பிழையில்லா கவிதை நீ – 16

அத்தியாயம் ‌- 16

ஜனார்த்தனியின் குற்றச்சாட்டு இன்னும் மனதிற்குள் சுழன்றடித்ததில் ஜெகவீரனின் முகம் இறுகிப் போயிருந்தது.

என்றுமில்லாமல் அவனை அப்படிக் கண்டதில் அவனிடம் பேசவே பயந்து தயங்கி நின்றான் பரத்.

“என்ன பரத், சொல்லுங்க…” என்று ஜெகவீரனே விசாரிக்க,

“வினு பற்றி எதுவும் தகவல் தெரிந்ததா சார்?”

“அந்த ஆம்புலன்ஸ் வேன் நம்பர் போலியானதுன்னு தகவல் வந்திருக்குப் பரத். இந்த ஏரியாவில் உள்ள அத்தனை ஹாஸ்பிட்டலிலும் செக் செய்ததில் வினயா எங்கேயும் இல்லை. போட்டோ காட்டி ஒவ்வொரு ஹாஸ்பிட்டலிலும் விசாரிச்சுட்டோம். இனி மேற்கொண்டு வேறு விசாரணை தான் நடத்தணும்…” என்று விவரம் சொன்னான்.

“சரிங்க சார்…” என்று சோர்வாகப் பரத் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, டக் டக் என்று பாதணிகள் சப்தம் எழுப்ப அங்கே வந்தாள் ஜனார்த்தனி.

அவளைக் கண்டதும் ஜெகவீரனின் முகம் இன்னும் இறுகிப் போனது.

அதைக் கண்ணுற்றாலும் கணக்கில் எடுக்காமல் “என்ன பரத் இங்கே?” என்று அவனிடம் கேட்டாள்.

“வினு பற்றி எதுவும் நியூஸ் தெரிந்ததான்னு விசாரிக்க வந்தேன் சிஸ்டர்…”

“நானும் ஜெகாகிட்ட அதைக் கேட்கத்தான் வந்தேன் பரத்…” என்றவள் ஜெகனின் புறம் திரும்பி, “வேன் நம்பர் வச்சும், ஹாஸ்பிட்டலில் விசாரித்தது வைத்தும் எதுவும் தகவல் தெரிய வந்ததா ஜெகா?” என்று கேட்டாள்.

நேற்று மாலையில் சுனிலுடன் அவனின் காதலை ஒப்பிட்டுப் பேசிய சுவடு எதுவும் தெரியாமல் வழக்கம் போல் சகஜமாகப் பேசிய ஜனார்த்தனியை வெறித்துப் பார்த்தான் ஜெகவீரன்.

‘சுனில் போல் நீயும் என்னைக் காதலிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாய்’ என்று அவள் சாட்டிய குற்றச்சாட்டில் ஜெகவீரனின் மனம் அடிப்பட்டது போல் வலித்தது.

அவள் அடுத்த வார்த்தைப் பேச வரும்முன் தன் கையை அவளின் முகத்திற்கு நேராகக் காட்டிப் பேச்சை நிறுத்த வைத்து, ‘போய்விடு…’ என்று கையை அசைத்துக் காட்டிவிட்டுக் காவல்நிலையத்திற்குள் நுழைந்து கொண்டான்.

அவன் கண்ணில் தான் ஏற்படுத்திய வலியுடன் செல்வதை மரத்துப் போன விழிகளுடன் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள் ஜனார்த்தனி.

இதோ இப்போது காவல்நிலையத்திற்கு வந்து சகஜமாகக் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தவளை ‘இப்போது என்ன? நானும் ஒன்றுமே நடவாதது போல் பதில் சொல்ல வேண்டுமா?’ என்பது போல் பார்த்தான்.

“உங்க ஃபிரண்ட் ஜனா கேட்குறேன். சொல்ல மாட்டீங்களா ஜெகா?” ‘என்னைத் தோழியாக மட்டும் நினைத்து நீ என்னிடம் பேசலாம்’ என்ற அர்த்தத்தில் கேள்விக் கேட்டவளை உணர்ச்சிகளற்றுப் பார்த்தவன், தன் தலையை லேசாகக் குலுக்கி விட்டுக் கொண்டான்.

ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டவன், “முதலில் உட்கார் ஜனா…” என்று இருக்கையைக் காட்டினான்.

ஏற்கனவே ஒரு நாற்காலியில் பரத் அமர்ந்திருக்க, அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் ஜனார்த்தனி.

“வினயா கேஸில் எந்த விடையும் இதுவரை கிடைக்கலை. எந்த வழியில் விசாரணை நடத்தினாலும் அந்த விசாரணை முடியும் போது எல்லா இடத்திலும் அப்படியே பிளாக் ஆகி நிக்கிது. இந்தக் கேஸில் நாம ஏதோ ஒரு விஷயத்தை மிஸ் பண்ற ஃபீல் எனக்கு வருது…” என்று ஜெகவீரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“எனக்கும் அதே ஃபீல் தான் ஜெகா. நாம எங்கேயோ கோட்டை விடுறோம். எங்கே?” என்று கேட்டாள் ஜனார்த்தனி.

“இந்தக் கேஸை திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன் ஜனா…” என்று சொல்லி ஜெகன் நிறுத்த,

“அதாவது திரும்ப வினயா வீட்டில் இருந்து?” என்று கேட்டாள் ஜனா.

“யெஸ். அங்கே இருந்து தான். அதுக்கு இன்னொரு காரணம், வினயா போன் நம்பர் ஆக்டிவா இருந்த போது கடைசியா எந்த இடத்தில் ஆக்டிவா இருந்ததுன்னு விசாரித்ததில் அவள் வீட்டில் தான்னு ரிசல்ட் வந்திருக்கு. அதனால் அவள் வீட்டைத் தான் நாம இன்னும் ஆராயணும்னு தோணுது. இப்போ நான் அங்கே தான் கிளம்பிட்டு இருக்கேன்…” என்றான்.

“அப்போ நானும் வர்றேன்…” என்று ஜனாவும் கிளம்பினாள்.

“நீயா?” என்று ஜெகன் அவளைக் கேள்வியாகப் பார்க்க,

“என்ன ஜெகா?” அவனின் பார்வை புரியாமல் கேட்டாள் ஜனார்த்தனி.

“சுனில் கேஸ் விஷயமா இன்னைக்கு நீ கோர்ட் போகணுமே?” என்று மரத்தக் குரலில் கேட்டான்.

“அது மதியம் தானே ஜெகா. வினயா வீட்டுக்கு வந்துட்டு அப்புறம் அங்கே போறேன்…” என்று சொன்னவளைக் கூர்ந்து பார்த்துவிட்டு அமைதியாகிப் போனான்.

முன்பு போல் இல்லாமல் இருவருக்கும் இடையே இருந்த இலகுத்தன்மை குறைந்து தான் போனது.

முதல் நாள் ஏற்பட்ட பேச்சு வார்த்தையை மறந்து அதன் மனவருத்தம் வெளியே தெரியாத வண்ணம் இருவருமே பேச முயன்றனர்.

ஜெகவீரனும், ஜனார்த்தனியும் வினயாவின் வீட்டிற்குக் கிளம்ப “நானும் உங்களோட வரட்டுமா சார்?” என்று கேட்டான் பரத்.

“வாங்க பரத்…” என்றான் ஜெகவீரன்.

அவர்கள் கிளம்பி வெளியே வர, முன்பு ஜனார்த்தனியைத் தன்னுடனே வாகனத்தில் அழைத்துச் செல்ல விரும்பும் ஜெகன் இம்முறை காரின் அருகில் வந்ததும் ஒரு நொடி தயங்கி நின்று ஜனாவைப் பார்த்தான்.

அவளும் அப்போது அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் தன்னுடன் வரச் சொல்வானோ என்ற எதிர்பார்ப்பு அவளின் கண்களில் தெரிந்ததோ?

அவளின் கண்களை ஒரு நொடி கூர்ந்து பார்த்த ஜெகன் பின் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தவன், “நீங்க காரில் வாங்க பரத். ஜனா அவங்க வண்டியில் வருவாங்க…” என்று பரத்தை அழைத்தான்.

