பித்தம் கொண்டேன் பேரெழிலே -7

திருமணம் முடிந்து மற்ற சடங்குகள் நடந்துக் கொண்டிருக்க கீழே முதல் வரிசையில் அமர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அறிவழகன்.கண்கள் எதிரே பார்த்துக் கொண்டிருந்தாலும் மனமோ முன்தினம் நடந்ததையே அவனுக்கு ரிவைண்ட் மோடில் மறுபடியும் மறுபடியும் காட்டி படுத்தி வைத்துக் கொண்டிருந்தது. தன்னையறியாமல் கன்னத்தை தடவுவதும் திடுக்கிட்டு எடுப்பதுமாக திருதிருவென ஆடு திருடிய கள்வன் போல முழித்துக் கொண்டிருந்தவனை கவனித்துப் பார்த்த மூதாட்டி ஒருவர் அவனருகே வந்து,

“நீ யாருப்பா உன்னை பார்த்ததே இல்லையே கிரி தம்பிக்கு சொந்தமா?இல்ல சிநேகித புள்ளயா?”என்று கேட்க அப்போது அங்கே வந்த பவித்ரா,

“பெரியம்மா!இவன் என் அத்த பெத்த அறுந்த வாலு பேரு அறிவழகன் என் கல்யாணத்தும் போது பார்த்திருப்பீங்களே மறந்துட்டீங்க போல!”என்று விளக்க,

“ஓ அந்த புள்ளயா இது!அப்ப ஒட்டடை குச்சி மாதிரி இருந்தப் புள்ள இப்ப வஸ்தாது மாதிரி வளந்து நிக்கவும் அடையாளமே தெரியல ஆமா தம்பி என்ன வேலை பாக்குது?”என்று அவர் வினவ அறிவு பதில் கூறுமுன்,

“அவென் இந்த ஊரு எம்எல்ஏக்கு கூஜா தூக்குறான்”என்று கூறி பவி சிரிக்க,

“பவித்ரா…!”என்று அவன் முறைக்க,

“இல்லல்ல கட்சி தொண்டன் போதுமா!எப்பா இந்த உலகத்துல உண்மைய பேச விட மாட்றாங்கபா”என்று கூறியவள் யாரோ அழைக்க அங்கே விரைந்து விட்டாள்.

இதுவரை இதையெல்லாம் தூண் மறைவில் நின்றுக் கேட்டுக் கொண்டிருந்த சசி கை மறைவில் சிரித்து முடித்தவள்,

‘ஓஹோ சாரு பவி அக்காவுக்கு சொந்தமோ!இருடா இதை வச்செ உன்னை ஒரு வழி பண்ணுறேன்’என்று மனதில் கூறிக் கொண்டவள் அங்கே ஜுஸ் தட்டோடு வந்த பெண்ணிடம் அதை தான் வாங்கிக் கொண்டவள் வரிசையாக கொடுத்து வந்து அறிவு முன்பு நீட்டி,

“மாமா….!ஜுஸ் குடிங்க மாமா….!”என்று கூற யாரது தன்னை மாமா என்று அழைப்பது என்று திடுக்கிட்டு அவள் புறம் திரும்பியவன் அது சசி என்று தெரிந்ததும்,

“ஏதே மாமாவா…!இந்தாம்மா யாரை பாத்து மாமான்ன?”என்று அவளை முறைக்க,

“உங்களை தான் மாமா!மாமான்னு கூப்பிட்டேன் மாமான மாமான்னு கூப்பிடாம வேற எப்படி மாமா கூப்பிட்றது நீங்களே சொல்லுங்க மாமா!”என்று கிடைத்த இடத்தில் எல்லாம் மாமாவை போட்டு அவனை தாக்க,

“இந்தா நிறுத்து உன் மாமா மந்திரத்த!யாரு யாருக்கு மாமா?வந்திட்டா மாமா மச்சான்னுங்கிட்டு”என்று அவன் படபடக்க,

“பவித்ரா அக்காவுக்கு நீங்க அத்தை பையன்னா அவருக்கு நீங்க மாமா அவங்க எனக்கு அக்காங்கறதால எனக்கும் நீங்கதான் மாமா! மாமா….!”என்று அவள் இழுக்க,

“ஐயோ…ஆஞ்சனேயா! இதெல்லாம் என்னால கேக்க முடியல!இந்தாம்மா சும்மா நொய்நொய்ங்காம போ அங்கிட்டு”என்று நெற்றி கண்ணைத் திறக்க,

“என் ஆசை மாமா இங்க இருக்கும் போது நான் ஏன் மாமா அங்கிட்டும் இங்கிட்டும் போகனும் “என்று அவள் கண்ணடிக்க,

“ஐய்யோ அபசாரம் அபசாரம்!”என்று கண்களை மூடி கத்தியவன் எழுந்து ஓடிவிட கலகலவென சிரித்தாள் சசிரேகா.

