பிழையில்லா கவிதை நீ – 22

அத்தியாயம் – 22

“நிஜமாவே என் மகளைக் கொன்னுட்டியா? கொன்னுட்டியா? அப்படி என்னடி உனக்கு அகங்காரம்?” மனைவி சொன்னதைக் கேட்டு மகளை இழந்த வலியைத் தாங்க முடியாத சேதுராமன் கஸ்தூரியைப் போட்டு உலுக்கிக் கேள்விக் கேட்டார்.

“நா… நான் தெரியாம… கோபத்தில்… தாங்க… ஹா.. த.. தள்ளி விட்டேன்…” கஸ்தூரியால் கணவன் போட்டு உலுக்கிய உலுக்கலில் பேசவே முடியவில்லை.

“கோபம் வந்தால் கொலையும் செய்வியா? நீ பொண்ணை நல்லாப் பார்த்துப்பன்னு தானே உன்கிட்ட வீட்டுப் பொறுப்பை ஒப்படைச்சுட்டு அவ்வளவு தூரம் போய்த் தனியா கிடந்து சம்பாதிச்சு அனுப்புறேன்.

பொண்ணை நல்லாப் பார்த்துக்கத் துப்பில்லாம இப்படிக் கொலையே பண்ணிட்டியேடி பாவி…” என்று கோபமும், துக்கமும், வருத்தமும், ஆத்திரமுமாக மனைவியை உலுக்கினார்.

“காம் டவுன் அங்கிள்…” என்று ஜனார்த்தனி அவரை நிதானிக்க வைக்க முயன்றாள்.

ஆனால் அவளின் பேச்சைக் கேட்கும் நிலையில் அவர் இல்லை.

“பரத் வந்து அங்கிளை பிடிங்க…” என்று பரத்தை அழைக்க, அவனோ கண்களில் கண்ணீரும், முகத்தில் கோபமுமாக நின்று தன் கோபத்தைப் பறைசாற்றும் வண்ணம் கையை இறுக மூடிக் கொண்டு நின்றிருந்தான்.

அவனும் அசையவில்லை என்றதும் தானே சேதுராமன் அருகில் சென்று அவரின் கையைப் பிடித்து வலுவாகக் கஸ்தூரியிடம் இருந்து பிரித்தவள், “அங்கிள்…” என்று கடுமையாக அதட்டி அழைத்தாள்.

அதில் அவர் சற்று நிதானத்திற்கு வர, “உங்க கோபம், ஆத்திரம், வருத்தம் எல்லாம் எனக்குப் புரியுது அங்கிள். ஆனால் நீங்க இவ்வளவு உணர்ச்சி வசப்படுவதால் ஒன்னும் நடக்கப் போறது இல்லை.

இனிதான் நமக்கு முக்கியமான விஷயமே தெரிய வேண்டியது இருக்கு. நீங்க ஒரு விஷயம் ஞாபகத்துக்குக் கொண்டு வாங்க. இப்போ ஒருத்தன் போன் போட்டு அவன்கிட்ட வினயா இருக்கிறதாகச் சொல்லியிருக்கான்.

அது எப்படி யாருன்னு நமக்குத் தெரிஞ்சாகணும். வினயா உயிரோட இல்லாம எப்படி அவன் அப்படிப் பணம் கேட்க முடியும்? யோசிங்க…” என்றாள்.

“என்னமா சொல்ற? அப்போ வினயா இன்னும் உயிரோட இருக்காள்னு சொல்றீயா?” என்று பரபரப்பாகக் கேட்டார் சேதுராமன்.

“ஓ காட்! அப்போ வினுவிற்கு ஒன்னும் ஆகலை தானே சிஸ்டர்?” என்று ஆசையும், ஆர்வமுமாகக் கேட்டான் பரத்.