அவனின் நிராகரிப்பில் ஜனாவின் முகம் சுருங்கியதோ?

ஆனால் நொடியில் தன் முகபாவனையை மாற்றிக் கொண்டு இருசக்கர வாகனத்தை விருட்டென்று கிளப்பிக் கொண்டு காவல் வாகனம் கிளம்பும் முன் தன் வாகனத்தைப் பறக்க விட்டாள்.

அவள் கிளம்பிச் சென்ற வேகத்தைக் கண்டு தன் தோள்களைக் குலுக்கி விட்டுக் கொண்டான் ஜெகவீரன்.

சற்று நேரத்தில் வினயாவின் வீட்டிற்குச் சென்று சேர்ந்தனர். சேதுராமனுக்கும் தகவல் தெரிவித்திருக்க அவரும் அப்போது வீட்டில் இருந்தார்.

வழக்கமான கஸ்தூரி பற்றிய விசாரணைக்குப் பிறகு வீட்டில் மீண்டும் சோதனை நடத்த ஆரம்பித்தான் ஜெகவீரன். அவனுடன் இரண்டு காவலர்களும் சோதனையில் ஈடுபட, ஜனார்த்தனியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

“வீட்டில் ஒரு இடம் விட்டு வைக்காதீங்க செந்தில். சோஃபா, மேஜை, கட்டில் எல்லாத்தையும் நகர்த்திச் செக் பண்ணுங்க…” என்று உத்தரவிட்டான் ஜெகவீரன்.

அவனின் உத்தரவின் கீழ் சோதனை தீவிரமாக நடக்க ஆரம்பித்தது.

அவர்களுடன் சோதனை செய்த ஜனா அங்கிருந்த பெரிய மேஜையின் அருகே சென்று ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

மேஜையில் இருந்த ஒவ்வொரு ட்ராயராக அவள் திறந்து பார்த்தும் ஒரு துப்பும் கிடைக்காமல் போக, கீழிருந்த ட்ராயரை மூடிவிட்டு உதட்டைப் பிதுக்கி அவள் நிமிர்ந்த போது மேஜையின் ஒரு காலின் அடியில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவள், “ஜெகா, இங்கே வந்து பாருங்க…” என்று அழைத்தாள்.

“என்ன ஜனா?” என்று அவன் வந்து பார்க்க,

“இது என்னன்னு தெரியுதா ஜெகா?” என்று தான் பார்த்த அடையாளத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள்.

மேஜையின் காலின் கீழ் பகுதியில் சின்னச் சின்னப் பொட்டாகத் தெரிந்த சிவப்புக் கறையைப் பார்த்து “ரத்தம் மாதிரி இருக்கு ஜனா…” என்றான்.

அந்த ரத்த துளிகள் சின்னச் சின்னதாகச் சில பொட்டுகள் அளவில் தான் இருந்தன. அதனால் நன்கு கூர்ந்து கவனித்தால் ஒழிய யார் கண்ணிலும் இலகுவாக அது பட்டு விடவில்லை.

“எனக்கும் அப்படித்தான் தெரியுது…” என்றவள் அப்படியே தரையோடு குனிந்து மேஜையின் அடியில் பார்த்தாள்.

“இன்னொரு தடயம் ஜெகா…” குனிந்து பார்த்தபடியே கூவினாள் ஜனார்த்தனி.

அவளுடன் அவனும் வேகமாகக் குனிந்து பார்க்க, மேஜையின் அடியில் பளபளத்துக் கொண்டிருந்தது ஒரு தங்கத் தோடு.

“நீ இந்தப் பக்கம் வா ஜனா…” என்று அவளை நகர்த்தியவன் கவனத்துடன் அந்தக் காதணியை எடுத்தான்.

ரத்தக்கறை என்று அவர்கள் பேசிக் கொள்ளவுமே பயத்துடன் நின்றிருந்த சேதுராமனும், பரத்தும், ஜெகன் கையில் வைத்திருந்த தங்க காதணியை அரண்டு போய்ப் பார்த்தனர்.