திருமண பந்தி கம்மென்ற மணத்தோடு நடந்துக் கொண்டிருந்தது.கையில் பொறியல் வாளியோடு பரிமாறிக் கொண்டிருந்தாள் மீரா.கைக்கும் தலைக்கும் உறை அணிந்திருந்தாள்.பரிமாறும் அனைவருமே அதை அணிய வேண்டும் என்பது அந்த கேட்ரிங்கின் சட்டம்.தன் கண்ணான மாமனின் திருமணத்தில் செய்கிறோம் என்ற எண்ணத்தில் அவள் எந்த வேலையையும் விடவில்லை.காலையில் பாத்திரம் கூட கழுவிக் கொடுத்திருந்தாள்.

அப்படி பரிமாறியபடி வந்தப் போது,

“இந்தாம்மா பொண்ணு இந்த எச்சில் இலைய எடு!கல்யாண பொண்ணோட மாமா சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பனும் ம் சீக்கிரம் எடுத்து சுத்தம் பண்ணு”என்று அவளை விரட்டியது வேறு யாருமில்லை அனிதாவே தான்.சும்மாவே அவள் யாரையும் மதிக்கமாட்டாள் அதிலும் சிறிய கரைபோட்ட சேலையில் கழுத்தில் பாசிமணி கையில் கண்ணாடி வளையல் என்று இருக்கும் மீராவை விடுவாளா? ஒருகணம் மீரா தயங்க,

“ம் என்ன நின்னுக்கிட்டே செத்துட்டியா என்ன?எடு சீக்கிரம்”என்று அதட்ட இலையில் அவள் கைவைக்கும் முன்,

“மீரா….!”என்று கிரிதரனின் கர்ஜிக்கும் குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினர் மீராவும் அனிதாவும்.

“இங்க என்ன பண்ற மீரா?”என்ற அவனின் கோபக் குரலில் அவளின் முதுகு தண்டு சில்லிட,

“மாமா…!அது…”என்று அவள் இழுக்க,

“என்ன மதனி!மீரா யாருன்னு தெரியாதா உங்களுக்கு?அவளை இலை எடுக்க சொல்றீங்க!அவ என் அக்கா பொண்ணு!வேலையாள் இல்ல!…மீரா!ஏதோ வீட்டு பொண்ணா வீட்ல செஞ்ச சரி!ஆனா இங்க கல்யாண மண்டபத்துல வந்து யாரோ மாதிரி என்ன இதெல்லாம்?”

கிரிதரனின் ரௌத்திராவதாரத்தில் எதற்கும் துணிந்தவள் என்று பெயர் படைத்த அனிதாவே நடுநடுங்கிப் போனாள்.நிஜமாகவே அவளுக்கு மீராவை யாரென்று அடையாளம் தெரியவில்லை.யாரோ வேலையாள் என்று நினைத்து பேசிவிட்டாள்.இப்போது கிரிதரன் இருக்கும் நிலையில் மேலே பேசாமல் பின்வாங்குவதே சாலச்சிறந்தது என்று முடிவெடுத்து,

“ஐயோ கிரி தம்பி! எனக்கு நிஜமாகவே மீரா புள்ளய அடையாளம் தெரியல!நம்ம புள்ளன்னு தெரிஞ்சிருந்தா நா அப்புடி சொல்லியிருப்பனா! நீங்க கோவிச்சுக்காம சாப்பிட போங்க தம்பி!பாருங்க நம்ம சமி பசி தாங்காம மயங்கிடுவா போல இருக்கா!”என்று அவன் கவனத்தை தங்கை பக்கம் திருப்பியும் அங்கிருந்து விலகி செல்லும் மீராவை,

