பிழையில்லா கவிதை நீ – 23

அத்தியாயம் – 23

அரசு மருத்துவமனை.

அவசரச் சிகிச்சைப் பிரிவு அறையின் வாயிலில் நின்று சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தான் ஜெகவீரன்.

அப்போது அங்கே பரபரப்பாக வந்து சேர்ந்தாள் ஜனார்த்தனி.

அவளைப் பார்த்துத் தலையசைத்த ஜெகன், சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசி முடித்து அவரை அங்கிருந்து அனுப்பிவிட்டு ஜனாவின் புறம் திரும்பினான்.

“என்ன நடந்தது ஜெகா? பிரகாஷுக்கு என்னாச்சு? இப்போ எப்படி இருக்கான்?” என்று கேட்டாள்.

“இப்படி வந்து உட்கார் ஜனா சொல்றேன்…” என்று சொன்னவன் அவள் அமரவும், அவனும் அருகில் அமர்ந்து கொண்டான்.

“சேதுராமன்கிட்ட பேசிட்டு இருக்கும் போது ஒரு போன் வந்தது இல்லையா? அப்போது தான் பிரகாஷ் ஒரு ஆக்சிடெண்ட்ல மாட்டிக்கிட்டதாகத் தகவல் வந்தது. ஆக்சிடெண்ட் நடந்த இடம் எது தெரியுமா ஜனா?” என்று கேட்டு நிறுத்தினான்.

“எங்கே?”

“என் ஏரியா போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில்…” என்றான்.

“என்ன சொல்றீங்க ஜெகா? இவனை நாம ஊரெல்லாம் தேடிக் கொண்டிருக்க, அவன் உங்க ஸ்டேஷன் ஏரியாவிலேயே சுத்திக்கிட்டு இருந்தானா?” என்று கேட்டாள்.

“அந்த ஏரியாவில் சுத்தினானா இல்லை… போலீஸ் ஸ்டேஷன் தான் வர முயற்சி செய்தானான்னு தெரியலை…” என்று யோசனையுடன் சொன்னான்.

“வாட்! போலீஸ் ஸ்டேஷனுக்கு வர நினைச்சானா?” என்று அதிர்வாய்க் கேட்டாள்.

“அப்படித்தான் எனக்குத் தோணுது. ஏன்னா போலீஸ் ஸ்டேஷன் வர்ற வழியில் சரியா வேணும்னே ஒரு லாரி வந்து அவனை அடிச்சுத் தூக்கியிருக்கு. அந்த ரோட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் அப்படித்தான் பதிவாகி இருக்கு…” என்றான் ஜெகவீரன்.

“ஓ!”

“ஸ்டேஷன் ரோடு என்பதால் உடனே பிரகாஷை பார்த்து ஹாஸ்பிட்டல் கொண்டு வந்து சேர்த்தாச்சு…” என்றான்.

“டாக்டர் என்ன சொல்லியிருக்கார்?”

“சீரியஸ் கண்டிஷன் தான் ஜனா. பிழைப்பது கஷ்டம் என்பது போல் தான் சொல்லியிருக்காங்க. ஒருவேளை அவனுக்குக் கான்ஷியஸ் வந்தால் வாக்குமூலம் வாங்கத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…” என்றான்.

“ஓ!” என்று வருத்தமாகச் சொன்ன ஜனா, “அவனோட அம்மாவுக்கு இன்பார்ம் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“இப்போத்தான் பண்ணினோம் ஜனா. வந்துட்டு இருக்காங்க…” என்றான்.

“பிரகாஷை பிடிச்சா வினயா கிடைச்சுருவாள்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்போ அவன் இப்படிக் கிடைச்சுருக்கான்…” என்றான்.

“ம்ம்… நானும் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன் ஜெகா. ஆனா இப்போ… ம்ப்ச்…” என்று வருத்தமாக உச்சுக் கொட்டினாள் ஜனார்த்தனி.

“சரி, நீ ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னியே. அது என்ன? கஸ்தூரி என்ன சொன்னாங்க?” என்று கேட்டான்.

“ஆன்ட்டி பேசினாங்கனு எப்படிக் கண்டுபிடிச்சீங்க ஜெகா? அதுவும் அங்கேயே கண்டுபிடிச்சுட்டீங்க…” என்று கேட்டாள்.

