பித்தம் கொண்டேன் பேரெழிலே -5

கிரிதரன் சென்னை வந்த தினமே ப்ராஜெக்ட் விஷயமாக ஒரு வாரத்திற்கு அவனை மும்பை செல்ல கூறிவிட்டது அவன் வேலைப் பார்க்கும் நிறுவனம்.அதனால் அவனால் சமிகாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பில்லாமல் போனது.நேரம் கிடைக்கும் போது அவன் அவளை போனில் தொடர்புக் கொண்டாலும் அவள் ஏனோ போனை எடுக்கவே இல்லை.அவளுக்கு என்னவானதோ என்று கவலையில் திண்டாடிப் போனான் அவன்.

சமிகா கிரிதரனின் போனை அழைப்பை எடுக்காததிற்கு காரணம் அனிதா தான்.அவளின் அணுகுண்டு பிளானை நிறைவேற்றும் முதற்கட்டமாக கிரிதரனின் அழைப்பை எக்காரணம் கொண்டும் எடுக்கவே கூடாது என்று தங்கைக்கு அவள் கடும் கட்டளையிட சமிகாவும் சரியென்று விட்டாள்.

மறுநாள் தான் கிரிதரன் சென்னை வருவதாக இருக்க அனிதாவின் வீட்டில்,

“ஏய் அக்கா!இப்படியே அவனோட நான் பேசாம இருந்தா அவன் என்னை வெறுத்துட்டா என்ன பண்றது?நாளைக்கு தான் அவன் திரும்பி வரான் அவனோட பேசட்டுமா?”என்று சமிகா கவலையோடுக் கேட்க,

“ம் பேசலாம் ஆனா ஆஸ்பத்திரி பெட்டுல படுத்துக்கிட்டு”என்று அவள் கூற,

“என்ன சொல்ற நீ? ஆஸ்பத்திரி பெட்டா”என்று சமிகா குழம்ப அங்கே ஆப்பிள் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்த அனிதா சமிகா என்ன ஏது என்று அறியும் முன்பே அவளின் மணிக்கட்டில் அறுத்துவிட,

“ஐயோ…!அடி…பாவி அக்…கா!என்…கையை ஏன்…அறுத்த என்னை ..நீயே..கொன்னுட்டியே “என்று வலி தாளாமல் அவள் கத்த,

“ஷ் வாயை மூடிட்டு இரு!இப்ப ஆஸ்பத்திரி போயிடலாம் “என்று மெதுவாக பேசியவள்,

“ஐயோ தினேஷ்!இங்கே வாங்களேன் இந்த புள்ள என்ன பண்ணிக்கிட்டா பாருங்களேன்!ஐயோ பாவி உனக்கு எதுக்குடி இப்படி புத்தி போச்சு “என்று அழுது ஓலமிட மனைவியின் அலறலில் வேகமாக வந்த தினேஷ் மைத்துனியின் நிலைக் கண்டு பதறி உடனே அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

மறுநாள் காலை கிரிதரன் மீண்டும் சமிகாவிற்கு முயற்சிக்க அனிதா தான் அழைப்பை ஏற்று சமிகா மருத்துவமனையில் இருப்பதைக் கூறி ஓவென்று அழ பதறியடித்தபடி விரைந்து வந்தான் அவன்.கையில் ஒருபக்கம் கட்டுப் போட்டிருக்க மறுகையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க கண்மூடி படுத்திருந்தவளைக் கண்டு தவித்துப் போனான் அவன்.அவள் அருகே வந்து அவளின் கையை மென்மையாகத் தடவியவன்,

“சமி…!சமி…!நான் உன் கிரண் வந்திருக்கேன் சமி!ப்ளீஸ் கண்ணை முளிச்சு பாரு!”என்று அவன் தவிக்க மெல்ல கண்திறந்தவள் அங்கே அக்கா காட்டிய சமிக்ஞையை புரிந்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுவும்,

