பித்தம் கொண்டேன் பேரெழிலே -3

கங்காதரன் கொட்டிலில் இருந்த சின்னஞ்சிறிய கன்றை அவிழ்த்து விட அது துள்ளிக் கொண்டு ஓடி தாயின் பாலை அருந்தியது.ஒரு ஐந்து நிமிடம் குடிக்கவிட்டவன் பின் அதை மீண்டும் இழுத்துக் கட்டிவிட்டு பால் பாத்திரத்திற்காக கைநீட்ட அங்கு தயாராக நின்ற பவித்ரா அந்த சொம்பில் சிறிது வெதுவெதுப்பான நீரை நிரப்பி அவனிடம் கொடுத்தாள்.

அந்த நீரால் மாட்டின் காம்பை கழுவியவன் சர் சர் என்று பாலை கறக்க ஆரம்பித்தான்.அவர்கள் வீட்டில் கொட்டிலில் மொத்தம் நாற்பது மாடுகளும் இருபது எருதுகளும் இருந்தது.காலையில் கண்விழித்து முகம் கழுவியதும் அவன் முதலில் வரும் இடம் கொட்டில் தான்.மாடுகளை ஒருமுறை பார்த்துவிட்டு பின்பு தான் அவனின் மற்ற வேலைகள்.இரவிலும் ஒருமுறை அவைகளை பார்த்துவிட்டு தான் தூங்க செல்வான்.

அவைகள் எல்லாம் பெரும்பாலும் நாட்டு மாடுகளே!எங்கே காப்பான் இல்லாத மாட்டை கண்டாலும் அதை ஓட்டி வந்து தங்கள் கொட்டிலில் கட்டிவிடுவான்.அவை பால் கொடுக்கவில்லை என்றாலும் அதை கடைசி வரை வயிற்றுக்குக் கொடுத்துப் பாதுகாப்பான்.நோய்வாய்ப்பட்டாலும் மருத்துவரை அழைத்து வந்து மருத்துவம் பார்ப்பான்.காலம் முடிந்து அவை இறந்தால் அதற்கென்று அவன் பிரத்யேகமாக அமைத்திருக்கும் இடத்தில் புதைப்பான்.மொத்தத்தில் அந்த வாயில்லா ஜீவன்கள் என்றால் அவனுக்கு உயிர் என்றுதான் கூற வேண்டும்.

நுரை ததும்ப கறந்த பாலை பவியிடம் கொடுத்த பின் கன்றை அவிழ்த்து விட்டவன்,

“துரை எத்தன மணிக்கு வந்தாரு?”என்று கேட்க,

“தம்பி இரண்டு மணிக்கு வந்தாரு!”என்று அவள் கூற,

“பைக்ல தானே வந்தான்!”என்று கேட்க,

“ஆமா…இல்ல பஸ்ல தான் வந்திருப்பாரு!”என்று அவள் சமாளிக்க,

“உனக்கு தான் பொய் சொல்ல வராதே பின்ன எதுக்கு சொல்லுற!ஆமா எந்த பஸ்ஸு சாயங்காலம் புறப்பட்டு ராத்திரி ரெண்டு மணிக்கு நம்முருக்கு வருது?எல்லா பஸ்ஸும் பத்து மணிக்குள்ள கிளம்பிடும்!அவனை இவ்ளோ தூரம் பைக் விட வேண்டாம்னு எவ்ளோ தடவை சொல்லியிருக்கேன் சரி சரின்னுட்டு மறுபடியும் அதையே செய்யுறான்!நான் என்ன அவன் கெட்டதுக்கா சொல்லுவேன்?அந்த ரோட்ல கனரக வாகனம் எவ்ளோ போகும் தெரியுமா!சொன்னது புரியாம இருக்க சின்னப்புள்ளயா இவன்!”என்று அன்பு மிகுதியால் கோபப்பட,

“அது நான் அவருக்கு பதமா சொல்லுறேன் நீங்க கோபத்துல வெஞ்சுபுடாதீங்க!”என்று அவள் அவசரமாகக் கூற,

