பிழையில்லா கவிதை நீ – 10

அத்தியாயம் – 10

“உங்க பொண்ணை நல்ல தைரியமான பொண்ணா வளர்த்திருக்கீங்க ஆன்ட்டி. இவ்வளவு துணிச்சலான பொண்ணை வளர்த்ததுக்கு ஃபுல் கிரிடிட் உங்களுக்குத்தான் கொடுக்கணும்…” என்று ஜனார்த்தனியின் அன்னை சுகுமாரியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெகவீரன்.

காலை எட்டு மணி.

ஜனாவின் முந்தைய நாள் கண்டிஷனுக்குக் கட்டுப்பட்டவன் போல் காலையிலேயே அவளை அழைக்க வந்திருந்தான்.

இரவு நேரம் சென்று அவளை வீட்டில் இறக்கி விட வந்தவன், வீட்டிற்குள் வராமல், அவள் வண்டியிலிருந்து இறங்கியதும் அப்படியே சென்றிருந்தான்.

காலையில் அப்படி வாசலோடு நிறுத்தாமல் வீட்டிற்குள் அழைத்து, அன்னை, தந்தையிடம் அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள் ஜனார்த்தனி.

“ஹலோவ்… என்னை நானே தைரியமாக ஆக்கிக் கொண்டது நானு. அதென்ன கிரிடிட் ஃபுல்லா என் அம்மாவுக்குத் தூக்கிக் கொடுக்குறீங்க?” என்று ஆட்சேபனைத் தெரிவித்தாள்.

அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவன் சுகுமாரியின் புறம் திரும்பி, “ஆனா ஆன்ட்டி, உங்க பொண்ணுக்கு நீங்க தற்பெருமையைக் கொஞ்சம் கம்மியா ஊட்டி வளர்த்திருக்கலாம். ஆ… ஊ…ன்னா நான், நானேனு ரொம்பப் பெருமை பேசும் படியா வளர்த்து விட்டுட்டீங்க…” என்றான் குறைப்படுபவன் போல்.

அவனின் பேச்சைக் கேட்டு இதழ் பிரியாமல் மென்மையாகச் சிரித்த சுகுமாரி மகளைப் பெருமையுடனே பார்த்தார்.

ஆனால் மகளோ உஷ்ணத்தைக் கக்கிய கண்களால் ஜெகனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“போச்சுடா! அம்மாவே இப்படிப் பெருமையா பார்த்தால், மகள் பெருமை பேசாமல் என்ன செய்வாள்?” என்று தன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஜனாவிற்கு மட்டும் கேட்கும் வண்ணம் முணுமுணுத்தான்.

அதில் இன்னும் அவளின் உஷ்ணம் உச்சத்தில் ஏற, “காலங்காத்தாலே என்னைக் கலாய்க்கத்தான் கிளம்பி வந்தீங்களா இன்ஸ்பெக்டர்ர்ர்?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கேட்டாள்.

“ச்சே, ச்சே… நான் இவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்ததுக்கு ரீசனே வேற…” உதட்டை தாண்டி வரத் துடித்த சிரிப்பை அடக்கிய படி சொன்னான்.

சீரியஸாகச் சொல்வது போல் இருந்தாலும், அவனின் அடக்கப்பட்ட சிரிப்பு அவளைக் கேலிச் செய்யப் போகின்றான் என்பதை வலியுறுத்த, ‘வேண்டாம்!’ என்பது போல் சுட்டு விரலை ஆட்டி எச்சரிக்கை செய்தாள்.

“என்னடாமா இது?” என்று கண்டிக்கும் குரல் கேட்டுத் தன் விரலைக் கீழே இறக்கினாள் ஜனார்த்தனி.

அவ்வளவு நேரமும் அவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு, காலை உணவை உண்டு கொண்டிருந்த அவளின் தந்தை பகலவன் தான், அவளின் விரல் எச்சரிக்கையைக் கண்டித்தார்.

“சும்மா விளையாட்டுக்குத் தான்பா…” என்றவள் தானும் உணவை உண்ணும் வேலையைத் தொடர்ந்தாள்.

