பித்தம் கொண்டேன் பேரெழிலே -8

இரவெல்லாம் தூங்காதது கண்ணில் எரிச்சல் படுத்தியெடுத்தது மீராவிற்கு.இரவில் அவளின் கண்ணன் கூறியதற்கு அர்த்தம் புரியாமல் குழம்பியவள் அவனிடம் அது என்ன என்று கேட்கும் முன் அவன் மேலே எதுவும் பேசாமல் சென்றுவிட இரவு முழுவதும் அதைப்பற்றியே யோசித்து தலைவலியே வந்துவிட்டது அவளுக்கு.

மாலை வருவதாகக் கூறிவிட்டு அவள் விடியற்காலையில் தன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.வீட்டிற்கு வந்த பின் மீனாட்சி அங்குள்ள நிலவரம் கேட்க அவளுக்கு மனவலி அதிகமானது.அதிலும்,

“சசி போனுல போட்டோ காட்டுனா அந்த புள்ள நம்ம தம்பிக்கு கண பொருத்தம்! நேத்திக்கு எத்தனை கண்ணு பட்டுச்சோ!சின்னம்மா திருஷ்டி சுத்திப் போட்டாங்களா?”என்று அவளை குடைய,

“எனக்கு எப்புடிம்மா தெரியும் நா சமையகட்ட விட்டு வெளியவே வரல!அங்கயே சரியா இருந்துச்சு”என்று அவள் வெடுக்கென்று கூறிவிட,

“ம்ப்ச் கண்ணாலம் வெச்சதுல இருந்து உனக்கும் நிறைய வேலை சோர்ந்து போய்ட்டே கண்ணு போ போயி கொஞ்சம் கண்ணசரு இன்னிக்கி சோறு நா ஆக்குறேன் “என்று அவர் பரிவோடுக் கூற தாயை கட்டிக் கொண்டு ஓவென அழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு.ஆனால் அவர் ஏன் என்று கேட்டால் என்னவென்று விளக்குவாள்?தலையும் வெடிப்பதுப் போல தோன்ற அவர்களின் வீட்டின் சிறிய அறையில் சுருண்டுக் கொண்டாள்.

நெஞ்சுக்குழியில் கணக்கும் பொருளை வெளியே எடுத்து அதையே உற்றுப் பார்த்தாள்.அறையில் இருந்த அரை வெளிச்சத்திலும் பளபளவென்று மின்னியது அது.முன்தினம் அவளின் கண்ணன் அதை அவளுக்கு கொடுத்ததை நினைத்துப் பார்த்தாள்.

இன்னும் சிறிது நேரத்தில் முகூர்த்தம் நேரம் என்று மண்டபம் பரபரப்பாக இருக்க மாடியில் இருக்கும் ஏதோ சாமானை எடுத்து வருமாறு கங்காதரன் கூற சரியென்று அவள் சென்ற நேரம் தன் அறை கதவை திறந்து வெளியே வந்த கிரிதரன்,

“மீரா!இங்க கொஞ்சம் வரியா?”என்று அழைக்க,

“என்ன மாமா ஏதாச்சும் வேணுமா?”என்று அவள் கேட்க,

“இங்க உள்ள வா சொல்றேன்!”என்று அவன் அழைக்க அவன் அறைக்கா என்று அவள் தயங்க,

“வா மீரா முகூர்த்தத்துக்கு லேட்டாகுது”என்று அவன் அவசரப்படுத்த மேலும் தயங்கி நிற்காமல் உள்ளே சென்றாள்.அங்கே அலமாரியில் இருந்த நகைப்பெட்டியை எடுத்துத் திறந்தவன் அதில் இருந்த செயினை எடுத்து,

“உனக்கு ஏதாவது பரிசு கொடுக்கனும்னு ரொம்ப நாளா நினைச்சேன் மீரா!ஆனா அதுக்கு சரியான சந்தர்ப்பமே அமையல!என் கல்யாணத்துக்கு எவ்ளோ ஹெல்ப் செஞ்சுருக்க! அதுக்கு என்னோட சின்ன பரிசு வாங்கிக்க மீரா!”என்று அவளுக்குக் கொடுக்க,

“இதெல்லாம் வேணாம் மாமா!நா நம்ம வீட்டு கல்யாணமுன்னு செஞ்சேன் நீங்க அதுக்கு விலை கொடுத்து என்னை வேத்தாளு ஆக்றீங்களா மாமா”என்று அவள் கண் கலங்க கூற,

