ட் எடுன்னு சொல்லாதீங்க…” என்றாள்.

“சில்லி சிக்கன்…” என்று பல்லைக் கடித்தவன், “இனி சொன்னாலும் கேட்கவா போற? கிளம்பி வா!” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

“நான் உனக்குச் சில்லி சிக்கனாடா?” என்று ரசிப்புடன் கேட்டாளா? இல்லை கோபத்துடன் கேட்டாளா? என்று பிரித்தறியாத வண்ணம் முனங்கி கொண்டவள் காவல்நிலையத்திற்குக் கிளம்பினாள்.

“நீலேஷ் பத்தி என்ன தகவல் கிடைத்தது ஜெகா?” என்று காவல்நிலையத்திற்குள் நுழைந்ததும் கேட்டாள் ஜனார்த்தனி.

“கொஞ்சம் வெயிட் பண்ணு…” என்று ஜாடை காட்டிவிட்டு தான் பேசிக் கொண்டிருந்த போனில் கவனம் செலுத்தினான் ஜெகவீரன்.

“தாணு இருக்குற இடம் தெரிஞ்சுதா கேசவ்?”

“எஸ் சார். இங்கே ஒரு பாரில் இருக்கான்…” என்று அந்தப்பக்கம் இருந்து கேசவ் சொல்ல,

“அவனை அமுக்கிப் போட்டுக் கொண்டு வாங்க. தப்பிச்சிட கூடாது…” என்றான்.

“எஸ் சார்…” என்று கேசவ் அழைப்பை வைக்க,

“செந்தில் நான் கேட்ட டீடைல்ஸ் கிடைச்சுதா?” என்று கேட்டான்.

“இல்லங்க சார்…” என்றார் செந்தில்.

“க்வீக் செந்தில். நமக்கு நேரமில்லை…” என்றான்.

“இதோ சார்…” என்று அவர் பரபரப்பாக வேலை செய்ய,

“நீ இந்தப் பைலை பார் ஜனா…” என்று நீலேஷ் பற்றிய விவரம் இருந்த கோப்பை காட்டினான் ஜெகவீரன்.

காவல்நிலையமே பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க, ஜனா கோப்பை வாங்கிப் படிக்க ஆரம்பித்தவள் கண்கள் விரிந்தன.

“என்ன ஜெகா, இவன் கிட்ட தான் வினயா இப்போ மாட்டியிருக்காளா?” என்று கேட்டாள்.

“இவனாகத்தான் இருக்கணும் ஜனா. பிரகாஷ் ஃபிரண்ட்ஸ்ல இவன் மேல தான் சந்தேகம் வலுவா இருக்கு. இவன் தான்னு உறுதியா சொல்ல இப்போ ஒருத்தன் கிடைச்சுருக்கான். கேசவ் வந்ததும் அதுவும் உறுதியாகிடும்…” என்றான்.

“இவன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சே இவன் கூடச் சேர்ந்து இந்த வேலையைப் பார்த்திருக்கானா அந்தப் பிரகாஷ்?”

“அதான் தெரியலை…” என்ற ஜெகன், “இவனுங்க கையில் இப்போ வினயா எந்த நிலையில் இருக்காள்னு தெரியலை ஜனா…” என்றான்.

“இவனுங்களை உடனே பிடிக்க முடியாதா ஜெகா?”

“இவனுங்க போலீஸ்கே தண்ணி காட்டுறவனுங்க. இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பாங்க…” என்றான்.

“ப்ளடி ராஸ்கல்ஸ். பொண்ணுங்களை வைத்துச் சம்பாதிக்கும் இவனுங்களை எல்லாம் நடு ரோட்டில் நிற்க வைத்துச் சுடணும்…” என்ற ஜனாவின் முகத்தில் ஆத்திரம் கொப்பளித்தது.

“வினயாவுக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்துச்சு… ஒவ்வொருத்தனையும் நானே போட்டுத் தள்ளிட்டு ஜெயிலுக்குப் போயிருவேன்…” என்றவளின் கண்கள் ஆக்ரோசமாகப் பளபளத்தன.

“காம் டவுன் ஜனா!” என்று ஜெகன் அவளைச் சமாதானப்படுத்த முயல,

“என்ன காம் டவுன்? இல்ல என்ன காம் டவுன்னு கேட்குறேன்? பொண்ணுங்க எல்லாம் காம் டவுன்னா இருந்து இருந்து தான் உங்க ஆம்பளை ஜென்மங்கள் எல்லாம் பொண்ணுங்களை ஒரு காமப் பொருளா மட்டும் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க…” என்றாள் ஆத்திரமாக.