“இ.. இது வினுவோட கம்மல் சார்…” ஜெகன் கேட்கும் முன் நடுங்கும் குரலில் சொல்லியிருந்தான் பரத்.

“நீங்க கடைசியா பார்த்துக்கிட்ட அன்னைக்கு இந்தக் கம்மல் போட்டுருந்தாங்களா?” என்று கேட்டான் ஜெகன்.

“ஆமா சார். அன்னைக்கும் இந்தக் கம்மல் தான் போட்டுருந்தாள்…” என்று பரத் கலக்கத்துடன் பதில் தர,

“அய்யோ! வினயா… உனக்கு என்னடா ஆச்சு?” என்று புலம்பிக் கதற ஆரம்பித்தார் சேதுராமன்.

“செந்தில் பாரன்சிக் ஆளுங்களுக்கு இன்பார்ம் பண்ணி வரச் சொல்லுங்க…” என்று அவரை அனுப்பி வைத்தவன்,

“வினயாவுக்கு என்ன பிளட் குரூப் மிஸ்டர் சேதுராமன்?” என்று கேட்டான்.

“ஏ நெகட்டிவ் சார்…” என்று அவர் கண்ணீருடன் சொல்ல,

“ஓகே, பாரன்சிக் ஆளுங்க வந்து இந்தச் சின்னத் துளிகள் ரத்தத்தில் இருந்து மாதிரி எடுத்து என்ன பிளட் குரூப்னு சொல்லிடுவாங்க…” என்ற ஜெகன்,

“வேற எதுவும் தடயம் கிடைக்குதானு செக் செய் ஜனா. கான்ஸ்டபிள் நீங்களும் ஜனா கூடச் சேர்ந்து தேடுங்க…” என்றான்.

அடுத்தச் சில மணி நேரங்கள் தேடுதல் வேட்டையும், தடவியல் துறையில் இருந்து வந்திருந்த அலுவலர்களின் சோதனையும் துரித வேகத்தில் நடக்க ஆரம்பித்தது.

துளித்துளியாய் ஒட்டியிருந்த ரத்த மாதிரியைச் சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

வீட்டையே தலைக்கீழாகப் புரட்டியது போல் தேடியதில் காய்ந்த ரத்த துளிகளும், ஒரு கம்மலும் தவிர வேறு தடயம் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. வினயாவின் கைபேசியும் வீட்டில் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.

“அடுத்து என்ன ஐடியா ஜெகா?” என்று கேட்டாள் ஜனார்த்தனி.

“ஹ்ம்ம்…” என்று யோசனையாக இழுத்தவன், “அடுத்துப் புதன் அன்று மிசஸ் கஸ்தூரியும், வினயாவும் கலந்துகிட்ட கல்யாண ரிசப்ஷன் வீட்டில் போய் விசாரிக்கணும் ஜனா. நாம சிசிடிவியில் பார்த்தபடி ஏற்கனவே ஒருத்தன் இந்த வீட்டில் இருந்தான் என்றால் அது யாருன்னு தேடணும்.

கஸ்தூரி பொண்ணை அவன் கூடத் தனியா ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி இருக்காங்க என்றால் கட்டாயம் அவன் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தவனாகத் தான் இருக்கணும். அந்தத் தெரிந்தவன் ஒருவேளை அந்த ரிசப்ஷன் வீட்டில் இருந்து இவங்க கூடவே வீட்டுக்கு வந்திருக்கலாம் என்பது என் கெஸ்.

என் கெஸ் சரியா என்று விசாரிக்கணும். அதோட அன்னைக்கு வினயாவைப் பொண்ணு பார்த்த மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க யார் என்று விசாரிக்கணும்.

இதுவரை சிசிடிவி ரூட் வழி ஆம்புலன்ஸ், ஹாஸ்பிட்டல் என்று விசாரிச்சுட்டோம். ஆனால் அதன் பலன் பூஜ்யம். சோ, இப்போ இந்த ரூட்டில் போய்ப் பார்ப்போம்…” என்றான் ஜெகவீரன்.

“நல்ல ஐடியா ஜெகா. ஓகே, நீங்க இந்த விசாரணையைப் பாருங்க. நான் சுனில் விஷயமா கோர்ட் போய்ட்டு வர்றேன்…” என்றாள் ஜனார்த்தனி.

அவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மை ஜெகனின் முகத்தில் சட்டென்று குறைந்து போனது.

சுனில் விஷயத்தில் தானே அவன் தனக்குக் கட்டுபாடு விதிப்பதாகச் சொன்னாள். அதனால் அதைப் பற்றி மேலும் பேசவும் அவனால் முடியவில்லை.

அந்த இயலாமை அவனிடம் இறுக்கத்தை உண்டாக்கியது.

“க்கும்…” என்று செருமிக் கொண்டவன், “சப் இன்ஸ்பெக்டர் சுனிலை கோர்ட்க்கு அழைச்சுட்டு வருவார். மேலும் நடக்க வேண்டியதைப் பார்த்துக்கோ…” என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டான்.

“ஓகே…” என்று அவள் அங்கிருந்து நகர, அவள் வாசல் படியைத் தாண்டியதும், “ஜனா…” என்று அழைத்தான் ஜெகவீரன்.

அவள் சட்டென்று திரும்பி அவனைப் பார்க்க, “கவனம்…” என்று அவளின் கண்களைப் பார்த்துச் சொன்னவன், பட்டென்று தன் முகத்தைக் கான்ஸ்டபிளுடன் பேசுவது போல் திருப்பிக் கொண்டான்.

அவனின் முதுகையே சில நொடிகள் வெறித்துப் பார்த்தவள் வழக்கமான தன் தோள் குலுக்கலுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

மீண்டும் அன்று மாலையளவில் ஜெகவீரன் எங்கே இருக்கிறான் என்று விசாரித்து அங்கே வந்தாள் ஜனார்த்தனி.

அப்போது தான் வினயாவிற்குப் பார்த்த மாப்பிள்ளை வீட்டில் தன் விசாரணையை முடித்துக் கொண்டு வெளியே வந்தான் ஜெகவீரன்.

வாசலில் வந்து நின்ற ஜனாவைப் பார்த்தவன், “இங்கே விசாரணை முடிந்தது ஜனா. நீ கிளம்பு…” என்றான்.

“இங்கே கூடுதலா எதுவும் விவரம் கிடைச்சதா ஜெகா?” என்று விசாரித்தாள்.

“அதை இங்கே வச்சுப் பேச முடியாது ஜனா…” என்றான் ஜெகன்.

“அப்போ காஃபி ஷாப் போகலாமா ஜெகா?” என்று கேட்டவளின் குரலில் சோர்வு தெரிந்தது.

அவளின் சோர்வை உணர்ந்து கொண்டவன், யோசனையுடன் புருவம் சுருக்கி அவளைப் பார்த்தான்.

“இந்த ஏரியா எண்ட்ல ஒரு காஃபி ஷாப் இருக்கு. அங்கே போ! நான் பின்னாடி வர்றேன்…” என்று அவளை அனுப்பி வைத்தவன், காரில் அவளைப் பின் தொடர்ந்தான்.

காரில் செல்லும் போதே சப்இன்ஸ்பெக்டருக்கு அழைத்து நீதிமன்றத்தில் நடந்த விவரத்தைக் கேட்டுக் கொண்டவனின் கண்களில் கோபம் கூத்தாட ஆரம்பித்தது.

“இப்படித்தான் நடக்கும்னு நினைச்சேன். கேட்டாளா அவள்…” என்று கடுப்பாகத் தனக்குள் முனங்கிக் கொண்டான்.

காஃபி ஷாப் வந்ததும், “நீங்க காரில் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க செந்தில். ஒரு பத்து நிமிஷத்தில் வந்துடுறேன்…” என்று கான்ஸ்டபிளிடம் சொல்லிவிட்டு இறங்கிக் கடைக்கு வந்தான்.

அவன் உள்ளே வந்த போது ஒரு காஃபியை வாங்கிப் பருகியபடி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஜனார்த்தனி.

அவளைப் அப்படிப் பார்த்து அவனின் கோபம் அதிகம் தான் ஆனது.