“என்னோட கெஸ் தான் பரத். ஆனா முழு விவரம் என்னன்னு ஆன்ட்டி சொன்னால் தான் தெரியும். என் கெஸ் சரியாக இருந்தால் சந்தோஷம் தான்…” என்று ஜனா சொல்ல, கேட்டிருந்த இருவர் முகத்தில் இருந்த ஆர்வமும் சற்றுக் குறைந்து தான் போனது.

ஆனால் தன் நம்பிக்கை குறையாமல் கஸ்தூரியிடம் அடுத்து என்ன நடந்தது என்று மேலும் விவரம் கேட்டாள்.


மூர்ச்சையாகிக் கிடந்த மகளைக் கஸ்தூரி எழுப்ப முயன்று கொண்டிருந்த போது, திடீரெனக் கதவு தட்டும் சப்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் போனார்.

மனம் முழுவதும் பயம் கவ்வி கொண்டு நின்றது. மகளுக்கு என்னானதோ என்ற பயம் ஒரு புறம் என்றால், இப்போது பார்த்து வந்தது யாரோ? என்ற திடுக்கிடலும் சேர்ந்து கொள்ள, நடுங்கிப் போனார் கஸ்தூரி.

கதவு விடாமல் தட்டப்படப் பயந்து கொண்டே ஜன்னல் அருகில் சென்றவர் யார் என்று பார்த்தார்.

வெளியே அவரின் நாத்தனார் மகன் பிரகாஷ் நிற்க, ‘இவன் ஏன் இந்த நேரத்தில் வந்திருக்கிறான்?’ என்ற எந்தக் கேள்வியும் அவருக்குத் தோன்றவே இல்லை.

தெரிந்தவன், அதுவும் சொந்தக்காரன் இந்த இரவு நேரத்தில் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவுவானே என்ற எண்ணம் மட்டுமே தோன்ற வேகமாகச் சென்று கதவைத் திறந்தார்.

“பிரகாஷ், வா வா… வினயாவுக்கு அடிப்பட்டுருச்சுப்பா. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகணும். கொஞ்சம் உதவி செய்யேன்…” என்று பரபரப்பாக அவனை வரவேற்றார்.

“அச்சோ! என்ன அத்தை சொல்றீங்க? எப்படி அடிப்பட்டது?” என்று கேட்டுக் கொண்டே வினயாவின் அருகில் ஓடினான் பிரகாஷ்.

“ஹான்… அது…” என்று பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவர், “தெரியாம போய் இடிச்சுக்கிட்டாள்பா. சீக்கிரம் அவளைத் தூக்கேன். ஹாஸ்பிட்டல் போகலாம்…” என்றார்.

“ஹாஸ்பிட்டல் போகலாம் அத்தை. கொஞ்சம் நிதானமா இருங்க…” என்றவன், வினயா விழுந்திருந்த நிலையைப் பார்த்தான்.

அவள் மூர்ச்சையாகி இடக்கு மடக்காக விழுந்திருந்த விதமே விபரீதத்தை உரைக்க, அவளின் மூக்கின் அருகில் விரல் வைத்துப் பார்த்தான்.

ஆனால் அவளிடம் சுவாசத்திற்கான அறிகுறி எதுவும் தெரியாமல் போக, அதிர்ந்து போனான்.

‘உயிர் இல்லையா?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டே நம்பமுடியாமல் மீண்டும் வினயாவின் சுவாசத்தைப் பரிசோதித்தான்.

அவன் மகளின் மூக்கின் அருகில் விரல் வைப்பதும், அதிர்ந்து போவதும், மீண்டும் விரல் வைத்துப் பார்ப்பதுமாக இருக்க, “என்ன பிரகாஷ், என்னாச்சு?” என்று கேட்டார் கஸ்தூரி.

“மூச்சே இல்லை அத்தை…” என்று அவன் முகம் வெளுத்துப் போனவனாகச் சொல்ல,

“என்ன?” என்று நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தவர் அப்படியே இடிந்து போய்த் தரையில் விழுந்தார்.