“அதுக்கு ஏன் எல்லா ஆம்பிளைங்களையும் குறை சொல்ற? அப்படிப்பட்ட ஆம்பிளைங்க தப்புச் செய்தால் பிடிச்சுத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறதும் என்னைப் போல ஆம்பிளைங்க தான்…” என்றான் அவனும் சிலிர்த்துக் கொண்டு.

“ஆமா… தண்டனை பெரிய தண்டனை…” என்றாள் நக்கலாக.

“அதான் சுனில் விஷயத்திலேயே பார்த்தேனே தண்டனையை. அவன் இப்போ ஹாயா ஊர் சுத்திட்டு இருக்கான். அங்கே இன்னும் யஷ்வினி குடும்பமே ஒடுங்கிப் போய் இருக்கு…” என்றாள்.

“சிலருக்கு எல்லாம் தண்டனை எப்படிக் கொடுக்கணுமோ அப்படிக் கொடுக்கணும் ஜனா. அந்த விஷயத்தை என்கிட்ட விடு, நான் பார்த்துக்கிறேன். நீ அவன் மேல் கொடுத்த கம்ளைண்ட்டை வாபஸ் வாங்கு…” என்றான்.

“அதெல்லாம் வாங்க முடியாது. முதலில் அவனுக்குத் தண்டனை கிடைக்கட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்…” என்றாள் அலட்சியமாக.

“சண்டி குதிரை…” என்றான் கடுப்பாக.

“எனக்கு எத்தனை பட்டப்பெயர் தான் வைப்பீங்க?”

“அது வைப்பேன் உன் ரியாக்ஷனுக்குத் தகுந்த மாதிரி…” என்றான்.

இருவரும் வழக்காடிக் கொண்டிருக்க அப்போது தாணுவை உள்ளே தள்ளிக்கொண்டே நுழைந்தான் கேசவ்.

கேசவ்வின் பிடியில் மாட்டியிருந்த தாணுவின் உதடு கிழிந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

“என்ன கேசவ் ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுட்டீங்க போல?” என்று கேட்டுக் கொண்டே தாணுவின் அருகில் வந்தான் ஜெகவீரன்.

“தப்பிச்சு ஓடப் பார்த்தான் சார். அதான் ட்ரீட்மெண்ட் கொடுத்துப் பிடிச்சுக் கூட்டிட்டு வர்றேன்…” என்றான் கேசவ்.

“சோ, சார் தான் துணிச்சலா போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே ஒரு ஆளை லாரி வைத்து அடித்துத் தூக்கினவரா?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான் ஜெகவீரன்.

“சார்… என்ன சார் சொல்றீங்க? நான் யாரையும் அடிச்சு தூக்கலை…” என்றான் தாணு.

“எந்தக் குற்றவாளியும் உடனே உண்மையை ஒத்துக்க மாட்டான் தாணு. சரி சொல்லு, பிரகாஷை லாரி ஏத்தி கொல்ல சொன்னது யார்?” என்று கேட்டான்.

“சார்… நான் தான் யாரையும் தூக்கலைனு சொல்றேன்ல. அப்புறமும் யார்ன்னு கேட்டா எப்படிச் சார்?” என்றான் தாணு.

“உனக்கு உதடு கிழிஞ்சது மட்டும் பத்தாது போல இருக்கு. கேசவ் இவனை லாக்அப்ல போட்டு நம்ம ட்ரீட்மெண்டை ஆரம்பிங்க…”

“சார்… சார்… நான் உண்மைத்தான் சொல்றேன். இன்னைக்கு நான் எந்த ஆக்சிடெண்டும் பண்ணலை. நம்புங்க சார்…”

“ஆதாரம் இல்லாம நாங்க எதையும் பண்ண மாட்டோம் தாணு. கேசவ் இனி பேச எல்லாம் நேரம் இல்லை. ஒன்லி ஆக்சன் தான். நீங்க ஆரம்பிங்க. நானும் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்…” என்றான் ஜெகவீரன்.

சற்று நேரத்தில் உள்ளே சென்ற தாணுவின் அலறல் கேட்க, தானும் பின்னால் சென்றான் ஜெகன்.

வெளியே அமர்ந்திருந்த ஜனாவின் காதுகளில் அடியின் சப்தமும், தாணுவின் அலறலும், நடுநடுவே ஜெகனின் கேள்விகளும் மட்டுமே வந்து விழுந்தன.

ஒரு கட்டத்தில் அடியைப் பொறுக்க முடியாத தாணு. “சொல்றேன் சார். சொல்றேன்…” என்ற முனங்கல் கேட்க,

“சொல்லு தாணு…” என்றான் ஜெகவீரன்.

“நீலேஷ்னு ஒருத்தன் தான் லாரியை வைத்து அந்தப் பிரகாஷை அடிச்சு தூக்க சொன்னான்…” என்று உண்மையைக் கக்கியிருந்தான் தாணு.