“நான் என்ன அவ்ளோ கோபக்காரனா ம்”என்று மென்மையாகப் புன்னகைத்தவன் அவள் கன்னத்தை கிள்ள அதில் நெளிந்தவள்,

“ஷ் கைல பாலு! யாராச்சும் வந்தா! கொஞ்சம் கூட வெக்கமே இல்ல உங்களுக்கு!”என்று சிணுங்க,

“அடி ஆத்தி!எம்பொஞ்சாதிய கொஞ்ச நா யாருக்கு பயப்படனுங்கறேன்!பத்து வருசம் முன்னாடியே அப்பா கங்காதரா இந்த பொண்ண என்ன வேணா பண்ணிக்கன்னு லைசைன்சு கொடுத்திருங்காங்க எனக்கு தெரியுமில்ல!”என்று மேலும் அவளை சீண்ட,

“ம்ப்ச் இன்னிக்கி காபிக்கு பாலு இல்லேன்னு பண்ண போறீங்க!நா போறேன் உள்ற கொள்ளை சோலி கெடக்கு”என்று விலகியவள் அவன் மீண்டும் நெருங்கும் முன் உள்ளே விரைந்து விட்டாள்.

காலை ஒன்பது மணிக்கு எழுந்த கிரிதரன் குளித்து தயாராகி காலை உணவை உட்கொண்டவன் மறுநாளைக்கு விட்டுப் போன சாமான்களை வாங்க டவுனுக்கு சென்றான்.அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவன் ஊருக்கு செல்லும் சாலையில் வண்டியைத் திருப்ப அங்கே பேருந்து நிலையத்தில் இரண்டு கையிலும் பெரிய பைகளை வைத்துக் கொண்டு கூட்டம் நிரம்பி வழியும் பேருந்தில் ஏற முடியாமல் விழித்துக் கொண்டிருந்த மீராவை கண்டவன் அங்கே வண்டியை நிறுத்திவிட்டு அவளை நெருங்கினான்.

“ஏய் மீரா!என்ன இவ்ளோ பைய தூக்கி நிக்குற?”என்று தன்னவனின் குரல் அருகில் கேட்க மீரா துள்ளி குதிக்காத குறைதான்.கனவு தான் காண்கிறோமோ என்று கண்ணை இரண்டு முறை மூடி திறக்க வசீகரப் புன்னகையோடு அவளின் கண்ணன் நிஜமாகவே தன் முன் நிற்கிறான் என்று உணர்ந்தவள்,

“மாமா நீங்க எங்கே இங்க?ஊருலேந்து காலைல வந்தீங்களா?எப்படி இருக்கீங்க?வேலைலாம் எப்படி போவுது?”என்று படபடவென கேள்விகளைக் கேட்க,

“ஸ்டாப் ஸ்டாப் கொஞ்சம் மூச்சு விட்டுக்க! எல்லாம் அப்புறம் ஒன்னொன்னா சொல்றேன் நீ மொதல்ல பையை கொடு என் பைக்லேயே போலாம்”என்று அவள் பைக்காக கையை நீட்ட அவனோடு ஒரே பைக்கிலா என்று உள்ளூர ஆவல் பொங்கினாலும்,

“பரவால்ல மாமா! உங்களுக்கு எதுக்கு சிரமம்! நீங்க போங்க நா பஸ்லயே போய்கிறேன்”என்றாள் வெளியே.

“நீ இன்னிக்கி பூராவும் நின்னாலும் இவ்ளோ கூட்ட பஸ்ஸுல உன்னால ஏற முடியாது!உன் மூட்டைய பாத்து கன்டக்டரு பஸ்லேந்து உன்னையும் மூட்டையும் வெளிய தூக்கிப் போட்ருவாரு…சும்மா வா என்னோட”என்று அவன் பையை பிடிங்கிக் கொண்டு விட மேலும் வாதாடாமல் அவனோடு சென்று பைக்கில் ஏறிக் கொண்டாள்.பைக்கின் முன்புறம் கிரியின் சாமான் நிறைந்திருக்க பின்னால் மீராவின் மூட்டைகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க இருவரும் சிறிது அசைந்தாலும் உரசிவிடும் இடைவெளி தான் இருந்தது.

