பிழையில்லா கவிதை நீ – 15

அத்தியாயம் – 15

“நீ செய்தது சரியா ஜனா? உன்கிட்ட எத்தனை முறை வேண்டாம்னு சொன்னேன். அதைக் காதில் வாங்காமல் ஏன் இப்படிச் செய்தாய் ஜனா?” என்று எரிச்சலுடன் கேள்வி கேட்ட ஜெகவீரனை அமைதியாகப் பார்த்தாள் ஜனார்த்தனி.

“பதில் சொல்லாமல் இப்படிப் பார்த்தால் என்ன அர்த்தம்?”

“நான் செய்ததில் தவறு இல்லைனு அர்த்தம்!” என்று ஜனார்த்தனியிடம் இருந்து வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழுந்தன.

“அப்போ நீ செய்தது தப்புன்னு உனக்குக் கொஞ்சம் கூடத் தோணலையா?” என்று ஜெகன் கேட்க,

“நான் என்ன தப்புச் செய்தேன்?”

“அப்போ பொய் கம்ளைண்ட் கொடுத்தது உனக்குத் தப்பா தெரியலையா?”

“நீங்க ஒரு போலீஸ்காரர் தானே?” என்று சம்பந்தம் இல்லாமல் கேட்டவளைக் கேள்வியுடன் பார்த்தான் ஜெகவீரன்.

“நான் என்ன கேட்டா, நீ திருப்பி என்ன கேட்குற ஜனா?”

“உங்க ஆதாயத்திற்குப் போலீஸ்காரங்க நீங்க எல்லாம் பொய்யா எதுவும் சித்தரிக்க மாட்டீங்களா?”

“எங்க ஆதாயத்திற்குன்னு தனிப்பட்ட முறையில் நான் எதுவும் செய்தது இல்லை ஜனா. ஆனா சில குற்றவாளிகளுக்கு நேர்மையான வழியில் தண்டனை வாங்கித் தர முடியாத போது நாங்க வேற வழியை யூஸ் பண்ணுவோம். ஆனா அது பொதுமக்களுக்கு நலன் கிடைப்பதாக இருக்குமே தவிர, அதனால் எந்தப் போலீஸுக்கும் தனியா எதுவும் ஆதாயம் கிடைக்காது…”

“சோ… நீங்க வேற வழியை நாடினால் அது சரி! அதே போல் நான் செய்தால் தவறா?” என்று கூர்மையாகக் கேட்டாள்.

“இப்படிக் குறுக்குக் கேள்விக் கேட்பதில் ஒரு அர்த்தமும் இல்லை ஜனா. இங்கே வேற வழியை நாடுகிறேன்னு நீ உன் பெயருக்கே களங்கம் விளைவிக்கப் பார்க்கிறாய். அதைத் தான் நான் தப்புன்னு சொல்றேன்…” என்று அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கத்துடன் எடுத்துச் சொன்னான்.

“என் பெயருக்கெல்லாம் ஒரு களங்கமும் இல்லை ஜெகா…”

“களங்கம் இல்லையா? என்ன பேசுற ஜனா? நீ எழுதிக் கொடுத்த கம்ளைண்ட் எப்படிப்பட்டதுன்னு தெரியுமா? இந்தக் கேஸ் கோர்ட்டுக்குப் போனால் எந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்பாங்க தெரியுமா?” சாதாரணமாக நினைத்துப் பேசுகிறாளே என்ற எரிச்சலுடன் கேட்டான்.

“நல்லாவே தெரியும்!” என்று அழுத்திச் சொன்னாள் ஜனா.

“நல்லாவே தெரியுமா? நிஜமாவா?” என்று அவளை யோசனையுடன் பார்த்துக் கேட்டான்.

“நிஜமாகத்தான்!” என்றவளின் குரலில் அழுத்தம் கூடியிருந்தது.

தன் கண்களை நேருக்கு நேராகக் கூர்ந்து பார்த்து நிஜம் என்றவளை விழிகளை விரித்துப் பார்த்தான் ஜெகவீரன்.

“என்ன சொல்ற ஜனா, கோர்ட்டில் எந்த மாதிரியான கேள்விகள் உன்னிடம் கேட்கப்படும்னு தெரிந்தும் அப்படி எழுதிக் கொடுத்தியா?”