விழுந்த வேகத்தில் தன் நெஞ்சில் அடித்துக் கொண்டவர், “ஐயோ! என் பொண்ணை நானே கொன்னுட்டேனே…” என்று கதறி அழ ஆரம்பித்தார்.

அவரை நம்பமுடியாமல் பார்த்த பிரகாஷ், “அத்தை என்ன சொல்றீங்க?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

“நான் தான் பிரகாஷ் என் பொண்ணைக் கொன்னுட்டேன். என் பொண்ணை நானே தள்ளி விட்டுக் கொன்னுட்டேன்…” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

“நிஜமாவா அத்தை? ஏன் அத்தை? எதுக்கு அவளைத் கொன்னீங்க?” என்று பிரகாஷ் கேட்க,

“ஐயோ! ஐயோ! என் பொண்ணை என் கையாலேயே கொன்னுட்டேனே? பாவி! நான் பாவி!” என்று தொடர்ந்து தலையில் அடித்துக் கொண்டு அழுதாரே தவிர அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை அவர்.

ஒருமாதிரியான அதிர்ந்த நிலையில் இருந்தார் கஸ்தூரி.

தன் மகளைத் தானே கொன்று விட்டோமே என்ற திகைப்பில் சொன்னதையே சொல்லி அழ ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் அவரின் மனமும், மூளையும் மரத்துப் போனது போல் இருக்க, ஒரு பிரமை பிடித்த நிலையில் இருப்பவர் போல் புலம்பி அழுதார் கஸ்தூரி.

நிமிடங்கள் ஓட, புலம்பிக் கதறி அழுதாரே தவிர அவன் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை என்றதும் நிலைமையைத் தன் கையில் எடுத்துக் கொண்டான் பிரகாஷ்.

“அத்தை… அத்தை…” என்று அழுது கொண்டிருந்தவரை அதட்டி அழைத்தான்.

அதில் திடுக்கிட்டு அவனை அவர் பார்க்க, “இப்படியே அழுதுகிட்டு இருந்தால் வேலைக்கு ஆகாது. இப்ப உடனே போலீஸுக்குப் போன் போட்டு இன்பார்ம் பண்ணனும்…” என்றான்.

போலீஸ் என்ற வார்த்தை கேட்டதும் அவனை மிரண்டு போய்ப் பார்த்தார் கஸ்தூரி.

“என்ன அப்படிப் பார்க்கிறீங்க அத்தை? போலீஸுக்குச் சொல்லித்தான் ஆகணும். வேற வழி இல்லை…” என்றான் முடிவாக.

போலீஸை தூரத்தில் இருந்து பார்த்தாலே விலகிச் செல்பவர் அவர். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்பதையே எட்ட நின்று பயத்துடன் பார்ப்பவர் அவர். அப்படி இருக்க, அவர் வீட்டுக்கே போலீஸா? என்று தான் மிரண்டு போனார்.

அப்படி மிரண்டிருந்தவரிடம், “போலீஸ் வந்தால் என்கிட்ட சொன்ன மாதிரி தெரியாமல் விழுந்துட்டாள்னு சொல்லுங்க. அவங்ககிட்டயும் இப்படி நான் தான் கொன்னேன்னு புலம்பிடாதீங்க. அப்புறம் ஜென்மத்துக்கும் ஜெயிலில் தான் கிடக்கணும்…” என்று பிரகாஷ் சொல்ல அரண்டே போனார் கஸ்தூரி.

“இல்லை பிரகாஷ். போலீஸ் வேணாம். போலீஸுக்குச் சொல்லாதே…” என்று பதறிப் போய்ச் சொன்னார்.

“எப்படி அத்தை சொல்லாம இருக்க முடியும்?” என்று அவன் கேட்க,

“சொல்லாதே பிரகாஷ்! பிளீஸ் சொல்லாதே!” என்று கெஞ்சவே ஆரம்பித்து விட்டார்.

“அப்புறம் வேற என்ன அத்தை பண்ண முடியும்?” என்று கேட்க,

“நீயே… நீயே… ஏதாவது பண்ணு…” என்று வேகமாகச் சொன்னார் கஸ்தூரி.