ஆனால் அவனோ அதை உணர்ந்தாற்போலவே தெரியவில்லை.மீராதான் காதலும் நாணமும் போட்டிப் போட திண்டாடிப் போனாள்.நல்லவேளை புதிதாக போட்ட சாலையாதலால் மீரா பயந்ததுப் போல அவன் மேல் சென்று விழாமல் தப்பினாள்.முதலில் அக்காள் மீனாட்சி பற்றி சசிரேகா பற்றி நலம் விசாரித்தவன்,

“அப்புறம் மீரா நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப் போற?”என்று அவன் கேட்க என்னமோ அவன் திருமணம் செய்துக் கொள்ளலாமா என்று அவளை கேட்டுவிட்டதுப் போல முகம் சிவந்துப் போனவள்,

“அதுக்கு..இப்ப என்ன அவசரம் மாமா!கொஞ்ச நாளு போவட்டும்”என்று அவள் கூற,

“அப்படியெல்லாம் ரொம்ப நாளு தள்ளக் கூடாது மீரா! சீக்கிரம் நீ நல்ல சேதி சொல்லனும் சரியா?”என்று அவன் கேட்க,

‘அந்த நல்ல விஷயத்தை நீதானே கூற வேண்டும் நீ இம்மென்றால் இப்போதே உன்னோடு வந்துவிட மாட்டேனா என்னவனே’என்று கூறிக் கொண்டாள் மனதிற்குள்.அவள் பதில் கூறாததிற்கு திருமணம் பற்றிக் கூறியதால் வந்த வெட்கம் என்று நினைத்துக் கொண்டான் கிரி.

மீராவின் வீடு வந்துவிட அவன் பைக்கை நிறுத்த கீழிறங்கிய மீரா,

“மாமா!உள்ளார வாங்க”என்று அவனை அழைக்க,

“நா நாளைக்கு வரேன் மீரா!வீட்ல நிறைய வேலையிருக்கு”என்று அவன் மறுக்க,

“ம்ஹூம் உள்ளார வந்து காப்பி தண்ணி குடிச்சிட்டு தான் போவனும்!நெசமா நேரமாகாது மாமா”என்று கெஞ்ச,

“சரி வா போகலாம்”என்று மீராவின் மூட்டைகளை அவன் தூக்கி வர முன்னே சென்றவள்,

“எம்மோவ்!இந்தா வந்து பாரு ஆரு வந்திருக்கறதுன்னு!”என்று உற்சாகமாக கத்த,

“ஆரு புள்ள வந்திருக்கறது”என்று கேட்டப்படி வந்த மீனாட்சி கிரியை கண்டதும்,

“அடி ஆத்தே!கிரியா! வா ராசா!பாத்து எம்புட்டு நாளாச்சு! எப்படி இருக்க ராசா?”என்று அன்போடுக் கேட்க,

“சொகம் தான் அக்கா!ஆமா நீ என்ன இப்படி இளைச்சு போயி கிடக்க?”என்றான் அவன் உண்மையான அக்கறையுடன்.

“எனக்கு என்ன ராசா!பட்டுபோன சருகு எப்ப வேணா மரத்தை விட்டு விழப் போறேன்!இதுங்க ரெண்டுத்தையும் நல்ல இடமா கட்டிக் குடுத்துட்டா நிம்மதியா கண்ணை மூடிறுவேன்”என்று கண்ணைத் துடைத்துக் கொள்ள,

“அக்கா…”

“எம்மோவ்!”என்று கிரி மீரா இருவரும் ஒரே நேரம் அவரின் கடைசி வாக்கியத்தை ஆட்சேபிக்க,

“அது கெடக்கு ராசா!நீ கை கால கழுவிட்டு வா!ஆப்பம் ஊத்துறேன் சூடா சாப்பிடலாம் “என்று உபசரிக்க,