“தான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்னு விறைப்பா பேசாம, அவர் சாதாரணமா நல்லா பேசினால், அதை ரொம்ப அட்வான்டேஜா எடுத்துக்கக் கூடாதுமா…” என்று இன்னும் தன் கண்டிப்புக் குரலை மாற்றாமல் சொன்னார் பகலவன்.

“அச்சோ! அங்கிள் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? ஜனா என்கிட்ட இப்படி ஃப்ரண்ட்லியா இருக்குறது எனக்குப் பிடிச்சிருக்கு. இது எங்களுக்குள்ள சின்ன விளையாட்டு. டோண்ட் பி சீரியஸ்…” என்ற ஜெகவீரன் அவர்களுடன் தான் காலை உணவை உண்டு கொண்டிருந்தான்.

“உங்க வீட்டில் நீங்க ஒரே பையனா? இல்லை கூடப் பிறந்தவங்க இருக்காங்களா தம்பி?” என்று கேட்டுப் பேச்சின் திசையை மாற்றினார் சுகுமாரி.

“நான் ஒரே பையன் தான் ஆன்ட்டி. அப்பா கதிரவன் ப்ரொஃபஸரா இருக்கார். அம்மா திலகவதி ஹவுஸ் வொய்ப்…” என்று தன் குடும்பத்தைப் பற்றிச் சொன்னான்.

“அம்மா, அப்பாகிட்ட ஜனாவைப் பற்றிச் சொல்லியிருக்கேன். அவளைப் பார்க்கணும்னு அவங்களுக்கும் ஆசை ஆன்ட்டி. நீங்க எல்லோரும் ஒரு நாள் எங்க வீட்டுக்குக் குடும்பத்தோட வரணும்…” என்று அழைப்பும் விடுத்தான் ஜெகவீரன்.

“வர்றோம் தம்பி…” என்று மென்மையான குரலில் சொல்லிய சுகுமாரியின் இதழ்கள் புன்னகை புரிந்தாலும், அந்தப் புன்னகை அவரின் கண்கள் வரை எட்டவில்லை என்பதைக் கண்ணுற்றான் ஜெகன்.

ஆரம்பத்தில் இருந்தே அவர் அப்படி இருப்பதைக் கவனித்திருந்தான்.

‘ஒருவேளை மகள் ஒரு ஆண்மகனை வீட்டிற்கு அழைத்தது பிடிக்காமல் அப்படி இருக்கிறாரோ?’ என்று கூட நினைத்தான்.

ஆனால் காரணம் அதுவல்ல என்று சில நொடிகளிலேயே கண்டு கொண்டிருந்தான்.

தன் வேலை விஷயமாக அனுதினமும் பல தரப்பட்ட மனிதர்களைச் சந்திப்பவன் அவன். அப்படி இருக்கும் போது யார், எப்படி, எந்த மாதிரி தன்னிடம் பேசிப் பழகுகிறார்கள் என்று சுலபமாகக் கணக்கிட கூடியவன். அதனால் அவரின் அந்தக் கண்களில் தோன்றா மகிழ்ச்சி அவருக்கு இருக்கும் ஏதோ மனக்குறையை, வருத்தத்தைச் சுட்டிக் காட்டியது.

‘என்ன அது?’ என்று அவனின் மனதின் ஓரம் கேள்வி முணுமுணுக்க ஆரம்பித்தது.

ஆனால் அவனின் முணுமுணுப்பை ஓரம் கட்ட வைக்கும் வகையில், “என்னைப் பற்றி உங்க அப்பா, அம்மாகிட்ட என்ன சொல்லி வச்சுருக்கீங்க ஜெகா?” என்று கேட்டு அவனின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள் ஜனார்த்தனி.

“நான் சொன்னதை உங்கிட்ட சொன்னா நீ அடிக்க வருவீயே ஜனா. சொல்லிட்டு அடி வாங்க சொல்றீயா என்ன? அதனால் சொல்ல முடியாது…” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

“அப்போ நான் அடிக்கிற அளவுக்கு என்னைப் பற்றித் தப்பா ஏதோ சொல்லி வச்சுருக்கீங்க?” சூடாகக் கேட்டாள்.