“ஆமாம்…”

“ஜனா… ஜனா… என்ன ஜனா இது? அவன் எங்கெங்கே உன் மேல கைவச்சான்னு எழுதிக் கொடுத்தியோ, அது எல்லாம் உண்மையாகவே எப்படி நடந்ததுன்னு உன்னை டீடைலா எக்ஸ்ப்ளைன் பண்ண சொல்லுவாங்க ஜனா…” என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னான்.

“அதான் தெரியும்னு சொன்னேனே ஜெகா…” என்று சாதாரணமாகச் சொன்னாள் ஜனார்த்தனி.

‘தெரியும்!’ என்று சர்வசாதாரணமாகச் சொன்னவளை மலைத்துப் போய்ப் பார்த்தவன், இரண்டு கைகளாலும் தன் தலையை அழுத்தமாகக் கோதிக் கொண்டான்.

சுனிலை வெளியே விட்டுவிடக் கூடாது என்ற முனைப்பில், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக ஜனார்த்தனி புகார் எழுதிக் கொடுத்ததே பிடிக்காத ஜெகனிற்கு, அவள் புகாரில் சுனில் தவறான எண்ணத்தில் தொட்ட போது தன் உடம்பில் எங்கெங்கே காயம் பட்டது என்று வேறு விரிவாக எழுதிக் கொடுத்திருந்தாள்.

தொடை, முதுகு, கழுத்துக்கிற்குக் கீழ் என்று அவள் எழுதியிருந்ததைப் பார்த்து, ஜெகனிற்கு ஏற்கனவே அவளின் மீது கோபம் வந்திருந்தது.

அதோடு மட்டும் இல்லாமல் அந்தக் காயத்திற்கான தடத்தைப் பற்றிய மருத்துவ அறிக்கைக்கான பரிசோதனைக்குத் தயார் என்றவளைத் தடுத்து நிறுத்தி தான் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

நீதிமன்றத்திற்கு வழக்குப் போனால் எந்த மாதிரியான கேள்விகள் அவளிடம் கேட்கப்படும் என்று தெரிந்தால் அந்த வழக்கில் இருந்து பின்வாங்கி விடுவாள் என்று அவன் நினைத்திருக்க, எல்லாம் தெரிந்தே தான் இந்த விபரீதத்தில் இறங்கியிருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனுக்கு அடுத்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இருவரும் காவல் நிலையத்திற்கு வெளியே இருந்த சின்ன மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த மரத்தடியில் காவல் நிலையத்திற்கு வெளியே போட்டப்பட்டிருந்த சின்னப் பல்பின் வெளிச்சம் மட்டும் மெல்லியதாக விழுந்து கொண்டிருந்தது.

ஜனார்த்தனி கொடுத்திருந்த கம்ளைண்ட்டிற்கான நடவடிக்கையாக, சுனில் இப்போது லாக்கப்பில் இருந்தான்.

அவனின் வழக்கறிஞர் குணசேகர், காலையில் கோர்ட் சென்று எப்படியாவது ஜாமீன் வாங்கித் தந்து விடுவதாகச் சுனிலிடம் நம்பிக்கையாகச் சொல்லி விட்டுச் சென்றிருந்தார்.

ஜனா எழுதிக் கொடுத்த கம்ளைண்ட்டை ஒரு காவல் அதிகாரியாக ஏற்றுக் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட முறையில் அதை ஏற்க முடியாமல், அவளிடம் பேசி அந்தக் கம்ளைண்டை திருப்பி வாங்க செய்து விடும் எண்ணத்தில் அவளை வெளியே அழைத்து வந்து பேசிக் கொண்டிருந்தான்.

அவன் எப்படிப் பேசியும் ஜனார்த்தனி சிறிதும் பின்வாங்கும் எண்ணத்தில் இல்லை என்பதைத் தன் உறுதியான பேச்சால் காட்டிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் கூட ஒரு லேடி கான்ஸ்டபிள் வந்து நீ சொன்ன காயத்தடம் எல்லாம் சரி தானான்னு செக் பண்ண உன்னை ஹாஸ்பிட்டல் அழைத்துப் போவாங்க. அப்போ நீ சொன்னது பொய் என்று ஆகிருமே ஜனா?” என்று கேட்டான் ஜெகவீரன்.

“பொய் ஆகாது ஜெகா…”

“பொய் ஆகாதா எப்படி? அவன் தான் உன்கிட்ட தப்பா நடந்துக்கலையே?”

“அவன் நடந்துக்கலை தான். ஆனா காயம் இருப்பது உண்மை ஜெகா…”

“என்ன ஜனா சொல்ற? காயம் எப்படி வந்தது?” என்று குழப்பத்துடன் கேட்டான்.