“சமி ஏன் இப்படி பண்ணிக்கிட்ட? என்னதான் ஆச்சு?ப்ளீஸ் அழாத சமி!என்ன நடந்ததுன்னு தான் சொல்லேன்”என்று அவன் கேட்க இன்னும் அதிகமாக அவள் அழ,

“மதனி!என்ன இதெல்லாம்? எதுக்கு இந்த பைத்தியக்காரத்தனமான முடிவுக்கு இவ வந்தா ப்ளீஸ் நீங்களாவது சொல்லுங்களேன்?”என்று அனிதாவை அவன் கேட்க,

“நா என்னத்தேன்னு சொல்லுவேன் தம்பி! உங்கம்மா உங்களுக்கு பொண்ணு தேடி முடிவு பண்ணிட்டாங்கன்னு சொன்னதும் எங்க உங்களை பிரிஞ்சிடுவோமோன்னு நினைச்சு இப்படி பண்ணிக்கிட்டா! கருவேப்பிலை கொத்து மாதிரி ஒத்த தங்கச்சி எனக்கு!என் சொந்த குழந்தை மாதிரி அவளை இந்த தோள்ல போட்டு வளத்தேன் இப்படி பாதில போகவா அம்புட்டு பாசத்தைக் கொட்டி வளத்தேன் “என்று அவள் மூக்கை சிந்த அவள் கூறிய விஷயத்தைக் கேட்டு அதிர்ந்துப் போனான் அவன்.அவனுக்கு தெரியாமல் அவனுக்கு பெண் பார்த்து முடிவாகிவிட்டதா?இது எப்படி சாத்தியம்?அண்ணனாவது கூறியிருக்க வேண்டுமே?ஏன் கூறவில்லை?என்று பற்பல கேள்விகள் அவன் தலைக்குள் வலம்வர,

“இதை பாரு சமிகா!யாரு என்ன சொன்னாலும் சரி இந்த ஜென்மத்துல என் மனைவின்னா அது நீ மட்டும் தான்!அவங்க பூலோக ரம்பையே கொண்டு வந்து என் முன்னாடி நிறுத்தினாலும் எனக்கு நீ தான் வேணும்! நான் இன்னிக்கே ஊருக்கு போய் பேசி நம்ம கல்யாண தேதியோட வரேன் இட்ஸ் மை பிராமிஸ்”என்று அவள் கையடித்து சத்தியம் செய்தவன்,

“மதனி!இவளை ஜாக்கிரதையா பாத்துக்குங்க!நான் வீட்ல பேசிட்டு பெரியவங்களோட வரேன்”என்று அவளுக்கும் உறுதியளித்தவன் சமிகாவின் நெற்றியில் காதலோடு முத்தமிட்டுவிட்டு சென்றுவிட்டான்.அவன் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு வந்த அனிதா,

“பாத்தியாடி என் அணுகுண்ட!இத்தன நாளா நீ சாதிக்காதத ஒரு கை வெட்டுல நடத்திக் காட்டிட்டேன்! இன்னும் அவன் வரும்போது நல்ல சேதியோட தான் வருவான்”என்று தன் அறிவை நினைத்து கர்வத்தோடு தங்கையிடம் கூற,

“அதெல்லாம் சரிதான் அதுக்காக நிஜமா வெட்டனுமா?சும்மா கைல பேன்டேஜ் போட்டுருந்தா போதாதா?பாரு வலி தாங்க முடியல”என்று அவள் புலம்ப,

“அடி யாருடி இவ!உன் கிரண் என்ன வெறும் கட்டை நம்பிடுவான்னு நினைச்சியா அவன் ரூமுக்கு வர முன்னாடியே டாக்டரை பாத்திட்டு தான் வந்தான் தெரியுமா?அவன் ஒவ்வொரு அடியும் நல்லா தெரிஞ்சுதானே நா இந்த நாடகத்தையே ஆரம்பிச்சேன் உங்க கல்யாணம் முடிஞ்சிட்டா எனக்கு வெற்றிதான்”என்று இறுமாப்போடு சிரித்தாள் அவள்.