“ஐயோ மீரா நீ தப்பா நினைக்காதே!என் அக்கா பொண்ணுங்கற பாசத்துல தான் இதை கொடுக்கறேன் ப்ளீஸ் மீரா எனக்காக வாங்கிக்க “என்று அவன் கெஞ்ச மறுக்க முடியாமல் அவள் வாங்கிக் கொள்ள,

“இப்பவே போட்டுக்க நான் பாக்கனும் “என்று அவன் கூற அதன் கொக்கியை எடுத்துவிட்டு கழுத்தில் வைத்து மீண்டும் மாட்ட முயல அவளால் அது முடியாமல் போக,

“இரு நானே மாட்டி விடுறேன் “என்றவன் அதை தான் வாங்கி மாட்ட ஒருமுறை சிலிர்த்து அடங்கியது அவள் தேகம்.என்னவென்று அறியாமல் ஏதோ செய்தது அவள் இதயத்தில்.பெரிய லாக்கெட்டோடு இருந்த அந்த செயினை ஆர்வத்தேடுப் பார்த்தவன்,

“மீரா என் நியாபகமா இதை எப்பவும் கழுத்தை விட்டு கழட்டவே கூடாது சரியா?”என்று அவன் கேட்க,

“என்னிக்கும் கழட்டவே மாட்டேன் மாமா”என்று கூறியவள் அவனை ஆசைதீர கண்ணில் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து விரைந்துவிட்டாள்.பின் மறைவிற்கு சென்று யார் கண்ணிலும் படாமல் இருக்க தன் உடையின் உள்ளே திணித்துக் கொண்டு விட்டாள்.

அதைதான் இப்போது கையில் வைத்து அழகுப் பார்த்தவள்,

“உங்க மொதலும் கடைசியுமான இந்த பரிசை என் உயிர் இருக்கற வர பாதுகாப்பேன் மாமா”என்று அதற்கு முத்தமிட்டவள் மீண்டும் அதை மறைத்துக் கொண்டாள்.

சூரியனின் பொற்கிரணங்கள் முகத்தில் சுள்ளென்று அடிக்க மொட்டைமாடியில் படுத்திருந்த கிரிதரன் கண்விழிக்க கீழே கலகலவென பெண்கள் சிரிக்கும் சத்தம் கேட்டது. தன்னவளும் அதில் இருப்பாளோ என்று காண பாய்ந்துச் சென்று கீழே குனிந்துப் பார்த்தான்.ஆனால் அங்கே அவளின் சுவடே இல்லாமல் போக ஏமாற்றத்தோடு அவளைப் பார்க்க வேண்டும் என்று உள்ளம் பாடாய்படுத்தியதால் அவனின் பிரத்யேக வழியில் கீழறிங்கிப் போக அங்கே உறவினர் சிலர் அவனை பிடித்துக் கொண்டு விட்டனர்.

அவர்கள் எல்லாம் கேலி செய்து அவனை ஒருவழியாக்க நல்லவேளையாக அப்போது அங்கே வந்த கங்காதரன்,

“என்னடா கிரி! இன்னும் குளிக்காம நின்னுக்கிட்டு இருக்க! சீக்கிரம் குளிச்சு தயாராகு குலசாமி கோவிலுக்கு போகுனுமே மறந்திட்டியா?”என்று கேட்டு அவனை இழுத்துச் சென்றான்.

யாரும் இல்லாத இடம் சென்றதும்,

“கிரி இன்னும் எத்தனை நாள் ஆகும் “என்று கங்காதரன் கேட்க,

“எப்படியும் இன்னும் ஒரு வாரமாவது வேணும்ணே!”என்று அவன் கூற,

“ம் சரி ஆகட்டும்!அது வரைக்கும் சமாளிப்போம்!கிரி இப்ப சொல்றேன் கேட்டுக்க ஆம்பள மலைய கூட பிரட்டிடுவான் ஆனா தன் வீட்டம்மாவ சமாளிக்கறது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம்”என்று கூறி சிரித்தவன் தம்பியின் பார்வை அங்குமிங்கும் அலைவதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் அப்போது அங்கே வந்த பவித்ராவை பார்த்து,

“பவி!மீரா எங்க காணும்?”என்று கேட்க,

“அவ விடிய காலைலயே வீட்டுக்கு போயிட்டா!”என்று அவள் கூற,

“அவளை ஒரு வாரமாச்சும் உனக்கு கூடமாட இருக்க சொல்லனும்னு நினைச்சேன் நீ ஏன் இருக்க சொல்லல?”என்று அவன் கேட்க,

“ஏன் இங்க எல்லாத்தையும் பாத்து பாத்து அளுகவா “என்று அவள் முணுமுணுக்க,

“என்ன அது முணுமுணுங்குற?”