“இன்னைக்கு என் பாஸ் கூப்பிட்டார்னு போயிருந்தேன்ல? அவர் ஒரு கேஸ் என்கிட்ட கொடுத்தார். அந்தக் கேஸ் விஷயமா ஒருத்தரை தேடிப் போன போது அவருக்கும் எனக்கும் சின்னச் சண்டை. அந்த ஆள் முரட்டுத்தனமாகத் தாக்க ஆரம்பிச்சுட்டான். எனக்குத் தெரிந்த கராத்தேயை வச்சு ஒரு வழியா சமாளிச்சு அந்த ஆளை என் பாஸ்கிட்ட ஒப்படைச்சேன். அந்தச் சண்டையில் ஏற்பட்ட காயத்தைத் தான் நான் சுனில் கேஸில் எழுதினேன். இப்போ கோர்ட்டை பொறுத்தவரை அது சுனில் உண்டாக்கிய காயம் தான்…” என்று சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்டு ஜெகனின் வாய்த் தன்னால் “அடிப்பாவி!” என்றது.

“நோ… நோ… நான் அப்பாவி!” என்று பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

“யார்? நீ அப்பாவி? போலீஸையே தூக்கிச் சாப்பிடும் கேடியா இல்ல இருக்க…”

“சுனில் மாதிரி ஆளுங்களுக்காகக் கேடியா மாறுவதில் தப்பே இல்லை ஜெகா. ஒரு பொண்ணை மெண்டல் டார்ச்சர் பண்ணி தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குத் தூண்டி விட்டுருக்கான். ஆனா அதுக்குக் கம்ளைண்ட் கொடுத்தா அதை ஈஸியா வாபஸ் வாங்க வச்சு வெளியே போயிருவான்.

திரும்ப யஷ்வினிக்கோ, இல்ல வேற பெண்ணுக்கோ இதே போலத் தான் டார்ச்சர் கொடுப்பான். அந்த அப்பாவி பொண்ணுங்களும் ஓடி ஒளியத்தான் நினைப்பாங்களே தவிர, துணிஞ்சு எதுவும் செய்ய மாட்டாங்க. அதை நான் செய்யணும்னு நினைக்கிறேன்…” என்றாள்.

“நீ சொல்றதும், உன் எண்ணமும் சரியா இருக்கலாம் ஜனா. ஆனா இந்தக் கம்ளைண்டால் அவனுக்கு என்ன தண்டனை கிடைச்சுரும்னு நீ நினைக்கிற? பலாத்காரம் பண்றவனுங்களை நாங்க போலீஸ் படாத பட்டுப் பிடிச்சுக் கொடுத்தா, அவனுங்க ஏதாவது பித்தலாட்டம் செய்து ஈஸியா வெளியே வந்துடுறானுங்க.

அப்படி இருக்கும் போது இந்தக் கேஸ் நிக்கும்னு நீ நினைக்கிறாயா ஜனா? அதுவும் சுனில் பணப்பலம் படைத்தவன்! இவனைத் தப்பிக்க வைக்க ஆயிரம் ஓட்டைக் கண்டுபிடிப்பாங்க…” என்று ஜெகவீரன் என்னவெல்லாம் நடக்கும் என்பதை எடுத்துச் சொன்னான்.

“எனக்கும் அது தெரியும். ஆனா குறைந்த பட்சமா சின்னத் தண்டனையாவது அவனுக்குக் கிடைக்க வைக்கணும்னு நினைக்கிறேன் ஜெகா. இவனை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் என் கையாலேயே பெரிய தண்டனையா கொடுக்கணும்னு கூட எனக்கு ஆசை இருக்கு.

ஆனா அப்படிச் செய்றது சாத்தியம் ஆகுமா என்ன? ஆனா இது போல் சின்னத் தண்டனையாவது கொடுக்க முடியும்னு இருக்கும் போது அதை எதுக்குச் செய்யாம இருக்கணும்? கண்டிப்பா இந்தச் சான்சை மிஸ் பண்ண நான் தயாரா இல்லை ஜெகா…” என்றாள் உறுதியாக.

“ஆனா இது சரியான முடிவா எனக்குத் தோணலை ஜனா…”

“உங்களுக்கு வேணும்னா அப்படித் தெரியலாம். ஆனால் நான் செய்தது தான் என்னைப் பொறுத்தவரை சரி…” என்றாள்.