“நானே என்ன அத்தை பண்ண முடியும்?”

“என்ன பண்ண முடியுமோ பண்ணு பிரகாஷ். ப்ளீஸ்…” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும் சில நொடிகள் யோசித்த பிரகாஷ், தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்துப் பேசினான்.

பேசி முடித்துவிட்டு வைத்தவன், “என் ஃபிரண்டுக்குப் போன் போட்டேன் அத்தை. அவன் வர்றேன்னு சொல்லியிருக்கான். அவனும் நானும் சேர்ந்து பாடியை அப்புறப்படுத்திடுவோம்.

அப்புறம் அவன் வர்றதுக்குள்ள இந்த இடத்தை எல்லாம் நீட்டா கிளின் பண்ணி வைக்கச் சொன்னான். ஒருவேளை போலீஸே மோப்பம் பிடிச்சு வந்தாலும் ஒரு தடயமும் அவங்களுக்குக் கிடைக்கக் கூடாதாம்…” என்றான்.

‘சரி, சரி’ என்று தலையை ஆட்டினாரே தவிர அந்த இடத்தை விட்டுச் சிறிதும் அசையவில்லை கஸ்தூரி.

அதனால் பிரகாஷே அங்கிருந்த ரத்தக்கறையைச் சுத்தமாகத் துடைத்தான்.

வேறு எந்தத் தடயமும் இல்லை என்று அவன் உறுதி செய்த நேரத்தில், அவனின் நண்பன் ஆம்னிவேன் ஆம்புலன்ஸில் அங்கே வந்தான்.

வீட்டு விளக்கு, வெளிவாசல் விளக்கு என அனைத்தையும் அணைத்து விட்டு அவனும், பிரகாஷுமாக வினயாவின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

அவர்களின் பின் பயந்து நடுங்கிய படி கஸ்துரி வாசலில் வந்து நின்றார்.

“நீங்க உள்ளே போய்க் கதவைப் பூட்டிக்கோங்க அத்தை. நான் இந்த வேலையை முடிச்சுட்டுக் காலையில் வர்றேன். வினயா எடுத்து வச்சுருந்த சூட்கேஸ், அவளோட போன் எல்லாம் நானே எடுத்துட்டுப் போய் அவள் பாடி கூடவே இதையும் அப்புறப்படுத்திடுறேன்.

ஊர் உலகத்தைப் பொறுத்தவரை உங்க பொண்ணே சொன்னது போல அந்தப் பரத் கூட ஓடிப் போயிட்டாள். யார் கேட்டாலும். அதையே சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் பிரகாஷ்.

அதன் பிறகு வீட்டிற்குள் வந்து கதவைப் பூட்டிக் கொண்டு அதிலேயே சாய்ந்து அமர்ந்த கஸ்தூரி விடிய விடிய அப்படியே தான் அமர்ந்திருந்தார்.

‘என் மகளை நானே கொன்னுட்டேனே… கொன்னுட்டேனே…’ என்று விடாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிப் புழுங்கிச் சித்தம் கலங்கிப் போனவர் போல் ஆனார்.

அதிலும் எப்போதும் மகளும் அவருமாக இருந்த வீட்டில் இப்போது மகளை இழந்து தனியாக, அதுவும் தானே கொன்று போட்டுவிட்டு இப்படி இருக்கிறேனே என்ற எண்ணம் அவரைத் துரத்த பிரமை பிடித்துப் போனது போல் ஆகிப்போனார் கஸ்தூரி.

விடிய போகும் நேரம் வரை அவர் அப்படியே அமர்ந்திருக்க, அந்த நேரத்தில் மீண்டும் அங்கே வந்தான் பிரகாஷ்.

அவன் கதவைத் தட்டியும் அவர் திறக்காமல் போக, ஜன்னல் வழியாக அவரை அழைத்தான். அவனின் முகத்தைப் பார்த்ததும் ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல் வந்து கதவைத் திறந்தார் கஸ்தூரி.