“பாவம் அவளும் மனுசிதானே இவ்ளோ நாளு ராபகலா வேலை செஞ்சுருக்கா இனியாச்சும் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்னு தான் நா இருக்க சொல்லல “என்று சிறிது கோபத்தோடுக் கூறியவள் அங்கிருந்து அகன்றுவிட சகோதரர்கள் இருவரும் சிரித்துவிட்டனர்.

“நா என்ன சொன்னேன் இப்ப நீயே பாரு இவக்கள சமாளிக்கறதுதான் நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்க போகுது “என்று கூற,

“உங்களை விட எனக்கு தான் கஷ்டம் அதிகம் “என்று சோர்வாக அவன் கூற,

“இந்த அண்ணன் இருக்கும் போது நீ எதுக்கு கவலப்படுற? எல்லாத்துக்கும் நா இருக்கேன்! சீக்கிரம் கிளம்பு அப்படியே சென்னைக்காரம்மாவையும் கிளப்பு போ!நா மீனாக்காவுக்கு போன் பண்ணிட்டு வரேன்”என்று அவன் செல்ல சமிகாவை எழுப்ப சென்றான்.

அங்கே மாணாங்காணியாக வாயைப் பிளந்தபடி அவள் தூங்கிக் கொண்டிருந்தவளின் தோளை தட்டி,

“சமிகா!…சமிகா…எந்திரி மணி எட்டாச்சு!”என்று எழுப்ப,

“ம் எட்டு மணிதானே போக்கா எனக்கு இன்னும் தூக்கம் வருது!நா பத்து மணிக்கு வரேன் “என்று அவள் உளற,

“சமிகா இது சென்னை இல்ல நா கிரிதரன் நீ இப்ப என் வீட்ல இருக்க சீக்கிரம் எழுந்து கிளம்பு கோவிலுக்கு போகனும் “என்று மீண்டும் அவள் தோளில் இன்னும் வேகத்தோடு தட்ட திடுக்கென எழுந்து அமர்ந்தவள்,

“கிரண் ப்ளீஸ் நா வரல எனக்கு காட் மேலெல்லாம் நம்பிக்கை இல்ல நீங்க போயிட்டு வாங்க “என்று சோம்பலாகக் கூற,

“லுக் சமிகா!நீ நம்பனும்னு நா ஃபோர்ஸ் பண்ணல ஆனா நா எது செஞ்சாலும் என்னோட சேர்ந்து நீயும் செய்யனும் சென்னை மாதிரி இங்க எது நடந்தா என்னன்னு இருக்க மாட்டாங்க நீ வரலேன்னா என் தலைய தான் எல்லாரும் உருட்டுவாங்க ப்ளீஸ் கோ ஆப்ரேட் பண்ணு “என்று அவன் அழுத்தமாகக் கூற வேறு வழியில்லாமல் கிளம்ப தயாராக பெருமூச்சோடு தானும் கிளம்ப பக்கத்து அறைக்கு சென்றான்.

அங்கே கங்காதரன் போனில்,

“சசிம்மா அக்காக்கு போன் கொடுக்கிறியா”என்று கேட்க,

“இதோ மாமா!….அம்மா யம்மோவ் பெரிய மாமா கூப்பிட்றாரு சீக்கிரம் வா!”என்று தாயை அழைத்தாள்.மகள் போனை கொடுத்துவிட்டு அகன்றதும்,

“எய்யா ராசா!என்னய்யா விசேசம்?மன்னிச்சுக்க ராசா!தம்பி கண்ணாலத்துக்கு வர முடியல!இவரு போன பின்னால நா எங்கிட்டும் போவரது இல்லேன்னு உனக்கே தெரியுமே!எல்லா நல்லா நடந்துச்சா ராசா?”என்று அவர் அன்போடுக் கேட்க,

“அதெல்லாம் பரவால்ல அக்கா!எல்லா நல்லபடியா முடிஞ்சுது!நம்மூட்டு விருந்து இன்னும் பத்து நாளு பொறுத்து தான் வெச்சுருக்கு அதுக்காச்சும் நீ கண்டிப்பா வரனும் சரி நா போன் போட்டது நாங்க குலசாமி கோயிலுக்கு போறோம் நீ வேண்டுதல இருக்குன்னு சொன்னியே நம்ம மீராவையும் சசியும் அனுப்பு அதை முடிச்சிடலாம்”என்று அவன் கூற,

“ஆமா ராசா நம்ம சசிக்கு வேலை கிடைச்சா பொங்க வெக்கறேன்னு வேண்டியிருக்கேன் சரி அப்போ நா அவங்கள தயாராகி வர சொல்லுறேன் எல்லார் துணையோட போயிட்டு வரது நல்லதுதான் உன் மூலமா ஆத்தா நிறைவேத்திக்குறா போல “என்று அவர் ஒப்புதல் கொடுக்க நிம்மதியோடு போனை அணைத்தவன் அறிவு வீட்டிற்கு அழைத்து அவர்களையும் அழைத்தான்.அறிவழகனின் தந்தை தியாகேசனும் கட்டாயம் வருவதாகக் கூறினார்.