“அதை ஏன் தப்பான்னு நினைச்சுக்கிற ஜனா? நல்லதாகவும் சொல்லியிருக்கலாம்ல?” என்று பூடகமாகக் கேட்டவனைப் புரியாமல் பார்த்தவள், அவனின் கண்களில் தெரிந்த ஏதோ வேறுபாட்டைக் கவனித்தாள்.

கண்கள் பளபளக்க, ரகசிய சிரிப்பை உதட்டோரம் பதுக்கி, அவளின் பார்வையைச் சளைக்காமல் எதிர்கொண்டான் ஜெகவீரன்.

அவனின் கூர்மையான பார்வை அவளின் இதயத்தையே ஊடுருவிச் செல்வது போல் இருந்தாலும், சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் அவனின் பார்வையைத் தாங்கி, ஆராய்ச்சிப் பார்வையைப் பதிலாகத் தந்து கொண்டிருந்தாள் ஜனார்த்தனி.

அவளின் ஆராய்ச்சிப் பார்வையைக் கண்டு உள்ளுக்குள் சலித்துக் கொண்டவன், “நேரமாச்சு ஜனா, நான் சீக்கிரம் கிளம்பணும்…” என்று அவளின் கவனத்தைக் கலைத்தான்.

“யா… கிளம்பலாம்…” என்றவள் தானும் அவனுடன் கை கழுவ எழுந்தாள்.

ஜெகவீரன் தன் காவல் உடையில் இருக்க, ஜனார்த்தனி ஜீன்ஸ், டீசர்டில் இருந்தாள்.

இருவரும் ஒன்றாக எழுந்து, நடந்து, அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே நடந்தது என அனைத்தையும் கவனித்த சுகுமாரியின் கண்கள் ஒரு வித ஆர்வத்துடன் விரிய, வேகமாகக் கணவனைத் திரும்பிக் குறிப்பாகப் பார்த்தார்.

பகலவனும் அப்போது மனைவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

மனைவி காட்டிய குறிப்பைப் புரிந்தவர் போல் தலையை அசைத்தாலும், சுகுமாரி அளவிற்கு அவர் ஆர்வத்தைக் காட்டவில்லை. அதைக் கண்டு மீண்டும் சுகுமாரியின் கண்கள் சோபையைத் தத்தெடுத்துக் கொண்டது.

“நானும் ஜெகா கூடக் கிளம்புறேன் அப்பா, அம்மா… பை…” என்றாள் ஜனா.

“போய்ட்டு வாமா…” என்றனர்.

“வர்றேன் ஆன்ட்டி, அங்கிள்…” என்று தானும் விடைபெற்றான் ஜெகன்.

இருவரும் ஜோடியாக வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டே, “ஏங்க…” என்று இழுத்தார் சுகுமாரி.

“கற்பனைக் கோட்டைக் கட்டாதே சுகு…” என்று அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் பகலவன்.

சுகுமாரியும் அதில் சோர்வுடன் அமைதியாகத் தலையை அசைத்து விட்டு உள்ளே சென்றார்.

“ஆமா, நீங்க சீக்கிரம் கிளம்பி வந்ததுக்கு ரீசனே வேறன்னு சொன்னீங்களே ஜெகன், என்ன அது?” காவல்நிலையம் நோக்கி வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது கேட்டாள் ஜனார்த்தனி.

“அதுவா…?” என்று இழுத்தவன், மேலும் ஒன்றும் சொல்லாமல் சிரிக்க, “ஹேய், என்னது? அப்பயும் சிரிச்சீங்க, இப்பயும் சிரிக்கிறீங்க? ஒழுங்கா சொல்லுங்க…” என்றாள்.

“அது ஒன்னுமில்லை ஜனா, வினயாவைக் கண்டுபிடிக்கிற வேலை என் பொறுப்பில் இருந்தாலும், நீயும் தானா தலையைக் கொடுத்து என்னோட பாதி வேலையை நீ குறைத்து விடுறீயா… அதான் இன்னைக்கும் இந்த வழிய வந்து மாட்டிக்கிட்ட ஆடுகிட்ட இருந்து இன்னும் சில வேலையை வாங்கலாம்னு உன்னைக் கூப்பிட கிளம்பி வந்ததாகச் சொன்னேன்…” என்றான் சிரிப்புடன்.

“யூ… யூ… நான் ஆடா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.

“ஆமாம், அழகான ஆடு…” என்றான் ரசனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டே!