ஆனாலும் அவளின் முன் தன் கோபத்தைக் காட்டாமல் அமர்ந்தான்.

“சொல்லு ஜனா…” என்று அவனே பேச்சை ஆரம்பிக்க,

“நீங்க தான் சொல்லணும் ஜெகா. வினயா கேஸ் என்னாச்சு?” என்று கேட்டாள்.

‘இப்போ கூட அவள் விஷயத்தை என்னிடம் சொல்ல மாட்டாளாமா?’ என்று கடுப்புடன் நினைத்துக் கொண்டவன், வினயாவின் விஷயத்தைப் பேச ஆரம்பித்தான்.

“ரிசப்ஷனில் வினயாவைப் பொண்ணு பார்க்கும் படலத்தை மறைமுகமா ஏற்பாடு செய்திருந்ததை வினயா கண்டு கொண்டதும் கோபப்பட்டு உடனே நேரா அந்த மாப்பிள்ளையிடம் போய், ‘நான் ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்றேன். அதனால் இந்தக் கல்யாண ஏற்பாடு நடக்காது’ன்னு சொல்லிட்டாளாம்.

அதில் மிசஸ் கஸ்தூரி ரொம்பக் கோபப்பட்டு வினயாவை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடியே திட்டிருக்காங்க. ‘உங்க பொண்ணு காதலிச்சதை மறைச்சுக் கல்யாண ஏற்பாட்டுக்குத் தயாரான உங்களைத் தான் நாங்க திட்டணும்’னு மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க கஸ்தூரியைத் திட்டிருக்காங்க.

அதில் அவமானமாக உணர்ந்த கஸ்தூரி மகளைக் கோபத்தோடு அழைச்சுட்டு அங்கிருந்து கிளம்பிட்டாங்களாம். இவ்வளவு தான் அந்த மாப்பிள்ளை வீட்டில் கிடைச்சத் தகவல்…” என்றான்.

“ஓ! அப்போ உங்க கெஸ் படி யாருமே அங்கே இருந்து கஸ்தூரி ஆன்ட்டி கூட அவங்க வீட்டுக்கு வரலையா?” என்று கேட்டாள் ஜனார்த்தனி.

“வரலை. ஆனால் ஒரு ஆளு மேலே சந்தேகம் வந்திருக்கு…” என்றான்.

“ஹே… யாரு மேல?” என்று ஆர்வமாகக் கேட்டாள் ஜனா.

“அவன் பெயர் பிரகாஷ். சேதுராமனோட அக்கா பையன். அவன் மேல தான் சந்தேகம்…”

“சந்தேகம் வர்ற மாதிரி என்ன க்ளூ கிடைச்சிருக்கு ஜெகா?”

“அந்த ரிசப்ஷன் வீடியோ வாங்கிப் பார்த்தேன். அதில் கஸ்தூரிகிட்ட பிரகாஷ் பேச வந்தப்ப இரண்டு பேருமே நல்லாச் சிரித்துப் பேசியிருக்காங்க. அதுக்குப் பிறகு கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மாப்பிள்ளை விஷயம் அவனுக்குத் தெரிந்ததும் பிரகாஷ் முகமே மாறிப் போயிருச்சு.

ஒரு மாதிரி முறைச்சுட்டே இருந்திருக்கான். அப்புறம் மிசஸ் கஸ்தூரி வினயாவைக் கோபமா வீட்டுக்கு இழுத்துக்கிட்டுப் போனப்ப அவனும் பின்னாடிக் கிளம்பிப் போயிருக்கான்.

இதில் முக்கியமான விஷயம் தனிதனியா உட்கார்ந்து இருந்தப்பவும் பிரகாஷ் கண்ணு வினயாவைத் தான் சுற்றி வந்திருக்கு…” என்று சொல்லி ஜெகன் நிறுத்த,

“ஓ! ஒன் சைட் லவ்வோ?” என்று கேட்டாள் ஜனா.

“அப்படித்தான் நானும் நினைக்கிறேன். அதோட அந்த மண்டபத்தோட சிசிடிவி புட்டேஜ் பார்த்ததில் கஸ்தூரியும், வினயாவும் ஏறிப் போன ஆட்டோ பின்னாடித் தான் அவனும் தன் பைக்கில் போயிருக்கான்…” என்றான்.