“இதோ சொல்கிறாயே ஜனா உன்னைப் பொறுத்தவரைன்னு. ஆனா அது உன்னைச் சார்ந்தவர்களுக்கும் சரியா இருக்கும்னு நினைக்கிறாயா ஜனா?”

“என்னைச் சார்ந்தவர்களா? அப்பா, அம்மாவை சொல்றீங்களா?”

“ஆமா, அவங்க இந்த விஷயம் கேள்விப்பட்டா வருத்தப்பட மாட்டாங்களா?”

“கண்டிப்பா வருத்தப்படுவாங்க தான். ஆனா நான் சொல்லிப் புரிய வச்சுருவேன்…”

“ஆனா நீ செய்தது தப்புன்னு எனக்குத் தோணுதே ஜனா? எனக்கு என்ன சொல்லிப் புரிய வைப்பாய்?” என்று அவளைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே கேட்டான் ஜெகவீரன்.

“உங்களுக்குத் தப்பா தோணினா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது ஜெகா. அதோட நீங்க ஒன்னும் என்னைச் சார்ந்தவர் இல்லையே? அதனால் உங்களுக்குப் புரிய வைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை…” என்று சொல்லி விட்டு தன் வழக்கம் போலத் தோளைக் குலுக்கினாள்.

“அப்படியா? நிஜமாவே நான் உன்னைச் சார்ந்தவன் இல்லையா ஜனா?” என்று மீண்டும் கேட்டவனைப் பார்த்து,

“கண்டிப்பாக இல்லை…” என்று உறுதியாகச் சொன்னாள்.

“ஆனா நான் அப்படி நினைக்கலை ஜனா…” என்று சொல்லி ஒரு நொடி பேச்சை நிறுத்தி அவளைப் பார்த்தவன்,

“ஓகே, இனி சுத்தி வளைத்து, மறைமுகமாகப் பேச எனக்கு விருப்பம் இல்லை ஜனா…” என்றவன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டு,

“எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு ஜனா. ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. யெஸ், ஐ லவ் யூ ஜனா…” என்று ஆழ்ந்த குரலில் தன் காதலைச் சொன்னான் ஜெகவீரன்.

“வாட்!” என்று அதிர்வைக் காட்டிய ஜனார்த்தனி, பின் ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல், “ஹா…ஹா…” என்று சப்தமாகச் சிரிக்க ஆரம்பித்தாள்.

அவளின் சிரிப்புச் சப்தம் கேட்டு, காவல் நிலைய வாயில் அருகில் நின்றிருந்த காவலாளி திரும்பிப் பார்க்க, “ஜனா, என்ன இது? எதுக்குச் சிரிக்கிற?” என்று கேட்டான் ஜெகவீரன்.

“ஹா..ஹா… பின்ன சிரிக்காம என்ன செய்ய ஜெகா? ஹா…ஹா…” என்றவள் மீண்டும் சிரித்தாள்.

“சிரிக்கும் படியான விஷயத்தை நான் சொல்லலை ஜனா…” என்றவன், அவளின் சிரிப்புப் பிடிக்காமல் முகத்தைச் சுளித்தான்.

“நீங்க ஐ லவ் யூ சொன்னதைக் கேட்டு எனக்குச் சிரிப்புத் தான் வருது… ஹா…ஹா…” என்று கூறி விட்டுச் சிரிப்பைத் தொடர்ந்தாள்.

அவளின் தொடர்ச் சிரிப்பு ஜெகனை எரிச்சல் மூட்டியது.

தான் தன் மனதை சொல்ல, அவளோ அதை ஏதோ நகைச்சுவை பேச்சைக் கேட்டது போல் சிரிக்கிறாளே என்ற கோபம் வர, “ஸ்டாப் ஜனா! ஜஸ்ட் ஸ்டாப்பிட்!” என்று அழுத்தமாகச் சொல்லி, அவளின் சிரிப்பை நிற்க வைத்தான்.

“நான் ஜோக் சொல்லலை ஜனா…”

“ஆனா எனக்கு ஜோக்காத்தான் தெரியுது ஜெகா…” என்றவளை முறைத்தான்.

“ஹா…ஹா… முறைக்காதீங்க ஜெகா. இரவு நேரம், உள்ளே குற்றவாளிகள், வெளியே கான்ஸ்டபிள்ஸ் எல்லாரும் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில், போலீஸ் யூனிஃபார்மில் காதல் சொல்லும் காவல்காரன். ஹ்ம்ம்ம்…” என்று ராகமாக இழுத்தவளைக் கூர்மையாக அளந்தான்.