“மீரா நீ சாப்பிட்டியா?”என்று அவன் கேட்க,

“நா..சாப்பிட்டேன் மாமா!நீங்க சாப்பிடப் போங்க! பாவம் அக்கா உங்களுக்காக காத்திட்டு இருங்காங்க போங்க மாமா!”என்று கூறியவள் அங்கிருந்து நகர முயல அவள் கைபிடித்து தடுத்தவன்,

“எதுக்கு பொய் சொல்லுற?நீ சாப்பிடலேன்னு உன் மூஞ்சியே சொல்லுது!வா இப்ப என்னோடு வந்து சாப்பிடுற அவ்ளோதான்!”என்று மனைவியை மறந்து அவளை இழுத்து செல்பவனை பேவென பார்த்த அக்கா தங்கை இருவரும் அவர்கள் பின்னேயே விரைந்தோடினர்.

பந்தியில் மணமக்களுக்காக இரண்டு தலைவாழை விரித்து உணவு பறிமாறப்பட்டிருக்க அதில் ஒன்றில் தான் அமர்ந்தவன் மீரா தன் இடப்பக்கத்தில் இருந்த இலையில் அமர வைத்தப் பின்தான் அவளின் கைவிட்டான் அவன்.தன் அருகே சமிகா அமர்ந்தாளா இல்லயா என்று கூட அவன் பார்க்கவில்லை.அவன் தன்னை அழைத்து அமர்த்துவான் என்று காத்திருந்து ஏமாந்த சமிகா கோபத்தோடு அவனின் வலப்பக்கத்தில் அமர,

“கிரி தம்பி முதல்ல இனிப்பை எடுத்து உன் பொண்டாட்டிக்கு கொடுப்பா!”என்று யாரோ உறவினர் பெண்மணி கூற அதை கவனிக்காதவனைப் போல,

“ஏய் மீரா! உனக்கு ஜாங்கிரின்னா ரொம்ப பிடிக்கும் இல்ல உன் இலைல வெக்கவே இல்லியே இந்த என் ஜாங்கிரிய நீ சாப்பிடு!”என்று தன் இலையிலிருந்து எடுத்து அவன் மீராவின் இலையில் வைக்க பார்த்திருந்த அனைவருமே ஒருகணம் அதிர்ந்துப் போயினர் என்றால் மீராவோ அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.

அவளுக்கு முதலிலேயே அவனோடு அமர்ந்து உண்ணவே சங்கடமாக இருந்தது.அதிலும் அவன் இனிப்பை தன் இலையில் வைத்ததும் திடுக்கிட்டவள் அனிதாவும் சமிகாவும் தன்னை முறைப்பதைக் கண்டு எழுந்தே விட்டாள்.

“மீரா…! உட்கார்ந்து சாப்பிடு!”என்று கிரி ஆழ்ந்த குரலில் கூற,

“அது மாமா நா அப்புறம் வந்து சாப்பிடுறேன் நீங்க சாப்பிடுங்க!”என்று அவள் நகர முயல,

“மீரா சாப்பிடுன்னு சொன்னேன்”என்ற அவனின் அதட்டலில் பயந்து அமர்ந்தவள் வேகவேகமாக சாப்பிடத் தொடங்கினாள்.அதன்பின் மவுனமாக பந்தி நடக்க கடைசிவரை அவன் சமிகாவின் பக்கம் திரும்பவும் இல்லை இனிப்பை ஊட்டவுமில்லை.பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் பசி வயிற்றைக் கிள்ளவே உணவை ஒருகை பார்த்தாள்.

மூன்றாம் பந்திக்கு மைசூர் பாக்கை பரிமாறியபடி வந்த சசிரேகா அதே வரிசையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த அறிவை கண்டவள்,

‘ஓஹோ சாப்பிட்றியா!’என்று எண்ணியவள் அவனுக்கு மட்டும் போடாமல் முன்னே சென்றுவிட,

“இந்தாம்மா எனக்கு போடல”என்று அவளை அழைக்க காதே  கேளாதவள் போல கடைசிவரை சென்று அவள் திரும்ப,

“எனக்கு மட்டும் போடல “என்று அவன் பல்லைகடித்துக் கூற,

“என்ன போடல அடியா?”என்று அவள் நக்கலாக கேட்க,

“என்ன நக்கலா!மைசூர் பாகு போடல! நான் போயி கங்காதரன் அண்ணேகிட்ட சொல்லுவேன் “என்று அவளை மிரட்ட,