“ஓ! அப்போ அவனைப் பிடிச்சா உண்மை தெரியுமே ஜெகா?” என்று பரபரப்பாகக் கேட்டாள் ஜனார்த்தனி.

“ம்ம்… அதுக்கான ஏற்பாட்டைப் பண்ணிட்டேன். பிரகாஷ் ஏரியாவில் இருக்குற போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்ணி அங்கே போகச் சொல்லிருக்கேன். ஆனால் அவன் வீட்டில் இல்லை, வெளியூர் போயிருக்கான்னு தகவல் கிடைச்சிருக்கு. இப்போ அடுத்து நான் அங்கே தான் போய் விசாரிக்கப் போறேன்…” என்றான்.

“அப்போ நானும் அங்கே வர்றேன்…” என்று அவளும் அவனுடன் கிளம்பினாள்.

இருவரும் கிளம்பி வெளியே நடந்து கொண்டிருக்கும் போது, “சோ, இப்ப கூடக் கோர்ட்டில் என்ன நடந்ததுன்னு என்கிட்ட சொல்ல மாட்ட?” என்று பொறுக்க முடியாமல் கேட்டே விட்டான் ஜெகவீரன்.

“ஏன், இதுவரை தெரியாமயா கடைக்குள் நுழையும் போதே ‘இவளுக்கு இது தேவையா?’ என்பது போல் என்னைப் பார்த்துட்டே வந்தீங்க?” என்று அலட்சியமாகக் கேட்டவளைச் சுட்டெரித்து விடுவது போல் பார்த்தான் ஜெகவீரன்.

“இப்போ எதுக்கு இப்படி முறைக்கிறீங்க? என்ன நானே சொல்லணுமாக்கும்? சொல்றேன்…” என்று அலுத்துக் கொண்டவள்,

“வேற என்ன? பணக்காரன் பணத்தை வச்சு விளையாடிட்டான். கோர்ட்டும் அவனுக்கு ஜாமீன் கொடுத்துருச்சு. அவனும் ஹாயா வீட்டுக்குப் போய்ட்டான்…” என்றாள் எரிச்சலாக.

“அதுவும் சும்மா இல்லை. நீ போட்டது பொய் கேஸ்னு உன் மேல் குற்றம் சுமத்திட்டு ஜாமீன் வாங்கிட்டுப் போயிருக்கான்…” என்று அவளின் பேச்சைக் கடுப்பாக முடித்து வைத்தான் ஜெகவீரன்.

“பொய்னு தானே சொல்லியிருக்கான். இன்னும் நிரூபிக்கலையே? நிரூபிச்சுக் காட்டுறேன்…” என்று சூளுரைத்தாள் ஜனார்த்தனி.

‘உன்னையெல்லாம் திருத்த முடியாது…’ என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்தவன், பிரகாஷின் வீட்டின் முகவரியைச் சொல்லிவிட்டுக் காரில் ஏறிச் சென்றான்.

சற்று நேரத்தில் ஒரு சிக்னல் வர, ஜெகன் இருந்த காவல் வாகனத்தை முந்திக் கொண்டு தன் வண்டியில் வந்து நின்றாள் ஜனா.

அவளைக் கவனித்து அவளையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகன்.

சிவப்பு விளக்கு அணைந்து பச்சை விழ, தன் வண்டியைப் பறக்க விட்டாள். அதே நேரம் காவல் வாகனத்தில் ஜெகன் வந்து கொண்டிருக்க, அவர்கள் இருவரின் வாகனத்திற்கு இடையேயும் ஒரு கார் இடைப்புகுந்தது.

அந்தக் கார் இடைப்புகுந்ததால் ஜனாவைப் பார்க்க முடியாமல் போன எரிச்சலில் ஜெகன் இருந்த போதே, அந்தக் கார் அதிவேகத்தில் அங்கிருந்து கிளம்பிய அதே நேரத்தில் “அம்மா…” என்ற அலறலுடன் சாலையில் விழுந்து கிடந்தாள் ஜனார்த்தனி.