ரங்கபுரத்தில் கிரியின் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் அந்த ஊரில் இருக்கும் அவளின் உறவுக்கார பெண் மூலம் அனிதாவிற்கு வந்துவிடும்.அப்படித்தான் கலைவாணி கிரிதரனுக்கு மும்மரமாக பெண் தேடுவது அவளுக்கு தெரிய வரவும் தான் அவள் இந்த நாடகத்தையே நடத்தியது.இது கண்டிப்பாக பலன் கொடுக்கும் என்பதில் அவளுக்கு சிறிதும் ஐயமேயில்லை.

அன்றிரவே ஊருக்கு கிளம்பிவிட்டான் கிரிதரன்.எப்படியும் திருவிழாவிற்கு செல்வதாகத்தான் இருந்தான்.அத்தோடு இப்போது தன் திருமணத்தை பற்றி பேசிவிட வேண்டும் என்று தீர்மானத்தோடுத் தான் கிளம்பியிருந்தான்.

காலை ஐந்து மணிக்கு அவன் வீட்டை அடைந்தப் போது வாயிலில் அழகான கோலத்தைப் போட்டு முடிந்திருந்த பவித்ரா மைத்துனனை கண்டதும்,

“தம்பி! இப்பதான் வரீங்களா! பிரயாணம் சவுரியமா இருந்துச்சா?”என்று அன்போடுக் கேட்க,

“ம் மதனி!நல்லா இருந்துச்சு”என்று அவன் கூற சுரத்தே இல்லாத அவனின் முகமும் குரலும் அவளை மனதை கலக்கமுற செய்தாலும் அதைப்பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவள்,

“சரி தம்பி!நீங்க முகம் கழுவிட்டு வாங்க சூடா காபி போடுறேன்”என்றவள் உள்ளே சென்றுவிட கிரியும் தன் அறைக்கு சென்றான்.

காலை உணவிற்கு தான் கிரிதரனால் அண்ணனை பார்க்க முடிந்தது.கங்காதரனுக்கும் தம்பியின் முக வாட்டம் கவலையைக் கொடுத்தது.

“என்னடா கிரி!முகம் ஏன் வாடியிருக்கு?ஆபிஸ்ல ஏதாச்சும் பிரச்சினையா?”என்று கங்காதரன் கேட்க,

“ஆபிஸ்ல ஒன்னும் பிரச்சினை இல்லண்ணே!ஆனா…”என்று அவன் தயங்க,

“ஆனா என்னடா ஏதா இருந்தாலும் சொல்லு சரி பண்ணலாம் அண்ணே இருக்கும் போது நீ எதுக்கும் கவலைப்பட கூடாது”என்று கூற,

“அண்ணே அது ச…”என்று அவன் பேச்சை முடிக்கும் முன்பு அங்கே வந்த பவித்ரா,

“அத்த உங்களையும் தம்பியையும் அவங்க ரூமுக்கு கூப்பிட்றாங்க!”என்று அவள் கூற இருவரும் அங்கே சென்றனர்.

அங்கே மடி நிறைய பேப்பர்களும் போட்டோக்களுமாக அமர்ந்திருந்த கலைவாணி மகன்களை காணவும் கிரியின் நலனை முதலில் விசாரித்தவர் பின்,

“கிரி! இதெல்லாம் உனக்கு பார்த்திருக்க பொண்ணுங்க போட்டோ இவுங்க ஜாதகம் எல்லாமு பொருந்தி இருக்கு! உனக்கு புடிச்ச பொண்ண நீயே தேர்ந்து எடு!”என்று அதையெல்லாம் அவன் கையில் அவர் திணிக்க அதை அப்படியே அவர் கட்டில் மேலேயே போட்டவன்,

“இதுல யாரும் எனக்கு புடிக்கல நா கட்டுனா அனிதா மதனி தங்கச்சி சமிகாவதான் கட்டுவேன்”என்று அவன் கூற கங்காதரனும் பவித்ராவும் அதிர முதலிலேயே தெரிந்தாலும் மகன் இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறுவான் என்று எதிர்பார்த்திராத கலைவாணியும் அதிர்ந்து தான் போனார்.