“என்னய்யா மிரட்றியா?இவ்ளோ பெரிய பந்திக்கு பரிமாறப்போ தப்பி போறது சகஜம் அதுக்கு போயி சண்டைக்கு வரியா?”என்று அவளும் பேச,

“இல்ல நீ வேணும்னே தான் போடல”

“உனக்கும் எனக்கும் வாய் தகராறா வாய்கா தகராறா நா ஏன்யா அப்படி பண்ண போறேன்”என்று அவள் கேட்க,

“நேத்திக்கு நா உன்ன திட்டினேன்னு உனக்கு கோபம் அதுக்கு தான் பழிவாங்குற”

“நேத்திக்கு திட்டினியா எதுக்கு திட்டின? “என்று ஏதுமறியாதவள் போல அவள் கேட்க,

“அதுதான் நீ எனக்கு முத்…”என்று தொடங்கியவன் எல்லோரும் இருவரின் தகராறை சுவாரஸ்யமாக பார்ப்பதைக் கண்டு கபக்கென வாயை மூடியவன்,

“அம்மா தாயே எனக்கு எந்தூரு பாக்கும் வேணாம் நீ போம்மா” என்று ஒற்றை கையில் அவளுக்கு கும்பிடு போட,

‘அது’என்பதுப் போல அவனைப் பார்த்தவள் நக்கலாக சிரித்தபடி சென்றுவிட்டாள்.

நான்கு மணிக்கு நல்லநேரம் என்பதால் அதுவரை மண்டபத்திலேயே இருந்துவிட்டு மணமக்கள் அவர்கள் காரில் ஏற மீதம் முக்கியமான சொந்தங்கள் அவரவர் வாகனங்களில் ஏறிக் கொள்ள ஒருமணி நேரத்தில் வீடுவந்து சேர்ந்தனர்.

பவித்ராவும் இன்னுமொரு உறவினர் பெண்மணியும் ஆரத்தி எடுக்க கிரிதரன் வலதுகாலை எடுத்துவைக்க சமிகாவோ இடதுகாலை எடுத்து வைத்து உள்ளே நுழைய,

“அடடே என்னம்மா இது கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு முதல்ல வர இடது காலை வெச்சு வந்திட்டியே ஏம்மா அனிதா தங்கச்சிக்கு ஒன்னுமே சொல்லிக் கொடுக்கலயா நீ”என்று வயதான பாட்டி ஒருவர் கடிந்துக் கொள்ள,

“விடுங்க அப்பத்தா அவ இந்த வீட்டு மருமகளா இருந்தா தானே அதெல்லாம்…”என்று கூறி கிரி நிறுத்த எல்லோரும் திடுக்கிட்டு அவனைப் பார்க்க,

“எங்கம்மா பவித்ரா மதனிய மக மாதிரி தான் பாக்குறாங்க அப்ப இவளும் இனிமே அப்படிதானே அதை தான் அப்புடி சொன்னேன்”என்று அவன் முடிக்க அக்கா தங்கை இருவரும் அப்பாடா என்று பெருமூச்சுவிட்டனர்.

மணமக்கள் இருவரும் கலைவாணியின் அறைக்கு சென்று அவரை வணங்க முகம் கலங்கியிருந்தாலும் அட்சதை தூவி தன் மகன் மண வாழ்க்கை நன்றாக வேண்டும் என்று மனமார வாழ்த்தினார் அவர்.பின் இருவரையும் அழைத்துச் சென்று பாலும் பழமும் கொடுத்தப் பின் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறி கிரி தன் அறைக்கு சென்றுவிட அக்கா தங்கை இருவரும் ஆள் அதிகம் இல்லாத இடத்திற்கு சென்று அங்கிருந்த கல்மேடையில் அமர்ந்தனர்.