“இல்லக்கா நா வீட்டுக்கு போவனும் இப்பவே நேரமாச்சு”என்று அவன் மறுக்க,

“அதெல்லாம் ஆவாது மாமா!நீங்க சாப்பிட்டா தான் வெளியே விடுவோம் “என்று மீரா மிரட்ட,

“சரிதான் இந்த ரங்கபுரம் ரவுடியை மீறி நா போயிற முடியுமா”என்று அவளை கேலி செய்தவன் பின்கட்டிற்கு செல்ல அவனுக்காக வேகவேகமாக சிற்றுண்டி தயாரித்தாள் மீரா.

திருப்தியாக உண்டவன் மறுநாள் அவர்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்துவிட்டு சென்றான்.

மறுநாள் பத்து மணி அளவில் திதி செய்து உணவு படைத்தனர் கங்காதரனும் கிரிதரனும்.கணவரின் மாலையிட்ட படத்தைக் கண்டு கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே இருந்தார் கலைவாணி.

மிகவும் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்திருந்ததால் எல்லோரையும் சேர்த்து முப்பது பேர்தான் இருந்தனர்.மீராவின் உதவியோடு சமையலை பிரமாதமாக செய்திருந்தாள் பவித்ரா.உணவு முடிந்து அனைவரும் சென்றுவிட மீராவும் கலைவாணியின் தங்கை மரகதம் மட்டுமே இருந்தனர்.கங்காதரன் வயலுக்கு சென்றுவிட போனோடு பின்புறமிருந்த தோட்டத்திற்கு விரைந்தான் கிரி.

மீராவும் பவித்ராவும் மாடியில் பேசிக் கொண்டிருக்க அருகே யாருமில்லாததை கண்ட மரகதம்,

“அக்கா!உங்கிட்ட முக்கியமான விசயத்தை சொல்லத்தான் உடம்பு சொகமில்லாம இருந்தும் ஓடியாந்தேன்!”என்று பீடிகை போட,

“அது என்னடி அப்படிப்பட்ட விசயம்?”

“அக்கா!நம்ம கிரிக்கு சட்புட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிருக்கா அவனுக்கும் கல்யாண வயசாகி ரொம்ப நாள் ஆச்சுதே!”

“அட இதைத்தான் சொல்ல வந்தியா நா என்னமோன்னு நினைச்சேன்! அவனுக்கு இப்ப என்ன அவசரம் இந்த வருசம் தான் அவனுக்கு இருவத்தஞ்சு ஆச்சுது இரண்டு வருசம் போவட்டும் அப்புறம் பாக்கலாம் “என்று அலட்சியமாக கூற,

“ஐயோ அக்கா!நா இப்ப சொல்றத கேட்டா நீயே கிரி கல்யாணத்துக்கு ஒத்த காலுல நிப்ப!நம்ம விஸ்வா நம்ம கிரியை அந்த சமிகாவோட நிறைய இடத்துல சேர்ந்துப் போறத பாத்தானாம் ரெண்டு ஒட்டிக்கிட்டும் இழஞ்சுக்கிட்டும் இருந்தாங்களாம்!நீ இப்படியே பேசாம இருந்தா மோசம் போயிருவ சாக்கிரதை!”

தங்கை கூறிய விஷயத்தை கேட்டு மனதில் கூடை நெருப்பை கொட்டியதைப் போல ஆனது கலைவாணிக்கு.அவருக்கு என்றுமே கணவரின் அண்ணனை பிடிக்காது.அதிலும் அவரின் மருமகளை விஷம் போல வெறுத்தார்.அப்படியிருக்க  அவளின் தங்கையின் வலையில் மகன் விழுந்துவிட்டானே என்று துடித்துப் போனார்.தான் வெறுக்கும் குடும்பத்தில் தன் மகனுக்கு மண முடிப்பதா?சாத்தியமே இல்லை.

விரைவில் கிரிதரனுக்கு நல்ல பெண்ணாக பார்க்க வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டார்.