“வர, வர உங்க பேச்சும், பார்வையும் சரியில்லையே… என்ன விஷயம்?” என்று அவனை ஆராய்ந்து கொண்டே கேட்டாள்.

“அப்படியா? நான் எப்பவும் போல் தான் இருக்கேன். உனக்குச் சரியில்லாமல் தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை…” என்று அலட்சியம் போல் சொன்னான்.

அந்தக் காரில் முன்னால் ட்ரைவர் மட்டும் காரை ஓட்டிக் கொண்டிருக்க, அவளுடன் பேசுவதற்கு வசதியாகப் பின்னால் அமர்ந்திருந்த ஜெகன் அவளிடம் மெதுவான குரலில் பேசிக் கொண்டு வந்தான்.

அடுத்தச் சாலை இரண்டு பிரிவாகப் வர, அதைக் கவனித்த ஜெகன் “ட்ரைவர், முதலில் ஹாஸ்பிட்டலுக்கு வண்டியை விடுங்க…” என்றான்.

“கஸ்தூரி ஆன்ட்டியைப் பார்க்கவா?” என்று கேட்டாள் ஜனார்த்தனி.

“ஆமா, இன்னைக்காவது அவங்ககிட்ட எதுவும் பேச முடியுதான்னு பார்ப்போம். மகளை யார் கூடவோ ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிட்டு இவங்க ஏன் இப்படிப் பித்துப் பிடிச்சுப் போனது போல் இருக்காங்கனு தெரியலை…” என்றான்.

“ஹ்ம்ம், அன்னைக்குப் பெருசா ஏதோ நடந்திருக்கு. என்னன்னு தான் புலப்பட மாட்டேங்குது. அந்த ஆம்புலன்ஸை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்துட்டீங்களா ஜெகன்?” என்று கேட்டாள்.

“ஏற்பாடு பண்ணிருக்கேன் ஜனா. ரிப்போர்ட் இனி தான் வரும். ஆனாலும் அதுவரை சும்மா இருக்க வேண்டாம்னு அந்த நம்பரை டிபார்ட்மெண்ட்ல சொல்லி எங்கயாவது செக் போஸ்ட்ல, ட்ராபிக் சிக்னலில் மாட்டுதான்னு பார்க்கச் சொல்லியிருக்கேன். அதோட இந்தச் சர்க்கிளில் உள்ள ஹாஸ்பிட்டலில் எல்லாம் வினயா வயசில் எதுவும் பொண்ணு அட்மிட் ஆகியிருக்கானு விசாரணை போயிட்டு இருக்கு. ஏற்கனவே இரண்டு கான்ஸ்டபிள்களை அனுப்பி இருக்கேன். மிசஸ் கஸ்தூரியைப் பார்த்துட்டு நானும் போய் விசாரிக்கணும்…” என்றான்.

அவர்கள் பேசி முடித்த சில நிமிடங்களில் மருத்துவமனை வந்து சேர்ந்தார்கள்.

அங்கே கஸ்தூரி இருந்த அறைக்கு வெளியே கான்ஸ்டபிள் இல்லாமல் இருக்க, அந்த அறைக்குள்ளும் பரத் மட்டுமே இருந்தான்.

“அவங்க எங்கே பரத்?” என்று ஜெகன் விசாரிக்க,

“ஒரு டெஸ்ட் எடுக்கணும்னு கூட்டிட்டுப் போயிருக்காங்களாம் சார்…” என்றான் பரத்.

“நீங்களும்‌ இப்பத்தான் வந்தீங்களா?”

“ஆமா சார், வந்து அஞ்சு நிமிஷம் ஆகுது. வினயா பத்தி உங்களுக்கு எதுவும் நியூஸ் தெரிஞ்சுதா சார்?”

“சில இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்குப் பரத். மேலும் விவரம் எல்லாம் சேதுராமனும் வரட்டும். இரண்டு பேருக்கும் சேர்த்தே சொல்கிறேன்…” என்றான் ஜெகன்.

பத்து நிமிடங்கள் கடந்த பிறகு கஸ்தூரி அறைக்கு அழைத்து வரப்பட்டார்.