உள்ளே வந்தவன் அவரின் வெறித்த பார்வையை யோசனையுடன் பார்த்துக் கொண்டே, “வினயா பாடியை அப்புறப்படுத்திட்டேன் அத்தை. அதுக்கு என் ஃபிரண்டுக்குக் கொஞ்சம் செலவாச்சு. அவனுக்குக் கொடுக்கப் பணம் வேணும்…” என்று கேட்டான்.

ஆனால் அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வெறித்த பார்வையைத் தொடர, தானே பீரோ இருந்த அறைக்குள் சென்றான் பிரகாஷ்.

சற்று நேரத்தில் திரும்பி வந்து, “பீரோல நகை தான் இருந்தது அத்தை. அதை எடுத்துக்கிட்டேன். இதை வச்சு அவனுக்குப் பணம் கொடுத்துக்கிறேன். நீங்க திரும்பக் கதவை மூடிக்கோங்க…” என்று சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டான்.


திக்கித் திணறி கஸ்தூரி சொன்னதை எல்லாம் ஒரு கோர்வையாக்கி, நடந்ததைப் புரிந்து கொண்டாள் ஜனார்த்தனி.

சேதுராமனும், பரத்தும் பேச கூடச் சக்தியற்று ஆளுக்கு ஒரு மூலையில் இடிந்து போய் அமர்ந்திருந்தனர்.

கஸ்தூரி சொன்னதை ஜெகவீரனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவள், உடனே அவனுக்கு அலைபேசியில் அழைத்தாள்.

அவன் அழைப்பை ஏற்றதும், “ஜெகா உடனே இங்கே வர முடியுமா?” என்று கேட்டாள்.

“இப்ப என்னால் வர முடியாது ஜனா. நீ வேணும்னா இங்கே வா…” என்றான் ஜெகவீரன்.

“ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் ஜெகா…” என்று ஜனா சொல்ல,

“இங்கே அதை விட முக்கியமான விஷயம் போய்ட்டு இருக்கு ஜனா. ஒரு செகண்ட் கூட என்னால் நகர முடியாது. நீ இங்கே கிளம்பி வா. பேசிக்கலாம்…” என்றான்.

“சரி, எங்கே வரட்டும் ஜெகா?”

“ஜீ ஹைச் வந்துடு…”

“ஜீ ஹைச்சா? அங்கே இப்ப என்ன வேலை ஜெகா?” யோசனையுடன் நெற்றியைத் தடவிக்கொண்டே கேட்டாள்.

“அதான் சொன்னேனே முக்கியமான வேலைன்னு…” என்றான் எரிச்சலுடன்.

இப்போ எதுக்கு எரிந்து விழுகிறான் என்று யோசித்தவள், “ஜெகா எனிதிங் சீரியஸ்?” என்று கேட்டாள்.

“எவிரிதிங் இஸ் சீரியஸ் ஜனா…” என்றான்.

“ஏன்? யாருக்கு என்ன?” என்று ஜனா விடாமல் கேட்க,

“பிரகாஷ் கிடைச்சுட்டான் ஜனா…” என்ற பதிலைத் தந்தான் ஜெகவீரன்.

“ஹேய்! இது குட் நியூஸ் ஆச்சே…” என்று ஜனா ஆர்ப்பாட்டமாகச் சொல்ல,

“இல்லை ஜனா, வெரி வெரி பேட் நியூஸ்…” என்றான்.

“என்ன சொல்றீங்க ஜெகா?” அவளின் ஆர்வம் அப்படியே வடிந்து போகக் கேட்டாள்.

“பிரகாஷ் கிடைச்சுட்டான். ஆனா உயிர் இருந்தும் இல்லாதவனாகக் கிடைச்சிருக்கான். யெஸ், மரண விளிம்பில் நிற்கும் பிரகாஷ் கிடைச்சுருக்கான் ஜனா…” என்றான் ஜெகவீரன்.