“ஏன்டி சமி!உன் புருஷன் ஏன் ஒருமாதிரியா இருக்கான்? ஏதாவது உங்களுக்குள்ள சண்டையா?”என்று அனிதா விசாரிக்க,

“நா எதுக்கு சண்டை போட போறேன்கா!என்னன்னே தெரியல மதியம் சாப்பிட்றதுக்கு கூப்பிட போனேன்ல அப்ப புடிச்சே மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி தான் வெச்சுருக்கான் என்னன்னு கேக்கவும் பயமா இருக்கு…போதாததுக்கு அந்த பிச்சைக்காரிய எப்படி கூட்டி வந்து தன் பக்கத்திலேயே உட்கார்த்தி வச்சுக்கிட்டான் பாத்தியா? எனக்கு அப்படியே அவ கழுத்த நெரிக்கனும் போல இருந்தது “என்று கோபத்தோடு கூற,

“அதுதான்டி எனக்கும் அப்படிதான் இருந்தது ஆனா சமி நீ இதை பொறுமையாதான் கையாளனும் அவள ஒரு வார்த்தை சொன்னதும் எப்படி என் மேல பாஞ்சான் பாத்தியில்ல என்ன ஆனாலும் அவளை அவனை நெருங்க விடாத!அவளை பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவளை கண்டாலே ஆகாத மாதிரி பண்ணிடு என்ன புரிஞ்சுதா! அப்புறம் ராத்திரிக்கு நா சொன்னத மறந்திடாத!அவன் அப்படியே நம்புற மாதிரி நடிக்கனும்!சரி சரின்னு மண்டைய ஆட்டிட்டு ஏதாச்சும் சொதப்பினே கொன்னே போடுவேன்!”என்று அவள் மிரட்டிக் கொண்டிருந்த நேரம்,

“சமிதா மதனி எங்கே?மதனி!உங்களை கூப்பிட்றாங்க!”என்று யாரோ அழைக்க,

“ந்யூசன்ஸ் நிம்மதியா கொஞ்ச நேரம் உட்கார கூட விடமாட்டேங்குதுங்க!நா போனை தொட்டு இத்தோட டென் அவர்ஸ் ஆயிடுச்சு”என்று மூக்கால் அவள் அழ,

“கொஞ்ச நாளுதானேடி நீ சென்னை போனதும் உன் இஷ்டப்படி இருந்துக்க இப்ப சீக்கிரம் போ!”என்று தங்கையை அழைத்துச் சென்றாள்.

அங்கே சமையலறையில் சமிகா பால் காய்ச்சுவதற்காக எல்லாம் தயாராக இருந்தது.விறகு அடுப்பிற்கு கோலம் போட்டு மஞ்சள் குங்குமம் இட்டு தயார்படுத்தியிருந்தாள் மீரா.சமிகா உள்ளே வரவும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றாள்.

“சமிகா!அடுப்ப பத்த வெச்சி இந்த பாலை காய்ச்சி எடுமா “என்று பவித்ரா கூற நேராக அங்கிருந்த கேஸ் அடுப்பு முன்பு சென்று அவள் நிற்க,

“அங்க இல்லம்மா இங்க இந்த விறகு அடுப்புல தான் பண்ணனும் “என்று முதியவர் ஒருவர் கூற,

“என்ன விறகு அடுப்புலயா?நோ நோ எனக்கு அதெல்லாம் பழக்கமில்ல நா இங்கேயே பண்றேன் “என்று அவள் அடம் பிடிக்க,

“சமிகா!இது இங்க சம்பிரதாயம் பண்ணிதான் ஆகனும் “என்று கிரி அழுத்தமாகக் கூற வேறு வழியில்லாமல் அடுப்பு அருகே சென்று நின்றவள் பட்டாசை பயந்தபடி கொளுத்தும் சிறுவனைப் போல தூரத்தில் நின்றுக் கொண்டு நெருப்பை வைக்க முயல அது எறிவேனா என்று படுத்த அரைமணி நேரமாகியும் சிறிது கூட நெருப்பு பற்றவில்லை.

“மீரா!நீ போய் பத்த வெச்சுக் கொடு விடிஞ்சாலும் அவளால முடியாது”என்று கிரி கூற,

“நானா…?”என்று அவள் இழுக்க,

“நீயே தான் போய் பத்த வை! மனுசனுக்கு வேற வேலையே இல்லையா இங்கயே எத்தன நேரம்தான் நிக்கறது!”என்று அவன் அதட்ட கோபத்தோடு தன்னை முறைக்கும் சமிகாவை பார்த்து பயந்துக் கொண்டே சென்று இரண்டே நிமிடத்தில் அடுப்பை பற்ற வைக்க சுமார் ஐந்து லிட்டர் அளவு பால் ஊற்றியிருந்த பெரிய பாத்திரத்தை தூக்க முடியாமல் தூக்கி அடுப்பில் வைத்தாள் சமிகா.