பின்னால் சேதுராமன் வர, அவருக்குப் பின்னால் கான்ஸ்டபிள் வந்து ஜெகனிற்கு மரியாதை செலுத்திவிட்டு வாயிலில் நின்றார்.

கான்ஸ்டபிளின் மரியாதையை ஏற்றுக் கொண்டு உள்ளே சென்றவன், படுக்கையில் இருந்த கஸ்தூரியைப் பார்த்தான்.

கஸ்தூரியின் கண்கள் இறுக மூடி இருக்க, “தூங்குறாங்களா?” என்று சேதுராமனிடம் கேட்டான்.

“காலையிலிருந்தே பிரஷர் அதிகமாக இருந்தது சார். அதுக்கு ஊசி போட்டுருக்காங்க. லேசா மயக்கமா இருக்காள்…” என்று பதில் சொன்னார் சேதுராமன்.

அவரின் பதிலே அன்றும் கஸ்தூரியிடம் விசாரணை நடத்த முடியாது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியது.

அதனால் சிறிது தள்ளி அழைத்துச் சென்று சேதுராமனிடமும், பரத்திடமும் தங்களுக்குக் கிடைத்த தகவலைப் பகிர்ந்து கொண்டான்.

அவன் சொன்ன தகவலைக் கேட்டுப் பரத்தும், சேதுராமனும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தனர்.

“என்ன சொல்றீங்க சார்? கஸ்தூரி தான் வினயாவை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினாளா? ஆனா வினயாவுக்கு உடம்பு சரியில்லைனா இவள் ஏன் கூடப் போகலை? நல்ல இருந்த என் பொண்ணுக்கு எப்படித் திடீர்னு உடம்பு சரியில்லாம போயிருக்கும்?” என்று திகைப்பும், குழப்பமும் கலந்து கேள்விகள் கேட்டார் சேதுராமன்.

“இதே கேள்விகள் தான் என்கிட்டயும் இருக்கு மிஸ்டர் சேதுராமன். ஆனா அதுக்குப் பதில் தெரிஞ்ச உங்க மனைவி தான் பதில் சொல்ல கூடிய நிலையில் இல்லையே. சோ, வேற வழியில் தான் தேடணும்…” என்றான் ஜெகவீரன்.

“என்கிட்ட வீட்டை விட்டு வர்றேன்னு சொல்லிப் போன் போட்டப்ப வினு நல்லாத்தான் பேசினாள் சார். லேசா அழுதாளே தவிர, அவளுக்கு உடம்பு எல்லாம் நல்லாத்தானே இருந்தது. அதோட அன்னைக்கு வேலை விட்டு நானும் அவளும் ஒன்னாத்தான் வீட்டுக்குக் கிளம்பினோம். அப்பயும் உடம்பு ஒன்னும் சரியில்லாம இல்லையே…” என்றான் பரத்.

“நல்லா இருந்த வினயாவை ஆம்புலன்ஸில் கூட்டிட்டுப் போகும் அளவுக்கு என்ன நடந்ததுன்னு விசாரிப்போம் பரத். அதோட இன்னும் ஒன்னு ஆம்புலன்ஸில் கூடப் போன இன்னொரு நபர் யாரு? அதையும் தேடணும்…” என்றான் ஜெகவீரன்.

“சிசிடிவி பார்த்ததாகச் சொன்னீங்களே சார். அதில் அவங்க முகம் தெரியலையா?” என்று கேட்டான் பரத்.

“இல்லை பரத். அடையாளம் தெரியுற அளவுக்குச் சிசிடிவியில் காட்சிகள் தெரியலை. அதோட அன்றைய சிசிடிவி புட்டேஜ் எல்லாமே செக் பண்ணி பார்த்தாச்சு. வேறு தகவல் எதுவும் கிடைக்கலை.‌ ஓகே, கண்டுபிடிக்கலாம். நான் கிளம்புறேன். சேதுராமன், உங்க மனைவிக்கிட்ட மெல்ல மெல்ல பேசி விஷயத்தை வாங்க முடியுதான்னு பாருங்க…” என்றவன் அவர்களிடம் இருந்து விடைப்பெற்று வெளியே சென்றான்.

அவனின் வாகனத்தின் அருகே நின்று, காரின் மீது சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனார்த்தனி.