“என்னடா கிரி திடுதிப்புன்னு இப்படி சொல்லுற?”என்று கங்காதரன் கேட்க,

“அண்ணே என்னை மன்னிச்சுருங்க நானும் சமிகாவும் உயிருக்குயிரா லவ் பண்றோம் இதை உங்ககிட்ட முதல்லயே சொல்லனும்னு நினைச்சேன் ஆனா அதற்கு சந்தர்ப்பமே அமையல”என்று அவன் அண்ணனிடம் கூற ரௌத்திரம் பொங்க எழுந்து நின்ற கலைவாணி ஓங்கி மகனின் கன்னத்தில் அடித்தவர்,

“போயும் போயும் அந்த குடும்பத்து பொண்ணு தானாடா உனக்கு கெடைச்சுது!இத பாரு மருவாதையா அவளை மறந்திட்டு இதுல ஒருத்திய கட்டிக்க இல்ல அவளைத்தேன்னு பிடிவாதம் பிடிச்சா அம்மான்னு ஒருத்திய மறந்துரு”என்று கோபத்தோடு ஆரம்பித்தவர் அழுகையில் முடிக்க அவரின் அளவுகடந்த கோபத்தை அதுவரை பார்த்திராத சகோதரர்கள் இருவரும் திகைத்துப் போயினர்.

“அம்மா!ப்ளீஸ் கொஞ்சம் யோசிங்க!அவங்க அக்காவை தானே உங்களுக்கு பிடிக்காது அது இவ மேல எதுக்கு இவ்ளோ கோபம் இவ ரொம்ப நல்ல பொண்ணுமா கொஞ்சம் அதட்டி பேசினா கூட அழுதிடுவா அவ்ளோ சாஃப்ட்!”என்று அவன் கூற,

“கிரி!நீ என்னத்தை சொன்னாலும் எனக்கு அந்த வீட்டு பொண்ணை பிடிக்கல!அவளை விட ஆயிரம் மடங்கு ஒசத்தியா அம்மா உனக்கு பாக்கறேன்டா சொல்லறத கேளு அவ வேணாம்”என்று உறுதியாகக் கூற,

“அம்மா எனக்கு கல்யாணம்னா அது அவ கூட மட்டும் தான் அவ வேணாம்னா எனக்கு கல்யாணமே வேணாம் “என்று அவன் அவனின் பிடிவாதத்திலேயே நிற்க அவனின் தமையனோ தாயின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பதா இல்லை தனயனின் காதலை வாழ வைப்பதா என்று இருதலைக்கொள்ளி எறும்பாக தத்தளித்தான்.அழகிய தேன்கூடாக இருந்த குடும்பத்தில் நடக்கும் ரகளையை கண்கொண்டு பார்க்க முடியாமல் அறையிலிருந்து வெளியே வந்த பவித்ரா அங்கே ரத்தபசையற்று வெளுத்த முகத்தோடு கூடத்தில் நின்றிருந்த மீராவை கண்டு அவள் அனைத்தையும் கேட்டுவிட்டாள் என்பதைப் புரிந்துக் கொண்டு விட்டாள்.

“மீரா…!”என்று ஆதரவாக அவளை அழைத்தவள் அவள் கைபிடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.உணர்வே இல்லாமல் அவள் பின்னே பதுமையாக சென்றாள் மீரா.அறை கட்டிலில் அவளை அமர்த்தி,

“மீரா!…அது..”என்று பவித்ரா என்ன கூறி சமாதானப்படுத்துவது என்று கண்ணீர் விட அதில் சற்றே சுதாரித்த மீரா,

“நீங்க வெசனபடாதீங்க அக்கா!மாமா அக்கா மகளாச்சேன்னு பாசமா பழகினத புரிஞ்சிக்காம நான்தான் தப்பு தப்பா கற்பனை பண்ணிக்கிட்டேன் அவருக்கு…யார் மேல…பிரியமோ..அவங்களோட..வாழ்ந்தா தான் அவரு..சந்..தோஷமா இருப்பாரு”என்று திணறிக் கொண்டே கூறியவள்,