“உனக்குச் சிரிப்பு வந்தது, இந்த இடத்தில், இந்த ட்ரெஸில் நான் காதல் சொன்னதாலா? இல்லை வேற காரணம் இருக்கா?” என்று கேட்டவனின் பார்வை அவளின் கண்களைக் கூர்மையுடன் துளைத்தது.

“போலீஸ்காரன்னு ஃப்ரூப் பண்றீங்க. குட்! சிரிச்சதுக்கான காரணம் இது மட்டும் இல்லை…”

“வேற என்ன காரணம்?”

“காதல்! ஹ்ம்ம், காதல்! இந்தக் காதல் எல்லாம் சரி வராது ஜெகா…” என்றாள் நிதானமாக.

“ஏன்? ஏன் சரி வராது?”

“இந்தக் காதலில் எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை ஜெகா. அதோட சரியாகவும் வராது…”

“அது தான் ஏன்னு கேட்டேன் ஜனா. காதல் உனக்குச் சரி வராதா? இல்லை உன்னைக் காதலிக்க எனக்குத் தகுதி இல்லையா?”

“தகுதியா? காதலிக்கிற தகுதி எல்லாம் உங்களுக்கு ரொம்பவே இருக்கு…”

“அப்புறம் என்ன பிரச்சனை?”

“ஆனா நீங்க என்னைக் காதலிப்பது சரியாக வராது ஜெகா…”

“ஜனா, சொன்னதையே சொல்லாமல் என்ன சரியாக வராதுன்னு சொல்!” என்று பொறுமை இல்லாமல் சலிப்பாகக் கேட்டான் ஜெகவீரன்.

“ஏன் சரியாக வராது? ஹ்ம்ம்… இதுக்கான பதில் நீங்க தான் ஜெகா!”

“நானா? என்ன சொல்ற நீ?” புரியாமல் கேட்டான்.

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சுனில் விஷயத்தில் என்ன சொன்னீங்க ஜெகா?” என்று கேட்டாள்.

“என்ன சொன்னேன்? இந்தக் கேஸ் நீ போட்டது எனக்குப் பிடிக்கலைனு சொன்னேன். அதுவா காரணம்?”

“யெஸ்… அதே தான்!” என்றாள் நிறுத்தி நிதானமாக.

“உன் பேருக்கு நீயே களங்கம் உண்டாகிக் கொள்வதை நான் ரசித்து ‘சூப்பர்! நல்ல ஐடியா ஜனா’ என்று பாராட்டணும்னு நினைக்கிறாயா?”

“கண்டிப்பா அப்படி நினைக்கலை…”

“பின்ன? வேற என்ன?”

“யாரும் என்னைப் பாராட்டணும், பெருமை படணும்னு நான் எதுவும் செய்வது இல்லை ஜெகா. ஒரு அயோக்கிய எண்ணம் கொண்டவனுக்குச் சின்னத் தண்டனை வாங்கிக் கொடுக்கும் என்னோட முயற்சி இது! இதைச் செய்ய யார்கிட்ட இருந்தும் தடங்கல் வருவதை நான் விரும்பவில்லை.

காதல், குடும்ப வாழ்க்கை எல்லாம் எனக்கு அந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கும். இப்போ நீங்க நான் செய்தது பிடிக்கலைன்னு சொன்ன மாதிரி! அந்த மாதிரி எதிர்ப்புகளை நான் விரும்பவில்லை. அதனால் இந்தக் காதல் எல்லாம் எனக்குச் சரியாக வராது…” என்று விளக்கமாகச் சொன்னாள் ஜனார்த்தனி.

“உன் பேருக்குக் களங்கம் வரக்கூடாது என்ற அக்கறையில் தானே ஜனா சொன்னேன். அதைத் தவறுன்னு நீ நினைக்கிறாயா?”

“கண்டிப்பா தவறு தான்! முதலில் என் மேல் உள்ள களங்கத்தைப் பற்றி நான் தான் கவலைப்படணும். நீங்க இல்லை…” என்றாள் அழுத்தமாக.

“நான் உன்னை லவ் பண்றேன் ஜனா. அப்படி இருக்கும் போது உனக்காக நான் கவலைப்படக் கூடாதா?” என்று கேட்டான் ஜெகவீரன்.