அவர்களின் குலதெய்வம் குடியிருக்கும் கோவில் அடர்ந்த காட்டில் இருக்கும் தெய்வம்.காட்டு மிருகங்களின் தொல்லை இருப்பதால் அங்கு தனியாக யாரும் செல்வதே இல்லை.அதனால் ஒரளவு நெருங்கிய சொந்தங்களை கங்காதரன் அழைக்க சுமார் முப்பது பேர் சேர்ந்துவிட மினி பஸ் ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டான்.டவுனில் இருந்து வரும்பவரை அழைத்துக் கொண்டு கங்காதரன் வீட்டவரும் ஏறி மீரா வீட்டின் முன்பு நிறுத்தி ஹாரன் அடித்தார் ஓட்டுனர்.

வானில் ஒரு நிலவு பூமியில் இரண்டு நிலவுகளா என்று பார்ப்பவர் திகைக்கும் வண்ணம் நடந்து வந்தனர் சகோதரிகள் இருவரும்.அடர்சிவப்பு நிற புடவையில் அதிக அலங்காரம் இல்லாமல் துடைத்து வைத்த குத்துவிளக்கு போல இருந்தாலும் மனம் கொய்தாள் மீரா.அவளை கண்டு பவித்ரா புன்னகைக்க கீற்றாக அதற்கு பதில் புன்னகை புரிந்தவள் அவளுக்கு பின்புறம் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.அவள் பின் வந்த சசி மஞ்சள் வண்ண புடவையில் மல்லிகை சரம் தோளில் வழிய தெரிந்த உறவினரை புன்னகையோடு விசாரித்துக் கொண்டு நிற்க இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தான் அறிவழகன்.

“வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே”என்று சமயத்திற்கு தகுந்த  பாடல் பேருந்து ஸ்பீக்கரில் ஒலிக்க கண்ணை மூடி பல்லை கடித்தவன்,

“யோவ் டிரைவர் சாமி கோவிலுக்கு போறோம் எதாச்சும் சாமி பாட்டு போடறத வுட்டுட்டு இந்த கண்றாவி பாட்டெல்லாம் எதுக்குயா போடுற?”என்று அறிவு கத்த அவனுக்கு பயந்து கேஸட்டை அவர் மாற்ற பழனியப்பா ஞான பழம் நீயப்பா பாடல் ஒலிக்க,

“ரொம்ப தான் அலட்டுறான் அறுந்தவாலு”என்று திட்டியபடி அவனுக்கு முன் இருக்கையில் சசி அமர்ந்துக் கொள்ள பஸ் புறப்பட்டது.இருவருமே ஜன்னல் இருக்கையில் தான் அமர்ந்திருந்தனர்.பாவையின் தலையில் சூடியிருந்த மலரின் வாசத்தை காற்று இழுத்து வந்து அவன் மூக்கில் ஏற்ற தடுமாறிப் போனான் அவன்.அதன் வாசத்தை இன்னும் அருகில் சென்று இழுக்கும் ஆசை பீரிட்டு எழ திடுக்கிட்டு போனவன் பட்டென எழுந்து நின்று அருகில் அமர்ந்திருந்த தந்தையிடம்,

“யோவ் தகப்பா நீ எந்திரிச்சு என் இடத்துல உட்காரு நான் அங்கிட்டு போறேன்”என்று கூற,

“ஏன்டா அங்க உட்கார என்னடா உனக்கு கஷ்டம்?முள்ளு குத்துதா?”என்று அவர் நக்கல் பேச,.