“நீ காரணம் இல்லாமல் எதுவும் செய்யமாட்டன்னு தெரியும். இன்னுமொன்னு நீ என்னையும், கான்ஸ்டபிளையும் அங்கிருந்த அப்புறப்படுத்த நினைக்கிற என்றால் அதுக்குக் காரணம் கஸ்தூரியா தான் இருக்கும்னு சின்னக் கெஸ். சரி சொல்லு. என்ன சொன்னாங்க? வினயாவைப் பிரகாஷ் கூட எங்கே அனுப்பினாங்க?” என்று கேட்டவனை ஆழ்ந்த பார்வை பார்த்தாள்.

“என்ன பார்வை இது?” புருவம் உயர்த்திக் கேட்டான்.

“என்னைப் புரிஞ்சு வச்சுருக்கீங்களே! இது சரியில்லையே…” என்று உதட்டைச் சுளித்து நக்கலாகச் சொன்னாள்.

“ஏன்? அதில் என்ன தப்பு?” என்று கேட்டான்.

“ம்ப்ச்… ம்ப்ச்…” அவனுக்குப் பதிலாக உச்சுக்கொட்டித் தோளைக் குலுக்கினாள்.

“இன்னும் இன்னும் உன்னை நிறையப் புரிஞ்சுக்கணும்னு தான் ஆசைப்படுறேன் ஜனா. ஆனா அதுக்கு நீ தான் விட மாட்டேங்கிற…” என்று கண்களில் மின்னிய காதலுடன் சொன்னான்.

அந்தக் காதல் கண்களைக் கண்டவள் தடுமாறித்தான் போனாளோ?

ஆனால் தன் தடுமாற்றத்தை அவனிடமிருந்து மறைக்க வெகுவாகப் பாடுபட்டாள்.

“ஏன் அன்னைக்கு உங்க மேல் சொன்ன குற்றச்சாட்டு மறந்து போச்சோ?” என்று அவனைச் சுனிலுடன் ஒப்பிட்டதை ஞாபகப்படுத்தி அவனின் கண்களில் தெரிந்த காதலை விரட்ட முயன்றாள்.

“நீ அன்னைக்கு அந்தச் சுனிலுடன் என்னை ஒப்பிட்டது எனக்கு எக்கச்சக்க கோபம் தான். ஆனா அதே நேரம் நீ எதுக்காகச் சுனில் கூட என்ன ஒப்பிட்டுப் பேசினன்னு யோசித்துப் பார்த்தேன்.

ஒரு விஷயத்தில் உண்மையா இருக்கிறவங்களைத் தவறானவங்க கூட ஒப்பிட்டுப் பேசினால் அந்த உண்மையானவங்க எப்படி என்னை அப்படித் தவறா நினைக்கலாம்னு கோபப்பட்டுக் குறை சொன்னவங்களை விட்டு விலகிப் போக நினைப்பாங்க.

அந்த டெக்னீக்கை தான் நீ என்கிட்ட யூஸ் பண்ணியிருக்க. உன்கிட்ட என் மனதைச் சொன்ன அன்னைக்கு அந்த டெக்னீக் என்னைப் பதம் பார்த்து வலிக்க வைத்தது உண்மைதான். ஆனால் இன்னொரு விஷயம் நீ யோசிக்கலையே?

காதலிக்கிறவங்களோட உண்மைதனத்தைச் சோதித்துப் பார்க்க நினைச்சா கோபம் வரும். அதே நேரத்தில் தன் காதலை நிரூபிக்கவும் போராடுவாங்க.

ஆனா அது கூட மலையளவு காதலை உள்ளுக்குள் மறைச்சு வச்சுக்கிட்டு வெறுக்கிற போல நடிக்கிற உன்னைப் போல ஆளுங்ககிட்ட அந்த டெக்னீக் கண்டிப்பா வேலை செய்யாதுன்னு மறந்து போய்ட்ட…” என்றான் ஆழ்ந்த குரலில்.

தன்னைக் கண்டு கொண்டானே என்பதுபோல் உள்ளுக்குள் திடுக்கிட்டுப் போனாள் ஜனார்த்தனி.

ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் “யார் உங்களைக் காதலிக்கிறா? அப்படியெல்லாம் எதுவுமில்லை. நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்கன்னு எத்தனை முறை சொல்வது?” என்றாள் அதட்டலாக.

“திரும்பத் திரும்ப இல்லை இல்லைன்னு சொல்றதால் உண்மை மறைந்து போகாது ஜனா…” என்றான்.