“என்னங்க மேடம், நாங்க பேசிட்டு இருக்கும் போதே வெளியே வந்துட்டீங்க?” என்று அவளிடம் கேலியாகக் கேட்டான்.

“தம் அடிக்க வந்தேனுங்க சார்…” அவனை அலட்சியமாக வெட்டும் பார்வை பார்த்துச் சொன்னாள்.

“என்னது?” வேண்டுமென்றே அதீத அதிர்ச்சியைக் காட்டினான் அவன்.

“தம்… தம் மரு தம்…” என்று ராகமாகப் பாடிக் கொண்டே தன் விரலிடுக்கில் இருந்த பாதி எரிந்து முடிந்திருந்த சிகரெட் துண்டை எடுத்து அவனின் முகத்திற்கு நேரே ஆட்டிக் காட்டினாள்.

“ஏய்! நிஜமாவே சிகரெட் பிடிச்சி…” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் சட்டென்று அவள் ஆட்டிய விரலைப் பிடித்து அந்தச் சிகரெட் துண்டைப் பார்த்தவன், “ஜனா இது எங்கே கிடைத்தது?” என்று பரபரப்பாகக் கேட்டான்.

“நம்ம விருந்தாளி வந்து போன இடத்தில் தான்…”

“அதான் எங்கே?”

“ஏன்? இடத்தைக் காட்டியதும் கப்புன்னு பிடிச்சு டப்புன்னு ஜெயிலில் போட்டுருவீங்களோ?”

“ஜனா, என்ன இது? இடத்தைக் காட்டாமல் என்னை நக்கல் அடிச்சுட்டு இருக்க? அப்போ என்னைக் கையாலாகாதவன்னு குத்திக் காட்டுறியா?” அவள் ஒரு மாதிரி கிண்டலாகச் சொன்ன தொனியில் கோபத்துடன் கேட்டான்.

“கூல் சாரே, கூல்! வாங்க காட்டுறேன்…” என்று நிதானமாக நடந்து மருத்துவமனையின் பின் பக்கம் அழைத்துச் சென்றாள்.

“உங்க அப்பா சொன்ன மாதிரி நான் உன்கிட்ட ஃப்ரண்ட்லியா பேசுறேன்னு நீ என்னை மட்டம் தட்டுவது போல் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிற ஜனா…” அவள் பின்னால் நடந்து கொண்டே எரிச்சலுடன் சொன்னான்.

“ஆனா என் அப்பாகிட்ட மட்டும் நான் அட்வான்டேஜ் எடுத்துக்கிறது பிடிச்சிருக்குனு சொன்னீங்களே?” ‘அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சா?’ என்ற பாவனையில் கேட்டாள்.

“என்னை ஃப்ரண்ட்லியா கேலிச் செய்து பேசலாம்னு தான் சொன்னேனே தவிர, என் வேலையைக் குறிப்பிட்டு மட்டமா பேசுன்னு நான் சொல்லலை…” கடுகு வெடித்தது அவனின் வார்த்தைகளில்.

“ஓகே கூல்! கூல்!” என்று இன்னும் அவள் அசால்டாகச் சொல்ல,

“கூல், மோரை எல்லாம் நீயே குடி! சீக்கிரம் இடத்தைக் காட்டு!” என்று சிடுசிடுத்தான்.

‘உன்னுடைய சிடுசிடுப்பு என்னை ஒன்றும் செய்யாது’ என்பது போல் அவனின் முன் சென்றவள் அலட்சியமாகத் தோளை குலுக்கிய படி நடக்க, அதைப் பின்னால் சென்றபடியே கண்ணுற்றவன் இன்னும் கடுப்பானான்.

அவன் இன்னும் அதிகமாகக் கடுப்படிக்கும் முன் சிகரெட்டை கண்டெடுத்த இருப்பிடத்தைக் காட்டினாள் ஜனார்த்தனி.

அவள் காட்டிய இடம் சரியாகக் கஸ்தூரி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு நேரெதிரே இருந்த மருத்துவமனையின் சுற்றுச்சுவர்.

சுத்தமாக வெள்ளையடிக்கப்பட்ட அச்சுவற்றில் திருஷ்டி பொட்டாய் இருந்தது ஒரு கறுப்புப் புள்ளி.