“நா வரேன்கா அம்மா உடம்புக்கு முடியலேன்னு சொல்லிச்சு அதை ஆஸுபத்திரிக்கு கூட்டிட்டு போவனும்…நீங்க என்னய பத்தி மறந்திட்டு மாமாக்கு ஆதரவா இருங்க”என்றவள் மேலும் நில்லாமல் சென்றுவிட பவித்ரா தான் அவள் மனம் அப்போது என்ன பாடுபாட்டுக் கொண்டிருக்கும் என்று எண்ணி வாய்பொத்தி அழுகையில் குலுங்கினாள்.

கால் வந்த போக்கில் காடு வயல் என நடந்துக் கொண்டே இருந்தாள் மீரா.மனம் தாள முடியாத துக்கத்தில் துடிக்க அவ்வளவு காலம் மனதில் போற்றி வந்த காதல் பொய்த்துப் போனதில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது அவள் கண்களில்.

‘என்னய ஏன் மாமா உங்களுக்கு பிடிக்கம போயிருச்சு’என்று மானசீகமாக தன் கண்ணனிடம் கதறியது அவள் உள்ளம்.காலில் கல் முள் குத்தி கிழித்து ரத்தம் வழிந்தாலும் அந்த உணர்வு கூட இல்லாமல் நடந்துக் கொண்டிருந்தவளை முடிவில் ஏதோ வழியில் தடுக்க அது வயலுக்கு நீர் இறைக்கும் கிணறு என்பதை உணர்ந்து நின்றவள் சட்டென அதன் மீது ஏறிவிட்டாள்.

இந்த ஆறாத வலியோடு வாழவே வேண்டாம் என்று அதில் குதித்து உயிரைப் போக்கிக் கொள்ள நினைத்தவளுக்கு திடிரென அவளையே நம்பியிருக்கும் தாயும் தங்கையும் நினைவில் எழ,

‘சே என்ன காரியம் செய்ய துணிஞ்சிட்டேன்!என் சுயநலத்துக்காக அவுங்களை விட்டு சாக நினைக்கிறது எவ்ளோ பெரிய பாவம் இல்ல அவுங்களுக்காக நானு வாழனும்!ஐயோ கடவுளே சாக கூட எனக்கு வழியில்லாம பண்ணிட்டியே’என்று மனம் நொந்தவள் கிணற்றிலிருந்து இறங்கி தன் வீடு நோக்கி சென்றாள் மனதில் மரண வலியோடு.

கிரிதரனும் கங்காதரனும் எவ்வளவு எடுத்துக் கூறியும் தன் பிடிவாதத்திலிருந்து இறங்க மறுத்தார் கலைவாணி.பவித்ராவோ மீராவின் நினைவில் யார் பக்கமும் பேசாமல் ஒதுங்கிக் கொண்டாள்.கணவனிடம் மீராவைப் பற்றிக் கூறி அத்தையை சம்மதிக்க செய்ய வேண்டும் என்று தான் அவள் நினைத்திருந்தாள்.ஆனால் கிரியின் மனம் வேறு பெண்ணிடம் சென்றிருக்கக் கூடும் என்று கனவிலும் அவள் நினைத்திருக்கவில்லை.

கிரிதரன் காதலிக்கும் சமிகாவைப் பற்றி அவளுக்கு நல்ல அபிப்பிராயமே இல்லை.மீராவிற்கு போட்டியாக வந்துவிட்டாள் என்று இல்லை.அவளை சந்திக்க நேர்ந்த மூன்று முறையும் அவளின் அதிநாகரீக உடை அலங்காரங்களும் அலட்சியப் போக்கையும் கண்டு வெறுப்படைந்திருந்தாள்.அவள் கண்டிப்பாக கிரிதரனுக்கு சரியான இணை இல்லை என்று அவளுக்கு நிச்சயமாகத் தோன்றியது.ஆனால் தாயே தெய்வம் என்று இருந்தவன் இன்று அவளுக்காக அவரையே எதிர்த்து நின்றிருப்பதில் இருந்து அவனிடம் தன் பேச்சு எடுபடாது என்று அவளுக்கு புரிந்ததால் அவள் அவனிடம் பேசவே செல்லவில்லை.