“நானும் என் குணமும் எப்படியோ அப்படியே ஏற்றுக் கொள்வது தானே ஜெகா உண்மையான காதலுக்குக் கொடுக்கும் அங்கீகாரம்! ஆனா நீங்க என் செயலைப் பிடிக்காமல் அதைக் குறையாகச் சொல்லி, என்னை என் குணத்தில் இருந்து பின் வாங்க வைப்பதற்குப் பேர் காதல் தானா?”

“அப்போ நான் உன் மேலே வச்சுருக்கிறதுக்குப் பேர் காதலே இல்லைனு சொல்றீயா?”

“உங்க காதல் உண்மையானதா இல்லையா என்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் நான் வரலை ஜெகா…”

“என்ன ஜனா குழப்புற? உன் மேல் அக்கறை பட்டு ஒரு விஷயத்தைத் தடுத்தால் அப்போ நான் உன் உண்மையான குணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அது உண்மையான காதலாக இருக்க முடியாதுனு சொல்லிட்டு, உங்க காதல் உண்மையா இல்லையானு நான் ஆராய்ச்சி பண்ணலைன்னு சொல்ற?

உண்மையிலேயே நீ தெளிவாகத் தான் பேசுகிறாயா ஜனா? உன் பேச்சே ரொம்பக் குழப்பமா இருக்கே?” என்று கேட்டான் ஜெகவீரன்.

ஜனார்த்தனி ஏனோ வேண்டும் என்றே ஏதோ பேசி தன் காதலை நிராகரிப்பதாகவே ஜெகவீரனிற்குத் தோன்றிற்று.

அவளின் பேச்சில் ஒரு தெளிவு இல்லாததைப் போல் உணர்ந்தான்.

வெளியே அழுத்தமாக, தைரியமாகப் பேசினாலும் உள்ளுக்குள் இருக்கும் பதட்டத்துடன் அவள் பேசுவதாகவே அவனுக்குப் பட்டது.

அதனால் ஏன் குழப்புகிறாய் என்று கேட்டு அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.

அவளை ஆராய்ந்து பார்த்ததில் அவளின் கண்கள் நிலையில்லாமல் அதிகம் வெளியே தெரியாத வண்ணம் அலைபாய்ந்து கொண்டிருந்ததைக் கண்டு கொண்டான்.

அந்த அலைபாய்தலையும் அவனுக்குத் தெரியக்கூடாது என்று பெரும் பாடுபட்டு அவள் அடக்க முயல்வதைக் கண்டவன் புருவங்கள் கேள்வியுடன் உயர்ந்தன.

“ஜனா…” என்று தீர்க்கமாக அழைத்து அவளின் பார்வையைச் சந்தித்தவன், “என் காதலை நிராகரிப்பதற்கான உண்மையான காரணத்தைச் சொல் ஜனா!” என்று கேட்டான்.

அவனின் ஊடுருவிய பார்வையை வெளியே தெரியாத தடுமாற்றத்துடன் எதிர் கொண்டவள் “சரிவராதுன்னு சொன்னா விட்டு விடுங்களேன் ஜெகா…” என்றாள்.

“இல்லை ஜனா, விட முடியாது. நீ ஏதோ முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதாகவே எனக்குத் தோணுது. அதனால் மனசைத் திறந்து பேசு! என்ன உண்மையான காரணம்?”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை…” என்று வேகமாக மறுத்தாள்.

“இல்லை, நான் நம்ப மாட்டேன்…” என்று பிடிவாதமாக நின்றான் ஜெகவீரன்.

அவனின் பிடிவாதத்தில் பொறுமை இழந்தவள் “இப்போ நீங்க சுனிலா மாறிட்டீங்க ஜெகா…” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

“என்ன? சுனிலாகவா? நானா? என்ன சொல்ற நீ?” குழப்பத்துடன் கேட்டான்.

“சுனில் செய்த வேலையை இப்போ நீங்க செய்துட்டு இருக்கீங்கன்னு சொல்றேன். அதாவது அவன் யஷ்வினிக்குக் கொடுத்தது போல் நீங்க உங்களைக் காதலிக்கச் சொல்லி எனக்கு மெண்டல் டார்ச்சர் கொடுக்குறீங்க…” என்று கடுமையாகக் குற்றம் சாட்டினாள்.

அவளின் அந்த விதமான குற்றச்சாட்டில் “ஜனார்த்தனி…” என்று அதிர்ந்து அழைத்தான் ஜெகவீரன்.