“ம்ப்ச்…” என்று சலித்தவள் ஏதோ சொல்ல வர,

“இரு, பேசி முடிச்சுடுறேன். காதல் சொல்லிக் கொஞ்ச நாள் உன் பின்னாடி சுத்திட்டு, அப்புறம் வேண்டாம்னு விட்டுட்டுப் போறதுக்காக என் காதலை உன்கிட்ட நான் சொல்லலை. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுக் காலமெல்லாம் நீ என் காதல் மனைவியாக வாழ வரணும்னு ஆசையில் தான் என் மனதைச் சொல்றேன்…” என்றான்.

“ச்சே! சுத்த கம்பக் ஜெகா…” அவன் பேச்சில் நெகிழ துடித்த மனதை அடக்கி ஒரு நொடி கூட யோசிக்காமல் பட்டென்று சொல்லியிருந்தாள் ஜனார்த்தனி.

“என்ன? என்ன கம்பக்?” என்று வேகமாகத் திருப்பிக் கேட்டான்.

“என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்னு கல்யாணம் வரைக்கும் யோசிச்சீங்க?”

“ஏன்? இன்னும் உன்னைப் பத்தி தெரிய என்ன இருக்கு? உன்னைப் பத்தி உன் வீட்டைப் பத்தி தான் எனக்கு எல்லாம் தெரியுமே?”

“இல்லை… என்னைப் பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாது. எதுவும், எதுவுமே தெரியாது. அப்படியிருக்கும் போது நீங்க காதல், கல்யாணம்னு உளருவது சுத்த கம்பக்காகத்தான் இருக்கு…” என்றாள் அலட்சியமாக.

“ஜனா…” அவளின் அலட்சியத்தை ஏற்க முடியாமல் ஜெகவீரன் அதட்ட,

“போதும் ஜெகா. இந்தப் பேச்சை இத்தோடு நிறுத்திக்குவோம். உள்ளே ஒருத்தன் உயிருக்குப் போராடிட்டு இருக்கான். வினயா உயிரோடு இருக்காளா இல்லையானே தெரியலை. ஆனா இந்தச் சூழ்நிலையில் நாம காதல், கல்யாணம்னு பேசிட்டு இருக்குறது மனசாட்சி இல்லாத செயலா இருக்கு…” என்று தங்கள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

“நாம பார்க்கிற வேலைக்கு, இப்படி எப்பவாவது கிடைக்கிற நேரத்தில் சொந்த விஷயம் பேசுவது மனசாட்சி இல்லாத செயல் இல்லை ஜனா.

அப்படிப் பார்த்தால் நம்ம நாட்டில் நடக்கிற குற்ற எண்ணிக்கைக்கும், நம்மகிட்ட வர்ற கேஸுகளுக்கும் இடையே நமக்கான சிறு நேரத்தில் ஒதுக்கிக் கொள்வது தப்பில்லை.

குற்றமும், கேஸும் இல்லாதப்ப தான் காதல், கல்யாணத்தைப் பத்தி பேசணும்னா அது இந்த உலகம் உயிர்ப்போட இருக்குற வரை நடக்குற காரியம் இல்லை…” என்றான்.

“உங்களுக்கு எப்படியோ எனக்கு இந்த நேரத்தில் இந்த டாபிக் பேசுறது பிடிக்கலை…” என்றாள்.

“சரி, விடு! பேச வேண்டிய நேரத்தில் எப்படிப் பேசணுமோ அப்படிப் பேசிக்கிறேன்…” என்று ஏதோ உள்ளார்த்தத்துடன் சொல்லி அப்பேச்சை முடித்துக் கொண்டான்.

“இப்போ கஸ்தூரி என்ன சொன்னாங்கன்னு சொல்லு…” என்று கேட்டான்.

அவன் கேட்டதும் கஸ்தூரி மூலம் தான் தெரிந்து கொண்ட அனைத்தையும் சொன்னாள்.

அனைத்தையும் கேட்டவனின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

“சோ, கஸ்தூரி தன்னோட மகளைக் கொன்னுட்டதாக நினைச்சுப் போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்கப் பிரமை பிடித்தது போல் நடிச்சிருக்காங்க…” என்றான்.

“அது நடிப்பு இல்லை ஜெகா. எதிர்பாரா அதிர்ச்சி தான் அவங்களை அந்த நிலைமைக்குத் தள்ளியிருக்கு. இப்போ ஓரளவு பேசியிருக்காங்க என்றால் அது டாக்டர் ட்ரீட்மெண்ட் கொடுத்ததாலும், வினயாவைக் கடத்தி வச்சுருக்காங்க என்ற விஷயம் தெரிஞ்சதாலும் தான்.