ஆனால் அவள் மூலம் தாயை சரிகட்டிவிடலாம் என்று நினைத்த கிரி கொல்லைப்புறத்தில் துணி துவைக்கும் அவளிடம் வந்தவன்,

“மதனி!ப்ளீஸ் நீங்கதான் அம்மாவுக்கு சொல்லி புரிய வைக்கனும்!அவங்க வறட்டு பிடிவாதத்தையே பிடிச்சிட்டு தொங்கறாங்களே தவிர என் மனசை புரிஞ்சுக்கவே மாட்டங்கறாங்க!”என்று அவன் வருந்த,

“அது… தம்பி அத்தை நிறைய பாத்தவங்க அனுபவம் இருக்கறவங்க!அவங்க வார்த்தைய மீறி எதுக்குங்க தம்பி இந்த பிடிவாதம்?அதுமட்டுமில்லாம உங்களை நம்ப மீ…”என்று பேசியபடி அவள் பார்வை கிரியின் பின்னே செல்ல அங்கே கைகூப்பியபடி வேண்டாம் என்று தலையசைத்த மீராவைக் கண்டு பேச்சை முடிக்காமல் விட்டுவிட்டாள்.

மீராவின் வயல் வேலைக்கு ஆள் போதாமல் போகும்போது கங்காதரன் தான் தன் வயல் ஆட்களை அனுப்புவான்.அப்படி பார்த்த வேலைக்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கூலியை அவனிடம் கொடுக்கத்தான் மீரா அப்போது வந்தது.ஆனால் அவனை முன்கட்டில் காணாமல் அவள் கொல்லைபுறத்திற்கு வந்தப் போது தான் பவித்ரா கிரியின் பேச்சைக் கேட்க நேர பவித்ரா தன்னைப் பற்றிக் கூறுமுன் சைகையிலேயே அவளைத் தடுத்து விட்டாள்.

கிரி இன்னும் ஒரு முறை பவித்ராவிடம் தனக்காக பேசுமாறு கூறிவிட்டு செல்லும் வரை மறைவிலேயே நின்றாள் மீரா.அவன் கெஞ்சலில் அவன் அந்த பெண் மேல் எவ்வளவு காதல் வைத்திருக்கிறான் என்பதைப் புரிந்துக் கொண்டவளுக்க்கு அவனின் காதலை அடைந்த அந்த பெண் எவ்வளவு பாக்கியசாலி என்று தோன்றியது.

அவன் காது கேளாத தூரம் சென்றுவிட்டான் என்பது உறுதியானதும் மறைவிலிருந்து வெளியே வந்தவள் நேராக பவித்ராவிடம் சென்று,

“அக்கா தயவு செஞ்சு உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன் நா அவர மனசுல சுமக்கறத அவருகிட்ட என்னிக்குமே சொல்லிராதீங்க! அவருக்கு புடுச்ச பொண்ணோட அவரை சேர்த்து வைக்க உதவி பண்ணுங்க”என்று அவள் அவனுக்காக கெஞ்ச,

“மீரா!இப்பவும் எதுவும் கெட்டுடல நான் தம்பி கூட பேசுறேன்”என்று பவி கூற விரக்தியாக சிரித்த மீரா,

“என்னன்னு அக்கா பேசுவிங்க அக்கா! படிச்சு நாகரீகமா இருக்கற நீங்க விருப்பற பொண்ணை விட்டுட்டு பத்தாம் க்ளாஸை கூட தாண்டாத இந்த பட்டிக்காட்டு பொண்ணை கட்டிக்க சொல்ல போறீங்களா!…இதை இத்தோட விட்ருங்க கா மீரா என்னைக்குமே கண்ணனோட காதலி மட்டும் தான்”என்றவள் தளும்பும் கண்ணீர் கன்னத்தில் வழியும் முன்பு அங்கிருந்து விரைந்தோடி விட்டாள்.