பால் சுடாகி மேலே பொங்கி வழிய

“சமிகா பாலை இறக்குமா பொங்கிடுச்சு பாரு”என்று பவித்ரா கூற கையில் இருந்த துணியால் அதை தூக்க முயன்றவள் அடுப்பின் புகையாலும் பாத்திரத்தின் அதீத சுடாலும்,

“ஆ…என்னால முடியல ஐயோ கீழ விழப் போகுது”என்று அவள் கீழே போடும் முன் அதை தாங்கிப் பிடித்திருந்தாள் மீரா.மெல்ல அவள் அதை கீழே வைக்க,

“சமிகா எல்லாருக்கும் பால் கலந்து குடும்மா”என்று முதலில் பேசிய பெண்மணி கூற,

“கை சுட்டிடுச்சு என்னால முடியாது ஏய் மீரா நீயே செஞ்சுடு”என்றவள் கையை ஊதிக் கொண்டே சென்றுவிட தான் செய்வதா என்று மீரா திருதிருவென விழிக்க,

“மீரா பால் ஆறுது சீக்கிரம் கலந்துட்டு வா”என்ற கிரி அங்கிருந்து சென்றுவிட்டான்.ஒருவித சங்கடத்தோடு பாலை கலந்து அங்கிருந்த எல்லோருக்கும் கொடுத்தவள் கிரியின் முன் நீட்ட அவளால் புரிந்துக் கொள்ள முடியாத பார்வையோடு அதை எடுத்துக் கொண்டு அகன்று விட்டான்.

இரவு கிரியின் அறை அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்க சமிகா அங்கு வந்து வெகுநேரம் சென்றுதான் கிரிதரன் உள்ளே வந்தான்.மயக்கும் புன்னகையோடு அவள் அருகே வந்து அவள் தோளில் கைவைத்தவன்,

“சமிகா…”என்று கிறக்கமாக அழைக்க,

“ஓ கிரண்! ஐம் சாரி எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது ஐ திங்க் எனக்கு ப்ரீயட்ஸ் டயம் வந்திடுச்சு எப்பவும் இப்படிதான் பெயினா இருக்கும் ஐ ம் சோ சாரி உங்க மூட் ஸ்பாயில் பண்ணிட்டேன் “என்று வயிற்றை பிடித்துக் கொண்டு அவள் அழ ஒருகணம் கண்ணை மூடித் திறந்தவன்,

“இட்ஸ் ஓகே சமிகா!நீ ரெஸ்ட் எடு! உனக்கு சரியானதுக்கு அப்புறம் பாக்கலாம்”என்றவன்,

“நீ தூங்கு நா அப்படியே ஒரு வாக் போயிட்டு வரேன் “என்று அவன் வெளியேற,

“அப்பா நல்லவேளை போயிட்டான் “என்று நிம்மதியாக மூச்சுவிட்டவள் போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு தன் மொபைலை நோண்ட தொடங்கிவிட்டாள்.

பவுர்ணமி நிலவு பால் போல பொழிய கிணற்றடியில் அமர்ந்து அதையே பார்த்தபடி இருந்தாள் மீரா.இந்நேரம் அங்கே என்ற நினைவே அவளை நிலைகுலைய செய்து கண்ணீரை வர செய்தது.அப்போது அவளின் பின்னிருந்து,

“மீரா இந்நேரம் இங்க தனியா என்ன பண்ற?”என்ற கிரியின் குரலில் தூக்கிவாரிப் போட தன் கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டு திரும்பியவள்,

“மாமா நீங்க இங்க எங்க வந்தீங்க?”என்று அவள் கேட்க,

“நா சும்மா கொஞ்சம் காத்து வாங்கலாம்னு வந்தேன்…நிலவு எவ்வளவு அழகா இருக்கு இல்ல “என்று அவன் கேட்க,

“ம்…”என்றாள் அவள்.

“என்னதான் நிலவு மேகங்கற போர்வைக்குள்ள தன்னை மறச்சிக்கிட்டாலும் மேகம் விலகவும் அது வெளிய வந்துதான் தீரனும் இல்ல மீரா!”என்று கூர்பார்வையோடு அவன் கேட்க அந்த கேள்வியில் மறைந்திருக்கும் பொருளை அறிய முடியாமல் திகைத்துவிட்டாள் அவள்.