“இங்க ஒரே காத்து வீசுது எனக்கு பிடிக்கல நீ எந்திரி முதல்ல”என்று அவரை எழுப்ப முயல,

“எல்லாரும் ஜன்னல் சீட்டுக்கு தான் ஆசைபடுவாங்க நீ என்னடான்னா”

“ஜன்னல் சீட் கேக்க நா என்ன குச்சி மிட்டாய் திங்கற அரை டவுசர் பையனா ஏன்பா படுத்துற வான்னா வருவியா சும்மா நொய்நொய்னுட்டு”என்று அவன் கடுப்படிக்க ,

“அட அகராதி புடிச்சவனே நிம்மதியா ஒரு இடத்துல உட்கார விடுறியா”என்று சலித்தபடி அவர் எழ அவரிடத்தில் சென்று அமர்ந்துக் கொண்டான்.அப்படா என்று அவன் நிம்மதி அடைந்து ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது சசியின் அருகே இருந்தவர் முன்சீட்டில் அமர்ந்தவரோடு பேச சென்றுவிட சசி தள்ளி அறிவுக்கு சரியாக அமர்ந்துவிட்டாள்.அப்புறம் என்ன அவன் கம்பியை பிடித்திருந்த கையில் படும்படி பூவையும் பின்னலயும் பின்னே போட்டாள்.அவளின் சேலை முந்தானை காற்றில் பறந்து அவன் காலை தீண்டியது.அவனுக்கோ சொல்ல முடியாத அவஸ்தையாக போய்விட்டது.கையை எடுக்கலாம் என்றாலோ பேருந்து வளைந்து வளைந்து செல்வதால் பிடிமானம் இல்லாமல் அமர முடியவில்லை.மொத்தத்தில் அவனை கண்டபடி சோதித்தாள் அவள்.

ஓர் இடத்தில் பேருந்தை டிரைவர் ஒடித்து திருப்ப சமநிலை இழந்த சசி இருக்கையிலிருந்து விழப் போக பாய்ந்து அவள் இடையை பற்றி அவள் விழாமல் அவன் காப்பாற்றிய பின்னும் அறிவின் கை அங்கேயே இருக்க முறைத்தபடி அவனையும் அவன் கை இருந்த இடத்தையும் சசி பார்வையாலயே சுட்டிக் காட்ட பதறி கையை இழுத்துக் கொண்டவன்,

‘ஐயோ ஆஞ்சனேயா என் கையை ஆசிட் ஊத்திதான் கழுவனும்! எனக்கு ஏனப்பா இந்த சோதன’என்று மனதிக்குள்ளே அலறியவன் ஓடி சென்று பின் இருக்கையில் சாமான்கள் இருந்த இடத்தில் அமர்ந்துக் கொண்டு விட்டான்.

இந்த ஜோடி இப்படியிருக்க கிரியோ தன்னவளின் அபூர்வ அழகில் இதுவரை காணாத புதுமையை கண்டு மெய்மறந்துப் போயிருந்தான்.கண் இமைக்காமல் அவளையே அவன் பார்த்திருக்க அவளோ அதையறியாமல் வெளியே இருந்த இயற்கை அழகை மெய்மறந்து பார்த்திருந்தாள்.

இரண்டு மணி நேர பயணத்திற்கு பின் இறங்க வேண்டிய இடம் வர பேருந்து நின்றது.அந்த இடத்திலிருந்து ஒரு மணி நேரம் மலைமேல் ஏறி தான் செல்ல வேண்டும்.பொங்கல் வைக்க தேவையான சாமான்களை ஆளுக்கொருவராக எடுத்துக் கொள்ள சமிகா மட்டும் கையை வீசிக் கொண்டு ஏறினாள்.புது பெண் என்பதால் யாரும் எதுவும் கூறவில்லை.ஆனால் அறிவின் தந்தை கணமான கூடையோடு ஏற முயல,

“சமிகா பெரியப்பா கையில இருக்கிறத நீ எடுத்துட்டு வா அவரால தூக்கிட்டு ஏற முடியாது”என்று அவன் கூற,

“வாட் மீ நோ நோ என்னால அதையெல்லாம் தூக்கிட்டு ஏற முடியாதுப்பா!வேற யாருக்காவது சொல்லுங்க கிரண்!”என்று அவள் அலட்சியமாக கூற,

“லுக் சமிகா எல்லாரும் ஒவ்வொண்ண வச்சிருக்காங்க நீ மட்டும் தான் சும்மா கையை வீசிட்டு வர நீதான் தூக்கனும்”என்று அவன் கோபத்தோடுக் கூற,

“மாமா அந்த கூடைய குடுங்க நா தூக்கிட்டு வரேன்”என்று மீரா ஒன்றை வாங்கிக் கொள்ள,

“எனக்கும் ஒரு கைக்கு எதுவும் இல்ல இதை கொடுங்கப்பா “என்று அவள் ஒன்றை தியாகேசனின் கையிலிருந்து வாங்க அவளின் அப்பா என்ற அழைப்பில் திகைத்துப் போனது அறிவு மட்டுமல்ல மீராவும் தான்.