நாம கொன்ன மகளை எப்படிக் கடத்தியிருக்க முடியும்? என்ற எண்ணம் அவங்களைப் பேச வச்சுருக்கு. அதே நேரம் இன்னும் போலீஸ் பற்றிய பயம் அவங்களுக்குப் போகலை…” என்றான்.

“இருக்கலாம். எங்கே போய் விடப் போறாங்க? போலீஸ் கஸ்டடியில் தானே இருக்காங்க. பார்த்துக்கலாம். இப்ப விட்ட இடத்தில் இருந்து தொடருவோம். நீ என்ன நினைக்கிற ஜனா? வினயா உண்மையாகவே இறந்துருப்பாள்னு நினைக்கிறாயா?” என்று கேட்டான்.

“இல்லை ஜெகா. இதில் ஏதோ இடிக்கிது. கஸ்தூரி ஆன்ட்டியின் பயத்தையும், பதட்டத்தையும் பிரகாஷ் தனக்குச் சாதகமா பயன்படுத்திக் கொண்டானோனு தோணுது…”

“யெஸ் ஜனா. கஸ்தூரிகிட்ட ஊர் உலகத்தைப் பொறுத்தவரை உங்க பொண்ணே சொன்னது போல அந்தப் பரத் கூட ஓடிப் போயிட்டாள் என்றே இருக்கட்டும்னு சொல்லியிருக்கான். அவனுக்கு எப்படிப் பரத் கூடப் போக அவள் கிளம்பியது தெரியும்?

கஸ்தூரி கோபத்தில் தள்ளிவிட்டேன்னு அவன்கிட்ட சொல்லியிருக்காங்களே தவிர, அவ ஓடிப்போகக் கிளம்பினாள்னு எந்த இடத்திலும் சொல்லலை. அப்படியிருக்கும் போது அவனே சொன்னான் என்றால் உள்ளே நடந்த அவங்க சண்டை எல்லாமே அவனுக்குத் தெரிஞ்சிருக்கு…” என்றான்.

“ஆமா ஜெகா. கல்யாண மண்டபத்தில் இருந்து அவங்க இரண்டு பேரும் கிளம்பியதுமே பின்னாடியே பிரகாஷும் கிளம்பியதை சிசிடிவியில் பார்த்ததாகச் சொன்னீங்க.

சோ, அவங்க வீடு போய்ச் சேர்ந்த போதே அவனும் பின்னாடி போயிருக்கணும். அவங்க உள்ளே சண்டை போடும் போது அவன் ஜன்னல் வழியா உள்ளே நடந்ததைப் பார்த்து அனைத்தையும் கேட்டுருக்கணும்.

சண்டை வலுத்து வினயா அடிப்பட்டுக் கண்ணு திறக்காம இருந்த போது இதான் உள்ளே போகச் சரியான டைம்னு கதவைத் தட்டியிருக்கணும்…”

“அதே தான் ஜனா. அங்கே மறுநாள் காலையில் போனப்ப சிகரெட் யூஸ் பண்ணியிருக்கணும். அந்தத் தடம் தான் வெளி சுவற்றிலும், வினயா ரூமில் நகை எடுக்கப் போனப்ப ஜன்னல் திட்டிலும் இருந்த சிகரெட் தடயம்.

அதோட கஸ்தூரி ஹாஸ்பிட்டலில் இருக்குறதைத் தெரிஞ்சுகிட்டு ஒருவேளை போலீஸ்கிட்ட உண்மை சொல்லிருவாங்களோனு பயந்து அவரை எச்சரிக்கை பண்ண ஹாஸ்பிட்டல் வந்திருப்பான்னு தோணுது…” என்றான்.

“இப்போ நாம கண்டுபிடிக்க வேண்டியது ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தவன் யாருன்னு தான். எனக்கென்னமோ அவன் சாதாரண ஆளா இருக்கமாட்டான்னு தோணுது. தடயத்தை எல்லாம் அளிக்கச் சொல்லி பிரகாஷுக்குப் பக்காவா ஐடியா கொடுத்திருக்கான்.

நீ மிசஸ் கஸ்தூரிகிட்ட நல்லா விசாரிச்சியா? அன்னைக்கு ஆம்புலன்ஸ் ஓட்டிட்டு வந்தவனைப் பத்தி அவங்களுக்கு எதுவுமே தெரியாதா? ஒருவேளை அவனைப் பார்த்தால் அடையாளம் சொல்லுவாங்களா?” என்று கேட்டான் ஜெகவீரன்.

“நானும் இங்கே வருவதுக்கு முன்னாடி அதைத் திரும்பத் திரும்ப அவங்க கிட்ட கேட்டுப் பார்த்துட்டேன் ஜெகா. அவனைப் பத்தி அவங்களுக்கு ஒன்னுமே தெரியலை. லைட் ஆஃப் பண்ணிட்டுத் தான் மத்த வேலையெல்லாம் பார்த்ததால் அவன் முகத்தைக் கூட அவங்க சரியா பார்க்கலைன்னு சொல்றாங்க.

அதோட அன்னைக்கு அவங்க இருந்த மனநிலையில் பார்த்தாலும் சரியா சொல்லுவாங்கன்னு உறுதி இல்லை. இப்போ அவனை எப்படிக் கண்டுபிடிக்கப் போறோம் ஜெகா?” என்று கேட்டாள் ஜனார்த்தனி.

“அப்போ அவனைப் பற்றித் தெரிஞ்ச ஒரே ஆள் இப்போதைக்குப் பிரகாஷ் தான். அவனும் கண்ணு முழுச்சுச் சொல்லுவானா தெரியலை…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே பதறி அடித்துக் கொண்டு வந்தார் தனம்.

“சார்… சார்… என் மகன் எங்கே சார்? அவனுக்கு என்னாச்சு?” என்று அழுது கொண்டே கேட்டார்.

அவரிடம் பிரகாஷின் நிலையைச் சொல்ல, அப்படியே இடிந்து போனவர் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

பிரகாஷ் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் கண்ணாடி வழியாக அவன் இருந்த நிலையைப் பார்த்து விட்டு இன்னும் அவர் கதறி அழுதார்.

அவரின் நிலையைப் பார்க்க ஜனார்த்தனிக்குப் பரிதாபமாக இருந்தது.

அதே நேரம் பிரகாஷின் மேல் கோபமாகவும் வந்தது. பெற்று வளர்த்த பெற்றவர்களைக் கதற விட்டுத் தவறான வழிக்குச் சென்று எத்தனை இன்னல்களை இழுத்து வைத்திருக்கிறான். ‘என்ன மனிதன் அவன்!’ என்று தான் தோன்றியது.

அப்போது பிரகாஷின் அறையில் இருந்து ஒரு செவிலி வேகமாக வந்து ஜெகவீரனை அவசரமாக உள்ளே அழைத்தாள்.

“பேஷண்ட் ஏதோ முனங்குறாங்க இன்ஸ்பெக்டர்…” என்று செவிலி சொல்ல, வேகமாக உள்ளே ஓடினான் ஜெகன்.

தலையிலும், உடலிலும் கட்டுக்களை வாங்கிச் செயற்கை சுவாசத்தில் சுவாசித்துக் கொண்டு படுத்துக்கிடந்தான் பிரகாஷ்.

“பேஷண்ட்க்கு இப்போ தான் கொஞ்சம் கான்ஷியஸ் வந்திருக்கு இன்ஸ்பெக்டர். அவரால் சரியா பேச முடியலை. ஏதோ முனங்குறார். நீங்களே மெல்ல கேட்டுப் பாருங்க. பட், ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண விட வேண்டாம்…” என்றார் அங்கே இருந்த மருத்துவர்.

“ஓகே டாக்டர்…” என்றவன் பிரகாஷின் முகம் அருகே நெருங்கினான்.

“பிரகாஷ்… பிரகாஷ்…” என்று மெல்ல அழைக்க, அவனாக ஏதோ முனங்கினானே தவிர, ஜெகனின் அழைப்பிற்கு எந்தப் பிரதிபலிப்பும் காட்டவில்லை.

அதனால் மெதுவாக அவனின் முகத்தருகே குனிந்த ஜெகன் அவன் என்ன முனங்குகிறான் என்று கேட்க முயன்றான்.

“வி…வி..ன…யா… வி…ன..யா…” என்று பிரகாஷ் முனங்க,

“சொல்லுங்க பிரகாஷ். வினயா எங்கே? வினயாவுக்கு என்னாச்சு? சொல்லுங்க…” என்று கேட்டான் ஜெகவீரன்.

“வி..ன..யா… கா..ப்..பா..த்..து..ங்..க…” என்று திக்கித் திணறி ஒவ்வொரு எழுத்தாகச் சொன்னான் பிரகாஷ்.

“காப்பாத்துறோம். கண்டிப்பா காப்பாத்துறோம். வினயா எங்கே இருக்காள்னு சொல்லுங்க…” என்று ஜெகன் கேட்க,

“கா..ப்..பா..த்..து..ங்..க… என்று மட்டும் மீண்டும் திணறி சொன்ன பிரகாஷின் தலை தொய்ந்து விழுந்தது.